valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 20 June 2024

 44.  மஹாசமாதி


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்ய குரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பிரபஞ்சம் அனைத்தும் வியாபித்திருக்கும் தெய்வீகப் பேருணர்வே ! சௌக்கியங்களின் அடித்தளமே ! சகல சம்பத்துகளின் களஞ்சியமே ! கிருபை கூர்ந்து வறுமையை ஒழிப்பவரே! ஓம் நமோ ஸ்ரீ சாயி!

ஒரு தடவை உமது பாதங்களை வந்தனம் செய்தாலே எல்லாப் பாவங்களும் அழிந்துபோகின்றன . இவ்வாறிருக்கையில், பாவத்துடன் பஜனையும் பூஜையும் செய்பவர் - ஆஹா ! எவ்வளவு பாக்கியவான் ஆகிவிடுவார் !

எவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்தால் எல்லா சம்சார துக்கங்களும் மறந்துபோகின்றனவோ, பசியும் தாகமும் அப்பொழுதே அங்கேயே தணிந்துவிடுகின்றனவோ , அவருடைய தரிசனம் அற்புதமானதன்றோ !

எந்நேரமும் 'அல்லா மாலிக்' தியானம் செய்பவர், ஆசைகளோ அபிமானமோ இல்லாதவர், மனத்தில் பேராசையோ வாசனைகளோ (பூர்வ ஜன்ம அனுபவங்களால் ஏற்பட்ட பற்றுகள் ) இல்லாதவர், அவருடைய மஹிமையை யான் எங்கனம் வர்ணிப்பேன்?

கேடு செய்தவர்களுக்கும் நன்மை செய்யுமளவிற்கு சாந்தி எவருடைய மேல்துண்டிலும் இருக்கிறதோ, அவரை ஒரு கணமும் மறக்கலாகாது, அவரை இதயத்தில் குடிவைத்துத் தியானம் செய்யவேண்டும்.

ராமனும் கிருஷ்ணனும்  தாமரைக்கண் படைத்தவர்கள். ஞானிகளுக்கோ ஒரு கண் இருக்கலாம்; கண்களே இல்லாமலும் இருக்கலாம். தேவர்கள் உருவத்தில் சுந்தர சொரூபமானவர்கள்; ஞானிகளோ ஆனந்த சொரூபமானவர்கள்.

தேவர்களின் பார்வைக்கும் கேள்விக்கும் (அருள் வீச்சுக்கு) ஓர் எல்லையுண்டு. ஞானிகளின் கடைக்கண்பார்வைக்கு முடிவென்பது இல்லை. 'யார் எங்களை எவ்வாறு அணுகிக்கின்றனரோ, அவ்வாறே அவர்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்' என்பது தேவர்களின் கூற்று. ஞானிகளோ நிந்தனை செய்பவர்களுக்கும் கருணை காட்டுவர்!

ராமன், கிருஷ்ணன், சாயி. இம்மூவருள் பேதம் ஏதுமில்லை. பெயர்கள் மூன்றாயினும் வஸ்து (பொருள்) ஒன்றுதான். காலத்தால் வேறுபடினும் இம் மூவரும் ஒருவரே!

 


 

Thursday, 13 June 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பூஜைக்குத் தகுதியான சரீரம் ஜீவனுடன் இருந்தபோது பூஜை ஓர் உற்சவம் போல் நடத்தப்பட்டது. அவ்வுடல் ஜீவனை இழந்துவிட்ட போதிலும், பூஜை வைபவம் வெறும் உபசாரம் ஆகிவிடக்கூடாது.

மேலும், பாபாவை அந்த நிலையில் பார்த்த லக்ஷ்மன் மாமா ஏற்கெனவே துக்கத்தால் தாக்கப்பட்டிருந்தார். மறுபடியும் தரிசனம் செய்வது முடியாதகாரியமாதலால், கடைசிப் பூஜையைச் செய்வதற்காக வந்திருந்தார்.

கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. சாயியின் நிலையைப் பார்த்து அவரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கைகளும் கால்களும் நடுங்கின. மாமாவின் மனம் உடைந்து சுக்குநூறாகியது.

ஆனபோதிலும், மூடியிருந்த கையை விரித்து பீடாவையும் தக்ஷிணையையும் அதில் வைத்தார். உடலை முன்பிருந்தவாறே மூடிவிட்டு மாமா அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர், தகுந்த நேரத்தில் பாபாசாஹேப் ஜோக் தினமும் செய்ததுபோல் மசூதியில் சாயியின் மதியநேர ஆரதியைச் செய்தார். மற்றவர்களும் அவருடன் இருந்தனர்.

இப்பொழுது, இதன் பின்னர் என்னென்ன நடந்தது என்பது அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படும். மிகவும் சிறப்பான இடத்தில பாபாவின் பூதவுடலுக்குச் செய்யப்பட்ட சம்ஸ்காரங்கள் (இந்துமத சடங்குகள்) பற்றியும்,-

அவருடன் பல ஆண்டுகள் கூட்டுறவு கொண்டதும், அவரால் ஒரு நினைவுச் சின்னமாக மிகவும் நேசிக்கப்பட்டதுமான செங்கல் உடைந்து, தேகத்திற்கு முடிவு வரப்போவதை சூசகமாக காட்டிய அபசகுன நிகழ்ச்சியைப்பற்றியும்,-

கொடுமையான தேஹ அவஸ்தை காரணமாக, முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாபா பிரமாண்டத்தில் பிராணனை வைத்தார். இப்பொழுது நடந்தது போல் அப்பொழுது நடந்திருந்தால் எவ்வளவு மகத்தான பேரிழப்பு நேர்ந்திருக்கும் என்பதுபற்றியும்,-

அந்த சமயம், பக்தர் மகால்சாபதி எவ்வாறு பாபாவின் உடலை இரவுப்பகலாகப் பாதுகாத்தார் என்பதுபற்றியும், எல்லாரும் நம்பிக்கை இழந்தபோதிலும், பாபா எதிர்பாராதவிதமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்ததுபற்றியும் விவரிக்கப்படும்.

மரணபரியந்தம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்தவர் - யோகாச்சாரியார் - ஞானிகளின் சிகரமான ஞானி - அவருடைய ஐசுவரியத்தை (ஈசுவரத் தன்மையை) யாரால் விவரிக்க முடியும்?

எவருடைய மகத்துவம் அத்தகையதோ, அவரை சத்துவ பாவத்துடன் வணங்குவோமாக ! இந்த தீனன் ஹேமாட் அனன்னியமாக அவரை சரணடைகிறான்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயீ சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'மஹாசமாதி' என்னும் நாற்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும். 


 


Thursday, 6 June 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"பாபுசாஹெப் ஜோக் இன்று வர மாட்டார். நான் இறந்துபோய்விட்டேன் என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.  ஆகவே, நீராவது வந்து எனக்குக் காக்கட் ஆரத்தியையும் காலப்பூஜையையும் செய்வீராக!"

லக்ஷ்மண் மாமா உடனே எழுந்து நித்தியக் கிரமங்களை முடித்துக்கொண்டு பூஜைக்கு உண்டான சாமான்களை எடுத்துக்கொண்டு பூஜை செய்வதற்குச் சரியான நேரத்தில் வந்துசேர்ந்தார்.

அவர்  ஷிர்டியின் கிராம ஜோதிடர்; தினமும் காலைநேரத்துப் பூஜையைச் செய்த மாதவராவின் (சாமாவின்) தாய்மாமன்.

லக்ஷ்மண் மாமா வைதீக நெறிகளின்படி செம்மையாகக் கர்மாக்களைச் செய்த ஒரு சிறந்த பிராமணர்.  தினமும் விடியற்காலையில் ஸ்நானம் செய்துவிட்டு தூய ஆடைகளை அணிந்துகொண்டு பாபாவை தரிசனம் செய்துகொள்வார்.

பிறகு, அவர் பாபாவின் பாதங்களை அலம்பியபின் சந்தனமும் அக்ஷதையும் இட்டு மலர்களாலும் துளசி இலைகளாலும் அர்ச்சனை செய்வார். அதன்பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், நீராஞ்சனம் (மஞ்சள் நீர் ஆரத்தி) ஆகிய பூஜை விதிமுறைகளைச் செய்வார். கடைசியாக தக்ஷிணையும் சமர்பிப்பார்.

பிரார்த்தனை மந்திரங்களை ஓதிக்கொண்டே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார். பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, எல்லாருக்கும் பிரசாதம் அளித்துவிட்டு  நெற்றியில் திலகமும் இடுவார். பின்னர் அங்கிருந்து சென்றுவிடுவார்.

அங்கிருந்து சென்று விநாயகர், சனி தேவர், உமாரமணர் (சிவன்), அஞ்சனையின் புத்திரரான ஹனுமார் ஆகிய தெய்வங்களுக்குப் பூஜை செய்வார்.

இவ்வாறாக, இந்த கிராம ஜோதிடர் கிராமதேவதைகள் அனைத்திற்கும் நித்திய பூஜை செய்தார். இப்பொழுது பாபாவின் பூதவுடலுக்கு மிகுந்த பிரேமையுடன் சடங்குகளுடன் கூடிய பூஜையைச் செய்தார்.

லக்ஷ்மண் மாமா ஆதியிலிருந்தே நிட்டையுடன் பணி செய்வார். அதோடு கூட அவருக்கு ஒரு கனவுக் காட்சியும் கிடைத்திருந்தது. ஆகவே, அவர் காகட ஆரதிக்கு வேண்டிய பொருள்களைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தார். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டுப் பிரேமையுடன் முகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு, சாயியின் கைகளையும் பாதங்களையும் அலம்பியபின், ஆசமனத்துக்கும் நீரும் அளித்துவிட்டு விதிமுறைகளின்படி பூஜைசெய்தார்.

மௌலவியும் மற்ற முஸ்லீம்களும் உடலைத் தொடக்கூடாது என்று ஆட்சேபித்தனர். லக்ஷ்மண் மாமா அதை பொருட்படுத்தாது சந்தனம் இட்டபின் பூஜையை முழுமையாகச் செய்து முடித்தார்.

பூதவுடலோ, மாமா ஆராதனம் செய்துவந்த தேவர் சமர்த்த சாயியினுடையது; அது இந்துவின் உடலா, முஸ்லீமின் உடலா என்ற எண்ணம் மாமாவுக்கும் கனவிலும் ஏற்பட்டிருக்காது. 



Thursday, 30 May 2024

 ஷீர்டி சாயிசத்சரிதம்

ஆகவே, அடியேன் வணக்கம் செய்து சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் விடுக்கிறேன். பயபக்தியுடன் கேளுங்கள்.

நாம் உத்தமர்களுடைய சங்கத்தையே நாடுவோமாக. குருவின் பாதங்களில் சுயநலம் பாராத அன்பு செலுத்துவோமாக. குருவின் புகழைப் பாடுவதில் பேரார்வம் காட்டி நிர்மலமான பக்தியைப் பெருக்குவோமாக!

குருவிடம் என்றும் பிளவுபடாத அன்பை வளர்ப்போம். நம்முடைய சினேகபாசம் என்றும் அறுபடாதிருக்கட்டும். பக்தர்கள் சுகத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்துக்கொண்டு இரவு பகலாக குருவின் பாதங்களில் மூழ்கட்டும். (நிற்க)

சிறிது நேரம் கழிந்த பிறகு, பாபாவின் சிஷ்யர்களும் எல்லா கிராம மக்களும் பாபாவின் பூதவுடலை என்ன பண்ணுவது சிறப்பு என்று நிச்சயம் செய்வதற்காக கலந்து ஆலோசித்தனர்.

பெரும்பக்தரான ஸ்ரீமான் புட்டீ, நடக்கப்போகும் சம்பவத்திற்கு ஒரு நினைவுச்சின்னம் போல ஓர் அழகிய விசாலமான மாளிகையை ஏற்கெனவே கட்டியிருந்தார்.

பின்னர், பாபாவின் பூதவுடலை எங்கு அடக்கம் செய்வது என்ற விஷயம் பற்றி முப்பத்தாறு மணி நேரம் விவாதம் நடந்தது. கடைசியில், எது நடக்கவேண்டுமென்று இருந்ததோ அதுவே நடந்தது.

ஒருவர் கூறினார், "இந்துக்களை பாபாவின் உடலைத் தொடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது . முசல்மான்களின் கபரஸ்தானத்திற்கு (இடுகாட்டிற்கு ) சடங்குபூர்வமான ஊர்வலமாக எடுத்துச் சொல்வோம்."

மற்றொருவர் கூறினார், "பூதவுடல் திறந்தவெளியில் வைக்கப்படவேண்டும். ஓர் அழகிய சமாதி கட்டுவோம். அங்கேயே அது நிரந்தரமாக இருக்கட்டும்."

குஷால் சந்தும் அமீர் சக்கருங்கூட  அவ்வாறே நினைத்தனர். அனால், "இந்த சரீரத்தை வாடாவில் வையுங்கள்" என்பவையே பாபா திணறித் திணறிப் பேசிய கடைசி வார்த்தைகள்.

ராமச்சந்திர பாட்டீல் என்னவோ, மிகக் கறாராக இருந்தார். அவர் கிராம அதிகாரிகளில் ஒருவர். பாபாவிடம் பிரேமை மிகுந்த தொண்டர். அவர் கிராம மக்களிடம் சாற்றினார்.

"உங்களுடைய சிந்தனைகள் எப்படியிருந்தாலும் சரி, அவை எங்களுக்கு அடியோடு ஒப்பிதம் இல்லை. சாயியை புட்டீ வாடாவிற்கு வெளியேயோ வேறெங்குமோ கணநேரங்கூட வைத்திருக்கக்கூடாது. "

இந்துக்கள் அவர்களுடைய தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள படியும், முசல்மான்கள் அவர்களுடைய மதநெறிகளின் பிரகாரமும், எது செய்யத் தகுந்தது, எது செய்யத் தகாதது , என்பது பற்றி இரவு முழுவதும் பேசித் தீர்த்தனர்.

அங்கு, அவருடைய வீட்டில் லக்ஷ்மன் மாமா தூங்கிக்கொண்டிருந்தபோது, விடியற்காலை நேரத்தில் பாபா அவருடைய கனவில் தோன்றி அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, "சீக்கிரமாக எழுந்து வாரும்" என்று சொன்னார். -

 


 

Thursday, 23 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களையும் பக்தரல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக சாயிநாதரை இழந்தோம்! அவருடைய வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வரும்போது நம்முள் ஓர் அனுதாப அலை எழுகிறது.

மஹராஜ் பக்தர்களிடம் சொல்லியிருந்தார், "எட்டு வயது பாலகனாக மறுபடியும் என்னையே நான் மக்களிடையே வெளிப்படுத்திக்கொள்வேன்".

இது ஒரு ஞானியின் திருவாய்மொழி. யாரும் இதை விருதாவான (பயனற்ற) சொல்லாக நினைக்கக் கூடாது. சக்கரபாணியான மஹாவிஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் இவ்வாறுதான் செய்தார்.

சுந்தரமான காந்தியுடன் நான்கு சக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, சிறைச்சாலையில் , தேவகியின் எதிரில், ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வயது பாலகனாகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்.

அங்கு, அக் காலத்தில், பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதாரம்.  இங்கு, இக் காலத்தில், தீனமான பக்தர்களை உத்தாரணம் (தீங்கிலிருந்து மீட்கை - தூக்கி நிறுத்துகை) செய்வதற்காக அவதாரம். இவ்வாறிருக்கையில், நாம் சந்தேகம் பிறக்க அனுமதிப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது? ஞானிகளின் லீலைகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்லவோ!

இது ஒரு ஜென்மத்தில் ஏற்பட்ட பந்தமா என்ன? பாபாவுக்கு பக்தர்களிடம் ஏற்பட்ட பூர்வஜென்ம சம்பந்தம்; எழுபத்திரண்டு தலைமுறைகளாக ஏற்பட்ட ருணானுபந்தம், இவ்வாறு பாபா பேச்சுவாக்கில் பலரறிய சொல்லியிருக்கிறார்.

அன்புபிணைப்புகளால் இவ்விதமாகக் கட்டுண்ட மஹராஜ், சிறுபயணமாக எங்கோ சென்றிருக்கிறார்; மறுபடியும் திரும்பிவிடுவார் என்ற பூரணமான நம்பிக்கை பக்தர்களுடைய மனத்தில் இருக்கிறது.

நேருக்குநேராக தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர்.

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.

சாவடியில் குப்த (ஒளிந்த) ரூபம்; மசூதியில் பிரம்ம ரூபம்; சமாதியில் சமாதி ரூபம்; மற்றதா இடங்களிலும் சுக சொரூபம்.

ஆயினும், தற்சமயத்தில், சமர்த்த சாயி இங்கு வாசம் செய்வதற்குப் பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும், அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும், பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்கவேண்டும்.

தேவர்கள் அவர்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடுவர்.  ஞானிகளோ இருக்குமிடத்திலேயே பிரம்ம ஸ்திதியை (நிலையை) அடைந்துவிடுவர். பேரானந்தத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஞானிகளுக்குப் போவதும் வருவதும் கிடையா. 



Thursday, 16 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அறிவாளியோ மூடனோ, தம்மை அண்டியவர் அனைவரிடமும் பாபா அத்தியந்த (மிகுந்த) அன்பு செலுத்தினார். தம்முடைய ஜீவனை விட அவர்களை அதிகமாக நேசித்தார். அவர்களுக்குள் சிறிதளவும் பேதம் பார்க்கவில்லை.

அவர் மனித உருவத்தில் நடமாடிய தெய்வம். அதை மக்களுக்கு நேரிடை அனுபவமாக அளித்தார். ஆயினும், அனைவரும் அதை உணரத் தவறினார். இதற்குக் காரணம் , பாபா அவர்களிடம் காட்டிய இளகிய மனமும் பாசமும்தான்.

சிலருக்கு அவர் செல்வச்செழிப்பை அளித்தார். சிலருக்கு சந்ததியையும் சம்சார சுகங்களையும் அளித்தார். இவற்றால் பெரும்பிரம்மை அடைந்த மக்கள், ஞானத்தை பெறும் வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்.

பாபா எவரிடமாவது கேலியும் சிரிப்புமாகப் பேசினால், வேறு எவரிடமும் காட்டாத அற்புதமான அன்பைத் தம்மிடம் மட்டும்தான் பாபா காட்டுகிறார் என்றெண்ணி அந்த நபர் தலைக்கனம் கொள்வார்.

பாபா எவரிடமாவது கோபாமாகப் பேசினால்,"பாபாவுக்கு இவரைப் பிடிக்கவில்லை. பாபா நம்மையே அதிகமாக மதிக்கிறார்.  மற்றவர்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுப்பதில்லை" என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

பாபா அளித்த சலுகைகளைப் பெற நாம் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயன்றபோதிலும் , பாபா அந்த ரீதியில் கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறாக, நாம் கடமைகளை மறந்துபோய் க்ஷேமலாபமடையாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.

தெய்வீக நிகழ்ச்சியாக பர பிரம்மமே மனித உருவமேற்று நம்மருகில் வந்து நின்றது. ஆயினும் நாமோ, செய்யவேண்டிய காரியங்களை மறந்துவிட்டு அவர் செய்த வேடிக்கைகளிலும் தமாஷிலும் பிரியம் காட்டினோம்!

வந்தவுடனே பாபாவை தரிசனம் செய்வோம். மலர்களையும் பழங்களையும் சமர்ப்பணம் செய்வோம். தக்ஷிணை கேட்டால் தடுமாறுவோம்; அவ்விடத்திலிருந்து நழுவிவிடுவோம்.

எங்களுக்கு நன்மை தரும் உபதேசங்களை இதமாக அளித்தீர். ஆனால், எங்களுடைய அற்பபுத்தியையும் சிறுமையையும் கண்டு வாடித் துயருற்று சீக்கிரமாகவே உங்களுடைய நிரந்தரமான இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டீர் என்று நான் நினைக்கிறேன்.

இனிமேல் ஆத்மானந்த நிலையில் தேவரீர் மூழ்கியிருக்கும் அற்புதமான காட்சியை இக் கண்களால் காணமுடியுமா? ஆனந்தமே திரண்டுவந்தது போன்ற உருவத்தைப் பல ஜென்மங்களுக்கு காணமுடியாதவாறு இழந்துவிட்டோம்!

அந்தோ!  நம்முடைய கர்மவினையின் கொடுமைதான் என்னே! நமக்கு மிக அருகிலிருந்த சாயின் என்னும் உயிர்த்துணைவரை இழந்துவிட்டோம். நம்மிடம் காரணமேயின்றி தயை காட்டும் தெய்வம் இன்று நமக்கு அன்னியமாகிவிட்டதே!

"யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது." பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. நம் இஷ்டம்போலச் சண்டையும் சச்சரவும் செய்தோம். 



Thursday, 9 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

தேவரீர் தொண்டை வறண்டுபோகும்வரை செய்த உபதேசங்கள் எங்களுடைய உதாசீனத்தால் பிரயோஜனமில்லாமால் போனது கண்டு மனமுடைந்துபோய், காதுகளின் வழியாகக் கபாலத்திற்கு போதனை ஏற்றும் முயற்சியைக் கைவிட்டுவிட்டீரோ!

நாங்கள் செய்த அசட்டையால் எங்கள்மீது முன்பிருந்த பிரேமையை மறந்துவிட்டீரோ? அல்லது பூர்வஜென்ம சம்பந்தம் இன்றோடு முடிந்துவிட்டதோ? ஒருவேளை, உமது அன்பெனும் தெய்வீக ஊற்று வறண்டுபோய் விட்டதா என்ன?

தேவரீர் இவ்வளவு சீக்கிரமாக மறைந்து விடுவீர்கள் என்பது முன்பாகவே தெரிந்திருந்தால், எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். மக்கள் ஆரம்பத்திலிருந்தே உஷாராக இருந்திருப்பார்கள்.

ஆனால், நாங்கள் அனைவரும் சோம்பியிருந்தோம். மந்தத்திலும் உற்சாகமின்மையிலும் மூழ்கி வெறுமனே உட்கார்ந்திருந்தோம். கடைசியில் ஏமாறிப்போனோம். நாங்கள் இருத்தலும் இல்லாமலிருத்தலும் சரிசமமாகிவிட்டது.

குருத் துரோகிகளாகிய நாங்கள் எச் செயலையும் நேரத்தோடு  செய்யவில்லை.  அமைதியாக அமர்ந்திருந்தபோதிலும் ஏதாவது பலன் கிடைத்திருக்கும். நாங்கள் அதையும் செய்யவில்லலை!

நெடுந்தூரம் பயணம் செய்து ஷிர்டிக்கு போய் அங்கு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒரு புனிதத் தலத்தில் இருக்கிறோம் என்பதை அடியோடு மறந்து அங்கும் இஷ்டப்படி நடந்து கொண்டோம். 

பக்தர்கள் பலவகை - புத்திமான், பற்றுடையோன், விசுவாசமுள்ள அடியவன், தர்க்கவாதி என்று நானாவிதமாக இருந்தனர். அவர்கள் அனைவருடைய குணங்களும் தெரிந்திருந்தும் பாபா எல்லாரையும் ஒன்றாகவே பாவித்தார். அதிகம், குறைவு என்னும் பேதமே அவரிடம் இருந்ததில்லை.

உலகத்தில் கடவுளைத் தவிர வேறெதையும் அவர் காணவில்லை. கண்ணோட்டம் அவ்வாறு  இருந்ததால், அவர் தம்மைத் தனிமைப்படுத்தியோ வேறுபடுத்தியோ இரண்டாவதாகக் கருதவில்லை.

பக்தர்கள் கூட கடவுள்தான். குருவும் அவர்களிடமிருந்து வேறுபட்டவர் அல்லர். இரு  சாராரும் தங்களுடைய உண்மையான சொரூபத்தை மறந்துபோவதால், தங்களைப் பரஸ்பரம் பேதம் பிரித்துக் காண்கின்றனர்.

சிந்தித்துப்பார்த்தால் நாமும் கடவுள்தான். ஆனால், நம்முடைய உண்மையான சொரூபம் மறந்துபோகும்போது, பேதத்தின் லக்ஷணங்கள் (இயல்புகள்) தோன்றுகின்றன. அதுவே, பெரும்வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பதுபோல ஒரு சக்ரவர்த்தி கனவு காண்கிறார். ஆயினும், விழிப்பு ஏற்பட்டவுடன் தம் சுயநிலை மாறாததை உணர்கிறார்.

விழிப்பு நிலையில் செய்யும் செயல்களெல்லாம் கனவு நிலையில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், உண்மையான விழிப்பு பூரணமான அத்துவைத நிலையில் கரையும்போதுதான் ஏற்படுகிறது.