valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 22 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஆத்மா நித்தியமானது; மாறுபாடு அடையாதது. தன்னையறிந்தவர் எதற்கும் சோகப்படமாட்டார். அவர் மகா தைரியசாலி; மகா புத்திமான்; பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றவர்.

பிரசங்கம் செய்யகூடிய சக்தியும் யுக்திகளும், புத்தகங்களைப் படித்து அர்த்தங்களை புரிந்து கொள்ளும் சக்தியும் இங்கே செல்லுபடியாகாது; வேதங்களில் இருந்தும் உபநிஷதங்களில் இருந்தும் அறிந்துகொண்டே ஆழ்ந்த ஞானமும் ஆத்மாவைப் பற்றி எதையும் விவரிக்க முடியாது.

ஆத்மா நித்தியமானது; மாறுபடாதது. சரீரம் அநித்தியமானது. ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக் கொண்டே இருப்பது. இதையறிந்து, தம்முடைய நன்மைக்காகப் பாடுபடும் எது விதிக்கப் படாதது, எது விதிக்கப்பட்டது என்பதை அறிந்து தம்முடைய செய்கைகளை செய்வார்.

ஆத்ம ஞானி சதா நிர்ப்பயமானவர். தன்னைத் தவிர வேறொன்றுமே  இல்லை என்பதை நன்கறிந்தவர். துவைத பாவனை முழுமையாக அழிக்கப்படும்போது, சோகமும் நிச்சயமாக அழிந்துவிடும்.

ஆத்மாவை அறிந்து கொள்வது கஷ்டமான காரியமாக இருப்பினும், பிரசங்கங்களை கேட்டுப் புரிந்துகொள்ள முடியாததாயினும், கேவலம் மேதை இங்கு பிரயோஜனப் படாதாயினும், சுலபமாக அறிந்து கொள்ளும் உபாயங்களும் உண்டு.

எவர் எல்லா ஆசைகளையும் தவிர்த்துவிட்டு, ஆத்மஞானம் அடைய வேண்டும் என்னும் ஒரே விருப்பத்துடன் சதா ஆத்மாவை இறைஞ்சுகின்றாரோ, அவரே இம் மேன்மையான லாபத்தை அடைவார்.

'எனக்கும் இறைவனுக்கும் பேதமில்லை' என்னும் கருத்தை எந்நேரமும் மனத்தில் நிலை நாட்டியவருக்கு ஆத்மா அனுக்கிரஹம் செய்யும். கதாகீர்தனங்கள் கேட்கும்போதும் தியானம் செய்யும்போதும் 'நானும் இறைவனும் ஒன்று' என்று தமக்கு தாமே அவர் சொல்லிக் கொள்வார்.

பாவ காரியங்களில் இருந்து விடுபடாதவன், பந்தப் பட்டவன், சாந்தியில்லாதவன், தியான சக்தி இல்லாதவன் இந்த ஞானத்தை அடைய முடியாது. 

சுருதிகளின்படியும் (வேதங்கள்) ஸ்மிருதிகளின்படியும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வாழ்க்கை நடத்தி, அவற்றால் செய்யக் கூடாது என்று  விதிக்கப்பட்ட காரியங்களை விலக்கி, எந்நேரமும் தியானத்தில்  மூழ்கியவருக்குள் ஆத்மா ஞானம் பொதிந்து கிடக்கிறது.

எவர் பாவச் செயல்களை விலக்கி விட்டவரோ, எவர் குருவின் பாதங்களில் வினயத்துடன் பணிந்து கிடக்கிறாரோ, எவர் செயல்களின் பலனைத் துறந்துவிட்டவரோ, அவருக்குதான் ஆத்மா ஞானம் கிடைக்கும்.

உலக பந்தங்களில் இருந்து விடுதலை அடையாமல், எல்லா விருத்திகளையும் (பிழைக்கும் வழிகளையும்) விட்டுவிடாமல், ஆத்ம ஞானம் அடைவது நடக்காத காரியம்.  

Thursday, 15 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சத்குருவின் பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவார்.

அஞ்ஞானம் அழிக்கப்பட்டு சச்சிதானந்த சொரூபத்தில் நிலைத்துவிட்டால், தன்னை அறியும் நிலை உதயமாகிறது. இந்த நிலைக்கு மோக்ஷம் என்பது மற்றொரு பெயர்.

இதுவே ஜீவனின் அத்தியந்தமான லட்சியம். இதை அடைவதற்காகவே பிரம்ம யோகிகள் பலவிதமான இன்னல்களை கடந்து வந்து தம்மிலேயே மூழ்கியிருக்கின்றனர்.

ஆத்மாவிலிருந்து விலகிச் செல்பவர் உலகவிஷயங்களின் சுழலில் மாட்டிக் கொள்கிறார். ஆத்மாவிலேயே நிரந்தரமாகவும் நிச்சலமாகவும் மூழ்கியவருடைய புலனின்ப நாட்டம் நசித்துப் போகிறது.

தம்முடைய உண்மையான சொரூபத்திற்கு முகத்தை திருப்பிக்கொண்டு செல்பவருக்கு உலகவிவகாரங்கள் இன்முகம் காட்டுகின்றன. ஆறே உண்மையான சொரூபத்திற்கு இன்முகம் காட்டினால் உலகவிவகாரங்கள் அவரிடமிருந்து ஓடி விடுகின்றன.

மோக்ஷத்தை தவிர வேறெதையும் மனதில் கொள்ளாதவரே, இவ்வுலகத்திலோ பரவுலகத்திலோ வேறெதையும் விரும்பாதவரே, மோக்ஷம் அடைவதற்கு அதிகாரியாவார்.

இந்த லக்ஷணங்களில் ஒன்றே ஒன்று குறைபட இருப்பினும், அவர் உண்மையான இறைநாட்டம் உடையவர் அல்லர் என்பதைத் தெளிவாக அறியவும். ஒற்றை கண்ணுடைய பார்வை போன்று அவர் இறைநாட்டம் உடையவர் போல் பாசாங்கு செய்கிறார்.

அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப் படாதவரையில் மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்து போகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது.

தேஹந்தான் நான் என்று நினைப்பது ஒரு பிராந்தி (மயக்கம்). எவ்விதமான விருப்பமும் ஒரு பந்தமே. உலக விஷய கற்பனைகளையும் ஞாபகத்தையும் விட்டு விட்டால் பிரம்ம ஞானம் பெறலாம்.

குணங்களும் உருவமுமற்ற பிரம்மத்தை காண்பதரிது. ஆகவே, உருவமெடுத்த, குணமுள்ள பிரம்மத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை வழிபடுவதையே அறிவாளிகள் தருமநெரியாகக் கருதுகிறார்கள்.

ஆத்மா எல்லா உயிர்களிலும் மர்மமாகவும் சூக்குமமாகவும் உறைகிறது என்று வேதாந்திகள் அறிவர். எல்லாருமே உள்ளுணர்வாக அறியும் இவ்வுண்மைக்கு மறுக்க முடியாத நிரூபணம் கேட்டால் எங்கிருக்கிறது?

முதலாவதாக, சித்தம் சுத்தமடைய வேண்டும்; அதற்கும் மேலாக, புத்தி தர்ப்பையின் நுனி பொண்டு சூக்குமமாக கூர்மையாக வேண்டும். அப்பொழுதுதான் மூற்று நிலைகளிலும் தூயதான ஆத்மா கிருபைகொண்டு தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும்;   




Friday, 9 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

குருவின் திருவாய்மொழியிலும் சாஸ்திரங்களிலும் ஆழ்ந்த நம்பிக்கை வளர, வளர, மனதாலும் உடலாலும் செயல்புரியும் நாட்டம் குறைந்துகொண்டே போகிறது. ஆத்மாவை அறிவதற்காக செய்யும் முயற்சிகள் லாபமளிக்கின்றன.

அப்பொழுதுதான் 'ஒன்றாகக் காணும் காட்சி' கிடைக்கிறது. சடப்பொருள்களிலிருந்தும்  புலனின்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது. ஹிருதயத்தின் அஞ்ஞான முடிச்சுகள் அவிழ்ந்து, சாதகர் தோன்றாநிலையில் இருக்கும் இறைவனுடன் கலந்துவிடுகிறார்.

ஒளிக்கீற்றிலிருக்கும் சூக்குமமான அணுவைவிட சூக்குமமானது ஆத்மா. இதுவே ஆத்மாவைப் பற்றிய அனுமானமும் நிர்தாரனம்மும்.

ஆத்மா மிகப் பெரியதை விட மிகப் பெரியதான பிரம்மாண்டத்தை விடப் பெரியது. ஆயினும் இதெல்லாம் உபமானப் பிரமாணங்களே; ஆத்மா அளவிடமுடியாதது.

சூக்கும தத்துவத்தில் ஆத்மா 'அணுவிற்கும் அணுவானது'. மஹத் தத்துவத்தில் ஆத்மா 'பெரியதினும் பெரியது'. நாமமும் ரூபமும், கேவலம் பேதபடுத்திப் பார்க்கும் அறிவு. ஆத்மாவோ பேதமே இல்லாதது. பரிபூரணமானது.

ஆத்மாவுக்கு ஜனனமில்லை; மரணமில்லை; மூலகாரணமில்லை. ஆத்மா பிறக்காதது. நித்தியமானது; சாசுவதமானது; புராதானமானது. ஆத்மாவை சுலபமாக நிர்த்தனம் செய்ய முடியாது.

பிரம்மத்தின் சின்னமாகிய ஓங்காரமே அத்மாவினுடைய பரம் சொரூபம். ஆகமங்களும் நிகமங்களுமே அதை சுலபமாக புரிந்துகொள்ளவில்லை; எல்லாரும் சுலபமாகப் புரிந்துகொள்ளகூடிய விஷயமா என்ன?

ஆத்மாவைப் புரிந்துகொள்ள முயன்ற வேதங்கள் சோர்ந்து போயின; தவசிகள் வனத்திற்கு போனார்கள்; உபநிஷதங்கள் கையை விரித்துவிட்டன. அதை இன்னதென்று கண்டுபிடிக்க யாராலும் முடியவில்லை.

ஆத்மாவின் சொரூபத்தை அறிந்துகொள்ள, முழுமுதற் பொருளும் ஆத்மாவும் ஒன்றே என்பதை தரிசனம் செய்த ஆசாரியர் (குரு) ஒருவர் தேவை. தர்க்க சாஸ்திர நிபுணர்களும் இங்கு நுழைய முடியாது என்னும் நிலையில், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

கேவலம் தர்க்க சாஸ்திர பண்டிதர்களுக்கு இங்கு இடமே இல்லை; அவர்களுடைய குழம்பிய மனம் ஏற்படுத்தும் சூழலிலேயே மாட்டிக் கொண்டு சுற்றி சுற்றி வருவார்கள்.

நாமே கற்பனை செய்துகொள்ளும் எண்ணற்ற நக்ஷத்திரங்களும், நம்மை 84 லட்ச ஜனன மரணச் சுழல்களில் இருந்து விடுபட வைக்க முடியாது.  'ஆகமமும் ஆசாரியனும்' என்னும் ஒரு சந்திரனே போதும்; அஞ்ஞானம் லவலேசமும் இல்லாதது அழிந்துவிடும்.  


Thursday, 1 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டது; ஆகாயத்தைப் போன்று கடக்க முடியாது; வேறெதையும் சாராதது; தூய்மையானது. ஓம் எனும் பிரணவமே அதற்கு ஆதாரம்.

அறிய வேண்டியது பர பிரம்மம்; அடைய வேண்டியது அபர பிரம்மம் (உருவமெடுத்த கடவுள்); அதனுடைய சின்னமாக எப்பொழுதும் தியானிக்கப் பட வேண்டியது ஓம்.

எது வேதங்களால் நிர்ணயிக்கப்பட்டதோ, எது பிரம்மச்சரியத்தாலும் மிகத் தீவிரமான பிரயதனங்களாலும் அடையப்படுகிறதோ, அதுவே ஓம் எனும் பிரணவத்தின் உயர்ந்த நிலை.

ஆயினும் இந்நிலைக்கு உயர்வதென்பது மிகக் கடினமாகும். எவர் நன்கு அப்பியாசம் செய்கிறாரோ அவருக்கு குருவின் கிருபை கிடைக்கும்போது இந்நிலை சுலபமாக எட்டிவிடுகிறது.

ஓய்வடையாத சாதகர், தூலமான உடலின் பல அங்கங்களில் ஆரம்பித்துக் கடினமான பயிற்சிகளால் இக சூக்குமமான தாரதம்மியம் (ஒப்பு வித்தியாசம்) தெரிந்த பக்குவத்தை அடையும்போது இந்நிலை சித்தியாகிறது.

வாயினால் ஓத வேண்டிய சப்தமான ஓம் எனும் அக்ஷரம் எல்லாத் தவங்களின் சாரமாகும். உச்சாரணம் செய்தால் தன்னுடைய பொருளின் சாரத்தை உணர்விக்கும். பல ஆவர்த்தங்கள் (சுற்றுகள்) ஜபம் செய்தால் இறைவனை காட்டும்.

வளர்ச்சியோ அழிவோ மாற்றமோ அடையாத, எங்கும் நிறைந்த, சைதன்யமான ஆத்மாவை அறியும் சத்குருவின் அனன்னிய (வேறெதையும் நாடாத) பக்தன் மகா பாக்கியசாலி.

ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்னும் மூன்று தாபங்களால் சதா தவிப்பவன் எவ்விதம் அந்த பாக்கியத்தை அனுபவிப்பான்? அது ஞானிகளுக்கே உண்டான வைபவம்.

அஞ்ஞானத்தால் பிறப்பு இறப்பென்னும் சுழற்சி ஏற்படுகிறது. தானும் பிரம்மமும் ஒன்றே என்ற ஞானத்தல்தான் இதிலிருந்து விடுபட முடியும். இதை ஞானிகளின் மூலமாகத்தான் அடைய முடியும்.

உலக விஷயங்களையும் கற்பனைகளையும் சூன்யமாக்கிவிட்டு, 'நான் பிரம்மமாக இருக்கிறேன்' என்னும் வேதமஹா வாக்கியத்தை பல ஆவிருத்திகள் ஜபம் செய்தால் புத்திக்கு அதுவே தொழிலாகிவிடுகிறது. 


Thursday, 24 September 2015


ஷிர்டி சாயி சத்சரிதம் 

துவைத பாவமே இல்லையென்றால் யார் கட்டுகிறார், யார் விடுதலை அடைகிறார்? துவைத பாவனை அத்வைத பாவனையால் மறைந்துவிடும்போது, அங்கு எவரும் கட்டுண்டில்லை; எவரும் விடுதலை செய்யப்படுவதும் இல்லை.

பகலும் இரவும் சூரியனால் உற்பத்தி செய்யப்படுபவையா என்ன? அது நம் பார்வையின் தோஷத்தினால் ஏற்படும் விவகாரம். சூரியன் எங்கோ இருக்கிறது; நம்முடைய பார்வையால் பாதிக்கப்படுவதில்லை.

சுவர்க்கத்தின் இன்பங்களும் நரகத்தின் இன்னல்களும் 'நானே கர்த்தா, நானே போக்தா (அனுபவிப்பவன்) என்ற உணர்வோடு அனுபவிக்கப்படும்போது ஆசைகளின் மீதுள்ள பிடிப்பு அதிகமாகிறது;

ஆத்மா நித்தியமானது; புராதனாமானது; அழிவே இல்லாதது; ஆத்மாவிற்கு ஜனனமரணங்கள் கிடையாது. ஓங்காரமே அதனுடைய சின்னம். அது ஆரம்பமும் முடிவுமில்லாதது. எப்பொழுதும் நிலைத்திருப்பது.

எவர் சரீரத்தையே ஆத்மாவென்று நினைக்கிறாரோ, தாம் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று நினைக்கிறாரோ, அவருக்கு எவ்வளவு முயன்றாலும் ஆத்ம அனுபவத்தால் கிடைக்கும் ஞானம் என்றும் கிடைக்காது.

பேச்சு மற்றும் எல்லா இந்திரியங்களையும் வென்று விடு; மனதில் உறுதியை ஏற்றுகொள்; மனதின் அனிச்சை செயல்களை அழித்துவிடு; புத்தியை உறுதியாக பற்றிகொள்.

புத்தி ஒளிமயமான ஞானத்தை அளிக்கிறது. அதன்மேல் தான் மனம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், மனம் உட்பட எல்லா இந்திரியங்களும் புத்தியினுடைய ச்வாதீனதில்தான் இருக்கின்றன.

குடத்திற்கு ஆதிகாரணம் களிமண்ணே; அதே ரீதியில்தான் இந்திரியங்களுக்கு புத்தியும். புத்தியே இந்திரியங்களின் சாசுவதமான நிலையாகும். புத்தியினுடைய வியாபகம் அவ்வளவு பெரியது.

எங்கும் வியாபித்திருக்கும் சக்தியால், அது, மனம் உட்பட்ட எல்லா இந்திரியங்களையும் வியாபித்துவிடுகிறது. ஆகவே, புத்தியை மஹத் தத்துவத்தில் (எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச உணர்வு) கொண்டு போய்ச் சேர்த்துவிடு; மஹத் தத்துவத்தை ஆத்மாவில் சமர்ப்பணம் செய்துவிடு.

இவ்வாறு அனைத்தையும் ஒன்று சேர்த்துவிட்டால், ஆத்மஸ்வரூபம் நிர்த்தாரணம் ஆகிறது (உன்னையே நீ அறிகிறாய்). அதன்பிறகு, கிளிஞ்சலில் காணப்படும் வெள்ளியும், பாலைவனத்து மணலில் தெரியும் கானல் நீரும், கயிற்றில் இருக்கும் பாம்பும் நம்முடையை பார்வையிலுள்ள கோளாறே என்பது தெரிந்தவிடும்.

ஜனன மரணம் இல்லாததும் விசேஷங்கள் ஏதும் இல்லாததும் முழுமையானதுமான ஆத்மாவை, நம்முடைய நன்மைக்காக நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று சாதுக்கள் கூறுகின்றனர்.

எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் இவ்வுலகில் உண்டு; ஆனால், ஆத்மா காரணமற்றது; சுயம்பு (தான்தோன்றி). ஆத்மா புராதான மானதாயினும் புதியது; கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று ஏதுமில்லாதது; சுபாவத்தினால் புத்தியற்றது;-


Thursday, 10 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

'எது நியாயம், எது அநித்தியம் என்னும் விவேகத்தை விடச் சிறந்த, உன்னதமான வழி வேறேதும் பிரம்மத்தை அடைவதற்கு இல்லை.' இது சத்தியமான வேதாந்த வசனம். ஆயினும் அம்மாதிரியான விவேகம் எல்லாருடைய சக்திக்கும் உட்பட்டதா என்ன?

சிரமமான அப்பியாசங்களாலும் கடினமான பயிற்சிகளாலும் உடலை எலும்புக் கூடாகத் தேய்க்க வேண்டும். அதன் பின்னரே குருவின் அருள் என்னும் ஒளியால் விவேகம் மெதுவாக உதயமாகும்.

எப்பொழுது நான்முகன், 'நான் ஈசுவரன், நான் அனைத்தையும் நிர்வகிப்பவன்' என்று நினைத்து தம்முடைய உண்மையான நிலையை மறந்துவிடுகிறாரோ, அப்பொழுதே இப் பிரபஞ்சம் சிருஷ்டி செய்யப்படுகிறது.

ஆனால், 'நானே பிரம்மமாக (முழு முதற் பொருளாக) இருக்கிறேன்' என்ற ஞானம் உதிக்கும்போது, அறிபவர் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறார். அக்கணமே இப் பிரபஞ்சமென்னும் மாயை தூக்கி எறியப்படுகிறது. இங்ஙனம் வேதங்கள் மொழிகின்றன.

எப்பொழுது ஒருவர் பிரம்மத்துடன் ஐக்கியமான உணர்வுடன் 'தன்னை அறிந்து' கொள்கிறாரோ, அப்பொழுது இப்பிரபஞ்சம் பிரம்மமாகிய அக்கினிக்கு ஆஹுதி (படையல் ) ஆகி விடுகிறது. அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சம் சாம்பலாகிப் போகிறது.

மற்ற ஜீவன்களுக்கும் இதே நிலைதான். அவர்களுடைய பிரமைகள், சூரிய ஒளி வந்த பின் பாம்பு மற்றும் வெள்ளி போன்ற இருட்டு நேர பிரமைகள் விலகுவது போன்று, உடனே விலகிவிடுகின்றன. (கயிறு பாம்பாகவும் கிளிஞ்சல் வெள்ளியாகவும் தெரிவது பிரமை)

கிளிஞ்சல் என்று தெரியாத அறியாமை, வெள்ளியோ என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது. வெள்ளியைப் பற்றிய உண்மயான ஞானம், நாம் பார்த்தது கிளிஞ்சல்தான் என அறிந்து கொள்ள வைக்கிறது. அந்தக் கணத்தில் வெள்ளி என்னும் மாயை மறைந்து கிளிஞ்சல் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிகிறது.

அஞ்ஞானத்தால் ஒன்றை மற்றொன்றாக அறியும் நிலைமை இது. ஞான தீபத்தை தேய்த்து துலக்கி சுத்தம் செய்து அஞ்ஞான மலத்தை அகற்றுங்கள். எல்லா பிரமைகளையும் ஒழிந்துவிடும்.

பிறப்பு, இறப்பு, என்னும் பந்தங்கள் இல்லையென்றால் மோக்ஷத்திற்கு நிர்ப்பந்தம் என்ன இருக்கிறது? வேதாந்தத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிரபந்தம் (நூல்) எதற்காக?

'நான்  கட்டுண்டிருக்கேன்; விடுதலை பெற வேண்டும்;" என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருப்பவரே பிரம்ம ஞானம் தேடுவதற்கு அதிகாரியாவார்; சுத்தமான அஞ்ஞானியோ அல்லது முற்றும் உணர்ந்த ஞானியோ அதிகாரி அல்லர்;

கட்டுகளே இல்லாத போது எதிலிருந்து விடுதலை பெறுவது? இதுவே வாஸ்தவமான நிலைமை. முக்குணங்களின் சம்பந்ததாலேயே பந்தமும் முக்தியும்; இதுவே அனைவருடைய அனுபவமும்.   


Thursday, 3 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஐந்து ரூபாய் என்ன பெரிய தொகை அவருக்கு? அதைகூடக் கடனாக கொடுக்க அவருக்கு மனமில்லை. பாபாவுக்கு அச் சிறிய தொகையை கொடுக்க மனமில்லாத அவர், வாஸ்தவத்தில் பேராசையின் வடிவமே.

அவரே பாபாவிடம் அன்புகொண்ட, கள்ளங்கபடமற்ற, விசுவாசமுள்ள அடியவராக இருந்திருந்தால், தம்முடைய கண்ணுக்கு எதிரிலேயே இந்தக் கடன் வாங்கிக் கடன் கொடுக்கும் காட்சியை சகித்துக்கொண்டு இருந்திருக்கமாட்டார்.

பிரம்ம ஞான தாஹம் அவ்வளவு இருந்தவர், கேள்வியைப் புரிந்துகொண்டிருக்க மாட்டாரா? இல்லை, நான் அவ்வாறு நினைக்கவே இல்லை! செல்வத்தின் மீதிருந்த மோஹம் அவரை ஆட்கொண்டு விட்டது.

இந்நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அவர் வெருமனெயாவது உட்கார்ந்திருக்கலாம்! அதுவும் இல்லை! திரும்பிச் செல்வதற்கு இருந்த அதீதமான (அதிகமான) அவசரத்தில் பொறுமையை இழந்து சொன்னார், "ஓ பாபா சாயி, பிரம்மத்தை எனக்கு சீக்கிரம் காட்டுங்கள்!"

பாபா அப்பொழுது சொன்னார், "நீர் இருந்த இடத்திலேயே பிரம்மத்தை உமக்குக் காட்ட நான் பல முயற்சிகள் செய்யவில்லையா? இதிலிருந்து  நீர் ஒன்றுமே புரிந்து கொள்ள வில்லையா?"

பிரம்மத்தை நாடுபவர் , பஞ்சப் பிராணன்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் ஐந்து கர்மேந்திரியங்களையும் அஹங்காரத்தையும் புத்தியையும் மனதையும் (பிரம்மத்திற்கு) சமர்ப்பணம் செய்து விட வேண்டும்.

பிரம்ம ஞானம் தேடும் பாதை கஷ்டமானது; எல்லாராலும் சுலபமாக அடைந்து விட முடியாது. பாக்கியசாலிக்கு நல்ல நேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னையே திடீரென்று வெளிப்படுத்திக் கொள்கிறது.

எவன் பற்றற்றருத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகி விடுவதைப் பற்றியும் கூடப் பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன் எதிலும் பற்றில்லாதவன்.

லவலேசமும் பற்றறுக்கும் சுபாவமும் இல்லாதவனுக்கு, பிரம்ம தத்துவத்தை எவர் எவ்வளவு முழுமையாக உபதேசம் செய்தாலும், அவர் (உபதேசம் செய்பவர்) வெற்றி பெறுவாரா?

உத்தமமான அதிகாரிகளுக்கு பிரம்ம ஞானம் அதிக சிரமம் இன்றி சுலபமாகக் கிடைத்துவிடும். மத்திம அதிகாரிகள் படிப்படியாக சாஸ்திர விதிகளின்படி முன்னேற வேண்டும்.

முன்னவருக்கு சிறகடித்துப் பறக்கும் பறவையை போன்று வேகமாகக் கிடைக்கும்; பின்னவருக்கு ஏணியின் படிகளில் ஏறுவது போன்று மெதுவாக நடக்கும். ஆன்மீக அதிகாரமே இல்லாதவர்கள் பிரம்மத்தை அறிவதற்காக செய்யும் முயற்சிகள் வியர்த்தமே .