valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 23 October 2014

ஷிர்டி சாய் சத்சரிதம் 

பிறகு பாபா திரும்பி வந்து, தம்முடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்துகொண்டார். காகா மகாஜனியும் சரியான நேரத்தில் அங்கு வந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார். 

கோபற்காங்விலிருந்து குதிரைவண்டிகள் வந்தன. பம்பாயிலிருந்து சில பக்தர்களும் வந்து சேர்ந்தனர். பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு பக்தர்கள் மசூதியின் படிகளில் ஏறி பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். 

இக்குழுவினருடன் அந்தேரியிலிருந்து ஒரு பாடீல் மலர்கள், அக்ஷதை இன்னும் பிற பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். தம்முடைய முறை வருவதற்காக காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். 

திடீரென்று, கீழேயிருந்த முற்றத்தில், தேர் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில பயங்கரமாக உருட்டிக் கொண்டு, விசித்திரமான குரலில் சத்தம் போட்டார். 

"யார் அங்கே கூந்தாலியால் குத்தினான்? அவனுடைய முதுகெலும்பை உடைத்துவிடுவேன்" என்று கூவிக் கொண்டே தம்முடைய சட்காவை எடுத்துக் கொண்டு எழுந்தார். சுற்றி இருந்த அனைவரும் பீதியடைந்தனர். 

பணியாள் கூந்தாலியை கீழே போட்டுவிட்டுத் 'தப்பித்தேன், பிழைத்தேன்' என்று ஓடிவிட்டான்; எல்லாரும் ஓடிவிட்டனர். பாபா காகாவின் கையைத் திடீரென்று பிடித்தபோது அவரும் திடுக்கிட்டுப் போனார். 

"நீர் எங்கே போகிறீர்? இங்கு உட்காரும்" என்று பாபா கூறினார். இதற்குள் தாத்யாயும் லக்ஷ்மிபாயும் அங்கு வந்தனர். பாபா அவர்களைத் தம் மனம் திருப்தி அடையும் வரை கண்டபடி ஏசினார். 

முற்றத்திற்கு வெளியே இருந்தவர்களையும் பாபா வசை மாறி பொழிந்தார். திடீரென்று அங்கே கிடந்த வறுத்த வேர்க்கடலை நிரம்பிய பை ஒன்றை பாபா எடுத்தார். 

பாபா எதிர்பாராமல் கோபாவேசம் கொண்டபோது,  மசூதியிலிருந்து உயிருக்கு பயந்து சிதறி ஓடியவர்களில் யாராவது ஒருவருடைய கையிலிருந்த இந்தப் பை விழுந்திருக்க வேண்டும். 

வேர்க்கடலை ஒரு சேராவது இருக்கும். பிடிப்பிடியாக எடுத்து, உள்ளங்கைகளால் தேய்த்து வாயால் ஊதித் தோலை நீக்கினார் பாபா. 

ஒரு பக்கம் வசவுகளை பொழிந்துகொண்டே மறுபக்கம் வேர்க்கடலையை தேய்த்து ஊதித் தள்ளினார். சுத்தம் செய்யப் பட்ட மஹாஜனியைத் தின்ன வைத்தார். 



Thursday, 16 October 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"வீக்கம் என்னவோ இன்னும் இருக்கிறது; இன்னும் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்ற பரிந்துரை இருந்தது; அதற்காகவே நான் மறுபடியும் மும்பை சென்றேன் -

"அதே டாக்டரிடம் சென்றேன். பாபாவை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. என்னுடைய காதைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டரால் வீக்கம் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை.-

"ஆகவே டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்." சன்னியாசியின் பெரிய கவலை ஒழிந்தது. எல்லாரும் பாபாவின் லீலையை கண்டு வியப்படைந்தனர். 

இந்த சந்தர்ப்பத்தில் இதே மாதிரியான காதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அந்தக் காதையை சொல்லிவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்து விடுகிறேன்.

சபா மண்டபத்தின் தரைக்கு தளம் போடும் வேலை ஆரம்பிப்பதற்கு எட்டு நாள்களுக்கு முன்பு மகாஜனி காலரா நோயினால் கடுமையாக தாக்கப் பட்டார். 

அவருக்குப் பல தடவைகள் பேதியாகியது. ஆனால், இதயத்தின் ஆழத்தில் பாபாவின் மீது பாரத்தை போட்டுவிட்டு, மிகவும் நொந்து போயிருந்த நிலையிலும் இந்த மருந்தையும் வைத்தியமுறையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

பாபா பூரணமான அந்தர்ஞானி என்று மகாஜனிக்கு தெரியும். ஆகவே, தம்முடைய நோய்பற்றி ஏதும் பாபாவுக்கு தெரிவிக்கவில்லை. 

பாபா விருப்பப் பட்டபோது அவராகவே அந்த நோயை நீக்கிவிடுவார் என்னும் முழு நம்பிக்கையுடன் தம்முடைய வேதனையையும் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டார். 

எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, தினப்படி பூஜைக்கும் ஹரதிக்கும் செல்வதற்குத் தடை ஏற்படக் கூடாது என்றே அவர் விரும்பினார். 

பேதி அடிக்கடியும் பலமுறைகளும் வரையின்றிப் போனபோது, தினப்படி ஹாரதி சேவையை இழந்துவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவர் என்ன செய்தாரென்றால், -

நீர் நிரம்பிய ஒரு தாமிரச் சொம்பை இருட்டிலும் சுலபமாக எடுக்கக் கூடிய இடத்தில மசூதியில் வைத்துக் கொண்டார். 

பாபாவின் பக்கத்தில் அமர்ந்து, பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டு கொண்டு தம்முடைய நித்திய பழக்கப்படி ஹாரதி நேரத்தில் தவறாது அங்கிருந்தார். 

வயிறு சத்தமிட்டாலோ குழம்பினாலோ நீர்ப்பாத்திரம் அருகிலேயே இருந்தது. தனிமையான இடத்திற்கு சென்று மலம் கழித்துவிட்டு திரும்பி வந்துவிடுவார். 

இந்நிலையில், தாதா (கண்பத் கோதே பாடீல்) தரைக்கு தளம் போடுவதற்கு அனுமதி கேட்டார். பாபா அனுமதியளித்தார். பாபா அவரிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்!

"நாங்கள் இப்பொழுது லெண்டிக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுது திரும்பி வருகிறோமோ, அப்பொழுது தளம் போடும் வேலையை ஆரம்பியுங்கள்."


Thursday, 9 October 2014

இதுபோலவே, புட்டி முன்னம் ஒருசமயம் பேதியாலும் வாந்தியாலும் அவதிப்பட்டார். அப்பொழுது ஷீரடியில் காலரா நோய் கண்டிருந்தது. புத்திக்குத் தாகத்தால் தொண்டை வறண்டு போயிற்று. வயிறு எந்நேரமும் குமட்டியது. 


ஷிர்டியிலேயே இருந்த டாக்டர் பிள்ளை பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். எதுவும் நிவாரணம் அளிக்காத நிலையில், முடிவாகப் பிள்ளை பாபாவிடம் சென்றார். 

பணிவுடன் பாபாவிடம் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு, பிள்ளை பாபாவைக் கேட்டார், "அவருக்கு காபி கொடுக்க வேண்டுமா? அல்லது தண்ணீரே நல்லதா?"

பாபா டாக்டரிடம் கூறினார், "அவருக்குப் பால் கொடுங்கள்; பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளையும் கொடுங்கள்! அவர் குடிப்பதற்கு அரிசி நொய்யும் பருப்பு நொய்யும் சேர்த்துக் கஞ்சி போட்டுக் கொடுங்கள்.-

"அவருடைய தாகமும் அவஸ்தையும் உடனே ஒழியும்." சாராம்சமான விஷயம் இதில் என்னவென்றால், புட்டி அந்தக் கஞ்சியை குடித்தவுடனே அவருடைய வியாதி மறைந்தது!

பாதாம், பிஸ்த, அக்ரூட், பருப்புகளைச் சாப்பிட்டுக் காலரா நோய் கண்டவர் நிவாரணம் அடைவதா! இங்கு பாபாவின் வார்த்தைகளே நம்பிக்கையின் அஸ்திவாரம்; சந்தேஹம் என்பதற்கு இங்கு இடமேதுமில்லை. 

ஒரு முறை ஆலந்தியிலிருந்து ஒரு சந்நியாசி சமர்த்த சாயியை தரிசனம் செய்வதற்காக ஷிரிடிக்கு வந்தார். பாபாவினுடைய ஆசிரமத்திற்கு (மசூதிக்கு) வந்து சேர்ந்தார். 

அவர், காதில் எதோ ஒரு நோயினால் இன்னல்பட்டு, சரியான தூக்கமுமின்றி அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனேவே ஓர் அறுவைச் சிகிச்சையும்  நடந்திருந்தது. ஆனால், எள்ளளவும் உபயோகம் ஏற்படவில்லை. 

காதுவலி பொறுக்க முடியாமலிருந்தது; எந்த உபாயமும் வேலை செய்யவில்லை. ஆகவே, அவர் ஆலந்தியிலிருந்து கிளம்பி பாபாவின் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்தார். 

சந்நியாசி சாயியின் பாதங்களில் விழுந்து வணங்கி, உதீ பிரசாதம் வாங்கிக் கொண்டு, பாபாவினுடைய அருள் தமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். 

மாதவராவ் சந்நியாசிக்காக, அவருடைய காதுரோகத்தை நிவிர்த்தி செய்யுமாறு பாபாவை வினயத்துடன் கேட்டுக் கொண்டார். "அல்லா சுகம் செய்துவிடுவார்" என்று மகாராஜ் உறுதி அளித்தார். 

இந்த ஆசிர்வாதத்தை வாங்கிக் கொண்டு, சந்நியாசி புனேவுக்கு திரும்பினார். பொறுக்க முடியாத வலி அப்பொழுதே நின்று விட்டது, என்னும் செய்தி தாங்கிய கடிதம் எட்டு நாள்கள் கழிந்து வந்தது. 


Wednesday, 1 October 2014

"ஓ, நான் இப்பொழுது என் செய்வேன்? எத்தனையோ மருந்துகளையும் கஷாயங்களையும் அருந்தி பார்த்துவிட்டேன்! நீங்களாவது இந்த ஜுரம் நீங்குவதற்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள்!"

பாபாவினுடைய இதயம் கனிந்தது. பதில் சொல்லும் வகையில் மலேரியா நீங்க வினோதமான ஓர் உபாயம் சொன்னார். அது என்னவென்று கேளுங்கள்!

"லக்ஷ்மி கோயிலுக்கருகில் இருக்கும் கருப்பு நாய் தின்பதற்குச் சில கவளங்கள் தயிர்சோறு கொடு; உடனே உன்னுடைய ஜுரம் குணமாகி விடும்!"

பாலா உணவு தேடுவதற்காகச் சிறிது பீதியுடன் வீடு திரும்பினார்; அதிர்ஷ்டவசமாக, ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சோறு இருப்பதை பார்த்தார்; அருகிலேயே தயிரும் இருந்தது; 

'தயிரும் சோறும் கிடைத்தது மிக்க நன்று. ஆயினும், இந்த வேளையில் கோயிலுக்கருகில் கறுப்புநாய் இருக்குமா? என்று பாலா யோசனை செய்துகொண்டே போனார். 

தேவை இல்லாத கவலை! குறிப்பிட்ட இடத்தை அவர் சென்றடையுமுன்பே ஒரு கறுப்பு நாய் வாலை ஆடிக் கொண்டு தம்மை நோக்கி வருவதை பார்த்தார். 

பாபா குறிப்பிட்டவாறே அனைத்தும் நடப்பது பற்றி பாலா கண்பத் மிக்க ஆனந்தமடைந்தார். உடனே அவர் நாய்க்கு தயிர் சோறு போட்டார். பிறகு, பாபாவிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொன்னார். 

யார் இந்த நிகழ்ச்சியை பற்றி என்ன சொன்னாலும், சாராம்சம் என்னவென்றால், அப்பொழுதே மலேரியா ஜுரம் பாலாவை விட்டு நீங்கியது. பாலா நிவாரணம் அடைந்தார். 

அதுபோலவே, பாபுசாஹெப் புட்டிக்கு ஒரு சமயம் குடல் சீதலத்தினால் பேதியும் வாந்தியும் கண்டது. 

அலமாரி பூராவும் பலவகையான மருந்துகளால் நிரம்பி இருந்தது. ஆயினும், அம்மருந்துகளில் எதுவமே நிவாரணம் அளிக்கவில்லை. பாபு சாஹேப் மனத்தில் கலவரம் அடைந்தார். கவலைப்பட ஆரம்பித்தார். 

பல தடவைகள் பேதியும் வாந்தியும் ஆகி, பாபுசாஹீப் க்ஷணமடைந்து போனார். தினப்படி பழக்கமான 'பாபா தரிசனத்திற்கு ' செல்வதற்கு கூட சக்தியற்று இருந்தார். 

இச் செய்தி பாபாவின் காதுக்கு எட்டியது; அவர் புட்டியை அழைத்து வரச் சொல்லி, தம்மெதிரில் உட்கார வைத்தார். பாபா கூறினார், "இதோ பார், இப்பொழுதிலிருந்து நீ மலம் கழிக்கப் போகமாட்டாய்!-

"அத்தோடு, ஞாபகம் இருக்கட்டும், வாந்தியும் நின்று விட வேண்டும் ." புட்டியை நேருக்கு நேராகப் பார்த்து, ஆட்காட்டி விரலை ஆட்டிக் கொண்டே அதே வார்த்தைகளை மறுபடியும் கூறினார். 

அவ்வார்த்தைகளின் தாத்பரியத்தை கேட்டு பயந்து போய், வியாதி உடனே ஓட்டம் பிடித்தது! ஸ்ரீமான் புட்டி சொஸ்தமடைந்தார். 


Thursday, 25 September 2014

ஷிர்டி சாய் சத்சரிதம் 

ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாய்க்கு ஏறிவந்த இரத்தம், பாபாவுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அடங்கி விட்டது. 

பாபா நோயாளியைப் பரிசோதிக்கவில்லை; நோய் எப்படி ஏற்பட்டது என்று காரணமும் கேட்கவில்லை. அவருடைய அருட்பார்வையே கணமாத்திரத்தில் வியாதியுனுடைய வேரை அறுத்து விட்டது. 

அவருடைய கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்; வசந்த காலம் வருவதற்கு முன்னரே மரம் பூத்துக் குலுங்கும்; சுவையான பழங்களின் பளு தாங்காது மரம் தழையும். 

ரோகம் எது, ஆரோக்கியம் எது? ஒருவருடைய புண்ணியமோ பாவமோ தீராமல், கர்மவினை கழியாமல், எந்த வைத்தியமும் பலன் தராது. 

கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். எதனை ஜன்மம் எடுத்தாலும் இதுவே நிச்சயம். கர்மவினை அனுபவித்து அழிவதற்கு  முன்பு, எந்த உபாயமும் எடுபடாது. 

இருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் ஞானியின் அருட்பார்வை கிடைத்தால், அது வியாதியைத் துடைத்துவிடுகிறது. பீடிக்கப் பட்டவர் வியாதியை சுலபமாகவும் துன்பமின்றியும் பொறுத்துக் கொள்வார். 

வியாதி பொறுக்க முடியாத வலியையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. ஞானி தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார். 

இங்கே பாபாவின் சொற்களே பிரமாணம். அதுவே ராமபாணம் போன்ற, குறிதவறாத ஒளஷதம். இதுபோலவே, கருப்பு நாய்க்கு தயிர் சோறு போட்டதால் மலேரியா ஜுரம் நிவாரணம் ஆகியது. 

இம்மாதிரியான கிளைக்கதைகள் பிரதமமான கதையிலிருந்து விலகிச் செல்வது போலத் தோன்றலாம். கேட்டு, சாராம்சத்தை புரிந்துகொண்டால், அவற்றின் சம்பந்தம் நன்கு விளங்கும். மேலும், என்னுடைய மனதிற்கு இக்கிளைக் கதைகளை கொண்டுவருபவர் சாயிதானே!

'என்னுடைய காதையை நானே விவரிக்கிறேன்' என்று சாயி சொல்லியிருக்கிறார். ஆர்தான் இந்த சமயத்தில் எனக்கு இக்காதைகளை ஞாபகப் படுத்தியிருக்கிறார். 

பாலா கண்பத் என்னும் பெயர் கொண்ட சிம்பி (தையற்கார) ஜாதியை சேர்ந்த தீவிர பக்தரொருவர் ஒருசமயம் மசூதிக்கு வந்து பாபாவின் எதிரில் வந்து நின்று, தீனமான குரலில் வேண்டினார்,- 

"நான் என்ன பெரும் பாவம் செய்துவிட்டேன்? ஏன் இந்த மலேரியா ஜுரம் என்னை விட மாட்டேன் என்கிறது? பாபா, எத்தனையோ உபாயங்களை செய்து பார்த்துவிட்டேன்; ஆனால், இந்த ஜுரம் என் உடலை விட்டு நீங்க மாட்டேன் என்கிறது. -  


Thursday, 18 September 2014

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு திட நிச்சயமாக பிரமாணம் செய்துகொண்ட பாடீல், எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு சாயி தரிசனத்திற்காக ஷீரடிக்கு பயணமானார். 

தம்முடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு, எப்படி ஷீரடிக்கு போய்ச் சேர்வது எனும் சஞ்சலமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய மனதுடன் பீமாஜி ஷீரடிக்கு கிளம்பினார். 

பாடீலுடைய வண்டி மசூதிக்கருகில்   இருந்த சவுக்குதிற்கு வந்து, பிறகு மசூதியின் வாயிலுக்கு வந்து சேர்ந்தது. நான்கு பேர்கள் பீமாஜியை கைகளால் தூக்கிக் கொண்டு வந்தனர். 

நானா சாஹேபும் அவருடன் வந்தார். எல்லாருக்கும் சுலபமாக தரிசனம் செய்து வைக்கும் மாதவராவும் ஏற்கனேவே அங்கு வந்திருந்தார்!

பாடீலை பார்த்துவிட்டு பாபா சாமாவிடம் கேட்டார், "சாமா, இன்னும் எதனை திருடர்களை என் தலையில் கட்டப் போகிறாய்? என்ன, நீ செய்வது நியாயமா?"

பீமாஜி சாயிபாதத்தில் சிரம் வைத்து வணங்கிக் கூறினார், "சாயிநாதா, இந்த அனாதைக்குக் கிருபை செய்யுங்கள்! தீனநாதா, என்னைக் காப்பாற்றுங்கள்!"

பாடீலுனுடைய துன்பத்தைப் பார்த்த சாய்நாத் பரிதாபப் பட்டார். அந்நேரத்திலேயே பாடீல் தம்முடைய துன்பத்திற்கு ஒரு முடிவு வந்து விட்டதை உணர்ந்தார். 

பீமாஜியினுடைய பரிதாபகரமான நிலையில் பார்த்த கருணா சாகரமான சமர்த சாயி மனம் நெகிழ்ந்து முகத்தில் புன்னகை தவழக் கூறினார், -

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; சிந்தனையாளர்கள் துக்கப் படுவதில்லை. ஷீரடியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்--

"நீர் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கி இருக்கலாம். துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறு கிறாரோ, அவர் சுகத்தின் மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். -

"இவ்விடத்தில் இருக்கும் பக்கீர் மகா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாகிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்-  

"ஆகவே, நீர் அமைதி கொள்ளும்; பீமாபாயின் வீட்டில் தங்கும்; போய் வாரும்; இரண்டொரு நாள்களில் உமக்கு நிவாரணம் கிடைக்கும்".

ஆயுள் முடிந்துபோன ஒருவனுக்கு திடீர் அதிருஷ்டத்தால் அமுதமழை பெய்து புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு பாடீலுக்கு ஏற்பட்டது. 

சாயியின் திருமுகத்திலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட பாடீல், மரணப் படுக்கையில் இருப்பவன் அமிருதபானத்தாலும், தாஹத்தால் நெஞ்சுலர்ந்து போனவன் நீர் கிடைத்தாலும், எவ்வளவு திருப்தியும் சந்தோஷமும் அடைவார்களோ, அவ்வளவு திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.   


Saturday, 13 September 2014

ஷிர்டி சாய் சத்சரிதம்

நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன். அவனே அழிப்பவன். அவன் ஒருவனே செயலாளி.

பாடீல் சாந்தொர்கருக்கு எழுதினார், "எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டது; வாழ்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது.

"இந்த வியாதியைக் குணப்படுத்துவது சாத்தியமில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்கும் கூட, மேற்கொண்டு யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது.

"ஆகவே, நான் ஒரே ஓர் உதவியை வினயத்துடன் கடைசியாக கேட்கிறேன்! என்னுடைய மனதில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாக சந்திக்க வேண்டுமென்பதுதான்."

கடிதத்தை படித்த சாந்தோர்கரின் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. பீமாஜி பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால், நானா மனமுருகிப் போனார்.

நானா எழுதினார், "உங்களுடைய கடிதத்திற்கு பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தை பரிந்துரை செய்கிறேன். சாயி பாபாவின் பாதங்களை பற்றிகொள்ளுங்கள்! அவரே நம் அன்னையும் தந்தையும்!-

"அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அனைத்து கொள்வாள். தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள்.-

"கொடிய குஷ்டரோஹம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷய ரோஹாம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் சந்தேஹம் வேண்டா; போய் சாயியின் திருவடிகளை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள். -

"யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்கு கட்டுப் பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாக சென்று சாயி தரிசனம் செய்யவும்.-

"மரண பயத்தைவிட பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, சாயியின் பாதங்களை பற்றிக் கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தை போக்க முடியும். "

பொறுக்க முடியாத அவதியாலும் அந்திமகாலம் நெருங்கிவிட்டதொவென்ற  பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், "நான் எப்பொழுது சாயினாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்கு காரிய சித்தி ஆகும்?"

பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. "உடனே வேண்டியதையெல்லாம் மூட்டை கட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள். சீக்கிரமாக ஷிர்டிக்குப் போவோம்".