valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 14 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இந்த அத்தியாயத்தில், தம்முடைய முடிவு நெருங்கிய காலத்தில் பாபா எவ்வாறு ஒரு பிராமணரை ராமாயணம் படிக்கச் செவிமடுத்தார் என்ற விவரமும்,-

சமாதி அமைய வேண்டிய இடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விவரமும், நினைவுச்சின்னமாக பாபா பாதுகாத்துவந்த செங்கல் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து உடைந்த விவரமும் சொல்லப்படும். இவையனைத்தையும் கவனமாகக் கேளுங்கள்.

அதுபோலவே, முன்பொரு சமயம் பாபா பிரம்மாண்டத்தில் தம்முடைய பிராணனை மூன்று நாள்கள் வைத்தபோது (நிர்விகல்ப சமாதி நிலை), அது சமாதி நிலை இல்லை என்றும், பாபா இறந்துவிட்டார் என்றும் ஷீர்டி மக்கள் உறுதிபட நினைத்துப்பற்றியும் கேளுங்கள்.

உத்தரகிரியைகள் (இறுதிச் சடங்குகள்) செய்வதற்குத் தயார் செய்துகொண்டிருந்தபோது பாபா திடீரென்று உயிர்தெழுந்ததைக் கண்டு மக்கள் திடுக்கிட்ட விவரத்தையும் கேளுங்கள்.

ஆயினும், இது யாரும் கேட்க விரும்பாத நிர்யாணக் கதை. பாபா தேஹத்தை விடுத்தது பற்றிய சங்கதிகள், கேட்பவர்களுக்கு மனவேதனையையும் சிரமத்தையும் அளிக்கும்.

இருந்தபோதிலும், சாதுக்கள் மற்றும் ஞானிகளுடைய முக்தி சம்பந்தமான கதைகள், கேட்பவர்களையும் சொல்லுபவரையும் புனிதப்படுத்தும். ஆகவே, விஸ்தாரத்திற்கு (விரிவுக்கு) பயந்து, பகுதி பகுதியாக முடிந்தவரை கேட்டு சமாதானமடையுங்கள்.

பூதவுடலை உகுத்ததால், எளிதில் அடையமுடியாததும் மறுபிறப்பில்லாததும் என்றும் அழியாததுமான பேரின்ப நிலையை பாபா அடைந்தார்.

தேஹத்தை தரித்தபோது அவர் உருவ நிலையில் இருந்தார். தேஹத்தைத் தியாகம் செய்ததால், அருவ நிலைக்கு மாறிவிட்டார். ஓர் உடலில் எடுத்த அவதாரம் முடிந்தது; எல்லா உடல்களிலும் வியாபித்திருக்கும் நிலைக்குத் திரும்பிவிட்டார்.

ஓரிடத்தில் இருந்த நிலைமையை முடித்துக்கொண்டு எங்கும் நிறைந்த நிலைமைக்குத் திரும்பினார். ஆதியந்தமில்லாத முழுமுதற்பொருளுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

எல்லாருடைய வாழ்க்கையையும் சாயியை மையமாக வைத்தே சுழன்றது; இல்லை; சாயியே அவர்கள் எல்லாருடைய பிராணன் என்று சொல்வதே பொருத்தம். சாயி இல்லாது, ஷீர்டி கிராம மக்கள் ஹீனர்களாகவும் தீனர்களாகவும் ஆயினர்.

தேகம் அசைவின்ரிச் சில்லிட்டுப்போக ஆரம்பித்தபோது ஒரு பெரும் ஓலம் எழுந்தது. பாலர்களிலிருந்து வயசாதிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கே முடிவு வந்துவிட்டது போலப் பெருந்துயரத்தில் மூழ்கினர்.

ஜுரம் போன்ற உடல் உபாதிகள் உலகியல் வாழ்வில் கட்டுண்டவர்களைத்தான் பிடிக்கும். எக்காலத்திலும் யோகிகளை நெருங்கி அவமரியாதை செய்வதில்லை. 




Thursday, 7 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


43 . மஹாசமாதி (இரண்டாம் பகுதி)


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் சமர்த்த சாயியின் நிர்யாணயம் விவரிக்கப்பட்டது. விட்டுப்போனதும் நிறைவு பெறாததுமான விவரங்கள் இந்த அத்தியாயத்தில் சம்பூரணம் (நிறைவு) செய்யப்படும்.

சமர்த்த சாயியின் மீது எனக்கு ஏற்பட்ட அற்புதமான பிரேமை அவருடைய அருள் வெளிப்பாடே, சாயியின் பொற்பாதங்களில் மூழ்கிய ஹேமாட் அவருடைய இந்தச் சரித்திரத்தை எழுதுகிறேன்.

அவரே பிரேமபக்தியை அளிக்கிறார்; சரித்திரத்தின் மஹிமையை மேம்படுத்துபவரும் ஒரே. இக் காரணம் பற்றியே அவரை ஆராதிக்கும் நெறிமுறை பெருமை வாய்ந்தது. அதுவே உலகியல் பற்றுகளிலிருந்து நம்மைப் பிரிக்கிறது.

ஆதலின், நான் என் உடலாலும் பேச்சாலும் மனத்தாலும் அவரை ஆயிரம் தடவைகள் வணங்குகிறேன். சிந்தனை செய்வதால் அவருடைய  மஹிமையை உணரமுடியாது; அனன்னியமான சரணாகதியால்தான் முடியும்.

மூட்டையாகச் சேர்ந்திருக்கும் பாவங்களையும் மலங்களையும் கழுவித் தள்ளி மனத்தூய்மை அடைவதற்கு இதர சாதனைகளால் பயனில்லை.

மனத்தூய்மை பெறுவதற்கு ஹரிபக்தர்களின் கீர்த்தியை நினைப்பதும் பஜனையாகவும் கீர்த்தனையாகவும் பாடுவதையும்விட சுலபமான சாதனை எவ்வளவு தேடினாலும் அகப்படாது.

ஆகவே, நாம் முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் பிடிப்போம்; அத்திப்பற்றிச் சிறிது ஆலோசனை செய்வோம். நம்முடைய ஆனந்தத்தின் இருப்பிடமான சாயியைப்பற்றிய வியாக்கியானதைத் தொடர்ந்து சொல்லுவோம்.

அவருடைய நிர்யாணம் ஏன் விஜயதசமியன்று நிகழ்ந்தது என்பதும், எவ்வாறு தாத்யாவைச் சாக்குபோக்காக வைத்து வரும்பொருள் உரைக்கப்பட்டது என்பதும், ஏற்கெனவே விவரமாகச் சொல்லப்பட்டன.

தேகத்தை விடுக்கப்போகும் சமயத்திலும் தருமம் செய்யவேண்டியதுபற்றி விழிப்புடன் இருந்தது, லக்ஷ்மி பாயிக்கு தானம் செய்தது, ஆகிய அனைத்து விஷயங்களும் பின்னர் எடுத்துரைக்கப்பட்டன . 




Thursday, 29 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


செயல் புரியும் உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்போல் தோன்றினாலும், அவர் சிறிதளவும் செயலேதும் புரியவில்லை. 'நான்' என்ற உணர்வை முழுவதும் இழந்துவிட்டதால் கர்மத்தில் அகர்மத்தைக் (செயல் புரிவதில் புரியாமையைக்) கண்டார் பாபா.

"கர்மவினை அனுபவிக்காமல் அழியாது". கர்மவினைப்பற்றிய இந்த சூக்குமம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்ம ஞானம் பெற்றவருக்கு இதுபற்றிக் குழப்பம் ஏதும் இருக்கமுடியாது. ஏனெனில், அவர் எல்லா வஸ்துக்களிலும் பிரம்மத்தையே பார்க்கிறார்.

செயலின் பலன், செயலிலிருந்தே விளைகிறது. துவைத பாவத்தின் (இரண்டு உண்டு என்னும் கோட்பாட்டின்படி ) இந்த நியதி பிரசித்தமானது. பிரம்மத்தை அறிந்தவர்கள் கிளிஞ்சலையும் வெள்ளியையும் சமமாகப் பார்ப்பதுபோல், இந்த நியதியையும் பிரம்மமாகவே கருதுகின்றனர்.

எல்லாருக்கும் கருணை காட்டும் அன்னையான சாயி, எப்படி மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார்? கரிய இரவு, பகலை விழுங்கிய கதையாயிற்றே!

ஒவ்வொரு மாதத்தின் வரையறையை மனத்தில் கொண்டு இந்த அத்தியாயத்தை இங்கு முடிப்போமாக! மிக விஸ்தாரமாக்கிவிட்டால் கேட்பவர்கள் அயர்ந்து போவார்கள்.

மஹாசமாதிபற்றிய மற்ற விவரங்களைப் பின்னர்க் கிரமமாக கேட்கலாம். எவருடைய கிருபையால் யான் பெரு பெற்றவனாக ஆனேனோ, அந்த சமர்த்த சாயியை ஹேமாட் சரணடைகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த ஸாயீ சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'ஸ்ரீ சாயிநாத நிர்யாணம்' என்னும் நாற்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றும்.



ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும். 




Thursday, 22 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

உடலை உதறும் நேரம் நெருங்கிவிட்டது என்று அறிந்து, புட்டி, காகா , ஆகியவர்களிடம் பாபா சொன்னார், "போங்கள்; வாடாவிற்குச் சென்று போஜனத்திற்குப் பிறகு வாருங்கள்."

சுற்றியிருந்தவர்களின் முகத்தில் பிரதிபலித்த சஞ்சலமும் கவலையும் பாபாவின் மனத்தைத் தடுமாறச் செய்தது போலும். அவர் எல்லாருக்கும் ஆணையிட்டார், "போங்கள், போங்கள், போய்ச் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்."

இவ்வாறாக, நிரந்தரமாக அவருடைய சங்கத்தை அனுபவித்தவர்களும், இரவுபகலாக அவருடன் இருந்த நண்பர்களும், பாபாவின் ஆணையை மீறமுடியாத நிலையில் மனம் குழம்பியவாறே அங்கிருந்து எழுந்து சென்றனர்.

பாபாவின் ஆணையை மீற அவர்கள் விரும்பவில்லை; அவருடைய சன்னதியிலிருந்து அகலவும் விரும்பவில்லை. பாபாவின் மனத்தைப் புண்படுத்த விரும்பாது போஜனத்திற்காக வாடாவிற்குச் சென்றனர்.

பாபாவின் உடல்நிலை கவலைக்குரியதாக இருந்தபோது, சோறென்ன; நீரென்ன! அவர்களுடைய பிராணன் பாபாவிடம் இருந்தது; பிரிவைப்பற்றிய நினைவை அவர்களால் ஒருகணமும் சகித்துக்கொள்ள இயலவில்லை.

எப்படியோ போய், வாடாவில் சாப்பாட்டிற்காக அமர்ந்தனர். சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே அவசர அழைப்பு வந்தது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடோடி வந்தனர். இருந்தபோதிலும், கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்!

ஆயுளென்னும் எண்ணெய் தீர்ந்துவிட்டது; பிராணாஜ்ஜோதி  மங்கியது. அங்கே, பாயாஜி, ஆப்பா கோதேவின் மார்பின்மேல் சாய்ந்தவாறு மீளாத்துயில்கொண்ட பூதவுடல் கிடந்தது.

படுக்கையில் படுத்தவாறோ தூக்கத்திலோ உயிர் பிரியவில்லை. ஆசனத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டு, தம்முடைய கைகளாலேயே தானம் கொடுத்த பிறகு பாபா தேகத்தை உதறினார்.

தம்முடைய மனோகதியை எவரும் அறியாதவாறு சட்டென்று தம் உடலை உதறினார்; முழுமுதற்பொருளுடன் ஐக்கியமாகிவிட்டார்.

ஞானிகள் மாயையின் சக்தியால் தங்களையே சிருஷ்டி செய்துகொண்டு அவதாரம் செய்கின்றனர். மக்களைத் துன்பத்திலிருந்து கைதூக்கிவிடும் காரியம் முடிந்தவுடனே தோன்றாநிலையோடு ஒன்றிவிடுகின்றனர்.

ஒரு நடிகன் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும், தான் யார் என்பதைப் பூரணமாக அறிந்திருக்கிறான். இவ்வாறிருக்க , தம்மிச்சையாக அவதாரம் செய்தவருக்கு மரணம் என்ன சங்கடம்?

உலகத்தின் க்ஷேமத்திற்காக அவதரித்தவர், வேலை முடிந்தவுடன் அவதாரத்தை முடித்துக்கொண்டார். அவரை எப்படி ஜனனத்தாலும் மரணத்தாலும் கட்டிப்போட முடியும்? அவர் லீலைக்காக மானிட உருவத்தை ஏற்றுக்கொண்டவர் அல்லரோ?

பர பிரம்மம் என்று பெருமை பெற்றவருக்கு முடிவு எப்படி சம்பவிக்க முடியும்? 'என்னுடையது என்று எதுவும் இல்லை' என்ற அனுபவம் பெற்றவருக்கு இருப்பதோ இல்லாமற்போவதோ என்ன துன்பத்தை அளிக்க முடியும்?

 


 

Thursday, 15 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சுலோகத்தின் முதல் அடியில் ஐந்து ஒழுங்கு நெறிமுறைகளும், இரண்டாவது அடியில் நான்கு ஒழுங்கு நெறிமுறைகளும், பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பாபாவும் அதே நோக்கத்துடன் அந்தக் கிரமத்தையே அனுசரித்தார் என்று என் உள்மனம் சொல்கிறது.

சிஷ்யன், 1 கர்வமில்லாதவனாகவும் 2 பொறாமை இல்லாதவனாகவும் 3  சாமர்த்தியம் உள்ளவனாவாகவும் 4 மமதை இல்லாதவனாகவும் 5 திடமான அன்புள்ளவனாவாகவும் ,-

6 அவசரப்படாதவனாகவும் 7  அர்த்தத்தை அறிய ஆவலுள்ளவனாகவும் 8 அசூயை (குறைபடும் இயல்பு -  பிறர் செழிப்பு கண்டு ஏக்கம்/வெறுப்பு ) இல்லாதவனாகவும் 9 வீண்பேச்சுப் பேசாதவனாகவும் இருந்துகொண்டு குருவை உபாசிக்கவேண்டும்.

சாயிநாதரின் நோக்கமும் இதுவாகவே இருந்திருக்க வேண்டும்; அதை இந்த ரூபத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் தங்களுடைய பக்தர்களின் நல்வாழ்வுக்காக எந்நேரமும் கருணை பொங்கும் இயல்புடையவர்கள் அல்லரோ!

லக்ஷ்மீ பாயீ, உணவுக்கும் உடைக்கும் நல்ல வசதி படைத்த பெண்மணி. அவருக்கு ஒன்பது ரூபாய் ஒரு பெரிய தொகை அன்று. தாமே அந்த அளவிற்கு தருமம் செய்ய கூடியவர் அவர். ஆயினும், அவருக்கு அளிக்கப்பட்ட இந்த தானம் அபூர்வமானதன்றோ!

அவருடைய பாக்கியம் மிகச் சிறந்தது. அதனால்தான் அவருக்கு இவ்விதமான அற்புதம் நிகழ்ந்தது. சாயியின் கரகமலங்களில் இருந்து நவரத்தினங்களுக்கு இணையான, ரூபாய் நாணயங்கள் ஒன்பதை பெற்றுக்கொண்டார்.

ஒன்பது ரூபாய் பணம் அவர் கைவழியாக எத்தனையோ தடவைகள் செலவாகியிருக்கும்; இனியும் பல தடவைகள் செலவாகும். ஆனால், இந்த ஒன்பது ரூபாய் இமாலயச் சிறப்புடையது; அவருடைய வாழ்நாள் முழுவதும் சாயியை நினைவூட்டப்போகும் தானம் அன்றோ!

தேகத்தை விடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஆயினும், தம்முடைய நினைவு லக்ஷ்மீ பாயீக்கு மரணப்பரியந்தம் இருக்கவேண்டுமென்பதை மனத்தில் கொண்டு, முதலில் ஐந்து ரூபாயும் பின்னர் நான்கு ரூபாயும் பாபா தானமாகக் கொடுத்தார்.

தமதருகில் இருந்தவர்களைச் சாப்பிடப் போகச் சொல்லி, மனத்தளவில் தாம் தெளிவாகவும் உஷாராகவும் இருந்ததை பாபா வெளிப்படுத்தினார். ஆனாலும், ஓரிரு கிராமவாசிகள் அங்கேயே இருக்க விரும்பினர்.

நெருக்கமான நேரம் என்பதை அறிந்து, பிரேமை மிகுந்த கிராமவாசிகள் சிலர், தங்களை பாபாவிடம் இருந்து அகன்று போகச் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தனர்.

ஆனால், உயிர் பிரியும் நேரத்தில் மோஹத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பயந்தவர்போல் பாபா விரைவாக அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார்.



Thursday, 8 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தட்டுகளில் பரிமாறப்பட்ட உணவு ஆறிப்போகலாம்; சாப்பிட உட்கார்ந்தவர்கள் காத்திருக்கும்படி நேரலாம்; ஆனாலும் லக்ஷ்மீ பாயியின் சோளரொட்டி வரும்வரை உணவு தொடப்படாது.

பிற்காலத்தில், தினமும் பிற்பகல் மூன்றரை மணியளவில் லக்ஷ்மீயின் கைகளால் செய்யப்பட்ட இடியாப்பம் வேண்டுமென்று பாபா கேட்பார். அவரருகிலேயே உட்கார்ந்து அதை உண்பார். இது சில நாள்களுக்கு நடந்தது.

பாபா அதில் சிறிதளவே உண்பார். மீதியை லக்ஷ்மீயின் மூலமாகவே ராதாகிருஷ்ண பாயிக்கு கொடுத்தனுப்புவார். காரணம், ராதாகிருஷ்ண பாயீக்கு பாபா அருந்திய உணவில் மீதியை உண்பதில் பிரியம் அதிகம்.

பாபா தேகத்தை உதறிய விவரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது சம்பந்தமில்லாத சோளரொட்டி பற்றிய வெறும்பேச்சு எதற்கு என்று கதை கேட்பவர்கள் நினைக்க வேண்டா. சாயி எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நிதரிசனம் (எடுத்துக்காட்டு) இக் கிளைக்கதை.

கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகின் நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும், அவ்வாறே மேலுலகத்திலும் சாயி நிரந்தரமாக வியாபித்திருக்கிறார். எவர் பிறப்பும் இறப்பும் இல்லாவதரோ , அவரே இந்த சாயீ.

சோளரொட்டிக் கதையின் சாராம்சம் இந்த ஒரு தத்துவமே. லக்ஷ்மீ பாயீ பற்றிய இனிமையான இக் காதலி தானாகவே என் மனத்தில் உதித்தது, கதைகேட்பவர்களின் நன்மைக்காகவே என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

லக்ஷ்மீ பாயீயின் சேவை மகத்தானது! சாயீ அதை எப்படி மறக்கமுடியும்? அவர் அதை ஞாபகத்தில் வைத்திருந்தார் என்பதை நிதரிசனம் செய்யும் அற்புதத்தைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள்.

பிராணன் தொண்டைவரை வந்துவிட்டிருந்த போதிலும், சரீரத்தில் கொஞ்சமும் திராணி இல்லாதுபோன போதிலும், உயிர் பிரியும் நேரத்தில் பாபா தமது கைகளாலேயே லக்ஷ்மீ பாயீயிக்குக்குத் தானம் கொடுத்தார்.

தம்முடைய பாக்கெட்டில் கையை விட்டு முதல் தடவை ஐந்து ரூபாயும் இரண்டாவது தடவை நான்கு ரூபாயும் வெளியே எடுத்து லக்ஷ்மீ பாயீயின் கையில் வைத்தார். இதுவே பாபாவின் கடைசி செயல்!

இச் செயல் நவவித பக்திபற்றி பாபா அளித்த சூசகமா? அல்லது, நவராத்திரிப் பண்டிகையில் செய்யப்படும் துர்க்கா பூஜையையொட்டி சிலன்கண் (விஜயதசமி) நாளன்று எல்லையைக் கடக்கும் சடங்கில் அளிக்கப்படும் தக்ஷிணையா?

அல்லது, ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த உபதேசத்தில் விவரித்த, சிஷ்யர்களுக்குண்டான ஒன்பது ஒழுங்கு நெறிமுறைகளை ஞாபகப்படுத்தினாரா?

ஸ்ரீமத் பாகவதத்தில் 11  ஆவது காண்டத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் 6  ஆவது சுலோகத்தின் அற்புதத்தைப் பாருங்கள். இந்த சுலோகம் குருவிடமிருந்து சிஷ்யன் எவ்வாறு பயனடைய வேண்டும் என்பதையும், எந்தெந்த ஒழுங்கு நெறிமுறைகளைக் கையாளவேண்டும் என்பதையும் விவரிக்கிறது. 




Thursday, 1 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"லட்சுமி, எனக்குப் பசி எடுக்கிறது." "பாபா, நான் இப்போதே பொய் உங்களுக்குச் சில சோளரொட்டிகள் கொண்டுவருகிறேன்."

என்று சொல்லிக்கொண்டே லக்ஷ்மி தம் இல்லத்திற்குச் சென்றார். சோளரொட்டி காய்கறி பதார்த்தம், சட்டினி இவற்றைச் சுடச்சுடச் செய்து எடுத்துக்கொண்டு தாமதம் இன்றித் திரும்பி வந்தார். அந்தச் சிற்றுண்டியை பாபாவின் எதிரில் வைத்தார்.

பாபா அந்தத் தட்டை எடுத்து ஒரு நாயின் முன்னே வைத்தார். லக்ஷ்மீ பாயி உடனே கேட்டார், "பாபா, நீங்கள் என்ன இவ்வாறு செய்கிறீர்கள்?"-

"நான் ஓடோடிச் சென்று என்னுடைய கைகளாலேயே  சீக்கிரமாக ரொட்டி செய்துகொண்டு வந்தேன். அதற்குப் பலன் இதுதானா? உணமையான மகிழ்ச்சியை நாய்க்கன்றோ கொடுத்துவிட்டீர்கள்!-

"நீங்கள் பசியாக இருந்தீர்கள்; அந்தப் பசியைத் தணிப்பதற்கு இதுதான் வழியா? ஒரு துண்டுகூட நீங்கள் வாயில் இடவில்லை; நான் இங்கே தவித்துக்கொண்டு நிற்கிறேன்!"

பாபா அப்பொழுது லக்ஷ்மீ பாயீயிடம் கூறினார், "நீ ஏன் வீணாகி வருத்தப்படுகிறாய்? நாயின் வயிறு நிறைந்தால், நான் திருப்தியடைகிறேன் என்று அறிவாயாக.-

"இந்த நாய்க்கு உயிர் இல்லையா? எல்லாப் பிராணிகளுக்கும் பசி என்பது ஒன்றுதான். அது ஊமை; நான் பேசுகிறேன். எனினும், பசியில் எதாவது பேதம் உண்ட என்ன?-

"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக! இது எங்கும், என்றும், பிரமாணம் என்றும் அறியவாயாக."

இது அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி; ஆயினும் போதனையோ ஆன்மீக பாஷை. சாயியின் உபதேசபரமான திருவாய்மொழி இவ்வாறே; பிரேமையெனும் ரசத்தால் பரிபக்குவம் செய்யப்பட்டது.

மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய தோஷத்தையும் (குறையையும்) ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது. ஆன்மீக போதனை அளித்து சிஷ்யர்களை மகிழ்வித்தார்.

பாபாவின் இந்த உபதேசத்திலிருந்து லக்ஷ்மி பாயியின் தினப்படிச் சோளரொட்டி சேவை ஆரம்பித்தது. தினமும் பகல் வேளையில் சோளரொட்டி சையது அதை உடைத்துப் பாலில் ஊறவைத்து பிரேமையுடன் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

பாபாவும், பிரேமையுடனும் பக்தியுடனும் அளிக்கப்பட்ட அந்தச் சோளரொட்டியைத் தினமும் சாப்பிட ஆரம்பித்தார். சில சமயங்களில் அது நேரத்துடன் வந்து சேராவிட்டால், பாபா சாப்பிடுவதற்கு எழுந்திருக்கமாட்டார்.

லக்ஷ்மீயின் சோளரொட்டி நேரம் தவறினால், தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டிருந்தாலும், சாப்பிடும் வேளை கடந்து விட்டிருந்தாலும், பாபா ஒரு கவளம் உணவையும் வாயில் இடமாட்டார்.