valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 15 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேரு பெற்றவனாகிறான்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண்டிருக்கும்வரை, உயிருள்ளவனாய் இருக்கின்றன." (திருவாய் மொழி இங்கு முடிகிறது).

அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் சூதமடைந்தது; என் ஜீவனுடைய தாக்கம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.

ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.

இந்த உபதேசத்தின் சாரத்தை கவனிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் 'யார் என்னை எப்படி' என்று அருளியது முக்காலத்தும் உண்மை! மனிதனுடைய மொத்த பாரமும் அவனுடைய கர்மாவின்மீதே.

உன்னுடைய கர்மா எப்படியோ , அப்படியே நீ அடையும் ஞானம்; அப்படியே உன்னுடைய ஆன்மீக சாதனைகள். எப்படி அப்பியாசமோ அப்படியே பலன்கள். இதுதான் இந்த அத்தியாயத்தின் இங்கிதகவி (பாட்டுடை தலைவன் கருத்தை விளக்கும் கவி). இதுவே போதனமிருதம்.

'வேறொன்றிலும் நாட்டமில்லாமல்' என்ற கோவிந்தனின் முக்கிய உறுதிமொழி இங்கும் பிரயோகிக்க தக்கது.

இவ்வினிமையான வார்த்தைகளைக் கேட்டபொழுது, "யாகத்தால் தேவர்களை பேணுங்கள். தேவர்கள் உங்களை பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்" என்றும் பகவத் கீதையின் சுலோகமே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

"நீ தண்டால் (கடுமையான ஆன்மீகப் பயிற்சி) எடுக்க ஆரம்பி, பாலைப் பற்றிய (பயிச்சிக்கு பலன்)கவலை ஏதும் வேண்டா. ஏனெனில், உனக்கு பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக்கொண்டு  நிற்கிறேன்.-

"ஆனால், 'நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாக பாலைத் திருப்தியுறும் வரை கொடும்' என்று நீ கேட்டால், ஆ!  அதெல்லாம் எனக்கு தெரியாது. செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக இருக்க வேண்டும்." (பாபா)

பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியமென்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோசம் என்னும் சுரங்கத்தை கண்டுபிடித்தவராவார்.

இப்பொழுது, என்னுடைய அனுபவ பூர்வமான கதை ஒன்றை அசையாத  மனதுடன் கவனமாக கேட்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பக்தருடைய நல்ல தீர்மானங்களை பாபா எவ்வாறு நிச்சயமாகப் போஷிக்கப் போகிறார் என்பது தெளிவாகும். 


Thursday, 8 September 2016

ஷீர்டி சாயி சரித்திரம்
இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது  திருவாய் மொழிந்ததைக் கேளுங்கள். சர்வ சாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமதிப்பற்றவை. இவ்விஷயங்களை மனதில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.

"முன்ஜன்ம சம்பந்தில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே, மனிதராயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.-

"யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்கு துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீ ஹரி சந்தோஷமடைவார்.-

"யாராவது உன்னிடம் பைசா கேட்டால், உனக்கு கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைசா கேட்ட நபர் மீது நாயைப் போல குரைக்கவும் வேண்டா.-

"மற்றவர்கள் உன்னை எதனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக; அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும். -

"இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறி விடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.-

"உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குத் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசத்தமான(மங்களமான) பாதை கிடைத்துவிடும்.

"குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவர், 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.-

"அல்லாவே யஜமானார்; அல்லாவே யஜமானார்! அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனை செய்து பார்க்கமுடியாதவை!-

"அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனதின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.-

"பூர்வஜென்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பொங்கும் அனுப்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். சுகத்தையும் சந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்)அனுபவிப்போம். -

Thursday, 1 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"பிறகு அஞ்ஞானத்தால் விளைந்த கர்மபந்தங்கள் ஒவ்வொன்றாக அறுந்து விழும். இக் காரியத்தை செய்யலாம். இக் காரியத்தை செய்யக் கூடாது, என்பது போன்ற நிர்பந்தங்களும் விலகிவிடும். முக்தியின் ஆனந்தம் அனுபவிக்கப்படும். -

"முதலில், 1. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா? 2. ஓர் உயிரினுள் உறையும் ஆத்மாவும் மற்றொரு உயிரினுள் உறையும் ஆத்மாவும் ஒன்றேயா, வெவ்வேறா? 3. ஆத்மா 'செயல்புரிபவனா', 'செயல்புரியாதவனா'? என்ற கேள்விகளுக்குப் பதிலை ஆறு சாஸ்திரங்களையும் அலசித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.-

"எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மாவும் ஒன்றே என்று உணர்வதே ஆத்ம விஞ்ஞானத்தின் எல்லை. மோக்ஷமும் பரமானந்தமும் இந்த உணர்விலிருந்துதான் பிறக்கின்றன. -

"பிருஹஸ்பதியை (தேவகுரு) போன்று சொல்வன்மை படைத்த அறிஞரை நீர் கொண்டு வந்தாலும், அவருடைய நாவன்மை குருடனுக்கு யானை எப்படி இருக்கும் என்பதை விளக்கி அவன் மனதில் ஏற்ற முடியாது. சொல்லுக்கு அப்பாற்பட்டதைச் சொல்லால் விளக்க முடியாது! -

"பேசுபவர்களின் நாக்கும் கேட்பவர்களின் செவியும், இல்லாத பார்வையைக் கொண்டுவர முடியுமா என்ன? யானையின் உருவத்தை பார்ப்பதற்கு கண்களே தேவை.-

"கண்பார்வையின்றி, யானையைக் கண்ட அனுபவத்தை ஒரு குருடன் எவ்வாறு பெறமுடியும்? அது போலவே, திவ்வியமான பார்வையை குரு அளித்த பிறகுதான், ஞானப் பொக்கிஷம் கைக்கு எட்டும்." (பாபாவின் திருவாய் மொழி இங்கு முடிவதாக எடுத்துக் கொள்ளலாம்).

"சாயியின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வதே தியானமாகும். அதுவே அவருடைய தரிசனம். -

"அஞ்ஞானத்தில் இருந்தும் காமத்தில் இருந்தும் கர்மவினைகளில் இருந்தும் முற்றும் விடுபட, வேறு சாதனை எதுவுமே இல்லை. இதை உங்களுடைய மனதில் உறுதியாக நிலைப்படுத்துங்கள். -

"சாயி கேவலம் உம்முடையவரோ அல்லது நம்முடையவரோ அல்லர். எல்லா உயிர்களிலும் உறைகின்றார். சூரியன் எவ்வாறு இவ்வுலகம் முழுமைக்கும் சொந்தமோ, அவ்வாறே அவரும்"  - தபோல்கருடைய கூற்றாகக் கருதலாம். 

Thursday, 25 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பிறகு  நான் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய அருளை வேண்டினேன். நான் சொன்னேன், "உங்களுடைய இந்தக் கிருபைதானமே எனக்குப் போதுமானது! என்னை மன்னித்துவிடுங்கள்."

பாபா கூறினார், "கதையைக் கேட்டுக்கொள்ளும்; அதைபற்றிச் சிந்தனை செய்யும். பிறகு அதையே மறுபடியும் தியானம் செய்யும். அவ்வாறு ஞாபகப்படுத்திக் கொண்டு சிந்தனை செய்தால், மிகுந்த ஆனந்தம் விளையும்.-

"இம்முறையில் உம்முடைய காதுகளால் கேட்டதை நீர் இதயத்தில் சேமித்து வைத்தால், உம்முடைய மங்களம் என்னும் சுரங்கத்தை நீரே திறந்து வைத்தவராவீர். உம்முடைய பாவங்களும் அழிந்துவிடும்.-

"புயற்காற்று அடிக்கும்போது, சமுத்திரத்தின் தண்ணீர் பேரலைகளாக எழும்பிக் கரையை அடைந்து மோதிக் கணக்கற்ற நீர்த்திவலைகளாக பிரிந்து நுரை போன்று தோன்றுகிறது.-

"அலை, நீர்க்குமிழி, நுரை, சுழல்கள், இவையனைத்தும் தண்ணீரின் பல உருவங்களே; நம் கண்ணுக்குத் தெரியும் பிரமைகளே. காற்று தணிந்துவிட்டால், இவையனைத்தும் மறைந்துவிடும்.-

"நீருக்குப் பலவிதமான உருவங்கள் இருந்தன, பிறகு அவை அழிக்கப்பட்டன என்று சொல்லமுடியுமா? அவற்றின் இருப்பும் அழிவும் மாயையினுடைய கைவண்ணம் என்று தெரிந்து கொண்டு அவ்வாறே கருதவேண்டும்.-

"சிருஷ்டியின் மற்ற இயக்கங்களும் இவ்வாறே. விவேகிகள் ஈதனைத்தையும் பொருட்படுத்துவதில்லை. நசித்துப் போகக்கூடிய பொருள்களின்மீது அவர்கள் நாட்டம் வைப்பதில்லை. அதனால், நித்தியமான வஸ்துவை (பொருளை) அடைகிறார்கள். -

"ஞானத்தை விட தியானமே பெரிது; ஆனால், எதை தியானம் செய்யவேண்டும் என்ற தெளிவு இருக்கவேண்டும். இவ்விதமாக, பிரம்மத்தை பற்றி (முழுமுதற் பொருள்) முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பயனுள்ள தியானம் செய்ய இயலாது.-

"அனுபவத்தால் ஆத்மாவைச் சரியாகப் புரிந்துகொள்வதே தியானத்தின் ஆதாரம். எல்லா விஞ்ஞானங்களுக்கும் மூலம் தியானமே. தனிமனிதனுடைய ஆத்ம அனுஷ்டானம் (தன்னையறியும் வழிமுறை) தியானமே. ஆனால், சிறப்பான குணாதிசியங்கள் ஏதுமில்லாத ஒரு பொருளை எப்படி மனதிற்குள் கொணர்ந்து அதன்மீது தியானம் செய்ய முடியும்?

"இறைவன் சுலபமாக அகப்படுவதில்லை. ஆகவே ஆத்மாவே இறைவன்; யார் இறைவனோ அவரே குரு; இம்மூன்றிற்குள் அணுவளவு பேதமும் இல்லை.-

"திரும்பத் திரும்ப செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி , தியானத்திற்கும் தியானம் செய்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. காற்றடிக்காத இரவில் எரியும் விளைக்கைப் போல மனம் அமைதியாகவும் நிலைபெற்றதாகவும் ஆகிவிடுகிறது. இதுவே சமாதி நிலை.-

"ஆசைகளில் இருந்து விடுபட்டு, எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான் என்பதும் இவ்வுலகத்தில் தன்னைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதும் தெளிவானபிறகு, பயமென்பதே இல்லாத நிலையை அடையும்போது, தியானத்தின் மூலமாக தன்னைத்தானே ஆத்மா வெளிப்படுத்திக் காட்டுகிறது.-

Thursday, 18 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சத்தும் சித்தும் ஆனந்தமும் என்னுடைய சொரூபமென்றே அறிவீராக. ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக.-

"இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின் மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்தில் இருந்து சிகை வரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.-

"என்மீது இவ்வாறு தியானம் செய்துகொண்டு வந்தால், உம்முடைய மனம் படிப்படியாக ஒருமுகப்பட்டு தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள், இவற்றினிடையே இருக்கும் வேற்றுமை மறைந்துவிடும். -

"இம்முறையில் திரிபுடி (காண்பான், காட்சிப்பொருள், காட்சி) மறைந்து விடும்போது, தியானம் செய்பவர்  தூய உன்னதமான உணர்வை அடைவார். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும். ஏன் எனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகி விடுவீர். -

"தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது; குட்டிகள் அந்தக் கரையில் பாலும் அரவணைப்பில் கதகதப்புமின்றி இருக்கின்றன. தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கை அளித்து வளர்ச்சியடைய செய்கிறது.

"குட்டி ஆமைகள் எப்பொழுதும் தாயைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் வேறெதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டா; புல்லும் வேண்டா; வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் போஷாக்கு.-

"தாய் ஆமையினுடைய கனிந்த பார்வை குட்டிகளுக்கு சுயானந்த புஷ்டியை கொண்டுவரும் அமிர்த மழையாகும். இதுவே குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உண்டாகும் ஐக்கிய அனுபவமாகும். "

இவ்வமுத மொழிகள் பாபாவினுடைய வாயில் இருந்து வெளிப்பட்டு முடிந்தபோது, ஆரத்தி பாட்டும் முடிந்துவிட்டது. பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் உரக்க "ஜெய் ஸ்ரீ சச்சிதானந்த சத் குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்" என்று கோஷித்தனர்.

தீபங்களை சுழற்றிக் காண்பிக்கும் சடங்குபூர்வமானான ஆர்த்தியும் முடிந்துவிட்டது! ஜோக் பாபாவுக்கு கற்கண்டு சமர்ப்பித்தார். பாபா அதை ஏற்றுக்கொள்ள தமது உள்ளங்கையை நீட்டினார்.

நீட்டிய கரத்தில் தம்முடைய நித்திய பழக்கத்தின்படி அன்புடன் கைநிறைய கற்கண்டுகளை வைத்தார் ஜோக்.

அந்தக் கற்கண்டுகள் அனைத்தையும் என் கைகளில் நிரப்பிவிட்டு பாபா கூறினார். "நான் இப்பொழுது கூறியதை உமது மனதில் நன்கு நிலைப் பெறச் செய்து விட்டீரானால், உமது வாழ்க்கை இக்கற்கண்டைபோலவே இனிக்கும். -

"இக் கற்கண்டுகள் இனிப்பாக இருப்பது போலவே உம்முடைய மனதின் ஆசைகளும் நிறைவேறும். உமக்கு சகல மங்களங்களும் உண்டாகும். மனதின் ஆழமான ஏக்கங்களும் திருப்தியுறும். "


Thursday, 11 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்
திண்டின்மேல் சாய்ந்துகொண்டு இருந்த பாபா, அப்பொழுது நான் சொன்னதைக் கேட்பதற்காக முன்னோக்கிச் சாய்ந்தார். நானும் என்னுடைய முகத்தை நீட்டி விவரிக்க ஆரம்பித்தேன்.

"பாபா, அங்கு நாங்கள் பேசியதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவற்றில் எல்லாவற்றிலும் அம் மூதாட்டி பற்றிய கதை உண்மையிலேயே அற்புதமானது.-

"சாம்ராவ் இக்கதையைச் சொல்லச்சொல்ல, கற்பனை செய்யமுடியாத உம்முடைய வழிமுறைகளை நான் கண்டேன். அந்தக் கதையை சாக்காக வைத்துக்கொண்டு நீங்கள் வாஸ்தவமாக (உண்மையில்) எனக்கு அனுக்கிரஹம் செய்துவிட்டதாகத் தோன்றுகிறது. (தாபோல்கர்)

இதைக்கேட்ட பாபா ஆர்வத்துடன் வினவினார். "சொல்லும்; எனக்கு முழுக்கதையையும் சொல்வீராக. அது எவ்விதத்தில் ஓர் அற்புதமான கதை என்பதையும் அதன் மூலம் உமக்கு எப்படி அனுக்கிரஹம் செய்தேன் என்பதையும் காண்போம்?"

நான் அப்பொழுதுதான் அக்கதையைக் கேட்டிருந்தால் அது என் மனதில் பசுமையாக இருந்தது. மேலும் அக்கதை என்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் அதை உடனே பாபாவுக்கு தங்குதடையின்றி விவரித்தேன். பாபா அதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியுற்றார் என்று எனக்கு தோன்றியது.

இவ்வாறாக, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். பாபாவும் அதை மிக கவனமாக கேட்டார். உடனே என்னிடம் சொன்னார், "இதை உமது மனதில் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளும்."

மறுபடியும் பாபா உற்சாகத்துடன் கேட்டார், "நீர் இப்பொழுது கேட்ட கதை எவ்வளவு இனிமையானது! ஆனால், அது உம்முடைய மனதில் பதிந்ததா? அது வாஸ்தவமாகவே உமக்குப் பொருள்பொதிந்ததாக தெரிந்ததா?"

"பாபா, அந்தக் கதையைக் கேட்டபிறகு நான் சாந்தியடைந்தேன். என்னுடைய சந்தேங்களுக்கும் மன உளைச்சலும் பறந்து போயின. நான் ஒரு நிச்சயமான மார்க்கத்தை கண்டுகொண்டேன்".

பாபா கூறினார், "நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை அல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.-

"ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானம் அடைப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனதிருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.-

"முதல் காரியமாக, ஆசைகளில் இருந்து விடுபட வேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனதிற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும். -


Thursday, 4 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆரத்தி ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக, பெரிய மணி 'டாங் ', 'டாங்' என்று முழங்கியது.

மத்திய நேரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்த ஆரத்தியை செய்தனர். பெண்கள் மசூதியின் தளத்தையும் ஆண்கள் சபா மண்டபத்தையும் அடைத்து நிறைத்துக் கொள்வர்.

பிறகு மங்களவாத்தியங்களும் முரசும் முழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் உச்சஸ்தாயியில் (உரத்த குரலில்) ஆரதிப் பாட்டை பாடுவர்.

நாங்கள் சபாமண்டபத்தை நெருங்கியபோது , ஆரதிப் பாட்டு உரக்க முழங்கி கொண்டிருந்தது. படிகளில் எல்லாம் அங்கு வந்து குழுமியிருந்த  ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். மசூதியின் உள்ளே செல்வதற்கு வழியே இல்லை.

ஆரத்தி முடியும் வரை சபாமண்டபத்திலேயே இருந்துவிட்டு, பிறகு மற்ற பக்தர்களுடன் சேர்ந்துகொண்டு பாபாவிடம் செல்லலாம் என்று நான் நினைத்தேன்.

இவ்வாறு நான் எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டிருந்தபோதே , படிகளில் ஏறிவிட்ட மாதவராவ், என் கையைப் பிடித்து மேலே இழுத்து நேராக பாபாவிடம் அழைத்து சென்றார்.

பாபா சாவகாசமாக சில்லிம் (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடித்துக்கொண்டு, தம்முடைய வழக்கமான ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஜோக் நின்று கொண்டு  இடக்கையால் மணியாட்டிக் கொண்டே பஞ்சாரத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆரத்தி எழுப்பிய குதூகலத்தின் நடுவே, மாதவராவ் பாபாவுக்கு எதிரில் வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு, என்னையும் பாபாவை நோக்கியவாறு உட்காரவைத்தார்.

சாந்தமூர்த்தியும் மஹான்களில் இரத்தினமுமாகிய பாபா இனிமையான குரலில் அப்போது கேட்டார். "சாம்ராவ் (மாதவராவ்) எனக்காகக் கொடுத்த தக்ஷிணையை இங்கே கொண்டு வாரும்."

"பாபா, சாம்ராவே இங்கு இருக்கிறார்; அவர் தக்ஷிணைக்குப் பதிலாக நமஸ்காரங்கள் கொடுத்திருக்கிறார். நமஸ்காரங்கள்தான் பதினைந்து ரூபாய் என்றும் அதையே பாபாவுக்குப் பிரீதியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்." (தபோல்கரின் பதில்)

"சரி, சரி, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டீர்களா? சம்பாஷணை செய்தீர்களா? நீங்கள் என்ன பேசிக்கொண்டீர்கள் என்பதை எனக்கு இப்பொழுது விரிவாக சொல்லுங்கள்.-

"நமஸ்காரங்களை பற்றிய கதை ஒருபுறமிருக்கட்டும். நீர் அவரிடம் பேசினீரா? எதை பற்றி பேசினீர்? எப்படி பேசினீர்? எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்". (பாபா)

எனக்கு கதையை சொல்லவேண்டுமென்ற ஆர்வம். ஆனால், ஆரத்தியோ உரக்க முழங்கி கொண்டிருந்தது. இருப்பினும் என்னுள் பொங்கி கொண்டிருந்த மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. தங்குகடையின்றி  என் உதடுகளின் வழியாக கதை பிரவாகமாகப் பாய்ந்தது.