valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 7 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"இதை கவனமாகச் செவிமடுத்தால் உங்களுக்கு மங்களம் உண்டாகும். புனிதமான இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் ஒரு போதும் சத்தியம் இல்லாததை பேசமாட்டேன். "

இதயத்தில் முழுநம்பிக்கையுடன் ஞானிகளின் திருவாய்மொழி என்னும் அமிருதம் பெருகும் ஆற்றில் நீராடினால், எல்லா மலங்களும் கழுவித் துடைக்கப் பட்டு உள்ளும் புறமும் தூய்மை அடையும்".

இதுவே சாயினாதரின் மகிமை; வர்ணிக்க முடியாதது. ஒப்பு நோக்க முடியாத விஷயத்திற்கு எதை உதாரணமாக கூறுவேன்? தூய்மையான பிரேமையினால்தான் அதை அடைய முடியும்.

எல்லாருக்கும் அன்னையாகிய ஆர், துக்கத்தாலும் வலியாலும் அவதிப்படுவர்களுக்கும் வாழ்க்கையில் இன்னல்படுபவர்களுக்கும் அடைக்கலம் ஆவார். தீனர்களுக்கும் பலஹீனர்களுக்கும், குளிர் நிழலும் அடைக்கலமும் தரும் கற்பகத் தருவாவார்.

ஒருவர் ஆன்மீக முன்னேற்றம் கருதி, உலக வாழ்வைத் துறந்து ஏகாந்தமாக தியானம் செய்ய மலைகளுக்கோ பள்ளத்தாக்குகளுக்கோ செல்லலாம்.

அவ்வாறு சுயநலமாக ஆன்மீக லாபம் அடைந்து வெற்றி கண்ட ஞானியர் எத்தனையோ பேர்; ஆனால், அவர்களால் மற்றவர்களுக்கு என்ன பிரயோஜனம்?

சாயி பாபா அத்தகைய மகான் அல்லர். நண்பர்கள், உற்றார், உறவினர், வீடு, மனைவி, மக்கள், குடும்பம் ஆகியன ஏதுமில்லாமல் இருந்தும் அவர் ஜனங்களிடையே வாழ்ந்தார்.

ஐந்து இல்லங்களின் வாயிற் படிகளில் நின்று கையேந்தி பிச்சை எடுத்த உணவை உட்கொண்டு, தம்முடைய உடைமையான ஒரு சில பொருள்களைத் தம்மைச் சுற்றிலும் வைத்துகொண்டு, உலகத்தாருக்கு வாழும் நெறியைப் பயிற்றுவிக்கும் வகையில் எந்நேரமும் ஒரு மரத்தடியில் வாழ்ந்தார்.

தாம் பிரம்ம ஐக்கிய நிலையில் இருந்த  போதிலும், உலக மக்களின் க்ஷேமதிற்காகவும் மங்களத்திற்காகவும் அநேக சிரமங்களை ஏற்கும் பேருள்ளமும் மன்னிக்கும் பெருந்தன்மையும் உடைய இதுபோன்ற சாதுக்களை காண்பதரிது.

இந்த நிர்மலமான ரத்தினத்தை வயிற்றில் சுமந்த அன்னை மஹா புண்ணியசாலி; தூய்மையான பெற்றோர்கள் புண்ணியசாலிகள்; பிறந்த  குலம் புண்ணியம் செய்தது; பிறந்த தேசம் புண்ணிய பூமி.

எம் முயற்சியும் செய்யாமலேயே இந்தத் 'தொட்டதைப் பொன்னாக்கும் ரத்தினம்' அவர்களுக்கு கிடைத்தது; ஆனால், அவர்களோ இதை ஒரு சாதாரனமான கல் என்று தவறாக எண்ணித் தூக்கி எறிந்துவிட்டனர். வெகு காலத்திற்கு ஷிர்டி மக்களுக்கு இப் பரமபாகவதரின் அருமை தெரியாது போய்விட்டது.

சாணக்குவியலில் கிடந்த ஒரு விலைமதிப்பற்ற மாணிக்கத்தைச் சிறுவர்கள் எடுத்து, ஒரு சாதாரணக் கல்லைப்போல் எறிந்து உதைத்து ஏறிநின்று விளையாடுவதை போன்று, ஷிர்டி மக்கள் இம்மாணிக்கத்தின் அருமை தெரியாது இருந்துவிட்டனர். 


Thursday, 31 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"மக்கள், மாடு கன்று , பொருள் தேடுதல், முதலியவற்றிலேயே  மூழ்கிப் போனவருக்கு பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? செல்வம் என்னும் முட்டுக்கட்டையை அகற்றாதவரையில், ஞானம் எப்படிக் கிடைக்கும்?-

"பணத்தாசையை வெல்வது மிகக் கடினம். அது துக்கமும் இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்நதியில் பல பேராசைச் சுழல்களும் திமிர், பொறாமை போன்ற எதிர்த்துப் போராட முடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அதில் இருந்து தப்பிக்க முடியும். -

"பேராசை பிரம்மத்தின் அகண்ட வைரியாகும்; மனக் குவிப்பிற்கோ தியானத்திற்கோ  நேரம் இருப்பதில்லை. பிறகு விரக்தியோ முக்தியோ எங்கிருந்து வரும்? பேராசை பிடித்தவர் ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்லை .-

"பேராசைக்கு சாந்தியில்லை; திருப்தி இல்லை; நிம்மதியில்லை. பேராசை மனதுள்ளே புகுந்துவிட்டால், ஆன்மீக முன்னேற்றத்திற்கு உண்டான அத்தனை கதவுகளையும் மூடிவிடும்.-

"சுருதிகளாலும் ஸ்மிருதிகளாலும் 'செய்யக் கூடாது' என்று விதிக்கப்பட்ட காரியங்களையே  முழுதும் செய்து கொண்டிருக்கும் மனிதருக்கு சாந்திஎன்பதே இருக்காது. -

"இதற்குக் 'குழம்பிய அல்லது பிரமித்துப் போன மனம்' என்று பெயர். புலனின்ப சேற்றில் உழன்று கொண்டு, கெடுதலான செயல்களையே எந்நேரமும் செய்துகொண்டு, தமக்கு எது நன்மை என்று தெரியாமலேயே இம் மனிதர் வாழ்கிறார்.-

"அவர் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் பெறலாம்; ஆயினும் செயல்களின் பலனைத் துறக்காவிட்டால், ஆத்ம ஞானத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீண். ஆருக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது.-

"யார் வந்து எதை வேண்டினாலும், ஞானிகள் முதலில் அவருடைய (ஆன்மீக) அதிகாரத்தையே நோக்குகின்றனர். பிறகு, யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே கொடுக்கின்றனர். -

"இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப் போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப் போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப் போகிறார்; ஆன்மீக வாழ்விலும் தோற்றுப் போகிறார்.-

"இதயத்தை தூய்மை செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞான கர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி .-

"ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்; எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே.-

"என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன். -


Thursday, 24 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்
ஆத்மா ஞானம் தரும் தீரமாகிய மலையை, உலக வாழ்வின் இன்னல்கள் மற்றும் துக்கங்களாகிய கற்கள், எத்தனை உருண்டு வந்து தாக்கினாலும் ஓர் இம்மியும் நகர்த்த முடியாது.

இறைவன் எவர் மீது சந்தோசம் கொள்கிறாரோ, அவருக்குப் பற்றறுக்கும் மனோபாவத்தை அளிக்கிறார். விவேகத்துடன் சீர்தூக்கிப் பார்க்கும் திறமையேனும் சக்தியையும் ஊட்டுகிறார். சம்சாரக்கடலை பத்திரமாக தாண்ட வைக்கிறார்.

எவருடைய ஆத்ம தரிசன நாட்டம் கண்ணாடியில் தெரியும் முகம் போலத் தெளிவாக இருக்கிறதோ, அவர் ஒன்று பூலோகத்தில்  வாழ்வார்; அல்லது பிரம்ம லோகத்தில் இருப்பார். மூன்றாவதான இடம் என்பது அவருக்கு இல்லை.

தேவர்களை திருப்தி செய்யும் யாகங்களையும் ஹோமங்களையும் செய்யின், பித்ருலோகம் கிடைக்கும். செய்பவர் கர்மபலன்களை நன்கு அனுபவிப்பார்; ஆனால், ஆத்மா ஞானம் கிடைக்காது.

கந்தர்வ லோகம், மகா லோகம், ஜன லோகம், தப லோகம், சத்யா லோகம் ஆகிய லோகங்களில் கிடைக்க கூடிய ஆத்ம ஞானம் தெளிவில்லாததும் மங்கலானதும் ஆகும். ஆகவே ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள் பூலோகத்திலேயே தாங்கள் விரும்பும் வரை வாழ வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

ஏனெனில் இங்கே சித்தம் சுத்தமடைந்து, புத்தி கண்ணாடியைப் போல் நிர்மலமாகி, உண்மையானதும் புனிதமானதுமான ஆத்மா சொரூபத்தை பிரதிபலிக்கிறது.

ஆத்ம தரிசனம் பிரம்ம லோகத்தின் இரண்டாவது நிலையிலும் கிடைக்கும். ஆனால், அங்கு அநேக ஆயாசமான, கஷ்டங்களை விளைவிக்க கூடிய பயிற்சிகள் தேவைப்படும்.

மாயை, ஒரு மலைப் பாம்பைப்போல் உடலைச் சுற்றிக் கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்தில் இருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்து விடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது?

"நான் கேட்ட ஐந்து ரூபாயைப் போல ஐம்பது மடங்கு வைத்துக் கொண்டு, எதிலுமே சம்பந்தபடாதவர்போல் அங்கு உட்கார்ந்து இருக்கிறீர்! அதை இப்பொழுது வெளியே எடும்! அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறது!"

பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை  எடுத்தார்; இருபத்தைந்து பாத்து ரூபாய் நோட்டுகளை எண்ணினார்.

மனதின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிபோனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.

பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், "உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக் கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது.- 


Thursday, 17 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு தூய்மை எய்திய மனத்தில் விவாகமும் வைராக்கியமும் பிறக்கின்றன. பிரம்ம ஞானம் அடைவதற்குத் தேவையான சாதனை சம்பதுக்களான சமம், தமம், ஆகியவையும் பிறகு தோன்றும். இவ்வாறாக, உடலில் உயிர் இருக்கும்போதே முக்திநிலையும் கைக்கு எட்டுகிறது.

செயல்களின் பலனைத் துறந்துவிட்டவர், சங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர், ஒருமுனைச் சித்தம் எய்தியவர், குருவிடம் சரணமடைந்து விட்டவர், சத்குருவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.

புறவுலகச் செயல்பாடுகள் அனைத்தையும் சூனியமாக்கிவிட்டு, வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர் ஆத்மா ஞானத்தை பெறுவார். வேறெந்த உபாயமும் அங்கே பிரயோஜனப்படுவதில்லை.

அவ்விதமாக ஞானம் பெற்ற பிறகும் அவர் அதர்மாமன மார்க்கத்தில் இறங்கினால் அவர் பூமியிலும் இல்லாமல் சுவர்க்கத்திலும்  இல்லாமல் திரிசங்கு போல் மாட்டிக் கொள்வார்.

ஜீவனுடைய அஞ்ஞானமே அவனை சம்சாரப் பிரவிருத்தியில் இழுக்கிறது. ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால் சம்சாரத்தில் இருந்து நிவிர்த்தி ஏற்பட்டு விடும். அவர் இந்த உலகத்தில்தான் வாழ்கிறார். ஆனால், இவ்வுலத்தைச் சார்ந்தவரல்லர்.

ஆத்ம ஞானம் அடைந்தவர் எந்நேரத்திலும் அஹம்பாவத்திற்கு இடங்கொடுக்க மாட்டார். அவருக்கு, தர்மம் / அதர்மம் - சுபம் / அசுபம் - எதுவமே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவருக்கு ஹிதமானது எது, ஹிதமில்லாதது எது?

தேஹம் பற்றிய அஹங்காரம் நசித்துவிட்டால், பற்றற்ற மனோபாவம் விரைவில் வந்திறங்கி விடுகிறது. இதுவே இறைவனுடன் ஒன்றிய நிலை என்பதை நிச்சயமாக அறிக.

நண்பனும் பகைவனும் பிரவிருத்தி மார்க்கத்தில்தான் (செயல் நிறைந்த உலக வாழ்க்கை) உண்டு. நிவிர்த்தி மார்க்கமோ விசித்திரமானது. தன்னையே எல்லாவற்றிலும் எப்பொழுதிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டபோது, நட்பேது, பகையேது?

இந்த மகா சுகத்தின் முன்னர் உடலின் கடுமையான உபாதிகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த சுகம் கிடைத்த பிறகு நிலையில்லாத உலக சுகங்களுக்காக கண்ணீர் விடுபவர் யார்? 


Thursday, 10 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

மனதின் மீது முழுக்கட்டுப்பாடு உடைய விவேகமுள்ள புத்தியாலும் ஒருமுனைப்பட்ட சித்தத்தாலும் ஆட்சி செய்யப்படும் மனிதனே பரம பதத்தை அடைவான். மற்றவர்கள் வழியிலேயே சோர்ந்து வீழ்வார்கள்.

சதா கட்டுப்பாடில்லாத மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடைய மாட்டான்; அந்தப் பதவியையும் (பரமபதம்) அடையமாட்டான்; சம்சாரச் சுழலில் இருந்தும் அவனால் விடுபட முடியாது.

எங்கிருந்து இதைப் பெறுவது என்ற சந்தேகத்தையும் கேள்விகளையும் தீர்த்து வைத்துத் தானாகவே மிகச் சிறந்த பரமபதம் தோன்றுகிறது.

இங்கே தர்க்க வாதமும் சப்பைக் கட்டு வாதமும் சொற்கேள்வியும் உரையாடலும் உதவா. இறைவனுடைய அருளால்தான் தடங்கல்கள் விலக்கப்படுகின்றன. வாதங்கள் அனைத்தும் வியர்த்தமே.

தர்க்க வாதத்தின் சாமர்த்தியம் இங்கே செல்லுபடியாகாது. மெத்தப் படித்த தர்கா சாஸ்திர பண்டிதரும் திக்குமுக்காடிப் போகிறார். கபடமில்லாத, கேள்வி எழுப்பாத விசுவாசமே இங்கு வெற்றியடைகிறது. அற்புதம் இதுவே!

ஆத்ம ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை வித்தியாசமானது; புத்தியும் வித்தியாசமானது. அதைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய சாஸ்திர பண்டிதரும் வித்தியாசமானவர். இது ஞாபகத்தில் இருக்கட்டும்.

விலை மதிக்க முடியாத மனித உடல், எதற்கும் உபயோகமில்லாத உளுத்துப் போக அனுமத்திக்கபடுகிறது. பணத்தாசை என்பது உச்சி வெயில் நிழலைப் போலக் கண்டறியக் கஷ்டமான விஷயம். ஹரியின் மாயையை வெல்வது கடினம். ஈதனைத்தையும் அறிந்து, ஞானிகளின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும்.

ஞானிகள் பிறவிக் கடலைக் கடக்க உதவும் கப்பலாவர். இக் கப்பலில் ஒரு பிரயாணி ஆகிவிடுங்கள். வேறு எவருக்கு நம்மை அக்கரை சேர்க்கும் சாமர்த்தியம் இருக்கிறது?

களிமண் புத்தியுடைய மூடனாயினும் சரி, விவேகமும் வைராக்கியமும் இருந்தால், பிறவிக்கடலை கடப்பது சிரமமாக இராது.

இறைவனின் குணங்களான ஆறு ஐசுவரியங்களில் முதலானதும் மிகச் சிறந்ததுமான ஐசுவரியம் பற்றற்ற நிலையே. பெரும் பாக்கியம் செய்தவர்களை தவிர, வேறு எவரும் இதில் பங்கு எதையும் எதிர்பார்க்க முடியாது.

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய்யாது சித்தம் தூய்மை அடையாது. சித்தம் தூய்மை அடையாதவனால் ஞானத்தை சம்பாதிக்க முடியாது என்று அறியவும்.

ஞானம் அடைவதற்கு மூலகாரணம் கர்மங்களை செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். பூஜை, உபாசனை போன்ற நித்திய கர்மாக்களையும் சிறப்பு நாள்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனதில் உள்ள மலத்தைக் கழுவித் தூய்மை அடையும் ஒரே வழி. 

Thursday, 3 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது - இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே, அவற்றை முதலில் ஒழிக்கவும்.

எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்த பின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பி விடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக் கூட வைத்து ஊன்ற முடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.

ஞானம் பெறுவைதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் சமாதி நிலைமையையும் அடைய விடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனதின் வியாதிகள்.

கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளி விடுமா? இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகி விடுகிறது.

விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவசெயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?


அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனதுடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?

சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கை சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்பேச்சு சாமர்த்தியம் என்ன சாதித்து விட முடியும்?

ஆகையால், வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமே இல்லை; சாரம் அப்பியாசமே (பயிற்சியே) ! நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.

இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனதுடன் எஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.

வெற்றி பெறுவதற்குச் சிரமமானவையும், பரம்பரையாக வருவனமாகிய புலனின்ப நாட்டங்களை கடந்து செல்லத் தேரோட்டிகு வழி காட்டவும். பத்து இந்திரியங்களையும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களை உம்முடைய மனம் கட்டுப்பாடு செய்யட்டும். (கர்மேந்திரியங்கள் 5 + ஞானேந்திரியங்கள் 5)

குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுபாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களை தேரோட்டியிடம்(புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும்.

தேரோட்டி நிபுணவாகவும் சாமார்தியசாலியாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனதின்) பிடியில் மாட்டிகொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும். 


Thursday, 26 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இரண்டையும் சீர் தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமான செயல், மந்தப் புத்திகாரனை புலனின்பங்கள் வென்று விடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆலிங்கனம் (தழுவதல்) செய்து கொள்கிறது.

தண்ணீர் கலந்த பாலில் பாலை மற்றும் பிரித்தெடுக்கும் அன்னத்தைப் போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.

ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையே ஆயினும், மந்த புத்தி படைத்த விவேகமற்ற  மனிதன் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.

வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப் படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றி பெற முடியும்.

இங்கேதான் மனிதன் சக்தி மிகுந்ததும் உறுதி படைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனதில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.

வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாதது! அது இரவு பகலாகச் சுழன்றுகொண்டே மூவகை இன்னல்களையும் மனிதனுக்கு அளித்து கொண்டிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது.

அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களில் இருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.

காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்க முடியாத நிலையை அடையும்போது, "இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?" என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயச்சி செய்கிறான்.

ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப் போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, சாதகன் தன்னுடைய நன்மை கருதி இலட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை கையாளுகிறான்.

அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்சலில் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்று காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாக தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெரிய வேண்டும்.

கனவில் ஆலங்கட்டி மழை பொற்காசுகளாகப் பொழிகிறது! தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெரு முயற்சி எடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய் விடுகிறது.