valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 25 July 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர் சாப்பாட்டுக் கூடத்தில் இருந்தார்; எல்லாருக்கும் உணவு பரிமாறி முடிக்கப்பட்டது. சாப்பிடப் போகும் தருணம். திடீரென்று அந்த மதிய நேரத்தில் பசியால் வாடிய நாய் ஒன்று அவ்வம்மையார் உட்கார்ந்திருந்த கதவருகில் வந்து நின்றது.

அம்மையார் உடனே ஒரு கால் சோள ரொட்டியைத் தம்முடைய தட்டிலிருந்து எடுத்து நாய்க்குப் போட்டார். அதே நேரத்தில், உடம்பெல்லாம் சேற்றுடன், பசியால் வாடிய பன்றியும் ஒன்று வந்தது. (அதற்கும் அவர் உணவளித்தார்).

ஈதனைத்தும் சுபாவமாகவே நடந்ததால், அவர் இச் சம்பவத்தை அறவே மறந்து போனார். ஆனால் பிற்பகல் நேரத்தில் பாபாவே இச் சம்பவத்தைக் கிளறினார்.

உணவுண்ட பிறகு, பிற்பகலில் அவ்வம்மையார் வழக்கம் போல் மசூதிக்கு வந்து, சிறிது தூரத்தில் அமர்ந்தபோது பாபா அவரிடம் அன்புடன் கூறினார்.

"அன்னையே, இன்று எனக்கு நீர் உணவளித்தீர்; என்னுடைய வயிறு தொண்டைவரை நிரம்பிவிட்டது. நான் பிராணனே போய்  விடும் போன்ற பசியால் மிக வாடினேன். நீர் எனக்கு உணவளித்துத் திருப்தி செய்துவிட்டீர்.

"இதைத்தான் நீர் எப்பொழுதுமே செய்ய வேண்டும். இதுவே உமக்கு சத்தியமான சேமத்தை அளிக்கும்.மசூதியில் அமர்ந்து கொண்டு நான் அசத்தியத்தை என்றுமே, எப்பொழுதுமே பேச மாட்டேன்.

"இந்தக் காருண்யம் உம்மிடம் எப்பொழுதும் இருக்கட்டும். முதலில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து விட்டுப் பிறகு சாப்பிடும். இந்த ஆசாரத்தை வாழ் நாள் முழுவதும் கடைபிடிப்பீராக ".

அம்மையாருக்கு சாயி சொன்னது ஒன்றுமே விளங்கவில்லை. சாயி சொன்னதன் பொருள் என்ன? அவருடைய வார்த்தைகள் எப்பொழுதுமே அர்த்தபுஷ்டியில்லாமல் இருக்காதே! (இவ்வாறு அம்மையார் சிந்தித்தார்).

ஆகவே அவர் கேட்டார், "நான் எப்படி உங்களுக்கு உணவளித்திருக்க முடியும்? நானே மற்றவர்களை சார்ந்து காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேனே?"

"எனக்கு மிகுந்த அன்புடன் அளிக்கப்பட்ட  சோள ரொட்டியைத் தின்று நான் உண்மையிலேயே பசியாறினேன்; இல்லை, இல்லை, அந்தத் திருப்தியில் நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்.

"நீர் சாப்பாட்டுக்கு  உட்கார்ந்தபோது திடீரென்று பசியால் வாடிய, வயிறு காய்ந்த நாயொன்றை வாயிலில் பார்த்தீர் அல்லவா ? நானும் அந்த நாயும் ஒன்றே என்று அறிவீராக!

"அவ்வாறே உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்ட பன்றியும் பசியால் வாடுவதைப் பார்த்தீர். அப் பன்றியும் நான்தான்!"

பாபாவின் திருவாய்மொழியைக் கேட்ட அவ்வம்மையார் மனத்துள்ளே  வியப்படைந்து போனார். எத்தனையோ நாய்களும் பன்றிகளும் பூனைகளும் சுற்றி அலைகின்றன. அவை எல்லாவற்றிலும் பாபா இருக்கிறார்? இது எப்படி சாத்தியம்? (என்று அம்மையார் நினைத்தார்)
 
 

Thursday, 18 July 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"பரிபூரணமாக சரணாகதியடைந்தவன் மேல் தயை காட்டுவீராக. இந்த வார்த்தைகளால் அவருடைய கருணையை மலரச் செய்து அவருடைய மன்னிப்புக்கும் அருளுக்கும், தீனனும்  தாசனுமான என் சார்பில் அபயவரம் வேண்டு".

பாந்த்ராவில் இது நடந்துகொண்டிருந்தபோது, 200 மைல்களுக்கு அப்பாலிருந்த ஷீரடிக்கு உடனே செய்தி வந்து விட்டது! பாபா அங்கு என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

ஸாயி மகாராஜருக்கு நடந்ததும் நடப்பதும் நடக்கப் போவதும் இடம் காலம் என்னும் எந்தத் தடைகளுமின்றி எல்லாமே தெரிந்திருந்தன என்பதற்கு இதுவே பிரத்யக்ஷமான நிரூபணம்.

பையன் (மகன்) ஷீரடியில் இருந்தாலும், அவன் பாபாவுக்கு வணக்கம் செலுத்துவதற்கு அதே நாளில் அதே நேரத்தில் சென்ற பொது, என்ன நடந்தது என்பதைக் கேளுங்கள்; கதை கேட்பவர்களே!

பையன்  தாயுடன் உற்சாகமாக வந்து, பாபாவின் பாதங்களைப் பணிந்தபோது சாயீ தாயாரிடம் கூறியதைக் கேட்டு வியப்படைந்தான்.

"தாயே, இன்று என்னால் என்ன செய்ய முடிந்தது? தினமும் செய்வதுபோல் நான் இன்றும் பாந்த்ராவுக்கு சென்றேன். ஆனால், அங்கு சோறோ  கஞ்சியோ எதுவுமே உண்பதற்கோ குடிப்பதற்கோ இல்லை. நான் பட்டிநியாகத் திரும்பிவர நேரிட்டது!-

"இந்த ருனானுபந்தத்தை பார். (பூர்வ ஜன்ம சம்பந்தமும் அதனால் விளையும் பந்தங்களும்). கதவு மூடியிருந்தாலும் நான் இஷ்டமாக உள்ளே நுழைந்துவிட்டேன்; யார் என்னைத் தடுக்க முடியும்?-

"முதலாளி வீட்டில் இல்லை. என்னுடைய குடலைப் பசி பிடுங்கியது. உடனே அந்த நண்பகல் நேரத்தில் ஒருபிடி அன்னங்கூட  இல்லாமல் திரும்பிவிட்டேன்!-

இந்த வாரதைகளைக் கேட்டவுடனே, அனேகமாக தந்தை நிவேதனம் செய்ய மறந்துவிட்டிருப்பார் என்று மகன் யூகித்து விட்டான்.

"என்னை வீட்டிற்கு திரும்பி போக அனுமதியுங்கள்!" என்று பாபாவை வேண்டினான். பாபா அறவே மறுத்துவிட்டார்! அதற்குப் பதிலாகப் பையனை அங்கேயே பூஜை செய்ய அனுமதித்தார்.

மகன் அன்றைய தினமே ஷிர்டியிலிருந்து விவரமான கடிதம் அனுப்பினான். அதைப் படித்த தந்தை மனமுருகிப் போனார்.

பாந்த்ராவிலிருந்து எழுதப் பட்ட கடிதமும் ஷீரடிக்கு  வந்து சேர்ந்தது! பயின் ஆச்சரியமடைந்தான். அவனுடைய விழிகளிலிருந்து கண்ணீர் தரை தாரையாக பெருகிக் கன்னங்களில் வழிந்தோடியது.

சாயியினுடைய இந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! அன்பு ஏன் இதயத்தில் பொங்கி எழாது? இந்த சம்பவத்தால் உருகாத  கல்மனமும் உண்டோ?

இந்தப் பையனின் அன்பான தாயார்தான், ஒரு சமயம் ஷிர்டியிலிருந்த பொது பாபாவால் அனுக்ரஹிக்கப் பட்டார். இப்பொழுது அந்த நூதனமான காதையைக் கேளுங்கள்!


Thursday, 11 July 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"பாபா! நான் செய்யும் பூஜை என் மகன் செய்யும் பூஜையைப் போலவே அமையட்டும். என்னுடைய கைகளில் பூஜை ஓர் இயந்திரகதியான அப்பியாசமாக இல்லாமல் பூஜை செய்யும்போது என்னுடைய இதயத்தில் தூய அன்பு பொங்கி வழியட்டும்".

பூஜை செய்வதற்குகந்த விடியற்காலை நேரத்தில் தினமும் இப் பிரார்த்தனையுடன் பூஜையை ஆரம்பித்துக் கடைசியாக நிவேதனம் செய்து முடித்தார்.

நைவேத்தியமாக கற்கண்டை சமர்ப்பித்தார். தடங்கல் ஏதுமில்லாமல் பூஜை நடந்து கொண்டிருந்தது; ஒருநாள் இந்த நித்திய நிவேதனத்திற்கு தடங்கலேற்பட்டது.

ஒருநாள் அவருடைய மனம் அலுவலக் விஷயங்களில் மூழ்கியிருந்ததால் தர்கத் நிவேதனம் செய்வதற்கு மறந்துவிட்டார். பாபாவுக்கு நிவேதனம் ஏதும் செய்யப் படாமலேயே அனைவரும் அன்று உணவுண்டு விட்டனர்.

தர்கத் சாஹேப் ஒரு நெசவாலைக்கு முக்கிய அதிகாரி. ஆகவே, தினமும் காலை நேரத்திலேயே ஆலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது.

தினந்தோறும் பிற்பகலில் அலுவலகத்திலிருந்து திரும்பிவந்தபோது, சாப்பாட்டு  நேரத்தில், காலையில் நிவேதனம் செய்யப் பட்ட கற்கண்டு அவருக்குப் பிரசாதமாகப் பரிமாறப் பட்டது.

இதுவே தினசரி வழக்கமாக இருந்தது. ஒருநாள் காலையில் அவர் நிவேதனம் செய்ய மறந்துவிட்டதால், மதிய சாப்பாட்டு  நேரத்தில் பிரசாதம் இல்லை.

அவர் சாப்பிட உட்காரும்போது, சமையற்காரர் அவருடைய தட்டில் உண்ணும் பொருள்களை தூயனவாக்கும் வகையில், மீந்த கற்கண்டை அவருக்குப் பரிமாறுவார்.

ஆனால், அன்று எக்காரணத்தாலோ, அவர் பூஜையை அவசரமாக செய்யவே, நிவேதனம் செய்ய மறந்து விட்டார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அன்று பிரசாதம் பரிமாறப் படவில்லை.

சட்டென்று தர்கத் சாபிடாமல் எழுந்துவிட்டார். குற்ற உணர்ச்சியால் மனம் நொந்து பாபாவின் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டு, விழிகளிலிருந்து நீர் வடியக் கூறினார்.

"பாபா! இது என்ன உம்முடைய மாயை? எப்படி என்னை மதிமயக்கம் அடையச் செய்தீர்? நீர் என்னைச் செய்ய வைத்தது பூஜையன்று, இயந்திர கதியான ஓர் அப்பியாசமே! அனால், இப்பொழுது முதலில் என்னை மன்னித்து விடுங்கள்! -

"இது வெறும் மனக்குழப்பம் அன்று, மகாபாவதைச் செய்து விட்டேன்; அனுதாபத்தினால் தவிக்கிறேன். இது என்னுடைய தவறு; முழக்க முழுக்க என்னுடைய தவறே; வெட்கங்கெட்டவன் நான். மஹாராஜரெ ! என்மீது கிருபை காட்டுவீராக."

படத்திலிருந்து சாயி பாதங்களுக்கு அவர் நமஸ்காரம் செய்தார். குற்ற உணர்ச்சியாலும் அனுதாபத்தாலும் உருகிய மனத்துடன் அவர் கூறினார், "தயை மிகுந்த மஹாராஜரெ ! என்னிண்டம் கருணை செலுத்துவீராக."

இவ்வாறு வேண்டிவிட்டு, வருத்தந் தோய்ந்ததும் செயலாற்ற முடியாததுமான மனநிலையில் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். "பாபாவினுடைய  மன்னிப்பை வேண்டு; என்னால் ஒரு பெரிய பாவம் செய்யப் பட்டுவிட்டது!-



Thursday, 4 July 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்


ஷிர்டி சாயி சத் சரிதம் 

ஒப்புயர்வற்ற பிரேமையுடையவராக இருந்ததால், பாபா சாஹேப் தமது இல்லத்தில் தினமும் காலை, மதியம், மாலை வழிபாட்டுக்காக பாபாவினுடைய  படத்தை ஒரு சந்தனமண்டபத்தில்  ஸ்தாபனம் செய்திருந்தார்.

அவருக்குப் புத்திரனும் பக்திமான்; சாயிக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பாட்டை தொட மாட்டான். ஆகவே, தர்கட்  மகாபுண்ணியசாலி.

ஒவ்வொரு நாளும் காலை வேளையில் ஸ்நானம் செய்துவிட்டு, உடலாலும் பேச்சாலும் உள்ளத்தாலும்  ஒன்றி, சாயிக்குப் பூஜை செய்துவிட்டுக் கடைசியாக நிவேதனம் செய்வான்.

இந்த நித்திய பூஜையைத் தவறாதும்  சலிக்காமலும் செய்து கொண்டு வந்தபோது, அவனுடைய முயற்சிகள் அனைத்தும் உன்னதமான பலன்களை அளித்தன; உயர்ந்த அனுபவமும் பெற்றான்.

சிறந்த சாயி பக்தையான அவன் அன்னை, ஷீரடிக்கு போக விரும்பினார். பயணத்தின்போது அன்னையுடன் மகனும் செல்லவேண்டும் என்று தந்தை நினைத்தார்.

அன்னை ஷிர்டிக்குச் சென்று சாயி தரிசனம் செய்து, அங்கே சில நாள்கள் தங்கி பாபாவுக்குப் பாதசேவை செய்ய வேண்டுமென்று விரும்பினார்.

தந்தையினுடைய விருப்பம் அவ்வாறு இருந்தபோதிலும், மகனுக்கு ஷிர்டி போவதில் இஷ்டமில்லை. அவனுடைய கவலையெல்லாம், தான் வீட்டில் இல்லாதபோது, யார் தினமும் தினமும் தவறாமல் பாபாவுக்குப் பூஜை செய்வார் என்பதே.

தகப்பனார் ஒரு பிரார்த்தனா (சிலைகள், சடங்குகள் ஏதும் இல்லாமல் பிரார்த்தனை மட்டும் செய்யும் சங்கத்தை சேர்ந்தவர்) சமாஜி. அவரைப் பூஜை செய்ய வைத்துத் தொந்தரவு செய்வது நியாயமா? அதுவே மகனுடைய சந்தேகம்.

எனினும், தன மனத்துள்ளே  மறைந்திருந்த ஆசையை அறிந்திருந்த மகன், ஷிர்டி போவதற்குத் தயாராக இருந்தான். அவன் தகப்பனாரை அன்புடன் என்ன வேண்டிக் கொண்டான் என்பதைக் கேளுங்கள்.

சாயிக்கு நிவேதனம் செய்யாமல் யாருமே இந்த வீட்டில் சாப்பிட மாட்டார்கள் என்று உறுதிமொழி அளிக்கப் படாவிட்டால், நான் நிச்சயமாக ஷீரடிக்கு போக முடியாது. 

தந்தைக்கு ஏற்கனவே மகனுடைய நித்திய விரதம் தெரிந்திருந்தது. "நீ போய்  வா. நான் தினமும் நிவேதனம் செய்கிறேன்; நீ இதை முழுமையாக நம்பலாம்" என்று அவர் கூறினார்.-

"சாயிக்கு நைவேத்தியம் படைக்காமல்  நாங்கள் யாருமே உணவருந்த மாட்டோம். என்னுடைய வார்த்தைகளை நம்பு, சந்தேகம் வேண்டா ; குழப்பம் ஏதுமின்றி நீ சென்று வா".

இவ்வாறு உறுதிமொழி பெற்றுக் கொண்டு பையன் ஷீரடிக்கு சென்றான். அடுத்த நாள் காலையில்  தர்கட்  அவர்களே பூஜை செய்தார்.

அன்று பூஜையை ஆரம்பிக்கும் முன்பே, பாபா சாஹேப் தர்கட்  சாயியின் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டுப் பிரார்த்தனை செய்தார், -


Thursday, 27 June 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

அதுபோலவே, குளிர்ந்த நீரிலோ  வெந்நீரிலோ குளிக்கும்போதும் வீட்டைப் பெருக்கிச் சாணமிட்டு மெழுகும்பொதும்  உயிரினங்கள் மடிந்து போகின்றன. 'சுத்தம் செய்தல்' கிருஹஸ்தர்கள் செய்யும் ஐந்தாவது பாவம் ஆகிறது.

பஞ்ச பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக, கிருஹஸ்தர்கள் பஞ்ச மஹா யக்ஞங்களைச் செய்ய வேண்டும். பஞ்சசூனா பாவங்களிலிருந்து விடுபட்டால் கிருஹஸ்தர்கள் மனத்தூய்மையையும் அடைவர்.

தூய மனத்தின்  பலத்தால்தான் புனிதமான ஞானம் கிடைக்கும். புனித ஞானம் அடைந்தவர்களில், சில பாக்கியசாலிகளுக்கு நிலையான முக்தியும் கிடைக்கும்.

பாபா பிச்சை எடுத்துப் பிழைத்த  விவரங்களைச் சொன்னதால் இந்த அத்தியாயம் பெரியதாகிவிட்டது. ஆயினும், இப்பொழுது இது சம்பந்தமாக நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றை கேளுங்கள் . அதன் பிறகு, இந்த அத்தியாயத்தை முடித்து விடுவோம்.

பாபாவுக்கு நீங்கள் எதை அனுப்பினாலும், யார் மூலம் அனுப்பினாலும், அது மனம் கனிந்த அன்போடு அனுப்பப்பட்டால், அச்சிறிய நைவேத்தியத்தை கொண்டு சென்றவர் மரத்ன்ஹு விட்டாலும், பாபா தவறாது அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.

அது சோழ ரொட்டியோ, பாஜியோ, பால்கோவாவோ எவ்வளவு எளிய தின்பண்டமாக இருந்தாலும் சரி, பக்தி பாவத்துடன் அளிக்கப் பட்டதை பார்த்தபோது, பாபாவினுடைய  இதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது.

இது அம்மாதிரியாக அன்பு செய்த பக்தர் ஒருவரின் கதை. இதைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.  எந்த பக்தராவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மறந்துவிட்டால், சாயியே அவரைக் கடமையின் பாதையில் வழிநடத்தினார்.

பாபாவினுடைய போதனை முறை இனிமையானது. மென்மையானது. அதைக் கேட்டு, கடமையை மறந்து போன பக்தர் தாமே விழிப்படைந்து விடுவார். அதைத் தாங்களே அனுபவித்தவர்கள் மகா பாக்கியசாலிகள். அவர்களுடைய ஆனந்தத்தை விவரிக்க இயலாது .

விச்ராந்தியின் இருப்பிடமான சாயியை அடைக்கலமாக அடைந்த ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்ட சாயி பக்தர் ஒருவர் இருந்தார்.  தந்தையின் பெயர் ஆத்மாராம்; குடும்பப் பெயர் தர்கட் . (ஆகவே அவருடைய முழுப் பெயர் ராமச்சந்திர ஆத்மாராம் தர்கட் )

ஆயினும், அவர் பாபா சாஹேப் தர்கட்  என்றே அழைக்கப் பட்டார். அவர் சம்பத்தப் பட்ட காதையைதான் இப்போது சொல்லப் போகிறேன்; வேறு காரணம் ஏதுமில்லை.

சாயி பிரேமையால் இதயம் பொங்க , தர்கத் அவருடைய அனுபவங்களை அவரே விவரிதப் போது  கேட்பதற்கு எவ்வளவு சுகமாக இருந்தது.

ஒவ்வொரு நிகழ்ச்சியாக, ஒன்றை விட மற்றொன்று புதிய அனுபவமாக, பக்தி பாவத்துடனும் அங்க அசைவுகளுடனும் படிபடியாக அவர் விவரித்தபோது எவ்வளவு உயர்ந்த பக்தியை அது வெளிப்படுத்தியது!


Thursday, 20 June 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

எந்த ஐந்து யக்யங்களை செய்யாமல் இல்லறத்தோர் உணவருந்தக் கூடாதோ, அந்த ஐந்து யக்யங்க்ளை பாபா ஷீரடியில் தினமும் நடத்தி வைத்தார். இவ்விதமாக ஷிர்டி மக்கள் சமைத்த உணவு புனிதமாகியது.

ஒவ்வொரு நாளும், இல்லறத்தோர் அதிதிக்கு (எதிர்பாராத விருந்தினருக்கு ) முதலில் உணவளிக்க வேண்டிய கடமையை நினைவுறுத்தும் வகையில், அவர் தினமும் ஐந்து வீடுகளுக்கு சென்றார்.  வீட்டில் உட்கார்ந்தவாறே இப்பாடத்தைக் கற்றுக் கொண்ட கிருஹஸ்தர்கள் பாக்கியசாலிகள்!

ஐந்து மகா யக் யங்களை செய்த பிறகு மீந்த உணவை அருந்தும் இல்லறதோருக்கு  அவர்கள் அறியாமலேயே செய்த ஐந்து பாவங்கள் முற்றும் அழிந்துவிடுகின்றன.

1. குற்றுதல் அல்லது இடித்தல், 2. அடுப்பெரித்தல் , 3, மாவு அரைத்தல், 4. குடங்களையும் பாத்திரங்களையும் தேய்த்து கழுவுதல், 5. பெருக்குதல் / மெழுகுதல் ஆகிய ஐந்து செயல்களும் ஐந்து பாவங்கள் (பஞ்சசூனா ) என்பதை மக்கள் பிரசித்தியாக அறிவர்.

உரலில் தானியத்தை இட்டு, உலக்கையால் குற்றி, உமியும் தவிடும் நீக்கிச் சுத்தம் செய்யும் பொது நாம் அறியாமலேயே பல நுண்ணிய ஜந்துகள் இறந்து போகின்றன.

ஆனால், அவ்வாறு செய்யாவிடின் தானியம் வேகாது. ஆகவே, ஐந்து கிருஹச்த பாவங்களில் 'குற்றுதல்' (கண்டணீ ) முதற்பாவம் ஆகிறது .

சமையல் செய்வதற்காக அடுப்பெரிக்க விறகை உபயோக்கிகிறோம். அடுப்பு எரியும்போதும் விறகைத் தூண்டிவிடும் போதும் நாம் விரும்பாமலும் நமக்குத் தெரியாமலும் சில உயிரினங்கள் இறந்து போகின்றன. இல்லறத்தோரின்  ஐந்து பாவங்களில் 'அடுப்பெரித்தல்' (சுள்ளி) இரண்டாவதாகிறது.

எந்திரத்தில் தானியங்கள் மாவாக அரைக்கப்படும்போது  சில நுண்ணிய உயிரினங்களும் அரைபட்டு இறந்துபோகின்றன. 'அரைப்பது' ஐந்து பாவங்களில் மூன்றாவது.

ஒரு குடம் தண்ணீர் கினற்றிலிருந்தொ  குளத்திலிருந்தோ எடுக்கப்படும்போதும், ஆண்களும் பெண்களும் துணி துவைத்துச் சலவை செய்யும்போதும், பல நுண்ணியிர்கள் இறந்து போகின்றன.

குடங்களையும் சமையல் செய்த பாத்திரங்களையும், சாம்பலையும் மண்ணையும் உபயோகித்துத்  தேய்த்துச் சுத்தம் செய்யும்போதும் பல ஜந்துகள் நாம் இச்சிக்காமலேயே  இறந்து போகின்றன. இவ்விதமாக, 'குடங்களைத் தேய்த்துக் கழுவுதல்' இல்லறத்தோர் செய்யும் நான்காவது பாவம் ஆகிறது.


Thursday, 13 June 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

அவ்வாறு செய்யத் தவறிவிட்டு உணவு உண்டால், அதற்குப் பிராயச்சித்தமாக மனம், வாக்கு, செயல் மூன்றையும் தூய்மைப் படுத்திக் கொள்ள, சாஸ்திர விதிப்படி சாந்திராயண  விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சந்நியாசிகளும் பிரம்மச்சாரிகளும் சமையல் செய்யவே கூடாது. சமையல் செய்யும்படி நேர்ந்துவிட்டால், அவர்களும் நிச்சயமாகச் சாந்திராயண  விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

அவர்களுக்கு உணவளிக்கும் கடமையை சாஸ்திரங்கள் இல்லறத்தாரிடம் ஒப்படைத்திருக்கின்றன. சந்நியாசிகள் வயிறு வளர்ப்பதற்காக எத்தொழிலையும் செய்வதில்லை .

பாபா இல்லறத்தாருக்கும் அல்லர்; வானபிரச்தரும் அல்லர். அவர் பால  பருவத்திலேயே உலகத்தைத் துறந்த பிரம்மச்சாரி. அம்மாதிரியான ஒருவருக்குப் பிச்சை எடுத்துப் பிழைப்பதே மிக்க உகந்தது.

அகில உலகங்களையும் தம்முடைய வீடாகக் கருதிய பாபா , தாமே வாசுதேவனும் விசுவம்பரனும் (உலகத்தை ஆடையாக அணிந்தவன்) என்பதையும், தாமே அழிவில்லாத பிரம்மம் என்பதையும் உறுதியாக அறிந்திருந்தார்.

உலகமே ஒரு குடும்பம் என்று நினைப்பவரே பிச்சை எடுத்துப் பிழைப்பதற்குப் பூரணமான அதிகாரம் பெற்றவர். மற்றப் பிச்சைக்காரர்கள் இதைக் கேவலமான செய்கையாகவும் பரிகாசத்திற்கு உரியதாகவும் செய்துவிடுகின்றனர்.

முதலாவதாக, வம்ச விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட வேண்டும். அடுத்ததாகச் செல்வதின்மீது ஆசையையும் புகழ் மீது ஆசையையும் விட்டுவிட வேண்டும். இம்மூன்று ஆசைகளையும் அறவே விட்டுவிட்டவனே பிச்சை எடுத்துப் பிழைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இல்லையெனில், "ஓடேந்திப்  பிழைப்பது மானமற்ற செயல்" என்னும் துகாராமின்  பாடு, சாரமில்லாததாகவும் அர்த்தமில்லாததாகவும்  ஆகிவிடும்.

இளையோரும் முதியோரும் சிறியவரும் பெரியவரும் சமர்த சாயி எவ்வளவு பெரிய சித்தர்  என்பதை நன்கு அறிந்திருந்தனர். உலகியல் எதிர்பார்ப்புகளிலும் ஆசைகளிலும் கட்டுப்பட்ட நாம்தான், அவருடைய புனிதமான பாதங்களில்மேல் வைக்கும் பக்தியில் உறுதியில்லாமல் இருக்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. பௌர்ணமியன்று 15 பிடி அன்னம் சாப்பிடலாம். பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு பிடியாகக் குறைத்துக் கொண்டு வந்து அமாவாசையன்று பட்டினி கிடக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அன்னமாக உயர்த்திக் கொண்டே பொய், பௌர்ணமியன்று 15 பிடி சாப்பிடலாம். இம்மாதிரியாக ஒரு சுற்று வருவதே சாந்திராயண  விரதம்.

2. சாஸ்திரங்களில் விதிப்பட்ட, ஹிந்துக்கள் அனுசரிக்க வேண்டிய, வாழ்க்கை நிலைகள் நான்கு.
  1. பிரம்மச்சரியம் - இளம் வயதில் குருகுலத்தில் கல்வி கற்கும் நிலை.
  2. இல்லறம் - திருமணம் செய்துகொண்டு உலக இன்பங்களை நுகரும் நிலை.
  3. வானபிரஸ்தம் - சொத்து சுகங்களைத் துறந்து மனைவியோடு மட்டும் வனத்தில் வாழும் நிலை.
  4. சந்நியாசம் - எல்லாவற்றையும் (மனைவியையும்) துறந்த நிலை.