valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 5 September 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

அணிமா, மகிமா, லகிமா என்னும் அஷ்டமா சித்திகளும் நவநிதிகளும்  அவருடைய சன்னிதியில் கை கட்டி சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டு பொம்மையே!

புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி - அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார். 

பார்வைக்கு அவர் ஷிர்டிவாசியைப் போலத் தெரிந்தார். மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறதையும் பெற்றிருக்க வில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனதிலும் வசிக்கிறார். 

அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார். வெளியுலகில் மக்களை நற்பாதையில்  செலுத்த வேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனதுள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின் மேல் பாசம் இருந்தது. 

அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; பஹிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார். 

அந்தரங்கத்தில் பர பிரம்மத்துடன் லயித்த நிலையில் இருந்தவர், பஹிரங்கத்தில் சில சமயம் பிசாசைப் போல் நடந்துகொண்டார். உள்ளே அத்வைத ஆனந்தத்தில் திளைத்த அவர், வெளியே உலகியல்  செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 

சில சமயங்களில் மக்களின் மீது பிரேமை காட்டினார். சில சமயங்களில் கல்லெறிந்து அவர்களை விரட்டினார். சில சமயங்களில் சாபங்களையும் திட்டுகளையும் மழையாக பொழிவார். சில சமயங்களில் ஆனந்தமாக அணைத்துக்  கொள்வார். 

ஆனால், உண்மையில் அவர் சாந்தமுள்ளவராகவும் தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டவராகவும் பற்றற்றும் பொறுமையாகவும், எந்நேரமும் தியானத்தில் இருந்தவாறு தம்மிலேயே ரமித்து, பக்தர்களுக்கு இனிய மனமும் முகமும் காட்டினார். 

எப்பொழுது உள்முகமாகத் திருப்பப்பட்ட மனதுடன் ஆடாது அசையாது ஒரே தோரணையில் உட்கார்ந்து கொண்டு, இங்குமங்கும் அலைய வேண்டிய தொந்தரவு யாதுமில்லாமல், தம்முடைய சட்காவை  சன்னியாசியின் தண்டமாக கொண்டு அவருடைய வாழ்வு எந்தவிதமான கவலையுமின்றி சாந்தமாக இருந்தது. 



Thursday, 29 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஜன்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்குமோ, அவருடைய பெருமையை பாடுவோமாக.

எட்டாவது அத்தியாயத்தில் மனித ஜன்மம் கிடைத்ததன் பயன் என்ன என்பது சொல்லப்பட்டது. ஒன்பதாவது அத்தியாயத்தில் பாபா பிச்சை எடுத்துப் பிழைத்ததன் சூக்குமமான காரணம் சொல்லப் பட்டது.

பாயஜாபாயி மதியத்தில் சோள ரொட்டியும் பாஜியும்  அளித்தது, குசால்சந்தின்  நல்வாழ்வுபற்றி பாபா கொண்ட அக்கறை, தாத்யா , மகால்சாபதி இவர்களுடன் பாபா உறங்கியது பற்றியும்கூட பிரவசனம் செய்யப் பட்டது. பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

கதை கேட்பவர்களே! பாபா எப்படி வாழ்ந்தார், எங்கு உறங்கினார், எவ்வளவு அலட்சியமாக சுற்றி வந்தார் (சூக்கும சரீரப் பயணங்கள்), என்பன சம்பத்தப் பட்ட சரித்திரப் பகுதியை இப்போது சொல்கிறேன்; கவனமாக கேளுங்கள்.

பாபாவினுடைய உலகியல் வாழ்க்கை எவ்வளவு போற்றுதற்குரியது! ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர் அன்னை; புலியும் ஆடும் பயமின்றிப் பிரேமையுடன் உலவி வந்த சூழ்நிலையை அளித்த, நம்பிக்கைகுந்த புகலிடம் அவர்.

செவிமடுப்பவர்களே! சாயி எப்படி வாழ்ந்தார்? எங்கு உறங்கினார்? என்பன பற்றியெல்லாம் இப்பொழுது சிரத்தையுடன் கேளுங்கள். பாபா வாழ்க்கை நடத்திய முறை இதுவே!

நான்கு முழம் நீளமும் ஒரு சாண்  அகலமுள்ள ஒரு மரப்பலகை இரண்டு பக்கங்களிலிருந்தும் கந்தைத் துணிகளால பிணைக்கப் பட்டு தூலத்தில் இருந்து ஓர் ஊஞ்சலைப் போல் தொங்கவிடப் பட்டிருந்தது.

அந்தப் பலகையின் மேல் பாபா தூங்கினார். அவருடைய படுக்கையின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அகல் விளக்குகள் எரிந்தன. எப்பொழுது ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பது ஒருவருக்கும் தெரியாது.

அப்பலகையின் மேல் அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பார். அல்லது உறங்கிகொண்டிருப்பார். ஆனால், அவர் எப்பொழுது பலகையின் மேல் ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பதை எவரும் பார்த்ததில்லை.

பலகை கந்தல் துணிப்பட்டைகளால் பிணைக்கபட்டிருந்தது; அது எப்படி பாபாவின் பளுவை தாங்கியது ? அஷ்டமஹா சித்திகள் ஒருவரிடம் உறைந்திருந்தால் பலகை எல்லாம் பெயரளவுக்கு தானே !

அணிமா  சித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியலவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ  பாபா சுலபமாக சஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.

அணிமா சித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்க முடிந்தவருக்கு  மரப்பலகை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?


Thursday, 22 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

எவர் சகல உலகங்களின் நன்மைக்காக பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மதிலேயே சதா லயித்திருக்கிராரோ , அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்போமாக!

யாரைப் பற்றிய நினைவே நம்மை ஜனன மரணச் சுழலிலிருந்து விடுவிப்பதற்கு போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீக பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இப்பயிற்சிக்கு ஒரு பைசாவும் செலவு இல்லை.

சொற்பப் பயிற்சியால் பெரும்பலன் அனாயசமாகக் கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம்முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.

இதர தேவதைகள் அனைத்தும் மாயை; குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம்முடைய தலைஎழுத்தையே மாற்றி விடுவார்.

எங்கே தூய நேர்மையான குரு சேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலமாகிவிடுகிறது. நியாயம், மீமாம்சை, போன்ற சாஸ்திரங்களைப் படித்துவிட்டு ஒரு தலை முடியை இரண்டாகப் பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திபூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.

சத்குரு நாவாயைச் செலுத்தும்போது ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம் ஆகிய இன்னல்களிலிருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப் படுகிறார்கள்.

கடலைக் கடப்பதற்கு கப்பலின் தளபதியின்மீது விசுவாசம் வைக்க வேண்டும்; அதுபோலவே, சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு குருவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.

ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்குக் கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தம்முடைய லீலையால், ஆனந்தத்தை லக்ஷணமாக  உடைய மோக்ஷத்தை அளிக்கிறார்.

எந்த சத்குருவின் தரிசனம் ஹிருதயத்தின் முடிச்சுக்களை அவிழ்க்கமுடிய்மோ, புலனடக்கம் கிடைக்கச் செய்யுமோ, முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும் இந்த


Friday, 16 August 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"நீ எனக்கு என்ன கொண்டுவந்தாய்?" என்று கேட்டு அவனுக்கு  ஞாபகம் ஊட்டுவதற்கு பாபா முயன்றார். "ஒன்றுமில்லை" என்று அவன் பதில் சொன்னவுடன்,

"வேறு யாராவது உன்மூலம் எனக்கு ஏதாவது கொடுததுனுப்பினார்களா?"  என்று கேட்டு பாபா அவனுக்கு மறைமுகமாக  ஞாபகமூட்டினார். "இல்லை" என்று பையன் சொன்னவுடன் சமர்த்த  சாயி அவனை நேரிடையாகவே கேட்டார்.

"மகனே! நீ கிளம்பும்போது அன்னை எனக்காக அன்புடன் இனிப்புகள் கொடுத்தனுப்பவில்லை?" இவ்வாறு கேட்ட பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது!

பையன் வெட்கத்தால் குன்றிப் போனான். அதை எப்படி அவனால் மறக்க முடிந்தது! வெட்கத்தால் தலை குனிந்து பாபாவின் பாதங்களை தொட்டு மன்னிப்புகேட்டு வணங்கிவிட்டு ஓடினான்.

தான் தங்கி இருந்த இடத்திற்கு ஓடிச் சென்று பால்கோவாவை  எடுத்துக் கொண்டுவந்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தான். கைக்கு வந்து சேந்தவுடனே பாபா அதை வாயில் போட்டுக் கொண்டு அன்னையின் (ஸ்ரீமதி கட்) ஆசையை நிறைவேற்றினார்.

இவ்வாறு இம்மகா அனுபவரான சாயி, பக்தரின் விசுவாசத்தின்  ஆழத்திற் கேற்றவாறு அவருக்கு அனுபவங்களை கொடுத்து பக்தரின் அன்பையும் பக்தியையும் கௌரவிக்கிறார்.

இந்தக் கதைகளிலிருந்து வெளிவரும் மற்றொரு முக்கியமான பாடம், எல்லா உயிர்களிலும் நாம் இறைவனை காண வேண்டுறம் என்பதே. இதுதான் சகல சாஸ்திரங்களிலும்  சொல்லப் பட்டிருக்கிறது. இதுவே இங்கு நடைமுறைக்குக் கொண்டு வந்து காட்டப் பட்ட முடிவுமாகும்.

அடுத்த அத்தியாத்தை கேட்பதில், பாபா எவ்விதமாக வாழ்ந்தார். எங்கு, எந்த இடத்தில அவர் தூங்கினார் என்பன பற்றி தெரிந்து கொள்வீர்கள். கவனமாக கேளுங்கள்.

ஹேமாத் பந்த் சாயி பாதங்களில் சரணடைகிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கதைகளை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்; மேலும் சிந்திக்க வேண்டும்; அவ்விதம் செய்வது அவர்களுக்கு ஷேமத்தை அளிக்கும்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹேமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில் ஒன்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு  சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.


Thursday, 8 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

அவர் கொண்டு வந்த தட்டில்தான் பரீத் இருந்தது; ஆகவே, அவருடைய மூட்டை முடிச்சுக்களில்  இன்னும் சில கத்தரிக்காய்கள் இன்னும் சில கத்தரிக்காய்கள் இருக்கலாம் என்று நினைத்தனர்.

ஸ்ரீமதி புரந்தரேவைக் கேட்டவுடன், காச்ர்யாவின் மீது பாபா கொண்ட திடீர் மோகத்தின் மர்மம் புலனாகிவிட்டது. பாபா ஏன் அதை அவ்வளவு விரும்பினார் என்பதும் எல்லாருக்கும் விளங்கி விட்டது.

ஒரு கத்தரிக்காயை சுட்டு, அன்று பரீத் செய்ததாகவும் இன்னொன்றை மறுநாள் காச்ர்யா செய்யலாம் என்று துண்டு துண்டாக நறுக்கி வைத்திருப்பதாகவும் ஸ்ரீமதி புரந்தரே விளக்கம் கூறினார்.

பின்னர், வாய்வார்த்தையாக எல்லாருக்கும் கத்தரிக்காய்களின் கதை ஆரம்பத்திலிருந்தே தெரிய வந்தது. சாயியின் எங்கும் நிறைந்த சக்தியை கண்டு எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்ரீமதி தர்கத் ஒரு பால் கோவாவை பாபாவுக்குப் பிரேமையுடன் அனுப்பி வைத்தார்.

பாலாராம் மான்கர்  பரலோகவாசியாகிவிட்டார். மான்கரின் மகன் ஈமச் சடங்குகளை செய்ய ஷிர்டிக்குப் போகுமுன், தர்கட்  அவர்களிடம் விஷயத்தை சொல்வதற்காக வந்தான்.

தான் ஷீரடிக்கு போவதை தர்கத் அவர்களிடம் தெரிவிப்பதற்காக வந்தான்; ஸ்ரீமதி தர்கத் அவன் மூலமாக பாபாவுக்கு ஏதாவது தின் பண்டம் கொடுத்தனுப்ப வேண்டும் என்று விரும்பினார்.

வீடு முழுவதும் தேடியும் ஒரு பால்கோவா, அதுவும் ஏற்கெனவே நிவேதனம் செய்யப் பட்டது, அதைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை; பையனோ கிளம்புவதற்கு அவசரப் பட்டான்.

பையனோ  சாவுதீட்டில் இருந்தான்; வீட்டிலிருக்கும் ஒரே பால்கோவா (தூத் பேடா ) ஏற்கெனவே நிவேதனம் செய்யப் பட்டது; இருப்பினும் சாயிக்கு அர்ப்பணமாக அந்தப் பேடாவை  ஸ்ரீமதி தர்கட்  கொடுத்தனுப்பினார்.

"வேறு எதுவமே இல்லை; இந்தப் பால்கோவாவை எடுத்துக்கொண்டு போய்  அன்புடன் பாபாவுக்கு சமர்ப்பணம் செய். சாயி இதை விருப்பத்துடன் உண்பார்" என்றும் சொன்னார்.

கோவிந்த்ஜி (பாலாராம் மான்கரின்  மகன்) பால்கோவாவை எடுத்துக் கொண்டு போனான். ஆயினும், பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது பால்கோவாவை தான் தங்கிய இடத்தில்  வைத்துவிட்டுச் சென்று விட்டான். பாபா பொறுமையாக இருந்தார்.

பிற்பகலில் மறுபடியும் சாயியின் தர்பாருக்கு வந்தான். இம்முறையும் பால்கோவாவை மறந்துவிட்டு வெறுங்கையுடன் மசூதிக்கு வந்தான்.


Thursday, 1 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

"சில சமயம் நான் ஒரு நாய்; சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை சில சமயம் ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர் வாழ் பிராணி - பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவி வருகிறேன்.

"உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்பிகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேத புத்தியை விட்டுவிடும்; அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."

இவை வெறும் வார்த்தைகளல்ல; தேவமிருமதமான திருவாய் மொழியாகும். இதைக் கேட்ட அம்மையார் உணர்ச்சிவசத்தால் திக்குமுக்காடிப் போனார்; தொண்டை அடைத்தது; ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

இவ்வம்மையாரின் அன்பார்ந்த பக்தியை விளக்கும் இன்னுமொரு இனிமையான காதலி உண்டு. சமர்த்த  சாயி, பக்தர்களுடன் ஐக்கியமானவர் என்பதற்கு அது நிரூபணமாக அமைந்திருக்கிறது.

ஒரு சமயம் புரந்தரே என்ற பெயர் கொண்ட சாயி பக்தரொருவர் மனைவி மக்களுடன் ஷ்ரிடிக்கு  கிளம்பினார். இவ்வம்மையார் (ஸ்ரீ மதி தர்கட் ) அவர் மூலமாக பாபாவுக்குச்  சில கத்தரிக்காய்களை அனுப்பினார்.

ஒரு கத்தரிக்காயை பரீத் செய்தும் இன்னொன்றை காச்ர்யா செய்தும் பாபாவுக்கு திருப்தியாக உணவளிக்கும் படியாகப் புரந்தறேவின் மனைவியை வேண்டிக் கொண்டார்.

"அவ்வாறே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீமதி புரந்தரே கத்தரிக்காய்களை
எடுத்துக் கொண்டு போனார். ஷீரடிக்கு போய்  பரீத் செய்து எடுத்துக் கொண்டு பாபாவுக்கு அளிப்பதற்காக மதிய உணவு நேரத்தில் ஹாரத்திக்கு பிறகு சென்றார்.

எப்பொழுதும் போல் நைவேத்தியத்தை ஒரு தட்டில் பாபாவுக்காக வைத்துவிட்டு தங்குமிடத்திற்கு சென்று விட்டார். எல்லாருடைய நைவேத்தியங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பாபா சாப்பிட உட்கார்ந்தார்.

பாபா பரீதை ருசி பார்த்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாரும் பாபா அதை மிகவும் சுவைத்து உண்டார் என்று நினைத்தனர். காச்ர்யா சாப்பிட வேண்டுமென்று நினைத்தாரோ என்னவோ, "காச்சர்யா உடனே கொண்டு வா" என்று சொன்னார்.

உடனே ராதாகிருஷ்ணா பாயிக்கு, "பாபா காச்ர்யா சாப்பிட விரும்புகிறார்" என்று செய்தி அனுப்பப் பட்டது. பாபா சாப்பிட ஆரம்பிக்காமல் காச்ர்யாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அது கத்தரிக்காய் கிடைக்க கூடிய பருவம் அன்று. எப்படி காச்ர்யா செய்ய முடியும்? பரீத் நைவேத்தியம் கொண்டு வந்து வாய்த்த ஸ்ரீ மதி புரந்த்ரேவை உடனே வலை போட்டுத் தேடினர்.


Thursday, 25 July 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர் சாப்பாட்டுக் கூடத்தில் இருந்தார்; எல்லாருக்கும் உணவு பரிமாறி முடிக்கப்பட்டது. சாப்பிடப் போகும் தருணம். திடீரென்று அந்த மதிய நேரத்தில் பசியால் வாடிய நாய் ஒன்று அவ்வம்மையார் உட்கார்ந்திருந்த கதவருகில் வந்து நின்றது.

அம்மையார் உடனே ஒரு கால் சோள ரொட்டியைத் தம்முடைய தட்டிலிருந்து எடுத்து நாய்க்குப் போட்டார். அதே நேரத்தில், உடம்பெல்லாம் சேற்றுடன், பசியால் வாடிய பன்றியும் ஒன்று வந்தது. (அதற்கும் அவர் உணவளித்தார்).

ஈதனைத்தும் சுபாவமாகவே நடந்ததால், அவர் இச் சம்பவத்தை அறவே மறந்து போனார். ஆனால் பிற்பகல் நேரத்தில் பாபாவே இச் சம்பவத்தைக் கிளறினார்.

உணவுண்ட பிறகு, பிற்பகலில் அவ்வம்மையார் வழக்கம் போல் மசூதிக்கு வந்து, சிறிது தூரத்தில் அமர்ந்தபோது பாபா அவரிடம் அன்புடன் கூறினார்.

"அன்னையே, இன்று எனக்கு நீர் உணவளித்தீர்; என்னுடைய வயிறு தொண்டைவரை நிரம்பிவிட்டது. நான் பிராணனே போய்  விடும் போன்ற பசியால் மிக வாடினேன். நீர் எனக்கு உணவளித்துத் திருப்தி செய்துவிட்டீர்.

"இதைத்தான் நீர் எப்பொழுதுமே செய்ய வேண்டும். இதுவே உமக்கு சத்தியமான சேமத்தை அளிக்கும்.மசூதியில் அமர்ந்து கொண்டு நான் அசத்தியத்தை என்றுமே, எப்பொழுதுமே பேச மாட்டேன்.

"இந்தக் காருண்யம் உம்மிடம் எப்பொழுதும் இருக்கட்டும். முதலில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து விட்டுப் பிறகு சாப்பிடும். இந்த ஆசாரத்தை வாழ் நாள் முழுவதும் கடைபிடிப்பீராக ".

அம்மையாருக்கு சாயி சொன்னது ஒன்றுமே விளங்கவில்லை. சாயி சொன்னதன் பொருள் என்ன? அவருடைய வார்த்தைகள் எப்பொழுதுமே அர்த்தபுஷ்டியில்லாமல் இருக்காதே! (இவ்வாறு அம்மையார் சிந்தித்தார்).

ஆகவே அவர் கேட்டார், "நான் எப்படி உங்களுக்கு உணவளித்திருக்க முடியும்? நானே மற்றவர்களை சார்ந்து காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேனே?"

"எனக்கு மிகுந்த அன்புடன் அளிக்கப்பட்ட  சோள ரொட்டியைத் தின்று நான் உண்மையிலேயே பசியாறினேன்; இல்லை, இல்லை, அந்தத் திருப்தியில் நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்.

"நீர் சாப்பாட்டுக்கு  உட்கார்ந்தபோது திடீரென்று பசியால் வாடிய, வயிறு காய்ந்த நாயொன்றை வாயிலில் பார்த்தீர் அல்லவா ? நானும் அந்த நாயும் ஒன்றே என்று அறிவீராக!

"அவ்வாறே உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்ட பன்றியும் பசியால் வாடுவதைப் பார்த்தீர். அப் பன்றியும் நான்தான்!"

பாபாவின் திருவாய்மொழியைக் கேட்ட அவ்வம்மையார் மனத்துள்ளே  வியப்படைந்து போனார். எத்தனையோ நாய்களும் பன்றிகளும் பூனைகளும் சுற்றி அலைகின்றன. அவை எல்லாவற்றிலும் பாபா இருக்கிறார்? இது எப்படி சாத்தியம்? (என்று அம்மையார் நினைத்தார்)