valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 3 October 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி லீலை என்னும் இந்தக் கற்பக விருட்சம் சந்தேகமேயின்றிப் பூவாகவும் காயாகவும் பழமாகவும் அருளும். ஆயினும், சிறந்த பாக்கியவானால்தான் அவற்றை பூமிக்கு கொண்டுவர முடியும்.

ஆன்மிகம் நாட்டமுள்ளவர்களுக்கு மோட்சம் அளிப்பதிலும் எல்லாருக்குமே மங்களம் விளைவிப்பதிலும், எல்லாச் சாதனங்களிலும் தலைசிறந்த சாதனமாகிய இப் பரம புனிதமான கதைகளைக் கேளுங்கள்; கேளுங்கள்.

இந்த சாயி கதையாகிய அமிருத பானம், ஜடம் போன்ற மனிதனையும் உத்தாரணம் செய்யும்; மோட்சத்தை நாடுபவர்களுக்கு மோட்ச சாதனம்; உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கு சுமைதாங்கி!

ஒரு கதையை இங்கே சொல்லப் புகும்போது, பல கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே, கேட்பவர்களைக் கவனத்துடன் கேட்கும்படி ஹேமாட் பணிவுடன் வேண்டுகிறேன்.

இம்மாதிரியாக ஒவ்வொரு கதையாக கேட்டுகொண்டுவந்தால், சாயிலீலை ரசவாதம் புரியும். பிறவியென்னும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருப்தியும் சுகமும் பெறுவர். சமர்த்த சாயி மகத்தான சக்தி பெற்றவர் அல்லரோ!

நாசிக் ஜில்லாவில், வணி கிராமத்தில், காகாஜி வைத்யா என்று பெயர் கொண்ட ஒருவர் வசித்து வந்தார். அங்கிருந்த தேவியின் கோவிலில் உபாத்தியாயராக (பூசகர் - பூஜை செய்பவர்) இருந்தார்.

தேவியின் பெயர் சப்தசிருங்கி. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளால் வேதனைகளாலும் துன்புற்ற பூஜகர் மனவுளைச்சலுற்றார்.

காலச்சக்கரம் கேடுகளைக் கொண்டுவரும்போது, மனம் நீர்ச்சுழியைப்போல் சுழல்கிறது. உடல் இங்குமங்கும் அலைகிறது. ஒருகணமும் சாந்தி கிடைப்பதில்லை.

மிகுந்த சோகமுற்ற காகாஜி, கோயிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளில் இருந்தும் சஞ்சலங்களில் இருந்தும் விடுவிக்குமாறு தேவியை வேண்டினார்.

தேவியின் அருள் வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவருடைய பக்தியையும் பாவத்தையும் மெச்சித்  திருப்தியடைந்தார். அன்றிரவே அவருக்கொரு காட்சியளித்தார். கதை கேட்பவர்கள்! இந்த அற்புதத்தைக் கேளுங்கள்!

தேவி சப்தசிருங்கி மாதா காகாஜியின் கனவில் தோன்றி, "பாபாவிடம் செல்வீராக; மனம் அமைதியுறும்" என்று கூறினார்.

'யார் இந்த பாபா? அவரை எங்கே போய்க் காண்பது?' என்பதை தேவி மேலும் தெளிவுபடுத்துவார் என நினைத்துக் காத்திருந்தபோதே அவர் விழித்துக்கொண்டார்.

மேற்கொண்டு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுவதற்கு முன்பாகவே சட்டென்று கனவு மறைந்துவிட்டது. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடுமென்று தம்முடைய புத்திக்கெட்டியவாறு அனுமானித்தார். 


Friday, 27 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓ சாயிநாதரே! என்னைக் காத்தருள ஓடி வாரும்! உமது பாதங்களில் என் தலையைச் சாய்த்துவிட்டேன். அனைத்து அபராதங்களையும் (குற்றங்களையும்) மன்னித்து, இவ்வடிமையின் சஞ்சலங்களையும் கவலையையும் நிவாரணம் செய்யுங்கள்.

பல சங்கடங்களால் துன்பமுற்ற பக்தன், இவ்விதமாக சாயியை அழைத்தால் தன்னுடைய உளையும் மனதிற்கு சாந்தியை அளிக்கக்கூடிய சக்தி பெற்ற ஒரே தருமவானை சாயியின் காண்பான்.

தயாசாகரமான சாயி எனக்குச் செய்த கிருபையால்தான் என்னால் வாசகர்களுக்கு இந்த மங்களமான காவியத்தை அளிக்கமுடிகிறது.

இல்லையெனில், எனக்கு என்ன பவிசு இருந்தது? யார் இந்த மிக சிரமமான பணியைத் தலைமேல் ஏற்றுக்கொள்வார்? ஆனால், சாயி தம்முடைய வேலைக்குத் தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்போது, அது எனெக்கென்ன பாரம்?

அஞ்ஞான இருளை அழிப்பவரும் ஞானதீபமுமாகிய  சமர்த்த சாயி என்னுடைய எழுத்துக்கு ஒளியூட்டும்போது எனக்கென்ன சந்தேகம் வரமுடியும்?

தயாநிதியான என் பிரபுவின் மேல் பாரத்தை போட்டுவிட்ட நான் அணுவளவும் சிரமப்படவில்லை. அவருடைய கிருபை என்னும் பிரகாசத்தினால் என்னுடைய இதயத்தின் தாபம் நிறைவேறிவிட்டது.

புத்தக ரூபத்தில் சாயிக்குச் செய்யும் சேவை எனது பூர்வஜென்ம புண்ணியங்களின் பலத்தால் விளைந்ததே. இறைவா! தேவரீர் இந்த எளிய சேவையை ஏற்றுக்கொள்வதற்கு யான் என்ன பேறு பெற்றேன் ஐயனே!

தயாசகரமான சாயி பலவிதமான தெய்வீக காட்சிகளை அளித்து பக்தர்களுக்குப் பிரதானமான போதனைகள் அருள் செய்ததுபற்றிக் கடந்த அத்தியாயத்தில் கேட்டீர்கள்.

இந்த அத்தியாயத்திலும், சப்தசிருங்கி தேவி உபாசகர் ஒருவரின் மிக சுவாரஸ்யமானதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுமான கதையைக் கேளுங்கள்.

தேவர்களும் தேவிகளும் தங்களுடைய பக்தர்களை ஞானியரின் கைகளில் ஒப்படைக்கும் அதிசயத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

ஒன்றைவிட மற்றொன்று அற்புதமானதாக, மஹாராஜின் கதைகள் எத்தனையோ உண்டு. இந்தக் கதை கேட்பதற்குகந்தது. ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

இது வெறும் கதையன்று; அமிருத பானம். சாயியின் மகிமையையும் எங்கும் நிறைந்த தன்மையையும் எடுத்துக்காட்டும். கேட்பவர்கள் மனநிறைவு பெறுவர்.

தர்க்கவாதிகளுக்கும் விமரிசகர்களுக்கும் இக் கதை வேண்டா. வாதப்பிரதிவாதங்களுக்கும் இங்கு இடமில்லை. தேவை, அளவற்ற பிரேமையும் பக்தியுமே!

கேட்பவர் புத்திசாலியாகவும் அதே சமயம் பக்தராகவும் இருக்கவேண்டும்; விசுவாசமும் சிரத்தையும் வேண்டும்; ஞானிகளின் தொண்டராகவும் இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு இக்கதைகள் மாயையாகத் தோன்றும்.


Friday, 20 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

30 . கனவிலும் நனவிலும் அனுக்கிரஹம் (பகுதி 2 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஓம் நமோ சாயி தேவா! பக்தவத்சலரே! கருணாலயமே! தரிசனமொன்றாலேயே பிறவிப்பயத்தை விலக்கி ஆபத்துகளிலிருந்து காப்பவரே! உம்மை வணங்குகிறேன்.

ஞானிகளுள் முடிமணியாகிய சாயிநாதரே! ஆரம்பித்தில் நீர் குணமற்றவராக இருந்தீர். பிறகு, உம் பக்தர்களின் அன்பு, பக்தி ஆகிய விசைகளால் உந்தப்பட்டு உருவத்தையும் குணங்களையும் ஏற்று அவதரித்தீர்.

பக்தர்களை உத்தாரணம் செய்வதே (தீங்கிலிருந்து மீட்டு உயர்த்துதல்) குருமார்களின் ஜீவாதாரமான மூச்சுக் காற்று. குருவம்ச திலகமாகிய உங்களுக்கு வாழ்க்கையின் லட்சியம் வேறென்னாவாக இருக்கமுடியும்!

உமது இரு பாதங்களையும் பற்றிகொண்டவர்களுடைய பாவங்களைனைத்தும் அழியும். பூர்வஜென்ம நல்வினைகளின் பலன் மேல் தளத்திற்கு எழும்பும்.  வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வாரா.

மகத்தான புனிதத் தலங்களில் வாழும் பிராமணர்களும் உம்முடைய பாதங்களை மறவாது இங்கு வந்து காயத்ரி மந்திரத்தை இடைவிடாது ஓதுகிறார்கள்; போதி, புராணங்களையும் வாசிக்கிறார்கள்.

சடங்குகள் தெரியாத, அல்ப சக்தியுடைய எங்களுக்கு பக்தியைப்பற்றி என்ன தெரியும் ? ஆயினும், சமஸ்தமான (எல்லா) மக்களும் எங்களை ஒதுக்கிவிட்டாலும், சாயி எங்களைக் கைவிடமாட்டார்.

அவர் யாருக்குக் கிருபை செய்கிறாரோ, அவர் சிந்தனைக்கெட்டாத அளவிற்கு சக்தி பெறுகிறார். ஆத்மா எது, அனாத்மா எது, என்னும் விவேக சம்பத்தை அடைகிறார். அதிலிருந்து ஞானம் பிறக்கிறது.

சாயியின் திருவாய்மொழியைக் கேட்கவேண்டும் என்ற தீவிர ஆசை பக்த ஜனங்களை பிச்சேற்றுகிறது. ஒவ்வொரு வார்த்தையும் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. வார்த்தைகளின் உட்பொருளை அனுபவத்தில் காண முயல்கின்றனர்.

பக்தர்களின் மனோரதங்களை சாயி பரிபூரணமாக அறிவார்; அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார். அதன்மூலமாக, பக்தர்கள் வாழ்க்கையில் நிறைவு பெற்றவர்களாகிறார்கள்.
 

Friday, 13 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்காக வாமன்ராவ் அவசரமாகச் சென்று, பல இடங்களிலிருந்து பீராய்ந்துகொண்டுவந்து ரூ.25 /- ஐ பாபாவிடம் கொடுத்தார்.

"மூட்டை மூட்டையாக ரூபாயைக் கொண்டுவந்தாலும் இதற்கு ஈடாகாது. அவற்றினுடைய மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிடக் கம்மியே" என்று சொல்லிக்கொண்டே பாபா ரூ.25 /- ஐயும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

சாமாவை நோக்கி அவர் சொன்னார், "சாமா இதை நீ எடுத்துக்கொள். இது உன்னுடைய சேகரிப்பில் இருக்கட்டும். பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு".

அந்த சயமயத்தில், "ஏன் இவ்வாறு செய்கிறீர்?" என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கு தைரியம் இருந்தது? ஏனெனில், செய்யத் தக்கது எது, செய்யத் தகாதது எது என்பது சாயிக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது அன்றோ?

ஆகவே, இந்த அத்தியாயத்தை முடித்து, கேட்பவர்களுடைய மனத்திற்குச் சற்று நேரம் ஓய்வளிப்போம். இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடவிட்டு சாரம் வாங்கட்டும்.

கேள்வியைச் சிந்தனை தொடராவிட்டால், கேட்டதைக் கிரகிக்க முடியாது. மேலும், கேட்டதைப் பற்றிச் சிந்தித்து தியானம் செய்யாவிட்டால், கேள்வி பயனின்றிப் போகும்.

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். எல்லா சாதனங்களுக்கும் (உபாயங்களுக்கும்) மூலஸ்தானமான சாயி பாதங்களில் தலை சாய்க்கிறேன். மேற்கொண்டு சொல்லப்போவது, தன் வழியைத் தானே வகுத்துக்கொள்ளும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கனவுகள் என்னும் இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

                                        ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                                சுபம் உண்டாகட்டும். 

Friday, 6 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

குவாலியர் வந்து சேர்ந்தவுடன் ரூபாய் நாணயத்தை டாக்டர் ஹாடேவிடம் கொடுத்து, ஷிர்டியில் நடந்ததனைத்தையும்  நண்பர் விவரமாக சொன்னார். இதைக் கேட்ட ஹாடே அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்.

அவர் மனத்தில் இவ்வாறு நினைத்தார், "என்னுடைய மனோகதியை அறிந்த பாபா, நான் என்ன வேண்டுமென்று விரும்பினேனோ, எது வேண்டும் என்று தீர்மானம் செய்தேனோ, அவ்வாறே என்னுடைய மனோரதத்தை பூர்த்தி செய்துவிட்டார்.

காப்டன் ஹாடே இவ்வாறு நினைத்தபோதிலும், அது அவருடைய கற்பனையே. ஏனெனில், ஞானிகள் எந்தப் ப்ரயோஜனத்திற்காக என்ன யோஜனை செய்கிறார்கள் என்பதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?

அம்மாதிரி நிச்சயமாக ஏதாவது சொல்லப் புகுமுன், இதற்கு நேர்மாறான நிகழ்ச்சியொன்றைப் பார்க்கவேண்டும். முடிவில், ஞானியின் எண்ண ஓட்டங்களை ஞானி மாத்திரமே அறிவார் என்பது விளங்கும்.

ஒருவர் கொடுத்த  ரூபாயைத் திருப்பி கொடுத்துவிடுகிறார். இன்னொருவர் கொடுத்த ரூபாயைப் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார். காரணம் என்னவென்றோ பாபாவின் மனதில் என்ன இருந்ததென்றோ எப்படி நிச்சயமாக சொல்ல முடியும்?

அவருடைய காரணம் அவருக்குத்தான் தெரியும். கிடைத்த அற்புதமான நல்வாய்ப்பைக் கோட்டைவிடாமல் அவருடைய லீலையை பார்த்து அனுபவிக்கவே நம்மால் முடியும். இது சம்பந்தமான கதையொன்றை கேளுங்கள்.

ஒருசமயம் பாபாவின்மீது அளவற்ற பிரேமை கொண்ட வாமன்ராவ் நார்வேகர் என்ற பக்தர், பாபாவுக்கு பக்தியுடன் அர்ப்பணம் செய்வதற்காக அழகான ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொண்டுவந்தார்.

அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ராமர், லக்ஷ்மணர், சீதை இவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயரின் அழகான உருவம் இருந்தது.

பாபாவின் கையால் தொடப்பட்டு உதீ பிரசாதத்துடன் திருப்பி அளிக்கப்பட வேண்டுமென்பதே பாபாவுக்கு அந்த நாணயத்தை அர்ப்பணம் செய்ததன் நோக்கம். ஆகவே, அது பாபாவின் கையில் இடப்பட்டது.

பாபாவுக்கென்னவோ எல்லார் மனத்திலும் இருந்த விருப்பங்களும் தெரியும். ஆயினும், நாணயம் கையில் விழுந்தவுடனே அதை பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

வாமன்ராவ் என்ன விரும்பினார் என்பதை மாதவ்ராவ் பாபாவிடம் தெரிவித்து, நாணயத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி கெஞ்சினார்.

"ஏன் இதை அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்? இதை நாமே வைத்துக்கொள்ள வேண்டும்" என்று பாபா தெளிவாக வாமன்ராவின் கண்ணுக்கெதிரிகாவே சொல்லிவிட்டார்.

"ஆயினும், அவர் இதற்கு விலையாக ரூ. 25 /- கொடுப்பாரானால், அதற்குப் பதிலாக இந்த ரூபாயை கொடுப்பேன்" என்று பாபா மேலும் சொன்னார்.  


Friday, 30 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயியின் கைகளால் தொடப்பட்டு புனிதமாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமொன்றைத் தம்முடைய இல்லத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசை காப்டன் ஹாடேவின் மனத்தில் எழுந்தது. சாயி இந்த ஆசையை நிறைவேற்றிவைத்தார்.

மனத்தில் கோடானுகோடி ஆசைகள் எழுகின்றன. கெட்ட எண்ணங்களை விலக்கிவிட்டு, நல்லெண்ணங்களை பின் தொடருங்கள். பக்தரின் கையைப் பிடித்துக்கொண்டு சாயி வழிநடத்தும் திறமையை அப்பொழுது பாருங்கள்.

ஒரு நல்ல விருப்பம் மனத்தில் தோன்றினால் அது உடனே பலன் அளித்துவிடுகிறது. சாயி தரிசனத்தை விரும்பிய நண்பரொருவர் ஷிர்டிக்கு உடனே புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

சாயி நிறைவேற்ற வேண்டுமென்றால், விருப்பம் நியாயமானதாக இருக்க வேண்டும். நல்லெண்ணங்களை விரும்பி தருமவழி நடக்கும் பக்தருக்காக எவ்வளவு வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுக்க வேண்டும் அவருடைய ஆளுமையில்தான் இருக்கிறது.

ஹாடே மிகப் பிரீதியுடன், "மறக்காமல் இதை பாபாவின் கையில் கொடுங்கள்" என்று சொல்லி ஒரு ரூபாயை நண்பருடைய கையில் கொடுத்தார்.

நண்பர் ஷிர்டிக்குச் சென்றவுடனே சாயி தரிசனம் செய்தார். பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டு பாபாவின் சந்நிதியில் உட்கார்ந்தார்.

பாபா தக்ஷிணைக்காக கைநீட்டியபோது, முதலில் தம்முடைய தக்ஷிணையைக் கொடுத்தார். பாபா அதை வாங்கி உடனே பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். நண்பர், காப்டன் ஹாடேவின் தக்ஷிணையை எடுத்தார்.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, "டாக்டர் ஹாடே என் மூலமாக இந்த தக்ஷிணையைக் கொடுத்தனுப்பினார்" என்று சொல்லிக்கொண்டே அந்த ரூபாயையும் பாபாவின் கையில் வைத்தார்.

எல்லாருடைய இதயத்திலும் வசிக்கும் இந்த சாயி, ஹாடே குவாலியரில் இருந்ததாலும் அவருடைய விருப்பம் என்னவென்று அறிந்திருந்தார். அந்த ரூபாயையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

முகத்தில் பிரேமை பொங்க, அந்த ரூபாயைத் தமக்கெதிராக பிடித்துக்கொண்டு உற்றுப் பார்த்துகொண்டேயிருந்தார். சுற்றி இருந்தவர்கள் பாபாவை வியப்புடன் பார்த்தனர்.

வலக்கைக் கட்டைவிரலால் அந்த நாணயத்தைக் காற்றில் சுண்டிவிட்டுவிட்டுப் பிறகு பிடித்தார். இதுபோல் பல தடவைகள் செய்தார். இவ்விதமாக அந்த நாணயத்துடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு அதைத் திருப்பிக்கொடுத்தார்.

பாபா சொன்னார், "இது யாருக்குச் சொந்தமோ அவரிடம் கொடுத்துவிடுங்கள். இத்துடன் உதீ பிரசாதத்தையும் எடுத்துச் செல்லுங்கள். அவருடையது எதுவும் நமக்கு வேண்டா என்று அவரிடம் சொல்லுங்கள். அவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழும்படி சொன்னேன் என்று சொல்லுங்கள்".

பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு உதீ பிரசாதத்தைப் பத்திரப்படுத்திக்கொண்டு பாபாவிடம் அனுமதி பெற்றபின் நண்பர் வீடு திரும்பினார்.

   

Friday, 23 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாளிகைச் சாமான்களையும் சேகரித்துகொண்டுவந்து, பக்தியுடன் ஒரு சிறப்பான நைவேத்தியம் சமைத்தார். தக்ஷிணையையும் செய்துகொண்டார்.

நைவேத்தியம் தயாரானவுடன் எல்லாப் பண்டங்களையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்யப்புகுந்தபோது, தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நடந்ததனைத்தையும் கனவே என்று அறிவித்தார்.

தாம் ஷிர்டிக்கு இதற்கென்றே சென்று, கனவில் சமர்ப்பித்த பண்டங்களை நேரிடையாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்று காப்டன் ஹா டே நினைத்தார்.

ஆனால், அவர் அப்பொழுது குவாலியரில் இருந்ததால், பம்பாயில் இருந்த நண்பருக்கு (ஹரி சீதாராம் தீக்ஷிதருக்கு )கடிதம் எழுதினார். கனவில் நடந்த சம்பவத்தை விவரித்து அவரை ஷிர்டிக்கு போகுமாறு வேண்டினார்.

பணம் மணியார்டர் மூலமாக வருமென்றும் பணத்திற்கு ஏற்றவாறு தாம் கனவில் சேகரித்த மளிகைச் சாமான்களை வாங்கவேண்டுமென்றும், முக்கியமாக, எப்பாடுபட்டாவது உயர்ந்த தரமான அவரைக்காய்களை வாங்கவேண்டுமென்றும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

மீதிப்பணம் ஷிர்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மற்றப் பண்டங்களுடன் சேர்க்கப்பட்டு தக்ஷிணையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாதங்களை நமஸ்காரம் செய்து, பிரசாதம் கேட்டு வாங்கிக் குவாலியருக்கு அனுப்ப வேண்டும்.

மணியார்டர் வந்து சேர்ந்த உடனே நண்பர் ஷிர்டிக்கு சென்றார். இதர மளிகைச் சாமான்களை சுலபமாக வாங்கிவிட்டார்; அவரைக்காய்தான் எங்குமே கிடைக்கவில்லை. திடீரென்று ஒரு காய்கறிக் கூடை வந்துசேர்ந்தது!

கூடையைத் தலையில் சுமந்துவந்த பெண்மணி உடனே அழைக்கப்பட்டார். கூடையைத் திறந்து பார்த்தால், அதுவரை எங்கே தேடியும் கிடைக்காத அவரைக்காய் இருந்தது. கூடியிருந்தவர் எல்லாரும் மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.

எல்லாப் பண்டங்களும் மசூதிக்கு கொண்டுவரப்பட்டு பயபக்தியுடன் பாபாவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன. பாபா அவற்றை நிமோன்கரிடம் ஒப்படைத்தார். நிமோன்கர் அவற்றை மறுநாள், உணவாகச் சமையல் செய்து நைவேத்தியமாக சமர்ப்பணம் செய்தார்.

மறுநாள் பாபா சாப்பிட உட்கார்ந்தார். ஆனால், சாதத்தையோ பருப்பையோ தொடவில்லை. எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் காய்கறி பதார்தத்தையோ முதலில் எடுத்தார்.

பாபா உண்டது காய்கறிகளையே; அவரைக்காய் பதார்த்தையோ வாயில் இட்டுக்கொண்டார். காப்டன் ஹாடே இந்த விருத்தாந்தத்தை கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஹாடேவின் மனதில் என்ன பாவமும் இருந்ததோ அதுவே அனுபவமாக மலர்ந்தது. இப்பொழுது பின்வரும் அற்புதமான கதையைக் கேளுங்கள். பக்தர்களை மகிழ்விப்பதற்காக சாயி எவ்வளவு லாவகமாகவும் இனிமையாகவும் வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுத்தார் என்பதை இது காட்டும்.