valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 17 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அழைக்காமலேயே வந்தார்! வேறு உருவத்தில் தோன்றினார்! தம் பக்தர்களைக் கடமைப்பட்டவர்களாகச் செய்தார்! ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வூட்டினார்.

ஹேமாட் சாயியை சரணைடைகிறேன். அடுத்த அத்தியாயத்தின் அரங்கேற்றத்தை அவருடைய விருப்பம்போல் ஏற்பாடு செய்வார். அடுத்த அத்தியாயமும் சென்ற அத்தியாயத்தை போலவே மலரும்.

சாயி சரணாகதியடைந்தவர்களை பாதுகாக்கிறார். சாயியின் இந்த வாக்குறுதிக்காகவே ஹேமாட் அவருடைய பாதங்களை பற்றிக்கொள்கிறேன்.  அவரும் உதைத்துத் தள்ளுவதில்லை!

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட , 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'உத்தியாபன விழா' என்னும் நாற்பதாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீஸத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.






Thursday, 10 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பூஜையறையில் மற்ற தெய்வங்களுடன் இந்தச் சிற்பமும் வழிபடப்படுகிறது. இதுவே, சாயியின் அபூர்வமான லீலை;  சரித்திரம். பக்தர்களுக்கு ஒவ்வொரு சாயி வழிகாட்டுகிறார் அல்லரோ! 


அல்லீ முஹம்மதும் இஸ்மூ முஜாவரும் விவரம் சொல்வதற்காகச் செய்யவேண்டிய வருகையைத் தள்ளிபோட்டுக்கொண்டே போயினர். ஒன்பது ஆண்டுகள் கடந்த என்னால் அவர்களைச் சந்திக்கமுடியவில்லை. 


கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்து, ஒருநாள் நாள்  இயல்பாகச் சாலையில் நாம் சென்றுகொண்டிருந்தபோது அல்லீ  முஹம்மது  அவர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். 


சந்தித்தபோது, எனக்களிக்கப்பட்ட சாயியின் புடைச்சிற்பம் பற்றிய அற்புதத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்துடன் அவரைக் கேட்டேன், "இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்?-


"அன்று எப்படியோ, இன்றும் அப்படியே எதிர்பாராதவிதமாக சந்தித்திருக்கிறோம். இந்த நல்வாய்ப்பு நமக்கு சகஜமாக அமைந்திருக்கிறது. ஆகவே, சுவாரசியமான அந்த விருத்தாந்தந்தை முழுவதும் சொல்லுங்கள். -


"நீங்களும் ஒரு சாயி பக்தர் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆயினும், சற்றும் எதிர்பாராதவிதமாக அந்தக்  குறிப்பிட்ட  நாளில்  வருவதுதான்  சிறப்பு  என்று  நீக்கினால் எப்படி நிச்சயத்தீர்கள்?"


பிறகு, அல்லீ முஹம்மது முழு விருத்தாந்தத்தையும் சொன்னார், "ஆச்சரியம் நிரம்பியதும் மிக அற்புதமானதுமான சாயியின் லீலையை ஆதியோடந்தமாக சொல்கிறேன்; கேளுங்கள்.-


"இந்த லீலைக்கு என்ன அர்த்தம்? லீலை எதற்காகச் செய்யப்பட்டது? இதன்மூலம் பக்தர்கள் அறியவேண்டியது என்ன? அனைத்தும் சாயிக்கே வெளிச்சம்! -


"நம்மைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் லீலைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும்; வாயினால் பாடவேண்டும். இரண்டுமே நமக்கு நற்பேறுகளை அளிக்கும்".


மேற்கொண்டு வரும் கதை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். கேட்கும் மக்கட்கூட்டம் ஆனந்தமடையும். சாயியின் சரித்திரம் அமோகமாக நன்மையளிக்கும். 


சாயி, ஆனந்தம் நிறைந்த கனமேகம் . துவேஷமென்பதே  இல்லாதவர். அவரை எப்பொழுதும் இடைவிடாமல் தொழுபவர்கள் ஆனந்தமும் திருப்தியும் அடைவார்கள்; மனம் விருப்புவெறுப்புகளிலிருந்து விடுபடும். 


சாதகப்பறவை சுயநலத்திற்காக மேகத்தை நாடுகிறது. மேகமோ சகல சிருஷ்டிக்குமே மழையாகப் பொழிகிறது . பாலாசாஹேப் (தேவ்)  பாபாவை விருந்துக்கு அழைத்தார். பாபாவோ பக்தர் குழாமைத் தம்முடன் அழைத்துச் சென்றார். 


பந்தியாக  உட்கார்ந்து உத்தியாபன விழா கதையைக் கேட்டவர்களும் இந்த பக்தர் குழாமில் அடக்கம். சாயியின் சங்கம் என்னும்  விருந்தை அனுபவித்து  திருப்தியை ஏப்பம் விட்டு தெரிவிக்கின்றனர்.  





Thursday, 3 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாயியின் சிற்பத்தைப் பார்த்தவுடனே உணச்சிவசத்தால் எனக்கு உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தது. இதயம் அன்பினாலும் ஆனந்தத்தாலும் பொங்கி வழிந்தது. உடனே சாயி பாதங்களில் தலையை வைத்தேன்.

சாயியின் விசித்திரமான லீலையைக் கண்டு அதை ஒரு பேரதிசயம் என்று நினைத்தேன். தம்முடைய சக்தியை இவ்வாறு வெளிப்படுத்தி என்னை அவர் ஆசீர்வதித்திருக்கிறார்' என்று நினைத்தேன்.

மனத்தில் பேரெழுச்சியும் ஆர்வமும் ஏற்பட, அந்தப் புடைச்சிற்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டேன். அல்லீ முஹமது சொன்னார், "நான் இதை ஒரு கடையிலிருந்து விலைகொடுத்து வாங்கினேன்."

பிறகு அவர் ஒரு கணமும் தாமதியாது சொன்னார், "நாங்கள் இப்பொழுது சென்றுவருகிறோம். நீங்களெல்லாம் நிம்மதியாகச் சாப்பிடுங்கள்.-

"நான் இப்பொழுது முகாந்தரத்தைச் சொல்ல ஆரம்பித்தால், சாப்பிட உட்கார்ந்திருப்பவர்கள் அனாவசியமாகக் காத்திருக்கும்படி நேரும். நான் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்".

நானும் அதுதான் சரியென்று நினைத்தேன். மேலும், கடைசி வினாடியில் பாபாவின் சிற்பம் வந்துசேர்ந்த ஆனந்தத்தில் நான் மூழ்கிப்போயிருந்தேன். ஆகவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நான் சொன்னேன். -

"நல்லது, நீங்கள் சென்றுவாருங்கள்." நானும் கதைகேட்பவர்களுக்கு பாபாவின் புடைச்சிற்பம் வந்துசேர்ந்த விவரத்தைப் பின்னர்ச் சொல்கிறேன். அதை இன்றே சொல்லவேண்டிய அவசியம் என்ன!

ஆகவே, அவர்களிருவரும் கிளம்பிச் சென்றபிறகு, ஏற்கெனவே பாபாவுக்காக இடப்பட்டிருந்த மணையின்மேல் புடைச்சிற்பம் வைக்கப்பட்டது.

எல்லாரும் சந்தோஷமடைந்தனர். சாயி லீலை கற்பனைக்கெட்டாதது. சிற்ப ரூபத்தில் வந்து கனவில் சொன்ன வார்த்தைகளை சத்தியமாக்கிவிட்டார்!

ஒருவேளை யாராவது விருந்தாளி வந்தால், தங்களுடன் அவரும் பந்தியில் அமர்வார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் அடைந்த ஆச்சரியந்தான் என்னே!

புடைச்சிற்பத்திலிருந்த அழகான மூர்த்தியைப் பார்த்து அனைவரும் பரம சந்தோஷமடைந்தனர். சற்றும் எதிர்பாராதவிதமாக அது வந்துசேர்ந்ததை கண்டு எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

சிற்பம் மணையின்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, அர்க்யம், பாத்யம் போன்ற சடங்குகளுடன்கூடிய பூஜை செய்யப்பட்டது. பிரேமையுடனும் பக்தியுடனும் படையல் சமர்பிக்கப்பட்டபிறகு பிறகு எல்லாரும் உணவுண்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஒவ்வொரு ஹோலிப்பண்டிகையன்றும் இந்தச் சிற்பத்திற்கு ஆச்சாரவிதிகளின்படி எட்டு உபசாரங்கள் கொண்ட பூஜை நடந்துவருகிறது.



Thursday, 27 July 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, வாயிற்கதவு அடைக்கப்பட்டது. அன்னத்தை சுத்தம் செய்வதற்காக நெய் பரிமாறப்பட்டது. வைச்வதேவ நைவேத்தியமும் முடிந்துவிட்டது. சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.

போஜனம் செய்பவர்கள் பிராண ஆஹுதி செய்யப்போகும் சமயத்தில் வீட்டிற்கு வெளியே காலடி சத்தம் கேட்டது. "ராவ்சாஹிப் எங்கிருக்கிறார்?" என்று யாரோ வினவும் குரலும் கேட்டது. சாப்பிட உட்கார்ந்தவர்கள் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

யாரோ வந்திருக்கிறார் என்று நினைத்து நான் வாயிற்கதவுக்குச் சென்றேன். மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தேன்; படிகளில் இருவர் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் அல்லீ முஹம்மது. மற்றவர் இஸ்மூ முஜாவர் என்ற பெயர் கொண்டவர்; முஸ்லீம் ஞானி மௌலானாவின் சிஷ்யர். இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

போஜனத்திற்கு எல்லாம் தயார் நிலையில் இருந்ததையும் இலைகளில் உணவுப் பொருள்கள் பரிமாறப்பட்டிருந்ததையும் எல்லாரும் சாப்பிடக் காத்துக்கொண்டிருந்ததையும் இருவரும் கண்டனர். இதையெல்லாம் பார்த்த அல்லீ முஹம்மது பணிவுடன் கேட்டுக்கொண்டார், 'நான் தொந்தரவு கொடுப்பதற்கு மன்னித்துவிடுங்கள்.-

"சாப்பிட உட்கார்ந்த நீங்கள் எனக்காக எழுந்து வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. உங்களுக்காக மற்றவர்களும் காத்திருக்கின்றனர்.-

"ஆகவே, உங்களுடைய வஸ்துவை (பொருளை) ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களை பின்னர் சந்திக்கிறேன். சமயம் வரும்போது இதுபற்றிய மிக ஆச்சரியமானதும் அற்புதமானதுமான விஷயத்தை விவரமாகச் சொல்கிறேன்".

இவ்வாறு சொல்லிக்கொண்டே, அல்லீ முஹம்மது கையிடுக்கிலிருந்த ஒரு பார்சலைத் தமக்கெதிரிலிருந்த மேஜையின் மீது வைத்துக் கட்டுகளைப் பிரிக்க ஆரம்பித்தார்.

மேலே சுற்றியிருந்த செய்தித்தாள் காகிதங்களைப் பிரித்த கணமே, சாயியின் மூர்த்தி (களிமண்ணாலான புடைச்சிற்பம் - BAS - RELIEF ) கண்களுக்குத் தென்பட்டது. அவர் சொன்னார், "என்னுடைய வேண்டுகோளை ஏற்று, இதை எடுத்துக்கொள்ளுங்கள்".

 


 

Thursday, 20 July 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"நம்மால் என்ன பெரிய விருந்தளிக்க முடியும்? நாமென்ன விஷேஷமாகவோ ஹோலிப்பண்டிகை கொண்டாடுகிறோம்? ஷிர்டியில் கிடைக்கக்கூடிய இனிப்புகளையும் ருசி மிகுந்த உணவுப்பண்டங்களையும் விட்டுவிட்டு நம்முடைய ருசியற்ற முரட்டுச் சோற்றையா சாப்பிடப்போகிறார்?"-

என்று அவள் கேட்டாள். நான் பதில் சொன்னேன், "கால் சேர் அரிசி அதிகமாக வடிப்பதில் நமக்கென்ன பெரிய ஆயாசம்? உன்னிடம் கால் சேர் அரிசி இல்லாமல் போய்விடவில்லையே!-

"சாயி, தாமே விருந்தாளியாக வருவார் என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆயினும், யாரோ ஒரு விருந்தாளி வரப்போகிறார் என்று எனக்கு சந்தேகமில்லாமல் தோன்றுகிறது. -

"அவரை நீ யாரென்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்; நான் அவரை சாயிக்கு சமானமாக எடுத்துக்கொள்கிறேன். இல்லை, இல்லை, சாயியாகவே எடுத்துக்கொள்கிறேன்; என்னுடைய சொப்பணமும் உண்மையாகிவிடும்."

இதுவே எங்களுக்குள் நடந்த சம்பாஷணை. பிறகு மதியநேரம் வந்தது. விதிமுறைகளின்படி ஹோலிகா பூஜையும் (அக்கினி பூஜையும்) செய்யப்பட்டது; போஜனத்திற்காகத் தையலிலைகள் போடப்பட்டன.

மகன்கள், பேரன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் - அனைவருக்கும் பந்தியாகத் தையலிலைகளும் மனைகளும் போடப்பட்டன; குடிநீர்ப் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. பந்தியில் இலைகளைச் சுற்றி அழகான கோலங்கள் போடப்பட்டன.

இந்த அமைப்பின் முக்கிய பந்தியின் மத்தியில் சாயிக்காக ஒரு மணையும் தட்டும் போடப்பட்டன. மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது இந்தத் தட்டிலும் பரிமாறப்பட்டது.

இந்தத் தட்டைச் சுற்றி பல வண்ணங்களில் அழகாக கோலம் போடப்பட்டிருந்தது. சாப்பிடுபவர் ஒவ்வொருவருக்கும் குடிநீர்ப் பாத்திரம் ஒன்றும் உத்தரணியுடன் கூடிய பஞ்சபாத்திரம் ஒன்றும் வைக்கப்பட்டன. இது எல்லாருக்கும் ஒரேமாதிரியாகச் செய்யப்பட்டது.

அப்பளம், சாண்டகே, பச்சமுடி, காரமான ஊறுகாய் , பலவிதமான காய்கறிகள், பாயசம் ஆகியவை பரிமாறப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன.

மணி பன்னிரண்டு ஆகிவிட்டதென்று தெரிந்து, சாப்பிடப்போகிறவர்கள் மடி வேட்டிகளைக் கட்டிக்கொண்டபின் ஒவ்வொருவராக வந்து மணைகளில் அமர்ந்தனர். அப்பொழுதும் விருந்தாளி எவரும் வரவில்லை!

பந்தியில் எல்லா இடங்களும் நிரம்பிவிட்டன. சோறு, போளி, பருப்பு, சப்பாத்தி ஆகியவை பரிமாறப்பட்டன. சாப்பிட ஆரம்பிக்க, மத்தியில் காலியாக இருந்த ஆசனத்தில் அமரவேண்டிய விருந்தாளியைத் தவிர வேறெதுவும் தேவைப்படவில்லை!

விருந்தாளி யாராவது வருவாரென்று எல்லாரும் காத்திருந்தனர். எனக்கே மனத்தில் சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது. வாயிற்படியைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது?


 

Thursday, 13 July 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


1917 ஆம் ஆண்டு பங்குனி மாதப் பௌர்ணமியன்று நான் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது விடியற்காலை நேரத்தில் கனவொன்று கண்டேன்.

சாயியின் விசேஷமான செயலைப் பாருங்கள்!  அவர் எனக்கு அழகான  சந்நியாசி உடையில் காட்சி தந்தார். என்னை எழுப்பி, "இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்!" என்று சொன்னார்.

கனவிலிருந்து விழித்துக்கொள்வது கனவின் ஒரு பகுதியே. ஆகவே, தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பிறகு, நான் கனவில் கண்டதை ஞாபகத்திற்கு கொண்டுவர முயன்றேன்.

நான் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்த்தேன். சாயியோ வேறெவருமோ அங்கு இல்லை. சற்று முன்பு நான் கண்டது கனவுதான்; கொஞ்சமும் விழிப்பில்லாத நிலையே.

இவ்விதமாக தெளிவடைந்தபிறகு, கனவை நினைவிற்குக் கொண்டுவர முயன்றேன். அவர் சொன்ன சொற்களைக் கொஞ்சமும் மறந்துவிடாமல், ஓர் எழுத்தையும் விட்டுவிடாமல் மனத்தில் திரும்பக் கொணர்ந்தேன்.

"இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்" என்ற சாயியின் தெளிவான வார்த்தைகளைக் கேட்டு என்னுடைய ஜீவன் ஆனந்தம் அடைந்தது. இந்த விவரத்தை என் மனைவியிடம் சொன்னேன்.

மனத்திலும் இதயத்திலும் சாயி தியானமே இருந்தது. அதுவே நிரந்தரமான அப்பியாசம் ஆகிவிட்டது. ஆயினும், இந்த ஏழுவருட சகவாசத்தில், அவர் போஜனத்திற்காக என் இல்லத்திற்கு வருவார் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ என்றும் இருந்ததில்லை.

ஆயினும், நான் என் மனைவியிடம் சொன்னேன், "இன்று ஹோலிப் பண்டிகை. ஞாபகமாக ஒரு கால் சேர் அரிசி அதிகமாகப் பொங்கு".

இதை மாத்திரம் அவளிடம் சொன்னதால், அவள் காரணம் கேட்க ஆரம்பித்தாள். நான் சொன்னேன், "இன்று, இப் பண்டிகை நன்னாளில், ஒரு விருந்தாளி சாப்பிட வருகிறார்".

அவள் ஆர்வம் மேலிடக் கேட்டாள், "யாரென்று எனக்குச் சொல்லுங்கள்". நான் உண்மையைச் சொன்னால் அது பரிஹாசத்திற்குரிய விஷயமாக ஆகிவிடும்.

இதையும் நான் நன்கு அறிந்திருந்தேன். ஆயினும், உண்மையில்லாத விஷயத்தை சொல்லக்கூடாது என்று நினைத்து, நான் நடந்ததை நடந்தவாறு சிரத்தையுடன் அவளிடம் விவரித்தேன்.

இது ஒருவருடைய நம்பிக்கையைச் சார்ந்த விஷயமன்றோ! உள்ளே உணர்வு எப்படியோ அப்படியே பொய்யும் மெய்யும். ஈதனைத்தும் ஒருவருடைய மனத்தைச் சார்ந்தது.

நான் எவ்வளவு முயன்றபோதிலும் அவளை நம்பவைக்க முடியவில்லை. அவள் கேட்டாள், "பாபா ஷிர்டியிலிருந்து நெடுந்தூரம் கடந்து இங்கு எதற்காக வரவேண்டும்?-