valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 14 September 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். அவையெல்லாவற்றிலும் ஒரு புடைச்சிற்பத்தின் அழகு என்னை மோகங்கொள்ளச் செய்தது. மேலும், அது என்னுடைய இஷ்டதேவதை?

ஆதியிலிருந்து எனக்கு சாயியின் மீது ஈர்ப்பு இருந்தது. அந்த மூர்த்தியை நேருக்குநேர் பார்த்தவுடனே, அதை உடனே வாங்கிவிடவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது. உடனே அதற்குண்டான விலையைக் கொடுத்து வாங்கினேன்.

சிற்பத்தை வீட்டிற்கு கொண்டுவந்து சுவரில் மாட்டினேன். எனக்கு பாபாவின்மேல் மிகுந்த பிரேமை இருந்ததால் தினமும் அதை ஆனந்தமாக தரிசனம் செய்துவந்தேன்.

உங்களிடம் சிற்பத்தை அளித்த காலகட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நான் ஆரோக்கியம் இழந்ததால் தினமும் அதை ஆனந்தமாக தரிசனம் செய்துவந்தேன்.

என்னுடைய மைத்துனருடைய பெயர் நூர் முஹம்மது பீர்பாய், என்னுடைய கால் வீங்கியிருந்தது; குணப்படுத்துவதற்காக அறுவை மருத்துவம் செய்யப்பட்டது.

இவ்வாறு, உடல்நலம் குன்றியிருந்த நிலையில் நான் மைத்துனரின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கினேன். அந்த மூன்று மாதங்களில் என்னுடைய வீட்டில் யாரும் வசிக்கவில்லை.

இருந்தபோதிலும், புகழ்பெற்ற அப்துல் ரஹிமான் பாபா, மௌலானா சாப், முஹம்மது ஹுசேன், சாயி பாபா, தாஜுத்தீன் பாபா, ஆகியவர்களின் படங்கள் இடத்தைவிட்டு நகரவில்லை.

இவர்களுடையதும், இவர்களைப் போன்ற மற்ற ஞானிகளுடையதுமான அழகிய புகைப்படங்கள் என் வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. இவற்றையும் காலச்சக்கரம் விட்டுவைக்கவில்லை.

நான் இங்கு இந்த கதியில் இருந்தபோது படங்களை ஏன் ஏழரைச்சனி பிடிக்கவேண்டும்? உற்பத்தில் செய்யப்பட்ட எல்லாப் பொருள்களும் என்றாவது ஒருநாள் அழிந்துதான் போகவேண்டுமென்பதை நான் உணர்கிறேன்.

இருப்பினும், நிலைமை இவ்வாறு இருந்தபோது, சாயி மாத்திரம் எப்படி விடுபட்டார்? இதை விளக்க இன்றுவரை யாராலும் இயலவில்லை.

இதுபற்றிய காதையை ஆரம்பத்திலிருந்து கேட்டால் நீங்கள் பெரும் வியப்படைவீர்கள்! நகரும் நகராப் பொருள்களுடன் சாயி ஒன்றியிருப்பதையும் கற்பனைக்கு எட்டாத அவருடைய சூக்குமமான செயல் திறமையையும் அறிந்துகொள்வீர்கள்.

தாரியா என்ற செல்லப்பெயர் கொண்ட முஹம்மது ஹுசைன் என்பவரிடம் அப்துல் ரஹிமான் பாபா என்ற ஞானியின் சிறிய படம் ஒன்று இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அப் படத்தின் பிரதியொன்றை எனக்கு அவர் கொடுத்திருந்தார். அதை நான் என் மைத்துனருக்கு கொடுத்திருந்தேன். மைத்துனர், ஞானி அப்துல் ரஹிமானின் நெருங்கிய சிஷ்யர்.

அவரிடம் அது மேஜை இழுப்பறையில் எட்டு ஆண்டுகள் கிடந்தது. ஒருநாள் சகஜமாக மேஜை இழுப்பறையைத் திறந்தபோது எதிர்பாராதவிதமாக அதைக் கவனித்தார். அதை பம்பாயிலிருந்த, புகைப்படம் எடுப்பவர் ஒருவரின் கடைக்கு எடுத்துச் சென்றார். 




 

Thursday, 31 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ரசம் ததும்பும்  அக்  காதை இதுவே. கதைகேட்பவர்கள் ஆதியிலிருந்தே கவனமாக இருக்கிறார்கள்; சொல்பவர் சாயி பாதங்களில் மூழ்கியிருக்கிறார்; சாயியின் சரித்திரமோ ஆழங்கான முடியாதது!

பரோபகாரமே  உருவெடுத்துவந்த சாயி மற்றவர்களின் நன்மைக்காக கடுமையாக உழைத்தார். ஒருபோதும் விரோதபாவத்தையே அறியாத அவர் இடைவிடாது நற்செயல்களிலேயே ஈடுபட்டிருந்தார்.

மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், வேறுவிதமாக இருந்தாலும் கர்மபந்தத்திலிருந்து விடுபடமுடியாது. ஆகவே, குருபாதங்களில் பிரீதியுடன் மனத்தை உள்முகமாகச் செலுத்துங்கள்.

பின்னர், குருபாதங்களில் பிரேமையுடைய பக்தர்களின் யோக க்ஷேமத்தை , குரு சிரமமேதுமின்றி அளிக்கும் மிக உத்தமமான  அனுபவத்தை அடையுங்கள்.

இது கேட்டாலும் கிடைக்காத நிலை; ஆயினும், குருவின் பெருமையைப் பாடுவதால் சுலபமாக கிடைக்கும். பெருமுயற்சிகள் செய்தும்  அடையமுடியாத நிலை; குருகிருபையின் பலத்தால் தானாகவே உங்களிடம் வந்துசேரும்.

அவரை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டுமென்ற நோக்கத்தில் கர்வத்துடன் வந்தவர்கள், கர்வபங்கமடைந்து தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் சுகமாக வீடு திரும்பினர்.

இறையாண்மையால் ஸ்ரீஹரி பூரணமாக நிரம்பியிருப்பதுபோல , வெற்றி , செல்வம், கொடை, ஞானம், சாந்தி, பற்றற்ற நிலை ஆகிய ஆறுகுணங்களால் ஸ்ரீஸாயி பகவான் நிரம்பியிருந்தார்.

பிரபஞ்ச உணர்வால் நிரம்பிய சாயி , நாம் அர்ச்சனையோ பூஜையோ பஜனையோ செய்யாமலே நமக்கு தரிசனம் அளிப்பது நம்முடைய வானளாவிய பாக்கியமே!

பக்தியிருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறன்றான் என்பது வழக்கு. ஆனால், நமக்கோ பக்தி குறைபடுகிறது.  ஆயினும், சுபாவமாகவே (இயல்பாகவே) தீனர்களிடம் தயை காட்டும் சாயி, மஹானுபவர்.

கதைகேட்பவர்களே! அல்லீ முஹம்மது சொன்ன கதையை இப்பொழுது கேளுங்கள். சாயி லீலையின் வானளாவிய இயல்பையும் அவருடைய மஹாசக்தியையும் நன்கு அறிந்துகொள்வீர்கள். ( இதற்குமேல் அல்லீ முஹம்மது அவர்களின் கூற்று)

ஒருநாள் பம்பாய் நகரத்தில் சாலைவழியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு வியாபாரி அழகிய படங்களையும் புடைச்சிற்பங்களையும்  (BAS - RELIEF ) விற்றுக்கொண்டிருந்ததை பார்த்தேன்.

ஞானிகள், மகந்துகள் , அவலியாக்கள் ஆகியோரின் பலவிதமான வண்ணப்படங்களைக் கண்ட நான், அவை யார் யாருடைய படங்கள் என்றறிய விரும்பினேன். 






Thursday, 24 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


41 . கருணையும் அருள்மழையும்


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி  ! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே  போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!


மேலும் மேலும் கேட்பதற்கு தூண்டுகோல் ஏதும் தேவைப்படாத மஹிமை பெற்றது. சாயியின் சரித்திரம். வாஸ்தவமாக, கதைகேட்பவர்களே விட்ட இடத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு மேற்கொண்டு கேட்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

கேட்பவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனமொன்றியும் கேட்கும்போது அவர்களைக் கவனமாகக் கேட்கும்படி வேண்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

குருவின் மஹிமையைப் பாடுவதாலும்  கேட்பதாலும் சித்தம் தூய்மையடைகிறது. நாம ஜபம் செய்துகொண்டே தியானம் செய்தால், ஆனந்தமளிக்கும் அவருடைய உருவம் வெளிப்படும்.

விரதங்களின் உத்தியாபன விழா சிறப்பாக நடந்தேறியதையும் என்னுடைய கனவு பலித்ததுபற்றியும் கடந்த அத்தியாயத்தில்  விரிவுரை கேட்டீர்கள்.

அதுபோலவே, பக்தனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகச் சற்றும் எதிர்பாராத விதத்தில், கடைசி நிமிடத்தில், களிமண்ணாலான புடைச்சிற்பம் வந்துசேர்ந்த கதையைக் கேளுங்கள்.

ஒரு ஹோலிப் பண்டிகை தினத்தில் என் கனவில் தோன்றி, "இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்"என்றுசொல்லி, என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த விருப்பமொன்றை நிறைவேற்றினார்.

இந்தக்காதை முன்பே விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது.இன்று, அந்தப் பிரதையை சரியான நேரத்தில் எப்படி வந்துசேர்ந்ததென்ற அற்புதத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

அல்லீ முஹம்மது அந்தக் காதையை முழுவதும் சொன்னபோது நான் பரம ஆச்சரியம் அடைந்தேன். யோசித்துப்பார்த்தால், அதுவும் பாபாவின் வினோதமான லீலைகளில் ஒன்றன்றோ!

ஹோலிப் பண்டிகை தினத்தன்று மதிய நேரத்தில் நாங்கள் சாப்பிடபோனபோது கடைசி நிமிடத்தில் வந்து, எங்களை மகிழ்வித்தவர்தான் அல்லீ முஹம்மது .

இது முன்னமேயே சொல்லப்பட்ட காதை. கதைகேட்பவர்களே! இப்பொழுது மேற்கொண்டு விவரங்களை சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். சாயியின் சரித்திரம் புனிதமானது! 




Thursday, 17 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அழைக்காமலேயே வந்தார்! வேறு உருவத்தில் தோன்றினார்! தம் பக்தர்களைக் கடமைப்பட்டவர்களாகச் செய்தார்! ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வூட்டினார்.

ஹேமாட் சாயியை சரணைடைகிறேன். அடுத்த அத்தியாயத்தின் அரங்கேற்றத்தை அவருடைய விருப்பம்போல் ஏற்பாடு செய்வார். அடுத்த அத்தியாயமும் சென்ற அத்தியாயத்தை போலவே மலரும்.

சாயி சரணாகதியடைந்தவர்களை பாதுகாக்கிறார். சாயியின் இந்த வாக்குறுதிக்காகவே ஹேமாட் அவருடைய பாதங்களை பற்றிக்கொள்கிறேன்.  அவரும் உதைத்துத் தள்ளுவதில்லை!

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட , 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'உத்தியாபன விழா' என்னும் நாற்பதாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீஸத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.






Thursday, 10 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பூஜையறையில் மற்ற தெய்வங்களுடன் இந்தச் சிற்பமும் வழிபடப்படுகிறது. இதுவே, சாயியின் அபூர்வமான லீலை;  சரித்திரம். பக்தர்களுக்கு ஒவ்வொரு சாயி வழிகாட்டுகிறார் அல்லரோ! 


அல்லீ முஹம்மதும் இஸ்மூ முஜாவரும் விவரம் சொல்வதற்காகச் செய்யவேண்டிய வருகையைத் தள்ளிபோட்டுக்கொண்டே போயினர். ஒன்பது ஆண்டுகள் கடந்த என்னால் அவர்களைச் சந்திக்கமுடியவில்லை. 


கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்து, ஒருநாள் நாள்  இயல்பாகச் சாலையில் நாம் சென்றுகொண்டிருந்தபோது அல்லீ  முஹம்மது  அவர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். 


சந்தித்தபோது, எனக்களிக்கப்பட்ட சாயியின் புடைச்சிற்பம் பற்றிய அற்புதத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்துடன் அவரைக் கேட்டேன், "இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்?-


"அன்று எப்படியோ, இன்றும் அப்படியே எதிர்பாராதவிதமாக சந்தித்திருக்கிறோம். இந்த நல்வாய்ப்பு நமக்கு சகஜமாக அமைந்திருக்கிறது. ஆகவே, சுவாரசியமான அந்த விருத்தாந்தந்தை முழுவதும் சொல்லுங்கள். -


"நீங்களும் ஒரு சாயி பக்தர் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆயினும், சற்றும் எதிர்பாராதவிதமாக அந்தக்  குறிப்பிட்ட  நாளில்  வருவதுதான்  சிறப்பு  என்று  நீக்கினால் எப்படி நிச்சயத்தீர்கள்?"


பிறகு, அல்லீ முஹம்மது முழு விருத்தாந்தத்தையும் சொன்னார், "ஆச்சரியம் நிரம்பியதும் மிக அற்புதமானதுமான சாயியின் லீலையை ஆதியோடந்தமாக சொல்கிறேன்; கேளுங்கள்.-


"இந்த லீலைக்கு என்ன அர்த்தம்? லீலை எதற்காகச் செய்யப்பட்டது? இதன்மூலம் பக்தர்கள் அறியவேண்டியது என்ன? அனைத்தும் சாயிக்கே வெளிச்சம்! -


"நம்மைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் லீலைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும்; வாயினால் பாடவேண்டும். இரண்டுமே நமக்கு நற்பேறுகளை அளிக்கும்".


மேற்கொண்டு வரும் கதை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். கேட்கும் மக்கட்கூட்டம் ஆனந்தமடையும். சாயியின் சரித்திரம் அமோகமாக நன்மையளிக்கும். 


சாயி, ஆனந்தம் நிறைந்த கனமேகம் . துவேஷமென்பதே  இல்லாதவர். அவரை எப்பொழுதும் இடைவிடாமல் தொழுபவர்கள் ஆனந்தமும் திருப்தியும் அடைவார்கள்; மனம் விருப்புவெறுப்புகளிலிருந்து விடுபடும். 


சாதகப்பறவை சுயநலத்திற்காக மேகத்தை நாடுகிறது. மேகமோ சகல சிருஷ்டிக்குமே மழையாகப் பொழிகிறது . பாலாசாஹேப் (தேவ்)  பாபாவை விருந்துக்கு அழைத்தார். பாபாவோ பக்தர் குழாமைத் தம்முடன் அழைத்துச் சென்றார். 


பந்தியாக  உட்கார்ந்து உத்தியாபன விழா கதையைக் கேட்டவர்களும் இந்த பக்தர் குழாமில் அடக்கம். சாயியின் சங்கம் என்னும்  விருந்தை அனுபவித்து  திருப்தியை ஏப்பம் விட்டு தெரிவிக்கின்றனர்.  





Thursday, 3 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாயியின் சிற்பத்தைப் பார்த்தவுடனே உணச்சிவசத்தால் எனக்கு உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தது. இதயம் அன்பினாலும் ஆனந்தத்தாலும் பொங்கி வழிந்தது. உடனே சாயி பாதங்களில் தலையை வைத்தேன்.

சாயியின் விசித்திரமான லீலையைக் கண்டு அதை ஒரு பேரதிசயம் என்று நினைத்தேன். தம்முடைய சக்தியை இவ்வாறு வெளிப்படுத்தி என்னை அவர் ஆசீர்வதித்திருக்கிறார்' என்று நினைத்தேன்.

மனத்தில் பேரெழுச்சியும் ஆர்வமும் ஏற்பட, அந்தப் புடைச்சிற்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டேன். அல்லீ முஹமது சொன்னார், "நான் இதை ஒரு கடையிலிருந்து விலைகொடுத்து வாங்கினேன்."

பிறகு அவர் ஒரு கணமும் தாமதியாது சொன்னார், "நாங்கள் இப்பொழுது சென்றுவருகிறோம். நீங்களெல்லாம் நிம்மதியாகச் சாப்பிடுங்கள்.-

"நான் இப்பொழுது முகாந்தரத்தைச் சொல்ல ஆரம்பித்தால், சாப்பிட உட்கார்ந்திருப்பவர்கள் அனாவசியமாகக் காத்திருக்கும்படி நேரும். நான் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்".

நானும் அதுதான் சரியென்று நினைத்தேன். மேலும், கடைசி வினாடியில் பாபாவின் சிற்பம் வந்துசேர்ந்த ஆனந்தத்தில் நான் மூழ்கிப்போயிருந்தேன். ஆகவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நான் சொன்னேன். -

"நல்லது, நீங்கள் சென்றுவாருங்கள்." நானும் கதைகேட்பவர்களுக்கு பாபாவின் புடைச்சிற்பம் வந்துசேர்ந்த விவரத்தைப் பின்னர்ச் சொல்கிறேன். அதை இன்றே சொல்லவேண்டிய அவசியம் என்ன!

ஆகவே, அவர்களிருவரும் கிளம்பிச் சென்றபிறகு, ஏற்கெனவே பாபாவுக்காக இடப்பட்டிருந்த மணையின்மேல் புடைச்சிற்பம் வைக்கப்பட்டது.

எல்லாரும் சந்தோஷமடைந்தனர். சாயி லீலை கற்பனைக்கெட்டாதது. சிற்ப ரூபத்தில் வந்து கனவில் சொன்ன வார்த்தைகளை சத்தியமாக்கிவிட்டார்!

ஒருவேளை யாராவது விருந்தாளி வந்தால், தங்களுடன் அவரும் பந்தியில் அமர்வார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் அடைந்த ஆச்சரியந்தான் என்னே!

புடைச்சிற்பத்திலிருந்த அழகான மூர்த்தியைப் பார்த்து அனைவரும் பரம சந்தோஷமடைந்தனர். சற்றும் எதிர்பாராதவிதமாக அது வந்துசேர்ந்ததை கண்டு எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

சிற்பம் மணையின்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, அர்க்யம், பாத்யம் போன்ற சடங்குகளுடன்கூடிய பூஜை செய்யப்பட்டது. பிரேமையுடனும் பக்தியுடனும் படையல் சமர்பிக்கப்பட்டபிறகு பிறகு எல்லாரும் உணவுண்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஒவ்வொரு ஹோலிப்பண்டிகையன்றும் இந்தச் சிற்பத்திற்கு ஆச்சாரவிதிகளின்படி எட்டு உபசாரங்கள் கொண்ட பூஜை நடந்துவருகிறது.