valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சிலை, யாக குண்டம், அக்கினி, ஒளி, சூரிய மண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்குரிய புனிதமான ஏழு பொருள்களுக்கும் இயற்கை சக்திகளுக்கும் மனிதர்களுக்கும் மேலானவர் குருராஜர். வேறெதிலும் மனதைச் சிதறவிடாது ஒருமுகமாக அவரை வழிபடுவோம். 

அனந்நியபாவத்துடன் (பதிவிரதையை ஒப்ப) குருவினுடைய பாதங்களில் சரணடைந்துவிட்டால், குருமாத்திரம்  அல்லர், இறைவனும் பிரீதி அடைவான். குரு வழிபாட்டின் அற்புதம் இதுவே! குருபக்தர்கள் இதை சுயமாக அனுபவிக்க வேண்டும். 

குருபக்தருக்கு 'உடல்தான் நான்' என்னும் உணர்விருக்கும்வரைதான் அவருக்கு மனித வடிவில் ஒரு குரு தேவைப்படுகிறார். 'நான் கேவலம் இவ்வுடல் அல்லேன்' என்னும் விழிப்பை பெற்றவருக்கு நிராகாரமான (உருவமே இல்லாத) குருவே தேவையை நிறைவேற்றுகிறது. இது சாஸ்திரங்களின் கூற்று. 

தியானம் செய்வதற்கு ஓர் உருவம் கிடைக்காதபோது, பக்தி பாவம் வெளிப்பட இயலாது. அவ்விதமாக பக்தி வெளிப்படாதபோது, அரும்பாக இருக்கும் மணமலர் விகசிப்பதில்லை. 

மலராத இவ்வரும்பால் மணம் கொடுக்க முடியாது; தேனும் அளிக்க முடியாது. தேன்வண்டும் இவ்வரும்பை ஒருபோதும் வட்டமிடுவதில்லை. 

குணங்களுடன் கூடிய இறைவனுக்கு உருவம் உண்டு. நிற்குணமான இறைவனுக்கு உருவமேதும் இல்லை. உருவமுடைய இறைவனும் உருவமில்லாத இறைவனும் ஒன்றே; இங்கு வேறுபாடு ஏதும் இல்லை. 

நெய் கெட்டியாக இருந்தாலும், உருகிய நிலையில் ஓடும் திரவமாக இருந்தாலும், நெய், நெய்தான்.  உருவமற்ற இறையும் உருவமுள்ள இறையும் ஒன்றுடன் ஒன்று இசைபட்டு இப் பிரபஞ்சத்தையே வியாபிக்கிறது. 

கண்கள் திருப்தியடையும் வரை தரிசனம் செய்யவும், எங்கிருந்து ஞானம் மடைதிறந்தார் போலவும் நேரிடையாகவும் பாய்கிறதோ அப்பொற் பாதங்களின் மேல் சிரத்தை தாழ்த்தவுமே மனம் விரும்புகிறது. 

பக்தர்கள் அன்புடன் சம்பாஷனை செய்வதற்காகவும் சந்தனம் மற்றும் அக்ஷதை போன்ற பொருள்களை உபயோகித்து பூஜை செய்வதற்காகவும் இறைவன் உருவம் எடுக்க வேண்டியிருக்கிறது. 

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.  உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. 

நிர்க்குணமான, நிராகாரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரிய வைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எதனை எத்தைனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். 



No comments:

Post a Comment