valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 16 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அடுத்த அத்தியாயத்தில் விநாயக் தாகூரின் காதையும் இன்னும் சில கதைகளும் சொல்லப்படும். செவிமடுப்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

இக் காதைகள் இனிமையானவை; கேட்பதால், மஹாபுருஷர்களை தரிசனம் செய்யவேண்டுமென்ற பக்தர்களின் ஆவலும் பூர்த்தியாகும்.

தினமணி (சூரியன்) உதித்தவுடன் இருள் எவ்வாறு விரட்டப்படுகிறதோ, அவ்வாறே இக்கதாமிருதம் மாயையை விரட்டிவிடும்.

சாயியின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல் / விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னை பேசவைப்பார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதனம்' என்னும் இருபதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


Thursday, 9 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வுலகத்தைப் பற்றிய இந்த விவேகம் மனதிற்கு ஏற்புடையதாகவிட்டாலும், பணத்தையும் பொன்னையும் தேடி அலைவதையாவது விட்டுவிடு.

இதையும் செய்யமுடியாவிட்டால், நீ சாகும்வரை, நூறு வருடங்களாயினும் சரி, கர்மம் செய்துகொண்டிருப்பதற்குத்தான் தகுதியுடையவன்!

அந்தக் கர்மமும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு உன்னுடைய வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் ஏற்றவாறே செய்யவேண்டும். அக்கினிஹோத்திரம் போன்ற கர்மாக்களை விதிகளின்படி சடங்குபூர்வமாக மனம் பரிசுத்தமடையும் வரை செய்ய வேண்டும்.

தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள இது ஒரு வழி(கர்ம யோகம்); இரண்டாவது வழி சர்வ சங்க பரித்யாகம் (எல்லாத் தொடர்புகளையும் துறந்துவிடுதல் - துறவறம்). இவ்விரண்டையும் அனுசரிக்கமுடியாத நிலையில், வாழ்க்கையின் சுகங்களையும் துக்கங்களையும் விதி வழங்கியவாறு அனுபவித்துக்கொண்டு, உழல வேண்டியதுதான்.

ஒவ்வொரு பக்தனுடைய ஆன்மீக அதிகாரத்தை நன்கு அறிந்த சத்குரு, பிரம்ம வித்தையான உபநிஷத ஞானத்தை எல்லாருக்கும் கொடுத்துவிட மாட்டார். ஏனெனில், அபேத பாவத்தை அடையாதவனுக்கு உபநிஷதம் வெறும் சொற்களே.

ஆயினும், ஞானத்தை தேடுபவர்கள் முதற்கட்டத்தில் இதையே கேட்பதால், 'சொல்லுக்குச் சொல் நிலை' ஞானத்தையும் அளிக்கவேண்டியிருக்கிறது. ஆகையினால்தான், 'வேலைகாரச் சிறுமி விளக்கமளிப்பாள்' என்று சொல்லி, பாபா அவரைத் திருப்பி அனுப்பினார்.

பாபாவே விளக்கமளித்து அனுப்பிவிட்டிருந்தால், இந்த சுவையான நிகழ்ச்சி நடைபெற்றிருக்காது. 'இருப்பது ஒன்றே; அதைத் தவிர வேறெதுவுமே இல்லை' என்ற தத்துவம் தாசகனவின் மனதில் பதிந்திருக்காது.

காகா வீடு வேலைகாரச் சிறுமியும் நான் அல்லேனோ? 'நான்தான் அவள்' என்றும் குறிப்பை பாபா அவருக்களித்து, அவருடைய நேரிடை அனுபவத்தாலேயே உபநிஷதத்தின் தாத்பரியத்தை விளக்கினார்.

பரமேச்வரனுடைய அனுக்கிரஹம் சிறிதளவும், சத் குருவினுடைய அனுக்கிரஹம் விஷேஷமாகவும் இல்லாவிட்டால், ஆத்மஞான மார்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. ஒரு சித்தரின் உபதேசம் தேவை.

ஆத்மஞானத்தைப் பற்றிய சாஸ்திரங்களையே காதால் கேளுங்கள். 'நான் அனைத்திலும் வியாபித்திருக்கிறேன்; என்னைத் தவிர எங்குமே வேறெதுவுமில்லை' என்ற சிந்தனை செய்யுங்கள்.

இவ்வாறாக, ஆத்ம தத்துவத்தை அறிந்துகொண்டு, நானும் என்னுடைய ஆத்மாவும் ஒன்றே என்ற கருத்தை தியானம் செய்பவனுக்கு ஆத்மா பிரசன்னமாகும் (காட்சியளிக்கும்).

இவ்வாறாக ஆத்ம நிரூபணம் நடக்கும்போது, ஆத்மாவுடன் நிச்சலமான சேர்க்கை ஏற்படும்போது, பரமாத்மா கையில் அகப்படுகிறது.
 


Thursday, 2 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

உயிர் வாழும் பிராணிகளில் வேற்றுமை உண்டு. ஆயினும் அவற்றுள் உறையும் ஆத்மா வேறுபாடற்ற ஒன்றே, ஆத்மா செயல்புரிவதில்லை; பலனை அனுபவிப்பதும் இல்லை. ஆத்மா என்றும் அசுத்தமாவதில்லை; பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆத்மா செயல் புரிய பந்தப்பட்டது அன்று.   'நான் உயர்ந்த ஜாதி பிராமணன்; மற்றவர்கள் நீசமான ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற பேதப்படுத்திப் பார்க்கும் உணர்வு இருக்கும்வரையில் கருமபந்தங்களில் உழல்வது அவசியமாகிறது'.

'நான் உருவமற்றவன்; அனைத்தும் ஒன்றே; என்னைத் தவிர வேறெதுவமே இல்லை; நான் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறேன்' - இதுவே தன்னைப்பற்றிய உண்மையான ஞானம்.

பூரணமான ப்ரம்மத்தோடு ஒன்றிய ஜீவாத்மா அதிலிருந்து பிரிந்துவிட்டது. மறுபடியும் முன்போலவே பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்பதே ஜீவாத்மாவின் நிச்சயமான குறிக்கோள்.

சுருதிகளும் (வேதங்கள்) ஸ்ம்ருதிகளும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வேதாந்தமும் (தத்துவ நூல்கள்) உரைக்கும் சித்தாந்தம் இதுவே. 'எது நழுவிப் போய்விட்டதோ, அது மறுபடியும் வந்து, பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும்.'

எல்லா உயிரினங்களுக்குள்ளும் இறைவன் சமமாக உறைந்திருக்கின்றான் என்கிற மனோபாவம் நம்மிடம் வாராதவரையில், எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறைவனாற் கூட ஞானதீபத்தை ஏற்ற முடியாது!

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களை சித்தசுத்தியுடன் செய்துகொண்டு வந்தால், மனம் பரிசுத்தமாகி, படிப்படியாக பேதம் பாராத நிலை உருவாகும். சோகம், மயக்கம், சபலங்கள் இவற்றை ஒதுக்கி தள்ளும் சுத்தமான ஞானம் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும்.

மூவுலகங்களிலும் உள்ள சராசரங்களில் (நகரும் நகராப்பொருள்களில்) வியாபித்திருக்கும் இறைவனாகிய பரமேச்வரன், செயல்புரியாதவன்; மாற்றமில்லாதவன்; தூய்மை ஆனவன்; அப்பாலுக்கும் அப்பாற்பட்டவன்; உருவமில்லாதவன்; என்றும் நிலைத்திருக்கும் சத்தியம்.

பெயர்களும் உருவங்களும் நிறைந்த இந்த சிருஷ்டியில், உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் இறைவன் நானே. விசேஷமான லக்ஷணங்கள் ஏதுமில்லாது அனைத்தையும் வியாபித்திருக்கும் அவனே நான்; நான் மாத்திரமே.

உண்மையில் உருவமே இல்லாதது, மாயையால் உருவமுள்ளது பொல்லாத தோன்றுகிறது; விருப்பங்களாலும் ஆசைகளாலும் நிறைக்கப்பட்டவனுக்கே இந்த சம்சாரம். அவற்றை வென்றுவிட்டவனுக்கு இது சாரமில்லாத உலகம்.

ஒரு விஷயம் சந்தேகமில்லாமல் நிர்த்தனமாக அறியப்பட வேண்டும். பஞ்ச பூதங்களாலும் உயிருள்ள ஜந்துக்களாலும் உயிரில்லாத ஜடப்பொருள்களாலும்  நிறைந்த இவ்வுலகம், இரண்டற்ற ஒன்றேயான பரம்பொருளே. 


Wednesday, 25 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆனால், இவ்வாறு நடந்தது என்பதென்னவோ உண்மை. தாசகணு ஆச்சரியமடைந்தார். அவருடைய சந்தேகம் தெளிந்து, ஈசாவாஸ்யத்தின் அர்த்தம் புரிந்துவிட்டது.

இந்தத் திட்டங்களும் யுக்திகளும் எதற்காக? அங்கேயே, அப்பொழுதே, பாபாவே இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்திருக்கலாமே என்று கதை கேட்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.

அவரே, அங்கேயே அதைச் செய்திருக்க முடியும். ஆனால், இந்த சம்பவத்தின் மஹிமை எவருக்கும் கிடைத்திருக்காது. ஏழை வேலைக்காரச் சிறுமியினுள்ளும் இறைவன் உறைகின்றான் என்பதையே பாபா நிதரிசனமாகாச் செய்து காண்பித்தார்.

ஆத்மாவைப்பற்றிய ஞானத்தை அளிப்பதே எல்லா உபநிஷதங்களின் சீரிய நோக்கமாகும். அதுவே மோக்ஷதர்மத்தின் சாரம்; அதுவே ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசமுமாகும். 


Thursday, 19 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்தச் சிறுமியின் வறுமை இறைவனின் ஓர் அம்சம்; நைந்துபோன புடவையிலும் அந்த அம்சம் இருந்தது. தானம் கொடுத்தவர், தானம் கொடுத்த பொருள், தானம் கொடுத்த செய்கை - இவை அனைத்திலும் ஊடுருவி இருப்பதும் அந்த ஒன்றான பரம்பொருளே.

"நான்", "என்னுடையது" என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டு பற்றற்ற செய்கைகளை செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதை தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே."

இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி; இதனுடைய பிரமாணம் பலரால் உணரப்பட்டது. வாழ்நாள் முழுவுதும் ஷிர்டியை விட்டு எங்கும் செல்லாமலேயே, பக்தர்களுக்கு அவர் எங்கும், எதிலும் - ஜனக்கூட்டம் நிறைந்த இடங்களிலும் ஜனநடமாட்டமே இல்லாத வனங்களிலும்-  காட்சி அளித்தார்.

நினைத்த மாத்திரத்தில், அவர் சிலருக்கு மச்சித்தர்க்கட்டிலும் பலருக்கு கோல்ஹாபூர், சோலாப்பூர், இராமேச்வரம் போன்ற நகரங்களிலும் காட்சியளித்தார்.

சிலருக்கு தாம் எப்பொழுதும் இருக்கும் உருவத்திலும் உடையிலும் காட்சியளித்தார். மற்றவர்களுக்கு பகலிலோ, இரவிலோ, விழித்திருக்கும்போதோ, கனவிலோ, அவர்களைத் திருப்தி செய்யும் வகையில் தரிசனம் அளித்தார்.

இம்மாதிரியான அனுபவங்கள் ஒன்றில்லை, இரண்டில்லை! ஓ, நான் எத்தனையைச் சொல்லி வர்ணிப்பேன்? பாபா ஷிர்டியில் வசித்தாலும் எவரும் அறியாதவாறு எங்கெங்கோ சென்றுவந்தார்.

இந்த வேடிக்கையைப் பாருங்கள்! யார் இந்தச் சிறுமி? யாருக்கு உறவு? அவள் ஓர் ஏழை வேலைக்கார பெண். ஆரஞ்சு நிறப்புடைவையைப் பற்றி பாட்டு அவளுடைய வாயிலிருந்து எவ்வளவு சகஜமாக வெளிவந்தது!

பாபாவிடம் சந்தேகம் எழுப்பப் படவேண்டும், வீடு வேலை செய்யும் சிறுமி விடையளிக்க வேண்டுமா? அதுவும் காகாவின் வீட்டில் இருந்துகொண்டு! ஈதனைத்தும் மாயையின் விளையாட்டன்றோ?

முதலாவதாக, அச் சிறுமி அங்கிருப்பாள் என்பது பாபாவுக்கு எப்படித் தெரிந்திருந்தது? குறிப்பிட்ட காலத்தில் அவள் எப்படி உபநிஷத விளக்கமளிக்கும் பாட்டைப் பாடினாள்?


Thursday, 12 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பரிதாபகரமான வறுமையில் வாழ்ந்தும், உல்லாசமாகவும் குஷியாகவும் அவள் இருந்ததை பார்த்த தாசகணுவின் மனம் இரக்கத்தால் உருகி, அவர் மோரேச்வரிடம் சொன்னார்.

"உடம்பை சரியாக மறைக்காத அவளுடைய நலிந்த ஆடைகளை பாருங்கள். தயவுசெய்து, அவசியம் அவளுக்கு ஒரு புடவை வாங்கிக்கொடுங்கள். இறைவன் ஆனந்தமடைவான்; உங்களுக்கும் புண்ணியம் சேரும்."

மோரேச்வர் பிரதான் சுபாவமாகவே கருணையுள்ள மனிதர். தாசகணு விநயமாகக் கேட்டு கொண்டவுடனே ஓர் அழகான புடவையை வாங்கிகொண்டுவந்து அச் சிறுமியிடம் அன்பளிப்பாக கொடுத்தார்.

அச் சிறுமி புடவையைக் கண்டவுடன், சோளத்தையும் கம்பையும் கேழ்வரகையும் தினமும் உண்பவனுக்குப் பஞ்சபக்ஷ பாரமான விருந்து கிடைத்தாற்போல் மகிழ்ச்சியடைந்தாள்!

அடுத்த நாள் அச்சிறுமி புதுப்புடவையை அணிந்துகொண்டு வந்தாள். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தாள்; நடமாடினால். தன்னுடைய குதூகலத்தை வெளிப்படுத்த, மற்றப் பெண்களுடன் சேர்ந்துகொண்டு தட்டா மாலை ஆதிச்ச சுற்றி சுற்றி வந்தாள். புதுப்புடவை உடுத்திக்கொண்டதால் மற்றப் பெண்களைவிட கம்பீரமாக காட்சியளித்தாள்.  அப்புடைவையின் மீது அவள் மையல் கொண்டாள்!

ஆனால், அடுத்த நாளே தன்னுடைய புதுப்படவையை மடித்துச் சிறப்பான ஆடைகள் அடங்கிய மூட்டையில் கட்டிவைத்துவிட்டு, பழைய கந்தலாடையையே சுற்றிக்கொண்டு வந்தாள். ஆயினும் எவ்விதத்திலும் உற்சாகம் இழந்தவளாக காணப்படவில்லை!

புதுப்புடவையைக் காட்டிக்கொள்ளாமல் மடித்து வைத்துவிட்டு வந்திருந்தபோதிலும், தாசகணுவின் புதுக் கண்ணோட்டத்தில் அவளுடைய பழைய வறுமை காணாமற்போய்விட்டது.

புதுப் புடவையை வீட்டில் வைத்துவிட்டுப் பழைய கந்தலையே கட்டிக்கொண்டு வந்தாலும், அவளுடைய மனதில் வருத்தமென்பதே இல்லை. புதுப்புடவைதான் கிடைத்துவிட்டதே!

வறுமையின் காரணத்தால் கந்தலைக் கட்டிக்கொள்வதும் வசதி ஏற்பட்டபோதும் அதையே செய்வதும் - இதுதான் வறுமையை பெருந்தன்மையுடன் கழிக்கும் யுக்தி போலும். சுகமும் துக்கமும் மனதின் உணர்வுகள்தானே!

தாசகணுவின் புதிர் இவ்வாறு சிக்கறுக்கப்பட்டு, ஈசாவாஸ்ய உபநிஷத சந்தேகங்களை தீர்க்கும் விடைக்கு வழிகாட்டியது; அர்த்தபோதனை கிடைத்துவிட்டது.

இப்பிரமாண்டம் அனைத்திலும் இறைவன் நிறைந்திருக்கும்போது, இறைவன் இல்லாத இடத்தை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்?

அது பூர்ணம்; இதுவும் பூர்ணம். பூரணத்தில் இருந்து பூர்ணம் உதயமாகியுள்ளது. பூர்ணத்தினின்று பூரணத்தை எடுத்தும், பூரணமே எஞ்சி நிற்கின்றது. 


Thursday, 5 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஆஹா, இவள்தான் அந்த வேலைகாரச் சிறுமியா! யாருடைய கிராமியமான, செம்மையடையாத வாக்கிலிருந்து நான் ஈசாவாஸ்யத்திற்கு தெளிவு பெற்றேனோ அச்சிறுமியை நான் காண வேண்டும்". (தாச ணு)

அவர் வெளியில் வந்து பார்த்தபோது, வீட்டின் புறக்கடையில் பாத்திரங்களை தேய்த்துக்கொண்டிருந்த ஒரு குணபிச் சிறுமியையே கண்டார்.

தீக்ஷிதருடைய வீட்டில் நாம்யா என்று அழைக்கப்பட்ட வேலையாள் ஒருவன் இருந்தான். இச் சிறுமி அவருக்குத் தங்கை. விசாரணையில் இது தெரிய வந்தது.

ஆகவே இச் சிறுமிதான் காகா வீட்டின் வேலைகாரப் பெண்! அவருடைய சந்தேகங்கள் சிறுமியின் பாட்டினால் நிவாரணம் அடைந்தன. ஞானிகளால்  செய்ய முடியாதது ஏதும் உண்டோ! ஓர் எருமைமாட்டை வேதம் ஓத வைத்தார் ஞானேச்வர்! மஹராஜ்!

சிறுமியின் பாட்டு அவ்வாறிருந்தது; தாசகணுவின் மனம் திருப்தியடைந்து சமாதமானாகியது. பாபா விளையாட்டாகச் சொன்னார் என்று நினைத்த வார்த்தைகளின் மஹிமையை எல்லாரும் உணர்ந்தனர்.

சிலர், காகாவின் வீட்டுப் பூஜையறையில் அமர்ந்து தாசகணு பூஜை செய்து கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை கேட்டதாகச் சொல்கின்றனர்.

அப்படியேயிருந்தாலும் சரி, தாத்பரியம் ஒன்றுதான். பாபா தம் பக்தர்களுக்கு பலவிதமான யுக்திகளின்மூலம் போதனை செய்தார் என்பதையே நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

"நீ எங்கிருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னைக் கேள்வி கேள்! தேவையில்லாது எதற்காக காட்டிலும் வானத்திலும் திரிந்து விடைகளை தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.-

"நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை; பக்தர்களுடைய பாவத்திற்காக நான், எங்கும், எப்படியாவது தோன்றுவேன்."

அந்த எட்டு வயதுச் சிறுமி ஒரு கிழிந்துபோன மேலாக்கை அணிந்துகொண்டு ஆரஞ்சு நிறப் புடவையின் மேன்மையான தோற்றத்தை பற்றிக் கேட்பதற்கு இனிமையான பாட்டைப் பாடினாள்.

ஆஹா! தங்கச்சரிகை போட்ட அந்தப் புடவை எவ்வளவு அற்புதமாக இருந்தது! எவ்வளவு அழகான கரை! கண்கவரும் தலைப்பு வேறு! பாட்டை பாடிக்கொண்டே புடவையின் அழகில் மூழ்கிப்போனாள் அச்சிறுமி.

அவளுக்குச் சாப்பாட்டுக்கே  தகராறு; உடம்பை முழுமையாக மூடிக்கொள்ளவும் தேவையான உடை இல்லை. ஆயினும் அவள் எங்கோ பார்த்த ஆரஞ்சு நிற புடவையின் அழகை நினைத்துக் குதூகலம் நிரம்பியவளாக இருந்தாள்.