valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 10 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


47. பாம்பும் தவளையும்


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் ஸ்ரீம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜென்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான சாயியின் முகம் புனிதமானது.

சாயியின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களிலிருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றி பெறுகின்றனர்.

எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ , அவருடைய அருளெனும் சூரியவொளியில் உலகியல் வாழ்வெனும் மின்மினிப்பூச்சி ஒளியிழந்துபோய்க் காணாமற்போகிறது.

உலகமக்களின் பாவங்களையெல்லாம் கங்கைநதி கழுவித் தள்ளுகிறாள். இச் செய்கையால் தானே மாசடைகிறாள். தன்னை அந்த அசுத்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, சாதுக்களின் பாதத்துளிக்காக (அடிபொடிக்காக) கங்கை ஏங்குகிறாள்.

'ஓ, எப்பொழுது சாதுக்கள் என்னுடைய கரையில் திருவடி பதிப்பார்கள்? எப்பொழுது அவர்கள் என்னுடைய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வார்கள்?" என்று கங்கை ஏங்குகிறாள். அவ்வாறு நடைபெறாவிட்டால், தன்னுடைய பாவங்கள் விலக வழியில்லாமல் போகும் என்பதை அவள் நிச்சயமாக அறிவாள்.

சான்றோர்களே, அதுமாதிரியான சாதுக்களில் மகுடமணியான சமர்த்த சாயியின் திருவாய்மொழி  இது என்பதை நன்கு அறிந்து, தூய்மையளிக்கும் இக் கதையை மிகுந்த பக்தியுடன் கேளுங்கள்.

இக் கதையின் மகத்துவம் என்னவென்றால், கேட்பவர் ஞானியாக இருப்பினும், அஞ்ஞானியாக இருப்பினும், கேட்பவரின் கர்மபந்தங்களை அறுத்து வீழ்த்தும் பரம பாவனமான (தூய்மையளிக்கும்)  கதை இது!

எல்லாருடைய கண்களின் ஒளியும் எல்லாருடைய காதுகளின் ஒலியுமான சாயி, தாமே என்னுடைய இதயத்துள் புகுந்துகொண்டு இக் கதையைச் சொல்கிறார். 



Thursday, 3 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சதையில் நெருங்கிக்கொண்டிருக்கும் முள் இவன். இம் முள்ளை எடுத்துவிட்டால் செல்வத்திற்குக் குறைவே இருக்காது. ' இவ்விதமான எண்ணத்தாலும் பேராசையாலும் மூழ்கடிக்கப்பட்டு அண்ணன் கெட்ட வழிகளில் இறங்கினான்.-

"இம்மாதிரியான பணத்தாசையும் பேராசையும் கண்ணை மறைத்துவிடும். ஆகவே, கண்ணிருந்தும் குருடனாகி சகோதர பாசத்தையே மறந்துவிட்டான். தம்பியைக் கொன்று விடவேண்டும் என முடிவு செய்து, செயலிலும் இறங்கிவிட்டான்.-

"பிராப்தம் (பூர்வஜென்மவினை) கொண்டுவரும் துன்பம் மிகக் கொடுமையானதன்றோ! அது அனாவசியமான பகையை விதைத்தது. பேராசை கட்டுக்கடங்காமல் போய், கொடுமையானதும் மருமமாகத் தீட்டப்பட்டதுமான சாதியொன்று உருவாகியது.-

"அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிட்டது. ஆகவே, சகோதர பாசத்தை அறவே மறந்துவிட்டு அஹங்காரத்தினால் கோபமடைந்தனர். பரம வைரிகள் போல இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். -

"ஒருவன் மற்றவனைத் தடியெடுத்து பலமாக மண்டையில் அடித்தான். மற்றவன் முதல்வனைக் கோடரிக்கொண்டு தாக்கினான். சகோதரர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டனர். -

"இருவரும் ரத்தக்களரி ரணகளரியாக மூர்ச்சையடைந்து கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் இரு உடல்களிலிருந்தும் உயிர் பிரிந்தது. இவ்வாறு அவ்விருவரும் மரணமடைந்தனர். -

"அவ்வாறு இறந்த பிறகு, இந்த யோனியில் புகுந்தனர். இதுவே அவர்களுடைய காதை; அவர்களைப் பார்த்தவுடனே எனக்கு விரிவாக ஞாபகம் வந்தது. -

"அவர்களுடைய கர்மவினையைத் தீர்ப்பதற்காக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர். மந்தையில் அவர்களைப் பார்த்ததும் எனக்குப் பிரேம ஆவேசம் ஏற்பட்டது. -

"ஆகவே, என்னுடைய பையிலிருந்தும் பணம் செலவழித்து அவர்களுக்குச் சிறிது விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளிக்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால், உங்களுடைய ரூபத்தில் அவர்களுடைய கர்மவினை அதைத் தடுத்துவிட்டது. -

"ஆடுகளின்மேல் எனக்கு கருணைபிறந்தது; ஆயினும் உங்களுடைய நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, நானும் கடைசியில் ஆடுகளை இடையரிடம் திருப்பி அனுப்பிவிட்டேன். "

ஆக, இக் காதை இங்கு முடிகிறது. வாசகர்களே, என்னை மன்னிப்பீர்களாக! பிறகு, அடுத்த அத்தியாயத்தை படிக்கும்பொழுது உங்கள்  மனம் மகிழும்.

அடுத்த அத்தியாயம் சாயியின் திருவாய்மொழி அடங்கியதாகையால் , அன்பு பொங்கிவழியும் அத்தியாயமாகும்.  சாயியின் பாதகமலங்களில் பணிவுடன் சிரம் தாழ்த்தி வணங்கி, ஹேமாட் கதைகேட்பவர்களை வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'காசி - கயா புனிதப் பயணம், மேலும் ஆடுகளின் பூர்வஜன்மக் காதை' என்னும் நாற்பத்தாறாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு  சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 



Thursday, 27 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் இருவருடைய கட்டாயத்தால் பாபாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அவர் கூறியதாவது, எனக்கு வீடு வாசலில்லை; உட்காருவதற்கென்றும்கூட ஓர் இடமில்லை; எனக்குச் சொத்துபத்துக்கள் எதற்காக?-

"முதலில் கடைக்குப் போய் ஒரு சேர் தனிப்பருப்பு வாங்கிக்கொண்டு வாருங்கள். ஆடுகளை வயிறுமுட்டும் வரை தின்னவையுங்கள். பிறகு ஆடுகளை ஆட்டிடையரிடமே திருப்பி அனுப்பி விடுங்கள்."

ஆணையை நிறைவேற்றும் வகையில் உடனே ஆடுகளுக்குப் பருப்பு தீனியாகக் கொடுக்கப்பட்டது. காலந்தாழ்த்தாமல் உடனே ஆடுகள் ஆட்டிடையரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

பரோபகாரமே உருவெடுத்த சாயி உண்மையிலேயே ஓர் அவதாரபுருஷர். தாத்யாவோ வேறெவரோ, நல்லெண்ணத்தையோ இரக்கத்தையோ அவர் மனத்தில் ஊட்டிவிட முடியுமா என்ன!

அன்புடன் ஆடுகளுக்குப் பருப்பை ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது என்று தெரிந்த பின்னர், "இவ்வாடுகளை சொந்தக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மந்தையுடன் போய்ச் சேரட்டும்" என்று பாபா சொன்னார்.

இவ்விதமாகப் பணமும் போயிற்று! ஆடுகளும் போயின! அப்பொழுது பாபா ஆடுகளுடைய வினோதமான பூர்வஜென்ம கதையை முழுக்க எடுத்துரைத்தார்.

பாபாவுக்குத் தாத்யாவும் சாமாவும் ஒன்றே. இருவரிடமுமே அவர் சமமாக அன்பு செலுத்தினார். அவர்களுடைய கோபத்தை தணிப்பதற்காக, பாபா மனோரஞ்சிதமான இக் கதையை விரிவாகச் சொன்னார்.

சாயி தாமாகவே அவ்வாடுகளின் முன்ஜன்ம கதையை எடுத்தியம்பினார். நீங்களும் கேளுங்கள்.

"முற்பிறவியில் இவ்விரு ஆடுகளும் அதிருஷ்டம் வாய்ந்தவை. மனிதர்களாகப் பிறந்து என்னுடன் இருந்தார்கள். ஆனால், அவர்களும் கர்மவினையை அனுபவிக்க வேண்டியிருந்தது.

"நீங்கள் பார்த்த இவ்விரு ஆடுகள் இதற்கு முந்தைய பிறவியில் சகோதரர்கள். ஒருவரோடுவர் கோரமாக சண்டையிட்டுக்கொண்டு இறந்தார்கள்; விளைவு இவ்விதம் ஆகியது. -

"ஆரம்பகாலத்தில் இருவருக்குமிடையே மிக்க பாசம் இருந்தது; சகோதரர்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள்; ஒன்றாகவே தூங்குவார்கள். பரஸ்பரம் நல்வாழவையே விரும்பினர். இருவருக்குமிடையே மகத்தான ஒற்றுமை நிலவியது,-

"ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களாயினும், கர்மவினையாலும் விதிவசத்தாலும் பணம் குவிக்கவேண்டுமென்ற பேராசை அவர்களுக்குள் விரோதத்தை உண்டாக்கியது.-

"அண்ணன் ஒரு படு சோம்பேறி; ஆனால், தம்பியோ ஊக்கமுள்ளவன்; இரவுபகல் பாராமல் உழைப்பவன். உழைப்பின் விளைவாகத் தம்பி பெரும்பொருள் குவித்தான். இதைப் பார்த்த அண்ணனிடம் பொறாமை விளைந்தது.-


 

Thursday, 20 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இரண்டு அல்லது மூன்று அதிகம் போனால் நான்கு ரூபாய் மதிப்புள்ள ஆட்டுக்குப் பதினாறு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார். தாத்யாபா (தாத்யா கோதே பாடீல்) இந்த வினோதமான செயலைக்கண்டு வியந்துபோனார்.

ஆட்டுக்காரன் கேட்ட அதிக விலையை பேரமே ஏதுமின்றி அப்படியே கொடுத்து பாபா வாங்கியதை அவர்கள் கண்கூடாகக் கண்டதால், தாத்யாவும் மாதவராவும் பாபாவின் செய்கையை வெறுப்புடனும் கோபத்துடனும் எதிர்த்தனர்.

'இரண்டே ரூபாய் பெறுமானமுள்ள பொருளுக்கு பதினாறு ரூபாய் எதற்காகக் கொடுத்தார்? பாபாவுக்குப் பணத்தின் அருமை தெரியாததால் தம் இஷ்டத்திற்கு எது வேண்டுமானாலும் செய்கிறாரோ? இந்த வாதமும் திருப்திகரமானதாக இல்லையே! -

'எதற்காக பாபா இவ்வளவு மோசமான பேரமொன்றைச் செய்தார்? இப்படியா யாராவது பேரம் செய்வார்கள்? பேரமா இது"? என்றெல்லாம் இருவரும் மனதுக்குள்ளேயே பொருமிப் பிராண்டிக்கொண்டனர். இருவருமே பாபாவை தூஷித்தனர். (நிந்தித்தனர்).

பாபாவை எப்படி அவ்வாறு ஏமாற்ற முடியும்? கிராமத்து மக்கள் இதைப் பார்க்க  ஒன்றுகூடினர். ஆனால், பாபா ஒரு துரும்பும் நஷ்டம் ஏற்படாததுபோலச் சலனமேதுமின்றி அமைதியாக இருந்தார்.!

தாத்யாவும் சாமாவும் இவ்விஷயத்தில் கட்டுப்படைந்து பாபாவின்மேல் தப்புக் கண்டுபிடித்தாலும், பாபாவென்னவோ சிறிதும் அமைதியிழக்கவில்லை. அவர் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்தார்.

பணிவுடன் அவர்கள் இருவரும் பாபாவைக் கேட்டனர், "இது என்ன விசித்திரமான உதாரச் செய்கை? 32  ரூபாய் வீணாகிப் போய்விட்டதல்லவா?"

பணத்தைப்பற்றிய பேச்சு வந்தவுடன் பாபா புன்னகையுடன் தமக்குத் தாமே பேசிக்கொண்டார். "சரியான பைத்தியக்கார பயல்கள் இவர்கள். ஓ! எப்படி இவர்களுக்கு புரியவைப்பேன்.?"

ஆயினும் பாபாவினுடைய சாந்தமும் அமைதியும் அருமையிலும் அருமை. பாபாவின் திடசித்த நிலை அணுவளவும் குறையவில்லை; இதுவே பரமசாந்தியின் லட்சணம்  (அடையாளம்); கூடியிருந்தவர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

கோபத்தை அறியாதவரும் பரமசாந்தியை அனுபவிப்பவரும் எவ்வுயிரிலும் இறைவனைக் காண்பவருமான ஒருவரை விவேகமின்மை எப்படித் தொடமுடியும்?

விவேகஞானம் உள்ளவர் எவரும், எக்காலத்திலும் கோபத்தை அனுமதிக்கமாட்டார். எதிர்பாராதவிதமாக அதுமாதிரி சந்தர்ப்பம் ஏதாவது எழுந்தால், சாந்தி என்னும் பொக்கிஷம் திறந்துகொள்ளும்.

சதாசர்வகாலமும் 'அல்லாமாலிக்' தியானம் செய்பவரின் பெருமையை எவ்வாறு எடுத்தியம்புவது? அவருடைய வாழ்க்கை புரிந்துகொள்ளமுடியாததும் பூரணமானதும் மிகப்புனிதமானதும் நலம் பல தரக்கூடியதுமாகும்.

காருண்யமூர்த்தியும் ஞானகர்ப்பமும் வைராக்கியவாதியும் சாந்திக்கடலுமான அவர் முக்காலத்திற்கும் உண்மையாக என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். 



Thursday, 13 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கயாவாளி பெரும் பணக்காரர். வீட்டுக்கு வெளியில் யானைகள் சவாரிக்காகக் காத்திருந்தன! தாம் ஒரு பல்லக்கில் ஏறிக்கொண்டு சாமாவை யானைச்சவாரி செய்யும்படி செய்தார்.

பூஜை திரவியங்களை எடுத்துக்கொண்டு இருவரும் விஷ்ணுபாதம் என்னுமிடத்திற்குச் சென்று மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகமும் பூஜையும் மனமகிழ்ச்சியுடன் செய்தனர். பிறகு அட்சயவடம் என்ற இடத்திற்குச் சென்று, மூதாதையர்களுக்குப் பிண்டதானமும் (ஈமச்ச சடங்கும்) செய்தனர்.

அதன் பின்னர் தெய்வங்களுக்கு நிவேதனம் செய்தபின், பிராமணர்களுக்குத் திருப்தியாக போஜனம் செய்வித்து தக்ஷிணையும் கொடுத்தனர். இவ்விதமாக அவர்களுடைய புனிதப் பயணம் இனிதே நிறைவடைந்தது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பாபாவால் நிறைவேற்றிவைக்கப்பட்டது.

பாபாவின் திருவாய்மொழிச்சொல்லுக்குச் சொல் உண்மையாகிறது; நிறைவேறுகிறது. இதுவே இக் கதையின் சாரம். மேலும், பக்தர்களிடம் அவருடைய அன்பு அளவற்றது.

இக் காதை பாபா தம் பக்தர்களிடம் காட்டிய அன்புபற்றியது மட்டுமே. வாஸ்தவமாக, மற்ற ஜீவராசிகளையும் சமமாகவே பாபா பாவித்தார். ஜீவராசிகளிடம் பாசத்துடன் இருந்தது மட்டுமின்றி, அவற்றின் ஆத்மாவுடன் ஒன்றியவராகவே இருந்தார்.

லெண்டித் தோட்டத்திலிருந்து மசூதிக்கு சாவதானமாகத்  திரும்பி வரும்போது, எப்பொழுதாவது ஓர் ஆட்டு மந்தையைச் சந்தித்தால் பாபா மிகவும் குஷியாகிவிடுவார்.

அமுதம் பொழியும் கண்வீச்சை எல்லா ஆடுகளின்மீது செலுத்துவார். சில சமயம் ஓரிரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்.

உரிமையாளர் என்ன விலை கேட்டாலும் பாபா உடனே பணம் கொடுத்து ஆடுகளை வாங்கி, கொண்டாஜியிடம் ஒப்படைத்துவிடுவார். இதுவே பாபாவினுடைய பழக்கமாக இருந்தது.

ஒருநாள் பாபா இரண்டு ஆடுகளை 32  ரூபாய் கொடுத்து வாங்கினார். எல்லாருக்கும் அது விநோதமாகத் தெரிந்தது.

அவ்விரண்டு ஆடுகளைப் பார்த்ததும் திடீரென்று அவற்றின்மேல் பாசமேற்பட்டு அருகில் சென்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

மிருகப்பிறவி எடுத்த அவற்றைப் பார்த்து பாபாவின் மனத்தில் காருண்யம் ததும்பியது. அவை இருந்த நிலையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தார். அன்பின் அலைகளில் அமிழ்ந்துபோனார்.

அவ்விரண்டு ஆடுகளைத் தம்மருகே இழுத்துக்கொண்ட பின், வாஞ்சையுடன் முதுகில் தடவிக்கொடுத்தார். பாபாவின் அவ்விநோதமான செயலைக்கண்ட பக்தர்கள் வியப்பெய்தினர்.

முன் ஜென்மத்தில் அவர்கள் மீது தாம் வைத்திருந்த பாசம் ஞாபகத்திற்கு வந்தபோது பாபாவிடமிருந்து அன்பு பீறிட்டது. ஆடுகளாகப் பிறந்த அவர்களைப் பார்த்தபோது பாபா மிகுந்த பரிதாபமுற்றார். 



Thursday, 6 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆவல் கொண்ட சாமாவே (மாதவராவே) கயாவாளியை நோக்கி இக் கேள்வியைக் கேட்டார். "உங்களுக்கு இந்தப் படம் எப்படிக் கிடைத்தது? அனைத்து விவரங்களையும் எங்களுக்குச் சொல்லுங்கள்."

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தப் பேரதிசயத்தை கயாவாளி மாதவராவுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மன்மாட், புண்தாம்பே (மகாராஷ்டிரா மாநிலம்) போன்ற இடங்களில் மொத்தம் இருநூறு முன்னூறு முகவர்கள் காயவாளிக்கு வேலை செய்து வந்தனர். யாத்திரிகர்கள் பற்றிய விவரங்களை நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து கயாவாளியின் தொழிலை விருத்தி செய்துவந்தனர்.

யாத்திரீகர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதே கயாவாளியின் நிரந்தரமான தொழில். அவருடைய தொழில் இவ்வாறு நடந்துகொண்டிருந்தபோது கயாவாளி ஷிர்டிக்குச் சென்றார்.

சமர்த்த சாயிநாதர் ஒரு பெரிய மஹான் என்று அவர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே, அவரை தரிசனம் செய்து, ஆசிகளைப் பெறவேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அவர் சாயியை தரிசனம் செய்தார்.  பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். பாபாவின் படம் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் தீவிரமான ஆவலையும் உணர்ந்தார்.

சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த படம் ஒன்று மாதாவாராவிடம் இருந்தது. அதை கயாவாளி தமக்கு கொடுக்குமாறு கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்ற பிறகு மாதவராவ் அப் படத்தை கயாவாளிக்குக் கொடுத்தார்.

"என்னிடம் இருந்த அதே படந்தான் இது, அந்த கயாவாளி இவரேதான்" என்று மாதவராவுக்கு ஞாபகம் வந்தது. "மேலும், எப்படி பாபா என்னை அதே இடத்திற்கு அனுப்பினார்? எப்படி இவ்வளவு காலம் கழித்து இந்த சந்திப்பை ஏற்படுத்தினார்!-

"சொல்லப் போனால், யார், எதற்காகப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்? என் மனத்தில் இது அறவே தோன்றவில்லை. "

ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! அவர் சாமாவை அதே இடத்திற்கு அனுப்பி அங்கே தரிசனம் தந்தார். கயாவாளியும் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

'பாபாவினுடைய அனுமதி பெற்றபின் நான் கொடுத்த அதே படந்தான் இது, அதே கயாவாளிதான் இவர்' என்று சாமாவுக்கு ஞாபகம் வந்தது.

'இவருடைய வீட்டில்தான் நான் அப்பொழுது ஷிர்டிக்குச் சென்றபோது தங்கினேன்.  இவர்தான் எனக்கு பாபாவை தரிசனம் செய்வித்தார்' என்று கயாவாளிக்கும் ஞாபகம் வந்தது.

ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகளை நினைத்து அவர்களுடைய மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை. கயாவாளி சாமாவுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை கயாவில் செய்துகொடுத்தார். 




Thursday, 27 February 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அதற்கு கயாவாளி பதிலுரைத்தார், "ஓ, நீங்களே வந்து பாருங்களேன். அதுமாதிரி வியாதி இங்கு ஒன்றும் இல்லை. சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் என்னுடன் வாருங்கள்."

ஆகவே, அவர்கள் இருவரும் கயாவாளியின் இடத்திற்குச் சென்றனர்; அவருடைய விசாலமான வீட்டைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.

அவர்களுடைய சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வீட்டிற்குள் போய் உட்காருவதற்கு முன்னமேயே, பாபாவின் படமொன்றைக் கண்ட மாதவராவ் உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடிப் போனார்.

எங்கோ தூரதேசத்தில் இருக்கும் கயாவில், பாபாவின் படத்தைக் காண்போம் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியம் அவர்களை மூழ்கடித்தது!

ஆனந்தக்கண்ணீர் பொங்கிவர, மாதவராவ் அன்பின் பெருக்கால் தன்வசமிழந்தார். இதை பார்த்த கயாவாளி, "ஏன் ஐயா நீர் அழுகிறீர்" என்று கேட்டார்.

காரணம் ஏதுமின்றி மாதவராவ் அழுவதை பார்த்தவுடன் கயாவாளி சந்தேகப்பட்டு மனம் நொந்து போனார்.

'பிளேக் நோய் இருக்கும் இந்த கயாவில் திட்டமிட்டபடி நாம் எப்படிப் புனிதப் பயணத்தை நிறைவேற்றப்போகிறோம்?' என மாதவராவ் மனச்சஞ்சலமுருகிறார் என்று நினைத்து கயாவாளி மிகவும் கவலையுற்றார். கயாவாளி ஆறுதலித்தார். -

"இவ்விடம் பிளேக் நோய் இல்லை என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டபோதிலும் நீர் கவலைகொள்கிறீர். இதைக் கண்டு நான் வாஸ்தவமாகவே வியப்படைகிறேன்!-

"என்னிடம் நம்பிக்கை இல்லை என்றால் இங்கிருக்கும் எல்லாரையும் கேளுங்கள்! இவ்விடத்தில் உங்களுடைய தலைமுடி ஒன்றுக்குகூடச் சேதம் விளையாது. நிலைமை இப்படியிருக்க, நீர் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்?"

'பிளேக் நோயைப்பற்றிய பிராந்தியை மனத்தில் ஏற்றிக்கொண்டு தைரியத்தை சுத்தமாக இழந்துபோய் அனாவசியமாக இம் மனிதர் அழுதுகொண்டேயிருக்கிறார். '

இவ்வாறு நினைத்த கயாவாளி, விவரம் சொல்லி மாதவராவை சாந்தப்படுத்த முயன்றார். ஆனால், மாதவராவின் மனத்தில் இருந்த எண்ணமோ, 'எவ்வாறு என் தாய் (சாயி) எனக்கு முன்பாகவே இன்று இவ்விடத்திற்கு வந்து சேர்ந்துருக்கிறார்' என்பதே.

ஏற்கெனவே பாபா சொல்லியிருந்தார், "காசிக்கும் பிரயாகைக்கும் சீக்கிரமாகச் சென்ற பிறகு நான் மாதவராவுக்கு முன்னாடியே வந்து சேருவேன்". இதோ, இங்கே, அந்தச் சொற்கள் நேரிடையான அனுபவமாகிவிட்டன.

வீட்டினுள் நுழைந்தவுடனேயே பாபாவின் படம் தென்பட்டது. இந்த எதிர்பாராத அனுபவம் அவர்களுக்கு மஹா ஆச்சரியத்தை அளித்தது.

அன்பின் மிகுதியால் தொண்டை அடைத்துக்கொண்டது; கண்களிலிருந்து ஆனந்தபாஷ்யம் பொங்கியது; மயிர்க்கூச்செரிந்தது; உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது.

மாதவராவினுடைய நிலை இவ்வாறு இருந்தபோது கயாவாளி வேறுவிதமாக நினைத்தார். மாதவராவ் பிளேக் நோய்க்கு பயந்துதான் அழுவதாக அவர் வாஸ்தவமாகவே எண்ணினார்.