valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 3 January 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

எவருடைய மனம் பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்விலிருந்து நிவிர்த்தி அடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளிலிருந்து  விடுபட்டவரோ, எவர் முழுமுதற் பொருளுடன் தம்முடைய ஆத்மாவை ஒன்றுபடச் செய்து விட்டாரோ , அவர் தூய ஆனந்தத்தின்  உருவமாவார். 

வேதம் "ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற் பொருள் )" என்று விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தக ஞானிகளுக்கும் இதைப் புராணங்களில் படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை ஷீரடியில் அனுபவிக்கிறார்கள். 

தர்மம், அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம் விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம் அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்க வேண்டும். 

பாபா எல்லாருக்குமே அதிர்ஷ்டமானவர். அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது? அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம்? ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார். 

அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர். 

உட்கார்ந்த நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும் வைக்கப் பட்டது. பக்தர்களுடைய மனதின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய விருப்பங்களை ஏற்றுக் கொண்டார். 

ஷிரிடியிலிருப்பதுபொல்  தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாக சுற்றி வந்தார். இந்த அனுபவத்தை தான் சாயி எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார். 

பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக் கொண்டார். எல்லாரிடமுமிருந்தும் அவரவருடைய சமயாசார வழக்கங்களின்படியும் பக்தர் விரும்பியவாரும் பூஜையை ஏற்றுக் கொண்டார். 



Thursday, 26 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

இயற்கையாகவே மன்னிப்பளிப்பதில்  மிகச் சிறந்தவர்களாகவும், எந்நிலையிலும் பதட்டப்படாத அமைதியுடனும் கபடமற்றும் பொறுமையுடனும் இந்த ஞானிகள் ஒப்பற்ற திருப்தியுடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே பாபா. 

மனித உருவில் காணப்பட்டாலும் பிரபஞ்சத்தில் உலவி வந்தாலும் அவர் நிர்குணமானவர்; நிர்விகாரமானவர்; சங்கம் தேவைப் படாதவர். அகமுகமாக முக்தியடைந்தவர். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, "ஞானிகள் என்னுடைய ஆத்மா; ஞானிகள் என்னுடைய உயிருள்ள பிம்பங்கள்; அன்பும் கருணையும் உள்ள ஞானிகள் எல்லாரும் நானே" என்று கூறினார். -

"அவர்களை என்னுடைய பிம்பங்கள் என்று சொல்வதுகூடச் சரியாகாது; ஏனெனில், ஞானிகள் என்னுடைய நிச்சலமான, என்றும் மாறாத சொரூபங்கள். என் பக்தர்களின் சுமைகளை நான் ஞானிகளின் பொருட்டே சுமக்கிறேன். -

"வேறொன்று ஏதுமின்றி  ஞானிகளை சரணடைந்த பக்தர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானிகளுடைய பெருமையை உத்தவருக்கு உபதேசம் செய்தார். 

எல்லா ஆவல்களிலும் திருப்திஅடைந்தவர்.  தன்னிறைவு பெற்றவர். யதேச்சையாக கிடைத்ததில் சந்தோஷமடைவார். சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டவர். 

சொற்களால் விவரிக்க முடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. சச்சிதானந்தமே அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம். 


Thursday, 19 December 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பி விடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச் செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களை பாராயணம் செய்யச் சொல்வார். 

பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில்  ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்துகொண்டிருக்கும் போதும் உறங்கும்போதும் உணவருந்தும் போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள். இச் செயல்பாடுகளின் நோக்கம் இதுவே. 

நசித்துப் போகும் தன்மையையுடைய இவ்வுடல் என்றோ ஒருநாள் மரணத்தை சந்திக்கப் போகிறது. ஆகவே, பக்தர்கள் மரணத்தை நினைத்து சோகமடையாமல், ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடமே மனதை நிலைக்கச் செய்ய வேண்டும். 

பலவிதமான செழிப்புகளுடன் நம்முன் தோன்றும் காட்சிகள், தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து  தோன்றியவை அனைத்தும் அவனிடமே திரும்பிச் சென்று  விடும். 

பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்தையும் நாம் நோக்கினும் தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியதால், மறுபடியும் அவை தோன்றா நிலையிலேயே சென்றடைய வேண்டும். 

ஆகவே, யாரும் எப்பொழுதும் மரணமடைவதில்லை. பாபா விஷயத்தில் மரணம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஸ்ரீ சாயி நித்திய சுத்தர்; புத்தர்;  மரணமற்றவர். 

சிலர் அவரை இறைவனுடைய அடியார் என்று சொல்லலாம்; சிலர் அவரை மகா பாஹவதர் என்று சொல்லலாம். ஆனால், நமக்கு அவர் சாக்ஷாத் கடவுளின் அவதாரமே!

அவதார புருஷர்களின் நிலையும் இதுவே. அவர்கள் தோன்றுகின்றனர். மறைகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளால் உலகத்தை தூய்மையாக்குகின்றனர். 



Thursday, 12 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சிலை, யாக குண்டம், அக்கினி, ஒளி, சூரிய மண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்குரிய புனிதமான ஏழு பொருள்களுக்கும் இயற்கை சக்திகளுக்கும் மனிதர்களுக்கும் மேலானவர் குருராஜர். வேறெதிலும் மனதைச் சிதறவிடாது ஒருமுகமாக அவரை வழிபடுவோம். 

அனந்நியபாவத்துடன் (பதிவிரதையை ஒப்ப) குருவினுடைய பாதங்களில் சரணடைந்துவிட்டால், குருமாத்திரம்  அல்லர், இறைவனும் பிரீதி அடைவான். குரு வழிபாட்டின் அற்புதம் இதுவே! குருபக்தர்கள் இதை சுயமாக அனுபவிக்க வேண்டும். 

குருபக்தருக்கு 'உடல்தான் நான்' என்னும் உணர்விருக்கும்வரைதான் அவருக்கு மனித வடிவில் ஒரு குரு தேவைப்படுகிறார். 'நான் கேவலம் இவ்வுடல் அல்லேன்' என்னும் விழிப்பை பெற்றவருக்கு நிராகாரமான (உருவமே இல்லாத) குருவே தேவையை நிறைவேற்றுகிறது. இது சாஸ்திரங்களின் கூற்று. 

தியானம் செய்வதற்கு ஓர் உருவம் கிடைக்காதபோது, பக்தி பாவம் வெளிப்பட இயலாது. அவ்விதமாக பக்தி வெளிப்படாதபோது, அரும்பாக இருக்கும் மணமலர் விகசிப்பதில்லை. 

மலராத இவ்வரும்பால் மணம் கொடுக்க முடியாது; தேனும் அளிக்க முடியாது. தேன்வண்டும் இவ்வரும்பை ஒருபோதும் வட்டமிடுவதில்லை. 

குணங்களுடன் கூடிய இறைவனுக்கு உருவம் உண்டு. நிற்குணமான இறைவனுக்கு உருவமேதும் இல்லை. உருவமுடைய இறைவனும் உருவமில்லாத இறைவனும் ஒன்றே; இங்கு வேறுபாடு ஏதும் இல்லை. 

நெய் கெட்டியாக இருந்தாலும், உருகிய நிலையில் ஓடும் திரவமாக இருந்தாலும், நெய், நெய்தான்.  உருவமற்ற இறையும் உருவமுள்ள இறையும் ஒன்றுடன் ஒன்று இசைபட்டு இப் பிரபஞ்சத்தையே வியாபிக்கிறது. 

கண்கள் திருப்தியடையும் வரை தரிசனம் செய்யவும், எங்கிருந்து ஞானம் மடைதிறந்தார் போலவும் நேரிடையாகவும் பாய்கிறதோ அப்பொற் பாதங்களின் மேல் சிரத்தை தாழ்த்தவுமே மனம் விரும்புகிறது. 

பக்தர்கள் அன்புடன் சம்பாஷனை செய்வதற்காகவும் சந்தனம் மற்றும் அக்ஷதை போன்ற பொருள்களை உபயோகித்து பூஜை செய்வதற்காகவும் இறைவன் உருவம் எடுக்க வேண்டியிருக்கிறது. 

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.  உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. 

நிர்க்குணமான, நிராகாரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரிய வைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எதனை எத்தைனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். 



Thursday, 5 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

கதையை விட்ட இடத்தில்  தொடர்வோம். பாபா ஒரு மரப்பலகையின் மீது உறங்கினார். அவர் ஏறியதையும் இறங்கியதையும் எவருமே கண்டதில்லை. அவருடைய வழிமுறைகள் புரிந்து கொள்ள முடியாதவை என்னும் உண்மையே இதிலிருந்து வெளிப்படுகிறது. 

ஹிந்துவோ, முஸ்லீமோ அவருக்கு இருவரும் சரிசமானம். நாம் இதுவரை ஷீரடியின் தெய்வமாகிய பாபாவின் வாழ்க்கை முறைகளை மேலோட்டமாக பார்த்தோம். 

இப்பொழுது குருவைப் பற்றிய இனிமையான நிகழ்சிகளால் அலங்கரிக்கப் பட்ட பதினொன்றாம் அத்தியாயத்தை ஆரம்பிப்போம். திடமான பக்தி பாவத்துடன் அதை சாயியின் சரண கமலங்களில் சமர்ப்பணம் செய்வோம். 

இதைச் செய்வதால் நாம் பாபாவின் சகுன (குணங்களோடு கூடிய) உருவத்தை தியாநித்தவர்களாவோம். இது ருத்ர ஏகாதசினி  ஜபம் செய்வதற்கு சமானமாகும். இந்த அத்தியாயம் பஞ்ச பூதங்களின்மேல் பாபாவுக்கு இருந்த ஆதிபத்தியத்திற்கு நிரூபனமளிது, பாபாவினுடைய  மகிமையை வெளிப்படுத்துகிறது. 

இந்திரனும் அக்கினியும் வருணனும் பாபாவினுடைய  சொல்லுக்கு எவ்விதம் கட்டுப்பட்டனர் என்பதை எடுத்து இயம்புகிறேன். கதை கேட்பவர்களே! கவனத்தை என்னிடம் திருப்புங்கள். 

பூரண விரக்தியின் வடிவமான, குணங்களோடு கூடிய, சாயியின் அவதார ரூபமே வேறெவரையும் நாடாத விசுவாசமான பக்தர்களின் நிஜமான விச்ராந்தி. அன்புடனும் பாசத்துடனும் அவருடைய உருவத்தை மனக்கண்முன் நிறுத்துவோமாக!

குரு வாக்கியத்தின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தை அவருக்கு ஆசனமாக அளிப்போம். எல்லா சங்கல்பங்களிலிருந்தும் துற வேற்கிறேன்  என்னும் சங்கல்பத்துடன் பூஜையை ஆரம்பிப்போம்!


Thursday, 28 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

இறைவனை வணங்காதவர்களையும் நாமத்தைச் சொல்லாதவர்களையும் நம்பிக்கையும், பக்தியும் இல்லாதவர்களையும் பஜனை பாடாதவர்களையும் இறைநாட்ட முடையவர்களாக செய்வதற்கே ஞானிகள் இப்பூவலகில் அவதாரம் செய்கிறார்கள். 

கங்கை, பாகீரதி, கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, காவிரி, நர்மதை ஆகிய புண்ணிய நதிகள் சாதுக்களுடைய பாதங்களைத் தொடவேண்டுமென்று ஆவல் கொண்டு, அவர்கள் ஸ்நானம் செய்வதற்கு வருவார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. 

இப்புண்ணிய நதிகள் உலகத்து மக்களுடைய பாவங்களைஎல்லாம் அடித்துச் சென்றாலும், தங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்து கொள்ள சாதுக்களின் பாதங்களையே நாடுகின்றன. 

பல ஜன்மங்களில் எய்த பாக்கியங்களாலேயே நாம் சாயியின் புனிதமான பொன்னடிகளை கண்டுபிடித்திருக்கிறோம். ஜனன மரண சுழல் நிறுத்தப் பட்டு விட்டது. பிறவிபயம் அறவே ஒழிக்கப் பட்டுவிட்டது. 

நன்மக்களான வாசகர்களே! சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு ஏற்கெனவே கேட்ட கதைகளை அசை போடுவோம். மேற்கொண்டு பிரவசனம் பிறகு தொடரும். 

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். நான் அவருடைய பாத ரக்ஷைகளே. மேலும் மேலும் அவருடைய காதைகளைச் சொல்லி கொண்டே போவேன்; அதுவே, எனக்கு மேலும் மேலும் சுகத்தை அளிக்கும். 

ஆஹா! என்ன கவர்ச்சியான உருவம் சாயி மஹாராஜுக்கு! மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு, பக்தர்களுடைய நல்வாழ்வையே மனதிற்கொண்டு அவர்களுக்கு உதீ பிரசாதம் விநியோகிப்பார். 

எவர் 'இந்த உலகமே ஒரு மாயை' என்றரிந்தவரோ, எவர் பிரம்மானந்தத்திலிடைவிடாது  லயிப்பவரோ, எவர் முழுமையாக விகசித்த (மலர்ந்த) மலர் போன்ற மனம் படைத்தவரோ, அவர் முன்னே நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

எவர் ஞானமென்னும் மையைக் கண்களில் தடவி பிரம்ம ஞானத்தை வழங்குகிறாரோ, அந்த மகிமை வாய்ந்த சாயியை நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

அடுத்த அத்தியாயம் இதைவிட மேன்மையாக இருக்கும். செவிகளின் வழியே உங்களுடைய இதயத்தில் புகுந்து எல்லா மலங்களையும் போக்கி, இதயத்தைப் புனிதமாகச் செய்துவிடும். 

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும்  சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப் பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், ' சமர்த்த ஸ்ரீ சாயியின் மகிமை' என்னும் பத்தாவது அத்தியாயம் முற்றும். 



                       ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                        சுபம் உண்டாகட்டும். 


Thursday, 21 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

துர்ச்சங்கம் என்றும் கெடுதலையே விளைவிக்கும்; நீங்கள் அறியாமலேயே உங்களைத் தடம் புரளச் செய்யும். மஹா துக்கங்களின் இருப்பிடம்; எல்லா சுகங்களையும் விரட்டிவிடும். 

சத்குரு சாயிநாதரைத்  தவிர வேறு யாரால் அம்மாதிரியான துர்ச்சங்கதினால் நமக்கு விளையக்கூடிய கெடுதல்களை விளக்க முடியும்? 

கருணையால் விளைந்து, ஆதங்கத்தினால் வெளிவந்த, சாயியின் திருவாய் மொழிகளை சிரத்தையுடன் பத்திரப் paduthungal. பக்தர்களே! இது துர்ச்சங்கதால் விளையக்கூடிய இன்னல்கள் வராது தடுக்கும். 

சிருஷ்டி செய்யப் பட்ட இவ்வுலகத்தை கண்களால் பார்த்தவுடனேயே, மனம் சௌந்தரியத்தினால் ஈர்க்கப் பட்டு ரமித்துப் போகிறது. அதே கண்களை அகமுகமாகச் செலுத்தினாலோ, மனம் ஞானிகளின் சத்சங்கத்தில் ஈடுபடுகிறது. 

நம்முடைய அஹங்காரத்தை நிர்மூலமாக அழிக்குமளவுக்கு சத்சங்கம் மகிமையுடயது. வேறு எந்த மார்க்கத்திற்கும் சத்சங்கதைப் போல ஆதனை புரியும் திறமை கிடையாது. 

ஞானிகளின் சங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள்; மற்ற சங்கங்கள் அனைத்துமே குறையுடவை. சத்சங்கமே மருவில்லாதது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூய்மையானது. 

சத்சங்கம் கிடைக்கும் பாக்கியம் இருந்தால், உபதேசங்கள் சஹஜமாக  வந்து சேரும். அந்தக் கணமே துர்ச்சங்கம் மறைந்தோடிவிடும் . மனம் சத்சங்கத்தில் மூழ்கி விடும். 

உலக விஷயங்களில் விரக்தி ஏற்படுவதே ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு உபாயமாகும். சத் சங்க நாட்ட மெனும்  பலமான உந்துதல் இன்றி, 'நான் யார்' என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 

சுகத்திற்குப் பிறகு துக்கம் விளைகிறது; துக்கத்திற்குப் பிறகுதான் சுகம் விளைகிறது; ஆனால், மானிடன் எப்பொழுதும் சுகத்திற்கு இன்முகம் காட்டுகிறான். துக்கத்திற்கு கடுமுகம் காட்டுகிறான். 

வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும்; ஞானிகளுடைய சங்கம்தான் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டு செல்ல முடியும். 

சத் சங்கம் தேஹாபிமானத்தை நாசம் செய்கிறது. சத் சங்கம் ஜனன மரணச் சுழலை உடைக்கும். சத் சங்கம் உலக பந்தங்களை பட்டென்று அறுத்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது. 

உத்தமமான கதியை அடைவதற்கு சத்சங்கமே புனிதத்தை அளிக்கக் கூடியது. வேறெதிலும் கவனம் செலுத்தாது ஞானிகளை சரணடைந்துவிட்டால், நிஜமான விச்ராந்தி கிடைக்கிறது.