valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 1 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"லட்சுமி, எனக்குப் பசி எடுக்கிறது." "பாபா, நான் இப்போதே பொய் உங்களுக்குச் சில சோளரொட்டிகள் கொண்டுவருகிறேன்."

என்று சொல்லிக்கொண்டே லக்ஷ்மி தம் இல்லத்திற்குச் சென்றார். சோளரொட்டி காய்கறி பதார்த்தம், சட்டினி இவற்றைச் சுடச்சுடச் செய்து எடுத்துக்கொண்டு தாமதம் இன்றித் திரும்பி வந்தார். அந்தச் சிற்றுண்டியை பாபாவின் எதிரில் வைத்தார்.

பாபா அந்தத் தட்டை எடுத்து ஒரு நாயின் முன்னே வைத்தார். லக்ஷ்மீ பாயி உடனே கேட்டார், "பாபா, நீங்கள் என்ன இவ்வாறு செய்கிறீர்கள்?"-

"நான் ஓடோடிச் சென்று என்னுடைய கைகளாலேயே  சீக்கிரமாக ரொட்டி செய்துகொண்டு வந்தேன். அதற்குப் பலன் இதுதானா? உணமையான மகிழ்ச்சியை நாய்க்கன்றோ கொடுத்துவிட்டீர்கள்!-

"நீங்கள் பசியாக இருந்தீர்கள்; அந்தப் பசியைத் தணிப்பதற்கு இதுதான் வழியா? ஒரு துண்டுகூட நீங்கள் வாயில் இடவில்லை; நான் இங்கே தவித்துக்கொண்டு நிற்கிறேன்!"

பாபா அப்பொழுது லக்ஷ்மீ பாயீயிடம் கூறினார், "நீ ஏன் வீணாகி வருத்தப்படுகிறாய்? நாயின் வயிறு நிறைந்தால், நான் திருப்தியடைகிறேன் என்று அறிவாயாக.-

"இந்த நாய்க்கு உயிர் இல்லையா? எல்லாப் பிராணிகளுக்கும் பசி என்பது ஒன்றுதான். அது ஊமை; நான் பேசுகிறேன். எனினும், பசியில் எதாவது பேதம் உண்ட என்ன?-

"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக! இது எங்கும், என்றும், பிரமாணம் என்றும் அறியவாயாக."

இது அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி; ஆயினும் போதனையோ ஆன்மீக பாஷை. சாயியின் உபதேசபரமான திருவாய்மொழி இவ்வாறே; பிரேமையெனும் ரசத்தால் பரிபக்குவம் செய்யப்பட்டது.

மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய தோஷத்தையும் (குறையையும்) ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது. ஆன்மீக போதனை அளித்து சிஷ்யர்களை மகிழ்வித்தார்.

பாபாவின் இந்த உபதேசத்திலிருந்து லக்ஷ்மி பாயியின் தினப்படிச் சோளரொட்டி சேவை ஆரம்பித்தது. தினமும் பகல் வேளையில் சோளரொட்டி சையது அதை உடைத்துப் பாலில் ஊறவைத்து பிரேமையுடன் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

பாபாவும், பிரேமையுடனும் பக்தியுடனும் அளிக்கப்பட்ட அந்தச் சோளரொட்டியைத் தினமும் சாப்பிட ஆரம்பித்தார். சில சமயங்களில் அது நேரத்துடன் வந்து சேராவிட்டால், பாபா சாப்பிடுவதற்கு எழுந்திருக்கமாட்டார்.

லக்ஷ்மீயின் சோளரொட்டி நேரம் தவறினால், தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டிருந்தாலும், சாப்பிடும் வேளை கடந்து விட்டிருந்தாலும், பாபா ஒரு கவளம் உணவையும் வாயில் இடமாட்டார்.  




Thursday, 25 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பகல் நேரத்தில் சுமார் பத்து மணி ஆகியது; நிர்யாண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் பாபா தாமே எழுந்து உட்கார்ந்தார். குழப்பமேதுமில்லாத தெளிவான மனத்துடன் இருந்தார்.

அப்பொழுது பாபாவின் முகத்தைப் பார்த்த பக்தர்களின் மனத்தில் சமுத்திரம் போன்ற பெரிய நம்பிக்கை எழுந்தது. பயங்கரமான அமங்கல வேளை கடந்துவிட்டது என்றே நம்பினர்.

அவர்கள் அனைவரும் சஞ்சலப்பட்டவாறே சோகமாக உட்கார்ந்திருந்தபோது பாபாவின் நிர்யாண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது என்ன நடந்ததென்று கேளுங்கள்.

உயிர் பிரியப்போவதற்கு முன்னாள் அவருடைய மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அது தர்மம் செய்யவேண்டிய வேளை என்றறிந்து தம்முடைய கப்னி பாக்கெட்டில் கைவிட்டார்.

சிறந்த லக்ஷணங்கள் பொருந்தியிருந்தவரும், பெயருக்கேற்ற நடத்தை கொண்டிருந்தவரும் , சாயி பாதங்களிலேயே எப்பொழுதும் மூழ்கியிருந்தவருமான, லக்ஷ்மி பாயி என்பவர் அப்பொழுது அவருடைய சந்நிதியில் இருந்தார்.

கணநேரத்தில் பூதவுடலை உதறிவிடப் போகிறோம் என்று அறிந்த பாபா, மிகுந்த கவனத்துடன் திரவிய தானம் அளித்தது இவருக்கே.

இந்த லக்ஷ்மி பாயி சிந்தேதான், பாபா வசித்த மசூதியில் எல்லா வேலைகளையும் குறையேதுமின்றி நியம நிர்பந்தங்களுக்கு உட்பட்டுச் செவ்வனே செய்தவர்.

தினமும் பகல் நேரத்தில் பாபாவின் தர்பார் எல்லாருக்கும் திறந்தவாறே செயல்பட்டது. பெரும்பான்மையான நேரத்திற்கு எவரும் தடைசெய்யப்படவில்லை. ஆனால், இரவிலோ கெடுபிடிகள் அதிகம்.

மாலை நேரத்தில் பாபா தம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மசூதிக்குத் திரும்பிய பிறகு, மக்கள் தம் தம் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு, மறுபடியும் மறுநாள் காலையில்தான் பாபாவை தரிசிக்க மசூதிக்கு வருவார்கள்.

ஆயினும், பக்த மகால்சாபதி, தாதா, லக்ஷ்மி பாயி ஆகியவர்களுடைய பக்தியை மெச்சி, இரவில் அவர்கள் வருவதை பாபா தடைசெய்யவில்லை.

மேலும், இந்த லக்ஷ்மி பாயீதான் பாபாவுக்கு தினமும் நேரம் தவறாது சோளரொட்டியும் காய்கறி பதார்த்தமும் அன்புடன் அனுப்பியவர். அவருடைய சேவையை யாரால் வர்ணிக்க முடியும்?

இந்தச் சோளரொட்டிக் கதையை கேட்டால் பாபாவுக்குப்  பிராணிகளின்மீதும் இருந்த தயை விளங்கும். அவர் நாய்களிடமும் பன்றிகளிடமும் கூட தம்மை ஐக்கியம் செய்துகொண்டதைக் கேட்டுக் கதைகேட்பவர்கள் ஆச்சரியமடைவீர்கள்.

ஒருசமயம் பாபா தம்முடைய மார்பைச் சுவரின்மேல் சாய்த்துக்கொண்டு பிரேமையுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது லக்ஷ்மி பாயீ அங்கு வந்தார்.

தாத்யா பாடீல் அருகில் இருந்தார்; இன்னும் சிலரும் அங்கு இருந்தனர். லக்ஷ்மீ பாயீ பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். அப்பொழுது பாபா அவரிடம் சொன்னார். -

 


 

Thursday, 18 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சிஷ்ய பரிவாரத்துடன் சமாதிக்கு முன்பாக நின்றுகொண்டு இரவுபகலாக பஜனையும் கீர்த்தனையும் பாடினார். அவ்வப்பொழுது பக்தர்கள் கூட்டம் நாமகோஷம் செய்தது.

தாசகணு, ஹரிநாமம் என்னும் பூக்களால் தம்முடைய கைகளாலேயே மிக மனோஹரமான மாலையொன்றைத் தொடுத்துப் பிரேமையுடன் சமாதிக்கு அணிவித்தார். அன்னதானமும் செய்தார்.

அகண்ட பஜனையின் கோஷம் ஷிர்டியைப் பூலோகவைகுண்டம்போல் தோற்றுவித்தது. தாசகணு வாரிவழங்கிய நாமகோஷம் ஷீர்டி கிராமத்தையே நிரப்பியது.

ஆயினும், பாபாவுக்கென்ன விஜயதசமிநாளின்மீது பிரீதி? வருடத்தின் மிகச் சிறந்த சுபமுகூர்த்த தினங்களான மூன்றரை நாள்களில், இந்த நாள் (விஜய தசமி), பிரயாணம் கிளம்புவதற்கு விசேஷமான சுபதினமாகக் கருதப்படுகிறது. இது அனைவர்க்கும் தெரிந்ததே.

இருந்தபோதிலும், இவ்வாறு சொல்வது பிரம்மாணமாகாது. போவது வருவது என்று ஒன்றும் இல்லாதவற்குப் புறப்பாடு என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? அத்தகையவர்க்கு சுபதினத்தில் என்ன பிரயோஜனம்?

எவர் எல்லாம் பற்றுக்களையும் துறந்தவரோ, எவர் தர்மம், அதர்மம் என்னும் பந்தங்களிலிருந்து விடுபட்டவரோ, எவருடைய பிராணனுக்கு வெளியேறுவது என்பது இல்லையோ, அவருக்கென்ன கடைசிப்பயணம்?

"பிரம்மத்தோடு ஒன்றாகியவர் பிரம்மத்தை அடைகிறார்". இதுவே சாயி மஹாராஜின் நிலை. அவருக்குப் போவதோ வருவதோ இல்லை. இவ்வாறிருக்க, அவர் நிர்ணய நிலையை அடைவதெப்படி?

உத்தாராயணமாக இருந்தாலென்ன, தக்ஷிணாயணமாக இருந்தாலென்ன? தீபம் அணையும்போது, ஒளி தீபத்தினுள்ளேயே சென்றுவிடுவதுபோல், இருந்த இடத்திலேயே பிரம்மத்தில் ஐக்கியமானவருக்குப் பிரயாணம் என்று ஏதும் இல்லையே!

மனிதவுடல் கேவலம், பஞ்சபூதங்களில் இருந்து கடன்வாங்கப்பட்ட பொருள். வேலை முடிந்தபிறகு எவரெவர்களுக்குச் சொந்தமோ அவரவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதுதானே!

வரப்போகும் நிகழ்ச்சிக்கு பாபா முன்னதாகவே சூசகமாக எச்சரிக்கை விடுத்து மக்களை வியப்படையச் செய்தார். அந்தப் பொன்னான வேளை தன்னுடைய கீர்த்தியை ஸ்தாபித்துவிட்டுப் போய்விட்டது.

ஜுரம் வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குபோக்குதான்). உலகியல் ரீதியையொட்டி பாபா சிலசமயம் முக்கினர்; சிலசமயம் முனகினார். ஆனால், எப்பொழுதும் உள்ளுக்குள் தெளிவான மனத்துடன் இருந்தார். 




Thursday, 11 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவருடைய சித்தம் பாபாவிடமே இருந்தது. எழுந்திருக்கவோ நடக்கவோ முடியவில்லை. நோய் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.

இங்கே பாபாவின் முக்கலும் முனகலும் நாளுக்குநாள் இரண்டு மடங்கு ஆகிக்கொண்டிருந்தது. அவருடைய நோயும் சீக்கிரமாக கட்டுக்கடங்காமல் போயிற்று.

பாபாவால் வரும்பொருள் கணிக்கப்பட்ட நாள் வேகமாக நெருங்கியது. பயத்தாலும் கவலையாலும் பாலா சிம்பிக்கு முத்து முத்தாக வியர்த்துக்கொட்டியது. ராமச்சந்திர பாட்டிலின் நிலைமையும் அவ்வாறே.

அவர்கள் நினைத்தனர். 'பாபா சொன்ன வார்த்தை உண்மையாகிவிடும் போலிருக்கிறது. சகுனம் ஒன்றும் சரியாக இல்லை. நோயாளியின் நிலைமை மோசமாகிவிட்டது.

வளர்பிறை தசமி உதித்தது. தாத்யாவின் நாடிதுடிப்புக் குறைந்தது. அவர் இறந்துகொண்டிருந்தார். உறவினர்களும் நண்பர்களும் முகம் வெளுத்தனர்.

பின்னர் நடந்ததோ ஓர் அற்புதம்! தாத்யாவின் உயிருக்கு ஏற்பட்ட கண்டம் விலகியது. தாத்யா பிழைத்துவிட்டார்; போனவர் பாபாதான். தத்யாவைக் காப்பாற்ற தம்முயிரை ஈந்தாரோ!

பாபாவின் திருவாய்மொழி விநோதத்தைப் பாருங்கள். தம்முடைய பெயருக்குப் பதிலாகத் தாத்யாவின் பெயரைக் கொடுத்தார்! உண்மையில், குறிக்கப்பட்ட நேரத்திலிருந்து அணுவளவும் பிசகாமல் தம்முடைய இறுதி பயணத்தைத் துவங்குவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

நடக்கப்போவதை அனைவர்க்கும் அவர் சூசகம் காட்டியிருந்தார். ஆனபோதிலும், சம்பவம் நடக்கும்வரை யாருக்குமே அது மனத்தில் படவில்லை.

'தாத்யாவின் மரணத்தைத் தவிர்ப்பதற்காக தம்முடைய உயிரை பாபா தியாகம் செய்துவிட்டார்' என்று மக்கள் பேசுகின்றனர். பாபா இவ்விதமான பண்டம் மாற்றும் விளையாட்டு விளையாடினாரா என்பது  அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்!

பாபா தேகத்தை உதிர்த்துவிட்ட தினத்தன்று இரவுநேரத்தில், பண்டரிபுரத்திலிருந்து தாசகணுவின் கனவில் (விடியற்காலையில்) காட்சியளித்தார்.

பாபா கூறியது, "மசூதி இடிந்து விழுந்துவிட்டது; ஷிர்டியின் மளிகை கடைக்காரர்களும் எண்ணெய் வியாபாரிகளும் என்னைத் துன்புறுத்தினர். ஆகவே, நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.- (பாபா உருவகபாஷையில் பேசுகிறார்)

"நான் இங்குவரை வந்தேன். சடுதியாக ஷிர்டிக்கு வாரும்! ஏராளமான வகுள மலர்களால் என்னைப் போர்த்திவிடும். என்னுடைய இந்த இச்சையைப் பூர்த்திசெய்யும்".

இதனிடையே, ஷிர்டியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலமாக, பாபா மஹாசமாதியாகிவிட்ட செய்தியை தாசகணு அறிந்தார். ஒருகணமும் தாமதியாது ஷிர்டிக்குப் புறப்பட்டார். 




Thursday, 4 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


நோய் தீர்க்கும் எந்த உபாயத்தையும் பாக்கி வைக்கவில்லை. நோயின் உக்கிரத்தைக் குறைக்க முடியாதுபோகவே, அவருக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு ஏற்பட்டது.

அந்த மனநிலையில் அவர் இருந்தபோது, திடீரென்று ஒருநாள் பாபா அவருடைய படுக்கையின் அருகில் நள்ளிரவு நேரத்தில் தோன்றினார்.

பாடீல் உடனே பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு பெரிதும் மனமுடைந்தவராய் அவரிடம் சொன்னார், 'பாபா, எனக்கு எப்பொழுது நிச்சயமாகச் சாவு வரும்? இதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்!-

"எனக்கு இனி உயிர்வாழ இஷ்டமில்லை; மரணம் எனக்குப் பெரிய சங்கடமொன்றுமில்லை. மரணத்தைச் சந்திக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன்!"

கருணாமூர்த்தியான சாயி அப்பொழுது அவரிடம் சொன்னார், "சிறிதளவும் கவலைப்படாதீர். உயிரைப் பறிக்கக்கூடிய நிலைமையும் பீதியும் கடந்துவிட்டன. ஏன் ஓய், அனாவசியமாகக் கவலைப்படுகிறீர்?-

"நீர் சிறிதும் பயப்படவேண்டா. உம்முடைய ஹூண்டி (மரண ஓலை) திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், ராமச்சந்திரா, தாத்யாவின் (தாத்யா கண்பத் பாடீல் கோதேவின்) கதியைப் பற்றி எனக்கு விடிவு ஏதும் தெரியவில்லை!-

"1918 ஆம் ஆண்டு, தக்ஷிணாயனத்தில், ஐப்பசி மாதத்தில், வளர்பிறை தசமி திதியில் (விஜயதசமியன்று) தாத்யா மேலுலகம் செல்வான்.-

"ஆயினும், இதை அவனிடம் சொல்லாதீர். அவன் மனத்தில் மரணபயம் ஏறி உட்கார்ந்துகொள்ளும். இரவுபகலாக சோகத்தால் நைந்து போவான். யாருமே சாவதற்கு விரும்புவதில்லை."

இரண்டு வருடங்கள்தாம் இருந்தன. தாத்யாவின் வேளை நெருங்கிவிட்டது. பாபாவின் வார்த்தை வஜ்ஜிரம் போன்ற உறுதியானதாயிற்றே! பாடீல் கவலையில் ஆழ்ந்தார்.

விஷயத்தை தாத்யாவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆயினும், வேறு யாருக்கும் சொல்லவேண்டா என்ற வேண்டுதலுடன் பாலா சிம்பியின் (தையற்காரர் - பாபா பக்தர்) காதில் போட்டார். இருவருமே மனம் கலங்கியவாறு இருந்தனர்.

ராமச்சந்திர பாடீல் எழுந்து உட்கார்ந்தார். அப்போதிலிருந்து அவரைப் பீடித்த வியாதி விட்டொழிந்தது. இதன் பிறகு அவருக்கே தெரியாதவாறு நாள்கள் வேகமாக ஓடின.

பாபாவின் திருவாய்மொழி எவ்வளவு துல்லியமானது என்று பாருங்கள்! 1918 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம் கழிந்தது; ஐப்பசி மாதம் பிறந்தது; தாத்யா நோய்வாய்ப்பட்டு படுக்கையாக படுத்தார்.

அங்கே தாத்யா உக்கிரமான ஜுரத்தால் வாடினார்; இங்கே பாபா குளிரால் நடுங்கினார். தாத்யா தம் முழுப் பாரத்தையும் பாபாவின் மேல் போட்டிருந்தார்; பாபாவை ரட்சித்தவர் ஸ்ரீ ஹரியே!

தாத்யாவால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாததால், பாபாவை தரிசம் செய்ய வர முடியவில்லை. தேகத்தின் யாதனையை (யமவேதனையை) அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 




Thursday, 28 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சாவடி ஊர்வலம் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கவேண்டும். ஆனால், அப்பொழுதே மணி பத்து.  பாபா இன்னும் சாந்தமடைந்தாரில்லை. மக்கள் ஆங்காங்கே விழித்தகண் விழித்தவர்களாய் மௌனமாக நின்றுகொண்டிருந்தனர்.

அப்படியே இரவு மணி பதினொன்று ஆகியது. கொஞ்சங்கொஞ்சமாக பாபாவின் கோபம் தணிந்தது. ஒரு புதிய லங்கோட்டையும் கப்னியையும் அணிந்துகொண்டார்.

சாவடி ஊர்வலத்துக்கான மணி ஒலித்தது. ஆங்காங்கே மௌனமாக உட்கார்ந்திருந்த பக்தர்கள் பல்லக்கிற்கு மலர் அலங்காரம் செய்தனர். பாபாவின் அனுமதி பெற்றபின் பல்லக்கை முற்றத்திற்குக் கொண்டுவந்தனர்.

வெள்ளித்தடி , பதாகைகள், சவரி, அலங்காரக் குடை, கொடிகள் போன்ற அரசர்களுக்குரிய அலங்காரங்களுடனும் மரியாதைகளுடனும் ஒருநாள் விட்டு ஒருநாள் நடக்கும் சாவடி ஊர்வலம் கிளம்பியது.

ஊர்வலம் கிளம்பும்போது வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பெருஞ்சத்தம் விளைவித்தன. அதையும் மீறி, மக்கள் சாயிநாதருக்கு 'ஜய ஜய' கோஷமிட்டனர். அதை யாரால் வர்ணிக்க முடியும்! எங்கும் ஆனந்தம் பொங்கிவழிந்தது.

பிறகு பாபா வேள்ளைவெளேரென்ற துணியொன்றை எடுத்துத் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டார். கிளம்புவதற்கு சுபமுஹூர்த்த வேளை என்று அறிவிப்பதுபோல், சிலீம், புகையிலை, ஜட்கா இவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார்.

சிலர் அலங்காரக் குடையையும் சிலர் சவரியையும் (சாமரத்தையும்) ஏந்தினர். மற்றும் சிலர் மயிற்பீலிகளை ஏந்தினர். சிலர் கருடாகி கொடியையும் சிலர் வாயில்காப்போரின் அதிகாரச் சின்னமான கோல்களையும் ஏந்தினர்.

இவ்வாறாக, பிறவிக் கடலின் எல்லையைக் கடப்பதற்கு விஜயதசமிநாள் சுபமான காலம் என்பதை பாபா குறிப்பால் உணர்த்தினார்.

ஆகவே, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஷீர்டி மக்களுடன் பாபா ஒரு தசராவிற்குத்தான் (நவராத்திரிப் பண்டிகைக்குத்தான்) இருந்தார். அடுத்த விஜயதசமியை நல்ல முஹூர்த்தமாக கருதித் தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.

இதை குறிப்பால் உணர்த்தியோடல்லாமல், தம்முடைய செயலால் ஷீர்டி மக்களுக்கு நேரிடை அனுபவத்தையும் அளித்தார். 1916 ஆம் ஆண்டு துனியில் தம் ஆடைகளை எரித்ததுபோல், 1918  ஆம் ஆண்டு அதே நாளில் தம் தேகமெனும் சுத்தமான வஸ்திரத்தை யோகமெனும் அக்கினிக்குப் படையலாக அர்ப்பணம் செய்தார்.

1918  ஆம் ஆண்டின் விஜயதசமி நாளை ஒரு சுபதினமாகச் செய்து மெய்ப்பொருளோடு இரண்டறக் கலந்துவிட்டார்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, விஜயதசமி நாளை அவர் முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதன் நிரூபணமாக சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ஒருசமயம், ஷீர்டி வாசி ராமச்சந்திர பாடீல் கோதே என்பவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் போலிருந்த நோயின் தாக்குதலை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய நிலைமை அவ்வாறிருந்தது. 




Thursday, 21 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


திடீரென்று பளபளவென்று மின்னலடித்துக் கடகடவென்று இடியிடிக்கும் கரிய மேகங்களை போன்று பரசுராம சொரூபமாக பாபா தோன்றினார்.

தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தார். சரக்கென்று கப்னியைக் கழற்றினார். லங்கோட்டை அவிழ்த்தார். மூன்றையும் துனியின் தீயில் போட்டுவிட்டார்.

ஏற்கெனவே துனி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. துனிக்கு மேலும் ஆஹுதியாக (படையலாக) இந்த எரிபொருள்களும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக ஜுவாலை ஆவேசத்துடன் உயரமாக எழுந்தது. தீயைக் கண்டு பக்தர்கள் மனம் கலங்கினர்.

ஈதைனைத்தும் கணப்பொழுதில் நடந்ததால், பாபாவின் கோபத்திற்குக் காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. சிலங்கன் சமயத்தில் அவருடைய தோற்றம் பெரும் பீதியை விளைவித்தது.

அக்கினியோ பிரகாசமான ஒளியுடன் பரவியது. பாபாவின் முகமோ அதைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தைத் தாங்கமுடியாததால் அங்கிருந்தவர்கர்களின் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; முகத்தை வேறுதிசையில் திருப்பிக்கொண்டனர்.

ஞானியின் கைகளால் அளிக்கப்பட்ட உணவைப் புரிந்து அக்கினி நாராயணன் சந்தோஷமடைந்தார். பரசுராம சொரூபம் எடுத்த பாபாவோ, திகம்பரமாகக் (திசைகளையே ஆடையாக அணிந்து - அம்மணமாக ) காட்சியளித்தார். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பாக்கியசாலிகள்!

கோபத்தால் அவருடைய கண்கள் சிவந்தன. கடுஞ்சினத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டு உறக்கக் கத்தினார், "ஓய்! இப்பொழுது நீங்களே முடிவுகட்டுங்கள்; நான் முஸ்லிமா ஹிந்துவா என்று!-

"இன்று பாருங்கள்; நான் ஹிந்துவா யவனனா (முஸ்லிமா) என்று. உங்கள் மனம் திருப்தியடையும் வரை பார்த்து நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள்" என்று பாபா கர்ஜித்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பயத்தால் நடுங்கினர். பாபாவை எப்படி சாந்தப்படுத்துவது என்று தெரியாது விழித்தனர். கவலையுற்றனர்.

பாகோஜீ சிந்தே ஒரு குஷ்டரோகி; ஆயினும் பக்தர்களில் சிரேஷ்டர் (சிறந்தவர்). பாகோஜீ தைரியமேற்று பாபாவின் அருகில் சென்று அவருடைய இடுப்பில் ஒரு லங்கோட்டைச் சுற்றினார்.

பாகோஜீ கேட்டார், "என்ன பாபா இதெல்லாம்?  இன்று தசரா பண்டிகையில் சிலங்கன் (எல்லை தாண்டும்) நாள் ஆயிற்றே!" பாபா சட்காவால் பலமாக அடித்துக்கொண்டே சொன்னார், "இதுதான் என்னுடைய சிலங்கன்".

இவ்வாறு, துனியின் அருகில் பாபா திகம்பரமாக நின்றுகொண்டேயிருந்தார் . அன்று அவர் சாவடியில் உறங்கும் முறை நாள். 'சாவடி ஊர்வலம் எப்படி நடக்கப்போகிறது ' என்று அனைவரும் சஞ்சலமடைந்தனர்.