valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 30 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆகவே, நாங்கள் எங்களுடைய எண்ணம், சொல், செயல், இவற்றைத் தங்கள் பாதகமலங்களில் செலுத்திவிட்டு இடைவிடாமல் உம்முடைய திவ்விய நாமத்தை ஜெபிப்போமாக! அவ்வழியேதான் எங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விலகும்.

வேண்டியவர்களுக்கு வேண்டியதை அளிக்கிறீர்; வேண்டுதல் ஏதும் இல்லாதவர்களுக்கு பரமபதத்தை அளிக்கிறீர். பக்தர்களுக்கு இனிமையானதும் மகிழ்ச்சிகரமானதும் மிக்க சுலபமான வழியன்றோ உமது நாமம்!

உமது நாமஜபத்தினால் பாவம் அழிகிறது; ராஜஸ குணமும் தாமச குணமும் மறைகின்றன. சத்துவ குணம் மேலோங்குகிறது. இதில் சந்தேகம் ஏதுமில்லை. படிப்படியாக வாழ்வில் தருமநெறி வளர்கிறது.

கடவுள் பக்தியும் அறநெறி வாழ்வும் இவ்வாறு விழித்துக்கொண்ட நிலையில், பற்றற்ற மனப்பான்மை வேகமாகத் தொடர்கிறது; புலன் அவாக்கள் அறவே அழிக்கப்படுகின்றன; ஆத்மஞானம் அக்கணமே பளிச்சென்று தோன்றுகிறது.

விவேகத்துடனும் அறிவுக்கூர்மையுடனும் தேடப்படும் ஞானம், தனக்குள்ளேயே லயிக்கும் (அமிழ்ந்து போகும்) மன ஒருமையே. இது குருவின் பாதகமலங்களில் பணிவுடன் விழுந்துகிடப்பதுதான். இதுவே குருவிடம் முழுமையான சரணாகதியாகும்.

சாயியின் பாதகமலங்களில் மனம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டதற்குச் சின்னம் ஒன்றே ஒன்றுதான். பக்தன் பரமசாந்த நிலையை எய்துகிறான்; நிஜமான பக்தி பொங்கிவழிகிறது.

குருவிடம் செலுத்தப்படும் அன்பு கலந்த பக்தியே அறநெறியாகும். "அனைத்தும் நானே" என்பதே ஞானத்தின் சாரம். புலனின்பங்களின்மேல் விருப்பமின்மையே பெரும் வைராக்கியமாகும். இந்த நிலை எய்திவிட்டால் உலகியல் வாழ்க்கை மறைந்துபோகிறது.

என்னே இந்த பக்தியின் மஹிமை! குவிந்த மனத்துடன் அனுஷ்டானம் செய்யப்படும்போது, தன் சக்தியுள் பொதிந்து கிடக்கும் சாந்தி, விரக்தி, கீர்த்தி, இம் மூன்றையும் வெளிப்படுத்துகிறது.

அவ்வகை குருபக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ?  அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் பிரயாசை (உழைப்பு) ஏதுமில்லாமலேயே வந்து சேரும்.

அவ்வகை குருபக்திக்கு, திருமணத்தின்போது மகளுக்குக் கொடுக்கப்படும் சொத்துகள்போல இந்திர பதவியும் அடிமைபட்டுக் கிடக்கிறது. புண்ணிய க்ஷேத்திரங்களே காலடியில் கிடக்கும் அந் நிலையில் மோக்ஷத்திற்கு முக்கியத்துவம் யாருமே கொடுப்பதில்லை.

தீக்ஷிதரின் பாகவத பாராயணத்தைப்பற்றியும் நவயோகீந்திரர்கள் பற்றியும் சாயிபாத தரிசனம் பற்றியும் சென்ற அத்தியாயத்தில் விவரணம் கண்டோம்.

ஆனந்தராவ் பாகாடேயின் அற்புதக் கனவுபற்றியும் சாயிபக்தியின் பெருமையையும் எடுத்துரைத்தேன். 



Thursday, 23 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


46 .  காசி - கயா புனிதப் பயணம் - இரண்டு ஆடுகளின் காதை


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஸ்ரீ சாயி பாபா! உம்முடைய பொற்கமலப் பாதங்கள் புனிதமானவை; உம்முடைய நினைவு புனிதமானது; உம்முடைய தரிசனம் புனிதமானது. இம் மூன்றும் எங்களைக் கர்மத்தின் தளைகளிலிருந்து விடுவிக்கக்கூடிய சக்தி பெற்றவையாகும்.

தற்காலம் உருவமற்ற நிலையில் இருந்தாலும், விசுவாசத்துடனும் பக்தியுடனும் உம்முடன் ஒன்றிவிட்டால், சமாதியிலுள்ள உமது ஜோதி கண்மலர்கிறது. பக்தர்கள் இன்றும் இதை அனுபவபூர்மாக உணர்கின்றனர்.

எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்துவிடுகிறீர்; அவ்வளவு மெல்லியதாக நூலைப் பிடித்திருக்கிறீர். எப்படியிருந்தால் என்ன? இந்த தேசத்தில் இருப்பினும், அல்லது வேறு தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந்த நூலால் உம் திருவடிகளுக்கு இழுத்துவிடுகிறீர் அல்லீரோ?

அவ்வாறு இழுத்துவந்து அவர்களைக் கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தைகளை போஷிப்பதுபோல சிரமமின்றி அவர்களை சுலபமாகப் பராமரிக்கிறீர்.

நீர் எங்கிருக்கிறீர் என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறீர்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் நீர் எந்நேரமும் அரணாக நிற்கிறீர் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி செய்கின்றன.

மெத்தப் படித்த பண்டிதர்களும் சாமர்த்தியசாலிகளும் அழகர்களும் அகந்தையால் இவ்வுலக வாழ்வெனும் சேற்றில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நீரோ , எளிமையும் நம்பிக்கையும் உடையவர்களுடனும், அப்பாவி மக்களுடனும் உம்முடைய சக்தி கொண்டு விளையாடுகிறீர்.

அகமுகமாக வியூகங்களை வகுத்து எல்லா விளையாட்டுகளையும் நீர் ஆடுகிறீர்; ஆனாலும், வெளிபார்வைக்குத் தனிமைவிரும்பி போலவும் சம்மந்தமில்லாதவர்போலவும் பாசாங்கு செய்கிறீர். எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு 'நான் செயலற்றவன்' என்று சொல்லிக்கொள்கிறீர். உம்முடைய செயல்முறைகளை அறிந்தவர் எவரும் உளரோ! 




Thursday, 9 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"அதை விடுத்து ஒரே தூங்கிவிழுகிறார். அவருடைய கை, கல் போலக் கனக்கிறது. "பகத்" என்று நான் விளிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து தூக்கம் கலைந்து அவரை நிலைகுலையைச் செய்கிறது.-

"தரையிலேயே நிலைப்பட உட்காரமுடியாதவர், ஸ்திரமான ஆசனம் இல்லாதவர், தூக்கத்திற்கு அடிமையாகிய மனிதர், உயரத்தில் எப்படித் தூங்கமுடியும்?"

'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட;  மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வலையில் அவர் நடக்கட்டும். (பிறரைப் பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராகச் செயல்படாதே.)  இந்த அறிவுரையை பக்தர்களின்மீது இருந்த அநுராகத்தினால் (காதலால்) பாபா சமயம் பார்த்து அளித்தார்.

சாயிநாதரின் செய்கைகள் மனித அறிவுக்கெட்டாதவை ! ஹேமாட் அவருடைய பாதாரவிந்தங்களில் இணைந்து கொள்கிறேன்.  கிருபையுடன் என்னை ஆசீர்வதித்த காரணத்தால், அவரும் என்னை அகண்டமாக நினைவுகொள்கிறார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ' ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில் , 'குருபாத மஹிமை' என்னும் நாற்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 



Thursday, 2 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒரு சமயம் மகால்சாபதியுடன் பாபா மசூதியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று தாம் ஒருகாலத்தில் பலகையின்மேல் படுத்துறங்கிய ஞாபகம் வந்தது.

ஒன்றேகால்சாண் (சுமார் பதினொன்று அங்குலம்) அகலமிருந்த மரப்பலகை, இரு பக்கங்களிலும் கிழிந்த ஆடைகளால் பிணைக்கப்பட்டு மசூதியின் கூரையிலிருந்து ஓர் ஊஞ்சலைப் போலத்  தொங்கவிடப்பட்டது.

யாரும் இருட்டில் படுத்து உறங்கக்கூடாது. ஆகவே, தலைமாட்டிலும் கால்மாட்டிலும் விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு பாபா இரவில் மரப்பலகையின்மேல் படுத்து உறங்குவார்.

இந்தப் பலகையின் விருத்தாந்தம் முந்தைய அத்தியாயம் ஒன்றில் (அத். 10 ) விவரிக்கப்பட்டுவிட்டது.  ஆகவே, இப்போது அப் பலகையின் மகத்துவத்தை மட்டும் கேளுங்கள்.

ஒருசமயம், அந்தப் பலகையின் மஹிமையை பாபா உணர்ச்சிப் பெருக்குடன் வர்ணித்தார். அதைக் கேட்ட காகா சாஹிபின் மனத்தில் எழுந்த எண்ணம் என்னவென்று விவரம் கேளுங்கள்.

அவர் பாபாவிடம் கூறினார், "நீங்கள் மரப்பலகையில் தூங்க விரும்பினால் நான் பிரீதியுடன் மறுபடியும் ஒரு பலகையைத் தொங்கவிடுகிறேன்.  அதன் பின்னர், நீங்கள் பலகையின்மேல் நிம்மதியாகப் படுக்கலாம். "

பாபா அவருக்குப் பதிலுரைத்தார். "மகால்சாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் எப்படித் தனியாகத் தூங்க முடியும்?  தற்பொழுது இருப்பது போலக்   கீழே இருப்பதே எனக்குத் திருப்தி. "

இதைக் கேட்ட காகா மிகுந்த அன்புடன் மீண்டும் சொன்னார், "அப்படியானால், நான் இன்னுமொரு பலகையையும் தொங்கவிடுகிறேன். நீங்கள் ஒரு பலகையிலும் மகல்சாபதி இரண்டாவது பலகையிலும் படுத்துறங்கலாம்."

பாபா இதற்கு என்ன பதில் சொன்னார் என்பதைக் கேளுங்கள், "மகால்சாபதியால் பலகையில் தூங்க முடியுமா என்ன? எவர் அங்கமெல்லாம் நற்குணங்கள் நிரம்பியவரோ, அவரே மரப்பலகையில்  படுத்து உறங்க முடியும்.-

"பலகையில் படுப்பது சுலபமா என்ன? என்னைத் தவிர வேறு யாரால் பலகையில் படுக்கமுடியும்? தூக்கத்தை விரட்டிவிட்டுக் கண்களைத் திறந்துகொண்டு இருக்க முடிந்தவர்தாம் பலகையில் படுக்கலாம். -

"நான் படுக்கப் போகும்போது மகால்சாபதிக்கு ஆணையிடுகிறேன், 'கையை என்னுடைய இதயத்தின்மேல் வைத்துக்கொண்டு எதிரில் உட்கார்ந்திரும்' என்று, -

"அந்த வேலையைக் கூட அவரால் செய்யமுடியவதில்லை. உட்கார்ந்தவாறே தூங்கிவிடுகிறார். அவருக்குப் பலகையால் பயன் ஏதும் இல்லை. மரப்பலகை எனக்குதான் படுக்கையாகும்.-

"'என்னுடைய இதயத்தில் நாமஸ்மரணம்  இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறது. நீர் உம்முடைய கையை வைத்து என்னைக் கண்காணியும். நான் தூங்குவதாகத் தெரிந்தால் என்னை எழுப்பிவிடும். ' இவ்வாறு நான் ஆணையிட்டிருக்கும்போது ,-


 

Thursday, 26 December 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


குருவின் திருவாய்மொழியாக வெளிவந்த சொற்களை மனத்தில் நிலைநிறுத்துங்கள்; அறிவுரையை எப்பொழுதும் சிந்தனை செய்து கொண்டிருங்கள். அதுவே, உங்களுடைய ஆன்மீக ஏற்றத்திற்குக் காரணமாக அமையும்.  இக் கருத்தை நிரந்தரமாக மனத்தில்  இருத்துங்கள்.

குருவின் சொற்களே போதியும் புராணமும்; அவையே அவற்றுக்குத் தெளிவுரையும் விரிவுரையும் ஆகும். முக்கியமான உபதேசத்தை தியானம் செய்யவேண்டும். ஏனெனில், அதுவே நம்முடைய வேதஞானம்.

எந்த ஞானியின் சொற்களையும் அவமதியாதீர்!  நம்முடைய தாய் நம்மைக் கவனித்துக் காப்பாற்றுவது போல, வேறு எவர் நம்மைக் காப்பாற்றுவார்?

தாயன்பு பரிசுத்தமானது. குழைந்தையைப் போஷிப்பதில் அவள் அடையும் மகிழ்ச்சி குழந்தைக்கு தெரியாது. குழந்தை ஆசைப்பட்டு விரும்புவதையெல்லாம் நிறைவேற்றிச் செல்லங்கொடுக்கிறாள்.

உலகில் எத்தனையோ ஞானிகள் இருக்கின்றனர்.  ஆயினும், கருணையால் வெளிப்பட்ட, "நம்முடைய பிதாவே (குருவே) நம்முடைய பிதா (குரு)" என்னும் சாயியின் திருவாய்மொழியை நம்முடைய இதயத்தில் ஆழமாகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

சொல்கிறேன்; சாயியின் வாயிலிருந்து வெளிவந்த வசனங்களை அனுசந்தானம் செய்யுங்கள் (இடையாறது சிந்தியுங்கள்). காரணம், கிருபாநிதியான அவர்தான் நம்முடைய நுதாபங்களையும் தணிக்கக்கூடியவர்.

அவருடைய கலைகளை அவர்தான் அறிவார்! அவருடைய லீலைகளின் அற்புதத்தையும் அவை சகஜமாக (இயல்பாக) வெளிப்படுவதையும் குதூகலத்துடன் கண்டு களிக்கத்தான் நம்மால் முடியும்.

யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும்.  அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய லட்சியப் பாதையிலிருந்து தடம்புரளக்கூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.

அதுதான் (குருவின் திருவாய்மொழிதான்) நமக்குப் பரம மங்களைங்களை விளைவிக்கும். அதன் மூலமாகத்தான் நாம் பிறவி பயத்தை வெல்லமுடியும். அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும் - அனைத்தும் ஆகும்.

சாராம்சம் என்னவென்றால், பரமகுருவைப் பிரேமை செய்யுங்கள். அனன்னிய பாவத்துடன் நமஸ்காரம் செய்யுங்கள். சூரியனுக்கு எதிரில் இருட்டு எப்படி இருக்கமுடியும்? அதுபோலவே, பிறவிக்கடலும் இல்லாதுபோகும்.

சிருஷ்டியின்  எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.  கிட்டவோ எட்டவோ ஏழுகடல் தாண்டியோ செல்லுங்கள். குருவுக்கு பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இன்னுமொரு காதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவரைக் காப்பியடித்து மற்றொருவர் அதே காரியத்தைச் செய்ய முயலும்போது, ஆபத்துக்கு உள்ளாகலாம் என்பது இக்காதையின் சாரம். 



Thursday, 19 December 2024

ஷீர்டி சாயி சத்சரிதம்


பாபாவின் மேற்கண்ட ஆசீர்வாதத் திருவாய்மொழி எழுத்துக்கு எழுத்து உண்மையாகியது. காகா சாஹேப் தீக்ஷிதர் அமரரான அபூர்வமான வழிவகை சாயிலீலா மாதப்பத்திரிகை வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

அவர் மரணமடைந்த சூழ்நிலையை நினைத்துப்பார்த்தால், அது ஆகாயவிமான பயணமின்றி வேறென்ன? குருவின் நாமத்தை இடைவிடாது  ஜபம் செய்து கொண்டே மரணம். ஆஹா! எவ்வளவு ஆனந்தமான முடிவு!

இவ்வாறாக, தீக்ஷிதர் ஒரு திடசித்தம் வாய்ந்த மனிதர்; நிரந்தரமாக சாயி பாதங்களில் மூழ்கியவர். பிரியமான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதே அறிவரையை வழங்கினார். கடைசியில் குருபாதங்களுடன் கலந்துவிட்டார்.

இப்பொழுது கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். இருவருமே காகா தீக்ஷிதரின் மேல் பிரியம் வைத்திருந்தவர்கள். ஆதலால், திருவுளசீட்டு யுக்தியை இருவரும் ஒப்புக்கொண்டனர். தாமதமின்றிச் சீட்டுகள் எழுதப்பட்டன.

ஒரு சீட்டில் 'வேஷ்டியை ஏற்றுக்கொள்வோம்' என்று எழுதப்பட்டது. மற்றொரு சீட்டில் 'வேஷ்டியை நிராகரிக்கவும்' என்று எழுதப்பட்டது. இவ்வாறு  எழுதப்பட்ட சீட்டுகள் பாபாவின் புகைப்படத்தின் காலடியில் இடப்பட்டன.

அங்கிருந்த சிறுவன் ஒருவன் ஏதாவது ஒரு சீட்டை எடுக்கும்படி வேண்டப்பட்டான். சிறுவன் திருவுளசீட்டை எடுத்தான்.  எடுக்கப்பட்ட சீட்டிலிருந்து 'வேஷ்டியை ஏற்றுக்கொள்ளவும்' என்று மாதவராவுக்கு ஆக்கினை கிடைத்தது.

கனவு எப்படியோ அப்படியே சீட்டும் அமைந்தது. எல்லாரும் அகமகிழ்ச்சி அடைந்தனர். பட்டுக்கரை வேஷ்டி சாமாவின் கரங்களில் இடப்பட்டது.

ஆனந்தராவின் சொப்பனமும் மாதவராவின் சீட்டும் பரஸ்பரம் ஒத்துபோனபோது மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை! திருவுளசீட்டு இருவருக்குமே ஆனந்தத்தையும் திருப்தியையும் கொண்டுவந்தது.

மாதவராவ் உள்ளத்தில் குஷியடைந்தார். ஆனந்தராவும் சந்தோஷமடைந்தார். காகா சாஹிபின் சந்தேகம் நிவிர்த்தியடைந்தது. சாயீ பக்தி மேலோங்கியது.

எல்லாரும் சிந்திக்கவேண்டிய விஷயம் ஒன்று இங்கு உண்டு. குருபாதங்களில் சிரம் தாழ்த்துபவர் குருவின் திருவாய்மொழியின்படி கண்ணுங்கருத்துமாய்ச் செயல்பட வேண்டும். இதுவே இக் கதையின் சாரம்.

நம்முடைய நிலைமை, உலகெனும் நாடகமேடையில் நாம் நடிக்கவேண்டிய வேஷம், மனச்சாயல்கள், எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நகத்திலிருந்து சிகைவரை முழுமையாக குருவே அறிவார். நம்மைக் கைதூக்கி உயர்த்திவிடும் வழிமுறைகளையும் அவரே அறிவார்.

வியாதி என்னவோ அதற்கேற்ற சிகிச்சை, சிகிச்சைக்கேற்ற பானம் (மருந்து), பானத்துக்கேற்ற அனுபானம் (துணைமருந்து) இந்த முறையில்தான் சத்குரு சிஷ்யனின் பிறவியெனும் நோயை நிவாரணம் செய்கிறார்.

குரு செய்யும் செயல்களை நாம் காப்பியடிக்கக்கூடாது. அவருடைய திருவாய்மொழியைத்தான் பயபக்தியுடன் பின்பற்ற வேண்டும். 



Thursday, 12 December 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"பாபா மேலும் கூறினார், 'என்னுடைய சாம்யாவுக்குப் (மாதாராவுக்குப் ) பட்டுக்கரை வேஷ்டி ஒன்று அளிப்பீராக. நீர் சுகங்கள் நிறைந்தவராக ஆவீர்.'-

"அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு நான் ஒரு பட்டுக்கரை வேஷ்டி கொண்டுவந்திருக்கிறேன். காகா சாஹேப் அவர்களே, இதை உங்களுடைய கைகளால் அளித்து மாதவராவை ஏற்றுகொள்ளச் செய்யுங்கள்.-

"என்னுடைய விநயமான வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். மாதவராவ் இதை அணிந்துகொண்டால் நான் ஆனந்தமடைவேன். நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தவர் ஆவீர்கள். "

ஆனந்தராவின் இந்த வேண்டுகோளை மாதவராவும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆயினும், காகா சாஹேப் வேஷ்டியை அளிக்க முயன்றபோது மாதவராவ் அந்த வஸ்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர் மனத்தில் நினைத்தார், 'இது ஒரு கனவுதான். நான் ஒப்புக்கொள்வதற்குமுன், எனக்கு ஒரு சூசகம் கிடைக்கவேண்டும். எனக்கு ஒரு காட்சி கிடைக்காமல் நான் அந்த வேஷ்டியை ஏற்றுக்கொள்ளக்கூடாது. '

காகா சாஹேப் அப்பொழுது சொன்னார், "நாம் இப்பொழுது திருவுளச்சீட்டுப் போட்டுப்பார்ப்போம்.  வேஷ்டியை ஏற்றுக்கொள்ளுதல் உசிதமா (மேன்மையா) இல்லையா என்று தெரிந்துகொள்வோம். பாபாவின் திருவாய்மொழியை இந்த அனுபவத்தால் உணர்வோம்.-

"எந்தச் சீட்டை பாபா நமக்கு அளிக்கிறாரோ அதையே அவருடைய ஆணையாக ஏற்றுக்கொள்வோம் ." ஆகவே, அவர்கள் பாபாவின் ஆணையின்படி நடப்பது என்று தீர்மானம் செய்துகொண்டு பாபாவின் பாதங்களில் திருவுளச்சீட்டு போட்டனர்.

எந்த விஷயமாக இருப்பினும் முதலில் பாபாவின் எண்ணத்தை அறிந்த பிறகே செயல்படுவது என்பது காகா சாஹேபின் பழக்கமாக இருந்தது. தம்முடைய பாரமனைத்தையும் பாபாவின்மீது போட்டுவிட்ட பெருமகன் அவர்.

பாபா ஜீவிதமாக இருந்தபோதும் இதே பழக்கந்தான். பாபா நிர்யாணம் அடைந்த பிறகு, திருவுளச்சீட்டு போட்டு அவருடைய ஆக்ஞயை அறிந்த பின்னரே அதன்படி உறுதியுடன் செயலில் இறங்குவார்.

செய்யவேண்டிய காரியம் சிறியதானாலும் பெரியதானாலும், திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்காமல் எக் காரியத்தையும் தொடங்கமாட்டார்; தம் உயிரே போவதானாலும் சரி.

தேகமே தம்முடையதில்லை என்று ஒருவர் நிர்ணயித்து அதை சாயி பாதங்களில் கிடத்தியபிறகு, அதனுடைய சலனவளனங்களின்மீது அவருக்கு ஏது அதிகாரம்?

இந்த விரதத்தை வரித்ததால், லக்ஷக்கணக்கான ரூபாய் வருமானத்தை வேண்டாவென்று ஆர் ஒதுக்கியத்தைப்பற்றி நினைத்துப்பாருங்கள்! மரணப்பரியந்தம் அவர் இந்த விரதத்தை திடமாகக் கடைப்பிடித்தார்.

"உம்முடைய நம்பிக்கையும் விசுவாசமும் பலன் அளிக்கும். நான் உமக்கு ஓர் ஆகாயவிமானம் அனுப்பி, அதில் உம்மை அரவணைத்துக்கொண்டு செல்வேன்! நீர் நிச்சிந்தையான (கவலையற்ற) மனத்துடன் இரும்".