ஷீர்டி சாயி சத்சரிதம்
"முழுமுதற்பொருள் அன்றி வேறு சுகம் ஏதும் இல்லை. அதுவொன்றே விலைமதிப்பில்லாத சுகம். இந்த விலைமதிப்பில்லாத சுகம் ஒன்றுக்காவே நான் உம் குருவுக்குத் தொண்டனாவேன். -
"காலின் முடம் இப்படியே இருக்கட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், என் மனத்தின் முடத்தைச் சரிசெய்து சிறந்த நிலைக்குக் கொண்டுவாருங்கள்' என்றே நான் பிரார்த்தனை செய்வேன். -
"எவ்வளவோ சிரமப்பட்டு உபாசனை செய்கிறேன். ஆயினும், மனம் நிச்சலம் ஆகவில்லை. சிரமப்பட்டு சுவாதீனத்திற்குக் கொண்டுவர முயல்கிறேன். ஆனால், அது எனக்குத் தெரியாமல் தப்பியோடி விடுகிறது. -
"மனத்தை அறவே நிக்கிரஹம் செய்யும் (அடக்கும்) முயற்சியில் எவ்வளவு உஷாராக இருந்தாலும், அது எப்பொழுது நழுவும் என்று சொல்லமுடியாது. மனம் அளவிலா ஆச்சரியமானது!-
"ஆகையால், நானா, நான் மனப்பூர்வமாக உம் குருவை தரிசனம் செய்ய வருகிறேன். என் மனமுடத்தை நீக்க அவரிடம் பிரார்த்தனையும் செய்கிறேன்."
நசித்துப்போகக்கூடிய சரீர சுகங்களை உதாஸீனம் செய்து, எவர் வீட்டின்பத்தை மிகுந்த விருப்பத்துடன் நாடுகிறாரோ, அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தில் சாயி பெருமகிழ்ச்சியும் உற்சாகமும் காட்டுகிறார்.
அந் நாள்களில் எல்லாராலும் பேசப்பட்ட ஒரே விஷயம், நடக்கவிருந்த பம்பாய் மாகாண மேல் சட்டமன்ற தேர்தல். அதன் பொருட்டு, இங்கும் அங்குமாகப் பல இடங்களில் மக்கள் தேர்தல் வேளையில் ஈடுபட்டிருந்தனர்.
காகாசாஹேபும் பொதுஜன ஆதரவைத் திரட்டித் தாம் வெற்றியடைவதற்காகத் தம் நண்பர்களை சந்தித்துக்கொண்டிருந்தார். இந்த வேலை சம்பந்தமாக எதிர்பாராதவிதமாக அஹமதுநகரம் சென்றார்.
காகா சாஹேப் மிரீகர் என்ற பெயர்கொண்ட சர்தார் ஒருவர் அஹமதுநகரத்தில் இருந்தார். அவர் தீக்ஷிதரின் நெருங்கிய நண்பர். ஆகவே, தீக்ஷிதர் அவருடைய இல்லத்தில் தங்கினார்.
அதே சமயத்தில் அஹமத் நகரத்தில் குதிரைக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்காகப் பலதரப்பட்ட மக்கள் அங்கு வேலையில் மூழ்கியிருந்தனர்.
கோபர்காங்க்வின் மாம்லேதாரான பாலா சாஹேப் மிரீகரும் குதிரைக் கண்காட்சியைப் பார்த்தப்பதற்காக அஹமத் நகருக்கு வந்திருந்தார்.
தீக்ஷிதர் எதற்காக வந்தாரோ அந்தக் காரியம் முடிந்தது. 'நான் ஷிர்டிக்குப் போவதை ஏற்பாடு செய்வது எப்படி? யார் என்னை அழைத்துச் செல்வார்?' என்றெல்லாம் அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.
அங்கு வந்த வேலை முடிந்தவுடனே, அவருடைய பார்வை ஷீர்டி செல்லும் மார்க்கத்தை நோக்கித் திரும்பியது. "பாபாவை தரிசனம் செய்யும் யோகம் பெறுவேனா' என்ற சிந்தனையில் மூழ்கினார்.

No comments:
Post a Comment