ஷீர்டி சாயி சத்சரிதம்
பூஜைக்குத் தகுதியான சரீரம் ஜீவனுடன் இருந்தபோது பூஜை ஓர் உற்சவம் போல் நடத்தப்பட்டது. அவ்வுடல் ஜீவனை இழந்துவிட்ட போதிலும், பூஜை வைபவம் வெறும் உபசாரம் ஆகிவிடக்கூடாது.
மேலும், பாபாவை அந்த நிலையில் பார்த்த லக்ஷ்மன் மாமா ஏற்கெனவே துக்கத்தால் தாக்கப்பட்டிருந்தார். மறுபடியும் தரிசனம் செய்வது முடியாதகாரியமாதலால், கடைசிப் பூஜையைச் செய்வதற்காக வந்திருந்தார்.
கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. சாயியின் நிலையைப் பார்த்து அவரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கைகளும் கால்களும் நடுங்கின. மாமாவின் மனம் உடைந்து சுக்குநூறாகியது.
ஆனபோதிலும், மூடியிருந்த கையை விரித்து பீடாவையும் தக்ஷிணையையும் அதில் வைத்தார். உடலை முன்பிருந்தவாறே மூடிவிட்டு மாமா அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர், தகுந்த நேரத்தில் பாபாசாஹேப் ஜோக் தினமும் செய்ததுபோல் மசூதியில் சாயியின் மதியநேர ஆரதியைச் செய்தார். மற்றவர்களும் அவருடன் இருந்தனர்.
இப்பொழுது, இதன் பின்னர் என்னென்ன நடந்தது என்பது அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படும். மிகவும் சிறப்பான இடத்தில பாபாவின் பூதவுடலுக்குச் செய்யப்பட்ட சம்ஸ்காரங்கள் (இந்துமத சடங்குகள்) பற்றியும்,-
அவருடன் பல ஆண்டுகள் கூட்டுறவு கொண்டதும், அவரால் ஒரு நினைவுச் சின்னமாக மிகவும் நேசிக்கப்பட்டதுமான செங்கல் உடைந்து, தேகத்திற்கு முடிவு வரப்போவதை சூசகமாக காட்டிய அபசகுன நிகழ்ச்சியைப்பற்றியும்,-
கொடுமையான தேஹ அவஸ்தை காரணமாக, முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாபா பிரமாண்டத்தில் பிராணனை வைத்தார். இப்பொழுது நடந்தது போல் அப்பொழுது நடந்திருந்தால் எவ்வளவு மகத்தான பேரிழப்பு நேர்ந்திருக்கும் என்பதுபற்றியும்,-
அந்த சமயம், பக்தர் மகால்சாபதி எவ்வாறு பாபாவின் உடலை இரவுப்பகலாகப் பாதுகாத்தார் என்பதுபற்றியும், எல்லாரும் நம்பிக்கை இழந்தபோதிலும், பாபா எதிர்பாராதவிதமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்ததுபற்றியும் விவரிக்கப்படும்.
மரணபரியந்தம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்தவர் - யோகாச்சாரியார் - ஞானிகளின் சிகரமான ஞானி - அவருடைய ஐசுவரியத்தை (ஈசுவரத் தன்மையை) யாரால் விவரிக்க முடியும்?
எவருடைய மகத்துவம் அத்தகையதோ, அவரை சத்துவ பாவத்துடன் வணங்குவோமாக ! இந்த தீனன் ஹேமாட் அனன்னியமாக அவரை சரணடைகிறான்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயீ சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'மஹாசமாதி' என்னும் நாற்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
No comments:
Post a Comment