ஷீர்டி சாயி சத்சரிதம்
அதற்கு கயாவாளி பதிலுரைத்தார், "ஓ, நீங்களே வந்து பாருங்களேன். அதுமாதிரி வியாதி இங்கு ஒன்றும் இல்லை. சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் என்னுடன் வாருங்கள்."
ஆகவே, அவர்கள் இருவரும் கயாவாளியின் இடத்திற்குச் சென்றனர்; அவருடைய விசாலமான வீட்டைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.
அவர்களுடைய சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வீட்டிற்குள் போய் உட்காருவதற்கு முன்னமேயே, பாபாவின் படமொன்றைக் கண்ட மாதவராவ் உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடிப் போனார்.
எங்கோ தூரதேசத்தில் இருக்கும் கயாவில், பாபாவின் படத்தைக் காண்போம் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியம் அவர்களை மூழ்கடித்தது!
ஆனந்தக்கண்ணீர் பொங்கிவர, மாதவராவ் அன்பின் பெருக்கால் தன்வசமிழந்தார். இதை பார்த்த கயாவாளி, "ஏன் ஐயா நீர் அழுகிறீர்" என்று கேட்டார்.
காரணம் ஏதுமின்றி மாதவராவ் அழுவதை பார்த்தவுடன் கயாவாளி சந்தேகப்பட்டு மனம் நொந்து போனார்.
'பிளேக் நோய் இருக்கும் இந்த கயாவில் திட்டமிட்டபடி நாம் எப்படிப் புனிதப் பயணத்தை நிறைவேற்றப்போகிறோம்?' என மாதவராவ் மனச்சஞ்சலமுருகிறார் என்று நினைத்து கயாவாளி மிகவும் கவலையுற்றார். கயாவாளி ஆறுதலித்தார். -
"இவ்விடம் பிளேக் நோய் இல்லை என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டபோதிலும் நீர் கவலைகொள்கிறீர். இதைக் கண்டு நான் வாஸ்தவமாகவே வியப்படைகிறேன்!-
"என்னிடம் நம்பிக்கை இல்லை என்றால் இங்கிருக்கும் எல்லாரையும் கேளுங்கள்! இவ்விடத்தில் உங்களுடைய தலைமுடி ஒன்றுக்குகூடச் சேதம் விளையாது. நிலைமை இப்படியிருக்க, நீர் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்?"
'பிளேக் நோயைப்பற்றிய பிராந்தியை மனத்தில் ஏற்றிக்கொண்டு தைரியத்தை சுத்தமாக இழந்துபோய் அனாவசியமாக இம் மனிதர் அழுதுகொண்டேயிருக்கிறார். '
இவ்வாறு நினைத்த கயாவாளி, விவரம் சொல்லி மாதவராவை சாந்தப்படுத்த முயன்றார். ஆனால், மாதவராவின் மனத்தில் இருந்த எண்ணமோ, 'எவ்வாறு என் தாய் (சாயி) எனக்கு முன்பாகவே இன்று இவ்விடத்திற்கு வந்து சேர்ந்துருக்கிறார்' என்பதே.
ஏற்கெனவே பாபா சொல்லியிருந்தார், "காசிக்கும் பிரயாகைக்கும் சீக்கிரமாகச் சென்ற பிறகு நான் மாதவராவுக்கு முன்னாடியே வந்து சேருவேன்". இதோ, இங்கே, அந்தச் சொற்கள் நேரிடையான அனுபவமாகிவிட்டன.
வீட்டினுள் நுழைந்தவுடனேயே பாபாவின் படம் தென்பட்டது. இந்த எதிர்பாராத அனுபவம் அவர்களுக்கு மஹா ஆச்சரியத்தை அளித்தது.
அன்பின் மிகுதியால் தொண்டை அடைத்துக்கொண்டது; கண்களிலிருந்து ஆனந்தபாஷ்யம் பொங்கியது; மயிர்க்கூச்செரிந்தது; உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது.
மாதவராவினுடைய நிலை இவ்வாறு இருந்தபோது கயாவாளி வேறுவிதமாக நினைத்தார். மாதவராவ் பிளேக் நோய்க்கு பயந்துதான் அழுவதாக அவர் வாஸ்தவமாகவே எண்ணினார்.
No comments:
Post a Comment