valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday, 4 May 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் நேர்மையான ஆர்வம் கொண்ட பாபா, ஒவ்வொரு நாளும் பல பக்தர்களை இதைக் கேட்கச் செய்தார்.

பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆழங் காணமுடியாது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகில் இருந்தாலும் சரி, வெகுதூரத்தில் இருந்தாலும் சரி, பாபா ஹிருதய வாசியாக (இதயத்தில் வசிப்பவராக) அவர்களுடனேயே  இருந்தார்.

அவர் மசூதியில் உட்கார்ந்துகொண்டே ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு வேலையை நியமித்துத் தம்முடைய சக்தியையும் அளித்து, அவர்கள் மூலமாக காரியங்களை சாதித்து முடித்தார்.

பாபு சாஹேப் ஜோக்கை தினமும் வாடாவில் போதி படிக்கச் சொல்லுவார். ஜோக் தினமும் தவறாது படித்தார்; அங்கு அதைக் கேட்க மக்கள் குழுமினர்.

ஜோக்கும் தினமும் மதிய உணவு உண்ட பிறகு, பிற்பகலில் பாபாவிடம் செல்வார். நமஸ்காரம் செய்துவிட்டு அவரிடமிருந்து விபூதியை பெற்றுக்கொண்டு போதி படிப்பதற்கு அனுமதி கேட்பார்.

சில சமயங்களில் அவர் ஞானேச்வரி படிப்பார்; சில சமயங்களில் ஏகநாத பாகவதத்தை வியாக்கியானத்துடன் படிப்பார். படிப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் படிப்பார்.

ஜோக்குகுப் போதி படிக்க அனுமதி அளித்தவுடனே, பாபா தம்மை தரிசனம் செய்ய வந்த பல பக்தர்களை போதியைச் செவிமடுக்க அனுப்புவார்.

சில சமயங்களில் பாபா குட்டிகதைகள் சொல்லுவார். இதை பக்தர்கள் கேட்டு மனதில் பதியவைத்துக் கொள்ளும் முன்னரே, 'எழுந்திருங்கள், வாடாவிற்கு போதி கேட்பதற்கு செல்லுங்கள்' என்று பாபா சொல்லிவிடுவார்.

விசுவாசமுள்ள பக்தர் போதியைக் கேட்கச் சென்றால், போதியில் வரும் கதை ஏற்கெனவே பாபாவிடம் கேட்டதை நிரூபணம் செய்யும் வகையில் அமையும்; முக்கியத்துவம் பூரணமாகவும் தெளிவாகவும் புரிந்து விடும்.

ஞானேச்வரர் அருளிய ஞானேச்வரியும் ஏகநாதர் அருளிய பாகவதமும் பாபா ஏற்கனேவே சொன்ன கருத்துகளை மேலும் வற்புறுத்துவதாகவே இருப்பது கண்டு பக்தர்கள் வியப்படைவர்.

ஒரு குறிப்பிட்ட போதியில் குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்ட நாளில் படிக்க வேண்டுமென்ற கட்டளை ஏதும் இல்லாவிட்டாலும், ஜோக் படிப்பது, பாபா அன்று சொன்ன கதைக்கு நேரடி சம்பந்தம் உடையதாகத் தவறாது அமையும்!

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் என்னும் இரண்டு நூல்களைத்தான் ஜோக் தினமும் படித்தார். இரண்டுமே, பக்தி மார்க்கத்தை கைக்கொள்ளும் மனிதர் எவ்விதமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதன் சாரமே.

ஞானேச்வரி என்னும் நூல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு எழுதப்பட்ட மராட்டி பாஷ்யம் (விரிவுரை). இந்நூலுக்கு பாவர்த்த தீபிகா என்றும் பெயர். ஏகநாதர் ஆன்மீக விஷயங்களை பற்றி எழுதிய ஏகநாத பாகவததிற்கு ஸ்ரீமத் பாகவததின் 11 ஆவது காண்டமே ஆதாரம்.  


Thursday, 28 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீமத் பாகவத புராணத்தின் 11ஆவது காண்டம், பக்தியும் பிரேமையும் ஆனந்தமும் நிரம்பி வழியும் பாகம். ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடி லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தை போன்ற இந்தக் காண்டம் 32 அத்தியாயங்களை கொண்டது. இந்தப் பகுதியைத்தான் தீட்சிதர் தினமும் வாசித்துக் கொண்டிருந்தார்.

பகல் நேரத்தில் தீட்சிதர் இதை உரக்க வாசித்து விவரிப்பார். இரவில் பாவர்த்த இராமாயணத்தை படிப்பார். அதுவும் குருவினுடைய ஆக்ஞையில் தீட்சிதருக்கு ஒரு பிரமான நூலாக அமைந்தது.

பக்தி, பிரேமை, ஆனந்தம் இவற்றின் சாரம் ஏகநாத பாகவதம். ஞாநேச்வரியின் இரண்டாவது அவதாரத்தை போன்றது. ஏகநாதர் மகாராஷ்டிரர்களுக்கு அளித்த உருவமுள்ளதும் மிகப் பெரியதுமான வரம்.

விடியற்காலையில் ஸ்நானம், நியம நிஷ்டையுடையவன் சாயி பூஜை, மற்ற தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் அர்ச்சனை, நைவேத்தியம், ஹாரதி, இவையெல்லாம் முடிந்தபின், -

நிவேதனம் செய்த பால், சொற்பமான ஆகாரம், இவை இரண்டையும் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்துகொண்ட பிறகு, தீட்சிதர் பயபக்தியுடன் போதியை படிக்க ஆரம்பிப்பார்.

பாகவதர்களில் உத்தமரான துகாராமை, பண்டாரா மலையில் ஏகாந்தமாக ஆயிரம் முறைகள் படிக்க வைத்த அக்காவியத்தின் இனிமையை யாரால் வர்ணிக்க முடியும்?

ஆ, எவ்வளவு பெரிய திருவருளான திவ்விய கிரந்தம்! எவ்வளவு நிஷ்டையுள்ள சிஷ்யர் இந்த தீட்சிதர்! இவ்விரு காரணங்களால்தான், மக்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தீக்ஷ்தரை ஏகநாத பாகவதத்தை தினமும் படிக்க சொல்லி சமர்த்த சாயி ஆணையிட்டார்.

வனத்தை தேடித் போக வேண்டா.  உத்தவ கீதையில் பகவான் இருக்கிறார். சிரத்தையுடன் அதைப் பாராயணம் செய்பவர்கள் சடுதியில் பகவானை அடைகிறார்கள்.

ஸ்ரீமத் பகவத் கீதை கிருஷ்ணருக்கும் அர்ஜுனருக்கும் போர்களத்தில் நேர்ந்த உரையாடல் (உத்தவ கீதை) அதனினும் சிறந்தது. இந்த உபதேசத்தைதான் பிரேமை பூண்ட வார்த்தைகளால் ஏகநாதர் தம்முடைய மராட்டி பாகவதத்தில் விளக்கி இருக்கிறார்.

இக்காரணத்தினால், கிருபையே உருவான சமர்த்த சாயினாதர் தெய்வப் பிரசாதமான இந்த கிரந்தத்தையும் ஞானேச்வரியையும் சேர்த்துத் தம் பக்தர்களை தினமும் படிக்கும்படி செய்தார்.

பாபா சகாரம் ஹரி ஜோக்கை படிக்கச் சொல்லி இருந்தார். அவரும் மற்ற பக்தர்கள் பயனுறும் வகையில் சாடேவாடாவில் தினமும் படித்துக் கொண்டிருந்தார்.   


Thursday, 21 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"வாரும் வாரும்! அமரும்; நான் இப்பொழுத்தான் ஸ்நானத்தை முடித்துவிட்டுக் கச்சத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய நித்திய பூஜையை முடித்து விட்டு உடனே வந்து விடுகிறேன். -

"நீங்கள் ஒரு தாம்பூலம் தயாரித்து தின்பதற்குள் நான் பூஜையை சீக்கிரமாக முடித்துவிட்டு வந்து விடுகிறேன். பிறகு, இருவரும் அமைதியாகவும் திருப்தியடையும் வரையிலும் சாவதானமாகப் பேசலாம். "

இவ்வாறு சொல்லிக்கொண்டே மாதவராவ் வீட்டின் உள்ளே சென்றார். பிறகு நான் யதேச்சையாக் ஜன்னல் விளிம்பில் இருந்த ஏசுநாத பாகவத போதியைக் கையில் எடுத்தேன்.

புத்தகத்தை கைவந்தவாக்கில் ஏதோ ஓர் இடத்தில் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். பிரித்த பக்கம், நான் அன்று காலை பாராயணத்தை poorthi செய்யாமல் நடுவில் நிறுத்திய பக்கமாக இருந்தது.

மிக ஆச்சரியம் அடைந்தேன்! காலையில் படிக்காமல் விட்டுவிட்ட பகுதியை பூர்த்தி செய்ய வைத்துப் பாபா என்னை ஒழுக்கமாகச் செயல்பட வைக்கிறாரோ!

இங்கு ஒழுக்கம் என்பது, நியமனம் செய்த நூலைத் தவறாமல் பாராயணம் செய்வது. நியமிக்கப்பட்ட நித்திய உபாசனையை முடிக்காமல் இடத்தை விட்டு நகரக் கூடாது.

இந்த சந்தர்ப்பத்தில் ஏக்நாத பாகவதத்தை பற்றிய சிறு விளக்கம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது; அதைச் சொல்லாமல் விடமுடியாது. கதை கேட்பவர்கள் கவனமாக கேளுங்கள்.

குருபக்தி நிரம்பிய இந்த ஏகநாத பாகவதத்தைத்தான் சாயியின் கிருபாபாத்திரரான (அருளைப் பெற்றவரான) காக சாஹேப் தீட்சிதர், மற்ற பக்தர்கள் சிறுகுழுவாக அமைந்து கேட்கும் வகையாக தினமும் வாசித்து வந்தார்.

மகா விஷ்ணு உலக மக்களை உத்தாராணம் செய்வதற்காக பிரம்மா என்ற மண்ணில் விதைத்த விதையானது நாரதர் என்னும் சோளக் கொல்லையாக விளைந்தது.

அந்தச் சோளக் கொல்லையில் இருந்து வியாச முனி சோளக் கதிர்களை அறுவடை செய்துக் கிடங்கில் சேர்த்துவைத்தார். பத்து லக்ஷணங்களை உடைய இச் சோளக் கதிர்களை சுகதேவ மகரிஷி, பரீஷித்து ராஜா என்னும் களத்தில் அடித்துத் துவைத்துச் சோளத்தை தானியமாக பிரித்து எடுத்தார்.

களத்தில் இருந்த சோளத்தை ஸ்ரீதர சுவாமிகள் காற்றில் தூற்றி, நோம்பிச் சுத்தம் செய்தார். ஜனார்த்தன சுவாமிகள் சுத்தம் செய்யப்பட்ட சோளத்தை அளந்து மதிப்பிட்டு, ஏகனாதரிடம் தந்தார். ஏகநாதர் அதிலிருந்து பல இனிப்பான பண்டங்களை சமைத்து விருந்து தயாரித்தார். 


Wednesday, 13 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"சாடே ஏழு நாள்களில் குரு சரித்திரத்தை ஒரே ஒருமுறைதான் படித்தார். கடந்த நாற்பது வருடங்களாக படித்துக் கொண்டிருக்கும் எனக்குப் பலனேதும் இல்லையா?-

"ஒருவர் ஏழு நாள்களிலேயே பலனை அனுபவிக்கிறார். மற்றவர் (ஆசிரியர்) ஏழு வருஷங்களாக பலனேதுமில்லாமல் இருக்கிறார். இக் கருணை மேகம் எப்பொழுது அருள்மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சாதகப் பறவையைப் போல நான் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். -

"ஞானிகளுள் மணிமாகுடமானவர் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நாள் என்றைக்கு வரும்? என்றாவது எனக்கு உபதேசம் அளிப்பாரா?"

பக்தவத்சலரான சாயி என்ன அற்புதம் செய்தார் என்று பாருங்கள்! என்னுடைய மனதில் இவ்வெண்ணம் எழுந்த உடனேயே அவருக்கு தெரிந்து விட்டது.

இம்மாதிரியான (என்னுடையது போன்ற) அஞ்ஞானத்தினால், கோடிக்கணக்கான நல்லதும் கெட்டதுமான எண்ணங்கள் பக்தர்களின் மனதில் எழுகின்றன. பாபாவுக்கு இவை அனைத்தும் தெரியும்.

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லாருக்கும் நிச்சயமாக தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம்; மகாராஜருக்கு உடனே தெரிந்துவிடும்!

ஆயினும் பரமகிருபையுள்ள அன்னை (சாயி), நிந்தனையான எண்ணங்களை மன்னித்து ஒதுக்கிவிட்டுப் பெருந்தன்மையான நல்லெண்ணங்களுக்கு, நல்வாய்ப்பு வரும்போது ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறார்.

ஆகவே, என்னுடைய எண்ணத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா என்னிடம் கூறினார், "எழுந்திரும், போய் அந்த சாமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே) பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு வாரும்.-

"அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பரஸ்பரம் சம்பாஷனை செய்துவிட்டு அவர் கொடுக்கும் தக்ஷினையை வாங்கிகொண்டு திரும்பி வாரும்."

சாயிநாதர் எனக்கு அருள் செய்யக் கருணை கொண்டதால், தக்ஷிணை என்னும் சாக்கில், "உடனே சென்று, என் சார்பாக சாமாவிடம் பணம் கேளும்" என்று கூறினார்.

 இவ்விதமான ஆக்ஞை பிறந்த பிறகு, எவருக்கு அவர் முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கும் திமிர் இருக்கும்? அது கீழ்ப்படியாத செயலாகிவிடும் அன்றோ! ஆகவே, அனுமதி பெற்றுக்கொண்டு நான் எழுந்தேன்.

நான் உடனே கிளம்பினேன். சாமாவும் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துவிட்டு வேட்டியைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

ஸ்நானம் செய்தவுடன் சுத்தமான மடிவேட்டியை அணிந்து கொண்டு நாமஜபம் செய்துகொண்டே கச்சத்தை சரிசெய்து கொண்டிருந்தார்.

அவர் வினவினார், "என்ன, இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்? மசூதியில் இருந்து வருகிறீர் போல் தெரிகிறதே! ஏன் முகத்தில் இந்தச் சஞ்சலம்? இன்று ஏன் தனியாக வந்திருக்கிறீர்?-


Thursday, 7 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

பாபா ஒரு புராணி கரைபோலப் (ஆன்மீக சொற்பொழிவாளரைப் போலப்) புத்தகத்தை படித்து விளக்கம் கூறினார். சாடே ஒரு கதைகேட்பவரைப் போல அமைதியாகவும் மரியாதையுடனும் குருகதையைக் கேட்டார். (கனவுக் காட்சி).

'அட இதென்ன தலைகீழான ஆள்மாறாட்டம்?" என்று சாடே  நினைத்தார். மிக ஆச்சரியமடைந்து அவருக்குப் பிரேமையால் தொண்டை அடைத்தது.

"அஞ்ஞான மென்னும் தலையணையின்மேல்  தலையை வைத்துகொண்டு புலனின்பங்களின் மேல் சாய்ந்து கொண்டு குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பிவிடு தயாள ரே!-

"இதே நிலையில் இருந்த என்னை ஒரு தட்டுத் தட்டி எழுப்பி, குருசரித்திரம்  என்னும் அமுதத்தை ஊட்டினீர்; கிருபாநிதியே!"

இந்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்தபோதே சாடே தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார். தாம் கனவில் கண்ட காட்சியை விவரமாகக் காகா  சாகேப் தீக்ஷிதரிடம் சொன்னார்.

மேலும் அவர் கூறினார், "காகா, இக் காட்சியினுடைய அர்த்தம் என்னவென்று எனக்கு புரியவில்லை. பாபாவுக்குதான்  அந்த சாமர்த்தியம் உண்டு. அவருடைய மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி நீங்கள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.-

"நான் ஏற்கெனவே ஒரு சுற்று படித்தது  போதுமா; அல்லது இன்னுமொரு சுற்று ஆரம்பித்துப் படிக்க வேண்டுமா? நான் என்ன செய்யவேண்டுமென்று  பாபா விரும்பிகிறார் என்று கேளுங்கள். அப்பொழுதுதான் என் மனம் அமைதியடையும். "

நல்ல வாய்ப்பு  ஒன்றை பயன்படுத்திக்கொண்டு, தீக்ஷிதர்  பாபாவுக்கு சாடேயின் கனவை விவரித்தார். "பாபா, இந்தக் கனவின் மூலம் சாடேவுக்கு  என்ன சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்?-

"இன்னுமொருமுறை சப்தாஹம் படிக்க வேண்டுமா அல்லது படித்தது போதுமென்று நிறுத்திவிடலாமா? இக் கனவுக்காட்சியின் முக்கியத்துவம் என்னெவென்று நீங்களே விவரித்து அவருக்கு பாதையை தெளிவாகக் காட்டுங்கள்!-

"இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். சாடே  ஒரு கபடமற்ற, நேர்மையான அடியவர். அவர்மீது கிருபை கூர்ந்து அவருடைய விருப்பதை நிறைவேற்றுங்கள்."

பாபா திருவாய் மலர்ந்து ஆணையிட்டார், "இன்னும் ஒரு ஆவிருத்தி (சுற்று) படிக்கப்படட்டும். குருவினுடைய இந்தப் புனிதமான சரித்திரத்தை படிப்பதால் பக்தர்கள் நிர்மலமாக ஆகிவிடுகின்றனர்.-

"இந்தப் போதியைப் (பாராயண  நூல்) படிப்பதால் பக்தர்களுக்கு மங்களம் உண்டாகும்; இறைவன் பிரீதியடைவான்; உலக பந்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்."

பாபா இதைத் திருவாய் மொழிந்து கொண்டிருந்தபோது நான் அவருடைய பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் எனக்குள்ளே வியப்படைந்தேன். என்னுடைய மனதுள் ஓர் எண்ணம் எழுந்தது.

"பாபா என்ன இவ்வாறு செய்கிறார்! சாடேவின்  சிறிய முயற்சி ஏழு நாள்களிலேயே பலன் அளித்து விட்டது; நானோ வருஷக் கணக்காகக் கழித்துவிட்டேன்!-  


Thursday, 31 March 2016

ஷிர்டி சாயி சத் சரிதம்

அந்த பக்தரின் வரலாறும் அவ்வாறே; வாழ்க்கையில் அவர் அடைந்த தளர்ச்சியைக் கண்ட சில நண்பர்கள், அவருக்கு இதமானதொரு பரிந்துரை வழங்கினார். அதைக் கேளுங்கள்.

"ஷீரடிக்கு சென்று சமர்த்த சாயியை தரிசனம் செய்யலாமே. அவசியம் அங்கே சென்று தயாசாகரமான அந்த ஞானியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

"ஞானிகளுடைய சந்நிதியில் ஒரு கணம் இருந்தாலும் அலைபாயும் மனம் அமைதியுறுகிறது. உடனே ஹரிபாதங்களை நாடுகிறது. பிறகு அங்கிருந்து மனதைத் திரும்ப இழுப்பது கடினமாகிவிடுகிறது. -

"பல தேசங்களில் இருந்து மக்கள் அங்கே குழுமுகின்றனர். சாயியின் பாத தூளியில் புரளுகின்றனர். மகாராஜ் அளிக்கும் உபதேசங்களுக்குப் பணிவுடன் கீழ்ப் படிகின்றனர். அவருக்கு சேவை செய்து, விரும்பியவற்றை பெறுகின்றனர். -

"இதுவே அவருடைய பிரசித்தியான கீர்த்தி, குழந்தைகளில் இருந்து கிழவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர். அவர் உம்மீது கருணை வைத்தால் உம்முடைய துக்கம் நிவிர்த்தியாகிவிடும். -

"இக் காலத்தில் ஷிர்டி ஒரு க்ஷேத்திரம் ஆகிவிட்டது. இரவு பகலாக யாத்ரிகர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். ஞானிகளின் தரிசனம் எவ்வளவு நன்மை செய்கிறது என்பதை நீங்களும் சொந்த அனுபவத்தில் உணரலாம்."

வறட்சியால் ஆட்பட்ட தரித்திரனுக்கு திடீரென்று பெய்யும் கனமழை எப்படியோ, பசியால் வாடிப் பிராணன் போய்விடும் போன்ற நிலையில் இருப்பவனுக்கு அறுசுவை உணவு கிடைப்பது எப்படியோ-

அவ்வாறு இருந்தது நண்பர்களின் வார்த்தை அந்த பக்தருக்கு. அவர் அந்த அனுபவத்தை பெறவேண்டுமென்று முடிவுசெய்து, ஷிர்டி செல்லும் பாதையில் பயணமாகக் கிளம்பிவிட்டார்.

ஷிர்டி கிரமாத்திற்கு வந்து சேர்ந்தார்; பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். உடனே அவருடைய கண்களில் அமைதி தவழ்ந்தது; மனதில் சமாதானம் நிரம்பியது.

பூரணமானதும் சனாதனமானதும் மாசற்றதும் சுய ஜோதியுமான சாயியின் உருவத்தைப் பார்த்தவுடன் அவருடைய மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.

பூர்வ ஜன்மத்தில் சம்பாதித்த பாக்கியத்தாலேயே தாம் சாயியை தரிசனம் நேர்ந்து, சாந்தியையும் கலக்கம் இல்லாத மனதையும் பெற்றதாக நினைத்தார்.

இந்த பக்தருடைய குடும்ப பெயர் ஸாடே. மனத்திண்மை மிக்க இவர், நியம நிஷ்டையுடன் குரு சரித்திர பாராயணத்தை ஆரம்பித்தார்.

சப்தாஹம் (ஒரு வாரத்திற்குள் பாராயணம் செய்து ஒரு சுற்று முடித்தல்) முடிந்த அன்று இரவே, பாபா சாடேவின் கனவில் தோன்றி, புத்தகமும் கையுமாக அவருக்கு அர்த்தத்தை விளக்கிக் கூற ஆரம்பித்தார்.

பாபா அமைதியாக தம்முடைய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு சாடேவை தமக்கெதிரில் உட்கார வைத்து, குருசரித்திரம் புத்தகத்தை கையில் வைத்துகொண்டு பிரவசனம் செய்வதற்குத் தயாராக இருந்தார்.


Thursday, 24 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்  சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.

உலக வாழ்கையின் வழிகாட்டி குரு, க்ஷேத்திராதனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்து கொள்வதற்கும் பற்றற்றருப்பதற்கும் குருவே வழிக் காட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.

புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜ ரூபத்தைக் காணும்படி செய்கிறார். மகா காருண்ய மூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.

இதன் பிறகு புலனின்ப ஆசைகள் அழிவடைந்து, சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப் பற்றி பேசுகிறான்! குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்து சேர்கின்றன.

ஞானிகள் அடியவர்களுக்கு கற்பகதரு ஆவர். அவர்களுடைய புனிதமான சந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு சேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவை இல்லாது செய்துவிடுவர்.

ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.

பிரபு ரே என்பவர் பம்பாய் மாகாணத்தின் கவர்னராக இருந்தபோது, முனிசிபாலிடி கமிஷனராக இருந்த திரு. கிராபோர்ட்  என்பவருடைய நிர்வாகத்தின்மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிரசித்தியாகவும் கீர்தியுடனும் விளங்கிய ஒரு கனவான் பாபாவிடம் பக்தி கொண்டார்.

இக் கனவான் வியாபாரத்தில் பெரு நஷ்டம் அடைந்ததால், வாழ்க்கையில் சலிப்பும் வெறுப்பும் அடைந்தார். மூன்று விதமான தாபங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையே வியர்த்தும் என்பதை உணர்ந்தபின், கையில் ஒரு லோட்டாவை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

மனம் நிலை கொள்ளாமல் தவித்ததால், தனிமையை நாடித் தூரமாக எங்காவது சென்றுவிட வேண்டுமென்று நினைத்தார். அந்த எண்ணத்தையே திடமாக்கிக் கொண்டார்.

மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தை தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத் தீவிரத்துடன் பக்தி செய்து இறைவனை கூவி அழைக்கின்றான்.

கெடுசெயல்களை தங்கு தடையின்றி தொடரும் வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும், முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன் அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.