valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 28 January 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

வழியைக் கேட்டு விசாரித்துக்கொண்டு சுலபமாக நானாவின் இல்லத்தைச் சென்றடைந்தார். தாழ்வாரத்தில் சிறிது நேரம் உட்காரலாம் என்று ஆயத்தம் செய்தபோது நானா அவரை உள்ளே வரும்படி அழைத்தார்.

ஒருவரையொருவர் சந்தித்தனர். புவா உடனே உதீயையும் ஆரதிப் பாடலையும் நானாவின் எதிரில் வைத்து, நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்.

இதில் அற்புதம் என்னவென்றால், நானாவின் மகள் பிரசவிக்க முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது இந்த உதீ வந்துசேர்ந்தது!

பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக, நவசண்டி ஹோமமும் துர்க்கா சப்தசதி பாராயணமும் நடந்துகொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டா கோசாவி பெருவியப்பில் ஆழ்ந்தார்.

பசியால் வாடியவனுக்குச் சற்றும் எதிர்பாராமல் தட்டு நிறைய சுவையான சாப்பாடும் இனிப்புகளும் கிடைத்தது போலவும், சகோர பட்சிக்கு அமிருதம் கிடைத்தது போலவும் நானாவுக்கு அந்நேரத்தில் உதீ கிடைத்தது. இது நானா உணர்ந்தவாறு.

நானா தம் மனைவியைக் கூப்பிட்டு, சிறிது உதீயைத் தண்ணீரில் கரைத்து மக்களுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டுத் தாமே ஆரதிப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்.

உடனே, வீட்டினுள்ளிருந்து செய்தி வந்தது. உதீ கலந்த நீர் உதடுகளில் பட்டவுடனே மகளுக்கு நிவாரணம் கிடைத்தது.

உதீ கலந்த நீர் வயிற்றின் உள்ளே சென்றவுடன் வலி குறைந்தது; மகளுக்குத் தடங்கல் ஏதுமின்றிப் பிரசவம் ஆயிற்று. சுகமகாப் பிரசவம் ஆனது கண்டு அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

நானாவை புவா வினவினார், "வண்டியோட்டி எங்கே? அவனை இங்கேயும் காணோமே? நீங்கள் எனக்காக அனுப்பிய குதிரை வண்டி எங்கே?"

நானா பதிலுரைத்தார், "குதிரை வண்டியா? நான் அனுப்பவில்லையே ! எனக்கு இதைப்பற்றி ஏதும் தெரியாதே. நீங்கள் வரப்போவதே எனக்குத் தெரியாதே; நான் எப்படி குதிரைவண்டி அனுப்புவேன்?"

புவா, குதிரை வண்டிப்பற்றி ஆரம்பித்திலிருந்து கடைசிவரை விவரமாக முழுக் காதையையும் சொன்னார். பாபாவின் தாயினும் சாலப் பரிந்தூட்டும் அன்பை எண்ணி நானா ஆச்சரியமடைந்தார்; மனம் நெகிழ்ந்தார்.

குதிரைவண்டி என்ன! பியூன் என்ன! சாயிமாதாதான் இத்தனை உருவங்களுமெடுத்து நாடகமாடினாள்! பக்தர்களின்பால் கொண்ட அன்பினால், அவர்கள் சங்கடப்படும்போது தக்க தருணத்தில் ஓடோடி வருகிறாள் சாயிநாதா!

இப்பொழுது நாம் நாராயண் ஜனீயின் கதையைத் தொடர்வோம். சிலகாலம் கழிந்த பின்னர் பாபா மஹாசமாதி அடைந்தார்.

1918 ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகையின்போது, சுபதினமான விஜயதசமியன்று பாபா தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.

 


 

Thursday, 7 January 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

வண்டியைப் போலவே குதிரைகளும் கம்பீரமாக இருந்தன. அவை வாடகைவண்டிக் குதிரைகளா என்ன? இலக்கை நோக்கி உற்சாகத்துடன் ஓடி, மற்ற வண்டிகளைப் பின்னுக்குத் தள்ளின.

இரவு பதினொன்று மணியளவில் கிளம்பிய வண்டி, இரவெல்லாம் வேகமாக ஓடி விடியற்காலையில் ஓர் ஓடைக்கருகில் நின்றது.

வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிப்பதற்கு அவிழ்த்துவிட்டுவிட்டு, "நான் இதோ வந்துவிடுகிறேன். நாம் சாவகாசமாகச் சிறிது சிற்றுண்டி உண்ணலாம்" என்று சொன்னான்.

"நான் போய்க் கொஞ்சம் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவருகிறேன். பிறகு நாம் மாம்பழம், பேடா, குள் பாபடி (கோதுமை மாவை நெய்யில் வறுத்து, வெல்லம் சேர்த்துச் செய்யும் இனிப்பு) எல்லாம் உண்ணலாம். அதன் பிறகு குதிரைகளை பூட்டிக்கொண்டு நம் பயணத்தைக் தொடரலாம்" என்று வண்டியோட்டி கூறினான்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கோசாவியின் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டது. 'தாடி வைத்துக்கொண்டு முஸ்லீமைபோல் காட்சியளிக்கும் இவன் அளிக்கும் சிற்றுண்டியை நான் ஏற்றுக்கொள்வதா வேண்டாவா?'

ஆகவே, அவர் வண்டியோட்டியிடம் ஜாதிபற்றி விசாரித்தார். வண்டியோட்டி பதில் சொன்னான், "நீங்கள் ஏன் இப்படி சந்தேகத்தால் மனம் உளைகிறீர்கள்? நான் கார்வாலைச் சேர்ந்த இந்து க்ஷத்திரியன். ராஜபுதன ஜாதியைச் சேர்ந்தவன்.

"மேலும், இவ்வுணவுப் பொருள்கள் நானாவால் உங்களுக்கென்று என்னிடம் கொடுக்கப்பட்டன. ஆகவே, சிறிதளவும் சந்தேகம் இன்றி அமைதியான மனத்துடன் சிற்றுண்டி அருந்துங்கள்".

இவ்விதமாக கோசாவிக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் இருவரும் சிற்றுண்டி அருந்தினர். குதிரைகள் மறுபடியும் வண்டியில் பூட்டப்பட்டுப் பயணம் தொடர்ந்தது; சூரியோதய சமயத்தில் முடிந்தது.

குதிரைவண்டி கிராமத்தினுள் நுழைந்தவுடனே நானாவின் கச்சேரி (அரசு அலுவலகம்) தெரிந்தது. குதிரைகளும் சிறிது ஓய்வெடுத்தன. ராம்கீர் புவாவின் மனம் சாந்தியடைந்தது.

புவா சிறுநீர் கழிப்பதற்காகச் சாலையின் மறுபக்கம் சென்றார். அதே இடத்திற்குத் திரும்பிவந்தபோது அவருக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

வண்டியைக் காணோம்; குதிரைகளைக் காணோம்; வண்டியோட்டியையும் காணோம்! யாருமே இல்லாமல் அவ்விடம் வெறிச்சென்றிருந்தது.

ராம்கீர், 'இதென்ன அற்புதம்' என்று நினைத்து வியந்தார். "என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தவர் எப்படி திடீரென்று எங்கோ போய்விட்டார்?".

இருந்தபோதிலும், நாணவைச் சந்திக்கவேண்டுமென்ற ஆவலில் புவா கச்சேரிக்குள் சென்றார். நானா அவரது இல்லத்தில் இருந்தாரென்று அறிந்தார். ஆகவே புவா நானாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார். 




Thursday, 31 December 2020


ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த எளிய சாதகப்பறவை நிர்மலமான தண்ணீராகிய
ஆனந்தத்தையே நாடுகிறது. இந்த மாதவனுக்கு அதை
அளித்து உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்;
ஓ, உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்.


                                      ஆரதி செய்கிறோமே ......(பல்லவி)

கோசாவி பாபாவிடம் கேட்டார், "என்னிடம் இரண்டு ரூபாய்தான் இருக்கிறது. நான் எப்படி ஜாம்நேருக்குச் சென்று, வீட்டிற்குப் போய்ச் சேர முடியும்?

பாபா சொன்னார், "நீர் தைரியமாகக் கிளம்பும். உம்முடைய தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்". சாயி பாதங்களில் நம்பிக்கை வைத்து கோசாவி உடனே கிளம்பினார்.

பாபாவின் ஆக்ஞய்க்குத் தலைவணங்கி உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, காரியமே கண்ணாக பாபாவின் அனுமதியுடன் பாபகீர் உடனே புறப்பட்டார்.

இப்பொழுது இருப்பதுபோல் அப்பொழுது ஜாம்நேருக்கு இருப்புப்பாதைத் தொடர்பு கிடையாது. பிரயாணம் சுலபம் இல்லை. கோசாவியின் சித்தம் கலங்கியது.

ரயிலேறி ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கி மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். 

ரயில் கட்டணம் ஒரு ரூபாய் பதினான்கு அணா; மிச்சம் இரண்டு அணாவை வைத்துக்கொண்டு மீதி தூரத்தை எவ்வாறு கடக்கமுடியும்?

இவ்விதமாகக் கலங்கிய கோசாவி, ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கிப் பயணச் சீட்டைத் திருப்பிக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது, சிறிது தூரத்தில் ஒரு பியூன் தெரிந்தான்.

பியூன், "உங்களில் யார் ஷிர்டியிலிருந்து வரும் பாபுகீர் புவா என்று எனக்கு விவரம் சொல்லவேண்டும்" என்று வெளியே வரும் பிரயாணிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பியூன் தேடிக்கொண்டிருந்த நபர் தாமே என்று அறிந்த கோசாவி, முன்னுக்கு வந்து, "நான்தான் அது; உமக்கென்ன வேண்டும்?" என்று கேட்டார்.

பியூன் சொன்னான், "சாந்தோர்கர் உமக்காக என்னை அனுப்பியிருக்கிறார். வாருங்கள், சீக்கிரமாக குதிரைவண்டியில் ஏறுங்கள். அவர் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்."

புவா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஷிர்டியிலிருந்து நானாவுக்குச் செய்தி போயிருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், சரியான நேரத்திற்கு குதிரைவண்டி வந்திருக்கிறது. என்னுடைய பெரிய தொல்லை தீர்ந்தது.

மீசை, தாடி, கிருதாவெல்லாம் வைத்துக்கொண்டும் பளிச்சென்று முழுக்காற் சட்டை அணிந்துகொண்டும் பியூன், பார்ப்பதற்கு சாமர்த்தியசாலியாகத் தெரிந்தான். குதிரைவண்டியும் அழகாக காட்சியளித்தது. 



 

Thursday, 24 December 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

'ஆரதி சாயி பாபா' என்ற இந்த ஆரதிப் பாட்டு ராமஜனார்தனர் இயற்றிய 'ஆரதி ஞான ராஜா' என்ற பாட்டைப் போலவே அமைந்திருக்கிறது. இரண்டுமே ஒரே விருத்தத்தில் (மெட்டில்) அமைந்தவை.


ராமஜனார்தனர் என்பவர் ஜனார்த்தன சுவாமியின் பக்தர். மாதவ் அட்கர் சாயி பாதங்களில் மூழ்கியவர். இந்தக் கவிதை பரிபூரணமாக சாயி பிரசாதம் நிரம்பியது. எந்த பஜனையும் இந்தப் பாட்டைப் பாடாமல் நிறைவுபெறாது.


இந்த ஆரதி பாபாவுக்கு பிடித்தமானதுங்கூட! இதை முழுமையாகக் கேளுங்கள். இந்தப் பாட்டு உதீயுடன் பாபாவால் அனுப்பப்பட்டது. பலனைப்பற்றி பிறகு தெரிந்துகொள்வீர்கள்; பாட்டைக் கேளுங்கள்.


ஆரதிப் பாட்டு

ஆரதி செய்கிறோமே, ஓ சாயி பாபா! ஜீவன்களுக்கு
சௌக்கியம் அளிப்பவரே, பாததூளிகளில் இவ்வடிமைக்கு
அடைக்கலம் தாருங்கள்; பக்தர்களுக்கு அடைக்கலம்
தாருங்கள். (பல்லவி)


மன்மதனை எரித்தவரே, சுய சொரூபத்தில் மூழ்கியவரே,
மோட்சத்தை நாடும் ஜனங்களுக்கு ஸ்ரீரங்கனாகத் தோன்றுகிறீர்;
ஸ்ரீரங்கனாகவே தோன்றுகிறீர்.

மனத்தின் பாவம் எப்படியோ, அப்படியே தேவரீர்
அளிக்கும் அனுபவமும். கருணைக்கடலே, உம்முடைய
மாயை அவ்விதமே, உம்முடைய மாயை அவ்விதமே.

உம்முடைய நாமத்தை ஜபம் செய்தால் சம்சார துக்கங்கள்
அழிந்துபோகின்றன. உம்முடைய செய்கை ஆழங்கான
முடியாதது! அனாதைகளுக்கு வழி காட்டுகிறீர்;
அனாதைகளுக்கு வழி காட்டுகிறீர்.

கலியுகத்தின் அவதாரமே, தேவரீர் குணமுள்ள பிரம்மமாக
அவதரித்திருக்கிறீர். ஓ, சுவாமி தத்த  திகம்பரரே!
தத்த திகம்பரரே.

வாரமொருமுறை வியாழக்கிழமையில் பக்தர்கள் பிரபுவின் பாதங்களை தரிசனம் செய்ய புனிதப் பயணம் செய்கிறார்கள்.
பிறவி அச்சத்தை நிவாரணம் செய்யுங்கள்; அச்சத்தை
நிவாரணம் செய்யுங்கள்.

உமது பாததூளிகளுக்குச் செய்யும் சேவையே என்னுடைய
பொக்கிஷம்; நான் உங்களை வேறெதுவும் கேட்கவில்லை.
ஓ, தேவாதிதேவா, தேவாதிதேவா. 

 


 



Thursday, 17 December 2020



 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஷிர்டியிலோ, ஜாம்நேரில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எங்கும் செல்லும் வல்லமை பெற்ற, எல்லாம் அறிந்த சாயிக்கு இவ்வுலகில் நடப்பது எதுவும் தெரியாமல் இருக்கமுடியாதே!


பக்தனுடைய ஆத்மாவுடன் ஒன்றிவிட்ட பாபாவுக்கு நானாவின் இல்லத்தில் இருந்த அவஸ்தை தெரிந்தது. இளகிய மனத்தினரான சாயி என்ன செய்தார் என்று பாருங்கள்.


நானாவுக்கு உதீ அனுப்பவேண்டும் என்று பாபா விரும்பினார். கோசாவி ராம்கீர் புவாவுக்கு தம்முடைய கிராமத்திற்கு திரும்பவேண்டுமென்ற பலமான எண்ணம் திடீரென்று எழுந்தது!


அவருடைய சொந்த ஊர் காண்தோச் ஜில்லாவில் இருந்தது. ஆகவே, அவர் அங்கே செல்வதற்குண்டான ஆயத்தங்களை செய்துகொண்டு பாபாவை தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.


பாபா ஜீவிதமாக இருந்தபோது, யார், எந்த வேலைக்காகச் செல்லவேண்டியிருந்தாலும் பாபாவின் பாதங்களை வணங்கி அனுமதி பெறாமல் யாரும் வெளியில் சென்றதில்லை.


திருமணமோ, உபநயனமோ, விதிமுறைகளின்படி சடங்குகளுடன் செய்யவேண்டிய விழாக்களோ, வேறு ஏதாவது விழாவோ, இவை சம்பந்தமாகச் செய்யப்பட்ட திட்டமிடுதலோ - அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பாபாவின் அனுமதி, தவறாது பெறப்பட்டது.


பாபாவின் மனப்பூர்வமான அனுமதியும் உதீ பிரசாதமும் ஆசிகளும் இன்றி, எந்த விழாவும், விக்கினமின்றி நிறைவேறாது. இதுவே, சகலமான மக்களின் பூரணமான நம்பிக்கை.


இதுவே கிராமத்தின் வாழ்க்கை இயல்பாகிவிட்டது. இதை அனுசரித்து ராம்கீர் புவாவும் மசூதிக்கு வந்து பாபாவின் பாதங்களை வணங்கி, கிளம்புவதற்கு அனுமதி வேண்டினார்.


அவர் சொன்னார், "பாபா, நான் கான்தேச் ஜில்லாவிலுள்ள என்னுடைய கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறேன். ஆசிகளுடன் உதீயும்  அளித்து, உங்கள் சேவகனாகிய எனக்கு அனுமதியளியுங்கள்".


பாபுகீர் என்று பாபா செல்லமாக அழைத்த ராம்கீர் புவாவிடம் பாபா சொன்னார். "போம், உம்முடைய கிராமத்திற்கு குஷியாகப் போய் வாரும். வழியில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளும்.-


"ஆகவே, முதலில் ஜாம்நேருக்குச் சென்று நானாவின் வீட்டில் தாங்கும். அவருடைய சமாச்சாரங்களை விசாரித்தபின், நீர் உமது வழியில் செல்லலாம்".


பாபா மாதவராவிடம் கூறினார், "சாமா, அக்கா இயற்றிய ஆராதிப்பாட்டை ஒரு காகிதத்தில் எழுது. அதை இந்த கோசாவியின் மூலம் நானாவுக்கு அனுப்பலாம்."


பிறகு அவர் கோசாவிக்கு உதீ கொடுத்தபின், ஒரு சிறிய உதீ பொட்டலமும்  கட்டி அவரிடம் கொடுத்தார். இவ்விதமாக பாபா நானாவுக்கு உதீ அனுப்பினார்.

"இந்த உதீ பொட்டலத்தையும் ஆரதிப் பாட்டையும் நானாவிடம் கொடும். அவருடைய குடும்ப க்ஷேமம் பற்றிக் குசலம் விசாரித்துவிட்டு உம்முடைய சொந்த ஊருக்குச் செல்லும்."




Thursday, 10 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்நிகழ்ச்சியிலாவது ஊதுவத்தியிலிருந்து விழுந்த விபூதி தேள்கொட்டுக்கு மருந்தாகப் பூசப்பட்டது. ஆனால், புழுதிமண்ணும் உதீயாக உபயோகப்படுத்தப்பட்ட போது அதே அனுபவத்தை அளித்தது.


ஒருவர் நெற்றியில் இடப்பட்ட  புழுதிமண், வேறு எங்கோ இருந்த நோயாளியை குணப்படுத்தியது!


வேறு கிராமத்தில் வசித்துவந்த தம் மகள் பிளேக் வியாதிக் கட்டிகளாலும் ஜுரத்தாலும் அவதிப்படுகிறாள் என்று தெரிந்து ஒரு தந்தை கவலையுற்றார்.

தந்தை பாந்தராவில் வசிக்க, மகள் வேறொரு கிராமத்தில் வசித்துவந்தாள். ஆகவே, அவர் நானாவுக்குச் (நானா கோவிந்த சாந்தோர்கருக்குச்) செய்தி அனுப்பினார்.


அவருக்காக நானா பாபாவிடம் பிரார்த்தனை செய்து அவரை இக் கவலையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் பாபாவின் உதீ பிரசாதம் சிறிது அவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கெஞ்சி, செய்தி அனுப்பினார்.


செய்தியைக் கொண்டுபோனவர் நானாவை வழியிலேயே  சந்தித்தார். நானா அப்பொழுது தம் மனைவியுடன் கல்யாண் என்னும் இடத்திற்கு போகக் கிளம்பிவிட்டிருந்தார்.


தாணே ரயில் நிலையத்திற்கு அருகில் அவருக்கு இச் செய்தி கிடைத்தது. நானாவின் கைவசம் அப்பொழுது உதீ இல்லை. ஆகவே, சாலையிலிருந்த புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டார்.


சாலையில் நின்றவாறே சமர்த்த சாயியை மன்றாடிப் பிரார்த்தனை செய்தபின், திரும்பி, எடுத்த புழுதிமண்ணைத் தம் மனைவியின் நெற்றியில் இட்டார்.


அங்கோ, அந்த பக்தர் (தந்தை) வீட்டிலிருந்து கிளம்பி தம் மகள் வசிக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு அவருக்காக காத்திருந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தார்.


மூன்று நாள்களாக மகள் கடுமையான ஜுரத்தால் அவதிப்பட்டுப் பெரும்  வேதனையை அனுபவித்தாள். தந்தை சென்ற நாளுக்கு முந்தைய நாள்தான் ஜுரம் சிறிது இறங்கியிருந்தது.


பின்னோக்கிப் பார்த்தபோது, நானா சாயியைப் பிரார்த்தனை செய்தபின் புழுதி மண்ணை உதீயாக உபயோகித்த நேரத்திலிருந்துதான் மகளின் ஜுரம் குறைய ஆரம்பித்தது என்பதைத் தந்தை உணர்ந்தார்.


எப்படியும், இந்த வியாதியின் கதை விஸ்தாரமாக தக்க சமயத்தில் பிறகு சொல்லப்படும். உதீ சம்பந்தமான விவரத்தை மட்டும் இப்பொழுது சொன்னேன்.


பக்தனுக்கு மங்களம் அருள எப்பொழுதும் தயாராக இருந்த சாயி, பிரேமை மிகுந்த பக்தரான இதே நானா சாந்தோர்கருக்கு ஜாம்நேரில் மாம்லத்தாரக    உத்தியோகம் செய்துகொண்டிருந்தபோது அற்புதமொன்று செய்தார். அதைச் சொல்கிறேன்; கேளுங்கள்.


உதீயின் மஹிமை அபாரமானது. கதை கேட்பவர்களே! அந்த அற்புதத்தைச் சொல்கிறேன்; கேட்டு ஆச்சிரியப்படுவீர்கள்.


நானாவின் மகள் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்தாள். எந்நேரமும் பிரசவம் ஆகலாம் என்ற நிலைமை, ஜாம்நேரில் நானாசாஹேப் சமர்த்த சாயியைத் தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் கூவி அழைத்துக்கொண்டிருந்தார். 




Thursday, 3 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

"போதும் இந்த ஏவலாள் உத்தியோகம். சுதந்திரமான வியாபாரம் இதைவிட எவ்வளவோ மேன்மையாக இருக்கும்". சிலகாலம் கழிந்த பின்னர், இறைவன் ஜனீக்கு கருணை புரிந்தான்.


அடிமைத் தொழிலும் பிறரைச் சார்ந்த வாழ்வும் அகன்றது. ஜனீ சுதந்திரத்தை அனுபவித்தார். சொந்தமாகவே உணவு வசதியுடன் கூடிய ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்.


'ஆனந்தாச்ரமம்' என்று அதற்குப் பெயர் வைத்தார். கடுமையாக உழைத்தார். நாளுக்குநாள் அவ்விடுதியின் புகழ் பரவி அவருக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.


பாபா சூசகமாகத் தெரிவித்தாவாறே அனைத்தும் நடந்ததை உணர்ந்து, சாயிபாதங்களில் விசுவாசம் வளர்ந்தது; நாள்கள் செல்லச் செல்ல திடமான பக்தியாக சொரூபம் ஏற்றது. பாபாவின் அறிவுரையைப் பின்தொடர்ந்த அனுபவம் ஜனீயின் மனத்தில் அழியாத சுவடுகளை விட்டுச் சென்றது.


சாயியின் திருவாய்மொழி அருளிய அனுபவம் ஜனீக்கு கிடைத்தது; அதன் பயனாக கேட்பவர்களுக்கு இப்பொழுது ஒரு காதை கிடைக்கிறது. அவருக்கு சாயியின் மீதிருந்த பிரேமை பெருகியது. சாயியின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை அல்லவோ!


அவருடைய பேச்செல்லாம் தம்மைப்பற்றியதுபோல் தோன்றும்; ஆனால், அவர் வேறொருவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இரவுபகலாக பாபாவுடன் இருந்தவர்கள் இந்த அனுபவத்தைப் பெற்றனர்.


பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக இவ்வனுபவங்கள் தொடர்ந்தன. நாராயண் ஜனீயின் பக்தியும் ப்ரேமையும் வளர்ந்தது. அவருடைய பக்திபாவத்தை வெளிப்படுத்தும் புத்தம் புதிய கதையொன்றைக் கேளுங்கள்.

ஒரு சமயம் நாராயண் ஜனீயின் நண்பர் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அவர் வலியாலும் வேதனையாலும் துடித்தார். 

 

கொட்டுவாயில் தடவுவதற்கு பாபாவின் உதீயே சிறந்த மருந்து. ஆனால், எங்கே தேடியும் ஜனீக்கு உதீ கிடைக்கவில்லை.

நண்பருக்கு வேதனை பொறுக்கமுடியவில்லை; ஆயினும் உதீ எங்கும் கிடைக்கவில்லை. பாபாவின் நிழற்படத்தை நோக்கினார்; கருணை வேண்டினார் ஜனீ.


படத்தின் கீழே ஊதுவத்தியிலிருந்து விழுந்த சாம்பல் சிறிது இருந்ததை ஜனீ பார்த்தார். அக்கணமே அதை ரட்சிக்கும் உதீயாகவே நினைத்தார்.


அந்தச் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்துத் தேள்கொட்டிய இடத்தில சாயிநாம மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே தடவினார். நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்; நம்பியவர்க்கு நடராஜா!


சாம்பலை விரல்களால் கொட்டுவாயில் பூசியவுடனே வேதனை, வந்தவழியே சென்று மறைந்ததென்று சொன்னால், கேட்பதற்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இருவரும் பிரேமையால் மனம் நெகிழ்ந்தனர்.