valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Saturday, 11 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

'வெயிலின் கடுமை அதிகமாக இருக்கும் இந்நேரத்தில் நீங்கள் எதற்காக, எங்கே செல்கிறீர்கள்?' நாங்கள் பதில் சொன்னோம், 'காட்டிலும் காட்டின் உட்பகுதிகளிலும் தேடப் போகிறோம் .'-

வண்ஜாரி கேட்டார், 'நீங்கள் எதைத் தேடப்போகிறீர்கள்?' நாங்கள் பதில் சொன்னோம். 'ரகசியமான விஷயங்களை வெளிப்டையாகப் பேசுவது நல்லதில்லை '.-

நாங்கள் அவசரமாக இங்குமங்கும் அலைந்து தவித்ததை பார்த்த வண்ஜாரி மனம் கனிந்தார். அவர் சொன்னார் , 'வனம் அணுகுவதற்கு கடுமையானது; வனத்தின் உட்புறத்தை நன்கு தெரிந்துகொள்ளாமல், இஷ்டம் போல், அலையக் கூடாது. -

'இம்மாதிரி வனங்களுக்குள் போய்வருவதற்கு எப்பொழுதும் ஒரு வழிகாட்டியைத் துணையாக வைத்துக்கொள்ளுங்கள். உச்சிவெயில் வேளையில் ஏன் இந்த சாகசச் செயல்? எதற்காக இந்த சிரமும் ஆயாசமும்?-

'விருப்பமில்லையென்றால் உங்களுடைய ரகசியத் தேடல்பற்றி ஏதும் சொல்ல வேண்டா.  ஆனால்,சிறிது நேரம் உட்காரவாவது செய்யுங்கள். ஒரு சோளரொட்டி  துண்டாவது தின்றுவிட்டுத் தண்ணீர் குடியுங்கள். அதன் பிறகு விருப்பம் போல் செல்லுங்கள். மனத்தில்  சிறிது பொறுமைக்கு இடம் கொடுங்கள்.

அவர் எங்களை மனப்பூர்வமாக கேட்டுக்கொண்டார். ஆயினும் நாங்கள் அவருடைய வேண்டுகோளைத் தூக்கியெறிந்துவிட்டு, அவருடைய அறிவுரையை கேட்காமல் எங்கள் வழி  சென்றோம். ஆனால், பின்னர்க் காட்டினுள் சோர்வுற்றுக் களைத்துப் போனோம்.-

ஓ, நாங்கள் புத்திசாலிகள் அல்லோமோ! நாங்களே வழியை கண்டுபிடிப்போம். வழிகாட்டி எதற்காகத் தேவை?' கர்வத்தால் நாங்கள் இவ்வாறு நினைத்தோம்.-

ஆனால், காடோ மிக விஸ்தீரமானது; வானளாவி ஓங்கியும், பருத்தும் வளர்ந்த மரங்கள் நிறைந்து சூரிய ஒளிக்கதிர்களும் உள்ளே புகமுடியாதபடி இருந்தது. இவ்விடத்தில் வழியின்  போக்கை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?-

இங்குமங்கும் சுற்றிச் சுற்றி பயனின்றித் திரிந்து, திக்குத்  தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தெய்வ பலத்தால், எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே வந்து சேர்ந்தோம்.-

தெய்வம் எங்களை வந்த வழியே திருப்பி அனுப்பியது. மறுபடியும் அதே வண்ஜாரியை சந்தித்தோம். அவர் சொன்னார், 'நீங்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள் போலிருக்கிறது; சிலசமயங்களில் புத்தியின் சாதுர்யம் செல்லுபடியாவதில்லை!-

'எடுத்த காரியம் சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் வழிகாட்டுவதற்கு ஒருவர் தேவை. மேலும், வெறும் வயிற்றுடன் எதையும் கண்டுபிடிக்க முடியாது. புத்தியும் மிரண்டுபோய்த் தடுமாறும்.-

'இறைவனால் திட்டமிடப்படாது, நீங்கள் வழியில் யாரையும் சந்திக்க முடியாது. ஆகவே, கொடுக்கப்பட்ட அன்னத்தை நிராகரிக்க வேண்டா; உணவுத் தட்டை ஒருபொழுதும் கையால் ஒதுக்கித்த தள்ளாதீர்.-

Friday, 20 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

குதர்க்கத்தை முழுமையாக உதறித் தள்ளுக; இல்லையெனில் அது உங்களை வழி மடக்கும். கர்வத்தைக் காலால் மிதித்து நாசம் செய்க; அதன் பிறகே அக்கரை சேரமுடியும்.

இப்பொழுது, பாபாவே சொன்ன சிறப்பானதொரு கதையைக் கேளுங்கள். குருவின் திருவாய்மொழியான இவ்வமுதத்தை அருந்திப் பரமானந்தத்தை அடையுங்கள்.

(சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த உருவக கதை இங்கு ஆரம்பம்) "ஒரு சமயம் நாங்கள் நால்வர் ஏற்கெனவே போதிகளையும் புராணங்களையும் படித்து ஞானம் பெற்றிருந்ததால், பிரம்ம (முழுமுதற்பொருள்) நிரூபணம் செய்ய ஆரம்பித்தோம். -

எங்களில் ஒருவர் கீதையிலிருந்து ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டி, 'ஒருவன் தன்னுடைய முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்காக வேறெவரையும் சார்ந்து இருத்தல் தகாது' என்று வாதம் செய்தார்.-

அவருக்கு மற்றொருவர் பதிலுரைத்தார், 'யாருடைய மனம் அவருக்கு அடங்கி இருக்கிறதோ அவரே பாக்கியசாலி. ஆகவே, தன்னைத் தவிர வேறெதுவும் இவ்வுலகில் இல்லை என்றறிந்த சங்கல்பங்களையும் விகல்பங்களையும் சூன்யமாக்கிவிட வேண்டும்.'-

மூன்றாமவர் சொன்னார், 'எல்லாமே அழியக்கூடியன (அநித்தியம்); மாறுதல் அடைந்துகொண்டேயிருக்கும். மாறுதல் ஏதும் அடையாததே அழியாதது (நித்தியம்). நித்தியம் எது, அநித்தியம் எது என்ற சிந்தனையை எப்பொழுதும் செய்து கொண்டிரு.'-

நான்காமவர் புத்தக ஞானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சாஸ்திரவிதிகளின்படி வாழ்க்கை நடத்தி, மனம், பேச்சு, உடல், பஞ்சப் பிராணன்கள் அனைத்தையும் குருபாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுவதையே நம்பினார். -

குருவே இவ்வுலகின் உள்ளும் வெளியும் பரவியிருக்கும் நகரும் நகராப் பொருள்களில் உறைந்திருக்கும் இறைவன், என்று மனத்துள் நிர்த்தாரணம் செய்வதற்கு ஆழமானதும் அசைக்க முடியாததுமான விசுவாசம் (நிஷ்டை) அவசியம். -

வெறும் சாஸ்திர நிபுணர்களோ, வாதத்தில் மட்டும் வல்லவர்களோ, எதையும் உரித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்பவர்களோ, சொப்பனத்திற்குக்கூட ஞானத்தை அடைய முடியாது. இங்கே தேவையானது சுத்தமான விசுவாசமுள்ள பக்தன்.-

இவ்வாறாக, நான்கு புத்திசாலிகளும் (நாங்கள்) அதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்றெண்ணித் தேட ஆரம்பித்தோம். வேதனையேதும் இல்லாத சுதந்திரமான மனத்துடன் சொந்த புத்தியாலேயே கண்டுபிடிக்க வேண்டும்.-

மூன்று பேர்கள் மனத்திலும் இந்த இச்சையே மேலோங்கியது. ஆயினும் காட்டில் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருந்தபோது, வழியில் ஒரு 'வஞ்சாரியைச் சந்தித்தோம். அவர் எங்களைக் கேட்டார், - (நான்காமவர் சாயி)


Friday, 13 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

அஞ்ஞானத்தால் செய்யப்பட்ட தீவினைகளால் விளைந்ததும் தோன்றா நிலையில் விதையுள் மறைந்திருப்பதும் பௌதிகமான இருப்பு ஏதும் இல்லாததுமான இம் மரம் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு குணத்தை ஏற்பதுபோல் தெரிகிறது.

இயல்பாகவே அனர்த்தத்தை (கேடுகளை) விளைவிக்கக்கூடிய இம் மரம் அஞ்ஞானத்தில் பிறந்தது. ஆவல்களும் ஆசைகளும் ஏக்கங்களும் தண்ணீராக மாறி, இம்மரத்தைச் சுற்றிச் தேங்குகின்றன; செழிப்பூட்டுகின்றன.

மனைவி, மக்கள், தனம், தானியம் போன்ற பரிவாரங்களை உடைய இம் மரம், மனிதர்களின் மனதில் 'உடலே நான்' என்ற புத்தியுடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு அடையாளம் காட்டுவதால், அதையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கிறது.

சம்சார வாழ்வென்ற இம் மரத்தின் கிளைகள், சகலமான பிராணிகளின் லிங்கபேதத்தால் (ஆண்-பெண் பேதம்) விளைந்தவையே. கர்ம வாசனைகளும் பந்தங்களுமாகிய கீழ்நோக்கி வளரும் விழுதுகளால் தாங்கப்பட்டு, இம் மரம் பரந்து விரிந்து செழிக்கிறது.

சுருதி, ஸ்மிருதி ஆகிய இலைகளால் மூடப்பட்டு, ஐம்புலன்களாகிய கொழுந்துவிட்டு வளரும் இளந்தளிர்களால் செழிப்புற்று, யாகம், தானம் போன்ற சடங்குகளாகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் இம் மரம், இரட்டைச் சுழல்களெனும் (இன்பம் - துன்பம், வெப்பம் - குளிர் போன்ற இரட்டைகள்) சாறு நிறைந்தது.

இம்மரத்தின் பழங்களுக்கு கணக்கேயில்லை; சகலருக்கும் இம் மரமே பிழைக்கும் வழி ஆகி விட்டது. பூலோகத்திலும் புவர்லோகத்திலும் இம் மரம் இல்லாத இடமே இல்லை.

சிலசமயங்களில் பாடும் கூத்தும் வாத்திய இசையும்; சிலசமயங்களில் விளையாட்டும் சிரிப்பும் அழுகையும் - இவ்வாறே இந்த மிகப் பழமையானதும் தலைகீழானதும் அரச மரம்.

உருவத்தை ஏற்றுக்கொண்ட பிரம்மத்தின் மாயையால் விளைந்த இம் மரத்தைப் பற்றற்ற மனப்பான்மை என்னும் கோடரியால் வெட்டி வீழ்த்திவிடலாம். சத் பாவமே இதற்கு மூலாதாரமென்றும் ஜோதியே இதன் சுபாவமென்றும் அறிக.

பிரம்மமே சத்தியம், சர்வாதாரம். இவ்வுலகம் சொப்பனத்தை போன்றதொரு மாயை. இவ்வுலகத்திற்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை; ஆதாரமும் இல்லை. இந்நிலையில் அது தன்னைத்தானே எப்படிக் காப்பாற்றிக்கொள்ள முடியும்?

பற்றற்றவர்கள் எதை அடைய பலமாக முயற்சி செய்கிறார்களோ, ஞானிகள் எதன்மீது காதல் கொள்கிறார்களோ, மோட்சநாடிகள் இதைத் தேடுகிறார்களோ, சாதகர்கள் எதை நாடுகிறார்களோ -

அதை அடைய விரும்புவர் ஞானிகளின் பாதங்களில் சரணடைந்து, குதர்க்கத்தை வேருடன் களைந்தெறிந்துவிட்டு அவர்களுடைய சொற்படி நடக்கவேண்டும்.

மனத்தின் தாவல்களை மூட்டைகட்டி  வைத்துவிட்டு புத்தியின் சாமர்த்தியத்தையும் போலி ஞானத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு சங்கத்தை விடுத்துப் பற்றற்று, குருபாதங்களையே லட்சியமாகக் கொள்ளவேண்டும்.


Friday, 6 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர் திடமான மனத்துடன் அப்பியாசங்களை மேற்கொண்டு சாகசங்கள் பல புரியவேண்டிய பாதையில் புகுந்து, என்றும் நிலையானதும் உயர்வானதுமான இலக்கை அடையவேண்டும்.

மேற்சொன்ன நிகழ்ச்சிகளை விவரிக்கும், அமிருதத்தைவிட ருசியான இக் கதைக்கொத்து, கேட்பவர்களின் மனத்தில் அன்பு தோய்ந்த பக்தியை எழுப்பும்; துக்கங்களை முடிவுக்கு கொண்டுவரும்.

கேட்கவேண்டும் என்று அவலுற்றவர்களுக்கு, இங்கிருந்து விரியும் கதை திருப்தியைத் தரும். சொல்பவருக்கும் கேட்பவர்களுக்கும் ஆத்மானந்தத்தை அளிக்கும். கேட்பவர்கள் அனைவருக்கும் நிறைவு தரும்.

பிரேமை நிரம்பியதும் இவ்வுலக இயல்புக்கு அப்பாற்பட்டதுமான இக் கதையை சாயி என்னை எழுதவைப்பார். மூடனும் பாமரனும் ஆகிய நான் ஒவ்வொரு கட்டத்திலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவேன்!

கங்கையின் தரிசனத்தால் பாவமும், சந்திர உதயத்தால் வெப்பமும் எவ்வாறு விலகுகின்றனவோ, அவ்வாறே சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த இக்கதை பாவத்தையும் துன்பங்களையும் அழித்துவிடும்.

தாம் எவ்வாறு தம் குரவை தரிசனம் செய்தார் என்ற விவரத்தை சாயியின் வாய்மூலமாகவே வெளிவந்தவாறு சொல்கிறேன்; கேளுங்கள்; கவனத்துடன் கேளுங்கள்.

வேதங்களையும் வேதாகங்களையும் அத்யயனம் (மனப்பாடம்) செய்தாலும் ஸ்மிருதியையும் (வாழ்க்கைநெறி நூல்களையும்) சாஸ்திரங்களையும் திரும்பத் திரும்ப வாசித்தாலும் குருவின் அருளின்றி ஞானம் பிறக்காது. இதர முயற்சிகள் அனைத்தும் வீண்.

முதலில் தோன்றா நிலையில் இருந்த ஸம்ஸாரமென்னும் விருட்சம், பிறகு பார்வையால் தோற்றுவிக்கப்பட்டது. ஜனன மரண சோகத்தால் நிறைந்த இம்மரம் அழியக்கூடியது.

இதை வெட்டி வீழ்த்திவிடலாம்; அழியக் கூடியது; ஆகவே மரம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருசமயம் தோன்றா நிலையிலிருந்து , பின்னர்த் தோற்றுவிக்கப்பட்ட உலகியல் வாழ்க்கை. ஆகவே, விஸ்தாரமான மரம் இதற்கு உவமையாகச் சித்தரிக்கப்படுகிறது.

இப்பொழுது கண்களுக்குப் புலப்பட்டு பின்னர் அழியக்கூடிய இந்த சம்சார விருட்சத்தின் வேர்கள் மேலே இருக்கின்றன! அபாரமான கிளைகளின் எண்ணிக்கையும் வியாபகமும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஒவ்வொரு கணமும் இம் மரம் மேலும் மேலும் கப்புகளை விட்டுக்கொண்டு விரிந்துகொண்டே போகிறது. தூரத்திலிருந்து பார்க்க ரமணீயமாக (அழகாக) இருக்கும் இம்மரம், அணைத்துக்கொண்டால் அங்கமெல்லாம் முள்மயம்!

வாழைத்தண்டைபோல் இம்மரம் வைரம் இல்லாதது. ஆசைகளும் ஏக்கங்களுமாகிய தண்ணீரை விட்டு வளர்ப்பவர்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் கானல் நீர்; கந்தர்வ நகரம் (மாய உலகம்). 


Friday, 28 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

32 . குரு மஹிமை - சாயி திருவாய்மொழி

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில், சந்நியாசி விஜயானந்தர் நிர்வாணம் (முக்தி) அடைந்ததையும் பாலாறும் சாயியின் திருவடிகளில் கலந்ததையும் விவரித்தேன்.

அதுபோலவே, தாத்யாசாஹெப் நூல்கரும் மிக உன்னதமான பக்தராகிய மேகாவும் சாயியின் கண்முன்னே உடலை உகுத்த விவரமும் சொல்லப்பட்டது.

கொடிய மிருகமாகிய புலியொன்று உயிர்நீத்த பாணி இதையெல்லாம்விடப் பெரிய அற்புதம். செவிமடுத்தவர்கள் இதை விவரமாக கேட்டார்கள்.

இப்பொழுது வந்தடைந்திருக்கும் அத்தியாயத்தில், பாபாவே திருவாய்மொழிந்து வர்ணித்த விருத்தாந்தமொன்றைச் சொல்கிறேன். கேட்பவர்கள் அமோகமாக நன்மை அடைவார்கள்.

ஒருசமயம் காட்டில் இருந்தபோது, பாபா சற்றும் எதிர்பாராதவிதமாக குருதரிசனம் பெற்றார். குரு விளைவித்த அற்புதங்களை கவனத்துடன் கேளுங்கள்.

சாயியே திருவாய்மொழிந்ததும் பக்தி, சிரத்தை, முக்தி, இம்மூன்றையும் அளிக்கக்கூடியதுமான மிக அற்புதமான இக் காதையை என் போன்ற பாமரன் எவ்வாறு போதுமான அளவிற்கு விவரிக்க முடியும்?

அதுபோலவே, பாபாவை தரிசனம் செய்துவிட்டு மூன்று நாள்கள் ஷிர்டியில் தங்கி உபவாசம் இருக்கவேண்டும் என்ற விரத சங்கல்பத்துடன் வந்த ஒரு பெண்மணியை,-

விரதத்தை விடுத்து, பசியைக் கிளப்பிவிடுவதும் இனிமையானதுமான பூரணபோளியைச் செய்யவேண்டிய சூழ்நிலையை பாபா எவ்விதம் உருவாக்கினார் என்பதையும் சொல்கிறேன்.

போளியைச் சமையல் செய்ய வைத்ததுமல்லாமல், மனம் நிறையும்வரை  உண்ணவும் வைத்தார். பாரோபகரமாக நம்முடலைத் தேய்ப்பது போற்றத்தக்கது என்பதை அப் பெண்மணிக்கு விளங்கவைத்தார் பாபா.

உபவாசம் இருப்பதைவிடப் பாரோபகாரச் செயல்கள் மங்களம் தருபவை என்பதை, வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதவாறு அப்பெண்மணியின் மனத்தில் பதியவைத்தார்.   



Friday, 21 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

புலியே அவர்களுக்குப் பிழைக்கும் வழி; புலியே அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றியது. ஆகவே, புலி இறந்தவுடன் அவர்களுடைய முகங்கள் சோகத்தால் கூம்பின. இது இயற்கையே. 

பிறகு, அவர்கள் மஹாராஜைக் கேட்டனர், "இப்பொழுது நாங்கள் எந்த வழியில் செல்வது? புலியை எப்படி புதைப்பது? உங்களுடைய கைகளாலேயே அதற்கு நற்கதி அளியுங்கள்".

மஹராஜ் கூறினார், "சோகப்படாதீர்கள்; புலியின் முடிவு இங்கேதான் ஏற்படவேண்டுமென்று இருந்தது. மேலும் அவனும் மஹா புண்ணியவான். அவனுக்கு அத்தியந்தமான சௌக்கியம் கிடைத்தது.-

"தகியாவைத் தாண்டி, அங்கே, அங்கே ஒரு சிவன் கோவில் இருக்கிறது! இவனை அங்கே எடுத்துச்சென்று நந்திக்கருகில் புதைத்துவிடுங்கள்.-

"அவ்விடத்தில் புதைத்தால் இவன் நற்கதி அடைவான். உங்களுடைய கடனிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபடுவான்.- 

"போன ஜென்மத்தில் உங்களுக்கு கடன்பட்டதால், கடனை அடைப்பதற்காகவே புலியாக ஜென்மம் எடுத்தான். இன்றுவரை உங்களுடைய பிடியில் சிக்கியிருந்தான்."

தர்வேசிகள் புலியைத் தூக்கிக்கொண்டு சிவன் கோயிலுக்கு அருகில் சென்றனர். நந்திக்குப் பின்னால் ஒரு குழி தோண்டிப் புலியைப் புதைத்தனர். 

புலி ஒரு கணத்தில் மரணமடைந்தது என்னே ஆச்சரியம்! இந்நிகழ்ச்சி இத்தோடு முடிந்துபோயிருந்தால், எப்பொழுதோ மறந்துபோயிருக்கும். 

ஆனால், அன்றிலிருந்து சரியாக ஏழாவது நாள் பாபாவும் தேகவியோகம் அடைந்து விட்டார். ஆகவேதான், இந்நிகழ்ச்சி மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வருகிறது. 

அடுத்த அத்தியாயம் மேலும் சுவாரசியமானது. பாபா தம் குருவை ஆராதனை செய்ததையும் அபிமானித்ததையும் விரிவாகச் செய்ததையும் விளக்குகிறார். 

ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன். குருவின் கைகளால் தலைகீழாக தொங்கவிடப்பட்ட பாபா, குருவின் கிருபையை எவ்விதமாக சம்பாதித்தார் என்பதைக் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'தரிசன மஹிமை' என்னும் முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு ஸாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 


Friday, 14 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒரு ஞானியின் பாதங்களில் மரணமடையும் பிராணி உடனே உத்தாரணம் செய்யப்படுகிறது. புலிக்கு இந்த ஜென்மத்தில் விளைந்த மிகப் பெரிய லாபம் அதுவே.

பாக்யசாலியாக இல்லாவிட்டால், ஒரு பிராணி ஞானியின் கண்முன்னாக உயிர்நீத்து முக்தியடைய முடியுமா?

ஒரு சாதுவின் கண்முன்னாக மரணமடைவதென்பது, குடித்த விஷம் அமிருதமாக மாறியது போன்ற அதிருஷ்டமன்றோ! அவ்விதமான மரணத்தில் மகிழ்ச்சியும் இல்லை; துக்கமும் இல்லை.

இந்தப் பிராணியின் மரணம் ஒரு ஞானியின் கண்ணெதிரிலும் அவருடைய பாதங்களிலும் ஏற்படுகிறதோ, அந்தப் பிராணி பெரும்பேறு பெற்றது. ஏனெனில் அதனுடைய உடல் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணமாகி மறுபிறவியே இல்லாமற் போகிறது.

ஞானிகளின் சந்நிதியில் ஏற்படும் மரணம் மரணமேயன்று; அது வைகுண்ட சுகம். அவ்வாறு மரணமடைபவர் யமலோகத்தை ஜெயித்துவிடுகிறார்; மறுபிறவி என்னும் சோகம் அவருக்கில்லை.

ஞானியரின் கண்களுக்கெதிராக உடலை உகுத்தவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை. அச் செய்கையே பாவங்களை நிவிர்த்திசெய்து மோட்சகதியை அளித்துவிடுகிறது.

ஞானியரைத் தலையிலிருந்து கால்நகம் வரை பார்த்துக்கொண்டே தேகத்தை வீழ்த்துவதை மரணமென்று எப்படிச் சொல்லமுடியும்? இல்லவேயில்லை; அது மரணமிலாப் பெருவாழ்வே!

இந்நிகழ்ச்சியை ஏற்கனவே விதிக்கப்பட்டதாக கருதினால், இப் புலி முன்ஜன்மத்தில் ஒரு புண்ணியவானாக இருந்திருக்கவேண்டும். கல்விச் செருக்கினால் ஒரு ஹரிபக்தரை அவமானம் செய்திருக்கலாம்.

அவருடைய சாபத்தால் கொடிய மிருகமாகப் பிறந்திருக்கலாம். அதே ஹரிபக்தர் சாபவிமோசனம் அளித்ததால் பாபாவின் சரணங்களை அடைந்திருக்கலாம். ஹரிபக்தர்களின் செயல்கள் அபிநவம் (என்றும் புதியவை) அல்லவோ!

சாபவிமோசனம் பெற்றதால்தான், புலிக்கு சாயிதரிசனம் கிடைத்ததென்று எனக்குத் தோன்றுகிறது. தரிசனம் பாவங்களை எரித்து பந்தங்களை அறுத்துத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பயனாக, புலி வெளித்தூண்டுதலின்றி தானாகவே உத்தாரனம் பெற்றது.

பூரணமான சௌபாக்கியம் இன்றி, ஞானியின் கண்ணுக்கெதிராக மரணம் எப்படி ஏற்படும்? புலியைப் பொறுத்தவரை, முக்குணங்களும் முத்தாபங்களும் நாசமாகி, இறைவனுடன் ஒன்றிவிட்டது.

இவ்விதமாக, பூர்வ கர்மானுபந்தத்தினால் விளைந்த கொடிய தேகத்தின் சம்பந்தம் அறுந்தது; பிணைத்துவைத்த இரும்புச் சங்கலிகளும் அறுந்தன! இறைவன் செயல்படும் வழிவகை இவ்வாறே.

சாதுக்களின் மற்றும் ஞானியரின் பாதங்களில் அன்றி, மோட்சப் பாதையை வேறெங்கே காணமுடியும்? புலிக்கு அது கிடைத்தபோது தர்வேசிகள் திருப்தியடைந்தனர்.