valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 12 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பின்னர்த் தன்னுடைய தீர்மானத்தைக் கணவனிடம் தெரிவித்தாள். கணவன் இந்தத் திட்டத்தைக் கேட்டான். உள்ளுக்குள்ளே பெருங்கலவரமடைந்தான். 

பேராசை கோலோச்சுமிடத்தில் விவேகம் எப்படி இருக்கும்? அதுவும் இறைப்பணிக்குத் தர்மம் அளிக்கும் விவேகமா? அவன் மனத்துக்குள் எண்ணினான், 'ஐயோ! எவ்வளவு விவேகமற்ற செயல்! தவறான நம்பிக்கை கொண்டு முழுக்க ஏமாறிவிட்டாள்.-

'அவளுடைய ஆபரணங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஓராயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தபின், ஒரு நிலத்தை அவள் பெயரில் எழுதிவைத்துவிட வேண்டும்.'

ஆகவே, மனைவியின் ஆபரணங்களைக் கஞ்சனே விலைக்கு வாங்கினான். கடுமையான உழைப்பால் மேடுபள்ளம் திருத்தப்பட்ட சிறிய நிலம் ஒன்று யாராலோ அவனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. பணத்திற்குப் பதிலாக அந்த நிலத்தை கஞ்சன் மனைவிக்கு கொடுத்தான். 

அந்த நிலமும் ஒரு தரிசு; மழை பெய்தாலும் எதுவும் விளையாத நிலம். அவன் மனைவியிடம் சொன்னான், "இதை சிவனுக்கு சமர்ப்பணம் செய். -

"இந்த நிலத்தின் மதிப்பு ஓராயிரம் ரூபாய். உன் கனவுக்காட்சியின்படி இதை நீ கடவுளுக்கு தானம் செய்யலாம். கடவுள் மகிழ்ச்சியடைவார். நீயும் உன் கடனைச் செலுத்தியவளாவாய்".

கணவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கஞ்சனின் மனைவி அந்த நிலத்தை சங்கரருக்கு சந்தோஷத்துடன் சமர்ப்பணம் செய்தாள்.

உண்மை நிலை என்னவென்றால், அந்த நிலம் டுபகீ என்னும் பெண்மணிக்குச் சொந்தமானது. அவள் இருநூறு ரூபாய் கடனுக்காக அந்த நிலத்தைப் பணக்காரக் கஞ்சனிடம் அடமானம் வைத்திருந்தாள். 

டுபகீ ஓர் அனாதைப் பெண்மணி; நிலம் அவளுடையது. ஆபத்துக்கு காலத்தில், அந்த நிலத்தையும் பணத்துக்காக அடமானம் வைக்கவேண்டியதாயிற்று. 

ஆயினும், பணக்காரனோ ஒரு மஹாலோபி. அவன் சங்கரரையும் ஏமாற்றுவதற்கு பயப்படவில்லை. கபடமான வழியில் மனைவியின் சீதனத்தை ஜேபியில் போட்டுக் கொண்டான். எனினும், லாபமடைந்தது பற்றி மகிழ்ச்சியடைந்தான். 

புலன்களின் வலிய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட  வலையில் மாட்டிக்கொள்ளலாகாது. 

வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது. 




Thursday, 5 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"அதை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், நாம் முற்றும் ஏமாறிப்போவோம். தூக்கம் கெட்டதால் ஏற்பட்ட கனவை யாராவது வாஸ்தவமானதாக ஏற்றுக்கொள்வார்களா?" பணக்காரன் கடைசியில் வந்தடைந்த சித்தாந்தம் (முடிந்த முடிவு) இதுவே!

இதைக் கேட்ட மனைவி பேச்சிழந்துபோனாள்.  அவளால் கணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் நிதி திரட்டியது என்னவோ உண்மைதான்; ஆயினும், சந்தோஷத்துடன் கொடுத்தவர்கள் மிகச் சிலரே. 

தெய்வக்குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்மசங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துனைச் சிறியதனாலும் அதை விலையுர்ந்த பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான். 

எப்போதெல்லாம் நிதி திரட்டப்பட்டதோ அப்போதெல்லாம் வேலை முன்னேறியது. பணம் வருவது நின்றபோது வேலையும் நின்றது. இவ்வாறாக வேலை தாமதமாகிக்கொண்டே போயிற்று. 

பணக்காரக் கஞ்சன் தன்னுடைய பணப்பையிலிருந்து ஒரு பைசாவும் செலவழிக்க மறுத்த நிலையில், அவன் மனைவிக்கு மறுபடியும் ஒரு கனவுக்காட்சி ஏற்பட்டது. எப்படியென்று சொல்கிறேன்; கேளும். 

"கோயிலுக்காகப் பணம் செலவிட வேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு. -

"உன்னுடையை பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய். -

"வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.-

"இது விஷயத்தில் பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடு' என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள். -

"ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமானதன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை. 

"பாவம் இல்லாது எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமேதுமின்றி அனுபவப்பூர்மவாக அறிந்து கொள்வான்."

கனவுக்காட்சியில் இந்தச் சொற்களைக் கேட்ட பிறகு, தன் தந்தையால் சீதனமாக அளிக்கப்பட்ட அலங்கார ஆபரணங்களை விற்று, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வது என்று அவள் நிச்சயம் செய்துகொண்டாள். 


 

Thursday, 29 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறாக, மேற்கொண்டும் நிதி திரட்டப்பட்டு நேர்மையான முறையில் கஞ்சனின் கைக்கு வந்துசேர்ந்தது. அப்படியும் ஒரு பயனும் ஏற்படவில்லை. பணக்காரன் ஒன்றும் செய்யாமல் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டான்.

இவ்வாறு சில நாள்கள் கழிந்தபின் மனம் வைத்தான். அந்த சமயத்தில் கஞ்சனின் மனைவிக்கு ஒரு சொப்பனக்காட்சி ஏற்பட்டது.

"நீயாவது எழுந்துபோய்க் கோயிலின் கோபுரத்தைக் கட்டு. நீ செலவழிப்பதைப்போல நூறுமடங்கு நீலகண்டன் (சிவன்) உனக்கு அளிப்பான்."

மறுநாள் காலையில், தன கனவுக்காட்சி விவரங்களை அவள் தன கணவனின் காதில் போட்டாள்.  கணவனோ ஒரு பைசா செலவழிப்பதற்கும் உயிரை விடுபவன். ஆகவே, இச் செய்தி அவனைக் கலவரமடையச் செய்தது.

இரவுபகலாகப் பணம் பண்ணுவதைத் தவிர வேறு விஷயம் எதைப்பற்றியும் சிந்திக்காதவன், பணம் செலவழிக்கும்படி வந்த சொப்பனச் செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வான்?

அவன் தன் மனைவியிடம் சொன்னான், "நான் இந்தக் கனவுக்காட்சியை நம்பமாட்டேன். இது விஷயமாக எனக்கு அறவே விசுவாசம் இல்லை."  மேலும் அவளை பரிகாசம் செய்யவும் ஆரம்பித்தான்.

ஒருவருடைய மனப்போக்கு எப்படியோ, அப்படியே அவருக்கு உலகம் காட்சியளிக்கன்றதன்றோ ! வஞ்சக இயல்பு உடையவனுக்கு மற்றவர்களும் வஞ்சகர்களாகவே தெரிகின்றனர்!

"கடவுள் என்னிடமிருந்துதான் தானம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாரானால், நான் என்ன உன்னிடமிருந்து வெகுதூரத்திலா இருந்தேன்? ஏன் அவர் உனக்கு மட்டும் கனவில் தோன்றினார்?-

"உனக்கு மட்டும் ஏன் கனவுக்காட்சி ஏற்பட்டது? எனக்கு ஏன் கடவுள் காட்சியளிக்கவில்லை? ஆகவே, இது ஏதும் பொருள் பொதிந்ததாக எனக்குத் தெரியவில்லை. கனவுக்காட்சியின் முக்கியத்துவமும் எனக்குப் பிடிபடவில்லை. -

"இந்த சொப்பனம் ஒரு போலி; அல்லது, கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படுத்த விரும்பும் ஒரு தெய்வ எத்தனம். எனக்கு இந்த அறிகுறிதான் தெரிகிறது. -

"ஜீரணோத்தாரணப் பணியில் என்னுடைய நன்கொடை கம்மியா என்ன? மாதந்தோறும் நாம் நிரப்பிவைக்கும் பணப்பை காலியாகிவிடுகிறது. -

"மக்கள் ஏராளமான நிதியைக் கொண்டுவருவதுபோல வெளிபார்வைக்குத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், இந்தப் பத்ததியில் (முறையில்) கணக்கு வைத்துக்கொள்வது என்பது எனக்குப் பெருநஷ்டம்.-

"ஆயினும், மக்களுக்கே விளங்காததை நீ எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறாய்? ஆகவே, நீ கண்ட சொப்பனக்காட்சியை யதார்த்தமென்று ஏற்றுக்கொள்ள முடியாது.-


 

Friday, 23 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"சரி, சரி; முதலில் நாம் ஒரு மரத்தடிக்குச் செல்வோம். கொன்ஜம் சிலீம் பிடிப்போம். பிறகு நான் உம்முடைய விஷய ஆர்வத்தைப் பூர்த்திசெய்கிறேன். அதன் பிறகு நான் என்னுடைய வசிப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்."

நாங்கள் இருவரும் ஒரு நிழலடர்ந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம். இதமான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. மறுபடியும் சிலீம் பற்றவைக்கப்பட்டது.

வழிப்போக்கர் முதலில் புகைக்குடித்தார். பிறகு சிலீமை என் கையில் கொடுத்தார். நான் புகைக்குடித்துக்கொண்டே அவருக்கு அந்தக் கவர்ச்சியான கதையைச் சொன்னேன்.

என்னுடைய இடத்திலிருந்த ஐந்து அல்லது ஆறு மைல் தூரத்தில் ஒரு மஹிமை வாய்ந்த, பவித்திரமான புண்ணியத்தலம் இருந்தது.

அங்கே புராதனமான, பாழடைந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. அதை ஜீரணோத்தாரணம் (பழுதுபார்த்துப் புதுப்பித்தல்) செய்யவேண்டுமென்று எல்லா மக்களும் விரும்பினர்.

மக்கள் அதன்பொருட்டு நன்கொடை வசூலித்தனர். ஒரு பெரிய நிதி வசூலாகியது. நித்திய பூஜை, அர்ச்சனை ஆகிய வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரைபடங்களுடன் முழுமையான திட்டம் தயாரிக்கப்பட்டது.

அவ்வூரிலிருந்த ஒரு பெரிய பணக்காரன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டது. முழுப்பணமும் பூரணமான, முடிவெடுக்கும் அதிகாரமும் அவனிடம் அளிக்கப்பட்டன.

கோயிலுக்கென்று அவன் தனிக்கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும். அவனுடைய நன்கொடையைப் பணமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இச்செயல்களை அவன் நேர்மையாகவும் பிழையின்றியும் செய்வான் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அம்மனிதன் இயல்பாகவே ஒரு பெருங்கஞ்சன். எச்சிற்க்கையால் காக்காய் ஓட்டாதவன். அதே தோரணையில் வேலையை நடத்த முயன்றான். இதன் விளைவாக, வேலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

எல்லாப் பணமும் செலவழிந்துவிட்டது. அனால், வேலையோ அரைகுறையாகத்தான் முடிந்திருந்தது, தன்னுடைய ஜேபியிலிருந்து எதையும் அவன் செலவழிக்கவில்லை. ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு பெரிய லேவாதேவிக்காரன்; ஆயினும், கஞ்சத்தனத்தின் பூரணமான அவதாரம். பேச்சிலோ எப்பொழுதும் இனிமை; ஆனால், வேலை நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில், பணம் வசூலித்த மக்கள் எல்லாரும் அவனுடைய வீட்டில் கூடினர். "உமது வட்டிக்கடை வியாபாரத்தால் என்ன பயன்?-

"உமது கையால் பாரம் தூக்காமல், சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி எவ்வாறு நிறைவேறும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே! இதைபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். -

"மக்களை இசையச் செய்து, மறுபடியும் நிதி வசூல் செய்கிறோம். அந்தத் தொகையையும் உம்மிடம் தருகிறோம். ஆனால், நீங்கள் சிவன் கோயில் வேலையை முடித்துக்கொடுக்க வேண்டும்."

 


 

Thursday, 15 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.-

"இப்பொழுது, நான் அவர்கள் இருவரையும் பிரித்த பிறகு, நீர் உமது வீட்டிற்குச் செல்லும்; நான் என் வசிப்பிடத்திற்குச் செல்கிறேன். போம், போம், சிலீமை மறுபடியும் நிரப்பும். பாம்பு அடுத்ததாக என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடுவோம்!"

சிலீம் உடனே தயார் செய்யப்பட்டது. வழிப்போக்கர் அதைப் பற்றவைத்துத் தாம் ஒரு தடவை புகை உறிஞ்சினார். பின்னர் என்னிடம் அளித்தார். நான் புகைகுடிப்பதற்காகச் சிலீமைக் கையில் வாங்கிக்கொண்டேன்.

நான் இரண்டு தடவைகள் புகை உறிஞ்சினேன். பின்னர் வழிப்போக்கனை என்னுடன் அழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தை அடையும்வரை தருப்பைப் புதர்களின் ஊடே புகுந்து நடந்து சென்றேன்.

மறுபடியும் பாம்பைப் பார்த்த வழிப்போக்கர் பீதியடைந்தார். "ஓ, எவ்வளவு பயங்கரமான பிராணி!" என்று சொல்லி வியந்தார். பயமடைந்த அவர், நான் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முயன்றார்.

அவர் கூறினார், "ஆ, தயவுசெய்து இதற்குமேல் போக வேண்டா.  அந்தப் பாம்பு நம்மை நோக்கி வரும். இந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருக்கிறது. தப்பித்து ஓடவும் இயலாது. மேற்கொண்டு அடியெடுத்து வைக்கவேண்டா."

அந்தக் காட்சியைப் பார்த்த வழிப்போக்கர் மரணபீதி அடைந்தார். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த விரோதபாவம் சம்மந்தமாக அப்பொழுது நான் நிகழ்த்திய உபதேசத்தைக் கேளுங்கள்.

"அடே, அப்பா, வீரபத்ரா, உன் விரோதியான சனபசப்பா தவளையாகப் பிறந்த பின்னரும் நீ அனுதாபம் (கழிவிரக்கம்) கொள்ளவில்லையா?-

"நீயும் ஒரு பாம்பாகப் பிறந்திருக்கிறாய். இன்னுமா இந்த கொலை விரோதம்? இப்பொழுதாவது உன்னுடைய செய்கைகளுக்காக வெட்கப்படு! விரோதத்தை விடுத்து சாந்தமாக இரு!"

என்னுடைய வாயிலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பாம்பு சட்டென்று தவளையை விடுவித்தது.  சரசரவென்று நழுவியோடித் தண்ணீருக்குள் நுழைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு எகிறிக் குதித்த தவளை சட்டென்று அங்கிருந்த செடி கொடிகளிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அவர் சொன்னார், "இது என்னவென்றே எனக்கு விளங்கவில்லை! உங்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டவுடன் எப்படி அந்தப் பாம்பு தவளையை விடுவித்தது! பாம்பு எப்படி மறைந்துபோயிற்று!-

"இவ்விருவரில் யார் வீரபத்ரப்பா? அதுபோலவே, யார் இவ்விருவரில் சனபசப்பா? இவர்களுடைய விரோதத்துக்குக் காரணம் என்ன? எனக்கு அனைத்து விவரங்களையும் சொல்வீர்களா?"




Thursday, 8 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"தாங்கள் என்னுடைய இல்லத்திலேயே கொஞ்சம் சோளரொட்டி உண்ணலாம். பின்னர் சிறிது ஓய்வெடுக்கலாம். வெயில் தாழ்ந்த பின் சௌகரியமாகத் திரும்பி செல்லலாம்.

"திரும்புகாலில் நானும் உங்களுடன் வருகிறேன்". இவ்வாறு என்னிடம் அந்த வழிப்போக்கர் சிலீமைத் தயார் செய்து, பயபக்தியுடன் என்னிடம் புகைகுடிக்கக் கொடுத்தார்.

அங்கோ, தவளை பரிதாபகரமான குரலில் கதற ஆரம்பித்தது. ஆகவே, அந்த வழிப்போக்கர் என்னை வினவினார், "யார் இப்படி அலறுவது?".

அவருக்கு நான் பதில் சொன்னேன், "ஒரு தவளை நதிக்கரை அருகில் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அவனுடைய கர்மவினை அவனைத் துரத்துகிறது.  நான் உமக்குச் சொல்லப் போகும் கதையைக் கேளும்."

போன ஜென்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜென்மத்தில் அனுபவி. கர்மவினையின் விளைவுகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். இப்பொழுது அலறுவதால் என்ன பயன்? (தவளைக்கு உபதேசம்)

இதைக் கேட்ட வழிப்போக்கர் சிலீமை என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நிதானமாக நடந்தவாறே சொன்னார், "நான் போய்ப் பார்க்கிறேன்.-

"இவ்விதம் கத்துவது தவளையா அல்லது வேறு ஏதாவது பிராணியா? மனத்திலிருந்து சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு நேர்ந்திருக்கும் ஆபத்து என்னவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்."

அவருடைய நாட்டம் அதுவே என்று தெரிந்து கொண்ட பின் நான் சொன்னேன், "நீரே போய்ப்பாரும். பெரிய பாம்பு ஒன்றின் வாயில் பிடிபட்டு ஒரு தவளை ஓலமிடுகிறது. -

"இருவருமே மஹா கொடியவர்கள். பூர்வஜென்மத்தில் பயங்கர பாவம் செய்தவர்கள். அந்த வினையை அனுபவிக்க இப்பொழுது வேறு சரீரங்களை அடைந்திருக்கின்றனர்."

இதைபற்றிச் சிந்தித்துக்கொண்டே அந்த வழிப்போக்கர் அவ்விடத்திற்குச் சென்று அங்கு நடந்துகொண்டிருந்ததை பிரத்யட்சமாக பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் சொன்னார், "நீக்கினால் சொன்ன விவரம் உண்மைதான்.-

"விசாலமான வாய் படைத்த அப் பாம்பு யமனைப் போலத் தோன்றுகிறது. தவளையும் பயமுறுத்தும் தோற்றம் உடையது. ஆயினும், தவளை பாம்புக்கு இரையாகிவிட்டது. -

"இன்னும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள், தவளை பாம்பின் வாய்க்கு ஆஹுதி (அக்கினியில் இடும் படையல்) ஆகிவிடும். என்னே கர்மவினையின் விசித்திரமான வழி! சீக்கிரமே அந்தத் தவளை கவலையற்ற நிலையை (மரணம்) அடையும்!"

ஆகவே, நான் அவரிடம் கூறினேன்,"ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும்! பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.-


 

Thursday, 1 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இது சம்பந்தமாக, சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த அமிர்தவாணியும் தூய்மையை அளிக்கக்கூடியதுமான ஒரு கதையைப் பயபக்தியுடன் சொல்லுகிறேன். கேட்க்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

அக் கதை நான் கேட்டவாறே என் மனத்தில் பதிந்திருக்கிறது. அதை சாயி மாதாவின் கூற்றாகவே விவரிக்கிறேன்.

சாயியே தம்முடைய கதைக்குச் சரித்திரக்காரர். கதையை விஸ்தாரமாக அவரே எழுதவைக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே; சூத்திரதாரி அவரே!

(ஹேமாட் சொன்ன கதை இங்கு ஆரம்பம்)

ஒருநாள் காலை எட்டு மணி அளவில், என்னுடைய வழக்கமான காலைச் சிற்றுண்டியை முடித்தபின் நான் வெளியே உலாவச் சென்றேன்.

வழி நடந்து, நடந்து களைத்துபோனேன். ஆகவே ஒரு நதியின் கரையை அடைந்தபோது, பாதங்களைக் கழுவியபின் ஸ்நானம் செய்தேன்; புத்துணர்ச்சி பெற்றேன்.

அந்த நதியும்  ராஹாதாவுக்கு அருகிலுள்ள நதியளவிற்குப் பெரியது. வெள்ளம் இரு கறைகளை தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் தர்ப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து மண்டிக்கிடந்தது.

அங்கு ஓர் ஒற்றையடிப்பாதையும் தெளிவாகத் தெரிந்த வண்டிப்பாதையும் இருந்தன. ஆற்றங்கரையில் பல மரங்கள் ஓங்கிப் பருத்து வளர்ந்திருந்தன. அவற்றின் நிழலும் உன்னதமாக இருந்தது.

மெல்லிய பூங்காற்று வீசி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காடு போன்று வளர்ந்திருந்த மரங்களைக் கண்டு நான் நிழலில் நிம்மதியாக உட்கார்ந்தேன்.

புகை குடிக்கச் சிலீமை நிரப்பவேண்டும். 'சாபியை' நீரில் நனைப்பதற்காக துறைக்குச் சென்றேன். அப்பொழுது "க்ரோக், க்ரோக்" என்ற சத்தம் கேட்டது. அது ஒரு தவளை எழுப்பும் ஒலி என்று நான் நினைத்தேன்.

அதில் என்ன ஆச்சரியம்? தண்ணீர் இருக்குமிடத்தில் தவளையும் இருப்பது இயற்கையன்றோ? சாபியை நனைத்தபின் நான் திரும்பி வந்து சிக்கி முக்கிக்கல்லை கையிலெடுத்தேன்.

சிக்கிமுக்கிகல் நெருப்பு பொறி தந்தது. சிலீம் பற்றிக்கொண்டு தயாராகியது. அந்த சமயத்தில் அங்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். எனக்கு வணக்கம் செலுத்திவிட்டு என்னருகில் அமர்ந்தார்.

மிகுந்த பணிவுடன் சிலீமைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டு கூறினார், "நீங்கள் நெடுந்தூரம் வந்திருக்கிறீர்கள்!-

"மசூதி வெகுதொலைவில் இருக்கிறது. நீங்கள் திரும்பிப் போவதற்குள் கடுமையான வெப்பமாகிவிடும். என்னுடைய வீடு அருகில்தான் இருக்கிறது. சிலீம் பிடித்துவிட்டு அங்கே செல்வோம். -