valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 22 February 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

காகா சாகேப் தீக்ஷிதரும் அதற்காகவே அங்கு அமர்ந்திருந்தார். திடீரென்று மாதவ்ராவ் சிரித்தார். "என்ன, அண்ணாசாஹேப்! இங்கு ஒட்டிக்கொண்டிருக்கும் தானியங்கள் எங்கிருந்து வந்தன?"

இவ்வாறு கேட்டுக்கொண்டே மாதவ்ராவ் என்னுடைய கோட்டின் மடிப்புகளை விரலால் தொட்டார். ஆஹா! அங்கு உடைத்த கடலைப் பருப்புகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

அது என்னவென்று பார்க்க நான் முழங்கையை நீட்டியபோது சில உடைத்த கடலைப் பருப்புகள் உருண்டோடியதையும் சுற்றியிருந்தவர்கள் அவற்றை பொறுக்கியதையும் பார்த்தேன்.

கவனத்துடன் பொறுக்கியெடுத்து ஒன்று சேர்க்கப்பட்ட போது சுமார் 25  பருப்புகள் இருந்தன. அதுவே அந்த நேரத்தில் தமாஷ் செய்யவும் என்னை நையாண்டி செய்யவும் காரணமாக அமைந்தது! ஆனால், இது எவ்விதம் நிகழந்தது?

ஊகத்திற்கு மேல் ஊகம் தொடர்ந்தது. ஒவ்வொருவரும் தம்முடைய எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தனர். அந்த உடைத்த கடலைப் பருப்புகள் கோட்டில் ஒட்டிக் கொண்டிருந்தது எல்லாரையுமே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

அந்தக் காக்கிக் கோட்டில் எத்தனை மடிப்புகள்தாம் இருந்திருக்க முடியும்? உடைத்த கடலைப் பருப்புகளை மடிப்புகள் எப்படி அடக்கி வைத்திருக்க முடியும்? முதலாவதாக, அங்கு எப்படி, எவ்விதமாக, உடைத்த கடலை வந்திருக்க முடியும்? யாருக்குமே இது தெளிவாக விளங்கவில்லை!

மனதளவில் நான் நாமஜபத்தில் மூழ்கிக் கைகளால் பாதசேவை செய்துகொண்டிருந்தபோது, நடுவில் இந்த உடைத்த கடலைக் கதை எங்கிருந்து முளைத்தது?

மேலும் இவ்வளவு நேரம் நான் பாபாவின் பாதங்களை பிடித்து விட்டு கொண்டிருந்தபோது உடைத்த கடலைப் பருப்புகள் ஏன் உருண்டோட வில்லை? அவ்வவளாக நேரமாக அவை கோட்டிலேயே ஒட்டிக் கொண்டிருந்தன என்பது எல்லாருடைய மனதிலும் ஆச்சரியத்தை விளைவித்தது.

உடைத்த கடலைப்பருப்புகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றியும் கோட்டு மடிப்பில் எப்படி இவ்வளவு நேரம் பதுங்கி இருந்தன என்பது பற்றியும் எல்லாரும் தலையை பிய்த்துக்கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தபோது பாபா என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

அநேக மக்களுக்கு அநேக விதமாகவும் விசித்திரமாகவும் போதனையளிக்கும் வழிமுறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொருவருக்கும் அவருடைய தகுதிக்கேற்றவாறு பாபா போதனை அளித்தார்.

சாயி மஹாராஜினுடைய போதனை முறைகள் அபூர்வமானவை. போதனை முறை மிக சுவாரஸ்யமாக இருந்ததால், மனதில் நிலைத்தது. இம்மாதிரியான போதனை முறைகளை நான் வேறெங்கும் பார்த்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது.

பாபா சொன்னார், "இந்த மனிதருக்கு தின்பண்டங்களை முழுக்கத் தாமே தின்றுவிடும் கெட்டபழக்கம் இருக்கிறது. இன்று சந்தை நாளாக இருப்பதை நன்கு சாதகப்படுத்திக் கொண்டு உடைத்த கடலையை பேராவலுடன் தின்றுகொண்டே விசாரமேதுமின்றி இங்கு வந்திருக்கிறார்.-


Thursday, 15 February 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

மேலும், இவ்வுடல் சாசுவதமாக இருக்கும் என்று ஒரு கணமும் நினைப்பதற்கில்லை. ஆகவே, இக் கதையின் இனிமையைச் சுவைக்குமாறு நான் உங்களை இரு கைகளையும் கூப்பி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருமே தமாஷையும் கேலியையும் விரும்புவர். ஆயினும், அனைவருக்கும் நன்மையளிக்குமாறு, கேலியாலும் ஹாஸ்யத்தாலும் தம்முடைய உபதேசத்தை பக்தர்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்த பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக ரீதிக்கு அப்பாற்பட்டவையல்லவா!

யாருமே தமாஷைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். பாபாவின் தமாஷை அனைவரும் விரும்பினர்; தங்களுடைய வாய்ப்பு எப்பொழுது வரும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

தாங்கள் கேலிக்கு இலக்காவதை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை. ஆனால், பாபா தமாஷ் செய்வதை பக்தர்கள் பெரிதும் விரும்பினர். விகடத்துடன் அபிநயமும் சேர்ந்துகொண்டபோது எதிர்பார்த்த விளைவு உடனே ஏற்பட்டது.

பாபாவினுடைய விகடமும் கேலியும் பிரயாசையின்றி சகஜமாகவும் புதினமாகவும் வெளிப்பட்டது. புன்னகை தவழும் முகமும் கண்களில் விளையாடிய பாவமும் தமாஷின் சுவையைப் பன்மடங்காகக்கின. அச்சுவையை வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.

போதனையும் புதினமும் நிரம்பிய அனுபவமொன்றைச் சொல்கிறேன், கேளுங்கள். நையாண்டியும் தமாஷுமாக வெளிவந்து, சிறந்த ஆன்மீக போதனை அளித்த திருவாய் மொழியைக் கேளுங்கள்.

ஷிர்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வாரச்சந்தை பெரியதாக கூடும். மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வாங்குவதும் விற்பதுமான நடவடிக்கை மும்முரமாக நடக்கும்.

சாலையின் இருபுறங்களிலும் காய்கறிகளும் கீரைவகைகளும் அம்பாரமாகக் கொட்டி விற்கப்படும். சாளை சந்திப்புகளில் எண்ணெய், வெற்றிலை, பாகு, புகையிலை இன்னோரன்ன பிற பொருள்களை விற்கும் அநேக வியாபாரிகள் உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய்வர்.

இம்மாதிரியான ஞாயிற்றுக்கிழமை ஒன்றில், பிற்பகல் நேரத்தில், நான் பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நூதனமான நிகழ்ச்சி ஏற்பட்டது!

எப்பொழுதுமே பிற்பகல் நேரத்தில் பாபாவினுடைய தர்பாரில் கூட்டம் அதிகமாக இருக்கும். போதாதற்கு அன்று ஞாயிற்றுக்கிழமை, சந்தை நாள் வேறு. ஏகப்பட்ட ஜனங்கள் மசூதியில் குழுமியிருந்தனர்.

நான் பாபாவினுடைய வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அவரை நோக்கியவாறு தலையைக் குனிந்துகொண்டு அவருடைய பாதங்களை பிடித்துக்கொண்டு மனதுக்குள்ளேயே நாமஜபம் செய்துகொண்டிருந்தேன்.

மாதவ்ராவ் பாபாவுக்கு இடப்பக்கத்திலும் வாமன்ராவ் பாபாவுக்கு வலப்பக்கத்திலும் இருந்தனர். ஸ்ரீமான் கோபால் ராவ் புட்டியும் அங்கே பாதசேவை செய்வதற்கு தம்முடைய வாய்ப்பு வருவதற்குக் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். 


Thursday, 8 February 2018

                                                     ஷீர்டி சாயி சத்சரிதம்

                                      24 . ஒளி வீசும் நகைச்சுவை உணர்வு

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதருக்கும் பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தின் இறுதியில் கூறியவாறு, கருணைக்கு கடலான சாயி நாத குரு கேலியும் ஹாஸ்யமும் (நகைச்சுவையும்) செய்வதன் மூலமாக எவ்வாறு போதனையளித்தார் என்பதை இப்பொழுது விவரமாக சொல்கிறேன்; கேளுங்கள்.

'நான் சொல்லப்போகிறேன்' என்று விளம்புவதே அஹங்காரம்தான். குருபாதங்களில் அஹங்காரம் அற்றவனாக இருக்க வேண்டும். கதை அப்பொழுதுதான், கேட்பவர்களின் இதயத்தை தொடும் சக்தி பெரும். பய பக்தியுடன் கதையைக் கேளுங்கள்.

சாதுக்களும் ஆன்றோர்களும் மஹாபுருஷர்களும் எப்பொழுதுமே தூயவர்கள்; குற்றமற்றவர்கள். நிர்மலமான, மேகமற்ற ஆகாயத்தை போன்று சுத்தமானவர்கள்; தோஷமற்றவர்கள்.

சாயி மஹாராஜின் பூக்களை பாடுவது இகத்திலும் பரத்திலும் நன்மை பயக்க கூடிய சாதனையாகும். 'நான் யார்' எனும் சிந்தனை செழிக்கும்; மனம் ஒருமுகப்படும்.

ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமென்று நினைப்பவர் இக் கதைகளை பயபக்தியுடன் கேட்கவேண்டும். வேறு முயற்சி ஏதுமில்லாமலேயே அவர் பரமானந்தத்தை அனுபவிப்பார்; வாழ்க்கையை அர்த்தமுடையதாக உணர்வார்.

கதை கேட்பவர் மன அமைதி பெறுவார்; உலக வாழ்வுபற்றிய பிராந்தி (ஆதாரமில்லாத மனக்கலக்கம்) விலகும்; பரமானந்த மெய்துவார்; நற்கதி சிரமமின்றி கிடைக்கும்.

பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் சமர்த்த சாயி மனக்கண்ணால் அறிவார். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார்.

சமர்த்த சாயி என் புத்தியை தூண்டிவிட்டு அவருடைய வார்த்தைகளை என்னைச் சொல்ல வைக்கிறார். உலகியலாகவும் ஆன்மீகமாகவும் சாதனைகள் புரியவல்ல அவருடய செய்தியின் சாரத்தை என்னுடைய முழுத்திறமையையும் உபயோகித்துச் சொல்கிறேன்.

மக்கள் எவரும் குருடல்லர்; அவர்களுக்கு மாலைக்கண் நோயும் இல்லை. 'தேகமே நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பவரும் தமக்கு எது நன்மையளிக்கும் என்று அறிந்துகொள்ளாதவரும் கண்ணிருந்தும் குருடர் அல்லரோ? 


Thursday, 1 February 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

சத் குருவிடம் சரணடைந்தவர்கள் அவருடன் ஒன்றி விடுவர். உப்புப் பொம்மை சமுத்திரத்தில் குளிக்கச் சென்றால் திரும்பி வருமோ!

ஜீவாத்மா உலககத்தின் சுக துக்கங்களை அனுபவிக்கிறது. உலக போகத்தை அளிப்பவன் இறைவனே ஆயினும், மோட்சத்தை அளிக்க வல்லவர் சத் குருவே. அவரே ஆத்மாக்களை ஒன்றுபடுத்தும் சக்தியின் களஞ்சியம்.

ஒரே சமயத்தில் சகலவிதமான சிருஷ்டிகளையும் பார்க்கக் கூடிய தெய்வ திருஷ்டியை (பார்வையைக்) கிருபை ஏற்படும்போது குரு வழங்குவார்.

ஹேமாட் சாயியை சரணடைகிறேன்; தேகாபிமானத்தை சாயி பாதங்களில் ஒப்படைத்து விடுகிறேன். எப்பொழுதும் என்னை மனவொன்றிப்பு உடையவனாகவும் ஆசைகளில் இருந்து விடுபட்டவனாகவும் வைத்திருக்கும்படி இதயபூர்வமாக பிரார்த்திக்கிறேன். 

அடுத்த இரண்டு அத்தியாயங்களில் சாயி மஹராஜ் ஹாஸ்யமும் பரிஹாசமும் நிரம்பிய விருந்தை அளிப்பார். அவருடைய அற்புதமான லீலைகளை கேளுங்கள்.

லீலைகள், மேலெழுந்த பார்வைக்கு விநோதமாகவும் நகைச்சுவை மிகுந்ததாகவும் தெரிந்தாலும், சிறந்த போதனை அளிக்கக் கூடியவை. பாவமுள்ள பக்தர் கவனத்துடன் அதை பாராயணம் செய்தால் பரம சுகங்களை அடைவர்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் ! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'பக்தர்களின் பால் லீலைகள்' என்னும் இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றும்.

                         ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                  சுபம் உண்டாகட்டும்.  


Thursday, 18 January 2018

ஷீர்டி சாயி சத் சரிதம்

குரு என்ன விரும்புகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அவர் வாய்திறந்து சொல்வதற்கு முன்பே சேவையை ஆரம்பித்துச் செய்பவனை உத்தம சிஷ்யன் என்று அறிக.

குருவின் ஆணையை அட்சர சுத்தமாகத் தெரிந்துகொண்டு, காலங்கடத்தாது உடனே சேவையில் ஈடுபடுபவனை மத்திம சிஷ்யன் என்று அறிக.

குரு திரும்ப திரும்பச் சொன்னபிறகும், செய்கிறேன், செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, ஒவ்வொரு படியிலும் தடுக்கி விழுபவனை அதம சிஷ்யன் என்று அறிக.

பரம வைராக்கியம் (ஆசையற்ற நிலை) மனத்துள்ளே இல்லை; எது நித்தியம் (சாசுவதம்), எது அநித்தியம் என்னும் விவேகமும் இல்லை. இம் மனிதருக்கு ஜென்மம் முழுவதும் தேடினாலும் குருவின் அருள் எப்படிக் கிடைக்கும்?

குருவின் பாதங்களில் நிரந்தரமாக மனதை இருத்தியவரின் இச்சைகளை  இறைவன் பூர்த்திசெய்கிறான். பராத்பரன் (பரமேஸ்வரன்) அவரைச் சலனமில்லாத வராகவும் ஆசைகளில் இருந்து விடுபட்டவராகவும் மாற்றிவிடுகிறான்.

சிரத்தை நிர்மலமாகவும் பலமாகவும் இருக்க வேண்டும். கூடவே பிரக்ஞய்யின் (உள்ளுணர்வின்) பலமும் வேணும். இவை இரண்டுடன் சபூரியும் (ஆடாத, அசையாத தீரமும்) சேர வேண்டும். ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவது உறுதி.

மூச்சையடக்கும் முயற்சி இங்கே தேவையில்லை. பிராணாயாமம், ஹடயோகம், சமாதி நிலை, உலகவுணர்வுக்குத் திரும்புதல், இதெல்லாம் நம்மால் முடியாத காரியம்.

சிஷ்யன் என்னும் பூமி தயாரானவுடன் குருவின் இடமிருந்து விதையைப் பெற்றுக் கொள்ள அதிக நாள்கள் ஆவதில்லை. ஏனெனில், குரு அனுக்கிரஹம் செய்வதெற்கென்றே ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

உருவத்தோடு கூடிய இறைவனின் பிரதட்சயமான காட்சியை உணமையான பக்தர்களே காண முடியும். பாவனை உள்ளவர்களுக்கே பக்தி பொங்கும்; மற்றவர்கள் நடிப்பு யுக்தியைத்தான் கையாள வேண்டும்!.

பாபா பிறகு காகவிடம் சொன்னார், "இந்தக் குடுவை நீரைக் கையில் வைத்துக்கொள்ளும். நான் இப்பொழுது ஹலால் செய்து ஆட்டிற்கு நற்கதியளிக்கிறேன்".

ஆட்டுக்கடா மரணத்தருவாயில் இருந்தது. பக்கீர் பாபாவுக்கு (படே பாபாவுக்கு ) சமயோசிதமான யோசனை ஒன்று தோன்றியது. அருகில் ஒரு தகியா (பக்கீர்கள் ஓய்வெடுக்கும் இடம்) இருந்தது.

ஆகவே, அவர், 'ஆட்டை தகியாவில் பலியிடலாமா?' என்று பாபாவை யோசனை கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்றபின், ஆட்டைத் தகியாவுக்கு கொண்டுபோகும் முயற்சியில் அவ்விடத்தில் இருந்து நடத்தியபோது ஆடு இயற்கையாகவே மரணமடைந்தது.

ஆடு மரணமடைவது தவிர்க்க முடியாதது என்பது சகலருக்கும் தெரிந்திருந்தது. ஆயினும் அந்த வேளையை உபயோகித்து பாபா ஒரு லீலை புரிந்தார். 


Thursday, 11 January 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"எங்களுக்கு ஒன்றுதான் தெரியும். எந்நேரமும் தங்களுடைய நாமத்தை மனத்தில் இருத்துதல், தங்களுடைய தெய்வீகமான தோற்றத்தை கண்களில் நிலைபெறச் செய்தல், இரவு பகலாகத் தங்களுடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் (ஆகியவையே)-

"ஹிம்சையோ அஹிம்சையோ உங்களுக்குத் தெரியாது; ஏனெனில் சத்தகுருவின் பாதங்களே எங்களுக்குத் தாரகம். ஆணை எதற்காக என்று கேட்பதறியோம்; அதன்படி நடக்கவேண்டியதே எங்களுடைய கடமை. -

"குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலை, செய்யத்தகாத செயலா, இது இஷ்டமா, அனிஷ்டமா (பிரியமற்றதா) என்றெல்லாம் கேள்வி எழுப்பும் சிஷ்யன் கடமையில் இருந்து வீழ்ந்தவன் என்றே நான் அறிகிறேன். -

"குருவின் ஆணையை மீறுவது என்பது ஒரு ஜீவனின் வீழ்ந்த நிலையாகும். ஆணையை நிறைவேற்றுவது தருமசாஸ்திரத்தின் வழியில் ஒழுகுவதாகும். -

"குருபாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; பிராணன் இருந்தாலென்ன, போனாலென்ன? எங்களுக்கு குருவின் ஆணையே பிரமாணம். பரிணாமமாக ஏற்படப் போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார்!

"எங்களுக்கு அர்த்தம் எது, அனர்த்தம் எதுவெனத் தெரியாது. அதுபோலவே, நமக்கு எது நன்மை, பிறருக்கு எது நன்மை என்பதும் தெரியாது. குருவின் காரியார்த்தமாகச் செயல்படவே தெரியும். எங்களை பொறுத்தவரை அதுவே ஆன்மீக லாபம்.

"குருவசனத்தின் எதிரில் விதிமுறைகளும் விலக்குகளும் தடைகளும் வியர்த்தமாக போகின்றன. சிஷ்யனுடைய லட்சியம் குரு ஏவிய பணியைச் செய்வதே; அதனால், ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் குருமாதாவினுடையது."-

"நாங்கள் தங்களுடைய ஆணைக்கு அடிமைகள். யோக்கியமான செயலா, அயோக்கியமான செயலா என்று கேள்வி எழுப்ப மாட்டோம். தேவையானால் உயிரையும் கொடுத்து குருவின் ஏவலை நிறைவேற்றுவோம் ".

சுபாவத்தில் தயை மிகுந்த இதயம் திடீரென கல்லாகிறது! ஒரு முஸ்லீம் செய்ய விரும்பாத செயலை, பிராமணர் ஒருவர் செய்யத் தயாராக இருக்கின்றார்.!

கேட்பவர்கள் நம்புவதற்கு தயங்கும் விஷயம் இது. ஆனால், இந்தப் பரம இரகசியம் குருவினுடையது; ஒருமுறை குருவசனத்திற்கு அடிமை செய்யுங்கள்; இந்த இரகசியம் பளிச்சென்று விளங்கிவிடும்.

பக்தன் ஒருமுறை பூரண விசுவாசத்துடன் குருவின் பாதங்களில் புகலிடம் தேடி தன்னை ஏற்றுக் காப்பாற்றும்படி வேண்டினால், குரு அவனுடைய பாரத்தை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு அவன் செய்ய வேண்டியது ஏதுமில்லை.

எல்லாவற்றையும் குருவின் பாதங்களில் சமர்பித்துவிட்டவர்க்கு பயமென்பதே இல்லை. குரு அவருக்குத் தன்னம்பிக்கையை அளித்து அக்கறை சேர்ப்பார்.

சிஷ்யர்கள் மூன்று வகைப்படுவர்; உத்தமர், மத்திமர், அதமர். ஒவ்வொரு  வகையினரையும் சுருக்கமாக விவரிக்கிறேன். 


Thursday, 4 January 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

உலகின் உத்தமர்கள் செயல்புரிவதில் இந்திரனுடைய வஜ்ராயுதத்தை விட உறுதியானவர்கள்; இதயத்திலோ மலரினும் மென்மையானவர்கள்!

வெட்டுவதற்காக ஓங்கிய ஆயுதத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காகா கேட்டார், "பாபா, ஒரே ஒரு முறை கேட்கிறேன்; இந்த ஆட்டை வெட்டி விடட்டுமா?"

இன்னல் படுபவர்களையும் எளியவர்களையும் காப்பதற்குண்டான இவ்வாயுதத்தை நிரபராதியான ஆட்டைக் கொல்லவா உபயோகிக்க வேண்டும்? மறுபக்கம் பார்த்தால், குருசேவையில் உயிரையே வைத்திருக்கிறோமே? சிறிய சந்தேகம் எழுவது இயற்கையன்றோ!

ஆட்டை வெட்டும் செயலை எவ்வளவு சீக்கிரமாகச் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செய்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பினும், திடீரென்று அவருடைய மனம் உருகி, ஆயுதத்தை பிடித்துக்கொண்டிருந்த காய் நடுங்கிப் பின் வாங்கியது; மறுபடியும் முன்னேற மறுத்தது!

"ஹும்! வெட்டும்! ஏன் தயங்குறீர்?" இந்த முடிவான ஆணையை கேட்டவுடன் ஆவேசமாக வெட்டுவதற்காக காகா ஓர் அரைவட்டம் சுற்றினார்.

ஆயுதம் ஏந்திய கையைக் காகா உயர்த்தினார்; ஆட்டுக்கிடாவுக்கு வேளை வந்துவிட்டது. ஆயினும் கடாவைக் காக்க இறைவன் கடைசிக்கு கணத்தில் ஓடோடி வந்தான்!

தீட்சிதர் எக்கணமும் வெட்டலாம் என்பதை நிச்சயமாக தெரிந்துகொண்ட சாயிமாதா, ஒரு கணம் தாமதித்தாலும் அசம்பாவிதம் நேருமென அறிந்து, திடீரென்று சொன்னார், "ஓ, விட்டுவிடும், விட்டுவிடும்!-

"காகா ! வேண்டா, வேண்டா! திரும்பி விடும்! ஒரு பிராமணராகிய நீர் ஆட்டை வெட்ட விரும்புகிறீரா ? உமது மனதில் பரிவு என்பதே இல்லையா?"

இதைக் கேட்டவுடன் காகா ஆயுதத்தை கீழே போட்டார். கூடியிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஆட்டுக்கடா உயிர் தப்பியது; குருபக்தி சிகரத்தை எட்டியது.!

கத்தியை கீழே போட்டுவிட்டு காகா என்ன கூறினார் என்பதை கவனமாக கேளுங்கள். "பாபா, தங்களுடைய அமுதமொழியே எங்களுக்கு தரும சாஸ்திரம்.-

"அதை விடுத்து வேறெந்த தருமநெறியும் எங்களுக்குத் தெரியாது. இது விஷயமாக எங்களுக்கு வெட்கமோ அவமானமோ சிறிதும் இல்லை. குருவான பரிபாலனமே எங்கள் வாழ்வின் சாரம்; அதுவே எங்களுடைய ஆகமம்.-

"குருவின் ஆணையை நிறைவேற்றுவதில்தான் சிஷ்யனுடைய சிஷ்ய தன்மையே இருக்கிறது. அதுவே எங்களுக்கு ஆபரணம். ஆணையை எவ்விதமாக அவமதித்தாலும் அது இழுக்காகும். -

"சுகத்தை கொடுக்குமா, கஷ்டத்தை கொடுக்குமா என்கிற விளைவைப்பற்றிய பார்வையே எங்களுக்கு இல்லை. நடப்பதெல்லாம் விதிப்படியே நடக்கும்; அதை இறைவனிடம் விட்டுவிடுகிறோம்.-