valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday, 25 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆனால், இவ்வாறு நடந்தது என்பதென்னவோ உண்மை. தாசகணு ஆச்சரியமடைந்தார். அவருடைய சந்தேகம் தெளிந்து, ஈசாவாஸ்யத்தின் அர்த்தம் புரிந்துவிட்டது.

இந்தத் திட்டங்களும் யுக்திகளும் எதற்காக? அங்கேயே, அப்பொழுதே, பாபாவே இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்திருக்கலாமே என்று கதை கேட்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.

அவரே, அங்கேயே அதைச் செய்திருக்க முடியும். ஆனால், இந்த சம்பவத்தின் மஹிமை எவருக்கும் கிடைத்திருக்காது. ஏழை வேலைக்காரச் சிறுமியினுள்ளும் இறைவன் உறைகின்றான் என்பதையே பாபா நிதரிசனமாகாச் செய்து காண்பித்தார்.

ஆத்மாவைப்பற்றிய ஞானத்தை அளிப்பதே எல்லா உபநிஷதங்களின் சீரிய நோக்கமாகும். அதுவே மோக்ஷதர்மத்தின் சாரம்; அதுவே ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசமுமாகும். 


Thursday, 19 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்தச் சிறுமியின் வறுமை இறைவனின் ஓர் அம்சம்; நைந்துபோன புடவையிலும் அந்த அம்சம் இருந்தது. தானம் கொடுத்தவர், தானம் கொடுத்த பொருள், தானம் கொடுத்த செய்கை - இவை அனைத்திலும் ஊடுருவி இருப்பதும் அந்த ஒன்றான பரம்பொருளே.

"நான்", "என்னுடையது" என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டு பற்றற்ற செய்கைகளை செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதை தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே."

இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி; இதனுடைய பிரமாணம் பலரால் உணரப்பட்டது. வாழ்நாள் முழுவுதும் ஷிர்டியை விட்டு எங்கும் செல்லாமலேயே, பக்தர்களுக்கு அவர் எங்கும், எதிலும் - ஜனக்கூட்டம் நிறைந்த இடங்களிலும் ஜனநடமாட்டமே இல்லாத வனங்களிலும்-  காட்சி அளித்தார்.

நினைத்த மாத்திரத்தில், அவர் சிலருக்கு மச்சித்தர்க்கட்டிலும் பலருக்கு கோல்ஹாபூர், சோலாப்பூர், இராமேச்வரம் போன்ற நகரங்களிலும் காட்சியளித்தார்.

சிலருக்கு தாம் எப்பொழுதும் இருக்கும் உருவத்திலும் உடையிலும் காட்சியளித்தார். மற்றவர்களுக்கு பகலிலோ, இரவிலோ, விழித்திருக்கும்போதோ, கனவிலோ, அவர்களைத் திருப்தி செய்யும் வகையில் தரிசனம் அளித்தார்.

இம்மாதிரியான அனுபவங்கள் ஒன்றில்லை, இரண்டில்லை! ஓ, நான் எத்தனையைச் சொல்லி வர்ணிப்பேன்? பாபா ஷிர்டியில் வசித்தாலும் எவரும் அறியாதவாறு எங்கெங்கோ சென்றுவந்தார்.

இந்த வேடிக்கையைப் பாருங்கள்! யார் இந்தச் சிறுமி? யாருக்கு உறவு? அவள் ஓர் ஏழை வேலைக்கார பெண். ஆரஞ்சு நிறப்புடைவையைப் பற்றி பாட்டு அவளுடைய வாயிலிருந்து எவ்வளவு சகஜமாக வெளிவந்தது!

பாபாவிடம் சந்தேகம் எழுப்பப் படவேண்டும், வீடு வேலை செய்யும் சிறுமி விடையளிக்க வேண்டுமா? அதுவும் காகாவின் வீட்டில் இருந்துகொண்டு! ஈதனைத்தும் மாயையின் விளையாட்டன்றோ?

முதலாவதாக, அச் சிறுமி அங்கிருப்பாள் என்பது பாபாவுக்கு எப்படித் தெரிந்திருந்தது? குறிப்பிட்ட காலத்தில் அவள் எப்படி உபநிஷத விளக்கமளிக்கும் பாட்டைப் பாடினாள்?


Thursday, 12 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பரிதாபகரமான வறுமையில் வாழ்ந்தும், உல்லாசமாகவும் குஷியாகவும் அவள் இருந்ததை பார்த்த தாசகணுவின் மனம் இரக்கத்தால் உருகி, அவர் மோரேச்வரிடம் சொன்னார்.

"உடம்பை சரியாக மறைக்காத அவளுடைய நலிந்த ஆடைகளை பாருங்கள். தயவுசெய்து, அவசியம் அவளுக்கு ஒரு புடவை வாங்கிக்கொடுங்கள். இறைவன் ஆனந்தமடைவான்; உங்களுக்கும் புண்ணியம் சேரும்."

மோரேச்வர் பிரதான் சுபாவமாகவே கருணையுள்ள மனிதர். தாசகணு விநயமாகக் கேட்டு கொண்டவுடனே ஓர் அழகான புடவையை வாங்கிகொண்டுவந்து அச் சிறுமியிடம் அன்பளிப்பாக கொடுத்தார்.

அச் சிறுமி புடவையைக் கண்டவுடன், சோளத்தையும் கம்பையும் கேழ்வரகையும் தினமும் உண்பவனுக்குப் பஞ்சபக்ஷ பாரமான விருந்து கிடைத்தாற்போல் மகிழ்ச்சியடைந்தாள்!

அடுத்த நாள் அச்சிறுமி புதுப்புடவையை அணிந்துகொண்டு வந்தாள். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தாள்; நடமாடினால். தன்னுடைய குதூகலத்தை வெளிப்படுத்த, மற்றப் பெண்களுடன் சேர்ந்துகொண்டு தட்டா மாலை ஆதிச்ச சுற்றி சுற்றி வந்தாள். புதுப்புடவை உடுத்திக்கொண்டதால் மற்றப் பெண்களைவிட கம்பீரமாக காட்சியளித்தாள்.  அப்புடைவையின் மீது அவள் மையல் கொண்டாள்!

ஆனால், அடுத்த நாளே தன்னுடைய புதுப்படவையை மடித்துச் சிறப்பான ஆடைகள் அடங்கிய மூட்டையில் கட்டிவைத்துவிட்டு, பழைய கந்தலாடையையே சுற்றிக்கொண்டு வந்தாள். ஆயினும் எவ்விதத்திலும் உற்சாகம் இழந்தவளாக காணப்படவில்லை!

புதுப்புடவையைக் காட்டிக்கொள்ளாமல் மடித்து வைத்துவிட்டு வந்திருந்தபோதிலும், தாசகணுவின் புதுக் கண்ணோட்டத்தில் அவளுடைய பழைய வறுமை காணாமற்போய்விட்டது.

புதுப் புடவையை வீட்டில் வைத்துவிட்டுப் பழைய கந்தலையே கட்டிக்கொண்டு வந்தாலும், அவளுடைய மனதில் வருத்தமென்பதே இல்லை. புதுப்புடவைதான் கிடைத்துவிட்டதே!

வறுமையின் காரணத்தால் கந்தலைக் கட்டிக்கொள்வதும் வசதி ஏற்பட்டபோதும் அதையே செய்வதும் - இதுதான் வறுமையை பெருந்தன்மையுடன் கழிக்கும் யுக்தி போலும். சுகமும் துக்கமும் மனதின் உணர்வுகள்தானே!

தாசகணுவின் புதிர் இவ்வாறு சிக்கறுக்கப்பட்டு, ஈசாவாஸ்ய உபநிஷத சந்தேகங்களை தீர்க்கும் விடைக்கு வழிகாட்டியது; அர்த்தபோதனை கிடைத்துவிட்டது.

இப்பிரமாண்டம் அனைத்திலும் இறைவன் நிறைந்திருக்கும்போது, இறைவன் இல்லாத இடத்தை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்?

அது பூர்ணம்; இதுவும் பூர்ணம். பூரணத்தில் இருந்து பூர்ணம் உதயமாகியுள்ளது. பூர்ணத்தினின்று பூரணத்தை எடுத்தும், பூரணமே எஞ்சி நிற்கின்றது. 


Thursday, 5 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஆஹா, இவள்தான் அந்த வேலைகாரச் சிறுமியா! யாருடைய கிராமியமான, செம்மையடையாத வாக்கிலிருந்து நான் ஈசாவாஸ்யத்திற்கு தெளிவு பெற்றேனோ அச்சிறுமியை நான் காண வேண்டும்". (தாச ணு)

அவர் வெளியில் வந்து பார்த்தபோது, வீட்டின் புறக்கடையில் பாத்திரங்களை தேய்த்துக்கொண்டிருந்த ஒரு குணபிச் சிறுமியையே கண்டார்.

தீக்ஷிதருடைய வீட்டில் நாம்யா என்று அழைக்கப்பட்ட வேலையாள் ஒருவன் இருந்தான். இச் சிறுமி அவருக்குத் தங்கை. விசாரணையில் இது தெரிய வந்தது.

ஆகவே இச் சிறுமிதான் காகா வீட்டின் வேலைகாரப் பெண்! அவருடைய சந்தேகங்கள் சிறுமியின் பாட்டினால் நிவாரணம் அடைந்தன. ஞானிகளால்  செய்ய முடியாதது ஏதும் உண்டோ! ஓர் எருமைமாட்டை வேதம் ஓத வைத்தார் ஞானேச்வர்! மஹராஜ்!

சிறுமியின் பாட்டு அவ்வாறிருந்தது; தாசகணுவின் மனம் திருப்தியடைந்து சமாதமானாகியது. பாபா விளையாட்டாகச் சொன்னார் என்று நினைத்த வார்த்தைகளின் மஹிமையை எல்லாரும் உணர்ந்தனர்.

சிலர், காகாவின் வீட்டுப் பூஜையறையில் அமர்ந்து தாசகணு பூஜை செய்து கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை கேட்டதாகச் சொல்கின்றனர்.

அப்படியேயிருந்தாலும் சரி, தாத்பரியம் ஒன்றுதான். பாபா தம் பக்தர்களுக்கு பலவிதமான யுக்திகளின்மூலம் போதனை செய்தார் என்பதையே நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

"நீ எங்கிருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னைக் கேள்வி கேள்! தேவையில்லாது எதற்காக காட்டிலும் வானத்திலும் திரிந்து விடைகளை தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.-

"நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை; பக்தர்களுடைய பாவத்திற்காக நான், எங்கும், எப்படியாவது தோன்றுவேன்."

அந்த எட்டு வயதுச் சிறுமி ஒரு கிழிந்துபோன மேலாக்கை அணிந்துகொண்டு ஆரஞ்சு நிறப் புடவையின் மேன்மையான தோற்றத்தை பற்றிக் கேட்பதற்கு இனிமையான பாட்டைப் பாடினாள்.

ஆஹா! தங்கச்சரிகை போட்ட அந்தப் புடவை எவ்வளவு அற்புதமாக இருந்தது! எவ்வளவு அழகான கரை! கண்கவரும் தலைப்பு வேறு! பாட்டை பாடிக்கொண்டே புடவையின் அழகில் மூழ்கிப்போனாள் அச்சிறுமி.

அவளுக்குச் சாப்பாட்டுக்கே  தகராறு; உடம்பை முழுமையாக மூடிக்கொள்ளவும் தேவையான உடை இல்லை. ஆயினும் அவள் எங்கோ பார்த்த ஆரஞ்சு நிற புடவையின் அழகை நினைத்துக் குதூகலம் நிரம்பியவளாக இருந்தாள்.


Thursday, 29 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி ஏதோ பரிஹாசமாக பேசினார் என்று மக்கள் நினைத்தாலும், அவ்வார்த்தைகளால் விளையக் கூடிய லீலையை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்!

வார்த்தைகள் கேலியாகச் சொல்லப்பட்டாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும் பாபா கூறிய வார்த்தைகள் வீண் போகா.

பாபாவின் திருவாய் மொழி வெறும் சொற்களல்ல; அவை பிரம்ம லிபியாகும். (பிரம்மாவால் ஜீவனின் தலையில் எழுதப்படும் விதி). அதில் ஒரு சொல்லும் வீண் போகாது; தக்க சமயத்தில் நடந்தேறிவிடும்.

இது தாஸ்கணுவின் திடமான நம்பிக்கை; மற்றவர்களுக்கு எப்படியாயினும் சரி. நம்பிக்கை எப்படியோ அப்படியே பலனும் விளையும்.

விசுவாசம் எப்படியோ அப்படியே அதனுடைய பலம். நம்பிக்கை எப்படியோ அப்படியே அதனுடைய பலன். உள்மனதில் எவ்வளவு பிரேமையோ அவ்வளவு தூய்மையான ஞானம் கிடைக்கும்.

ஞானிகளின் சிரோமணியாகிய சாயியின் வார்த்தைகள் எக்காலத்தும் பயனில்லாமல் போகா. 'பக்கதர்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வேன்' என்பது அவருடைய உறுதிமொழி.

குருவினுடைய வார்த்தைகள் என்னும் வீண்போகா. இக்காதையை மனா ஈடுபாட்டுடன் கேளுங்கள். பிறவிப்பிணிகள் அனைத்தும் ஒழியும்; ஆன்மீக சாதனை மார்க்கத்தில் முன்னேறுவீர்கள்.

தாசகணு விலேபார்லேவில் இருந்த காகா சாஹேப் தீக்ஷிதரின் வீட்டிற்குத் திரும்பினார். காகா வின் வீட்டு வேலைக்காரி எவ்வாறு காரியத்தை நிறைவேற்றப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.

அடுத்த நாள் விடியற்காலையில், தாசகணு ஆனந்தமான அரைத்தூக்க நிலையை அனுபவித்துக்கொண்டு படுக்கையில் படுத்திருந்தபோதே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஒரு குணபிச் சிறுமி (விவசாயம் செய்யும் இனம்) , காதுக்கினிய குரலில் பாடுவதைக் கேட்டார். பாட்டின் இனிமை தாசகணுவின் இதயத்தை கவர்ந்தது.

அந்தப் பாட்டின் நீண்ட ஆலாபனையும் சாஹித்யத்தின் (கவிதையின்) சொற்கட்டும் தாசகணுவின் இதயத்தை சுண்டியிழுத்தன. மனதை பறிகொடுத்து அப்பாட்டை கவனமாகக் கேட்டார்.

அப்பாட்டினுடைய அர்த்தம் அவருடைய மனதை ஈர்த்ததால், படுக்கையிலிருந்து சட்டென்று எழுந்துவிட்டார். ஒருமுகமான மனதுடன் அப்பாட்டைக் கேட்டபின் அவருள் மகிழ்ச்சி பொங்கியது.

"யார் மகள் இவள்? நல்ல ஸ்வரத்துடனும் கம்பீரமாகவும் பாடும் இந்தச் சிறுமி யார்? ஈசாவாஸ்யத்தின் புதிரை வாஸ்தவமாகவே விடுவித்துவிட்டாளே! இவள் யார்?" என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார்.   


Thursday, 22 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"என்னய்யா! இதில் என்ன பெரிய கடினம் இருக்கிறது? நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கே திரும்பிப் போகும்போது , காகாவின் வீட்டு வேலைக்காரி உம்முடைய சந்தேகத்தை நிவாரணமும் செய்துவிடுவாள்!"

காகாவென்று இங்கே குறிப்பிடப்பட்டவர் பாவூசாஹெப் தீக்ஷிதர், பாபாவினுடைய அத்யந்தமான(மிக நெருக்கமான) பக்தர்; மனதாலும் வாக்காலும் உடலாலும் பாபாவுக்கு சேவை செய்துவந்தவர்.

இந்த ஹரிபாவூ பம்பாய் நகரத்தின் புறநகர்ப்பகுதியான விலேபார்லேவில் வசித்து வந்தார்.

அவருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் ஹரி; மக்கள் அவரைப் பாவூசாஹெப் என்றழைத்தாலும், பாபா அவருக்கு முற்றிலும் வித்தியாசமான வேறொரு பெயரையே அளித்தார்.

காகா மஹாஜனியை 'பெரிய காகா' என்றும் நானா சாஹேப் நிமோன்கரை 'கிழவர் காகா' என்றும், பாவூசாஹெப்பை  சில சமயங்களில் 'நொண்டிக் காகா' என்றும் சில சமயங்களில் 'பம்பாய் காகா' என்றும் அழைத்தார்.

பெற்றோர் குழந்தைகளுக்கு ஒரு பெயரிடுகின்றனர்; ஜாதகத்தில் வேறொரு பெயர் காணப்படுகிறது. சில மனிதர்கள் பரிஹாஸப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். பெயரிடுவதில் விதவிதமான முறைகள் வழங்குகின்றன.

எப்பொழுது சாயி மஹராஜ் ஒரு பக்தருக்குப் பெயரிட்டாலும், அந்தப் பெயரே நிலைத்து விட்டது. பக்தர்களும் அதை அன்புடன் ஏற்றுக் கொண்டனர். பாபா அளித்த பெயரை ஒரு விருதாகவும் பட்டமாகவும் கருதினர்.

சில சமயங்களில் பிட்சு என்றும் சில சமயங்களில் காகா என்றும் தீக்ஷிதருக்கு பாபா முத்திரை அளித்தார். ஷிர்டியில் வாழ்ந்த மக்களிடையே காகா என்ற பெயரே பிரசித்தியாகிவிட்டது.

தாசகணு ஆச்சரியம் அடைந்தார். எல்லாருமே ஆச்சரியமடைந்தனர். என்ன! இதனை நபர்கள் இருக்க, காகாவின் வேலைக்காரியா! அவள் எப்படி புதிருக்கு விடையளிக்கப் போகிறாள்?

வேலைக்காரி, வேலைக்காரிதானே! அவளுக்கென்ன படிப்பிருக்கும்? அவளுக்கென்ன பொது அறிவும் ஞானமும் இருக்கும்? இதொன்றும் சரியாகத் தோன்றவில்லையே!

வேதங்களின் சூக்குமமான தாத்பரியங்களை விளக்குவதற்கு தேவையான பாண்டித்தியம் எங்கே? ஒரு வீட்டு வேலைக்காரியின் அறிவுறுத்திறம் எங்கே? சாயி மஹராஜ் ஏதோ பரிகாசம் செய்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.

பாபா ஏதோ பரிகாசம் செய்கிறார் என்றுதான் எல்லாருமே நினைத்தனர். ஆனால், தாசகணுவோ தமாஷாக சொன்னதையும் சத்தியமாகவே எடுத்துக் கொண்டார்.

மேலெழுந்த வாரியாக பார்த்த மக்களுக்கு பாபாவின் திருவாய் மொழி நையாண்டி வார்த்தைகளாகவே தோன்றியது. தாசகணு அவ்வாறு கருதவில்லை; அதை சத்திய வாக்காகவே எடுத்துக் கொண்டார். 


Thursday, 15 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

அதை பண்டிதர்களின் முன்பு வைத்தார். ஆஹா, ஊஹூ என்று விவாதம் நடந்தது. ஆயினும் சந்தேகத்தை யாராலும் நிவிர்த்தி செய்ய முடியவில்லை.

இதன் நடுவே தாசகணு ஏதோ வேலையாக ஷீர்டி செல்ல நேர்ந்தது. அவருடைய சந்தேகம் சுலபமாக நிவாரணமடைந்தது.

அவர் சாயி தரிசனம் செய்யச் சென்றார்; பாபாவின் பாதங்களில் நெற்றியை வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்; மனமகிழ்ச்சி அடைந்தார்.

ஞானிகளின் கிருபை கனிந்த பார்வை, திருவாய்மொழி, மலர்ந்த முகம் - இவையே பக்தகோடிகளுக்கு சகல மங்களங்களையும் கொண்டுவரும்.

தரிசனமாத்திரத்திலேயே சகல தோஷங்களும் அழியும். அவ்வாறிருக்க, ஞானிகளுடைய சந்நிதியிலேயே இருப்பவர்களின் புண்ணியத்தை யாரால் வர்ணிக்க முடியும்?

"ஓ, தாசகணுவா! எங்கிருந்து திடீரென்று வந்தீர்? சௌக்கியமாக இருக்கிறீரா? எப்பொழுதும் திருப்தியுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கீறீரா?" என்று பாபா குசலம் விசாரித்தார்.

தாஸ்கணு பதிலுரைத்தார், "உங்களுடைய கிருபையென்னும் குடையின்கீழ் வாழும்எனக்கு என்ன குறை இருக்க முடியும்? ஆனந்தம் நிரம்பியவனாக இருக்கிறேன்.-

"ஆயினும் உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும், உலகியல் உபசாரத்திற்காக இக் கேள்விகளை கேட்கிறீர், நீங்கள் ஏன் குசலம் விசாரிக்கிறீர்கள் என்று என் மனதுக்கும் தெரிந்திருக்கிறது-

"நீங்களே என்னை ஒரு வேலையை ஆரம்பிக்க வைக்கிறீர்கள். வேலை ஓர் அளவிற்க்கு உருவெடுக்கும்போது திடீரென்று ஒரு தடங்கலை ஏற்படுத்துகிறீர்கள். யார், எவ்வளவு முயன்றாலும் தடங்கலை விலக்க முடியவில்லை!"

இவ்வாறாக சம்பாஷணை தொடர்ந்தது. தாசகணு பாபாவின் பாதங்களை பிடித்து விட்டுக்கொண்டே மெதுவாக, 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதினி' சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டார்.

"பாபா, ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை நான் உட்கார்ந்து எழுதத் தொடங்கும்போது, என்னுடைய எழுதுகோல் ஸந்தேஹங்களாலும் குழப்பங்களாலும் தடைபடுகிறது. பாபா, என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கமளியுங்கள் !"

பிறகு, என்ன நடந்ததென்பதை தாசகணு பாபாவுக்கு விவரமாக பயபக்தியுடன் விளக்கினார். நிவாரணமடையாத தம்முடைய சந்தேத்தையும் பாபாவின் பாதங்களில் வைத்தார்.

தாஸ்கணு சாயிநாதரை கெஞ்சினார், " பாபா, நான் இந்நூலை எழுத எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாகப் போய்க்கொண்டிருக்கின்றன. என்னுடைய ஈசாவாஸ்ய கதை உட்பட சகலமும் நீங்கள் அறிந்ததே.-

"இந்த சந்தேகம் நிவிர்த்தியாகாவிட்டால் இந்த கிரந்தத்தின் (நூலின்) சூக்குமமான அர்த்தம் விளங்காது". மஹராஜ் அவரை ஆசீர்வதித்தார், "நீர் பிரசன்னமான (மலர்ந்த) மனமுடையவராக இரும்"-