valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 5 July 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

எங்களுடைய விருப்பங்கள் நிறைவேற, 'சமர்த்த சாயி' என்னும் மந்திரத்தை சதா ஜபம் செய்வோம். அதுவே எங்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிக்கும். நிட்டையின் மூலமாக நற்செயலை செய்த திருப்தியையும் பெறுவோம்.

முந்தைய அத்தியாயத்தில், தயாபரரான சமர்த்த சாயி எவ்வாறு பக்தர்களின் மங்களம் கருதி சிக்ஷை (போதனை - பயிற்சி) அளித்தார் என்பது விவரிக்கப்பட்டது.

இந்த அத்தியாயத்தில், அவர் ஒரு பக்தருக்கு குலகுருவின் மீதிருந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எவ்வாறு நிலைபெறச் செய்தார் என்பது விவரிக்கப்படும். விந்தையான இக் காதையை கேளுங்கள்.

செவிமடுப்பவர்களே! சித்தம் சிதறாமல் மனமொன்றி, பந்த் என்னும் பெயர் கொண்ட பக்தரின் இனிமையான காதையைக் கேளுங்கள். தத்துவம் மனத்தில் ஆழமாகப் பதியும்.

எந்த விதமான அனுபவம் எப்படிக் கொடுக்கப்பட்டது. நம்பிக்கை என்னும் அஞ்சனம் (மை) எவ்வாறு அவருடைய கண்ணுக்கிடப்பட்டது. குலகுருவிடம் கொண்ட விசுவாசம் எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப் பட்டது. அவருடைய மனம் சாந்தியடைய விவரம், இவற்றையெல்லாம் விளக்குகிறேன்; கேளுங்கள்.

ஒரு சமயம் பந்த் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் மிக சிரமப்பட்டு தம் நண்பர்களுடன் சாயி தரிசனம் செய்யும் ஆவலுடன் ஷிர்டிக்கு வந்தார்.

அவர் ஏற்கெனவே தம் குலகுருவிடம் தீட்சை (மந்திர உபதேசம்) பெற்றவர். குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஆகவே, அவருடைய மனத்தில் ஷிர்டிக்கு எதற்காக செல்லவேண்டும் என்ற ஐயம் இருந்தது.

ஆயினும், ஏற்கெனவே விதிக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக எப்படியாவது நடந்தே தீரும். சாயிதரிசனம் செய்யும் நல்வாய்ப்பு, முயற்சி ஏதும் செய்யாமலேயே வந்தது; அதனால் அமோகமான நன்மையும் விளைந்தது.

மனிதன் ஒன்று நினைக்க, தெய்வம் வேறுவிதமாக நினைக்கிறது. விதியை எதிர்த்து எதுவும் நடக்காது. அமைதியான மனத்துடன் இந்த அனுபவத்தை கேளுங்கள்.

ஷிர்டிக்கு போவதென்றே திட்டத்துடன் சில பக்தர்கள் தத்தம் இடங்களில் இருந்து சந்தோஷமாக கிளம்பி ஒரு கோஷ்டியாகப் புகைவண்டியில் ஏறினர்.

ரயில் பெட்டியில் ஏறும்பொழுது பந்த் உள்ளே உட்கார்ந்திருந்ததை பார்த்தனர். அவர்கள் ஷிர்டிக்கு பயணப்பட்டிருந்தார்கள் என்று பந்த் அறிந்து கொண்டார்.

அந்த கோஷ்டியில் பந்தின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்கள் சிலரும் இருந்தனர்! இதன் விளைவாக, ஷிர்டிக்கு செல்ல நாட்டமேதும் இல்லாத பந்தும் அவர்களுடைய நிர்பந்தத்திற்கு இணங்கி, கோஷ்டியுடன் சேர்ந்துகொள்ள நேர்ந்தது.

பார்க்கப்போனால், அவரிடம் ஆரம்பத்தில் செல்ல நினைத்த இடம் வரைக்குமே பயணசீட்டு இருந்தது. ஆனால், அவர் சூழ்நிலையால் மனத்தை மாற்றிக் கொண்டார்.

"நாமெல்லோரும் ஒன்றாக ஷிர்டிக்கு பயணம் செல்வோம்" என்று நண்பர்களும் உறவினர்களும் கூறினர். தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்களுடைய வற்புறுத்தலுக்கு பந்த் இணங்க வேண்டியதாயிற்று.

Thursday, 28 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா! தாங்கள் ஷிர்டிக்கு வந்ததும் இங்கேயே வசிப்பதும் ஷீர்டி செய்த சுகிர்தம் (நல்வினை) அன்றோ! தாங்கள் வாழ்வதால் ஷீர்டி புண்ணியத் தலம் ஆகிவிட்டது.

ஷிர்டி கிராமம் புண்ணியம் செய்தது. கிருபாமூர்த்தியான சாயி ஷிர்டியைத் தாம் வாழும் இடமாக அலங்கரித்து இக்கிராமத்திற்கு பாக்கியத்தையும் பேரதிர்ஷ்டத்தையும் வழங்கியிருக்கிறார்.

நீரே எனக்கு உணர்வூட்டி ஊக்கப்படுத்துகிறீர்; நீரே என்னுடைய நாவை அசைக்கிறீர். அவ்வாறிருக்க உம்முடைய புகழைப்பாட நான் யார்? நீரே வினையாற்றுபவரும் வினையாற்ற வைப்பவரும் அல்லீரோ!

தேவரீர் கூட்டுறவே எங்களுக்கு ஆகமங்களும் நிகமங்களும் ஆகும். தினந்தோறும் உங்களுடைய சரித்திரத்தை கேட்பதே எங்களை பாராயணமாகும்.

ஒரு கணமும் வீணாக்காமல் உமது நாமத்தை ஜபம் செய்வதே எங்களுக்கு கதாகீர்த்தனமாகும்; அதுவே எங்களது இடையறாத ஓதுகை; அதுவே எங்களுக்கு மன நிம்மதி.

உங்களுடைய வழிபாட்டில் இருந்து மனத்தைத் திருப்பி விடும் எந்தவிதமான சுகமும் எங்களுக்கு வேண்டா. ஆன்மீக மார்க்கத்தில் அதைவிடப் பெரிய வீழ்ச்சி ஏதுமுண்டோ?

எங்களுடைய ஆனந்தக்கண்ணீரே உமது பாதங்களை கழுவும் வெந்நீர்; சுத்தமான பிரேமையை சந்தனப்பூச்சு; தூய்மையான சிரத்தை உங்களுக்கு அணிவிக்கப் படும் ஆடை.

சடங்குகளுடன் கூடிய பூஜையை விட மேற்கூறியவிதமான மானசீக (மனத்தால் செய்யும்) பூஜையாலேயே உங்களை மகிழ்ச்சியடையச் செய்வோமாக.

அஷ்டபாவங்களையே நிர்மலமான எட்டு இதழ்களுடைய தாமரையாக ஒருமுகப்பட்ட தூய்மையான மனத்துடன் உமது பாதங்களில் சமர்ப்பித்து அதற்குண்டான பலன்களைப் பெறுவோம்.

எளிமையான விசுவாசமென்னும் கஸ்தூரி திலகத்தை நெற்றியில் இடுவோம். திடமான பக்தியை மேகலையாக அணிவிப்போம். பரிபூரண சரணாகதியாகத் தலையைப் பாதங்களின் கட்டைவிரல்களில் தாழ்த்துவோம். அசாதாரமான இப் பூஜையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம்.

அன்பை ரத்தினங்கள் பதித்த ஆபரணங்களாக அணிவிப்போம். பஞ்ச பிராணன்களை விசிறியாக்கி விசிறுவோம். உம்மிலேயே முழுமையாக மூழ்குதலை குடையாக ஆக்கி உஷ்ண நிவாரணம் செய்வோம். எல்லாரும் சேர்ந்து உமக்கு திருஷ்டி கழிப்போம்.

இவ்விதமாக நாங்கள் தங்களுக்கு சந்தனம், அக்ஷதை இத்தியாதி பொருள்களால் அஷ்டாங்கமாக பூஜையை ஆனந்தமாக செய்வோம். ஓ சாயி ராஜா! எங்களுடைய நன்மைக்காக தேவரீர் கடாக்ஷத்தை சம்பாதிப்போம்.  



Thursday, 21 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

மகனுடைய காக்காய்வலிப்பு நோயைத் தம் அருட்பார்வையாலேயே குணம் செய்து பெற்றோருடைய வேண்டுதலை எவ்வாறு நிறைவேற்றி வைத்தார் என்பதையும் தந்தையின் பழைய அனுபவங்களை எவ்வாறு ஞாபகப்படுத்தினார் என்பதையும் கூறுகிறேன்; கேளுங்கள்.

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். கதை கேட்பவர்களை சாயியின் கதைகளை ஆர்வத்துடன் கேட்கும்படி வேண்டுகிறேன். கேட்பவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மலரும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'பக்தர்களுக்கு க்ஷேம லாபம் அருளிய மாண்பு' என்னும் இருபத்தைந்தாவது  அத்தியாயம் முற்றும்.

                      ஸ்ரீ ஸத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                               சுபம் உண்டாகட்டும். 



Thursday, 14 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

புலன்கள் கட்டவிழ்ந்து ஓடி துராசாரத்தில் (கெட்ட நடத்தையில்) கொண்டுபோய் விடுகின்றன. காட்டாற்றைத் தடுத்து அணைகட்டிப் புலன்களை திரும்பி பார்க்கச் செய்யுங்கள்.

புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி உள்முகமாகத் திரும்பவில்லையென்றால், ஆத்மதரிசனம் பெறமுடியாது. ஆத்மாவை அறிந்துகொள்ளாமல் உன்னத சுகம் ஏது? பிறவியே அர்த்தமில்லாததாக ஆகிவிடும் அன்றோ?

மனைவி, மக்கள், நண்பர்கள் கூட்டம் -கடைசிக் காலத்தில் இவர்களில் யாராலும் எந்தப் பயனும் கிடைக்காது. நீர் மாத்திரமே கடைசிவரை கூடவரும் துணைவர். உம்மால்தான் சுகத்தையும் முக்தியையும் அளிக்க இயலும்.

மஹாராஜரே! உம்முடைய கிருபையின் பலத்தால் நாங்கள் செய்த வினைகளாலும் செய்யத் தவறிய வினைகளாலும் பின்னிக்கொண்ட வலையை அறுத்தெறியுங்கள். தீனர்களையும் பலவீனங்களையும், துக்கத்தில் இருந்தும் வேதனையில் இருந்தும் விடுவித்தருளுங்கள்.

நிர்மலமான சாயிராயரே! தீங்கு விளைவிக்கும் வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் உம்முடைய கருணையால் நிர்மூலமாக்கிவிடுங்கள். நாக்கு நாமஜபம் செய்வதிலேயே இனிமை காணட்டும்.

சங்கற்பங்களும் விகற்பங்களும் என் மனதில் இருந்து அழிந்து போகுமாறும், உடல், உற்றார், உறவினர், சொத்து, சுகம் இவையனைத்தையும் நான் அறவே மறந்து போகுமாறும் என்னுடைய இதயத்தில் இறையன்பை பொங்கச் செய்வீராக.

மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்துபோகுமாறு உம்முடைய நாமஸ் மரணமே எந்நேரமே மனதில் ஓடட்டும். என்னுடய மனம் அலைபாய்வதையும்  சபலத்தையும் தொலைத்து விட்டு சாந்தமாக  ஒருமுகப்படட்டும்.

உங்களுடைய நிழலில் எங்களுக்கு இடம் கிடைத்தால் அஞ்ஞானமாகிய இரவு மறைந்து போகும். உம்முடைய பிரகாசமான ஒளியில் சுகமாக வாழ்வதைவிட வேறென்ன எங்களுக்கு தேவைப்படும்?

எங்களை முதுகில் தட்டியெழுப்பி தேவரீர் ஊட்டிய சரித்திரமாகிய அமிருதம் சாமானியான சுகிருதமா (நற்செயலா) என்ன?

அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானது! செவிமடுப்பவர்களின் ஆவலை திருப்தி செய்யும். சாயியின் மீதிருக்கும் அன்பு பெருகும்; சிரத்தை திடப்படும்.

தம் குருவின் பாதங்களை கைவிட்டுவிட்டு ஒருவர் சாயி தரிசனத்திற்கு வந்தார். ஆயினும், அவர் தம்முடைய பாதங்களில் வணங்கிய பிறகு, வந்தவரின் குருவின் ஸ்தானத்தை (உயர்வை) நிலைப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் ஆசீர்வதித்தார் சாயி.

அதுபோலவே, செல்வம் மிகுந்திருந்தும் வருத்தத்திலாழ்ந்த இல்லறத்தார் ஒருவர் மனைவியுடனும் மகனுடனும் சாயி தரிசனத்திற்கு  வந்தார். 



Thursday, 7 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் கண்ணிற்படாமல் எங்கும் எதுவும் நிகழ்வதில்லை! வானமும் பூமியும் எல்லா திக்குகளும் அவருடைய பார்வைக்குத் திறந்து கிடக்கின்றன.

தாமு அண்ணாவிடமிருந்து பதில் ஏதும் வராததால், மறுமுனையில் தாமு அண்ணாவின் நண்பர் என்ன செய்வது என்றறியாது திகைத்தார்.

இதற்கிடையே நடந்ததையெல்லாம் விவரித்து சேட் (தாமு) ஏற்கெனவே ஒரு கடிதம் தம் நண்பருக்கு எழுதியிருந்தார். அதை படித்த நண்பர் வியப்பில் ஆழ்ந்தார்! 'விதியின் செயல்பாடு விசித்திரமானது' என்றும் நினைத்தார்.

"எவ்வளவு அருமையான வியாபார பேரம் நம் வழியே வந்தது! ஏன் அதுபற்றி அவரே முடிவெடுக்கவில்லை? ஒரு பக்கீரைத் தேடி எதற்காக அலையவேண்டும்? பெரும் லாபமளிக்க கூடிய பேரத்தை வீணாக்கி விட்டாரே!-

"இறைவன் அளிக்கிறான்; கர்மவினை அதைத் தடுத்துவிடுகிறது. விதிப்படி என்ன நடக்கவேண்டுமோ அதற்கேற்ற புத்திதான் அமைகிறது. வியாபார வாய்ப்பு இவ்வளவு அருமையாக இருக்கும்பொழுது, பக்கீர் ஏன் குறுக்கே நிற்கிறார்?

"உலக விவகாரங்களை துறந்துவிட்ட இந்தப் பக்கிரிகள் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இந்தப் பைத்தியகாரக் கூட்டம் வியாபார சம்பந்தமாக என்ன யோசனை அளிக்க முடியும்?

"அப்படியே போகட்டும் விடு! அவருக்கு லாபம் கிடைக்கவேண்டுமென்று தெய்வ அருள் இல்லை. அதனால்தான் அவருடைய புத்தி அவ்வாறு வேலை செய்தது. நான் வேறு யாரையாவது பங்குதாரராக சேர்ப்பதே சிறப்பு. நடக்கவேண்டுமென்று எது விதிக்கப்படவில்லையோ அது நடக்கவே நடக்காது என்பது பழமொழியன்றோ?"

கடைசியில் தாமு அண்ணா பேசாமல் 'சிவனே' என்றிருந்துவிட்டார். விதிவசத்தால் மாட்டிக்கொண்டவர்கள் நன்பருக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளாக சேர்ந்தனர்; வம்பை விலைக்கு வாங்கினர்!

வியாபாரத்தில் முழுமுயற்சியுடன் இறங்கினர்; ஆனால், நிலைமை தலைகீழாகியது. துரதிர்ஷ்டவசமாக பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பக்கீருடைய பிரம்பு (தீர்ப்பு) அத்தகையது.

"ஆஹா! தாமு அண்ணா எவ்வளவு அதிர்ஷ்டசாலி, புத்திசாலி! பக்தர்களின் மீது சாயியின் கருணைதான் என்னே! அவருடைய வாக்கின் சத்தியந்தான் என்னே! - (82 லிருந்து 85 வரை நண்பரின் புலம்பல்)

"என்னுடன் இந்தத் துணிகர செயலில் பங்காளியாக சேர்ந்திருந்தால், அவர் பெரும் நஷ்டமடைந்து ஏமாறிப் போயிருப்பார். பக்கீர் சொன்னபடி செயல்பட்டதால் தப்பித்துக்கொண்டார். அவருடைய விசுவாசம் போற்றுதற்குரியது !-

"தாமு பைத்தியம் பிடித்தவர் என்று நான் ஏளனம் செய்தேன். என்னுடைய புத்திசாலித்தனத்தால் எனக்கிருந்த கர்வம் என்னை வீழ்த்திவிட்டது. இதுவே நான் கண்ட அனுபவம். -

"அனாவசியமாக அந்தப் பக்கீரைத் தூற்றுவதற்கு பதிலாக அவருடைய பரிந்துரையை ஏற்றுக்கொண்டிருந்தால், நான் நஷ்டமும் ஏமாற்றமும் அடைந்திருக்க மாட்டேன்". 


Wednesday, 30 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

குழந்தை இனிப்புகளை வேண்டுகிறது; ஆனால், தாயோ தற்கு மருந்துக் கஷாயத்தை புகட்டுகிறாள். குழந்தை அழுதாலும் முரண்டுபிடித்தாலும், தான் கொண்ட அன்பினாலும் அக்கறையாலும் தாய் கஷாயத்தை புகட்டியே தீருவாள்.

கசப்பான கஷாயம் சரியான சமயத்தில் பலனைத் தரும். ஆனால், குழந்தைக்கு கஷாயத்தின் நற்குணங்கள் எப்படித் தெரியும்? தாய்க்குத்தான் தெரியும் கஷாயத்தின் அருமை.

தாமு அண்ணா லாபத்தில் ஒரு பங்கை சமர்ப்பிக்கத் தயாராக இருக்கலாம். ஆனால், பாபா இந்த ஆசைகாட்டலுக்கு மயங்கிவிடுவாரா  என்ன? அவருடைய பிரீதியனைத்தும் சுயநலம் பாராத அன்பும் பக்தர்களின் சேமமும் அல்லவா!

பொன்னையும் பொருளையும் ஓட்டாஞ்சலியாக மதித்தவருக்கு லாபத்தில் பங்கு எதற்காக? ஏழை எளியவர்களையும் திக்கற்றவர்களையும் ரட்சிப்பதற்காகவன்றோ ஞானிகள் அவதாரம் செய்கின்றனர்!

யமம், நியமம் ஆகிய அஷ்டாங்க யோகப் பயிற்சிகளை செய்பவரும், சமம் (பொறுமை), தமம் (புலனடக்கம்) ஆகிய நற்குணங்களை உடையவரும் தாம் உண்மையில் ஞானியாவார். மாயையில் இருந்தும் பொறாமையில் இருந்தும் விடுபட்டு மற்றவர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காகவே வாழ்பவர்தம் ஞானி ஆவார்.

பாபாவுக்கு லாபத்தில் பங்கு கொடுத்துவிடலாம் என்ற தாமு அண்ணாவின் யோசனை அவருடைய ஆழ்மனதில் இருந்த ரகசியமே. ஆயினும், பாபா எல்லாரும் அறியும்படி அவருக்கு அளித்த பதில் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.

ஒவ்வொரு ஜீவனின் மனோகதியையும் (எண்ண ஓட்டத்தையும்) பாபா அறிந்து வைத்திருந்தார். கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரிந்திருந்தது.

தம் பக்தனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. சரியான நேரத்தில் தெளிவான வார்த்தைகளால் பக்தனுக்கு எவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் என்பதைக் கேளுங்கள்.

பாபா பிரேமையுடன் சூசகமாக தெரிவித்தார், "இதோ பாரும், இந்த விவகாரத்தில் எல்லாம் என்னை இழுக்காதீர்".  அருமையான வியாபார பேரத்தை பாபா அனுமதிக்கவில்லை என்று தெரிந்துகொண்ட தாமு அண்ணா மனமுடைந்து போனார்.

இருப்பினும், பாபாவின் சொற்களை கேட்ட தாமு அண்ணா உட்பொருளை நன்கு புரிந்துகொண்டார். மனதளவில் பருத்தி வியாபார பேரத்தை கைவிட்டு விட்டுத் தலைகுனிந்து சோகமாக உட்கார்ந்திருந்தார்.

மறுபடியும் வேறொரு யோசனை தோன்றியது. "அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் வியாபாரம் செய்யலாமா?" இந்த எண்ணத்திற்கு பாபா என்ன பதில் கூறினார் என்று கேளுங்கள்.

"ரூபாய்க்கு ஐந்து சேர் என்று வாங்கி ரூபாய்க்கு ஏழு சேர் வீதம் விற்பீர்!" இந்த வார்த்தைகள் தாமு அண்ணாவை அவமானத்தில் ஆழ்த்தின.

Thursday, 24 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீராமநவமித் திருவிழாவின்போது ஷிர்டியில் இரண்டு அலங்காரமான, பெரிய, புதிய கொடிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதை ஷிர்டிவாழ் மக்கள் அனைவரும் அறிவர்.

இரண்டு கொடிகளில் ஒன்று நானாசாஹேப் நிமோன்கருடைய உபயம்; இரண்டாவது தாமு அண்ணாவுடையது. பக்தியாலும் பிரேமையாலும் விளைந்த இந்த நியமம் தடையில்லாமல் வருடா வருடம் நடைபெற்று வருகிறது.

தாமு அண்ணாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் மக்கட்பேறு இல்லாமலிருந்தது. சாயியினுடைய ஆசீர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திரரத்தினம் பிறந்தான்!

நன்றி தெரிவிக்கும் வகையில், ஸ்ரீராமநவமி விழாவன்று கோலாகலத்துடன்  ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஒரு கொடியை அளிப்பதென்று தாமு அண்ணா உறுதிபூண்டார். அந்த வருடத்திலிருந்தே கொடி எடுத்துக்கொண்டு செல்லும் வருடாந்திர திருவிழாவும் ஆரம்பித்தது.

ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் கோன்யா என்னும் தச்சு வேலை செய்பவரின் வீட்டில் செய்யப்பட்டன. அங்கிருந்து, கொடிகள் ஏந்திய ஊர்வலம் மேளதாளத்துடன் வாத்திய முழக்கங்களுடன் கிளம்பும்.

இரு நீண்ட கொடிகளும் மசூதியின் இரண்டு கோடிகளில் பதாகைகளாக (விருதுக் கொடிகளாக)கட்டப்படும். இவ்விதமாகவே ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப்பட்டது.

அவ்வாறே, அங்கே குழுமிய பக்கீர்களுக்கும் திருப்தியாக உணவளிக்கப்பட்டது. இவ்விதமாக சேட்(தாமு அண்ணா) ஸ்ரீராமநவமி உற்சவத்தில் பங்கேற்றார்.

இந்த தாமு அண்ணாவின் கதையைத்தான் நான் கேட்பவர்களுக்கு நிவேதனம் செய்கின்றேன். கவனத்துடன் கேட்டால் சமர்த்த சாயியின் சக்தியை அறிவீர்கள்.

பம்பாயில் இருந்த நண்பரொருவர் தாமு அண்ணாவிற்கு பின்வருமாறு கடிதம் எழுதியிருந்தார். "நாம் இருவரும் ஒரு கூட்டுவியாபாரம் செய்வோம். நிகர லாபமாக இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும் .-

"நீங்களும் நானும்  சம பங்குதாரர்களாக ஆவோம். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பங்கு கிடைக்கும். சீக்கிரமாக முடிவெடுத்து எனக்கு பதில் அனுப்புங்கள். இந்த பேரம் சிக்கலில்லாதது; பயத்திற்கு இடமில்லை.-

"இம்முறை பருத்தி வாங்கி விற்கலாம். சீக்கிரமாகவே விலை ஏறும். நல்ல பேரம் வரும்போது செயல்படாதவர்கள் பிறகு அதை நினைத்து வருந்துவார்கள்.-

"இம்மாதிரியான ஒரு நல்ல வாய்ப்பை நாம் நழுவவிடக்கூடாது! " அண்ணாவின் மனம் பெருங்குழப்படமடைந்தது. அவரால் இது விஷயமாக முடிவெடுக்க முடியவில்லை!

"இந்த வியாபாரத்தில் நான் நுழையலாமா? கூடாதா?" அண்ணா வியப்படைந்தார். "இறைவா! என்ன நடக்கும்? நான் என்ன செய்யட்டும்? " அவர் குழம்பிப்போனார்.

ஆயினும் தாமு அண்ணா ஒரு குருபுத்திரர் அல்லாரோ! ஆகவே, அவர் பாபாவுக்கு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார். "பாபா, எங்களுக்கென்று சுதந்திரமான மனம் ஒன்று இல்லை. தங்களுடைய குடையின் நிழலிலேயே நாங்கள் வாழ்கிறோம். -