valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 23 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"சரி, சரி; முதலில் நாம் ஒரு மரத்தடிக்குச் செல்வோம். கொன்ஜம் சிலீம் பிடிப்போம். பிறகு நான் உம்முடைய விஷய ஆர்வத்தைப் பூர்த்திசெய்கிறேன். அதன் பிறகு நான் என்னுடைய வசிப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்."

நாங்கள் இருவரும் ஒரு நிழலடர்ந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம். இதமான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. மறுபடியும் சிலீம் பற்றவைக்கப்பட்டது.

வழிப்போக்கர் முதலில் புகைக்குடித்தார். பிறகு சிலீமை என் கையில் கொடுத்தார். நான் புகைக்குடித்துக்கொண்டே அவருக்கு அந்தக் கவர்ச்சியான கதையைச் சொன்னேன்.

என்னுடைய இடத்திலிருந்த ஐந்து அல்லது ஆறு மைல் தூரத்தில் ஒரு மஹிமை வாய்ந்த, பவித்திரமான புண்ணியத்தலம் இருந்தது.

அங்கே புராதனமான, பாழடைந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. அதை ஜீரணோத்தாரணம் (பழுதுபார்த்துப் புதுப்பித்தல்) செய்யவேண்டுமென்று எல்லா மக்களும் விரும்பினர்.

மக்கள் அதன்பொருட்டு நன்கொடை வசூலித்தனர். ஒரு பெரிய நிதி வசூலாகியது. நித்திய பூஜை, அர்ச்சனை ஆகிய வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரைபடங்களுடன் முழுமையான திட்டம் தயாரிக்கப்பட்டது.

அவ்வூரிலிருந்த ஒரு பெரிய பணக்காரன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டது. முழுப்பணமும் பூரணமான, முடிவெடுக்கும் அதிகாரமும் அவனிடம் அளிக்கப்பட்டன.

கோயிலுக்கென்று அவன் தனிக்கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும். அவனுடைய நன்கொடையைப் பணமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இச்செயல்களை அவன் நேர்மையாகவும் பிழையின்றியும் செய்வான் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அம்மனிதன் இயல்பாகவே ஒரு பெருங்கஞ்சன். எச்சிற்க்கையால் காக்காய் ஓட்டாதவன். அதே தோரணையில் வேலையை நடத்த முயன்றான். இதன் விளைவாக, வேலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

எல்லாப் பணமும் செலவழிந்துவிட்டது. அனால், வேலையோ அரைகுறையாகத்தான் முடிந்திருந்தது, தன்னுடைய ஜேபியிலிருந்து எதையும் அவன் செலவழிக்கவில்லை. ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு பெரிய லேவாதேவிக்காரன்; ஆயினும், கஞ்சத்தனத்தின் பூரணமான அவதாரம். பேச்சிலோ எப்பொழுதும் இனிமை; ஆனால், வேலை நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில், பணம் வசூலித்த மக்கள் எல்லாரும் அவனுடைய வீட்டில் கூடினர். "உமது வட்டிக்கடை வியாபாரத்தால் என்ன பயன்?-

"உமது கையால் பாரம் தூக்காமல், சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி எவ்வாறு நிறைவேறும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே! இதைபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். -

"மக்களை இசையச் செய்து, மறுபடியும் நிதி வசூல் செய்கிறோம். அந்தத் தொகையையும் உம்மிடம் தருகிறோம். ஆனால், நீங்கள் சிவன் கோயில் வேலையை முடித்துக்கொடுக்க வேண்டும்."

 


 

Thursday, 15 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.-

"இப்பொழுது, நான் அவர்கள் இருவரையும் பிரித்த பிறகு, நீர் உமது வீட்டிற்குச் செல்லும்; நான் என் வசிப்பிடத்திற்குச் செல்கிறேன். போம், போம், சிலீமை மறுபடியும் நிரப்பும். பாம்பு அடுத்ததாக என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடுவோம்!"

சிலீம் உடனே தயார் செய்யப்பட்டது. வழிப்போக்கர் அதைப் பற்றவைத்துத் தாம் ஒரு தடவை புகை உறிஞ்சினார். பின்னர் என்னிடம் அளித்தார். நான் புகைகுடிப்பதற்காகச் சிலீமைக் கையில் வாங்கிக்கொண்டேன்.

நான் இரண்டு தடவைகள் புகை உறிஞ்சினேன். பின்னர் வழிப்போக்கனை என்னுடன் அழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தை அடையும்வரை தருப்பைப் புதர்களின் ஊடே புகுந்து நடந்து சென்றேன்.

மறுபடியும் பாம்பைப் பார்த்த வழிப்போக்கர் பீதியடைந்தார். "ஓ, எவ்வளவு பயங்கரமான பிராணி!" என்று சொல்லி வியந்தார். பயமடைந்த அவர், நான் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முயன்றார்.

அவர் கூறினார், "ஆ, தயவுசெய்து இதற்குமேல் போக வேண்டா.  அந்தப் பாம்பு நம்மை நோக்கி வரும். இந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருக்கிறது. தப்பித்து ஓடவும் இயலாது. மேற்கொண்டு அடியெடுத்து வைக்கவேண்டா."

அந்தக் காட்சியைப் பார்த்த வழிப்போக்கர் மரணபீதி அடைந்தார். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த விரோதபாவம் சம்மந்தமாக அப்பொழுது நான் நிகழ்த்திய உபதேசத்தைக் கேளுங்கள்.

"அடே, அப்பா, வீரபத்ரா, உன் விரோதியான சனபசப்பா தவளையாகப் பிறந்த பின்னரும் நீ அனுதாபம் (கழிவிரக்கம்) கொள்ளவில்லையா?-

"நீயும் ஒரு பாம்பாகப் பிறந்திருக்கிறாய். இன்னுமா இந்த கொலை விரோதம்? இப்பொழுதாவது உன்னுடைய செய்கைகளுக்காக வெட்கப்படு! விரோதத்தை விடுத்து சாந்தமாக இரு!"

என்னுடைய வாயிலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பாம்பு சட்டென்று தவளையை விடுவித்தது.  சரசரவென்று நழுவியோடித் தண்ணீருக்குள் நுழைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு எகிறிக் குதித்த தவளை சட்டென்று அங்கிருந்த செடி கொடிகளிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அவர் சொன்னார், "இது என்னவென்றே எனக்கு விளங்கவில்லை! உங்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டவுடன் எப்படி அந்தப் பாம்பு தவளையை விடுவித்தது! பாம்பு எப்படி மறைந்துபோயிற்று!-

"இவ்விருவரில் யார் வீரபத்ரப்பா? அதுபோலவே, யார் இவ்விருவரில் சனபசப்பா? இவர்களுடைய விரோதத்துக்குக் காரணம் என்ன? எனக்கு அனைத்து விவரங்களையும் சொல்வீர்களா?"




Thursday, 8 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"தாங்கள் என்னுடைய இல்லத்திலேயே கொஞ்சம் சோளரொட்டி உண்ணலாம். பின்னர் சிறிது ஓய்வெடுக்கலாம். வெயில் தாழ்ந்த பின் சௌகரியமாகத் திரும்பி செல்லலாம்.

"திரும்புகாலில் நானும் உங்களுடன் வருகிறேன்". இவ்வாறு என்னிடம் அந்த வழிப்போக்கர் சிலீமைத் தயார் செய்து, பயபக்தியுடன் என்னிடம் புகைகுடிக்கக் கொடுத்தார்.

அங்கோ, தவளை பரிதாபகரமான குரலில் கதற ஆரம்பித்தது. ஆகவே, அந்த வழிப்போக்கர் என்னை வினவினார், "யார் இப்படி அலறுவது?".

அவருக்கு நான் பதில் சொன்னேன், "ஒரு தவளை நதிக்கரை அருகில் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அவனுடைய கர்மவினை அவனைத் துரத்துகிறது.  நான் உமக்குச் சொல்லப் போகும் கதையைக் கேளும்."

போன ஜென்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜென்மத்தில் அனுபவி. கர்மவினையின் விளைவுகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். இப்பொழுது அலறுவதால் என்ன பயன்? (தவளைக்கு உபதேசம்)

இதைக் கேட்ட வழிப்போக்கர் சிலீமை என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நிதானமாக நடந்தவாறே சொன்னார், "நான் போய்ப் பார்க்கிறேன்.-

"இவ்விதம் கத்துவது தவளையா அல்லது வேறு ஏதாவது பிராணியா? மனத்திலிருந்து சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு நேர்ந்திருக்கும் ஆபத்து என்னவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்."

அவருடைய நாட்டம் அதுவே என்று தெரிந்து கொண்ட பின் நான் சொன்னேன், "நீரே போய்ப்பாரும். பெரிய பாம்பு ஒன்றின் வாயில் பிடிபட்டு ஒரு தவளை ஓலமிடுகிறது. -

"இருவருமே மஹா கொடியவர்கள். பூர்வஜென்மத்தில் பயங்கர பாவம் செய்தவர்கள். அந்த வினையை அனுபவிக்க இப்பொழுது வேறு சரீரங்களை அடைந்திருக்கின்றனர்."

இதைபற்றிச் சிந்தித்துக்கொண்டே அந்த வழிப்போக்கர் அவ்விடத்திற்குச் சென்று அங்கு நடந்துகொண்டிருந்ததை பிரத்யட்சமாக பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் சொன்னார், "நீக்கினால் சொன்ன விவரம் உண்மைதான்.-

"விசாலமான வாய் படைத்த அப் பாம்பு யமனைப் போலத் தோன்றுகிறது. தவளையும் பயமுறுத்தும் தோற்றம் உடையது. ஆயினும், தவளை பாம்புக்கு இரையாகிவிட்டது. -

"இன்னும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள், தவளை பாம்பின் வாய்க்கு ஆஹுதி (அக்கினியில் இடும் படையல்) ஆகிவிடும். என்னே கர்மவினையின் விசித்திரமான வழி! சீக்கிரமே அந்தத் தவளை கவலையற்ற நிலையை (மரணம்) அடையும்!"

ஆகவே, நான் அவரிடம் கூறினேன்,"ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும்! பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.-


 

Thursday, 1 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இது சம்பந்தமாக, சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த அமிர்தவாணியும் தூய்மையை அளிக்கக்கூடியதுமான ஒரு கதையைப் பயபக்தியுடன் சொல்லுகிறேன். கேட்க்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

அக் கதை நான் கேட்டவாறே என் மனத்தில் பதிந்திருக்கிறது. அதை சாயி மாதாவின் கூற்றாகவே விவரிக்கிறேன்.

சாயியே தம்முடைய கதைக்குச் சரித்திரக்காரர். கதையை விஸ்தாரமாக அவரே எழுதவைக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே; சூத்திரதாரி அவரே!

(ஹேமாட் சொன்ன கதை இங்கு ஆரம்பம்)

ஒருநாள் காலை எட்டு மணி அளவில், என்னுடைய வழக்கமான காலைச் சிற்றுண்டியை முடித்தபின் நான் வெளியே உலாவச் சென்றேன்.

வழி நடந்து, நடந்து களைத்துபோனேன். ஆகவே ஒரு நதியின் கரையை அடைந்தபோது, பாதங்களைக் கழுவியபின் ஸ்நானம் செய்தேன்; புத்துணர்ச்சி பெற்றேன்.

அந்த நதியும்  ராஹாதாவுக்கு அருகிலுள்ள நதியளவிற்குப் பெரியது. வெள்ளம் இரு கறைகளை தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் தர்ப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து மண்டிக்கிடந்தது.

அங்கு ஓர் ஒற்றையடிப்பாதையும் தெளிவாகத் தெரிந்த வண்டிப்பாதையும் இருந்தன. ஆற்றங்கரையில் பல மரங்கள் ஓங்கிப் பருத்து வளர்ந்திருந்தன. அவற்றின் நிழலும் உன்னதமாக இருந்தது.

மெல்லிய பூங்காற்று வீசி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காடு போன்று வளர்ந்திருந்த மரங்களைக் கண்டு நான் நிழலில் நிம்மதியாக உட்கார்ந்தேன்.

புகை குடிக்கச் சிலீமை நிரப்பவேண்டும். 'சாபியை' நீரில் நனைப்பதற்காக துறைக்குச் சென்றேன். அப்பொழுது "க்ரோக், க்ரோக்" என்ற சத்தம் கேட்டது. அது ஒரு தவளை எழுப்பும் ஒலி என்று நான் நினைத்தேன்.

அதில் என்ன ஆச்சரியம்? தண்ணீர் இருக்குமிடத்தில் தவளையும் இருப்பது இயற்கையன்றோ? சாபியை நனைத்தபின் நான் திரும்பி வந்து சிக்கி முக்கிக்கல்லை கையிலெடுத்தேன்.

சிக்கிமுக்கிகல் நெருப்பு பொறி தந்தது. சிலீம் பற்றிக்கொண்டு தயாராகியது. அந்த சமயத்தில் அங்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். எனக்கு வணக்கம் செலுத்திவிட்டு என்னருகில் அமர்ந்தார்.

மிகுந்த பணிவுடன் சிலீமைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டு கூறினார், "நீங்கள் நெடுந்தூரம் வந்திருக்கிறீர்கள்!-

"மசூதி வெகுதொலைவில் இருக்கிறது. நீங்கள் திரும்பிப் போவதற்குள் கடுமையான வெப்பமாகிவிடும். என்னுடைய வீடு அருகில்தான் இருக்கிறது. சிலீம் பிடித்துவிட்டு அங்கே செல்வோம். -


 

Thursday, 24 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

கர்மவினையின் சூத்திரம் ஆகாயத்தைப் போலப் பெரியது. அதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மஹா பண்டிதர்களும் இந்த விஷயத்தில் ஏமாற்றமடைகின்றனர். (BHA)  பாவமுள்ள பக்தர்களோ, அதிகம் படிக்காதவர்களாயினும் காப்பாற்றப்படுகின்றனர்.

அதுபோலவே, இறைவனின் நியமத்தைத் தாண்டுவது இயலாத காரியம். அதனுடைய கிரமத்தை எவரால் மீறமுடியும்? ஆகையால், உலகியல் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தருமநெறிகளின்படி ஒழுகி, எப்பொழுதும் கடமைகளைச் செவ்வனே செய்யுங்கள்.

அவ்வாறு செய்யாமல் அதருமநெறியில் வாழ்வபவன், மரணத்திற்குப் பிறகு, தான் என்னென்ன தீவினைகளை செய்தானோ, அவற்றுக்கேற்றவாறு அடுத்த ஜன்மம் எடுக்கிறான்.

மரணத்திற்குப் பிறகு, தன்னுடைய கர்மவினைகளுக்கும் கேள்விஞானத்திற்கும் ஏற்றவாறு சுக்கிலபீஜமாக (விந்தாக) மாறி, யோனித்துவாரத்திற்குள் அவர் பிரவேசிக்கிறான். மறுபடியும் மனிதஜென்மம் எடுக்கிறான். வேறொருவன் அதே சட்டத்தின்படி ஸ்தாவர (நகரமுடியாத பொருளாக) ஜன்மம் எடுக்கிறான்.

'கடைசி பிரக்ஞை  எப்படியோ அப்படியே மறுபிறப்பு' என்னும் வேதவசனத்தின் பொருளை அறியாதவர் யார்? இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமென்று விரும்புபவர், அவர் ஆசைப்படும் பிறவியைப் பெறவேண்டாமா?

இன்னுமொரு சரீரமும் எடுக்கவேண்டுமென்று ஆர்வம் கொள்ளும் அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மூடர்கள், அவர்கள் சம்பாதித்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்றவாறு தான் அடுத்த சரீரம் கிடைக்கும் என்பதை நன்கு அறிய வேண்டும்.

ஆகையால், விலைமதிப்பற்ற மனிதஜென்மம் எடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தேகம் கீழே விழுவதற்கு முன்னதாகவே ஆத்மஞானம் பெறுபவனை உண்மையிலேயே விவேகமுள்ளவன் என்று சொல்லுவேன்.

அவனே சம்சார பந்தத்திலிருந்து விடுதலையடைகிறான். மற்றவர்கள் வாழ்க்கைச் சுழலில் மாட்டிக்கொள்கிறார்கள்.  அவர்களால் இன்னுமொரு பிறவி எடுப்பதைத் தவிர்க்கமுடியாது. மறுபிறவியின் யாதனைகளையும் தடுக்கமுடியாது.

இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால், 'இந்த உடல்தான் நான்' என்னும் தீய இயல்பு கீழே அமிழ்த்தப்பட்டு சாத்துவிகமான அஷ்டபாவம் எழுப்பப்படும்.

கோடிகோடியாய்ப் பணத்தை வைத்துக்கொண்டு சுபாவத்தில் கடுங்கஞ்சனாக வாழ்பவனின் ஜீவன் பரிதாபத்திற்குரியது. மரணப்பரியந்தம்  (மரணடையும்வரை) அவன் அலுப்பையும் சலிப்பையுமே அனுபவிப்பான்.

மேலும், விரோதத்தை வளர்ப்பது எக்காலத்தும் நன்றன்று. விரோதம் தோன்ற முயலும்போது, உன் மனத்தால் அதை அடக்கு. அடக்காவிட்டால், அது உன் வாழ்வையே நாசம் செய்துவிடும்.

பரஸ்பர விரோதம் உத்தமமான ஜன்மத்திலிருந்து இழிவான ஜன்மத்துக்கு இழுத்துச் செல்லும். கடம், விரோதம், கொலை இவற்றின் விளைவுகள், ஒரு மனிதனை ஜன்மத்தை அடுத்து ஜென்மமாக, வினை தீரும்வரை தொடரும்.

 


 

Thursday, 17 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மஹானுபவரான சாயி, அவரே சொல்லும் கதையின் அற்புதத்தைக்  கேட்டுக் கதை கேட்பவர்கள் மெய்மறந்து போவார்கள். அன்பால் விளையும் அஷ்டபாவம் அவர்களை ஆட்கொள்ளும்!

இக் கதை சாயியின் நேரிடைத் திருவாய்மொழி.  இதனுடைய  தாத்பரியத்தின்மீது (உட்கருத்தின்மீது) கண்வைத்து நுண்பொருள் உணர்பவர் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவர் ஆவார்.

கதைகேட்பவர்களே, என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பீர்களாக. நான்தான் இக் கதையைச் சொல்லுபவன். ஆயினும், நான் சாரமறிந்து ஈடுபாட்டுடன் சொல்லாவிட்டால், நானும் உங்களுக்குச் சமானமாகிவிடுவேன் (கதை சொல்லும் தகுதியை இழந்துவிடுவேன்).

பக்தர்களின்பால் சாயி வைத்திருந்த பிரேமையை ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது, மனம் தன்னுடைய இயல்பாய் மறந்துவிடுகிறது. உலகவாழ்க்கையின் நடுக்கம் மறைந்து, சாந்தி பிறக்கிறது. இதைவிடப் பெரிய லாபம் ஏதும் உண்டோ?

கதைகேட்பவர்களே, முன்பு சொன்ன கதைக்கும் இந்தக் கதைக்கும் உண்டான தொடர்பைக் கவனத்துடன் கேளுங்கள். மனம் சிதறாமல் கேட்டால், உங்களுடைய ஜீவன் திருப்தியடையும்.

கடந்த அத்தியாயத்தின் முடிவில் ஆடுகளின் கதையைக் கேட்டீர்கள். பாபாவுக்கு ஆடுகளின் மீது ஏற்பட்ட பிரீத்திபற்றியும், அவற்றின் பூர்வஜென்ம வரலாறு அவருக்கு ஞாபகம் வந்த விவரத்தையும் கேட்டீர்கள்.

அந்தக் காதையைப் போலவே, பணத்தாசை எவ்வாறு மனிதனை பரம அவஸ்தைக்குள்ளாக்கி அதலபாதாளத்தில் வீழ்த்துகிறது என்பதை விளக்கும் இந்தக் கதையையும் கவனத்துடன் கேளுங்கள்.

சாயியே பூரணமான அருள்நோக்குடன் ஒன்றன்பின் ஒன்றாக எந்தக் கதையைச் சொல்லவேண்டுமென்று சூசகமாகத் தெரிவித்துக் கதை கேட்பதில் தடங்கல் ஏதும் வராமல் செய்கிறார்.  இதனால், கேட்பவர்களின் சுகமும் திருப்தியும் அதிகமாகின்றன அல்லவோ?

கதையும் கதையைச் சொல்லுபவரும் விவரணமும் சாயியாக இருக்கும்போது, இந்த ஹேமாட் பந்துக்கு இங்கென்ன வேலை? அது வெறும் புனைபெயர் அன்றோ!

சாயிகதை என்னும் சமுத்திரக்கனியில் உட்கார்ந்திருக்கும் நாம், கதைகளுக்காக கல்லுடைத்துக் கஷ்டப்பட வேண்டுமா என்ன? கற்பகவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பவரின் ஆசை, உதித்தக்கனமே நிறைவேறும் அன்றோ!

சூரியனின் இல்லத்தில் விளைக்கைப்பற்றி எவராவது கவலைப்படுவாரா? நிரந்தரமாக தேவாமிர்தத்தை அருந்திக்கொண்டிருப்பவருடைய மனத்தில் விஷத்தைப்பற்றிய எண்ண அலைகள் எழுமா?

சாயியைப் போன்ற தெய்வம் நம்மை என்றும் காத்து அருள் செய்யும்போது, அமிர்தம் போன்று இனிக்கும் கதைகளுக்கு நமக்கென்ன பஞ்சம்? உங்கள் இதயம் திருப்தியடையும் வரை கதைகளை ருசித்து அருந்துங்கள். 



Thursday, 10 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


47. பாம்பும் தவளையும்


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் ஸ்ரீம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜென்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான சாயியின் முகம் புனிதமானது.

சாயியின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களிலிருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றி பெறுகின்றனர்.

எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ , அவருடைய அருளெனும் சூரியவொளியில் உலகியல் வாழ்வெனும் மின்மினிப்பூச்சி ஒளியிழந்துபோய்க் காணாமற்போகிறது.

உலகமக்களின் பாவங்களையெல்லாம் கங்கைநதி கழுவித் தள்ளுகிறாள். இச் செய்கையால் தானே மாசடைகிறாள். தன்னை அந்த அசுத்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, சாதுக்களின் பாதத்துளிக்காக (அடிபொடிக்காக) கங்கை ஏங்குகிறாள்.

'ஓ, எப்பொழுது சாதுக்கள் என்னுடைய கரையில் திருவடி பதிப்பார்கள்? எப்பொழுது அவர்கள் என்னுடைய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வார்கள்?" என்று கங்கை ஏங்குகிறாள். அவ்வாறு நடைபெறாவிட்டால், தன்னுடைய பாவங்கள் விலக வழியில்லாமல் போகும் என்பதை அவள் நிச்சயமாக அறிவாள்.

சான்றோர்களே, அதுமாதிரியான சாதுக்களில் மகுடமணியான சமர்த்த சாயியின் திருவாய்மொழி  இது என்பதை நன்கு அறிந்து, தூய்மையளிக்கும் இக் கதையை மிகுந்த பக்தியுடன் கேளுங்கள்.

இக் கதையின் மகத்துவம் என்னவென்றால், கேட்பவர் ஞானியாக இருப்பினும், அஞ்ஞானியாக இருப்பினும், கேட்பவரின் கர்மபந்தங்களை அறுத்து வீழ்த்தும் பரம பாவனமான (தூய்மையளிக்கும்)  கதை இது!

எல்லாருடைய கண்களின் ஒளியும் எல்லாருடைய காதுகளின் ஒலியுமான சாயி, தாமே என்னுடைய இதயத்துள் புகுந்துகொண்டு இக் கதையைச் சொல்கிறார்.