valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 20 February 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஜோகாயி, ஜாகாயி, மாரியாயி, சனி, சங்கர், அம்பாபாயி, மாருதி, கண்டோபா, மஹால்சாபதி - இந்தத் தெய்வங்களெல்லாம் ஷீரடியில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருந்தன. 

ஆனால், ஆபத்துக் காலத்தில் கிராம மக்களுக்கு இந்த தேவதைகள் எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களுடைய நடமாடும் தெய்வமான சாயியே ஆபத்து நேரத்தில் அவர்களை மீட்பதற்காக ஓடி வந்தார். 

அவருக்கு கோழியோ ஆடோ பலியிடத் தேவை இல்லை. பணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான அன்புக்காகவும் விசுவாசத்திற்காக்கவுமே அவர் பசி கொண்டார். அதன்பிறகு, அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்துபோயின. 

மக்கள் எவ்வளவு அதிர்ந்து போயிருந்தார்கள் என்பதை அறிந்தபோது மஹராஜினுடைய இதயம் கருணையால் உருகியது. தம்முடைய ஆசனத்தை விட்டு எழுந்து, மசூதியின் வாசல் விளிம்பிற்கு வந்து நின்று கொண்டார். 

வானம் இடித்தது; மின்னல்கள் பளபளத்தன. இதன் நடுவே சாயி மகாராஜ் பலம் கொண்ட மட்டும் தம்முடைய குரலை உச்சஸ்வரதிற்கு உயர்த்தி கர்ஜித்தார். 

சாதுக்களும் ஞானிகளுக்கும் தங்களுடைய உயிரைக் காட்டிலும் பக்தர்ளுடைய உயிரே பெரிது. அவர்களுடைய விருப்பப் படியேதான் தேவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்காக தேவர்களும் பூமிக்கு இறங்கி வருகின்றனர். 

பக்தர்கள் உதவி நாடி வேண்டும்போது, தேவர்களும் பக்தர்களுடைய ஈடுபாட்டை ஞாபகப் படுத்திக்கொண்டு அவர்களுக்காகப் பரிந்து ஓடிவந்து காப்பாற்ற வேண்டும். 

கர்ஜனைக்கு மேல் கர்ஜனை பயங்கரமாக வானைப் பிளந்தது. இச்சத்தம் அங்கிருந்தவரை எல்லாம் செவிடாக்கியது.  மசூதியே நடுங்கி ஆடுவதைப் போலத் தோன்றியது. 

உச்சஸ்வரத்தில் பாபாவினுடைய குரல் மழைப் பள்ளத்தாக்கின் எதிரொலியைப் போல் மசூதிகளின் மூலமாகவும் கோயில்களின் முழங்கியது. உடனே மேகங்கள் இடிப்பதை நிறுத்தின. மழையும் அடங்கியது. 

பாபாவினுடைய கர்ஜனை சபா மண்டபத்தையே உலுக்கியது. பக்தர்கள் திகைத்துபோய், எங்கு இருந்தனரோ அங்கேயே அசைவற்று நின்றனர். 

பாபாவினுடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ!  மழை குறைந்தது; சூறாவளிக் காற்று நின்றது; மேகமூட்டம் பார்வையை மறைத்த நீராவிப் படலமும் கலைந்தன. 

படிப் படியாக மழை குறைந்தது. ஊதல் காற்று அடங்கியது; அந்த நேரத்தில் வானத்தின் கருமை மறைந்து, நக்ஷத்திர கூட்டங்கள் தெரிய ஆரம்பித்தன. 

சிறிது நேரத்தில் மழை முழுவதுமாக நின்றுவிட்டது. காற்று மாதமாகியது. வானத்தில் நிலா தோன்றியது. சகலரும் ஆனந்தமடைந்தனர். 

இந்திரனுக்கு கருணை பிறந்தது போலும். மேலும் , ஒரு ஞானியினுடைய ஆணைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்றோ?  ஆகவே, மேகங்கள் பலதிசைகளில் சிதைந்து டின. புயலுக்குப் பின் அமைதி நிலவியது. 


Thursday, 13 February 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாபா கன்னாபின்னாவென்ற வார்த்தைகளால் அவரை வசை மொழிந்து கடிந்து கொண்டார். ஹாஜி திகைத்துச் செயலற்றுப் போய் விட்டார். பாபா திரும்பிச் சென்று விட்டார். 

மசூதியின் முற்றத்தினுள் நுழையும்போது தோட்டத்துப் பெண்கள் சிலர் மாம்பழம் விற்பதைப் பார்த்தார். அவர்களிடமிருந்த பழக் கூடைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி ஹாஜிக்கு அனுப்பி வைத்தார். 

உடனே திரும்பி, மறுபடியும் பாலகேயிடம் சென்று, ஐம்பத்தைந்து ரூபா எடுத்து ஒவ்வொன்றாக ஹாஜியின் கையில் எண்ணினார். (கொடுத்தார்). 

இதற்குப் பிறகு இவ் விருவர்களுக்கிடையே பிரேமை வளர்ந்தது. ஏற்கனேவே நடந்ததை எல்லாம் இருவருமே முற்றிலும் மறந்து விட்டதைப் போல, ஹாஜி விருந்துக்கு அழைக்கப் பட்டார். ஹாஜி மகிழ்ச்சியில் திளைத்தார். 

சில நாள்களுக்குப் பிறகு, ஹாஜி ஷிர்டியை விட்டுச் சென்று விட்டார்; ஆனால், மறுபடியும் திரும்பி வந்தார். பாபாவின் மீது மேலும் மேலும் பிரேமை கொண்டார். அதற்குப் பிறகும் பாபா அவருக்கு அவ்வப் போது பணம் கொடுப்பதை தொடர்ந்தார். 

இடிக்கும் மின்னலுக்கும் அதிபதியும் மேகங்களின்மீது ஆட்சி செலுத்துபவருமான இந்திரனை ஒருமுறை பாபா தொழுததைக் கண்டு நான் ஆச்சரியத்தால் தாக்கப்  பட்டேன். 

மிகப் பயங்கரமான நேரம் அது. வானம் முழுவதும் மேக மூட்டத்தால் கறுத்துவிட்டது. பறவைகளும் மிருகங்களும் பயத்தால் நடுங்கின. ஆக்ரோஷமான சூறைக் காற்றுக்குப் பின், பலத்த மழை பொழிய ஆரம்பித்தது. 

அது சூரியன் அஸ்தமித்துவிட்ட முன்னிரவு நேரம். திடீரென்று சுழற்காற்று அடித்து பலமாகச் சத்தமிட்ட போது எங்கும் ஒரே கலவரமாக இருந்தது. 

இது போதா தென்று மேகங்கள் இடித்துக் கர்ஜித்தன. மின்னல்கள் பள பளத்தன. சூறைக் காற்று மேலும் மேலும் சீறியது; பின்னர் கனத்த மழை பொழிந்தது. 

மேகங்கள் கொட்டோ கொட்டென்று  கொட்டின; ஆலங்கட்டி பெரியதாகவும் வேகமாகவும் விழுந்தது. ஷிர்டி கிராம மக்கள் அனைவரும் என்ன நேருமோ என்று பீதியடைந்தனர்; ஆடு மாடுகள் பரிதாபமாக கதறின. 

மசூதியின் சார்பில் ஆண்டிகள் பாதுகாப்புக்காக ஒதுங்கினர்; மாடுகளும் கன்றுகளும் அங்கு வந்து குழுமின. masoothiyil இடமில்லை. 

தண்ணீர், தண்ணீர், தண்ணீர் எங்கே பார்த்தாலும் தண்ணீர். மழை பொழிந்த வேகத்தில் வைக்கோல் எல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது. அறுத்துக் கட்டுக் கட்டிக் கொட்டகையில் வைக்கப் பட்டிருந்த தானியங்கள் எல்லாம் முழுக்க நனைந்து போயின. ஜனந்களுக்கிடையில் பீதியில் அமளியும் நிலவியது. 

கிராம மக்கள் பயத்தால் நடுநடுங்கி சபா மண்டபத்தில் நெருக்கியடித்தனர். சிலர் பாதுகாப்புக்காக மசூதியின் சார்புகளின் கீழே நின்றனர். அவர்களனைவரும் பாபாவை வேண்டிக் கொள்வதற்காகவே  வந்திருந்தனர்.


Thursday, 6 February 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"சாமா, நீ இன்னும் 'இன்று பிறந்த சிசு'வாகவே இருக்கிறாய். அல்லா அனுக்ரஹம் அவருக்கு இல்லாவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும்? 

"அல்லாமியாவிடம் கடன்படாதவர் எவராவது இந்த மசூதியின் படிகளில் ஏற முடியுமா? இங்கிருக்கும் பக்கீரின் வழிமுறைகள் எந்த ஆராய்ச்சியாலும் அறிந்துகொள்ள முடியாதவை. அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது. 

"எது எவ்வாறு இருப்பினும், பாரவிக் கிணற்றுக்கப்பால் நேராகப் போகும் ஒற்றையடிப் பாதையில் அவர் ஜாக்கிரதையாக நடந்து வருவாரா என்று ஸ்பஷ்டமாகக் கேள். "

ஹாஜி சொன்னார், "எவ்வளவு சிரமமான செயலாக இருந்தாலும் நான் ஜாக்கிரதையாக நடந்து வருவேன். எனக்கும் பிரத்யக்ஷமாக பேட்டி அளியுங்கள். உங்களுடைய பொற்பாதங்களி னுக்கருகில் அமர என்னை அனுமதியுங்கள்".

இந்தப் பதிலை சாமாவிடமிருந்து கேட்டபிறகு பாபா சொன்னார், "மேற்கொண்டு அவரை, நான்கு தவணைகளில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் தருவாரா என்று கேள்."

இந்தச் செய்தியை சொன்ன மாதவராவிற்கு ஹாஜி பதிலுரைத்தார். "என்ன கேள்வி கேட்கிறீர்! பாபா கேட்டால் நான் நாற்பது லட்சங்களும் கொடுப்பேன்; ஆயிரங்களை பற்றிய கதை என்ன?

பாபா இதைக் கேட்டுவ விட்டு மேலும் சொன்னார், "இன்று மசூதியில் ஓர் ஆட்டை வெட்டப் போகிறோம். எந்தப் பகுதி மாமிசம் அவருக்கு வேண்டுமெனக் கேள்.-

"மாமிசம் சேர்ந்த எலும்புகள் வேண்டுமா? அல்லது அவர் கொட்டைகளின்மீது மனதை வைத்திருக்கிறாரா? போ, அவருக்கு எது வேண்டுமென்று நிச்சயமாக அந்தக் கிழவரை கேட்டுகொண்டு வா".

மாதவராவ் பாபாவினுடைய செய்தியை முழுமையாக ஹாஜிக்கு தெரிவித்தார். ஹாஜி திட்டவட்டமாக பதிலுரைத்தார். "எனக்கு அதில் எதுவுமே வேண்டா.-

"ஏதாவது எனக்கு கொடுக்க வேண்டுமென்று பாபாவுக்கு எண்ணமிருந்தால், எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. அவருடைய கொலம்பாவிலிருந்து (சோற்றுப்பானை) ஒருபிடி உணவு கிடைத்தால் என்னை மகா பாக்கியசாலி யாகக் கருதுவேன்."

மாதவராவ் ஹாஜியினுடைய பதிலை பாபாவுக்கு தெரிவித்தார். பாபா இதைக் கேட்டவுடனே கடுங்கோபம் கொண்டார். 

கொலம்பாவையும் குடிநீர்பானையையும் கதவு வழியாக வெளியே எடுத்தெரிந்தார்.  ஆக்ரோஷமாக தம்முடைய கைகளை கடித்துக் கொண்டு வெளியே வந்து ஹாஜியின் அருகில் நின்றார். 

கப்னியை இரண்டு கைகளால் பிடித்து ஹாஜிக்கு எதிரில் கப்னியைத் தூக்கிக் கொண்டு நின்று, அவர் சத்தம் போட்டார், "நீர் உம்மை என்னவென்று நினைத்துக் கொண்டு என்முன்னே கர்வம் காட்டுகிறீர்.?-

"உம்முடைய வயோதிக ஞானத்தை டம்பமடிக்கிறீரா இப்படித்தான் உம்முடைய குர் ஆனை படித்தீரா? மெக்காவுக்கும் மெதினாவுக்கும் புனித யாத்திரை சென்றது உம்மை கர்வியாகவும் கோபக் காரராகவும் செய்து விட்டதே; என்னை நீர் இன்னும் அறிந்து கொள்ளவில்லை."


Thursday, 30 January 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பால்கே மனமுடைந்து போனார். "மசூதியின் படிகளிர்கூடக் கால்வைக்க முடியாமல் செய்த என்னுடைய விதிதான் என்னே! நான் என்ன கொடும்பாவம் செய்தேனோ தெரியவில்லையே! -

"எவ்விதமாக நான் அவரை மகிழ்ச்சியடைச் செய்து அவரருளைப் பெற முடியும்?" இவ்வெண்ணமே பாலகேயின் மனதை இரவும் பகலும் ஒரு வியாதியைப் போல் வாடியது. 

ஒருநாள் எவரோ அவரிடம் கூறினார், "சோகத்தில் மூழ்காதீர்; மாதவராவினுடைய உதவியை நாடினால் உமது விருப்பம் நிறைவேறும். - 

"நந்திதேவரை முதலில் தரிசனம் செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டு, சிவன் பிரீதியடைவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?" பாலகேவுக்கு இது ஒரு சிறந்த வழியாகத் தோன்றியது. 

மேல் எழுந்த வாரியாகப் பார்க்கும்போது , கதை கேட்பவர்களுக்கு இது மிகைப் படுத்திச் சொல்லப்பட்ட கூற்றாக தெரியலாம். ஆனால், ஷீரடிக்கு பாபா தரிசனத்திற்காக சென்ற பக்தர்களுக்கு இதுவே அனுபவமாக இருந்தது. 

பாபாவிடம் அமைதியாகவும் உபத்திரம் எதுவும் இல்லாமலும் பேச நினைத்தவர்கள், மாதவராவையே முதலில் அழைத்துக்கொண்டு  சென்றனர். 

மாதவராவ் முதலில் மெல்லிய குரலிலும் இனிமையாகவும் யார் வந்திருக்கிறார், எங்கிருந்து வந்திருக்கிறார், எதற்காக வந்திருக்கிறார் என்பது பற்றி இதமாக அறிமுகப் படுத்துவார். சமர்த்த சாயி இத்தூண்டுதலால் பேச ஆரம்பிப்பார். 

இதைப் பற்றி கேள்விப்பட்ட ஹாஜி, மாதவராவை, "என்னுடைய மனத்திலிருந்து இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள்; அடையமுடியாததை அடைவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கெஞ்சினார். 

தயவு செய்யும்படி இவ்வாறு உந்தப்பட்ட மாதவராவ், இச்செயல் சுலபமாக இருந்தாலும் சரி, ஒருமுறை முயன்று பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தார். 

மாதவராவ் மசூதிக்குச் சென்று, மெதுவாகவும் உஷாராகவும் இந்த விஷயத்தை பற்றிப் பேசுவதற்கு தைரியம் பூண்டார். "பாபா, அந்த முதியவர் ஒரே கஷ்டப் படுகிறாரே! அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக் கூடாதா! அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக் கூடாதா?" என்று கேட்டார். 

"அந்த ஹாஜி, மெக்கா-மெதீனாவெல்லாம் சென்று வந்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக ஷீரடிக்கு வந்திருக்கிறார். அவரிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது?   ஒ, அவரையும் மசூதியினுள் வருவதற்கு அனுமதியுங்கள் !-

"எண்ணற்ற ஜனங்கள் மசூதியினுள் தரிசனம் செய்ய வருகிறார்கள்; தரிசனம் ஆனா உடனே திரும்பி விடுகிறார்கள். இவரை மாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி ஏக்கத்தால் வெம்பிப் போகச் செய்ய வேண்டும்?-

"இப்பொழுதாவது அவர்மீது கிருபையுடன் கடாக்ஷம் செய்யுங்கள்; மசூதியில் பேட்டி அளியுங்கள். அவரும் அப்போது தம் மனதுள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லிவிட்டு உடனே இவ்விடத்தை விட்டு அகன்று விடுவார்".



Thursday, 23 January 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சில சமயங்களில் திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள் மீது காட்டுவார். மற்ற சமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும் மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார். 

சில நேரங்களில் காலாகினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சில சமயங்களில் வெண்ணையை விட இளகியவராக உற்சாகமும் மகிழ்ச்சியுடனும் இருந்தார். 

வெளிப்பார்வைக்கு கோபத்தால் அவர் நடுங்கலாம். கண் விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்கு குழந்தையின் மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது. 

அடுத்த கணமே தம்முடைய சுய சாந்தி நிலையை மீண்டும் அடைந்து பக்தர்களை தம்மிடம் வருமாறு உரக்க அழைப்பார், "நான் யார்மீதாவது கோபப் படுவது போலத் தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது. -

"தாய் தன் குழந்தையை எட்டி உதைத்து தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன். -

"நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்போழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடி வருகிறேன்".

காதையின் இந்தப் பாகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு மிகப் பொருத்தமான காதலி ஞாபகத்திற்கு வருகிறது. அதைச் சொல்கிறேன். கதை கேட்பவர்களே ! கவனமாகக் கேளுங்கள். 

கல்யாணில் வசித்த சித்திக் பால்கே என்ற முஸ்லீம், மெக்கா- மெதினா யாத்திரையை முடித்தவுடன் ஷிரிடிக்கு வந்தார். 

வயது முதிர்ந்த இந்த ஹாஜி வடக்கு நோக்கிய சாவடியில் தங்கினார். முதல் ஒன்பது மாதங்களுக்கு பாபா இவரை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ மனஸ்தாபம் இருந்ததுபோல் தெரிந்தது. 

நேரம் இன்னும் பழுக்கவில்லை. மசூதிக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண்; அலுப்பையும் சலிப்பையுமே தந்தன. அவர் பல வழிமுறைகளை கையாண்டும், பாபா அவரைத் திரும்பி பார்க்கவும் மறுத்து விட்டார். 

மசூதியின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. யாருமே ரஹசியமாக எப்படியாவது உள்ளே நுழையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சித்திக் பாலகேவுக்கு மசூதியின் படிகளில் ஏற அனுமதி கிடைக்கவில்லை. 


Thursday, 16 January 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

நடக்கவே முடியாதது நடந்துவிட்டதெனினும், பாபா ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக, அவர் முகம் பிரசன்னமாகவே இருந்தது; கோபக்குறி துளியும் காட்டவில்லை. 

இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தாதாவினுடைய மனமோ அறுத்துக் கொண்டிருந்தது. அன்று சாயங்காலமே பாபாவை அதுபற்றி வினவினார். 

"நாங்கள் ஒரு சிறிதளவு சந்தனம் நெற்றியில் இடுவதற்கு முயலும் போது நீங்கள் எங்களைத் தொடவும் அனுமதிப்பதில்லை. இன்று காலையில் நடந்தது என்ன?

"நாங்கள் இடுவதற்கு முயலும் சந்தனத் திலகத்திற்கு அபார ஆவலின்மையும் வெறுப்பும் காட்டுகிறீர்; டாக்டர் பண்டித் இட்ட திரிபுண்டறத்தின்மேல் ஏகப் பிரியம்? இதென்ன விசித்திரமான நடத்தை! நடத்தை ஒரே சீராக இல்லையே!"

பாபா முகத்தில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டுக்கொண்டு, இந்த மதுரமான வார்த்தைகளை பிரீதியுடன் தாதாவிடம் கூறினார். கவனமாகக் கேளுங்கள். 

"தாதா, அவருக்கு குரு ஒரு பிராமணர்; நான் ஜாதியில் முஸ்லீம் என்பதை ஞாபகப் படுத்திகொள்ளும். இருப்பினும், அவர் என்னைத் தம் குருவாகவே கருதி, எனக்கு குருபூஜை செய்தார். 

"நான் ஜாதியில் மிகப் புனிதமான பிராமணன்; இவரோ ஒரு புனிதமற்ற முஸ்லீம்; அவரை எப்படி நான் பூஜை செய்ய முடியும்' என்ற சந்தேகம் அவருக்கு தோன்றவே இல்லை. 

"எனக்கு எந்த உபாயமும் கொடுக்காமல், இப்படிதான் அவர் என்னை ஏமாற்றி விட்டார். நான் மறுப்பதற்கு இடங் கொடுக்காமலேயே அவர் எனை முழுமையாக வெற்றிகொண்டுவிட்டார். 

தாதா இந்த விவரணத்தைக் கேட்டார். அனால், அதை ஒரு நகைச் சுவையாகவும் இங்கிதமான பேச்சாகவும் எடுத்துக் கொண்டார். வீடு திரும்புவரை தாதாவுக்கு உண்மையான முக்கியத்துவம் விளங்கவில்லை. 

பாபாவினுடைய இந்த முன்னுக்குப் பின் முரணான செயல், தாதாவை மனம் குமுறச் செய்தது. ஆனால், இந்நிகழ்ச்சியை பற்றி டாக்டர் பண்டித்திடம் பேசிய உடனே பாபா தம்முடைய செய்கைகளில் ஒரே சீராக இருந்தது நன்கு விளங்கியது. 

தோபெச்வர் என்னும் ஊரை சேர்ந்த ரகுநாத் (1821-1910) ஒரு சித்தர். 'காகா புரானிக்' என்ற பெயரால் நன்கு அறியப் பட்டவர். பூர்வ ஜன்ம சம்பத்தால் டாக்டர் பண்டிதுக்கு அவருடைய சேவடிகளில் ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகி விட்டார். 

பண்டித் தம் குரு காகாவை கூவி அழைத்தார். அதனால், ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில் இருத்தியது. மனம் எப்படியோ, பாவம் எப்படியோ, அப்படியே பக்திப் பிரவாஹம் அன்றோ!

இருந்தபோதிலும் , பூஜை சடங்குகள் எல்லாம் பாபா விரும்பிய  போதுதான் அனுமதிக்கப் பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரசிம்ஹ அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை திரவியங்களை விசிறி அடித்துவிடுவார். 

நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது? கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று ஓடிவிடுவர். 


Thursday, 9 January 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்கள வாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள். 

சிலர் அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர். சிலர் அத்தரும் சந்தனமும் பூசினர். சிலர் விசேஷமான நைவேத்தியம் படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தை கொடுத்தனர். 

சிலர், அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவலிங்கத்தின் மேல் இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன் கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர். 

ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பர் டாக்டர் பண்டித் பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷீரடிக்கு வந்தார். 

ஷீரடியில்வந்து இறங்கியவுடனே அவர் மசூதிக்கு சென்று பாபாவுக்குப் பலமுறை நமஸ்காரம் செய்துவிட்டு, சிறிது ஓய்வெடுப்பதற்காக அங்கு அமர்ந்தார். 

பாபா அவரிடம், "போம், தாதா பட்டிடம் போம், இந்த வழியாப் போம்" என்று சொல்லி, விரலால் வழிகாட்டி அவரை மூட்டை கட்டி அனுப்பிவிட்டார். 

பண்டித், தாதா பட்டின் வீட்டிற்குச் சென்றார்; மரியாதையான நல்வரவளிக்கப் பட்டார். தாதா அப்பொழுதுதான் பாபாவுக்கு பூஜை செய்வதற்காக எல்லாப் பொருள்களையும் தயார் செய்துகொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார். பண்டிதைத் தம்முடன் வர விருப்பப் படுகிறாரா என்றும் கேட்டார். 

பண்டித் இதற்குச் சம்மதித்து தாதாவுடன், சென்றார். தாதா பூஜையை  செய்தார். அந்நாள்வரை பாபாவினுடைய நெற்றியில் வட்டமாக சந்தனம் இடுவதற்கு எவருக்குமே  தைரியம் இருந்தததில்லை. 

பக்தர் எவராக இருப்பினும், எக்காரணத்திற்காக வந்திருந்தபோதிலும், பாபா அவரை நெற்றியில் சந்தனம் இடுவதற்கு அனுமதிக்கவில்லை. மகால்சாபதி ஒருவர் மட்டுமே கழுத்தில் சந்தனம்பூச அனுமதிக்கப் பட்டார். மற்றவர்கள், பாதங்களுக்கே சந்தனம் இட்டனர். 

டாக்டர் பண்டித்தோ குழந்தையுள்ளம் படைத்தவர். கபடமில்லாதவர். பக்திமான். அவர் தாதா வைத்திருந்த சந்தனப் பேலாவை வலிய எடுத்து, சாயியியுனைடைய தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் நெற்றியில் அழகான திரிபுண்டரம் (மூன்று நீளமான பட்டைகள்) இட்டுவிட்டார். 

அவருடைய சாகசச் செயலைக் கண்டு தாதா கலவரமடைந்தார். "ஆ! என்ன சாகசம் இது! பாபா இதைச் செய்ததால் சீறமாட்டார்?" (என்று அவர் நினைத்தார்)