valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 10 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஆனாலும், ஆரம்பநிலையில் தினப்படி விவகாரங்களில் ஏதாவதொரு அற்புதம் காட்டி ஆன்மீக பாதையில் ஏற்படச் செய்து பக்தர்களை வழிநடத்தினார் பாபா. 

மேகாவைப்பற்றி இதேமாதிரியாக இன்னொரு கதையும் உண்டு. கேட்பவர்கள், பக்தர்கள்மீது பாபா செலுத்திய பிரேமையை கண்டு ஆனந்தமடைவார்கள். 

நானாசாஹேப் சாந்தோர்கர் அன்பளிப்பாக அளித்த, புதியதும் பெரியதுமான படம் ஒன்று மேகாவிடம் இருந்தது. அதை வாடாவில் வைத்து பக்தியுடன் பூஜை செய்துவந்தார். 

மசூதியில் பாபா பிரத்யக்ஷ்மாக இருந்தார். வாடாவிலோ உருவத்தின் அச்சாக முழு உயரப்படம் பெரியதாக இருந்தது. இரண்டு இடங்களிலும் மேகா பூஜையும் ஆரதியும் செய்துவந்தார். 

இம்மாதிரியான சேவை பன்னிரண்டு மாதங்கள் தொடர்ந்து சகஜமாக நடந்தது. பின்னர் ஒருநாள் விடியற்காலை நேரத்தில், மேகா படுக்கையில் விழித்து கொண்டிருந்தபோது ஒரு தெய்வீக காட்சி கண்டார். 

படுக்கையில் இருந்தபோதே கண்கள் மூடியிருந்தாலும் விழிப்புடனிருந்த நிலையில் பாபாவின் உருவத்தைத் தெளிவாகப் பார்த்தார். 

மேகா விழித்துக்கொண்டிருந்தார் என்பது நன்கு தெரிந்து, பாபா அவர்மீது அக்ஷதையைத் தெளித்து, "மேகா, திரிசூலம் வரையுமய்யா!" என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். 

பாபாவின் வார்த்தைகளை செவியுற்ற மேகா கண்களைத் திறந்து பார்த்தார். பாபாவின் உருவம் மறைந்து கொண்டிருந்ததைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தார். 

மேகா சுற்றுமுற்றும் பார்த்தார். படுக்கை முழுவதும் அக்ஷதை இறைந்து கிடந்தது. வாடாவின் கதவுகளோ முன்போலவே சாத்தப்பட்டிருந்தன. அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 

உடனே மசூதிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்தார். தாம் கண்ட காட்சியை விவரித்தபின், திரிசூலம் வரைவதற்கு பாபாவின் அனுமதி வேண்டினார்.

மேகா தாம் கண்ட காட்சியை விரிவாக எடுத்துச் சொன்னார். பாபா அப்பொழுது வினவினார். "என்ன காட்சி? நான் உம்மைத் திரிசூலம் வரையும்படி சொன்னது உமது காதுகளில் விழவில்லையா?"-

"காட்சி என்று அதற்குப் பெயர் கொடுத்து என்னுடைய வார்த்தைகளை எடைபோடப் பார்க்கிறீரா? என்னுடைய வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியவை. அவற்றில் ஓர் எழுத்துக்கூட அர்த்தமில்லாமற்போகாது."

மேகா பதிலுரைத்தார், "நானும் முதலில் நீங்கள் என்னை எழுப்பினீர்கள் என்றே நினைத்தேன். ஆனால், ஒரு கதவும் திறந்திருக்கவில்லை. ஆகவே, நான் கண்டது ஒரு காட்சியே என்று அனுமானித்தேன்".

பாபா இதற்கு என்ன விடையிறுத்தார் என்று கேளுங்கள், "நான் நுழைவதற்கு கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன் .-
 
 

Thursday, 2 May 2019

ஷீர்டி சாயி சரிதம்

ஆனால், மேகா இதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை. அவருக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அவரைப் பொறுத்தவரை பாபாவும் சங்கரரும் (சிவனும்) ஒன்றே; சங்கரர் கங்கை நீர் அபிஷேகத்தால் பிரீதி அடைகிறார்.

மேகா சொன்னார், "பாபா, இன்று மகர ஸங்க்ராந்திப் பண்டிகை நாள் (பொங்கல் திருநாள்). இன்று கங்கை நீரால் அபிஷேகம் செய்தால் சங்கரர் பிரீதி அடைகிறார்."

மேகாவின் அளவுகடந்த பிரேமையையும் தூய உள்ளத்தையும் திடமான தீர்மானத்தையும் கண்டு பாபா சொன்னார், "சரி, உம்முடைய ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளும்".

இவ்வாறு சொல்லிக்கொண்டே, இருக்கையிலிருந்து எழுந்துவந்து குளிப்பதற்காக இடப்பட்டிருந்த குட்டையான ஆசனத்தில் பாபா அமர்ந்தார். மேகாவுக்கெதிரே தலையை நீட்டிகொண்டே சொன்னார், "இங்கே சிறிது ஜலம் தெளியும்.-

'எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். தலையில் சிறிது நீர் தெளித்து விட்டீரானால் , அது உடம்பு முழுக்க ஸ்நானம் செய்ததற்கு சமானம். இந்த அளவிற்காவது நான் சொல்வதைக் கேளும்."

"சரி, சரி" என்று சொல்லிவிட்டுக் கலசத்தை பிரேமையுடன் உயர்த்தி, பாபாவின் தலைமீது கோதாவரி நீரை மேகா அபிஷேகம் செய்தார். "ஹர் கங்கே " என்று கோஷமிட்டுக்கொண்டே நீரைத் தலையில் மட்டுமின்றி உடல் முழுவதும் அபிஷேகம் செய்துவிட்டார்.

"என் சிவனை ஆடைகளுடன் சேர்த்து முழுமையாகவே அபிஷேகம் செய்துவிட்டேன்" என்று நினைத்து, மேகா தம்முடைய செய்கையைத் தாமே பாராட்டிக்கொண்டு ஆனந்தம் அடைந்தார். ஆனால், என்னே அதிசயம்! காலிக் குடத்தை கீழே வைத்துவிட்டு பாபாவைப் பார்த்தார்; பெருவியப்படைந்தார்.

உடம்பு முழுவதும் நீரை அபிஷேகம் செய்திருந்த போதிலும், பாபாவின் தலை மாத்திரமே நனைந்திருந்தது. உடலின் மற்ற பாகங்கள் நனையவே இல்லை. உடைகளின் மீது ஒரு சொட்டு நீரும் இல்லை!

மேகா தலைகுனிய நேரிட்டது. சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். பக்தர்களின் ஆசைகளை பாபா பூர்த்தி செய்துவைக்கும் வினோதம் இவ்வாறே.

"நீர் என்னைக் குளிப்பாட்ட விரும்பினீர். உம்முடைய விருப்பப்படி செயல்படும். ஆனால், அதிலும் என் மனத்துள் இருக்கும் சூக்குமத்தை சுலபமாகவே அறிந்து கொள்வீர். "

இதுதான் சாயிபக்தியின் ரஹஸ்யம். அவருடைய அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்; அதன் பிறகு, தாண்டமுடியாது எதுவுமே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து விஷயங்களுக்கும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.

ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, காலையிலும் மாலையிலும் ஒரு சுற்று எங்காவது போய்வருவதோ, எந்தக் காரியமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்கமுடியாத சிரத்தையை கடைபிடித்தால், பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.  


Friday, 26 April 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"போம், போய் அந்தப் பூஜையை செய்துவிட்டுத் திரும்பிவாரும்". மேகா பதிலுரைத்தார். "பாபா, கதவு மூடியிருந்தது. நான் திறக்க முயன்றேன்; முடியவில்லை. ஆகவே நான் பூஜை செய்யாமலேயே இங்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "

பாபா கூறினார், "போம், மறுபடியும் சென்று பாரும். கதவை இப்பொழுது திறக்க முடியும்." மேகா ஒருகணமும் தாமதியாது கோயிலுக்கு ஓடினார். பாபா கூறிய வார்த்தைகள் உண்மையென்பதை அனுபவத்தில் கண்டார்.

மேகா கண்டோபா பூஜையை முடித்தார். தம்முடைய மனக்குறையும் தீர்ந்தது கண்டார். இதன் பின்னரே பாபா மேகாவை தமக்கு பூஜை செய்ய அனுமதித்தார்.

மேகா பயபக்தியுடன் சந்தனம், புஷ்பம் ஆகிய பூஜை திரவியங்களால் அஷ்டோபசார பூஜை செய்தார். மாலையையும் பழங்களையும், தம் சக்திக்கேற்றவாறு தக்ஷிணையையும் சமர்ப்பித்தார்.

ஒரு மகர சங்கராந்தி தினத்தன்று (பொங்கல் திருநாள்) கோதாவரி நதியில் இருந்து நீர் கொணர்ந்து, பாபாவுக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காயும் வாசனைத் திரவியங்கள் கலந்த சந்தனமும் தேய்த்து, உடம்பு முழுவதும் குளிப்பாட்ட விரும்பினார் மேகா.

பாபாவை அனுமதி கேட்டுப் பிடுங்கி எடுத்தார். கடைசியில் பாபா சொன்னார், "சரி உம் இஷ்டப்படி செய்யும்". மேகா நீர் கொண்டுவரக் குடத்துடன் சென்றார்.

சூரிய உதயத்திற்கு முன்பே, காலிக் குடத்துடன், செருப்பு அணியாது குடையும் இல்லாது கோமதி (கோதாவரி) நதியில் இருந்து நீர் கொண்டுவர மேகா கிளம்பினார்.

போகவரப் பதினாறு மைல்கள் இருந்த தூரத்தைப் பற்றியோ, சென்று வருவதில் இருந்த கடுமையான சிரமத்தைப் பற்றியோ, கஷ்டங்களை பற்றியோ எந்த எண்ணமும் அவருடைய கனவிலும் எழவில்லை.

இவற்றைப்பற்றி  அவர் கவலைப்படவில்லை. அனுமதி கிடைத்த உடனே அவர் கிளம்பிவிட்டார். திடமான தீர்மானமே எடுத்த காரியத்தில் உற்சாகத்தை ஊட்டுகின்றதோ!

சாயியை கங்கை நீரால் குளிப்பாட்ட வேண்டுமென்ற விருப்பம் எழுந்தபின், சிரமம் என்றால் என்ன? அசதி என்றால் என்ன? திடமான சிரத்தையே இங்கே பிரமாணம் அன்றோ!

இவ்விதமாக கோதாவரி நீர் கொண்டுவரப்பட்டு, தாமிரத் தவலையில் நிரப்பப்பட்டது. எழுந்துவந்து குளிப்பதற்கு தயாராகும்படி பாபாவை மேகா மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தினார். ஆனால், பாபா இதை ஏற்றுக்கொள்பவராக இல்லை.

மதிய ஆரத்தி முடிந்துவிட்டிருந்தது. பக்தர்கள் அவரவர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டனர். "குளிப்பதற்கு சகலமான பொருள்களும் தயாராக இருக்கின்றன. சாயங்கால நேரம் நெருங்குகிறது " என்று மேகா சொன்னார்.

லீலைக்காகவே அவதாரம் செய்த பாபா, மேகாவின் விடாமுயற்சியை கண்டு மேகாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்துக்கொண்டு சொன்னார்.

"ஓய்! எனக்கு இந்த கங்கா ஸ்நானம் வேண்டா. நீர் என்ன இவ்வளவு மதியீனமாக இருக்கிறீர் ! என்னைப் போன்ற பக்கீருக்கு கங்கை நீர் எதற்காக?"


Thursday, 18 April 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மேகா இரவுபகலாக சாயிசங்கர நாமகோஷம் செய்தார். அவருடைய புத்தி ஸாயியில் ஒன்றிவிட்டது. கரைகளும் குறைகளும் வெளியேறி மனம் தூய்மையடைந்தது.

சாயியை கண்ணுக்கெதிரே தெரியும் சங்கரராகப் பாவித்ததால், சாயியின் அனன்னிய பக்தரானார். சங்கர, சங்கர, என்று எந்நேரமும் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். வேறெந்த தெய்வத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாயியே அவர் தினமும் பூஜை செய்யும் தெய்வம். சாயியே கிரிஜாரமணன் (சிவன்). இந்த மனோபாவம் வேரூன்றிய பிறகு மேகா சதாசர்வ காலமும் சந்தோஷமாக இருந்தார்.

சிவனுக்கு வில்வத்தின் மீது பிரியம்; ஆனால், ஷிர்டியில் வில்வமரம் இல்லை. வில்வ தளங்களை சிவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டுமென்று ஆவலைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகத் தினமும் இரண்டு மூன்று மைல்கள் நடப்பார் மேகா.

இரண்டு மூன்று மைல்கள் நடப்பது என்ன பெரிய காரியம்? வில்வதளங்களை கொணர்ந்து சிறப்பாக சிவபூஜை செய்து திருப்தியடைய, மலையை கடக்கவும் அவர் தயாராக இருந்தார்.

வெகுதூரம் நடந்துசென்று வில்வதளங்களை கொணர்ந்து இதர பூஜை சாமான்களையும் சேகரித்துக்கொண்டு, கிராமத்து தேவதைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் சாஸ்திர விதிகளின்படி பூஜை செய்வார்.

இது முடிந்தவுடன் மசூதிக்கு செல்வார். பாபா அமரும் இருக்கைக்கு அன்புடன் நமஸ்காரம் செய்வார். பிறகு பாபாவின் பாதங்களை பிடித்துவிட்டு விட்டு பாத தீர்த்தத்தை (பாதங்களை கழுவிய நீர்) முதலாக அருந்துவார்.

மேகாவைப் பற்றி, கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய கதைகள் பல உண்டு. இக் கதைகள் சாயியின் எங்கும் நிறைந்த சக்தியையும் சாயி கிராம தேவதைகள் மீது வைத்திருந்த பக்தியையும் எடுத்துக் காட்டும்.

மேகா உயிர் வாழ்ந்தவரை தினமும் மதிய ஆரத்தியை அவரே செய்தார். கிராம தேவதைகளின் பூஜையை முதலில் முடித்துக்கொண்டு, கடைசியாக மசூதிக்குச் செல்வார்.

இதுவே அவருடைய தினப்படி நடவடிக்கையாக இருந்தது. ஒருநாள், இந்தக் கிரமம் தவறி விட்டது. எவ்வளவு முயன்றும் கண்டோபா பூஜையை அன்று செய்ய முடியவில்லை.

அன்றும் நித்திய கிரமப்படி பூஜை செய்ய விரும்பினார். ஆனால், எவ்வளவு பிரயத்தனம் செய்தபோதிலும் கோயிலின் கதவுகளை திறக்க முடியவில்லை. ஆகவே, பூஜையைச் செய்ய முடியாமல் விட்டுவிட்டு மசூதிக்கு ஆரத்தியுடன் வந்தார்.

பாபா உடனே விளம்பினார், "இன்று உம்முடைய நித்திய பூஜையில் ஒரு துண்டு விழுந்திருக்கிறது. மற்ற தெய்வங்களுக்கு பூஜை செய்துவிட்டீர்; ஆனால், ஒரு தெய்வம் இன்னும் பூஜை செய்யப்படாமலேயே இருக்கிறது. -


Friday, 12 April 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆனால், முடியாது என்று சொன்னால் சாதே சினம் கொள்வார்; போகிறேன் என்று ஒத்துக்கொண்டால் நரகந்தான் கிட்டும். என்ன செய்யலாம் என்று அவரால் யோசிக்க முடியவில்லை. அவர் மனம் கவலையில் உளைந்தது.

பேய்க்கும் பெருங்குடலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட நிலைமை.  அவர் மனம் அலைபாய்ந்து அமைதியிழந்தது. ஆனால், சாடேவோ மனப்பூர்வமாக அவரைப் போகும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். 'சரி, போய்த் தரிசனம் செய்துவிட்டு வரலாம்' என்று மேகா முடிவெடுத்தார்.

பின்னர் மேகா ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார். முற்றத்தினுள் சென்று மசூதியின் படிகளில் ஏற ஆரம்பித்தார். பாபா தம் லீலையை ஆரம்பித்தார்!

உக்கிரமான முகத்துடன் கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டே இரைச்சலிட்டார், "ஜாக்கிரதை! படிமேல் கால் வைத்து ஏறினால் தெரியும் சேதி! இது ஒரு யவனன் (முஸ்லீம்) வாழும் இடம்.-

"ஓ, நீரோ உயர்குலத்து பிராமணன். நானோ நீசனிலும் நீசனான யவனன். உம்மேல், தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும். போம் வெளியே; இக்கணமே திரும்பிவிடும்!"

கடுமையான இவ்வார்த்தைகள் மேகாவின்மீது தணலைப் போலக் கொட்டின. பாபா பிரளய கால ருத்திரனைபோலக் காட்சியளித்தார். இதை பார்த்து கொண்டிருந்தவர்கள் வெலவெலத்தனர். மேகா பயத்தால் நடுநடுங்கிபோனார்.

இந்தக் கோபமென்னவோ ஒரு நடிப்புதான்; உள்ளே இதயம் தயையால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. மேகா வியப்பால் நிறைந்து செயலிழந்து போனார். "என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்த எண்ணங்களை இவர் எப்படி அறிந்தார்?-

"எங்கோ இருக்கும் கேட்டா ஜில்லா எங்கே? வெகுதூரத்தில் இருக்கும் அஹமத் நகரம் எங்கே? என்னுடைய மனக்கோணலும் சந்தேகங்களுமே பாபாவின் கோபமாக உருவெடுத்தன போலும்!"

பாபா மேகாவை அடிப்பதற்கு நெருங்க, நெருங்க, மேகாவின் தைரியம் அவரைக் காலைவாரிவிட்டது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஓரடி பின்னுக்கு வைத்தார். கிட்ட நெருங்க தைரியம் இல்லாது போயிற்று.

இந்நிலையிலே, பாபாவின் மனநிலையை அறிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டு ஷிர்டியில் சில நாள்களை தள்ளினார். முடிந்த அளவிற்கு ஏதோ சேவை  செய்தாரே தவிர, திடமான விசுவாசம் ஏற்படவில்லை.

பின்னர் மேகா தம்முடைய சொந்த ஊருக்கே சென்றார். அங்கு ஜுரத்தில் படுத்து மீண்டார். இந்நிலையில் பாபாவைப்பற்றிய ஏக்கம் உள்ளிருந்து வளர்ந்தது. மறுபடியும் ஷீரடிக்கே திரும்பி வந்தார்.

திரும்பிவந்த பிறகு மனம் சந்தோஷமடைந்தது; ஷிர்டியிலேயே தங்கினார். சாயி பாதங்களில் விசுவாசம் வளர்ந்து அனன்னிய பக்தரானார். சாயியைவிட்டால் வேறு தெய்வமில்லை என்னும் நிலைக்கு உயர்ந்தார்.

மேகா ஏற்கெனவே ஒரு சிவபக்தர். சாயி பாதங்களின்மேல் ஈடுபாடு வளர, வளர சாயிநாதனில் சிவனைப் பார்த்தார். சாயிநாதனே அவருக்கு உமாநாதன் (சிவன்).   


Friday, 5 April 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

தரிசனம் செய்ய வரும் கூட்டத்தைக் கண்டு, தாம் அங்கு வந்தால் தங்குவதற்காகச் சொந்தமாகவே ஒரு வாடா கட்டிவிடலாம் என்று முடிவெடுத்தார்.

கிராமத் தலைவர்களை சந்தித்து பாபா முதன்முதலில் தோன்றிய இடத்தை விலைக்கு வாங்கினார். அந்த இடத்தில வாடா கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்தப் புனிதமான இடத்தின் முக்கியவத்துவம் நான்காவது அத்தியாயத்தில் ஏற்கெனவே விவரிக்கப்பட்டு விட்டது. இங்கு மறுபடியும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. விட்ட இடத்திலிருந்து கதையை மேலும் தொடர்வோம்.

ஆக, மேகா, ராவ் பகதூர் சாடேவைச் சந்திக்க நேர்ந்தது அவருடைய பூர்வபுண்ணிய பலத்தாலயே. ஏனெனில், சாடேதான் பெருமுயற்சி செய்து மேகாவுக்கு ஆன்மீகப் பாதையில் வழிகாட்டினார்.

சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட மேகா, பிராமணர்களுக்குரிய வழிபாடுகளையும் சடங்குகளையும் உதாசீனம் செய்துவிட்டார். ஆயினும், சாடே காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்து அவரை சன்மார்க்கத்தில் பிரவேசம் செய்யவைத்தார்.

மேகா சாடேவிடம் பணி செய்ய ஆரம்பித்தபின், பரஸ்பர மரியாதையை வளர்ந்தது. இவ்விதமாக மேகா சாடேவை தம் குருவாகக் கருதி அவரிடம் பாசம் கொண்டார்.

ஒருநாள் சகஜமாக பேசிக்கொண்டிருந்தபோது, சாடே தம் குருவின் மஹாத்மியத்தை எடுத்துரைத்தார். சித்தத்தில் பிரேமை பொங்கிவழிய அப்பொழுது மேகாவிடம் சொன்னார், -

"பாபாவுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யவேண்டுமென்று என் இதயத்தின் ஆழத்தில் விரும்புகிறேன். உம்மை ஷிர்டிக்கு அனுப்புவதன் முக்கிய காரணம் இதுவே என்றறிந்து கொள்ளும். -

"மேலும், வேறெதிலும் நாட்டமின்றி நீர் எனக்குச் செய்யும் சேவையைப் பார்க்கும்போது, நீர் சத் குருவிடம் போய்ச்சேரவேண்டும் என்றும் அவரிடம் பரிபூரணமான நம்பிக்கையும் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.-

"நீர் பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும். இந்த ஜென்மத்தில் பரம மங்களங்களை அடைவீர். போங்கள், போங்கள், போய் சத்குருவின் பாதங்களை மனதாலும் வாக்காலும் காயத்தாலும் (உடலாலும்) வழிபடுங்கள்."

மேகா சாயியின் ஜாதி என்னவென்று கேட்டார். உண்மையில் அது சாடேவுக்குத் தெரியாது. சாடே சொன்னார், "அவர் மசூதியில் வசிப்பதால் அவரைச் சிலர் 'அவிந்த' (காது குத்தப்படாதவர்  - முஸ்லீம்) என்று சொல்கிறார்கள்.

'அவிந்த' என்னும் வார்த்தை காதில் விழுந்தவுடனே மேகா மனமுடைந்துபோனார். 'ஒரு முஸ்லீமைவிட, நீசமான பிராணி இவ்வுலகில் ஏதும் உண்டோ? நீசன் எப்படி ஒரு குரு ஆகமுடியும்? 


Friday, 29 March 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

போஜன நேரத்தில் யாருமே படுதாவை விலக்கமாட்டார்கள். ஆயினும் கீழேயிருக்கும் சபாமண்டபத்தில் வெறுமனே உட்கார்ந்திருக்க அவ்வம்மையாருக்கு பொறுமை இல்லை.

பாபாவுக்கு கிச்சடி சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அவர் அகோலாவிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து ஷிர்டிக்கு வந்திருந்தார். இந்த அபரிதமான உற்சாகம் எப்படி அவரை சபாமண்டபத்தில் சும்மா உட்கார்ந்திருக்க விட்டுவைக்கும்?

ஆகவே, அவர் யார் சொன்னதையும் கேட்காமல் படுதாவைத் தம்முடைய கைகளாலேயே விலக்கிவிட்டு நைவேத்யத்துடன் உள்ளே புகுந்தார். அவருடைய ஏக்கமும் தணிந்தது.

பாபாவோ அங்கிருந்தோர் அனைவரையும் ஆச்சரியத்தில் முழுக்கினார். கிச்சடியின் மேல் பேரார்வம் காண்பித்து, மற்றப் பண்டங்களுக்கு முன்பாக அதை உண்ணவேண்டுமென்று விரும்பித் தம்முடைய இருகைகளையும் நீட்டித் தட்டை அவசரமாக வாங்கிக்கொண்டார்.

கிச்சடியைக் கண்டவுடன் மிகுந்த உற்சாகத்துடன் பிடிப்பிடியாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அங்கிருந்த எல்லாரும் அவரை அன்புடன் பார்த்து அதியசயப்பட்டனர்.

பாபா காண்பித்த ஆர்வத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.  ஆயினும் கிச்சடியின் கதையைக் கேட்டபின், பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக நடப்புக்கு அப்பாற்பட்டவை என்று அறிந்துகொண்டனர்.

மேற்கொண்டு சொல்லப்போகும் காதையைக் கேட்டால் உங்கள் மனம் பிரேமையால் பொங்கும். திடீரென்று கிளம்பி பாபாவுக்கு சேவை செய்யவந்த ஒரு குஜராத்தி பிராமணரின் கதை இது.

ஆரம்பத்தில் ராவ்பகதூர் சாடேவின் இல்லத்தில் வேலை செய்தவர் இவர். சாடேவுக்கு அந்தரங்க சுத்தமாகவும் விசுவாசத்துடனும் பணி செய்த பிறகு, சாயி பாதங்களில் அடைக்கலம் புகுந்தார்.

இதுவும் ஒரு சுவாரசியமான கதை. பக்தியும் பிரேமையும் நிரம்பிய வாழ்க்கையை நடத்துபவர்களின் ஏக்கங்களை ஸ்ரீஹரி எவ்வாறு தீர்த்துவைக்கிறார் என்பதைக் கேளுங்கள்.

மேகா என்பது இந்த பிராமணரின் பெயர். பூர்வஜென்ம சம்பந்தமே இவரை ஸாயியிடம் கொண்டுவந்து சேர்த்தது. இப்பொழுது கதையை விவரமாகக் கேளுங்கள்.

சாடே, கேடா ஜில்லாவில் உதவி மாவட்டாட்சியராக உத்தியோகம் பார்த்துவந்தார். அங்கேதான் எதிர்பாராமல் மேகாவைச் சந்திக்க நேர்ந்தது. சிவாலயத்தில் நித்திய பூஜை செய்வதற்காக அவரைப் பணியில் அமர்த்தினார்.

பின்னர் இந்த சாடே ஷிர்டிக்கு வந்தார்; பாக்கியம் பெற்றார். சாயி மஹாராஜின் அன்பையும் புனிதமான சங்கத்தையும் அனுபவித்தார். அவருடைய பாதங்களில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டார்.