valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 6 September 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இவ்விரண்டு கொடிகளில் ஒன்று நிமோன் கருடையது; மற்றொன்று தாமு அண்ணாவினுடையது. இரண்டும் கோலாகலமாக ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மசூதியின் உச்சியில் கட்டப்பட்டுப் பட்டொளி வீசிப் பறக்கும்.

ஷிர்டிக்குப் பெருமையும் ஆனந்தமும் அளிக்கும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடும் யோசனை உருஸ் திரு விழாவிலிருந்து எப்படி உதித்தது என்னும் சுவாரசியமான விவரத்தை இப்பொழுது கேளுங்கள்.

1911  ஆம் ஆண்டில் முதன் முதலாக ஸ்ரீ ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த யோசனை உருஸ் திருவிழா விலிருந்து உதித்ததே. தொடர்ச்சியாகத் தடங்கல் ஏதும் இன்றி இன்றும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப் படுகிறது.

இந்த யோசனை முதன் முதலில், பிரபலமான கீர்தங்கர் கிருஷ்ண ஜாகேச்வர் பீஷ்ம என்பவரால் கருத்துருவாக்கப் பட்டது. எல்லாருடைய நலனுக்காவவும் ஸ்ரீ ராம் ஜன்ம உற்சவம் கொண்டாடப் பட வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அதுவரை உருஸ் திருவிழா மட்டுமே ஸ்ரீ ராம ஜன்ம தினத்தன்று வருடா வருடம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்ரீ ராம ஜன்மோர்சவம் அவ்வருடம் (1911 ) கொண்டாடுவது என்னும் அற்புதமான யோசனை இதிலிருந்தே எழுந்தது.

பீஷ்மா ஒருநாள் வாடாவில் தெளிந்த மனதுடன் ஓய்வெடுத்து கொண்டு இருந்தார். காகா மகாஜனி அந்நேரத்தில் பூஜைக்கு வேண்டிய சாமான்களுடன் மசூதிக்கு போகத் தயார் செய்து கொண்டிருதார்.

சாயி தரிசனம் செய்வதற்காகவும் உருஸ் பண்டிகையின் கோலாகலத்தை அனுபவிப்பதற்காகவும் காகா ஷீரடிக்கு ஒருநாள் முன்னதாகவே வந்து விடுவார்.

இதை ஒரு உசிதமான நேரமாகக் கருதி, பீஷ்மா காகாவை கேட்டார். "என்னுடைய மனதில் ஓர் அருமையான யோசனை தோன்றியிருக்கிறது. நீர் அதை நடத்திக் காட்ட உதவி செய்வீரா?

"உருஸ் பண்டிகை இங்கு வருடாவருடம் கொண்டாடப் படுகிறது. அந்த நாள் ஸ்ரீ ராம் ஜன்ம தினமாகவும் இருப்பதால், மேற்கொண்டு ஏதும் பிரயாசைப் படாமலேயே ஸ்ரீ ராம் ஜன்மோர்சவதையும் கொண்டாடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது".

காகா இந்த யோசனையை விரும்பினார். "பாபாவினுடைய அனுமதியை பெற வேண்டும். எல்லாமே அவருடைய ஆக்ஞையில்தான் இருக்கிறது. ஆக்ஞை கிடைத்துவிட்டால் அதன் பிறகு தடங்கலோ தாமதமோ ஏதும் இருக்காது".


Thursday, 30 August 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இப்பொழுது, நாம் ஏற்கெனவே ஆரம்பித்த, மச்சொதி ஜீரணோத்தாரணம் பற்றியும் ஸ்ரீ ராம ஜனன கதா கீர்த்தனம் பற்றியுமான காதையைத் தொடர்வோம்.

கோபால் குண்டட் என்ற பெயர் கொண்ட பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இடை விடாது பாபாவின் நாமத்தை ஜபம் செய்து வந்த பரம பக்தர்.

அவருக்குப் புத்திரப் பாக்கியம் இல்லாதிருந்தது. சாயியி னுடைய ஆசிர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திர ரத்தினம் பிறந்தான். அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

ஷீரடியில் கிராம மக்கள் அனைவரும் உல்லாசப்படும் வகையில் ஒவ்வொரு வருஷமும் ஒரு திருவிழா அல்லது உருஸ் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

தாத்யா கோதே, தாதா கோதே, மாதவராவ் தேச்பாண்டே போன்ற கிராம முக்கியஸ்தர்களும் இந்த யோசனையை மிகவும் விரும்பி அதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

இம்மாதிரி திருவிழாக்கள் கொண்டாடுவது என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது; ஜில்லா கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டிய நிர்பந்தமும் இருந்தது.

கலெக்டருடைய அனுமதி பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, கிராமத்தின் கணக்கர் காழ்ப்புணர்வோடு விஷமத்தனமாக அதை எதிர்த்தார்; தடங்கல்களை ஏற்படுத்தினார்.

கிராமத்துக் கணக்கர் எழுப்பிய ஆட்சேபனைகளால், ஷீரடியில் திருவிழா கொண்டாடப் படக்கூடாது என்று கலெக்டர் ஆணையிட்டு விட்டார்.

ஆனால், பாபாவே ஷீரடியில் உருஸ் திருவிழா நடத்தும் யோசனையை விரும்பி, அவருடைய சம்மதத்தையும் ஆசிர்வாதத்தையும் அளித்திருந்தார்.

ஆகவே, கிராம மக்கள் மனவுறுதியுடன் இவ்விஷயமாக தொடர் முயற்சி எடுத்தனர்; படாதபாடு பட்டனர். அவர்கள் எல்லாரையும் திருப்தி செய்யும் வகையில், முன்னர்ப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அதிகாரிகளால் ரத்து செய்யப் பட்டது;

அதிலிருந்து, பாபாவினுடைய சம்மதத்துடன் இந்த வருடாந்திர உருஸ் திருவிழாவை ஸ்ரீ ராமநவமியன்று கொண்டாடுவது என்று முடிவு செய்யப் பட்டது. தாத்யா கோதே எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இத் திருவிழாவிற்குத் தற்காலத்திலும் மக்கள் திரள்திரளாக வருகிறார்கள்.

ஸ்ரீ ராம நவமியன்று மேளதாளத்தோடு வாத்தியங்களும் முழங்க, பூஜையும் பஜனையும் செய்யப் படுகின்றன. உற்சவத்தில் கலந்து கொள்ள மக்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்து ஷீரடியில் குவிகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இரண்டு புதிய கொடிகள் மரியாதையாகச் சடங்குகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லாபட்டு, நிரந்தரமாக பறந்துகொண்டிருக்குமாறு மசூதியின் உச்சியில் கட்டப்படும். 



Wednesday, 22 August 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

வேதங்களையும் உப நிஷதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் படித்தால், 'நித்தியமெது?', 'அநித்தியமெது'?  என்னும் பாகுபாட்டு ஞானம் கிடைக்கும். 'குருவினுடைய திருவாய் மொழியே வேதாந்தம்' என்னும் அனுபவமும் கிடைக்கும்; பரமானந்தம்   கிடைக்கும்.

தம் பக்தர்களின் இல்லங்களில் உணவுக்கும் உடைக்கும் எந்த விதமான பற்றாக்குறையும் இருக்காது என்று சாயி உறுதி மொழி கொடுத்திருப்பது சாயி பக்தர்களுக்கு எப்பொழுதுமே தெரிந்த விஷயந்தான்.

"வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுக்கு யோக ஷேமத்தை அளிப்பதை என்னுடைய சத்தியப் பிரமாணமாகக் கருதுகிறேன்".

ஸ்ரீமத் பகவத் கீதையின் இந்த உறுதிமொழியைப் பேருண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சாயி திருவாய் மொழிகிறார். உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இல்லை; அவற்றின் பின்னால் அலைய வேண்டா.

இறைவனின் அரச சபையில் கௌரவம் தேடுங்கள். அவருடைய அருளையே கெஞ்சி வேண்டுங்கள். அவருடைய பிரசாதத்திற்காவே  முயற்சி செய்யுங்கள்; உலகியல் புகழ் தேடாதீர்.

பாராட்டுப் பவர்களுடைய தலையசைப்பை நாடி உன்னுடைய கவனம் ஏன் திரும்ப வேண்டும்? உன் இஷ்ட தெய்வமன்றோ காருண்யத்தினால் உருகி வியர்வையைத் 'தபதப' வென்று பெருக்க வேண்டும்;

அந்த லட்சியத்திற்கு நீ எவ்வளவு வேண்டுமானாலும் பாடுபடு! புலன்கள் அனைத்தும் பக்திப் பெருக்கால் மூழ்கடிக்கப் பட்டு, புலனின்ப நாட்டங்கள் எல்லாம் பக்தியுடன் கூடிய வழிபாடாக மாற்றம் எய்தட்டும்! ஓ, அந்நிலை எவ்வளவு அற்புதமானது!

இம்மாதிரியான வழிபாடு இதற் வழிகளில் ஆசை வைக்காது என்றென்றும் நிலைக்கட்டும். மனம் மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, என்னுடைய நாமஸ்மரணத்திலேயே நிலைத்து நிற்கட்டும்.

மனம் அந்நிலையில் உடலிலிருந்தும் குடும்பத் தொல்லைகளிலிருந்தும் பணத்தாசையிலிருந்தும் விடுதலை பெற்று ஆனந்தமயமாக இருக்கும். சம தரிசனத்தையும்  பிரசாந்தத்தையும்  (பேரமைதியையும்) அடைந்து, கடைசியாக பரிபூரணத்தையும் அடையும்.

சாந்தி நிறைந்த மனம் ஞானிகளின் சத் சங்கத்தில் இருக்கிறோம் என்பதற்கு அறிகுறி. ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு சதா அலையும் ஓய்வில்லாத மனத்தை இறைவனுடன் ஒன்றியாதாக எப்படிக் கொள்ள முடியும்?

ஆகவே, கதை கேட்பவர்களே! இப்பிரவசனத்தை பக்தியுடன் கேட்கும்போது முழு கவனத்தையும் கேள்வியின் மேல் வையுங்கள். சாயியின் இச் சரித்திரத்தை கேட்டு உங்களுடைய மனம் பக்தி நிரம்பியதாக ஆகட்டும்.

காதை முன்னேறும்போது திருப்தியை கொண்டுவரும்; சஞ்சலமான மனம் விச்ராந்தியடையும்; எல்லாக் கொந்தளிப்புகளும் அடங்கும்; சாந்தியும் சந்தோஷமும் ஆட்சி செய்யும். 


Thursday, 16 August 2012

ஷிர்டி சாயி பாபா சத் சரிதம்

மனமென்னும் செழிப்பும் வீரியமுள்ள மண்ணில் பக்தி என்னும் நீரைப் பாய்ச்சினால், வைராக்கியம் முளைக்கிறது. ஞானம் மலர்கிறது. பரவசநிலை பீறிட்டு கைவல்லியம் (வீடுபேறு - மோட்சம்) கை கூடுகிறது. ஜனனமும் மரணமும் நிச்சயமாக விலகி விடுகின்றன.

மூல பரமாத்மா தனித்துச் செயல்படக்கூடிய சித்திகள் நிறைந்தது. அதுவே, சத், சித், ஆனந்தம் என்னும் முக்கூட்டான சக்தி, பக்தர்களுக்கு போதனை செய்வதற்காக அவதாரம் செய்கிறது.

பிரம்மம் சச்சிதானந்தமாக மாறும்போது, மாயையும் செயலாற்ற ஆரம்பித்து சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய குணங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

களிமண் ஓர் உருவகமாக வடிக்கப்படும்போது, பானை என்று பெயர் பெறுகிறது. பானை உடைந்துவிட்டால், பெயரும் உருவமும் அடையாளமும் அதை விட்டு அகன்று விடுகின்றன.

இவ்வுலகமே மாயையிலிருந்து உருவானதுதான். இவ்விரண்டுக்குமுள்ள உறவு, காரணகாரிய உறவுதான். உண்மையில், மாயையே ஓர் உருவத்தை ஏற்றுக் கொண்டு இவ்வுலகமாகக் காட்சியளிக்கிறது.

இவ்வுலகம் தோன்றுவதற்கு முன், மாயையின் நிலை என்ன என்பதைச் சிந்தித்தால் அது அவள் தோன்றாத நிலை, பரமாத்மாவுடன் ஒன்றுபட்ட நிலை, உருவெடுக்காத நிலை.

உருவெடுத்த நிலையோ உருவெடுக்காத நிலையோ மாயை எப்பொழுதுமே பரமாத்மா ரூபம்தான். ஆகவே, இந்த மாயை பரமாத்மாவிலிருந்து பிரிக்க முடியாத, பரமாத்மாவின் ஒரு பாகமே.

மாயை, தமோ குணத்திலிருந்து உயிரில்லாதவையும் நகரமுடியாதவையுமான பொருள்களை சிருஷ்டி செய்தது. இது மாயையின் முதல் சிருஷிடி காரியம்.

பிறகு, மாயையினுடைய ரஜோகுணம் பரமாத்மாவின் 'சித்' குணத்துடன் சேர்ந்து உணர்வுள்ள, நகரக்கூடிய ஜீவராசிகளை, இக் கூட்டுச் சக்தி வெளிப்படும் வகையில் சிருஷ்டி செய்தது.

மாயையின் சத்துவ குணம் புத்தியை சிருஷ்டி செய்தது. புத்தி ஆனந்தத்தில் ஊடுர்வி, சிருஷ்டி  என்னும் விளையாட்டைப் பூரணமாக்கியது.

இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக் கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால், முக்குணங்களும் தோன்றா நிலையிலேயே இருந்து விடுகின்றன. சிருஷ்டி என்று ஏதும் நடப்பதில்லை.

முக்குணங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும்வரை மாயை தோன்றா நிலையிலேயே இருக்கிறாள். தானே ஒடுங்கிய நிலையில் இருக்கும்வரை அவள் தோன்றா நிலையிலேயே இருக்க முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

மாயை பரமாத்மாவின் சிருஷ்டி; உலகம் மாயையின் சிருஷ்டி. "பார்ப்பதனைத்தும் பிரம்மமே" என்னும் சொற்றோடர்கு, பரமாத்மா, மாயை, இவ்வுலகம், இம்மூன்றும் ஒன்றே என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.

இந்த ஒருமையை நாம் அனுபவிப்பது எப்படியென்று தெரிந்துகொள்ளத் தீவிர ஆர்வமுள்ளவர்கள் வேதங்களைப் பயில வேண்டும்.



Thursday, 9 August 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

'நானே அது' என்னும் பாவம் எழுப்பப்பட்டு ஆனந்தத்தை உள்ளிருந்து மலரச் செய்கிறது. நான் - நீ என்னும் வேறுபாட்டை முழுவதும் அழித்து, முழு முதற் பொருளோடு ஐக்கியமாகிவிடுவதை கொண்டாடுகிறது.

எந்தப் போதியையும் புராணத்தையும் படித்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் சத்குருவின் ஞாபகமே வருகிறது. ஆகவே, சாயிதான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றித் தம்முடைய காதையையே நம்மைப் பாராயணம் செய்ய வைக்கிறார்.

ஸ்ரீ மத்பாகவதம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், உதாவ கீதையை பக்தர்களின் நன்மைக்காகப் பாடும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நகத்திலிருந்து சிகை வரை சாயி யாகவே காட்சியளிக்கிறார்.

ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்க முயலும்போது, சாதாரணப் பேச்சிலேயே திடீரென்று சாயியினுடைய கதை ஏதாவதொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

எழுத வேண்டுமென்ற சங்கல்பத்துடன் ஒரு நாள் காகிதத்தை எடுக்கிறேன். ஆனால், ஒரு அக்ஷரமும் வெளிவருவதில்லை. எனினும், சாயியே அவருடைய அருளால் என்னை எழுத உணர்வூட்டும்போது, எழுதுகிறேன். எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் அஹங்காரம் தலை தூக்குகிறதோ அப்பொழுது எல்லாம் அவருடைய கையால் அதை எழும்ப முடியாமல் அழுத்தி விடுகிறார். அத்தோடு மட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை சிஷ்யனின் மீது பாய்ச்சி, அவனை ஆருலாளன் ஆக ஆக்கி விடுகிறார்.

மனத்தாலும் வாக்காலும் செய்கையாலும் சாயி பாதங்களை முழுமையாக சரணடைந்துவிட்டால், ஆறாம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் நம்மைத் தாமாகவே வந்தடைந்துவிடுகின்றன.
கர்மம், ஞானம், யோகம், பக்தி இந்நான்கும் இறைவனை அடையும் வழிகளாகும். இந்நான்கு பாதைகளும் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் சென்றாலும், கடைசியில் போய்சேருமிடம் ஒன்றே; ஈசுவரப் ப்ராப்தியே (இறைவனை அடைவதே)

பக்திமார்க்கம் பள்ளம் படுகுழிகள் நிறைந்த கருவேலங்காட்டை கடந்து செல்வது போலக் கடினமானது. ஒருவரே, நடக்க கூடிய ஒற்றையடிப் பாதையாக இருந்தாலும், நேராக இறைவனின் அண்மைக்கு அழைத்துச் செல்லும்.

இதைக் கடப்பதற்கு சுலபமான வழி, முட்களை தவிர்த்து ஒவ்வொரு அடியாக பயமின்றி எடுத்துவைக்க வேண்டியதுதான். இதையே அன்னையாகிய குரு தெளிவாக எச்சரிக்கிறார். 


Thursday, 2 August 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீ ராம நவமி உற்சவம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபிஷதிற்காகவோ எதற்காகவோ இருப்பினும் சரி, எங்கு சத்குரு படகோட்டி யாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கறை சேர்க்கிறார்.

சத்குரு என்ற வார்த்தை உள்ளதைக் கிள்ளும்போதே சாய் மனக்கண்முன் தோன்றுகிறார். நிஜமாகவே என்முன் தோன்றித் தம்முடைய வரம் நல்கும் கரத்தை என் இதயத்தின் மீது வைக்கிறார்.

அவருடைய வரம் தரும் கரம், துனியிலிருந்து வந்த சாம்பலுடன் என்னுடைய நெற்றியில் படும்போது இதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது; அன்பினால் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது.

குருவினுடைய ஹஸ்த ஸ்பரிசம் (கையால் தொடுதல்) பிரளயகாலத்து அக்கிநியாலும் அழிக்க முடியாத சூக்கும சரீரத்தை அழித்துவிடும் அற்புத சக்தி வாய்ந்தது. கரம் தீண்டுவதாலேயே சூக்கும சரீரம் சாம்பலாகிவிடுகிறது.

கடவுளைப் பற்றியோ புராணங்களைப் பற்றியோ தப்பித் தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவலி வருவபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாச்திகர்களுக்குங்கூட, அது (குருவினுடைய கரம் தீண்டல்) சாந்தியை அளிக்கும்.

தாமரை போன்ற தம் கையை அவர் நம் தலையின்மீது வைக்கும்போது, பல ஜென்மங்களாகப் பரிபக்குவம் அடைந்த மலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. சாயியின் அன்பார்ந்த பக்தர்கள் தூய்மை அடைகின்றனர்.

அவருடைய சுந்தரமான உருவத்தின் மேல் பார்வை படும்போது பரவசத்தால் தொண்டை அடைக்கிறது; ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது; இதயத்தில் அஷ்டபாவம்  எழுகிறது. 


Thursday, 26 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

தோதி போதி, கண்ட யோகம் போன்ற பாபாவின் யோக சாதனைகள், மற்றும் அவர் எப்படி பக்தர்களின் கர்ம வினைகளால் ஏற்பட்ட உபாதைகளைத் தம்முடைய உடலில் ஏற்றுக்கொண்டார் என்பது பற்றியெல்லாம் முறைப்படி, எதுவும் விட்டுப் போகாமல் பிறகு சொல்லப்படும்.

ஹேமாட் பணிவுடன் சாயியை சரணடைகிறேன். இந்தப் பிரவசனம் அவருடைய பிரசாதமேயாகும். இப்புண்ணியமான காதையைக் கேட்பதாலேயே எல்லாப் பாவங்களும் அழிக்கப்படும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரிசமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'காணாமற் போனதும் ஷீரடிக்கு திரும்பி வந்ததும்' என்னும் ஐந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயினாதருக்கு  அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சாயி என்னும்  சொல்லுக்கு (சுலோகம் 25 ), சமகால அவதார புருஷரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர், கர்தாபஜா பிரிவினரைப் பற்றப் பேசியபோது அளித்த விளக்கம் கீழ்கண்டவாறு:
     "பிர்வர்தகர்கள் நெற்றியில் திலகமும் கழுத்தில் மாலையும் அணிவார்கள்; புற ஆசாரங்களை கடைபிடிப்பார்கள். சாதகர்கள் புற விஷயங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்; உதாரணமாக பௌல்கள். இறவன் இருக்கிறார் என்பதில் சரியான நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். ஸ்ரீ சைதன்யர் போன்றோர் சித்தரில் சித்தர். இவர்கள் கடவுளைக் கண்டதுமட்டுமல்லாமல், அவருடன் எப்போதும் பேசுகின்றனர். நெருங்கிப் பழகுகின்றனர். சித்தரில் சித்தரை கர்த்தபஜாக்கள் சாயி என்கின்றனர். சாயிக்குமேல் உயர்ந்த நிலை இல்லை."