valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 30 January 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பால்கே மனமுடைந்து போனார். "மசூதியின் படிகளிர்கூடக் கால்வைக்க முடியாமல் செய்த என்னுடைய விதிதான் என்னே! நான் என்ன கொடும்பாவம் செய்தேனோ தெரியவில்லையே! -

"எவ்விதமாக நான் அவரை மகிழ்ச்சியடைச் செய்து அவரருளைப் பெற முடியும்?" இவ்வெண்ணமே பாலகேயின் மனதை இரவும் பகலும் ஒரு வியாதியைப் போல் வாடியது. 

ஒருநாள் எவரோ அவரிடம் கூறினார், "சோகத்தில் மூழ்காதீர்; மாதவராவினுடைய உதவியை நாடினால் உமது விருப்பம் நிறைவேறும். - 

"நந்திதேவரை முதலில் தரிசனம் செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டு, சிவன் பிரீதியடைவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?" பாலகேவுக்கு இது ஒரு சிறந்த வழியாகத் தோன்றியது. 

மேல் எழுந்த வாரியாகப் பார்க்கும்போது , கதை கேட்பவர்களுக்கு இது மிகைப் படுத்திச் சொல்லப்பட்ட கூற்றாக தெரியலாம். ஆனால், ஷீரடிக்கு பாபா தரிசனத்திற்காக சென்ற பக்தர்களுக்கு இதுவே அனுபவமாக இருந்தது. 

பாபாவிடம் அமைதியாகவும் உபத்திரம் எதுவும் இல்லாமலும் பேச நினைத்தவர்கள், மாதவராவையே முதலில் அழைத்துக்கொண்டு  சென்றனர். 

மாதவராவ் முதலில் மெல்லிய குரலிலும் இனிமையாகவும் யார் வந்திருக்கிறார், எங்கிருந்து வந்திருக்கிறார், எதற்காக வந்திருக்கிறார் என்பது பற்றி இதமாக அறிமுகப் படுத்துவார். சமர்த்த சாயி இத்தூண்டுதலால் பேச ஆரம்பிப்பார். 

இதைப் பற்றி கேள்விப்பட்ட ஹாஜி, மாதவராவை, "என்னுடைய மனத்திலிருந்து இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள்; அடையமுடியாததை அடைவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கெஞ்சினார். 

தயவு செய்யும்படி இவ்வாறு உந்தப்பட்ட மாதவராவ், இச்செயல் சுலபமாக இருந்தாலும் சரி, ஒருமுறை முயன்று பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தார். 

மாதவராவ் மசூதிக்குச் சென்று, மெதுவாகவும் உஷாராகவும் இந்த விஷயத்தை பற்றிப் பேசுவதற்கு தைரியம் பூண்டார். "பாபா, அந்த முதியவர் ஒரே கஷ்டப் படுகிறாரே! அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக் கூடாதா! அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக் கூடாதா?" என்று கேட்டார். 

"அந்த ஹாஜி, மெக்கா-மெதீனாவெல்லாம் சென்று வந்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக ஷீரடிக்கு வந்திருக்கிறார். அவரிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது?   ஒ, அவரையும் மசூதியினுள் வருவதற்கு அனுமதியுங்கள் !-

"எண்ணற்ற ஜனங்கள் மசூதியினுள் தரிசனம் செய்ய வருகிறார்கள்; தரிசனம் ஆனா உடனே திரும்பி விடுகிறார்கள். இவரை மாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி ஏக்கத்தால் வெம்பிப் போகச் செய்ய வேண்டும்?-

"இப்பொழுதாவது அவர்மீது கிருபையுடன் கடாக்ஷம் செய்யுங்கள்; மசூதியில் பேட்டி அளியுங்கள். அவரும் அப்போது தம் மனதுள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லிவிட்டு உடனே இவ்விடத்தை விட்டு அகன்று விடுவார்".



Thursday, 23 January 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சில சமயங்களில் திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள் மீது காட்டுவார். மற்ற சமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும் மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார். 

சில நேரங்களில் காலாகினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சில சமயங்களில் வெண்ணையை விட இளகியவராக உற்சாகமும் மகிழ்ச்சியுடனும் இருந்தார். 

வெளிப்பார்வைக்கு கோபத்தால் அவர் நடுங்கலாம். கண் விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்கு குழந்தையின் மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது. 

அடுத்த கணமே தம்முடைய சுய சாந்தி நிலையை மீண்டும் அடைந்து பக்தர்களை தம்மிடம் வருமாறு உரக்க அழைப்பார், "நான் யார்மீதாவது கோபப் படுவது போலத் தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது. -

"தாய் தன் குழந்தையை எட்டி உதைத்து தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன். -

"நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்போழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடி வருகிறேன்".

காதையின் இந்தப் பாகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு மிகப் பொருத்தமான காதலி ஞாபகத்திற்கு வருகிறது. அதைச் சொல்கிறேன். கதை கேட்பவர்களே ! கவனமாகக் கேளுங்கள். 

கல்யாணில் வசித்த சித்திக் பால்கே என்ற முஸ்லீம், மெக்கா- மெதினா யாத்திரையை முடித்தவுடன் ஷிரிடிக்கு வந்தார். 

வயது முதிர்ந்த இந்த ஹாஜி வடக்கு நோக்கிய சாவடியில் தங்கினார். முதல் ஒன்பது மாதங்களுக்கு பாபா இவரை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ மனஸ்தாபம் இருந்ததுபோல் தெரிந்தது. 

நேரம் இன்னும் பழுக்கவில்லை. மசூதிக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண்; அலுப்பையும் சலிப்பையுமே தந்தன. அவர் பல வழிமுறைகளை கையாண்டும், பாபா அவரைத் திரும்பி பார்க்கவும் மறுத்து விட்டார். 

மசூதியின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. யாருமே ரஹசியமாக எப்படியாவது உள்ளே நுழையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சித்திக் பாலகேவுக்கு மசூதியின் படிகளில் ஏற அனுமதி கிடைக்கவில்லை. 


Thursday, 16 January 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

நடக்கவே முடியாதது நடந்துவிட்டதெனினும், பாபா ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக, அவர் முகம் பிரசன்னமாகவே இருந்தது; கோபக்குறி துளியும் காட்டவில்லை. 

இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தாதாவினுடைய மனமோ அறுத்துக் கொண்டிருந்தது. அன்று சாயங்காலமே பாபாவை அதுபற்றி வினவினார். 

"நாங்கள் ஒரு சிறிதளவு சந்தனம் நெற்றியில் இடுவதற்கு முயலும் போது நீங்கள் எங்களைத் தொடவும் அனுமதிப்பதில்லை. இன்று காலையில் நடந்தது என்ன?

"நாங்கள் இடுவதற்கு முயலும் சந்தனத் திலகத்திற்கு அபார ஆவலின்மையும் வெறுப்பும் காட்டுகிறீர்; டாக்டர் பண்டித் இட்ட திரிபுண்டறத்தின்மேல் ஏகப் பிரியம்? இதென்ன விசித்திரமான நடத்தை! நடத்தை ஒரே சீராக இல்லையே!"

பாபா முகத்தில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டுக்கொண்டு, இந்த மதுரமான வார்த்தைகளை பிரீதியுடன் தாதாவிடம் கூறினார். கவனமாகக் கேளுங்கள். 

"தாதா, அவருக்கு குரு ஒரு பிராமணர்; நான் ஜாதியில் முஸ்லீம் என்பதை ஞாபகப் படுத்திகொள்ளும். இருப்பினும், அவர் என்னைத் தம் குருவாகவே கருதி, எனக்கு குருபூஜை செய்தார். 

"நான் ஜாதியில் மிகப் புனிதமான பிராமணன்; இவரோ ஒரு புனிதமற்ற முஸ்லீம்; அவரை எப்படி நான் பூஜை செய்ய முடியும்' என்ற சந்தேகம் அவருக்கு தோன்றவே இல்லை. 

"எனக்கு எந்த உபாயமும் கொடுக்காமல், இப்படிதான் அவர் என்னை ஏமாற்றி விட்டார். நான் மறுப்பதற்கு இடங் கொடுக்காமலேயே அவர் எனை முழுமையாக வெற்றிகொண்டுவிட்டார். 

தாதா இந்த விவரணத்தைக் கேட்டார். அனால், அதை ஒரு நகைச் சுவையாகவும் இங்கிதமான பேச்சாகவும் எடுத்துக் கொண்டார். வீடு திரும்புவரை தாதாவுக்கு உண்மையான முக்கியத்துவம் விளங்கவில்லை. 

பாபாவினுடைய இந்த முன்னுக்குப் பின் முரணான செயல், தாதாவை மனம் குமுறச் செய்தது. ஆனால், இந்நிகழ்ச்சியை பற்றி டாக்டர் பண்டித்திடம் பேசிய உடனே பாபா தம்முடைய செய்கைகளில் ஒரே சீராக இருந்தது நன்கு விளங்கியது. 

தோபெச்வர் என்னும் ஊரை சேர்ந்த ரகுநாத் (1821-1910) ஒரு சித்தர். 'காகா புரானிக்' என்ற பெயரால் நன்கு அறியப் பட்டவர். பூர்வ ஜன்ம சம்பத்தால் டாக்டர் பண்டிதுக்கு அவருடைய சேவடிகளில் ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகி விட்டார். 

பண்டித் தம் குரு காகாவை கூவி அழைத்தார். அதனால், ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில் இருத்தியது. மனம் எப்படியோ, பாவம் எப்படியோ, அப்படியே பக்திப் பிரவாஹம் அன்றோ!

இருந்தபோதிலும் , பூஜை சடங்குகள் எல்லாம் பாபா விரும்பிய  போதுதான் அனுமதிக்கப் பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரசிம்ஹ அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை திரவியங்களை விசிறி அடித்துவிடுவார். 

நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது? கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று ஓடிவிடுவர். 


Thursday, 9 January 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்கள வாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள். 

சிலர் அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர். சிலர் அத்தரும் சந்தனமும் பூசினர். சிலர் விசேஷமான நைவேத்தியம் படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தை கொடுத்தனர். 

சிலர், அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவலிங்கத்தின் மேல் இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன் கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர். 

ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பர் டாக்டர் பண்டித் பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷீரடிக்கு வந்தார். 

ஷீரடியில்வந்து இறங்கியவுடனே அவர் மசூதிக்கு சென்று பாபாவுக்குப் பலமுறை நமஸ்காரம் செய்துவிட்டு, சிறிது ஓய்வெடுப்பதற்காக அங்கு அமர்ந்தார். 

பாபா அவரிடம், "போம், தாதா பட்டிடம் போம், இந்த வழியாப் போம்" என்று சொல்லி, விரலால் வழிகாட்டி அவரை மூட்டை கட்டி அனுப்பிவிட்டார். 

பண்டித், தாதா பட்டின் வீட்டிற்குச் சென்றார்; மரியாதையான நல்வரவளிக்கப் பட்டார். தாதா அப்பொழுதுதான் பாபாவுக்கு பூஜை செய்வதற்காக எல்லாப் பொருள்களையும் தயார் செய்துகொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார். பண்டிதைத் தம்முடன் வர விருப்பப் படுகிறாரா என்றும் கேட்டார். 

பண்டித் இதற்குச் சம்மதித்து தாதாவுடன், சென்றார். தாதா பூஜையை  செய்தார். அந்நாள்வரை பாபாவினுடைய நெற்றியில் வட்டமாக சந்தனம் இடுவதற்கு எவருக்குமே  தைரியம் இருந்தததில்லை. 

பக்தர் எவராக இருப்பினும், எக்காரணத்திற்காக வந்திருந்தபோதிலும், பாபா அவரை நெற்றியில் சந்தனம் இடுவதற்கு அனுமதிக்கவில்லை. மகால்சாபதி ஒருவர் மட்டுமே கழுத்தில் சந்தனம்பூச அனுமதிக்கப் பட்டார். மற்றவர்கள், பாதங்களுக்கே சந்தனம் இட்டனர். 

டாக்டர் பண்டித்தோ குழந்தையுள்ளம் படைத்தவர். கபடமில்லாதவர். பக்திமான். அவர் தாதா வைத்திருந்த சந்தனப் பேலாவை வலிய எடுத்து, சாயியியுனைடைய தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் நெற்றியில் அழகான திரிபுண்டரம் (மூன்று நீளமான பட்டைகள்) இட்டுவிட்டார். 

அவருடைய சாகசச் செயலைக் கண்டு தாதா கலவரமடைந்தார். "ஆ! என்ன சாகசம் இது! பாபா இதைச் செய்ததால் சீறமாட்டார்?" (என்று அவர் நினைத்தார்) 

Friday, 3 January 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

எவருடைய மனம் பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்விலிருந்து நிவிர்த்தி அடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளிலிருந்து  விடுபட்டவரோ, எவர் முழுமுதற் பொருளுடன் தம்முடைய ஆத்மாவை ஒன்றுபடச் செய்து விட்டாரோ , அவர் தூய ஆனந்தத்தின்  உருவமாவார். 

வேதம் "ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற் பொருள் )" என்று விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தக ஞானிகளுக்கும் இதைப் புராணங்களில் படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை ஷீரடியில் அனுபவிக்கிறார்கள். 

தர்மம், அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம் விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம் அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்க வேண்டும். 

பாபா எல்லாருக்குமே அதிர்ஷ்டமானவர். அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது? அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம்? ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார். 

அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர். 

உட்கார்ந்த நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும் வைக்கப் பட்டது. பக்தர்களுடைய மனதின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய விருப்பங்களை ஏற்றுக் கொண்டார். 

ஷிரிடியிலிருப்பதுபொல்  தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாக சுற்றி வந்தார். இந்த அனுபவத்தை தான் சாயி எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார். 

பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக் கொண்டார். எல்லாரிடமுமிருந்தும் அவரவருடைய சமயாசார வழக்கங்களின்படியும் பக்தர் விரும்பியவாரும் பூஜையை ஏற்றுக் கொண்டார். 



Thursday, 26 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

இயற்கையாகவே மன்னிப்பளிப்பதில்  மிகச் சிறந்தவர்களாகவும், எந்நிலையிலும் பதட்டப்படாத அமைதியுடனும் கபடமற்றும் பொறுமையுடனும் இந்த ஞானிகள் ஒப்பற்ற திருப்தியுடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே பாபா. 

மனித உருவில் காணப்பட்டாலும் பிரபஞ்சத்தில் உலவி வந்தாலும் அவர் நிர்குணமானவர்; நிர்விகாரமானவர்; சங்கம் தேவைப் படாதவர். அகமுகமாக முக்தியடைந்தவர். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, "ஞானிகள் என்னுடைய ஆத்மா; ஞானிகள் என்னுடைய உயிருள்ள பிம்பங்கள்; அன்பும் கருணையும் உள்ள ஞானிகள் எல்லாரும் நானே" என்று கூறினார். -

"அவர்களை என்னுடைய பிம்பங்கள் என்று சொல்வதுகூடச் சரியாகாது; ஏனெனில், ஞானிகள் என்னுடைய நிச்சலமான, என்றும் மாறாத சொரூபங்கள். என் பக்தர்களின் சுமைகளை நான் ஞானிகளின் பொருட்டே சுமக்கிறேன். -

"வேறொன்று ஏதுமின்றி  ஞானிகளை சரணடைந்த பக்தர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானிகளுடைய பெருமையை உத்தவருக்கு உபதேசம் செய்தார். 

எல்லா ஆவல்களிலும் திருப்திஅடைந்தவர்.  தன்னிறைவு பெற்றவர். யதேச்சையாக கிடைத்ததில் சந்தோஷமடைவார். சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டவர். 

சொற்களால் விவரிக்க முடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. சச்சிதானந்தமே அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம். 


Thursday, 19 December 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பி விடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச் செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களை பாராயணம் செய்யச் சொல்வார். 

பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில்  ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்துகொண்டிருக்கும் போதும் உறங்கும்போதும் உணவருந்தும் போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள். இச் செயல்பாடுகளின் நோக்கம் இதுவே. 

நசித்துப் போகும் தன்மையையுடைய இவ்வுடல் என்றோ ஒருநாள் மரணத்தை சந்திக்கப் போகிறது. ஆகவே, பக்தர்கள் மரணத்தை நினைத்து சோகமடையாமல், ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடமே மனதை நிலைக்கச் செய்ய வேண்டும். 

பலவிதமான செழிப்புகளுடன் நம்முன் தோன்றும் காட்சிகள், தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து  தோன்றியவை அனைத்தும் அவனிடமே திரும்பிச் சென்று  விடும். 

பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்தையும் நாம் நோக்கினும் தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியதால், மறுபடியும் அவை தோன்றா நிலையிலேயே சென்றடைய வேண்டும். 

ஆகவே, யாரும் எப்பொழுதும் மரணமடைவதில்லை. பாபா விஷயத்தில் மரணம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஸ்ரீ சாயி நித்திய சுத்தர்; புத்தர்;  மரணமற்றவர். 

சிலர் அவரை இறைவனுடைய அடியார் என்று சொல்லலாம்; சிலர் அவரை மகா பாஹவதர் என்று சொல்லலாம். ஆனால், நமக்கு அவர் சாக்ஷாத் கடவுளின் அவதாரமே!

அவதார புருஷர்களின் நிலையும் இதுவே. அவர்கள் தோன்றுகின்றனர். மறைகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளால் உலகத்தை தூய்மையாக்குகின்றனர்.