valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 10 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

'எது நியாயம், எது அநித்தியம் என்னும் விவேகத்தை விடச் சிறந்த, உன்னதமான வழி வேறேதும் பிரம்மத்தை அடைவதற்கு இல்லை.' இது சத்தியமான வேதாந்த வசனம். ஆயினும் அம்மாதிரியான விவேகம் எல்லாருடைய சக்திக்கும் உட்பட்டதா என்ன?

சிரமமான அப்பியாசங்களாலும் கடினமான பயிற்சிகளாலும் உடலை எலும்புக் கூடாகத் தேய்க்க வேண்டும். அதன் பின்னரே குருவின் அருள் என்னும் ஒளியால் விவேகம் மெதுவாக உதயமாகும்.

எப்பொழுது நான்முகன், 'நான் ஈசுவரன், நான் அனைத்தையும் நிர்வகிப்பவன்' என்று நினைத்து தம்முடைய உண்மையான நிலையை மறந்துவிடுகிறாரோ, அப்பொழுதே இப் பிரபஞ்சம் சிருஷ்டி செய்யப்படுகிறது.

ஆனால், 'நானே பிரம்மமாக (முழு முதற் பொருளாக) இருக்கிறேன்' என்ற ஞானம் உதிக்கும்போது, அறிபவர் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறார். அக்கணமே இப் பிரபஞ்சமென்னும் மாயை தூக்கி எறியப்படுகிறது. இங்ஙனம் வேதங்கள் மொழிகின்றன.

எப்பொழுது ஒருவர் பிரம்மத்துடன் ஐக்கியமான உணர்வுடன் 'தன்னை அறிந்து' கொள்கிறாரோ, அப்பொழுது இப்பிரபஞ்சம் பிரம்மமாகிய அக்கினிக்கு ஆஹுதி (படையல் ) ஆகி விடுகிறது. அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சம் சாம்பலாகிப் போகிறது.

மற்ற ஜீவன்களுக்கும் இதே நிலைதான். அவர்களுடைய பிரமைகள், சூரிய ஒளி வந்த பின் பாம்பு மற்றும் வெள்ளி போன்ற இருட்டு நேர பிரமைகள் விலகுவது போன்று, உடனே விலகிவிடுகின்றன. (கயிறு பாம்பாகவும் கிளிஞ்சல் வெள்ளியாகவும் தெரிவது பிரமை)

கிளிஞ்சல் என்று தெரியாத அறியாமை, வெள்ளியோ என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது. வெள்ளியைப் பற்றிய உண்மயான ஞானம், நாம் பார்த்தது கிளிஞ்சல்தான் என அறிந்து கொள்ள வைக்கிறது. அந்தக் கணத்தில் வெள்ளி என்னும் மாயை மறைந்து கிளிஞ்சல் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிகிறது.

அஞ்ஞானத்தால் ஒன்றை மற்றொன்றாக அறியும் நிலைமை இது. ஞான தீபத்தை தேய்த்து துலக்கி சுத்தம் செய்து அஞ்ஞான மலத்தை அகற்றுங்கள். எல்லா பிரமைகளையும் ஒழிந்துவிடும்.

பிறப்பு, இறப்பு, என்னும் பந்தங்கள் இல்லையென்றால் மோக்ஷத்திற்கு நிர்ப்பந்தம் என்ன இருக்கிறது? வேதாந்தத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிரபந்தம் (நூல்) எதற்காக?

'நான்  கட்டுண்டிருக்கேன்; விடுதலை பெற வேண்டும்;" என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருப்பவரே பிரம்ம ஞானம் தேடுவதற்கு அதிகாரியாவார்; சுத்தமான அஞ்ஞானியோ அல்லது முற்றும் உணர்ந்த ஞானியோ அதிகாரி அல்லர்;

கட்டுகளே இல்லாத போது எதிலிருந்து விடுதலை பெறுவது? இதுவே வாஸ்தவமான நிலைமை. முக்குணங்களின் சம்பந்ததாலேயே பந்தமும் முக்தியும்; இதுவே அனைவருடைய அனுபவமும்.   


Thursday, 3 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஐந்து ரூபாய் என்ன பெரிய தொகை அவருக்கு? அதைகூடக் கடனாக கொடுக்க அவருக்கு மனமில்லை. பாபாவுக்கு அச் சிறிய தொகையை கொடுக்க மனமில்லாத அவர், வாஸ்தவத்தில் பேராசையின் வடிவமே.

அவரே பாபாவிடம் அன்புகொண்ட, கள்ளங்கபடமற்ற, விசுவாசமுள்ள அடியவராக இருந்திருந்தால், தம்முடைய கண்ணுக்கு எதிரிலேயே இந்தக் கடன் வாங்கிக் கடன் கொடுக்கும் காட்சியை சகித்துக்கொண்டு இருந்திருக்கமாட்டார்.

பிரம்ம ஞான தாஹம் அவ்வளவு இருந்தவர், கேள்வியைப் புரிந்துகொண்டிருக்க மாட்டாரா? இல்லை, நான் அவ்வாறு நினைக்கவே இல்லை! செல்வத்தின் மீதிருந்த மோஹம் அவரை ஆட்கொண்டு விட்டது.

இந்நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அவர் வெருமனெயாவது உட்கார்ந்திருக்கலாம்! அதுவும் இல்லை! திரும்பிச் செல்வதற்கு இருந்த அதீதமான (அதிகமான) அவசரத்தில் பொறுமையை இழந்து சொன்னார், "ஓ பாபா சாயி, பிரம்மத்தை எனக்கு சீக்கிரம் காட்டுங்கள்!"

பாபா அப்பொழுது சொன்னார், "நீர் இருந்த இடத்திலேயே பிரம்மத்தை உமக்குக் காட்ட நான் பல முயற்சிகள் செய்யவில்லையா? இதிலிருந்து  நீர் ஒன்றுமே புரிந்து கொள்ள வில்லையா?"

பிரம்மத்தை நாடுபவர் , பஞ்சப் பிராணன்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் ஐந்து கர்மேந்திரியங்களையும் அஹங்காரத்தையும் புத்தியையும் மனதையும் (பிரம்மத்திற்கு) சமர்ப்பணம் செய்து விட வேண்டும்.

பிரம்ம ஞானம் தேடும் பாதை கஷ்டமானது; எல்லாராலும் சுலபமாக அடைந்து விட முடியாது. பாக்கியசாலிக்கு நல்ல நேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னையே திடீரென்று வெளிப்படுத்திக் கொள்கிறது.

எவன் பற்றற்றருத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகி விடுவதைப் பற்றியும் கூடப் பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன் எதிலும் பற்றில்லாதவன்.

லவலேசமும் பற்றறுக்கும் சுபாவமும் இல்லாதவனுக்கு, பிரம்ம தத்துவத்தை எவர் எவ்வளவு முழுமையாக உபதேசம் செய்தாலும், அவர் (உபதேசம் செய்பவர்) வெற்றி பெறுவாரா?

உத்தமமான அதிகாரிகளுக்கு பிரம்ம ஞானம் அதிக சிரமம் இன்றி சுலபமாகக் கிடைத்துவிடும். மத்திம அதிகாரிகள் படிப்படியாக சாஸ்திர விதிகளின்படி முன்னேற வேண்டும்.

முன்னவருக்கு சிறகடித்துப் பறக்கும் பறவையை போன்று வேகமாகக் கிடைக்கும்; பின்னவருக்கு ஏணியின் படிகளில் ஏறுவது போன்று மெதுவாக நடக்கும். ஆன்மீக அதிகாரமே இல்லாதவர்கள் பிரம்மத்தை அறிவதற்காக செய்யும் முயற்சிகள் வியர்த்தமே . 


Thursday, 27 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"பாபாவுக்கு அவசரமாக ஐந்து ரூபாய் கடனாக தேவைப் பட்டது. ஆகவே, இந்த சமயத்திற்கு உடனே கொடு; சீக்கிரமாகவே கடன் திருப்பிக் கொடுக்கப்படும்"

பையன் நந்து மார்வாடியின் வீட்டிற்கு சென்றான்; ஆனால், கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, அவன் உடனே திரும்பி வந்து பாபாவிடம் செய்தி சொன்னான்.

பாபா கூறினார், "மறுபடியும் திரும்பிப் போ, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம். அனேகமாக அவர் வீட்டில் இருப்பார். அவரிடம் இதே செய்தியைச் சொல். சீக்கிரமாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வா. போய் வா!"

இந்த நடையும் வியர்த்தமாகப் போயிற்று. பாலா வீட்டில் இல்லை! நடந்ததை எல்லாம் பையன் பாபாவிடம் விவரித்தான்.

பாபா அவசரமாக இன்னும் ஓரிரண்டு இடங்களுக்கு இதே வேலையாகப் பையனை அனுப்பினார். பையன் வீணாக அங்கும் இங்கும் ஓடுவதில் களைத்துப் போனானே தவிர, ஒரு பைசாவும் கொண்டு வரவில்லை.

நந்துவோ, பாலவோ, மற்றவர்களோ வீட்டில் இல்லை என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். அந்தர்ஞானத்தால் அவர் அனைத்தையும் அறிந்திருந்தார்.

நடமாடும், பேசும், தெய்வமாகிய சாயினாதருக்கு ஐந்து ரூபாய் எப்பொழுதாவது தேவைபட்டிருக்குமா? இதெல்லாம் 'பிரம்மத்தை காட்டு' என்று கேட்டுக்கொண்டு வந்தவருக்காக செய்யப்பட்ட லீலையே.

வீட்டிற்கு விஜயம் செய்யும் விருந்தினருக்காக செய்யப்படும் இனிப்பான பலகாரத்தையோ அல்லது சீராவையோ (ரவாகேசரியையோ) வீட்டில் உள்ள அனைவருமே சுவைத்து ஆனந்தம் அடைகின்றனர் அல்லரோ!

அதுபோலவே, தம் அடியவர்களுக்கெல்லாம் மற்ற எல்லாருக்காகவும் போதனை செய்வதற்காக பாபா கண்டெடுத்த ஒரு சாக்குதான், பிரம்மத்தை நாடி வந்தவர்!

அவருடைய ஜோபியில் 250 ரூபாய்க்கு மேல் ஒரு நோட்டுக் கட்டு இருந்தது; அது பாபாவுக்கு தெரியும்.

பிரம்மத்தை தேடிக்கொண்டு வந்தவருக்கு அது தெரியாதா என்ன? நோட்டுக் கட்டு ஜோபியில் இருந்த போதிலும் அவருடைய விகற்பமான புத்தியும் தயக்கமும் அவரைத் தடை செய்து விட்டன.

முழு முதற் பொருளைக் கண்ணெதிரே காட்டு, என்று கேட்டுக் கொண்டு வருகிறார்; ஆனால், ஐந்து ரூபாய் பாபாவுக்கு (உடனே திருப்பிப் பெறக்கூடிய) கடனாக கொடுப்பதற்கு அவருக்கு மனமில்லை!

சாயி மகாராஜ் சத்தியசந்தர் என்பது அவருக்குத் தெரியும்; சிறிது நேரத்தில் திரும்பி வரப்போகும் கடனும் சொற்பமான தொகையே! ஆயினும், கடன் கொடுக்கலாம் என்று அவர் மனதில் நினைத்தவுடனே, கஞ்சத்தனம் அவரை ஆட்கொண்டது.  


Thursday, 20 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"அவ்வாறே கோடைக்காலம், வசந்த காலம், குளிர்காலம் போன்ற பருவ காலங்களும் சரியான முறைப்படி வந்து போகின்றன. இந்திராதி தேவர்களும் மக்களைக் காப்பதற்காக எட்டுத் திக்குகளிலும் நியமிக்கப்பட்ட அஷ்ட பாலகர்களும் தங்களுடைய கடமைகளை செவ்வனே செய்கிறார்கள். இவை அனைத்துக்கும் மூலம் பிரம்மமே!

"ஆகவே, இந்த சரீரத்தை விட்டுப் போகுமுன் ஞானம் பெற்றவன், மனித வாழ்வின் குறிக்கோள் ஆகிய பிரம்மத்தை அடைகிறான். இல்லையெனில், பிறப்பு - இறப்பு என்னும் சுழல் அவனை விடாது துரத்துகிறது.-

"பிரம்மத்தை அறியுமுன்னரே இந்த உடல் வீழ்ந்து விட்டால், சம்சார பந்தத்தின் மிச்சம் அவனைத் தொடர்ந்து செல்லும். மறுபடியும் பிறவிஎடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும். -

"நான் உமக்கு பிரம்மத்தை மட்டுமன்று, பிரம்மச் சுறுளையே காட்டுகின்றேன். நகத்திலிருந்து சிகை வரை உம்மை மூடிகொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக் காட்டுகிறேன்."

ஓ! தேவாமிருதம் போன்ற இனிமையான வார்த்தைகள்; சுத்த அத்வைத ஞானச் சுரங்கம்; சந்தேஹத்தால் ஊஞ்சலாடும் மனிதர்களையும் கூட தூக்கி விடும் சக்தியுடையுது.

பாபாவின் அமுத மொழிகளின் சக்தியால், நிலையில்லாத புலனின்பங்களின் பின்னால் இரவும் பகலுமாக ஓடுபவர்கள் கூட, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பாதையை உறுதியாக நாடுவர்.

விநாயகர் சந்தோசம் அடைந்தால் (நாம் செய்யும் வழிபாட்டால்) உலகியல் சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்திரன் சந்தோசம் அடைந்தால் சுவர்கத்தின் சம்பத்துகள் கிடைக்கும்.

குரு இவர்களையெல்லாம் விடச் சிறப்பானவர். சந்தோசம் அடைந்துவிட்டால், கிடைக்காத பொருளாகிய பிரம்மத்தையே காட்டிக் கொடுக்கக்கூடிய வள்ளல், குருவைத் தவிர வேறெவரும் இல்லை.

இந்த இனிமையான காதையைக் கேட்டால், சம்சார துக்கங்கள் அனைத்தும் மறந்து போய்விடும். பிரம்ம நாட்டம் உடையவர்களுக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பாபாவுக்கு தெரியாதா!

ஆகவே, பாபா அவரை உட்காரச் செய்துவிட்டு, அவருடைய கவனத்தை வேறு திசையில் திருப்பி, அவர் கேட்ட கேள்வியை தாம் மறந்துவிட்டது போல, அவருக்குத் தோன்றும்படி செய்தார்.

பிறகு பாபா என்ன செய்தாரென்றால், ஒரு பையனைத் தம்மிடம் அழைத்து, "போ, சீக்கிரமாக போய் நந்துவுக்கு இந்தச் செய்தியைச் சொல்.-

Thursday, 13 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"பிரம்மத்தை அறியவேண்டுமென்று உம்முடைய தேடல் அத்தகையதே. ஒரு பைசாவும் ஈயாத கஞ்சனாகிய நீர், உம்முடைய ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடியவர் எவரையும் காணமாட்டீர்."

ஆயினும், பிரம்மத்தை அறியவேண்டுமென்ற பேராவல் கொண்ட இம்மனிதர், போகவர ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ஷீரடிக்கு கிளம்பிவிட்டார். இவ்விதமாக சாயியின் பாதங்களுக்கு வந்து சேர்ந்தார்.

சாயியை தரிசனம் செய்துவிட்டு அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். கதை கேட்பவர்களே, சாயி அவருக்குச் சொன்ன மதுரமான வார்த்தைகளைக் கேளுங்கள்.

சாயியின் கதைகள் என்னும் கற்பக விருக்ஷதிற்குக் கவனமான கேள்வி என்னும் தண்ணீரைப் பாய்ச்சினால், அது நன்றாக வேர்விட்டு, கேட்பவர்களுடைய பயபக்தி வளர்ந்து பலப்பல விதமான பழங்களை உற்பத்தி செய்யும்.

இம் மரத்தின் எல்லாப் பாகங்களும் இனிமையாக இருக்கும்; சுகந்தமான புஷ்பங்கள் மலரும்; மதுரமான பழங்களின் பாரத்தால் மரமே தழையும்; அனுபவிப்பவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

அப்பொழுது அவர் சொன்னார், "பாபா, தயவு செய்து எனக்கு பிரம்மத்தை (முழு முதற் பொருளைக் ) காட்டுங்கள். இந்த ஒரே ஆவலுடன் நான் வந்திருக்கேன். ஷிர்டி பாபா தாமதமேதுமின்றி உடனே பிரம்மத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார்கள். -

"இதற்காகவே நான் நெடுந்தூரம் வந்திருக்கிறேன்; பயணம் செய்ததால் களைத்துவிட்டேன். ஆயினும் இப்பொழுது எனக்கு பிரம்மம் கிடைத்துவிட்டால், என்னுடைய முயற்சிகளுக்கு பலன் கிடைத்தவனாவேன்".

பாபா கூறினார், "கவலைப்படாதீர், நான் உமக்கு நேரத்தோடு உடனே பிரம்மத்தை காட்டுகிறேன். இங்கே கடன்வியாபாரமே என்றும் கிடையாது. உம்முடையதைப் போன்ற வேண்டுதலுடன் வருபவர்கள் அரிதினும் அரிது!-

"செல்வத்தையோ, சம்பத்தையோ, வியாதி நிவாரணத்தையோ, ஆபத்து விலக்கையோ, புகழையோ, கௌரவத்தையோ, ராஜிய பதவியையோதான்  மக்கள் கேட்கிறார்கள்; அனவரதமும் சுகத்தையே நாடுகிறார்கள்.-

"கேவலம் உலக சுகங்களை நாடியே மக்கள் ஷிர்டிக்கு ஓடி வருகின்றனர்; வெறும் பக்கீராகிய என்னை வழிபடுகின்றனர். யாரும் பிரம்மம் வேண்டுமென்ற கேட்பதில்லை.-

"இம்மாதிரியான மக்கள் (சுகம் நாடுபவர்) உம்மை போன்றவர்கள் மிகக் குறைவு. பிரம்ம ஞானம் கேட்டு யாரும் வரமாட்டார்களா என்று நான் ஏங்குகிறேன்; அவர்களை சந்திப்பது எனக்குப் பண்டிகையும் திருவிழாவுமாகும். -

"பிரம்மத்திற்கு பயந்தே சூரியனும் சந்திரனும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் செல்கிறார்கள். உதயமாவதும் அஸ்தமனவாதும் ஒளி தருவதும் ஓய்வதும் குறிப்பிட்ட நேரங்களில் நடக்கிறது.- 

Thursday, 6 August 2015

ஷிர்டி சாய் சத்சரிதம்

கதை கேட்பவர்களிடம் நான் ஒரே ஒரு விண்ணப்பம் செய்கிறேன். நான் கடந்த பிரம்ம ஞானத்தை தேடி பாபாவிடம் வந்த மனிதரின் கதையாகும் இது. வாழ்க்கையின் மிகப்பெரியதும் முக்கியமானதுமான விஷயத்தை பற்றிக் கேளுங்கள்.

பிரம்ம ஞானம் பெறவேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் பாபாவிடம் வந்த மனிதரை பாபா எவ்விதம் திருப்தி செய்தார் என்பதையும், அவருக்கும் தம்மைச் சுற்றியிருந்த நிஜமான பக்தர்களுக்கும் பாபா அருளிய போதனையையும் கேளுங்கள்.

எல்லா ஆசைகளையும் பரிபூரணமாகத் துறந்த ஞானிகள் எப்பொழுதும் எந்நிலையிலும் நிறைவேறாத, அத்தியந்தமான (உயிருக்குயிரான) ஆசைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்;

சிலர் புத்திர சந்ததியை வேண்டுவர்; சிலர் என்றும் நிலைக்கும் ராஜ்யத்தையும் விரும்புவர்; சிலர் பாவ பக்தியையும் நாடுவர்; எவரோ ஒருவர்தான் பிறவிப் பிணியிலிருந்து விடுதலையை நாடுவர்.

பாபாவினுடைய பெரும் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப் போனவரும், தம்மைப் பக்தனாக பாவித்துக் கொண்டவருமான மனிதரொருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக வந்தார்.

செல்வம், சந்ததி, வேலையாள்கள் போன்ற எல்லா சம்பத்துக்களும் அவரிடம் அபரிதமாக இருந்தன. இருப்பினும், பாபா உதார குணமே உருவெடுத்தவர் என்று தெரிந்து அவரை தரிசனம் செய்வதற்கு வந்தார்.

"பாபா ஓர் உயர்ந்த பிரம்ம ஞானி; சாதுக்களிலும் ஞானிகளிலும் மணிமகுடமானவர். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துவேன்; ஏனெனில், அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்குட்பட்டவை.-

"எனக்கு எந்தவிதமான குறையோ தேவையோ இல்லை; ஆகவே, நான் அவரிடம் பிரம்ம ஞானம் கேட்டால் என்ன? அது மாத்திரம் சுலபமாக கிடைத்துவிட்டால் நான் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாவேன்!"

நண்பர் ஒருவர் அப்பொழுது சொன்னார், "பிரம்மத்தை அறிவது சுலபமான காரியம் அன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசை பிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது நடக்காத காரியம்.-

"செல்வம், மனைவி, மக்கள், இத்தியாதி விஷயங்களை தவிர வேறெதிலும் நீர் சுகம் காண்பதில்லை. உம்மைப் பொறுத்தவரை பிரம்மம் ஒரு மனபிராந்தியே. அது எப்படி உமக்கு விச்ராந்தி அளிக்கும்?-

"இந்திரிய சக்திகள் க்ஷனம்டைந்து போனபின் இவ்வுலகத்தார் யாரும் (நம்மை) மதிப்பதில்லை. அந்தக் கட்டத்தில், சோம்பித் திரியும் மனம், பிரம்மம், அது, இது என்று நூல் இழைக்கிறது.-

Thursday, 23 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சத்குரு எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் என்றால், ஓர் அடியவர் அவருடைய விருப்பத்தை எப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், குருதான், குருவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பக்தனுடைய ஆவலை நிறைவேற்றி வைத்து அவனை நிஷ்காமனாகச் (விருப்பம் இல்லாதவனாக) செய்கிறார்.

உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பூவையோ ஓர் இலையையோ அவர் அன்புடன் ஏற்றுகொள்கிறார். அதுவே கர்வத்துடன் அளிக்கபட்டால், உடனே தலையை திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்.

சச்சிதானந்த கடலாகிய அவருக்குப் புறச்சடங்குகள் முக்கியமா என்ன? ஆயினும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் எது அளிக்கபட்டாலும் அதை சந்தோஷமாக ஏற்றுகொள்கிறார்.

எனகொன்றுமே தெரியாது என்னும் போர்வையின் கீழ், வாஸ்தவத்தில்  அவர் நம்முடைய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கிறார். சாஸ்திர விதிகளில் இருந்து விலகாமல் தம் அடியவர்களுக்கு இனிமையான முறையில் போதனை நல்குகிறார்.

அவருக்கு பாவத்துடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.

அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், குருவின் மீது உறுதியான விசுவாசமே.

மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. குரு அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!

மூவுலகங்களிலும் தேடினாலும் குருவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான குருவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.

குருவைச் சிந்தாமணிக்கு உபமானப்படுதுவதும் சரியாகாது. ஏனெனில், அந்த தேவ லோகத்து ரத்தினம் நாம் நினப்பதைதான் அளிக்கும். குருவோ, நிஜமான பக்தன் பரம ஆச்சரியம் அடையுமாறு அவன் நினைத்தே பார்க்காத வஸ்துகளையும் அளிப்பார்.

இந்திரனுடைய கற்பகதருவிற்கு உபமானப்படுத்துவோமேன்றால், அது நாம் கல்விதம் செய்வதைத்தான் (கற்பனையில் விரும்புவது) அளிக்கும். குருராயரோ, நாம் கற்பனை செய்தும் பார்க்கமுடியாத நிர்விகல்பசமாதியையும் அளிக்கும் சக்தி பெற்றவர்.

காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவை விடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனை செய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடு பேறு நிலையையும்) அளிப்பார்! வேறு யாருக்கு 'கற்பனை செய்து பார்க்க முடியாததையும் அளிப்பவர்' என்னும் பட்டம் பொருந்தும்?