valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 12 March 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, ஒரு ஞானியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரயத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம். அனைத்தையும் இயல்பாகவே அறியும் ஞானிகள் நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.


முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் தொடர்வோம். கேட்பவர்கள் கவனமான சித்தத்துடன் கேளுங்கள்.


ஆப்பா, டானே நகரில் வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் வேலை நிமித்தமாக பிவண்டிக்குப் போக வேண்டியிருந்தது. எட்டு நாள்கள் கழித்துத் திரும்பி வருவேன், என்று சொல்லிவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினார்.


அவர் கிளம்பி இரண்டு நாள்கள்கூட ஆகவில்லை. இங்கு, டானேவில் அபூர்வமான சம்பவமொன்று நிகழ்ந்தது. ஒரு பக்கீர் ஆப்பாவின் வீட்டு வாசலுக்கு வந்தார்!


அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் சாயியே வந்திருக்கிறார் என்று நினைத்தனர். நகத்திலிருந்து சிகைவரை, உருவத்திலும் சாயலிலும் அங்க அமைப்பிலும் அவர்கள் வைத்திருந்த நிழற்படத்தை போலவே பக்கீர் இருந்ததைக் கண்டனர்.


ஆப்பாவின் மனைவியும் குழந்தைகளும் பக்கீருடைய முகத்தையே உற்றுப்பார்த்து வியப்படைந்தனர். பாபாவே வந்திருக்கிறார் என்று நினைத்தனர்.


அவர்களில் யாருமே பாபாவைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும் நிழற்படத்திற்கும் பக்கீருக்கும் இருந்த உருவ ஒற்றுமையால் அவர்தான் பாபா என்று நினைத்தனர்; உண்மையை அறிந்துகொள்ள ஆர்வமுற்றனர்.


ஆகவே பக்கீரைக் கேட்டனர். "நீங்கள்தான் ஷிர்டியில் வசிக்கும் சாயியா?" பக்கீர் என்ன பதிலுரைத்தார் என்பதைக் கருத்தூன்றிக் கேளுங்கள்.


"நானே ஷீர்டி சாயி பாபா இல்லை. ஆனால், நான் அவருடைய ஆணைக்கு கட்டுப்பட்ட அடிமை. அவருடைய ஆக்ஞயின்படி குழைந்தைகுட்டிகளின் நலன்பற்றி விசாரிப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்".


பிறகு பக்கீர் தக்ஷிணை கேட்க ஆரம்பித்தார். குழந்தைகளின் தாயார் உடனே ஒரு ரூபாயை எடுத்து சம்பாவனையாகக் கொடுத்தார். அவரும் உதீ பிரசாதம் அளித்தார்.


சாயி பாபாவின் உதீயை ஒரு பொட்டலத்தில் அப் பெண்மணிக்கு அளித்தபின் பக்கீர் சொன்னார், "இதை பாபாவின் படத்திற்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள். சௌக்கியமாக வாழ்வீர்கள்".


இவ்விதமாக, வந்த காரியத்தை முடித்துக்கொண்டு, "சாயி எனக்காக வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பர்" என்று சொல்லிவிட்டுப் பக்கீர் விடைபெற்றுக்கொண்டார்.


அங்கிருந்து கிளம்பியவர் தாம் வந்த வழியே சென்றார். ஆப்பாவின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி, உண்மையில் சாயியின் அபூர்வமான லீலைகளில் ஒன்றே!


ஆபாசாஹேப் பிவண்டிக்கென்னவோ சென்றார். ஆனால், அவருடைய வண்டிக்கு குதிரைகள் நோயுற்றதால், மேற்கொண்டு பயணத்தை தொடரமுடியாமல் வீடு திரும்ப நேர்ந்தது.


 

Thursday, 4 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, சந்தனம், அக்ஷதை, மலர்கள் இவற்றால் பூஜை சையது நைவேத்தியமும் சமர்ப்பணம் செய்துவந்தார். 

எப்பொழுது என் கர்மவினைகள் தீரும்? எப்பொழுது சாயியை பிரதக்ஷயமாக தரிசனம் செய்யும் யோகம் கிடைத்து, என் ஏக்கம் நிறைவேறும்? இதுவே ஆப்பாவின் இதயதாபமாக இருந்தது. 

சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயியை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம். அனால், பாவமென்னவோ பூரணமாக இருக்க வேண்டும். 

சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதையொன்றைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். 

பலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த கீர்த்தங்கர் (பஜனை செய்பவர்) ஒருவர், நவீன துகாராம் என்று புகழ் பெற்றவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்குச் சென்றார். 

அதுதான் அவருடைய முதல் தரிசனம். அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும், அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார். 

"இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்". பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார், என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார். 

"பாபா ஷிர்டியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை. நானோ ஷிர்டிக்கு வருவது இதுதான் முதல் தடவை. பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?"

இதுபற்றித் திரும்பத் திரும்ப யோசித்தபின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்திற்கு ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது. 

பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது. அவர் நினைத்தார், "ஞானியரின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவர்களுக்கு இருக்கும் தாயன்பையும் பாரீர்!-

"இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாக காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே. அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும், பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!-

"ஆயினும், 'நான் மறந்துவிட்டேன்' என்று சொல்வது சரியாகாது. நான் நிழற்படத்திற்கு நமஸ்காரம் செய்ததைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை உடனே புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் என்னிடம் இல்லாததுதான் குறை.-

"பாபாவுக்கு என்னைத் தெரிந்திருந்தது; எனக்கு அது கொஞ்சங்கூட தெரியவில்லையே! ஞானிகள் ஞாபகமூட்டும்போதுதான் எல்லாமே மனத்திரைக்குத் திரும்பிவருகின்றன. 

எவ்வாறு நிர்மலமான தண்ணீரிலும் கண்ணாடியில் நம்முடைய பிரதிபிம்பத்தைப் பார்க்கிறோமோ, அவ்வாறே நிழற்படமும் ஒரு பிரதிபிம்பம்; மூல உருவத்தின் தெளிவான பிரதி. 


  

Thursday, 25 February 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்


ஒருமுகப்பட்ட மனதில் சாயிசிந்தனை பின்தொடரும். இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.

உலகியல் விவகாரங்களை விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும், இவ்வாறு மனத்தை அப்பியாசம் செய்தால், உலகியல் விஷயங்களின் மீதான மோஹம் தானாகவே விலகும். முயற்சிகளும் சுலபமாக வெற்றியடையும்.

பூமியில் பிறந்த தேகம் செயல் புரிந்தே ஆகவேண்டும். இதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆகவே, மனைவி, மக்கள், செல்வம், வீடு, வாசல் இவற்றை மனம் நிறையும்வரை தேடி அடையுங்கள்.

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் யதேஷ்டமாக நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு சத்குருவைப்பற்றிய சிந்தனையில்தான் இருக்கிறது. சங்கற்பங்களும் விகற்பங்களும் நஷ்டப்பட்டுப் போகும். விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்!

மஹானுபவரான சாயி, பக்தர்களின் பாவத்தைக் கண்டு அவர்களுடைய பக்தியைப் பாராட்டுவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.

விரும்பிய வேஷத்தை அணிந்து எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு மங்களம் அருள்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும்!

கதை கேட்பவர்களே! இது சம்பந்தப்பட்ட கதையொன்றை பயபக்தியுடன் கேளுங்கள். ஞானிகள் தம் பக்தர்களுக்காக இரவுபகலாக எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதை இக் காதை காட்டும்.

உங்களுடைய இதயக் கோயிலினுள் இக் காதை புகுமாறு, கதவுகளாகிய காதுகளைத் திறந்துவையுங்கள். பிறவி அச்சத்தையும் சங்கடங்களையும் கடப்பதற்கு அனுகூலமாக இருக்கும்.

சமீபத்தில் முடிவுக்கு வந்த, ஜெர்மனிக்கு எதிரான முதல் உலக மகாயுத்தம், எதிரியுடன் போரிடுவதற்காக ஒரு படையைத் தயார் செய்யவேண்டிய நெருக்கடியை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசாங்கம் பாரத பூமியின் எல்லா நகரங்களிலும் ராணுவத்திற்கு ஆள் சேர்த்தது.

ஆண்டு 1917 , டானே ஜில்லாவில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பக்தர் ஒருவருக்கு நல்ல நேரம் வந்தது. ஒரு வினோதமான நிகழ்ச்சி நடந்தது.

பக்தருடைய பெயர் ஆப்பாசாஹெப் குல்கர்நீ. சாயியின்  பிரபாவத்தாலும் கற்பனைக்கு எட்டாத லீலையாலும் அவருக்கு பக்திபாவம் ஏற்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாலாசாஹேப் பாடே அவர்களால் அளிக்கப்பட்ட பாபாவின் நிழற்படத்தை அவர் ஏற்கெனவே வழிபட்டுவந்தார்.




Thursday, 4 February 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்


பிறகு, உடல் சமாதியில் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, பாபா ஜீவிதமாக இருந்தபோதே நாராயண் ஜனீ பாபாவை இரண்டு தடவைகள் தரிசனம் செய்திருந்தார்.


சமாதி  கட்டிய பிறகு மூன்று ஆண்டுகள் கழிந்தன. தரிசனம் செய்யவேண்டுமென்ற பலமான ஆவல் இருந்தும் அவருக்குச் சரியான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இது அவருடைய மனத்தை நிம்மதி இழக்கச் செய்தது.


பாபா மஹாசமாதியான பின் ஓர் ஆண்டு கழித்து நாராயண் ஜனீயை வியாதிகள் பிடித்துவாட்டின. உலக வழக்கிலிருந்த அத்தனை மருந்துகளும் உபசாரங்களும் கையாளப்பட்டன.  எதுவும் பலனளிக்கவில்லை.


துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பினும், ஜனீ இரவுபகலாக பாபாவை தியானம் செய்தார். குருராஜருக்கு மரணமும் உண்டோ! பாபா ஜனீக்கு தரிசனம் அளித்தார்.


ஜனீ ஒருநாள் இரவில் கனவு கண்டார். கனவில், சாயி பூமிக்கு கீழேயிருக்கும் ஒரு நிலவறையில் இருந்து வெளிவந்து ஜனீ க்கு அருகில்  நின்று கொண்டு அவரிடம் ஆறுதலாக பேசினார்,-


"மனத்தில் கவலையைத் தேக்காதீர்; நாளை உதயகாலத்திலிருந்து நிவாரணம் ஆரம்பிக்கும். எட்டு நாள்களில், நீரே சுயமாக எழுந்து உட்காருவீர்".

எட்டு நாள்கள் இவ்வாறு கழிந்தன. பாபாவின் திருவாய்மொழி எழுத்துக்கெழுத்து உண்மையாகியது. நாராயண் ஜனீ மறுபடியும் எழுந்து நடமாட ஆரம்பித்தார். அவருடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை.


இவ்வாறு சில நாள்கள் கடந்தன. நாராயண் ஜனீ சமாதி தரிசனத்திற்காக ஷிர்டிக்கு வந்தார். அந்த சமயத்தில் இந்த அனுபவத்தை விவரமாக சொன்னார்.


பாபா பூதவுடல் தரித்திருத்தபோதுதான் உயிரோடிருந்தார் என்றோ, சமாதி ஆகிவிட்டதால் மரணமடைந்து விட்டார் என்றோ, நாம் எப்படி நினைக்கவோ சொல்லவோ முடியும்? பாபா ஜனனமரணங்களுக்கு அப்பாற்பட்டவர்; நகரும் நகராப் பொருள்கள் அனைத்தும் நிறைந்த சிருஷ்டியையே வியாபித்திருக்கிறார் அல்லரோ!


அரணிக் கட்டையினுள் மறைந்திருக்கும் தீ, கடைந்தால் எப்படி வெளிப்படுகிறதோ அப்படியே பக்தர்களுக்கு சாயி!


ஒருமுறை சாயியைப் பிரேமையுடன் நோக்கினால், அவர் ஜென்மம் முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். அனன்னிய பிரேமையைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் வேண்டுவாரில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார்!


அந்நேரத்தில் காலமோ இடமோ அவருக்கு குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குத் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.


இம்மாதிரியாக அவர் செயல்படும்போது நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, அவருடைய பாதங்களின் மேல் மனத்தைச் செலுத்தினால், தியானமும் தாரணையும் (மனம் ஒருமுகப்படுதல்) விருத்தியடையும்.  




Thursday, 28 January 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

வழியைக் கேட்டு விசாரித்துக்கொண்டு சுலபமாக நானாவின் இல்லத்தைச் சென்றடைந்தார். தாழ்வாரத்தில் சிறிது நேரம் உட்காரலாம் என்று ஆயத்தம் செய்தபோது நானா அவரை உள்ளே வரும்படி அழைத்தார்.

ஒருவரையொருவர் சந்தித்தனர். புவா உடனே உதீயையும் ஆரதிப் பாடலையும் நானாவின் எதிரில் வைத்து, நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்.

இதில் அற்புதம் என்னவென்றால், நானாவின் மகள் பிரசவிக்க முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது இந்த உதீ வந்துசேர்ந்தது!

பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக, நவசண்டி ஹோமமும் துர்க்கா சப்தசதி பாராயணமும் நடந்துகொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டா கோசாவி பெருவியப்பில் ஆழ்ந்தார்.

பசியால் வாடியவனுக்குச் சற்றும் எதிர்பாராமல் தட்டு நிறைய சுவையான சாப்பாடும் இனிப்புகளும் கிடைத்தது போலவும், சகோர பட்சிக்கு அமிருதம் கிடைத்தது போலவும் நானாவுக்கு அந்நேரத்தில் உதீ கிடைத்தது. இது நானா உணர்ந்தவாறு.

நானா தம் மனைவியைக் கூப்பிட்டு, சிறிது உதீயைத் தண்ணீரில் கரைத்து மக்களுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டுத் தாமே ஆரதிப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்.

உடனே, வீட்டினுள்ளிருந்து செய்தி வந்தது. உதீ கலந்த நீர் உதடுகளில் பட்டவுடனே மகளுக்கு நிவாரணம் கிடைத்தது.

உதீ கலந்த நீர் வயிற்றின் உள்ளே சென்றவுடன் வலி குறைந்தது; மகளுக்குத் தடங்கல் ஏதுமின்றிப் பிரசவம் ஆயிற்று. சுகமகாப் பிரசவம் ஆனது கண்டு அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

நானாவை புவா வினவினார், "வண்டியோட்டி எங்கே? அவனை இங்கேயும் காணோமே? நீங்கள் எனக்காக அனுப்பிய குதிரை வண்டி எங்கே?"

நானா பதிலுரைத்தார், "குதிரை வண்டியா? நான் அனுப்பவில்லையே ! எனக்கு இதைப்பற்றி ஏதும் தெரியாதே. நீங்கள் வரப்போவதே எனக்குத் தெரியாதே; நான் எப்படி குதிரைவண்டி அனுப்புவேன்?"

புவா, குதிரை வண்டிப்பற்றி ஆரம்பித்திலிருந்து கடைசிவரை விவரமாக முழுக் காதையையும் சொன்னார். பாபாவின் தாயினும் சாலப் பரிந்தூட்டும் அன்பை எண்ணி நானா ஆச்சரியமடைந்தார்; மனம் நெகிழ்ந்தார்.

குதிரைவண்டி என்ன! பியூன் என்ன! சாயிமாதாதான் இத்தனை உருவங்களுமெடுத்து நாடகமாடினாள்! பக்தர்களின்பால் கொண்ட அன்பினால், அவர்கள் சங்கடப்படும்போது தக்க தருணத்தில் ஓடோடி வருகிறாள் சாயிநாதா!

இப்பொழுது நாம் நாராயண் ஜனீயின் கதையைத் தொடர்வோம். சிலகாலம் கழிந்த பின்னர் பாபா மஹாசமாதி அடைந்தார்.

1918 ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகையின்போது, சுபதினமான விஜயதசமியன்று பாபா தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.

 


 

Thursday, 7 January 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

வண்டியைப் போலவே குதிரைகளும் கம்பீரமாக இருந்தன. அவை வாடகைவண்டிக் குதிரைகளா என்ன? இலக்கை நோக்கி உற்சாகத்துடன் ஓடி, மற்ற வண்டிகளைப் பின்னுக்குத் தள்ளின.

இரவு பதினொன்று மணியளவில் கிளம்பிய வண்டி, இரவெல்லாம் வேகமாக ஓடி விடியற்காலையில் ஓர் ஓடைக்கருகில் நின்றது.

வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிப்பதற்கு அவிழ்த்துவிட்டுவிட்டு, "நான் இதோ வந்துவிடுகிறேன். நாம் சாவகாசமாகச் சிறிது சிற்றுண்டி உண்ணலாம்" என்று சொன்னான்.

"நான் போய்க் கொஞ்சம் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவருகிறேன். பிறகு நாம் மாம்பழம், பேடா, குள் பாபடி (கோதுமை மாவை நெய்யில் வறுத்து, வெல்லம் சேர்த்துச் செய்யும் இனிப்பு) எல்லாம் உண்ணலாம். அதன் பிறகு குதிரைகளை பூட்டிக்கொண்டு நம் பயணத்தைக் தொடரலாம்" என்று வண்டியோட்டி கூறினான்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கோசாவியின் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டது. 'தாடி வைத்துக்கொண்டு முஸ்லீமைபோல் காட்சியளிக்கும் இவன் அளிக்கும் சிற்றுண்டியை நான் ஏற்றுக்கொள்வதா வேண்டாவா?'

ஆகவே, அவர் வண்டியோட்டியிடம் ஜாதிபற்றி விசாரித்தார். வண்டியோட்டி பதில் சொன்னான், "நீங்கள் ஏன் இப்படி சந்தேகத்தால் மனம் உளைகிறீர்கள்? நான் கார்வாலைச் சேர்ந்த இந்து க்ஷத்திரியன். ராஜபுதன ஜாதியைச் சேர்ந்தவன்.

"மேலும், இவ்வுணவுப் பொருள்கள் நானாவால் உங்களுக்கென்று என்னிடம் கொடுக்கப்பட்டன. ஆகவே, சிறிதளவும் சந்தேகம் இன்றி அமைதியான மனத்துடன் சிற்றுண்டி அருந்துங்கள்".

இவ்விதமாக கோசாவிக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் இருவரும் சிற்றுண்டி அருந்தினர். குதிரைகள் மறுபடியும் வண்டியில் பூட்டப்பட்டுப் பயணம் தொடர்ந்தது; சூரியோதய சமயத்தில் முடிந்தது.

குதிரைவண்டி கிராமத்தினுள் நுழைந்தவுடனே நானாவின் கச்சேரி (அரசு அலுவலகம்) தெரிந்தது. குதிரைகளும் சிறிது ஓய்வெடுத்தன. ராம்கீர் புவாவின் மனம் சாந்தியடைந்தது.

புவா சிறுநீர் கழிப்பதற்காகச் சாலையின் மறுபக்கம் சென்றார். அதே இடத்திற்குத் திரும்பிவந்தபோது அவருக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

வண்டியைக் காணோம்; குதிரைகளைக் காணோம்; வண்டியோட்டியையும் காணோம்! யாருமே இல்லாமல் அவ்விடம் வெறிச்சென்றிருந்தது.

ராம்கீர், 'இதென்ன அற்புதம்' என்று நினைத்து வியந்தார். "என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தவர் எப்படி திடீரென்று எங்கோ போய்விட்டார்?".

இருந்தபோதிலும், நாணவைச் சந்திக்கவேண்டுமென்ற ஆவலில் புவா கச்சேரிக்குள் சென்றார். நானா அவரது இல்லத்தில் இருந்தாரென்று அறிந்தார். ஆகவே புவா நானாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார். 




Thursday, 31 December 2020


ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த எளிய சாதகப்பறவை நிர்மலமான தண்ணீராகிய
ஆனந்தத்தையே நாடுகிறது. இந்த மாதவனுக்கு அதை
அளித்து உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்;
ஓ, உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்.


                                      ஆரதி செய்கிறோமே ......(பல்லவி)

கோசாவி பாபாவிடம் கேட்டார், "என்னிடம் இரண்டு ரூபாய்தான் இருக்கிறது. நான் எப்படி ஜாம்நேருக்குச் சென்று, வீட்டிற்குப் போய்ச் சேர முடியும்?

பாபா சொன்னார், "நீர் தைரியமாகக் கிளம்பும். உம்முடைய தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்". சாயி பாதங்களில் நம்பிக்கை வைத்து கோசாவி உடனே கிளம்பினார்.

பாபாவின் ஆக்ஞய்க்குத் தலைவணங்கி உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, காரியமே கண்ணாக பாபாவின் அனுமதியுடன் பாபகீர் உடனே புறப்பட்டார்.

இப்பொழுது இருப்பதுபோல் அப்பொழுது ஜாம்நேருக்கு இருப்புப்பாதைத் தொடர்பு கிடையாது. பிரயாணம் சுலபம் இல்லை. கோசாவியின் சித்தம் கலங்கியது.

ரயிலேறி ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கி மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். 

ரயில் கட்டணம் ஒரு ரூபாய் பதினான்கு அணா; மிச்சம் இரண்டு அணாவை வைத்துக்கொண்டு மீதி தூரத்தை எவ்வாறு கடக்கமுடியும்?

இவ்விதமாகக் கலங்கிய கோசாவி, ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கிப் பயணச் சீட்டைத் திருப்பிக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது, சிறிது தூரத்தில் ஒரு பியூன் தெரிந்தான்.

பியூன், "உங்களில் யார் ஷிர்டியிலிருந்து வரும் பாபுகீர் புவா என்று எனக்கு விவரம் சொல்லவேண்டும்" என்று வெளியே வரும் பிரயாணிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பியூன் தேடிக்கொண்டிருந்த நபர் தாமே என்று அறிந்த கோசாவி, முன்னுக்கு வந்து, "நான்தான் அது; உமக்கென்ன வேண்டும்?" என்று கேட்டார்.

பியூன் சொன்னான், "சாந்தோர்கர் உமக்காக என்னை அனுப்பியிருக்கிறார். வாருங்கள், சீக்கிரமாக குதிரைவண்டியில் ஏறுங்கள். அவர் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்."

புவா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஷிர்டியிலிருந்து நானாவுக்குச் செய்தி போயிருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், சரியான நேரத்திற்கு குதிரைவண்டி வந்திருக்கிறது. என்னுடைய பெரிய தொல்லை தீர்ந்தது.

மீசை, தாடி, கிருதாவெல்லாம் வைத்துக்கொண்டும் பளிச்சென்று முழுக்காற் சட்டை அணிந்துகொண்டும் பியூன், பார்ப்பதற்கு சாமர்த்தியசாலியாகத் தெரிந்தான். குதிரைவண்டியும் அழகாக காட்சியளித்தது.