valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday, 28 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

சுதாமனின் பதிலைக் கேட்டு சர்வ வியாபியான பகவான் ஸ்ரீகிருஷ்ணன், "ஓ, அப்படியா! எனக்கும் அம்மாதிரியே கனவொன்று வந்தது!-

"மற்றொருவருக்கு உரியதை ஒருவர் தின்று கொண்டிருந்தபொழுது, என்ன தின்கிறீர் என்று உடையவர் கேட்டார். தின்று கொண்டிருந்தவர் எரிச்சலடைந்து, 'ஆ, நான் இதைத் தின்கிறேன் - இந்த மண்ணைத் தின்கிறேன்' என்று பொய் சொன்னார். பளிச்சென்று 'அப்படியே ஆகட்டும் ' என்று பதில் வந்தது. -

"ஆனால் தாதா! இதெல்லாம் ஒரு கனவுக்கு காட்சிதான். என்னை விட்டுவிட்டு நீ எப்பொழுதாவது எதையாவது தின்பாயா? என்ன தின்கிறாய் என்று உன்னைக் கேட்டபொழுது நான் கனவு நிலையில் இருந்தேன் போலும்".

சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வருவதற்குமுன் ஸ்ரீகிருஷ்ணன் புரிந்த லீலைகளை சுதாமன் அறிந்திருந்தால், இம்மாதிரியான பெருங்குற்றத்தை செய்து அதன் விளைவாக பிற்காலத்தில் கஷ்டத்தை அனுபவித்திருக்கமாட்டான்.

இதன் விளைவு சாதாரணமாதா என்ன? இல்லவேயில்லை! அவர் கொடுமையான வறுமையில் வாட நேர்ந்தது. ஆகவே, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் தாம் மாத்திரம் தின்பவர்கள் இதை நினைவில் வைக்க வேண்டும்.

சுதாமர் ஒரு பக்தர்; ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர். ஆயினும், தார்மீக நெறியில் இருந்து சிறிது புரண்டதற்காகவே உலக வாழ்வில் வறுமையில் உழல வேண்டியதாயிற்று.

அதே சுதாமர் (குசேலர்), தம் மனைவி கஷ்டப்பட்டுச் சேகரித்த ஒரு பிடி அவளை ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தபோது, பரமாத்மா மனம் மகிழ்ந்து சுதாமாருக்கு சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளித்தார்.

இப்பொழுது, மகத்தான போதனையை உள்ளடக்கிய காதை ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள். அது ஆரம்பித்தில் விநோதமாகவும் நகைச்சுவையுள்ளதாகவும் இருப்பினும், முடிவில் சிறந்த போதனையை அளிக்கும்.

சிலருக்கு, அறநெறிப் போதனைகள் பிடிக்கும்; சிலருக்குத் தர்க்கமும் யுக்தியான வாதங்களும் பிடிக்கும்; இன்னும் சிலர் நகைச்சுவையையும் நையாண்டியையும் விரும்புவர். எல்லாருமே மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புகின்றனர் அல்லரோ?

இதுவும் ஒரு வகையில் ஹாஸ்யமும் கேலியும்தான். பிடிவாதக்காரர்களான ஒரு பெண்மணிக்கும் ஒரு பெரிய மனிதருக்கும் இடையே சாயியின் தர்பாரில் ஒரு தண்டா (சச்சரவு) எழுந்தது. கடைசியில் இந்தத் தண்டா யார் மீதும் பழி ஏற்படாதவாறு சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டது.

இக்கதை பரம சுவாரசியமானது; கேட்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பக்தையும் பக்தரையும் சச்சரவு செய்தபொழுது கேலியும் சிரிப்பும் உல்லாசமும் உச்சத்தை எட்டின.

அண்ணா சிஞ்சணிகர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட தாமோதர் கனச்யாம் பாபரே என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் இருந்தார். இவர் பாபாவிடம் எல்லையற்ற பிரேமை வைத்திருந்தார். 


Thursday, 22 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

நாம் இந்தக் காதையின் சாரமென்ன என்று சிந்திப்போம். ஐம்புலன்களில் எது ஒன்றும் பாபாவை நினைக்காமல் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கலாகாது.

மனதிற்கு இப் பாடம் ஒருமுறை புரிந்துவிட்டால், அது மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வரும். ஒவ்வொரு உலகியல் கொடுக்கல் வாங்கலிலும் சாயியின் பதங்களையே இடையறாது சிந்திக்கும்.

குணங்களுடன் கூடிய சுத்தப் பிரம்மம் கண்முன்னே தோன்றும். பக்தியையும் விரக்தியையும் முக்தியையும் மலரச் செய்து பரமபதத்தை அளிக்கும்.

கண்கள் அந்த சுந்தரமான உருவத்தை உற்றுப் பார்க்கும்பொழுது இவ்வுலக உணர்வும் பசியும் தாகமும் உருகி ஓடிவிடும். இவ்வுலக இன்பங்கள் பற்றிய உணர்வே தொலைந்துபோகும்! மனம் சாந்தத்தையும் திருப்தியையும் அனுபவிக்கும்.

நான் எவ்வளவு முயற்ச்சி செய்தாலும், ஓவி (செய்யுள்) சில சமயங்களில் என் மனத்தே தோன்ற மறுக்கிறது. ஆயினும், எந்திரத்தில் மாவு அரைக்கும்பொழுது பளிச்சென்று ஞாபகத்திற்கு வருகிறது! அதுபோலவே உடைத்த கடலைக் காதையை விவரிக்கும்பொழுது எனக்கு சுதாமரின் (குசேலர்) கதை ஞாபகத்திற்கு வருகிறது!

ஒருகாலத்தில், பலராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் சுதாமனும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் வசித்துவந்த காலத்தில், ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் விறகு சேகரித்துக்கொண்டு வரக் காட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

குருபத்தினியின் ஆணைக்கிணங்கி ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் காட்டினுள்ளே சென்றனர். அவர்கள் புறப்பட்டவுடனே சுதாமனும் அவர்களுடன் செல்லுமாறு பணிக்கப்பட்டான்.

குருபத்னி சுதாமனிடம் கொஞ்சம் உடைத்த கடலையை கொடுத்து, 'காட்டில் திரியும்பொழுது பசியாக இருந்தால் மூவரும் பகிர்ந்து உண்ணுங்கள்' என்று ஆணையிட்டு அனுப்பினார்.

பிறகு, சுதாமன் காட்டில் ஸ்ரீகிருஷ்ணனை சந்தித்தான். ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனிடம் சொன்னான், "தாதா, எனக்கு தாகமாக இருக்கிறது". சுதாமன் தன்னிடம் இருக்கும் உடைத்த கடலையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் என்ன பதில் சொன்னான் என்பதை கவனமாகக் கேளுங்கள்.

"எப்பொழுதும் காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே; மாறாக, முதலில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்". ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனுடைய துடையின் மேல் தலை வைத்து ஓய்வெடுத்தபொழுதும் சுதாமானால், "இந்த உடைத்த கடலையை கொஞ்சம் சாப்பிடு" என்று சொல்ல முடியவில்லை.

ஸ்ரீகிருஷ்ணன் சிறுதுயில் கொண்டுவிட்டான் என்று தெரிந்துகொண்டபின், சுதாமன் உடைத்த கடலையைத் தானே தின்ன ஆரம்பித்தன். ஸ்ரீகிருஷ்ணன் கேட்டான், "தாதா, நீ என்ன தின்கிறாய்? இது என்ன சத்தம்?"

"ஹே கிருஷ்ணா! இவ்விடத்தில் தின்பதற்கு என்ன இருக்கிறது. குளிரில் என்னுடைய பற்கள் நடுங்கிச் சத்தம் செய்கின்றன; அவ்வளவே! நீயே பார், என்னால் விஷ்ணு சஹஸ்ர நாமங்கூடத் தெளிவாக ஓத முடியவில்லை!"


Thursday, 15 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக சாதகன் எப்பொழுது வேண்டுமானாலும் புலன்களின்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தயார்நிலைக்கு உயர்கிறான். இதற்கான விதிகள் வேதங்களில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன; இந்நிலையில் சாதகன் உலக விஷயங்களை நியமத்துடன் அனுசரிக்கிறான்; இஷ்டம் போல் நடப்பதில்லை.

மனம் இவ்விதமாகத் தன்வயப்பட்டுவிட்டால், விஷயசுகங்கள் நசித்து போகின்றன. மாறாக, குரு வழிபாட்டில் மனம் காதல் கொள்கிறது; அதிலிருந்து சுத்த ஞானம் பிறக்கிறது.

சுத்த ஞானம் வளர வளர, 'உடலே நான்' என்னும் எண்ணம் அறுந்துபோகிறது. அதே புத்தி இப்பொழுது, 'நானே ப்ரம்மம் (முழு முதற்பொருள்)' என்னும் உணர்வில் ஆழ்ந்துவிடுகிறது. அந்நிலையில் எல்லையற்ற ஆனந்தம் துய்க்கப்படுகிறது.

மனித உடல் கணநேரத்தில் அழியக் கூடியதாக இருப்பினும், அதை வைத்துதான் பரம் புருஷார்த்தத்தை (மோட்சம்) அடைய வேண்டும். மோட்சத்தைவிட சிறந்ததான பக்தியோகத்தை அனுசரிக்க உடல் தேவைப்படுகிறது.

மனிதன் அடையவேண்டிய நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) கடந்த ஐந்தாவது பேறு பக்தி யோகம். பக்தியோகம் ஒப்பற்றது; மற்றெதுவும் அதற்கு ஈடாகாது.

குருசேவை செய்து வாழ்க்கையில் திருப்தியடைந்தவன் பக்தியும் ஞானமும் வைராக்கியமுமே தனக்கு நன்மையளிக்கும் என்ற யதார்த்தமான உண்மையை நன்கு உணர்ந்துகொள்கிறான். அவனே ஆன்மீக பாதையில் முன்னேற்றம் காண்பான்.

பாகவதத்தை (ஸ்ரீ கிருஷ்ணனின் கதையைத்) தலைகீழாகப் படித்தவனாக இருந்தாலும், குருவிற்கும் இறைவனுக்கும் இடையே வித்தியாசம் காண்பவன் இறைவனை அறிந்தவனல்லன்.

இது, இராமாயணத்தை முழுக்கப் முழுக்கப் படித்த பின்பும் சீதைக்கு இராமன் என்ன உறவு என்று கேட்பது போலாகும். 'இரண்டுண்டு' என்னும் எண்ணத்தை அழித்துவிட்டு குருவும் இறைவனும் ஒன்றே என அறிந்துகொள்ள வேண்டும்.

குருவிற்கு நிர்மலமான மனத்துடன் சேவை செய்வதன் மூலம் உலகவிஷய வாசனைகள் நிர்மூலமாகிவிடும். சித்தம் சுத்தமாகி சுயவொளியுடன் பிரகாசிக்கும். மனிதனின் நிஜமான சொரூபம் தன்னை வெளிக்காட்டும்.

ஆகவே, தாம் விரும்பியபோது, விரல்களால் சொடக்குப்போடுவது போல சுலபமாக அவரால் உடைத்த கடலைப் பருப்புகளை அங்கே தோன்ற செய்ய முடிந்தது. பார்க்கப்போனால், இதை விட அற்புதமான லீலைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

கேவலம் இந்தஜாலம் செய்பவன் தன வசீகர சக்தியால் ஓர் எலும்பை அசைத்துப் பொருள்களை சிருஷ்டி செய்வதுபோல நமக்கு காட்டி வயிறு வளர்க்கிறான்.

ஆனால், சாயிநாதரோ தனித்தன்மை வாய்ந்த விசேஷமான ஜாலவித்தைக்காரர்! ஆஹா! அவருடைய லீலைதான் எவ்வளவு அழகானது! அவர் விரும்பினால் கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணிலடங்காத உடைத்த கடலைப் பருப்புகளை உற்பத்தி செய்வார்.
 

Thursday, 8 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

கேள்வி, தொடும் உணர்வு, பார்வை, வாசனையறிதல் ஆகிய மற்ற நாணம் புலன்களின் விஷயத்திலும் கூட, நாக்கையும் உணவையும் பற்றிய பாபா செய்த போதனையே உண்மை. இன்று நேர்ந்த சூழ்நிலைக்கு எவ்வளவு பொருத்தமானவை பாபாவின் வார்த்தைகள்! என்ன அற்புதமான போதனை!

மனமும் புத்தியும் புலனுறுப்புகளும் உலக இன்பங்களை துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக.

இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்த நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வழுவிழந்து விடும்.

காமம் எழும்போது என் விஷயமாகவே காமப்படு. கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு. அபிமானத்தையும் (தேகத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராக்கிரத்தையும் (உரிமை இல்லாத இடத்து வலிய நிகழ்த்தும் செயலையும்) பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.

காமம், கோபம், தேகாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள் பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.

காலக்கிராமத்தில் ஹரி இவற்றை ஒவ்வொன்றாக அழித்துவிடுவான். இம் மூன்று விஷ அலைகளையும் (காமம், கோபம், தேகாபிமானம்) கோவிந்தன் பரிகாரம் செய்துவிடுவான்.

வேறுவிதமாகச் சொன்னால், பலாத்காரமானதும் கொடியதுமான உணர்ச்சிகள் அனைத்தும் என்னுடைய சொரூபத்தில் லயமாகிவிடும். (கலந்துவிடும்) என்னுடைய பாதங்களில் இளைப்பாறி என்னுடன் ஒன்றாகிவிடும்.

இம்மாதிரியாக அப்பியாசம் (பயிற்சி) செய்துவந்தால், மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும். காலகிராமத்தில் வேருடன் அறுக்கப்படும். மனம் வேகங்களிலிருந்து விடுபட்டு விடும்.

குரு நிரந்தரமாகவே தன்னுடைய அருகில் இருக்கிறார் என்று மனம் ஆழமாக நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு, மேற்சொன்ன அவலங்கள் அதை பாதியா.

இந்த நல்லொழுக்கம் வேர்விட்ட பிறகு, உலக வாழ்வின் பந்தங்கள் நசித்துவிடும். குரு உலக விஷயங்கள் அனைத்திலும் தோன்றுகிறார்; வேறுவிதமாக சொன்னால், ஒவ்வொரு உலகவிஷயமும் குருவின் உருவத்தை அனைத்து கொள்கிறது.

புலனின்பம் துய்க்க வேண்டும் என்கிற சிறிய ஆசை தோன்றும்போதே, பாபா நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம், அந்த இன்பம் துய்ப்பதற்கு தகுதியுடையதா, தகுதியற்றதா என்கிற கேள்வியை மனதில் எழுப்பும்.

தகுதியற்றதும் பொருந்தாதுமான உலகவிஷயம் சகஜமாகவே நிராகரிக்கப்படும். கெட்ட பழக்கமுள்ளவன் அதிலிருந்து விடுபடுகிறான். நன்மையளிக்காத விஷயங்களில் இருந்து திரும்ப திரும்ப வெளியேறும் அப்பியாசத்தினால், மனம் தனக்கு ஒவ்வாத உலகவிஷயங்களையும் சுகங்களையும் வெறுக்க ஆரம்பிக்கும். 


Thursday, 1 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஒருவருக்கு கிடைத்ததை முழுவதும் அவரே தின்றுவிடுவது நற்செயல் ஆகாது. ஆயினும் எனக்கு இவருடைய கேட்ட பழக்கம் தெரியும். இந்த உடைத்த கடலைப் பருப்புகளே அதற்குச் சாட்சி. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?"

நான் பதில் கூறினேன், "மற்றவர்களோடு பகிர்ந்துண்ணாமல் நான் மாத்திரம் உண்பதென்பதை நான் அறியேன் அய்யனே! இவ்வாறிருக்கும் போது கெட்ட பழக்கத்தைப் பற்றிய பேச்சு எவ்வாறு எழும்? யார் எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்தக் கெட்ட பழக்கம் என்னை அணுகாது-

"பாபா, இந்நாள்வரை நான் ஷீர்டி சந்தையைப் பார்த்ததே இல்லை. நான் அங்கே சென்றால்தானே உடைத்த கடலை வாங்க முடியும்? தின்பதென்பது அதன்பிறகே அன்றோ!-

"தனிமையில் எல்லாவற்றையும் தாமே உன்ன விருப்பமுள்ளவர்கள் அவ்வாறே செய்யட்டும்! எண்ணெய் பொறுத்தவரை எனக்கு அந்தக் கெட்ட பழக்கம் இல்லை. கொஞ்சமாவது மற்றவர்களுக்கு கொடுக்காமல் நான் என் வாயில் எதையும் போடுவதில்லை."

பாபா தம் பக்தனுடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்படித் தமது சாமர்த்தியமான யுக்தியினால் உறுதிப்படுத்தினார் என்று பாருங்கள். என்னுடைய தெளிவானதும் கபடமற்றதுமான வார்த்தைகளை கேட்டபிறகு, பாபா என்ன கூறினார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.

"அருகில் இருப்பவனுக்கு நீர் கொடுப்பீர்; உண்மைதான். யாரும் அருகில் இல்லையென்றால் நீர்தான் என்ன செய்ய முடியும்? நானுந்தான் அந்த நிலையில் என்ன செய்ய முடியும்? ஆனால், நீ என்னை அந் நேரத்தில் நினைக்கிறீரோ?-

"நான் உமது அருகில் இல்லையா? எனக்கு ஒரு கவளமாவது அளிக்கிறீரா?" இந்தத் தத்துவத்தை எங்கள் மனதில் உறுதியாக ஏற்றுவதற்க்காகவே உடைத்த கடலைச் சாக்குபோக்கு உபயோகிக்கப்பட்டது.

தெய்வங்களையும், புலனுறுப்புகளையும் காக்கும் தேவதைகளையும், பஞ்சாக்கினிகளையும், பஞ்ச பிராணன்களையும், வைச்வதேவர்களையும், உணவு நேரத்தில் வரும் அதிதையும் ஏமாற்றிவிட்டு, ஊனை வளர்ப்பதற்காக தான் மட்டும் உண்ணும் அன்னம் பெரும் நிந்தனைக்குரியது.

இந்தத் தத்துவம் மேலெழுந்தவாரியாக பார்க்கையில் முக்கியமில்லாததுபோல் தோன்றலாம். ஆயினும், நடைமுறை வாழ்க்கையில் மிக்க மகத்துவம் வாய்ந்தது. உணவைச் சுவைப்பது பற்றி சொல்லப்பட்ட இவ் விதிமுழுமையின் ஒரு பகுதியே. இந்த விதி ஐந்து புலன்களுக்குமே பொருந்தும்.

புலனின்பங்களின் பின்னால் ஓடுபவன் ஆன்மீக முன்னேற்றம் காணவே முடியாது. புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனுக்கு ஆன்மீக முன்னேற்றம் அடிமையாகும்.

வேதமந்திரங்கள் சாற்றிய கருத்தைத்தான் பாபா கேலியையும் நகைச்சுவையையும் உபயோகித்து திடப்படுத்தினார். அதாவது, "எல்லாப் புலன்களும் உறைந்துபோன நிலையில் மனம் அமைதியாக இருந்து புத்தியும் சலனமில்லாமல் இருக்கும் நிலையே உயர்ந்த நிலை என்பது ஞானியாரின் கருத்து" (கடோபநிஷதம்)

Thursday, 22 February 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

காகா சாகேப் தீக்ஷிதரும் அதற்காகவே அங்கு அமர்ந்திருந்தார். திடீரென்று மாதவ்ராவ் சிரித்தார். "என்ன, அண்ணாசாஹேப்! இங்கு ஒட்டிக்கொண்டிருக்கும் தானியங்கள் எங்கிருந்து வந்தன?"

இவ்வாறு கேட்டுக்கொண்டே மாதவ்ராவ் என்னுடைய கோட்டின் மடிப்புகளை விரலால் தொட்டார். ஆஹா! அங்கு உடைத்த கடலைப் பருப்புகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

அது என்னவென்று பார்க்க நான் முழங்கையை நீட்டியபோது சில உடைத்த கடலைப் பருப்புகள் உருண்டோடியதையும் சுற்றியிருந்தவர்கள் அவற்றை பொறுக்கியதையும் பார்த்தேன்.

கவனத்துடன் பொறுக்கியெடுத்து ஒன்று சேர்க்கப்பட்ட போது சுமார் 25  பருப்புகள் இருந்தன. அதுவே அந்த நேரத்தில் தமாஷ் செய்யவும் என்னை நையாண்டி செய்யவும் காரணமாக அமைந்தது! ஆனால், இது எவ்விதம் நிகழந்தது?

ஊகத்திற்கு மேல் ஊகம் தொடர்ந்தது. ஒவ்வொருவரும் தம்முடைய எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தனர். அந்த உடைத்த கடலைப் பருப்புகள் கோட்டில் ஒட்டிக் கொண்டிருந்தது எல்லாரையுமே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

அந்தக் காக்கிக் கோட்டில் எத்தனை மடிப்புகள்தாம் இருந்திருக்க முடியும்? உடைத்த கடலைப் பருப்புகளை மடிப்புகள் எப்படி அடக்கி வைத்திருக்க முடியும்? முதலாவதாக, அங்கு எப்படி, எவ்விதமாக, உடைத்த கடலை வந்திருக்க முடியும்? யாருக்குமே இது தெளிவாக விளங்கவில்லை!

மனதளவில் நான் நாமஜபத்தில் மூழ்கிக் கைகளால் பாதசேவை செய்துகொண்டிருந்தபோது, நடுவில் இந்த உடைத்த கடலைக் கதை எங்கிருந்து முளைத்தது?

மேலும் இவ்வளவு நேரம் நான் பாபாவின் பாதங்களை பிடித்து விட்டு கொண்டிருந்தபோது உடைத்த கடலைப் பருப்புகள் ஏன் உருண்டோட வில்லை? அவ்வவளாக நேரமாக அவை கோட்டிலேயே ஒட்டிக் கொண்டிருந்தன என்பது எல்லாருடைய மனதிலும் ஆச்சரியத்தை விளைவித்தது.

உடைத்த கடலைப்பருப்புகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றியும் கோட்டு மடிப்பில் எப்படி இவ்வளவு நேரம் பதுங்கி இருந்தன என்பது பற்றியும் எல்லாரும் தலையை பிய்த்துக்கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தபோது பாபா என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

அநேக மக்களுக்கு அநேக விதமாகவும் விசித்திரமாகவும் போதனையளிக்கும் வழிமுறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொருவருக்கும் அவருடைய தகுதிக்கேற்றவாறு பாபா போதனை அளித்தார்.

சாயி மஹாராஜினுடைய போதனை முறைகள் அபூர்வமானவை. போதனை முறை மிக சுவாரஸ்யமாக இருந்ததால், மனதில் நிலைத்தது. இம்மாதிரியான போதனை முறைகளை நான் வேறெங்கும் பார்த்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது.

பாபா சொன்னார், "இந்த மனிதருக்கு தின்பண்டங்களை முழுக்கத் தாமே தின்றுவிடும் கெட்டபழக்கம் இருக்கிறது. இன்று சந்தை நாளாக இருப்பதை நன்கு சாதகப்படுத்திக் கொண்டு உடைத்த கடலையை பேராவலுடன் தின்றுகொண்டே விசாரமேதுமின்றி இங்கு வந்திருக்கிறார்.-


Thursday, 15 February 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

மேலும், இவ்வுடல் சாசுவதமாக இருக்கும் என்று ஒரு கணமும் நினைப்பதற்கில்லை. ஆகவே, இக் கதையின் இனிமையைச் சுவைக்குமாறு நான் உங்களை இரு கைகளையும் கூப்பி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருமே தமாஷையும் கேலியையும் விரும்புவர். ஆயினும், அனைவருக்கும் நன்மையளிக்குமாறு, கேலியாலும் ஹாஸ்யத்தாலும் தம்முடைய உபதேசத்தை பக்தர்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்த பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக ரீதிக்கு அப்பாற்பட்டவையல்லவா!

யாருமே தமாஷைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். பாபாவின் தமாஷை அனைவரும் விரும்பினர்; தங்களுடைய வாய்ப்பு எப்பொழுது வரும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

தாங்கள் கேலிக்கு இலக்காவதை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை. ஆனால், பாபா தமாஷ் செய்வதை பக்தர்கள் பெரிதும் விரும்பினர். விகடத்துடன் அபிநயமும் சேர்ந்துகொண்டபோது எதிர்பார்த்த விளைவு உடனே ஏற்பட்டது.

பாபாவினுடைய விகடமும் கேலியும் பிரயாசையின்றி சகஜமாகவும் புதினமாகவும் வெளிப்பட்டது. புன்னகை தவழும் முகமும் கண்களில் விளையாடிய பாவமும் தமாஷின் சுவையைப் பன்மடங்காகக்கின. அச்சுவையை வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.

போதனையும் புதினமும் நிரம்பிய அனுபவமொன்றைச் சொல்கிறேன், கேளுங்கள். நையாண்டியும் தமாஷுமாக வெளிவந்து, சிறந்த ஆன்மீக போதனை அளித்த திருவாய் மொழியைக் கேளுங்கள்.

ஷிர்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வாரச்சந்தை பெரியதாக கூடும். மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வாங்குவதும் விற்பதுமான நடவடிக்கை மும்முரமாக நடக்கும்.

சாலையின் இருபுறங்களிலும் காய்கறிகளும் கீரைவகைகளும் அம்பாரமாகக் கொட்டி விற்கப்படும். சாளை சந்திப்புகளில் எண்ணெய், வெற்றிலை, பாகு, புகையிலை இன்னோரன்ன பிற பொருள்களை விற்கும் அநேக வியாபாரிகள் உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய்வர்.

இம்மாதிரியான ஞாயிற்றுக்கிழமை ஒன்றில், பிற்பகல் நேரத்தில், நான் பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நூதனமான நிகழ்ச்சி ஏற்பட்டது!

எப்பொழுதுமே பிற்பகல் நேரத்தில் பாபாவினுடைய தர்பாரில் கூட்டம் அதிகமாக இருக்கும். போதாதற்கு அன்று ஞாயிற்றுக்கிழமை, சந்தை நாள் வேறு. ஏகப்பட்ட ஜனங்கள் மசூதியில் குழுமியிருந்தனர்.

நான் பாபாவினுடைய வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அவரை நோக்கியவாறு தலையைக் குனிந்துகொண்டு அவருடைய பாதங்களை பிடித்துக்கொண்டு மனதுக்குள்ளேயே நாமஜபம் செய்துகொண்டிருந்தேன்.

மாதவ்ராவ் பாபாவுக்கு இடப்பக்கத்திலும் வாமன்ராவ் பாபாவுக்கு வலப்பக்கத்திலும் இருந்தனர். ஸ்ரீமான் கோபால் ராவ் புட்டியும் அங்கே பாதசேவை செய்வதற்கு தம்முடைய வாய்ப்பு வருவதற்குக் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.