valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 18 September 2014

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு திட நிச்சயமாக பிரமாணம் செய்துகொண்ட பாடீல், எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு சாயி தரிசனத்திற்காக ஷீரடிக்கு பயணமானார். 

தம்முடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு, எப்படி ஷீரடிக்கு போய்ச் சேர்வது எனும் சஞ்சலமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய மனதுடன் பீமாஜி ஷீரடிக்கு கிளம்பினார். 

பாடீலுடைய வண்டி மசூதிக்கருகில்   இருந்த சவுக்குதிற்கு வந்து, பிறகு மசூதியின் வாயிலுக்கு வந்து சேர்ந்தது. நான்கு பேர்கள் பீமாஜியை கைகளால் தூக்கிக் கொண்டு வந்தனர். 

நானா சாஹேபும் அவருடன் வந்தார். எல்லாருக்கும் சுலபமாக தரிசனம் செய்து வைக்கும் மாதவராவும் ஏற்கனேவே அங்கு வந்திருந்தார்!

பாடீலை பார்த்துவிட்டு பாபா சாமாவிடம் கேட்டார், "சாமா, இன்னும் எதனை திருடர்களை என் தலையில் கட்டப் போகிறாய்? என்ன, நீ செய்வது நியாயமா?"

பீமாஜி சாயிபாதத்தில் சிரம் வைத்து வணங்கிக் கூறினார், "சாயிநாதா, இந்த அனாதைக்குக் கிருபை செய்யுங்கள்! தீனநாதா, என்னைக் காப்பாற்றுங்கள்!"

பாடீலுனுடைய துன்பத்தைப் பார்த்த சாய்நாத் பரிதாபப் பட்டார். அந்நேரத்திலேயே பாடீல் தம்முடைய துன்பத்திற்கு ஒரு முடிவு வந்து விட்டதை உணர்ந்தார். 

பீமாஜியினுடைய பரிதாபகரமான நிலையில் பார்த்த கருணா சாகரமான சமர்த சாயி மனம் நெகிழ்ந்து முகத்தில் புன்னகை தவழக் கூறினார், -

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; சிந்தனையாளர்கள் துக்கப் படுவதில்லை. ஷீரடியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்--

"நீர் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கி இருக்கலாம். துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறு கிறாரோ, அவர் சுகத்தின் மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். -

"இவ்விடத்தில் இருக்கும் பக்கீர் மகா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாகிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்-  

"ஆகவே, நீர் அமைதி கொள்ளும்; பீமாபாயின் வீட்டில் தங்கும்; போய் வாரும்; இரண்டொரு நாள்களில் உமக்கு நிவாரணம் கிடைக்கும்".

ஆயுள் முடிந்துபோன ஒருவனுக்கு திடீர் அதிருஷ்டத்தால் அமுதமழை பெய்து புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு பாடீலுக்கு ஏற்பட்டது. 

சாயியின் திருமுகத்திலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட பாடீல், மரணப் படுக்கையில் இருப்பவன் அமிருதபானத்தாலும், தாஹத்தால் நெஞ்சுலர்ந்து போனவன் நீர் கிடைத்தாலும், எவ்வளவு திருப்தியும் சந்தோஷமும் அடைவார்களோ, அவ்வளவு திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.   


Saturday, 13 September 2014

ஷிர்டி சாய் சத்சரிதம்

நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன். அவனே அழிப்பவன். அவன் ஒருவனே செயலாளி.

பாடீல் சாந்தொர்கருக்கு எழுதினார், "எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டது; வாழ்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது.

"இந்த வியாதியைக் குணப்படுத்துவது சாத்தியமில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்கும் கூட, மேற்கொண்டு யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது.

"ஆகவே, நான் ஒரே ஓர் உதவியை வினயத்துடன் கடைசியாக கேட்கிறேன்! என்னுடைய மனதில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாக சந்திக்க வேண்டுமென்பதுதான்."

கடிதத்தை படித்த சாந்தோர்கரின் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. பீமாஜி பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால், நானா மனமுருகிப் போனார்.

நானா எழுதினார், "உங்களுடைய கடிதத்திற்கு பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தை பரிந்துரை செய்கிறேன். சாயி பாபாவின் பாதங்களை பற்றிகொள்ளுங்கள்! அவரே நம் அன்னையும் தந்தையும்!-

"அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அனைத்து கொள்வாள். தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள்.-

"கொடிய குஷ்டரோஹம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷய ரோஹாம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் சந்தேஹம் வேண்டா; போய் சாயியின் திருவடிகளை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள். -

"யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்கு கட்டுப் பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாக சென்று சாயி தரிசனம் செய்யவும்.-

"மரண பயத்தைவிட பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, சாயியின் பாதங்களை பற்றிக் கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தை போக்க முடியும். "

பொறுக்க முடியாத அவதியாலும் அந்திமகாலம் நெருங்கிவிட்டதொவென்ற  பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், "நான் எப்பொழுது சாயினாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்கு காரிய சித்தி ஆகும்?"

பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. "உடனே வேண்டியதையெல்லாம் மூட்டை கட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள். சீக்கிரமாக ஷிர்டிக்குப் போவோம்".

Wednesday, 10 September 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பாடீல் மனமுடைந்து போனார். உயிர் நாள் கணக்கில்தான் தாங்கும் போலிருந்தது. நாளுக்கு நாள் இத்தேய்வு அதிகமாகியது. பல நாள்கள் இவ்வாறு கடந்தன. 

குல தேவதைக்கும் ஆராதனைகள் செய்து பார்த்தார். பயனில்லை. குல தேவதை நால்லாரோக்கியத்தை மீட்டு தரவில்லை. ஜோதிடர்களையும் மந்திரவாதிகளையும் ஆலோசனைகள் கேட்டு கேட்டு அலுத்துப் போனார். 

சிலர் கூறினர். "இது என்ன அங்கொரஹம்! இவ்வளவு இன்னலை தரும் விதிதான் என்னே! ஓ, மானிட எத்தனம் அனைத்தும் வீண் போல இருக்கிறதே!"

டாக்டர்கள் முயன்று பார்த்தனர் ; ஹகீம்கள் (யுனானி மருத்துவர்கள்)அழைக்கப் பட்டனர். பீமாஜிக்கும் வைத்தியம் செய்தவதில் மேற்கொண்டு செய்வதென்ன என்று தெரியாது விழித்தனர். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை; முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

பாடீல் தளர்ச்சியுற்று நம்பிக்கை இழந்தவராக தமக்குள்ளேயே பேசிக் கொண்டார். "ஓ பகவானே! நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவி விட்டன? இம்மாதிரி இன்னல் படுவதற்கு எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்? "

இறைவனின் லக்ஷணம் (சிறப்பியல்பு) எவ்வளவு விநோதமானது! சந்தோஷமாக இருப்பவரால் ஒரு கணம் கூட அவர் நினைக்கப் படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. 

அவர் வேண்டும்போது வரிசையாக இன்னல்களை தந்து மனிதனை தம்மை ஞாபகப் படுத்திகொள்ளும்படி செய்து, துயரத்தில், "ஓ நாராயாண! என்னைக் காப்பாற்றும்" என்று கதறும்படி செய்கிறார். 

துயரத்தில் பீமாஜி பாடீல் கதறியதை கேட்டவுடனே இறைவன் கருணை புரிந்தார். பீமாஜிக்கு திடீரென்று நானாவுக்கு (நானா சாஹேப் சந்தோர்கருக்கு ) கடிதம் எழுதவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 

'மற்றவர்களால் சாதிக்க முடியாததை நானவால் சாதிகக் முடியும். பாடீல் வைத்த நம்பிக்கை அவ்வளவு உயர்வானதாக இருந்தது.'

இதுவே, பாடீலுக்கு ஒரு சுப சகுனமாகவும் அவருடைய வியாதி நிவாரணத்தின் ஆரம்பமாகவும் ஆகியது! அவர் நானாவுக்கு ஒரு விபரமான கடிதம் எழுதினார். 

நானா சாஹேபை பற்றி அந்த நேரத்தில் வந்த நினைவு சாயி நாதரின் உந்துதலே அன்றி வேறொன்றுமில்லை. அதுவே அவரது வியாதி நிவாரணத்தின் உத்பவம் (உற்பத்தி) ஆயிற்று. ஞானிகளின் செயல் முறைகள் அற்புதமானவை!

கால சக்கரத்தின் சுழற்சியிலும் கூட இறைவனின் திட்டம் இருக்கும் போல தெரிகிறது. ஆகவே, வேறு விதமான கற்பனைகள் செய்து கொண்டு வீண் பெருமை பேச வேண்டாம்.


Thursday, 28 August 2014

ஷிர்டி சாய் சத்சரிதம்

சுதந்திர புத்தியுள்ள மனிதன் பாவமே செய்திருக்க மாட்டான். சுகத்தை சம்பாதித்துக் கொள்வதற்கும் புண்ணிய காரியங்களை செழிப்பாக செய்திருப்பான்.

ஆனால், எந்த மனிதனும் சுதந்திர முள்ளவன் அல்லன். கர்மத் தளைகள் அவனை பின்தொடர்கின்றன. கர்மத்தின் வழிமுறைகள் விசித்திரமானவை. மனிதனுடைய வாழ்க்கையின் சூத்திரத்தை அவையே இழுக்கின்றன.

இதன் காரணமாக, புண்ணியத்தை நாம் லட்சியமாக கொண்டாலும், பாவத்தை நோக்கி வலிமையாக இழுக்கப் படுகிறோம். நற்செயல்களை தேடும் பணியிலே நம்முடல் பாவங்களை தொட்டு விடுகிறது.

என்னிடம் கதை கேட்பவர்களே! புனே ஜில்லாவில் ஜுன்னர் தாலுகாவில் நாராயண் காங்கவ் கிராமத்தில் வாழ்ந்த பீமாஜி பாடீலின் காதையை கேளுங்கள். தேவாமிருதம் பொங்கி வழிந்தது போன்ற இனிமையுள்ளது இக்காதை.

பீமாஜி பாடீல் ஒரு தன வந்தர். விருந்தோம்பலில், முக்கியமாக அன்னமிடுவ்தில் உற்சாகம் கொண்டிருந்தார். சோகத்தையே அறியாத அவர் எப்பொழுதும் மலர்ந்த முகமாகவே இருந்தார்.

ஆனால், விதியின் வழிமுறைகள் விளக்க முடியாதவை. லாபத்தையும் நஷ்டத்தையும் மாறி மாறி கொடுக்கும். அந்தக் கணக்கு நமக்குப் புரியாது. கர்ம வினைகளுக்கேற்றவாறு இன்னல்கள் விளைகின்றன. நமக்கு வரக்கூடாத வியாதிகளும் வந்து நம்மை துன்புறுத்துகின்றன.

1909 ஆம் ஆண்டு பீமாஜியை பீடை பிடித்தது. நுரையீரல்களை சயரோகம் தாக்கி, ஜூரம் வர ஆரம்பித்தது;

பிறகு, பொறுக்க முடியாத இருமல் தொடர்ச்சியாக வந்தது; ஜுரம் நாளுக்கு நாள் அதிகமாகி பலமாக வளர்ந்தது; பீமாஜி இடிந்து போனார்.

வாயில் சதா நுரை கட்டியது; கோழையிலும் எச்சிலிலும் உறைந்த ரத்தம் வெளியாகியது. வயிறு எந்நேரமும் குமட்டியது; ஓய்வற்ற நிலையில் உடல் அலட்டுவது நிற்கவேயில்லை.

பீமாஜி படுத்த படுக்கையாகிவிட்டார்.  எத்தனையோ நிவாரணங்களை  முயன்று பார்த்தும் பயனில்லாது போயிற்று. உடல் மெலிந்து, காய்ந்து சுருங்கிய இலைபோல் ஆகிவிட்டார் பீமாஜி.

அவருக்கு சோறோ, நீரோ, எதுவுமே பிடிக்கவில்லை. கஞ்சியும் பத்தியச் சாப்பாடும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. இந்த நிலை அவரை அமைதி இழக்க செய்துத் திக்குமுக்காட வைத்தது. உடல் பட்ட வேதனை பொறுக்க முடியாததாக இருந்தது.

தெய்வங்களை பிரீதி செய்ய மந்திர உச்சாடனம் எல்லாம் நடந்தது. வைத்தியர்களும் கைவிட்டு விட்டனர். பீமாஜயும் 'பிழைக்க மாட்டேன்' என்று நினைத்து விசாரமடைந்தார்.

Thursday, 21 August 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தயாளமுள்ள துணைவரும் சரணாகதி யடைந்தவர்களைப் பாதுகாப்பவரும் பக்தர்களோடு பிணைந்தவருமான சாயியால் எப்படிப்பட்ட அற்புதம் விளைவிக்கப் பட்டது என்று சற்று பாருங்கள்!

கவனத்தை சிதறவிடாது முழுமையாக ஈடுபட்டு நான் சொல்லப் போகும் புதிய காதையை முழுக்க கேளுங்கள்; செய்வன திருந்தச் செய்தவர்களாகிய நன்மையடைவீர்கள். 

சாயியின் முகத்திலிருந்து வெளிப்படும் அமுதமழை, புஷ்டியையும் திருப்தியையும் அளிக்கும் அருட்புனலாக இருக்கும்போது, தம்முடைய நல்வாழ்வுபற்றிய  அக்கறை கொண்டவர் எவராவது ஷீரடிக்கு போகும் யத்தனத்தை கஷ்டமாக நினைப்பாரா?

கடந்த அத்தியாத்தில், சித்தியாகிவிட்ட தம் குருவின் தரிசனம் பெற்றதால் அளவிலா ஆனந்தமடைந்த அக்கினி ஹோத்திரி பிராமணரின் காதை சொல்லப் பட்டது. 

இந்த அத்தியாயம் முன்னதை விட இனிமையானது. க்ஷய ரோகத்தால் (காச நோயால்) ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் கனவுக் காட்சியால் நிவாரணம் பெற்று நல்லாரோக்கிய மடைந்தார். 

ஆகவே, விசுவாசமுள்ள பக்தர்களே! கல்மஷங்களைஎல்லாம் (மன மலங்களைஎல்லாம்) எரித்து விடும் சக்தியுடைய இவ்வற்புதமான சாயி நாத சரித்திரத்தை முழு கவனத்துடன் கேளுங்கள். 

இச் சரித்திரம் கங்கை நீரைப் போன்று புண்ணியமானது; பவித்திரமானது; இஹத்திலும் பரத்திலும் சாதகங்களை அளிக்கக் கூடியது. இதைக் கேட்பவர்களின் காதுகள் எல்லாப் பேறுகளையும் பெற்றவை!

இச் சரித்திரத்தை தேவாமிர்ததிற்கு  உபமானமாக சிலர் சொல்லலாம். ஆயினும் தேவாமிருதம் இவ்வளவு இனிக்குமா என்ன? அமிருதம் உயிரைத்தான் ரட்சிக்கும்; இச்சரித்திரமோ மேற்கொண்டு ஜனனமே இல்லாமல் செய்துவிடும்!

உயிருள்ள ஜீவன்கள் எல்லா சக்திகளும் தங்களுக்கு இருக்கின்றன என்று நினைக்கின்றன. தாம் நினைத்ததைச் செய்ய முடியும் என்று யாராவது நினைத்தால், அவர் இக்காதையை கேட்க வேண்டும். 

மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவனை விடுவதாக இல்லை. 

இங்கும், அங்கும், எங்குமே துக்கத்தை தவிர்ப்பதில் சாமர்த்தியம் மிகக் காட்டினாலும், விதி அவனை விடுவதாக இல்லை. 

அதை உதறித் தள்ள முயன்றால், அது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; விலக்கிவிட முயன்றால், மேலும் அழுத்தமாகத் தழுவிகிறது! இரவு பகலாக மனிதன் நடத்தும் போராட்டமெல்லாம் வீணாகிப் போகிறது. 

மனிதன் நிஜமான சுதந்திரம் பெற்றிருந்தால், சுகத்தைத் தவிர வேறெதையும் நாட மாட்டான்; லவலேசமும் (சிறிதளவும்) சந்தேகமிருந்தால் துக்கத்தின் அருகிலேயே செல்ல மாட்டான் அல்லனோ?

Thursday, 14 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

தம் பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக தயாசாகரமான சாயி திருவாய் மலர்ந்தருளிய சத்தியமான வார்த்தைகளை மிகுந்த வினயத்துடன் கேளுங்கள். 

"யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டு விட்டனவோ அந்தப் புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள். -

"சாயி, சாயி என்று எந்நேரமும் ஜபம் செய்து கொண்டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள். -

"எனக்கு அஷ்டோபசார பூஜையோ சோடசோபசார பூஜையோ வேண்டா. எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்."

பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப் படுத்திக் கொள்வதில்தான் மனத்தை திருப்தி செய்து கொள்ள வேண்டும். (நேரில் கேட்க முடியாது).

(இந்த அத்தியாயம் மகாசமாதிக்குப்    பிறகு எழுதப் பட்டது என்பதற்கு இந்த சுலோகத்தை அகச் சான்றாக கொள்ளலாம்.) 


Thursday, 7 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

13. பிணி தீர்த்த பெம்மான்

வெளிப்படும் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;- 

பாபாவினுடைய திருவாய் மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமசீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது. வீண் போகாதது. 

"ஏற்கனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப் போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து! எது பிராப்தமென்று விதிக்கப் பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட! எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இரு! சஞ்சலத்திற்கோ  கவலைக்கோ எப்பொழுதும்  இடம் கொடுக்காதே! -

"கவனி ! வீடு, குடும்பம் போன்ற தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் சலிப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான் அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும் போதே, -

"எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது. நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிகொள்கிறாள்!-

"அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மவாதி தேவர்களையே நிலை தடுமாறுமாறு  செய்திருக்கிறாள்! இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக இருக்க முடியும்?

"ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத ஹரிபஜனையின்றி மாயையிலிருந்து விடுதலை கிடைக்காது."

பாபா, பக்தர்களுக்கு விளக்கம் செய்த மாயையின் மகிமை இதுவே. மாயையின் பிடியிலிருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளை பாடும் சேவையையே பாபா பரிந்துரை செய்தார். 

"ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாகவத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீ ஹரியால் உத்தவருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதவர் யார்?