valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 6 June 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"பாபுசாஹெப் ஜோக் இன்று வர மாட்டார். நான் இறந்துபோய்விட்டேன் என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.  ஆகவே, நீராவது வந்து எனக்குக் காக்கட் ஆரத்தியையும் காலப்பூஜையையும் செய்வீராக!"

லக்ஷ்மண் மாமா உடனே எழுந்து நித்தியக் கிரமங்களை முடித்துக்கொண்டு பூஜைக்கு உண்டான சாமான்களை எடுத்துக்கொண்டு பூஜை செய்வதற்குச் சரியான நேரத்தில் வந்துசேர்ந்தார்.

அவர்  ஷிர்டியின் கிராம ஜோதிடர்; தினமும் காலைநேரத்துப் பூஜையைச் செய்த மாதவராவின் (சாமாவின்) தாய்மாமன்.

லக்ஷ்மண் மாமா வைதீக நெறிகளின்படி செம்மையாகக் கர்மாக்களைச் செய்த ஒரு சிறந்த பிராமணர்.  தினமும் விடியற்காலையில் ஸ்நானம் செய்துவிட்டு தூய ஆடைகளை அணிந்துகொண்டு பாபாவை தரிசனம் செய்துகொள்வார்.

பிறகு, அவர் பாபாவின் பாதங்களை அலம்பியபின் சந்தனமும் அக்ஷதையும் இட்டு மலர்களாலும் துளசி இலைகளாலும் அர்ச்சனை செய்வார். அதன்பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், நீராஞ்சனம் (மஞ்சள் நீர் ஆரத்தி) ஆகிய பூஜை விதிமுறைகளைச் செய்வார். கடைசியாக தக்ஷிணையும் சமர்பிப்பார்.

பிரார்த்தனை மந்திரங்களை ஓதிக்கொண்டே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார். பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, எல்லாருக்கும் பிரசாதம் அளித்துவிட்டு  நெற்றியில் திலகமும் இடுவார். பின்னர் அங்கிருந்து சென்றுவிடுவார்.

அங்கிருந்து சென்று விநாயகர், சனி தேவர், உமாரமணர் (சிவன்), அஞ்சனையின் புத்திரரான ஹனுமார் ஆகிய தெய்வங்களுக்குப் பூஜை செய்வார்.

இவ்வாறாக, இந்த கிராம ஜோதிடர் கிராமதேவதைகள் அனைத்திற்கும் நித்திய பூஜை செய்தார். இப்பொழுது பாபாவின் பூதவுடலுக்கு மிகுந்த பிரேமையுடன் சடங்குகளுடன் கூடிய பூஜையைச் செய்தார்.

லக்ஷ்மண் மாமா ஆதியிலிருந்தே நிட்டையுடன் பணி செய்வார். அதோடு கூட அவருக்கு ஒரு கனவுக் காட்சியும் கிடைத்திருந்தது. ஆகவே, அவர் காகட ஆரதிக்கு வேண்டிய பொருள்களைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தார். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டுப் பிரேமையுடன் முகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு, சாயியின் கைகளையும் பாதங்களையும் அலம்பியபின், ஆசமனத்துக்கும் நீரும் அளித்துவிட்டு விதிமுறைகளின்படி பூஜைசெய்தார்.

மௌலவியும் மற்ற முஸ்லீம்களும் உடலைத் தொடக்கூடாது என்று ஆட்சேபித்தனர். லக்ஷ்மண் மாமா அதை பொருட்படுத்தாது சந்தனம் இட்டபின் பூஜையை முழுமையாகச் செய்து முடித்தார்.

பூதவுடலோ, மாமா ஆராதனம் செய்துவந்த தேவர் சமர்த்த சாயியினுடையது; அது இந்துவின் உடலா, முஸ்லீமின் உடலா என்ற எண்ணம் மாமாவுக்கும் கனவிலும் ஏற்பட்டிருக்காது. 



Thursday, 30 May 2024

 ஷீர்டி சாயிசத்சரிதம்

ஆகவே, அடியேன் வணக்கம் செய்து சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் விடுக்கிறேன். பயபக்தியுடன் கேளுங்கள்.

நாம் உத்தமர்களுடைய சங்கத்தையே நாடுவோமாக. குருவின் பாதங்களில் சுயநலம் பாராத அன்பு செலுத்துவோமாக. குருவின் புகழைப் பாடுவதில் பேரார்வம் காட்டி நிர்மலமான பக்தியைப் பெருக்குவோமாக!

குருவிடம் என்றும் பிளவுபடாத அன்பை வளர்ப்போம். நம்முடைய சினேகபாசம் என்றும் அறுபடாதிருக்கட்டும். பக்தர்கள் சுகத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்துக்கொண்டு இரவு பகலாக குருவின் பாதங்களில் மூழ்கட்டும். (நிற்க)

சிறிது நேரம் கழிந்த பிறகு, பாபாவின் சிஷ்யர்களும் எல்லா கிராம மக்களும் பாபாவின் பூதவுடலை என்ன பண்ணுவது சிறப்பு என்று நிச்சயம் செய்வதற்காக கலந்து ஆலோசித்தனர்.

பெரும்பக்தரான ஸ்ரீமான் புட்டீ, நடக்கப்போகும் சம்பவத்திற்கு ஒரு நினைவுச்சின்னம் போல ஓர் அழகிய விசாலமான மாளிகையை ஏற்கெனவே கட்டியிருந்தார்.

பின்னர், பாபாவின் பூதவுடலை எங்கு அடக்கம் செய்வது என்ற விஷயம் பற்றி முப்பத்தாறு மணி நேரம் விவாதம் நடந்தது. கடைசியில், எது நடக்கவேண்டுமென்று இருந்ததோ அதுவே நடந்தது.

ஒருவர் கூறினார், "இந்துக்களை பாபாவின் உடலைத் தொடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது . முசல்மான்களின் கபரஸ்தானத்திற்கு (இடுகாட்டிற்கு ) சடங்குபூர்வமான ஊர்வலமாக எடுத்துச் சொல்வோம்."

மற்றொருவர் கூறினார், "பூதவுடல் திறந்தவெளியில் வைக்கப்படவேண்டும். ஓர் அழகிய சமாதி கட்டுவோம். அங்கேயே அது நிரந்தரமாக இருக்கட்டும்."

குஷால் சந்தும் அமீர் சக்கருங்கூட  அவ்வாறே நினைத்தனர். அனால், "இந்த சரீரத்தை வாடாவில் வையுங்கள்" என்பவையே பாபா திணறித் திணறிப் பேசிய கடைசி வார்த்தைகள்.

ராமச்சந்திர பாட்டீல் என்னவோ, மிகக் கறாராக இருந்தார். அவர் கிராம அதிகாரிகளில் ஒருவர். பாபாவிடம் பிரேமை மிகுந்த தொண்டர். அவர் கிராம மக்களிடம் சாற்றினார்.

"உங்களுடைய சிந்தனைகள் எப்படியிருந்தாலும் சரி, அவை எங்களுக்கு அடியோடு ஒப்பிதம் இல்லை. சாயியை புட்டீ வாடாவிற்கு வெளியேயோ வேறெங்குமோ கணநேரங்கூட வைத்திருக்கக்கூடாது. "

இந்துக்கள் அவர்களுடைய தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள படியும், முசல்மான்கள் அவர்களுடைய மதநெறிகளின் பிரகாரமும், எது செய்யத் தகுந்தது, எது செய்யத் தகாதது , என்பது பற்றி இரவு முழுவதும் பேசித் தீர்த்தனர்.

அங்கு, அவருடைய வீட்டில் லக்ஷ்மன் மாமா தூங்கிக்கொண்டிருந்தபோது, விடியற்காலை நேரத்தில் பாபா அவருடைய கனவில் தோன்றி அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, "சீக்கிரமாக எழுந்து வாரும்" என்று சொன்னார். -

 


 

Thursday, 23 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களையும் பக்தரல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக சாயிநாதரை இழந்தோம்! அவருடைய வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வரும்போது நம்முள் ஓர் அனுதாப அலை எழுகிறது.

மஹராஜ் பக்தர்களிடம் சொல்லியிருந்தார், "எட்டு வயது பாலகனாக மறுபடியும் என்னையே நான் மக்களிடையே வெளிப்படுத்திக்கொள்வேன்".

இது ஒரு ஞானியின் திருவாய்மொழி. யாரும் இதை விருதாவான (பயனற்ற) சொல்லாக நினைக்கக் கூடாது. சக்கரபாணியான மஹாவிஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் இவ்வாறுதான் செய்தார்.

சுந்தரமான காந்தியுடன் நான்கு சக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, சிறைச்சாலையில் , தேவகியின் எதிரில், ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வயது பாலகனாகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்.

அங்கு, அக் காலத்தில், பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதாரம்.  இங்கு, இக் காலத்தில், தீனமான பக்தர்களை உத்தாரணம் (தீங்கிலிருந்து மீட்கை - தூக்கி நிறுத்துகை) செய்வதற்காக அவதாரம். இவ்வாறிருக்கையில், நாம் சந்தேகம் பிறக்க அனுமதிப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது? ஞானிகளின் லீலைகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்லவோ!

இது ஒரு ஜென்மத்தில் ஏற்பட்ட பந்தமா என்ன? பாபாவுக்கு பக்தர்களிடம் ஏற்பட்ட பூர்வஜென்ம சம்பந்தம்; எழுபத்திரண்டு தலைமுறைகளாக ஏற்பட்ட ருணானுபந்தம், இவ்வாறு பாபா பேச்சுவாக்கில் பலரறிய சொல்லியிருக்கிறார்.

அன்புபிணைப்புகளால் இவ்விதமாகக் கட்டுண்ட மஹராஜ், சிறுபயணமாக எங்கோ சென்றிருக்கிறார்; மறுபடியும் திரும்பிவிடுவார் என்ற பூரணமான நம்பிக்கை பக்தர்களுடைய மனத்தில் இருக்கிறது.

நேருக்குநேராக தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர்.

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.

சாவடியில் குப்த (ஒளிந்த) ரூபம்; மசூதியில் பிரம்ம ரூபம்; சமாதியில் சமாதி ரூபம்; மற்றதா இடங்களிலும் சுக சொரூபம்.

ஆயினும், தற்சமயத்தில், சமர்த்த சாயி இங்கு வாசம் செய்வதற்குப் பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும், அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும், பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்கவேண்டும்.

தேவர்கள் அவர்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடுவர்.  ஞானிகளோ இருக்குமிடத்திலேயே பிரம்ம ஸ்திதியை (நிலையை) அடைந்துவிடுவர். பேரானந்தத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஞானிகளுக்குப் போவதும் வருவதும் கிடையா. 



Thursday, 16 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அறிவாளியோ மூடனோ, தம்மை அண்டியவர் அனைவரிடமும் பாபா அத்தியந்த (மிகுந்த) அன்பு செலுத்தினார். தம்முடைய ஜீவனை விட அவர்களை அதிகமாக நேசித்தார். அவர்களுக்குள் சிறிதளவும் பேதம் பார்க்கவில்லை.

அவர் மனித உருவத்தில் நடமாடிய தெய்வம். அதை மக்களுக்கு நேரிடை அனுபவமாக அளித்தார். ஆயினும், அனைவரும் அதை உணரத் தவறினார். இதற்குக் காரணம் , பாபா அவர்களிடம் காட்டிய இளகிய மனமும் பாசமும்தான்.

சிலருக்கு அவர் செல்வச்செழிப்பை அளித்தார். சிலருக்கு சந்ததியையும் சம்சார சுகங்களையும் அளித்தார். இவற்றால் பெரும்பிரம்மை அடைந்த மக்கள், ஞானத்தை பெறும் வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்.

பாபா எவரிடமாவது கேலியும் சிரிப்புமாகப் பேசினால், வேறு எவரிடமும் காட்டாத அற்புதமான அன்பைத் தம்மிடம் மட்டும்தான் பாபா காட்டுகிறார் என்றெண்ணி அந்த நபர் தலைக்கனம் கொள்வார்.

பாபா எவரிடமாவது கோபாமாகப் பேசினால்,"பாபாவுக்கு இவரைப் பிடிக்கவில்லை. பாபா நம்மையே அதிகமாக மதிக்கிறார்.  மற்றவர்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுப்பதில்லை" என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

பாபா அளித்த சலுகைகளைப் பெற நாம் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயன்றபோதிலும் , பாபா அந்த ரீதியில் கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறாக, நாம் கடமைகளை மறந்துபோய் க்ஷேமலாபமடையாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.

தெய்வீக நிகழ்ச்சியாக பர பிரம்மமே மனித உருவமேற்று நம்மருகில் வந்து நின்றது. ஆயினும் நாமோ, செய்யவேண்டிய காரியங்களை மறந்துவிட்டு அவர் செய்த வேடிக்கைகளிலும் தமாஷிலும் பிரியம் காட்டினோம்!

வந்தவுடனே பாபாவை தரிசனம் செய்வோம். மலர்களையும் பழங்களையும் சமர்ப்பணம் செய்வோம். தக்ஷிணை கேட்டால் தடுமாறுவோம்; அவ்விடத்திலிருந்து நழுவிவிடுவோம்.

எங்களுக்கு நன்மை தரும் உபதேசங்களை இதமாக அளித்தீர். ஆனால், எங்களுடைய அற்பபுத்தியையும் சிறுமையையும் கண்டு வாடித் துயருற்று சீக்கிரமாகவே உங்களுடைய நிரந்தரமான இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டீர் என்று நான் நினைக்கிறேன்.

இனிமேல் ஆத்மானந்த நிலையில் தேவரீர் மூழ்கியிருக்கும் அற்புதமான காட்சியை இக் கண்களால் காணமுடியுமா? ஆனந்தமே திரண்டுவந்தது போன்ற உருவத்தைப் பல ஜென்மங்களுக்கு காணமுடியாதவாறு இழந்துவிட்டோம்!

அந்தோ!  நம்முடைய கர்மவினையின் கொடுமைதான் என்னே! நமக்கு மிக அருகிலிருந்த சாயின் என்னும் உயிர்த்துணைவரை இழந்துவிட்டோம். நம்மிடம் காரணமேயின்றி தயை காட்டும் தெய்வம் இன்று நமக்கு அன்னியமாகிவிட்டதே!

"யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது." பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. நம் இஷ்டம்போலச் சண்டையும் சச்சரவும் செய்தோம். 



Thursday, 9 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

தேவரீர் தொண்டை வறண்டுபோகும்வரை செய்த உபதேசங்கள் எங்களுடைய உதாசீனத்தால் பிரயோஜனமில்லாமால் போனது கண்டு மனமுடைந்துபோய், காதுகளின் வழியாகக் கபாலத்திற்கு போதனை ஏற்றும் முயற்சியைக் கைவிட்டுவிட்டீரோ!

நாங்கள் செய்த அசட்டையால் எங்கள்மீது முன்பிருந்த பிரேமையை மறந்துவிட்டீரோ? அல்லது பூர்வஜென்ம சம்பந்தம் இன்றோடு முடிந்துவிட்டதோ? ஒருவேளை, உமது அன்பெனும் தெய்வீக ஊற்று வறண்டுபோய் விட்டதா என்ன?

தேவரீர் இவ்வளவு சீக்கிரமாக மறைந்து விடுவீர்கள் என்பது முன்பாகவே தெரிந்திருந்தால், எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். மக்கள் ஆரம்பத்திலிருந்தே உஷாராக இருந்திருப்பார்கள்.

ஆனால், நாங்கள் அனைவரும் சோம்பியிருந்தோம். மந்தத்திலும் உற்சாகமின்மையிலும் மூழ்கி வெறுமனே உட்கார்ந்திருந்தோம். கடைசியில் ஏமாறிப்போனோம். நாங்கள் இருத்தலும் இல்லாமலிருத்தலும் சரிசமமாகிவிட்டது.

குருத் துரோகிகளாகிய நாங்கள் எச் செயலையும் நேரத்தோடு  செய்யவில்லை.  அமைதியாக அமர்ந்திருந்தபோதிலும் ஏதாவது பலன் கிடைத்திருக்கும். நாங்கள் அதையும் செய்யவில்லலை!

நெடுந்தூரம் பயணம் செய்து ஷிர்டிக்கு போய் அங்கு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒரு புனிதத் தலத்தில் இருக்கிறோம் என்பதை அடியோடு மறந்து அங்கும் இஷ்டப்படி நடந்து கொண்டோம். 

பக்தர்கள் பலவகை - புத்திமான், பற்றுடையோன், விசுவாசமுள்ள அடியவன், தர்க்கவாதி என்று நானாவிதமாக இருந்தனர். அவர்கள் அனைவருடைய குணங்களும் தெரிந்திருந்தும் பாபா எல்லாரையும் ஒன்றாகவே பாவித்தார். அதிகம், குறைவு என்னும் பேதமே அவரிடம் இருந்ததில்லை.

உலகத்தில் கடவுளைத் தவிர வேறெதையும் அவர் காணவில்லை. கண்ணோட்டம் அவ்வாறு  இருந்ததால், அவர் தம்மைத் தனிமைப்படுத்தியோ வேறுபடுத்தியோ இரண்டாவதாகக் கருதவில்லை.

பக்தர்கள் கூட கடவுள்தான். குருவும் அவர்களிடமிருந்து வேறுபட்டவர் அல்லர். இரு  சாராரும் தங்களுடைய உண்மையான சொரூபத்தை மறந்துபோவதால், தங்களைப் பரஸ்பரம் பேதம் பிரித்துக் காண்கின்றனர்.

சிந்தித்துப்பார்த்தால் நாமும் கடவுள்தான். ஆனால், நம்முடைய உண்மையான சொரூபம் மறந்துபோகும்போது, பேதத்தின் லக்ஷணங்கள் (இயல்புகள்) தோன்றுகின்றன. அதுவே, பெரும்வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பதுபோல ஒரு சக்ரவர்த்தி கனவு காண்கிறார். ஆயினும், விழிப்பு ஏற்பட்டவுடன் தம் சுயநிலை மாறாததை உணர்கிறார்.

விழிப்பு நிலையில் செய்யும் செயல்களெல்லாம் கனவு நிலையில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், உண்மையான விழிப்பு பூரணமான அத்துவைத நிலையில் கரையும்போதுதான் ஏற்படுகிறது.


Thursday, 2 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஷீர்டி மக்கள் எல்லாரும் துக்கம் தாங்கமுடியாமல் வீதிகளிலும் சந்துகளிலுமாக நான்கு திசைகளிலும் சிதறி ஓடினர்.

ஷிர்டியின் புனிதத்திற்கு சாயியே மூலம். ஷிர்டியின் வரலாற்றுக்கும் சாயியே வேர். ஷீர்டி புனிதத் தலம் ஆனதும் சாயீயால்தான். சாயியே எல்லாருக்கும் நிழல் தந்த குடை!

சிலர் கோவென்று கதறி அழுதனர்; சிலர் பூமியில் புரண்டனர்; சிலர் மூர்ச்சையடைந்தனர்; அனைவருமே துக்கத்தால் தாக்கப்பட்டனர்.

துக்கக்கண்ணீர் கண்களிலிருந்து பெருக, ஆடவரும் பெண்டிரும் பெருந்துயரமுற்றனர். அன்னத்தையோ பானத்தையோ தொடமுடியவில்லை. அவர்களுடைய முகங்கள் பரிதாபகரமாகத் தோன்றின.

பாபா கிடந்த கோலத்தைப் பார்த்த கிராம மக்கள் சொல்லொணாத வேதனை அடைந்தனர். சிறுபிள்ளைகளிலிருந்து முதியோர்கள்வரை சமத்த பக்தர்களும் பெருங்கவலையில் மூழ்கினர்.

எங்கே இனிய உன்னதமான கதைகள் கிடைத்தனவோ, எங்கே பல வழிகளிலும் ஆனந்தம் பொங்கியதோ, எங்கே சட்டென்று நுழைந்துவிட முடியாதோ, அங்கே, அதே மசூதியில் இப்பொழுது வெற்றிடந்தான் தெரிந்தது.

ஷிர்டியில் நிலவிய சகல நித்திய லட்சுமிக்கும் நித்திய மங்களத்திற்கும் பாபாவே மூலகாரணம். ஆதலால், கிராம மக்கள் கலகலத்துப் போனது இயல்பே.

ஓ சாயிநாதரே! ஆனந்தத்தின் மூலமே! ஆனந்த தெய்வத் திருமேனியே! பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக உருவம் ஏற்றீர். அந்தச் செல்வத்தை சம்பாதித்த பிறகு, அய்யகோ! ஷிர்டியிலேயே உடலை உகுத்தீர்!

புத்திதடுமாறிப்போன எங்களுக்கு, சோர்வேதுமில்லாமல், இரவு பகல் பாராமல், 24  மணி நேரமும் எங்கள் நன்மை கருதி உபதேசங்களை அளித்தீர்.

எங்களுக்கு அளிக்கப்பட்ட அத்தனை உபதேசங்களும் கவிழ்த்து வைக்கப்பட்ட பானையின்மேல் ஊற்றப்பட்ட நீரைப் போல வீணாகிப்போயின. ஒரு துளி நீர்கூட நிலைக்கவில்லை.

"நீங்கள் யாரையாவது அவமரியாதையாகப் பேசினால் உடனே எனக்கு வலிக்கிறது" என்று ஒவ்வொரு படியிலும் எங்களுக்கு அறிவுறுத்தினீர்கள். ஆயினும், நாங்கள் தங்களுடைய வார்த்தைகளை மதிக்கவில்லை.

உங்களுடைய நல்லுபதேசங்களை கடைபிடிக்காத நாங்கள் அபராதிகள் (குற்றவாளிகள்). அவ்வாறு நாங்கள் ஆக்ஞய்க்கு பங்கம் விளைவித்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாகவோ இவ்வாறு செய்துவிட்டீர்?

பாபா, இதுதான் நாங்கள் செய்த பாவங்களின் ஒருமித்த விளைவோ! ஆயினும், இப்பொழுது இவ்வாறு வருந்துவதால் என்ன பயன்? அத்தனை தீவினைப் பலன்களையும் அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும்.

மேலும், இக் காரணத்தால்தான் தேவரீர் எங்களின்மீது சலிப்புற்றுத் திரைமறைவாகச் சென்றுவிட்டிரோ! அய்யகோ! காலன் எங்களை மரண அடியாக அடித்துவிட்டானே!

 


 

Thursday, 25 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒவ்வொரு வீட்டிலும் குழப்பம் நிலவியது; மக்கள் கூக்குரலிட்டனர்; இதயம் படபடவென்று துடிக்க இங்குமங்கும் ஓடினர்.

மஹராஜ் தேகத்தை விடுத்துவிட்டார். கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உயிருக்கே உலைவந்தது போல் உணர்ந்தனர். "இறைவா! எவ்வளவு கொடுமையான வேளை இது! இதயத்தைப் பிளக்கிறதே !" என்று மக்கள் கூவினர்.

அனைவரும் மசூதியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். சபாமண்டபம் நிரம்பி வழிந்தது. இதயத்தைப் பிளக்கும் காட்சியைக் கண்டு மக்கள் துக்கத்தால் தொண்டை அடைக்க விம்மி விம்மி அழுதனர்.

'ஷிர்டியின் வைபவம் தொலைந்துபோயிற்று!  சுக சௌபாக்கியங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்' என்று நினைத்து எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் நிரம்பியது. மக்கள் அனைவரும் தைரியம் இழந்தனர்.

அந்த மசூதியின் மஹத்துவந்தான் என்னே! முக்தி தரும் சப்தபுரிகளில் ஒன்றாகக் கருத்தப்பட்டதன்றோ ! 'துவாரகா மாயி' என்று பாபா சர்வ நிச்சயமாகப் பெயரிட்ட இடமன்றோ?

நிர்யாணமாக (கடைசிப் பயணமாக)  இருப்பினும், துவாரகா மாயியே இறையுடன் ஒன்றாகக் கலக்கக்கூடிய தலம். எவர் இறைவனை இடையறாது சிந்திக்கிறாரோ அவருக்கு அங்கு இடம் உண்டு.

காருண்யம் மிகுந்த தாயுந்தந்தையுமானவரும் , பக்கதர்களுக்கு விச்ராந்தி அளிக்கும் புகலிடமானவருமான குருராஜர், சாயீராயர், இத்தன்மை படைத்தவர்; என்றும் ஞாபகத்தில் இருப்பவர்.

பாபா இல்லாமல் ஷீர்டி பாழடைந்தது. பத்துத் திசைகளும் சூனியமாக தெரிந்தன. பிராணனை இழந்த உடல்போல் ஷீர்டி காட்சியளித்தது.

குளத்தில் நீர் வற்றிப்போகும்போது மீன்கள் துள்ளிப் புரண்டு துடிக்கும். அதுபோலவே ஷீர்டி மக்களும் துக்கத்தால் துடித்தனர்; களை இழந்தனர்.

தாமரை இல்லாத நீர்நிலையைப் போலவும், புத்திரன் இல்லாத இல்லதைப் போலவும், தீபம் இல்லாத கோயிலைப் போலவும், மசூதியும் சுற்றுப்புறமும் களையிழந்து போயின.

தலைவன் இல்லாத குடும்பத்தைப் போலவும், அரசன் இல்லாத நகரத்தைப் போலவும், செல்வம் இல்லாத கஜானா போலவும், பாபா இல்லாத ஷீர்டி வனமாகியது.

சிசுவுக்குத் தாயார் எப்படியோ, சாதகப் பறவைகளுக்கு மேகநீர் எப்படியோ, அப்படியே ஷிர்டியில் வாழ்த்த மக்களுக்கும் சகல பக்தர்களுக்கும் பாபாவின் அன்பு.

ஷீர்டி, ஹீனமும் தீனமும் அடைந்து மரணமுற்றதுபோல் ஒளியிழந்தது. நீரிலிருந்து அகற்றப்பட்ட மீன்களை போல மக்கள் வேதனையால் துடிதுடித்தனர்.

மக்களனைவரும், கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியைப் போலவும், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைப் போலவும், வழி தவறிய பசுவின் கன்றைப் போலவும் பரிதவித்தனர்.