valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சுமார் அரைநாழிகை (12 நிமிடங்கள்) கழிந்த பிறகு தேவ் மறுபடியும் பாபாவின் சமீபத்திற்கு வந்தார். வசைமழை அப்பொழுதும் பொழிந்து கொண்டிருந்தது. "நீர் எதற்காக மேலே வந்தீர்?" என்று பாபா கேட்டார்.

"வெளியே போம், வாடாவிற்குப் போய்ச்சேரும்!" இதைக் கேட்ட தேவ் பாபாவின் ஆணைக்குப் பணிந்து அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு வாடாவிற்குத் திரும்பினார்!

பிறகு அவர், நடந்ததையெல்லாம் எவ்வாறு நடந்ததோ அவ்வாறே ஜோக்கிடமும் பாலக்ராமிடமும், யதார்த்தமாகவும் முழுமையாகவும் விவரித்தார்.

பிறகு சுமார் ஒரு நாழிகைக்கு (24  நிமிடங்கள்) வசைமொழியும் சாபங்களும் தொடர்ந்து பொழிந்தன. நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழிந்த பிறகு, பாபாவே பக்தர்களைத் தம்மிடம் அழைக்க ஆரம்பித்தார்.

மற்றவர்களுடன் சேர்ந்து தேவும் பொய் மசூதியில் அமர்ந்தார். ஸ்ரீ சாயி சொன்னார், "முதியவரின் ஜீவன் கலங்கியிருக்கலாம் .-

"கேவலம் கந்தல் துணி என்ன பெரிய விஷயம்? ஆயினும், நான் வசைமாரி பொழிந்து அவருடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேன். ஆனால், அவர் அதைத் திருடிவிட்டார். அவ்வாறிருக்க நான் வேறென்ன செய்யமுடியும்? என்னால் அதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

"ஆனால், அல்லா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரும் இவரைச் சீர் செய்து ஆசியளிப்பார்." பிறகு, மன்னிக்கும் குணமே உருவான சாயி கேட்டார், "பாவூ, நீர் தக்ஷிணை கொடுப்பீரா?"

தேவ் கேட்டார், "எவ்வளவு கொண்டுவர வேண்டும்?" "பன்னிரண்டு கொண்டுவரும், சீக்கிரம்" என்று பாபா சொன்னார். ஆனால், தேவ் பாக்கெட்டில் பார்த்தபோது, ஒரு நோட்டுதான் இருந்தது; அதை உடைத்துச் சில்லறையாக மாற்றமுடியவில்லை.

தேவ் நிலைமையை பாபாவிடம் சொன்னார். "இருக்கட்டும், எனக்கு வேண்டா. இன்று காலையில் நீர் இரண்டு தடவை தக்ஷிணை கொடுத்தீர். எனக்கு அது ஞாபகமில்லாமல் போய்விட்டது" என்று பாபா சொன்னார்.

இருந்தபோதிலும், தேவ் தேவையான பணத்தைத் தேடிகொண்டுவது பாபாவிடம் அளித்தார். அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்தார்.

"இப்பொழுதெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறீர்?" என்று பாபா தேவைக் கேட்டார். "ஒன்றும் இல்லை" என்று தேவ் பதிலளித்தார். உடனே, பாபா தேவுக்கு ஆணையிட்டார், "நியாயமாகப் போதி வாசித்துக்கொண்டிரும்.-

"நீர் பொய் வாடாவில் உட்கார்ந்துகொண்டு நித்திய நியமமாகப் பொதியை வாசியும். வாசிக்கும் சங்கதிகளை எல்லோருக்கும் பாவத்துடன் எடுத்துச் சொல்லும்.

"உமக்குத் தங்கச்சரிகை போட்ட அழகான சால்வையை அளிக்க நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் ஏன் கந்தல் துணிகளைத் திருடச் சொல்கிறீர்?" ஏன் இந்தத் திருட்டு வேளையில் இறங்குகிறீர்?"

 


 

Thursday, 2 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சந்தர்ப்பத்தில் தேவ் கேட்டார், "இங்கே கந்தல் துணி ஏதாவது இருக்கிறதா என்ன?" பாபா இருக்கையிலிருந்து எழுந்தவாறே சொன்னார், "நீர் அதைத் தேடும். உம்முடைய திருட்டுப்புத்தி கெடுதலானது.-

"குறும்புத்தனமான குழந்தை ஏதாவது அதை எடுத்திருக்கலாம். பாரும் பாரும்; இங்கேதான் எங்காவது இருக்கும்". இதைக் கேட்ட தேவ் மேலும் தேட ஆரம்பித்தார்; ஆனால், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சாயி புருவங்களைச் சுருக்கிக்கொண்டு இங்குமங்கும் பார்த்துவிட்டு, தேவை முறைத்துப் பார்த்துச் சத்தம் போட்டார். அவர் ஏசியதாவது,-

"நீர் ஒரு பித்தலாட்டக்காரன். உம்மைத் தவிர வேறு யார் இந்த நேரத்தில் கந்தல் துணியைத் திருட இங்கு வருவான்? நான் உம்மை, உம்மைதான், திருடனென்று கொள்கிறேன்.-

"இவ்வாறு இங்கு நீர் வந்தது திருடுவதற்காகவா? தலைமயிர் கறுப்பிலிருந்து வெளுப்பாக மாறியும் உம்முடைய கெட்ட பழக்கத்தை நீர் லவலேசமும் (சிறிதளவும்) கைவிடவில்லை. -

"நான் உம்மைக் கோடரியால் வெட்டுவேன்; கண்டந்துண்டமாக வெட்டிப் போடுவேன்; உயிரைப் பறிப்பேன்! நீர் என்னுடைய கைகளிலிருந்து எங்கே தப்பிச்ச செல்ல முடியும்? நீர் எங்கே சென்றாலும் அங்கே வந்து உம்மைக் கொல்வேன்!-

"உம்முடைய இல்லத்திலிருந்து நெடுந்தூரம் கடந்து ஷிர்டிக்கு வந்தது திருடுவதற்காகவா? உம்முடைய பணத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளும். என்னுடைய கந்தல் துணியைத் திருப்பிக் கொடும்."

சாயி கோபத்தால் முகம் சிவந்து கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார். வசைமொழியும் சாபங்களும் கொட்டுமழையாகப் பொழிந்தன. பாபா கோபத்தாலேயே பாலாசாஹேப் தேவை எரித்துவிடுவார்போல் தோன்றியது.

சாயிநாதரின் கோபத்தை தேவ் வியப்பும் ஆச்சரியமும் நிரம்பியவராய் பயம் கலந்த மரியாதையுடன் பார்த்தார்; செய்வதறியாது திகைத்து நின்றார்.

அப்பொழுது பாபாவின் அண்மையில் தேவ் மட்டும் இருந்தார். அடி கிடைக்கும் போலிருந்தது; அல்லது பாபா விசுவரூப தரிசனம் காட்டுகிறாரோ! அந்த எண்ணமே அவருக்கு ஆனந்தத்தை அளித்தது.

"சட்காவை எடுத்து பலமாக அடிக்கப்போகிறாரோ? நான் தனியாக இவரிடத்தில் மாட்டிக்கொண்டேனே! சரி, அவர் இஷ்டப்படி எதுவும் செய்யட்டும்.-

"ஆயினும் இது என்ன கந்தைத் துணி விடுகதை?" அதை மாத்திரம் தேவால் புரிந்துகொள்ள இயலவில்லை. அதே சமயம், "போம், இங்கிருந்து போய்விடும்!" என்று பாபா சொன்னவுடன் அவர் படிகளை நோக்கி நடந்தார்.

"கந்தல் துணி' என்ற வார்த்தையின் ரகசியமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் எனக்கு இல்லை. ஆயினும், சாயியின் கிருபையால் அதைத் தெரிந்துகொண்டபின் கேட்பவர்களுக்குச் சொல்லுவேன்."

 


 

Thursday, 26 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவ் பதில் கூறினார், "இங்கே, நான் இங்கேதான் இருக்கின்றேன் பாபா".பாபா அவரை வினவினார், "ஏன் எனக்கு ஏழு ரூபாய்தான் கொடுத்தீர்?"

தேவ் சொன்னார், "நான் இருப்பது ரூபாய் கொடுத்தேன் பாபா." பாபா கேட்டார், "இது யாருடைய பணம்?" தேவ் சொன்னார், "பாபா, இது தங்களுடைய பணம். " பாபா கேட்டார், "அப்படியானால் நீர் ஏன் நழுவப்பார்க்கிறீர்?-

"வாரும், இங்கு வந்து என்னருகில் அமைதியான மனத்துடன் உட்காரும்". தேவ் பாபாவின் ஆணைக்கு அடிபணிந்தார்.

நித்திய நியமத்தின்படி ஹாரதி நடந்து முடிந்தது. கூடியிருந்தவர்கள் அவரவர் இல்லங்களுக்கு திரும்பினர். தேவ், பாலக்ராமைச் சந்தித்து முன்பு கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்டார்.

அவரிடம் பூர்வ விருத்தாந்தத்தைச் சொல்லும்படி கேட்டார். பாலக்ராமும் பழைய நிகழ்ச்சியை ஆதியோடந்தமாக விவரித்தார். தேவ் அவரை மேலும் வினவினார். "பாபா எப்படி உங்களை உபாசனை மார்க்கத்தில் வழிகாட்டினார்?-

"பிரம்ம சிந்தனை எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்தாரா? என்னுடைய ஆர்வத்தைப் பூர்த்திபண்ணுங்கள் !" தேவ் மிகப் பணிவாகப் பிரார்த்தனை செய்தார்.

பாலகிராம் தேவின் ஆர்வத்தைப் பூர்த்திபண்ணுவதற்காகப் பேச ஆரம்பித்தபோது பாபாவே பாலா சாஹேப் தேவைக் கூப்பிட்டனுப்பினார்.

சாயி பேரன்புடையவர் அல்லரோ! தேவை அழைத்து வருவதற்காக சந்த்ரூவை அனுப்பினார். ஒருகணமும் தாமதியாது. தேவ் பாபாவைக் காண்பதற்கு வந்தார்.

அப்பொழுது மாலை நான்கு மணி ஆகியிருந்தது. சாயி மசூதியின் கைப்பிடிச்சுவரை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு சாய்ந்து நின்று கொண்டிருந்தததை தேவ் கண்டார்.

அங்கே சென்றவுடன் தேவ் வந்தனம் செய்தார். பாபா அவரை ஒரு கேள்வி கேட்டார், "நீர் யாரிடம், எங்கு, எதைப்பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருந்தீர்?"

தேவ் பதில் கூறினார், "நான் காகா தீக்ஷிதர் வாடா மாடியில் பாலக்ராமிடமிருந்து தங்களுடைய கீர்த்திபற்றிய சங்கதிகளை கேட்டுக்கொண்டிருந்தேன்".

"இருபத்தைந்து ரூபாய் கொண்டுவாரும்" என்று பாபா தேவுக்கு ஆணையிட்டார். உடனே தேவ் பணத்தைக் கொண்டுவந்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

பாபா கேட்டார், "எத்தனை கொண்டு வந்தீர்? தேவ் சொன்னார், "இருபத்தைந்து". "வாரும், வந்து என்னுடன் உட்காரும்" என்று பாபா அழைத்தார். தேவ் பாபாவுடன் மசூதிக்குள் சென்றார்.

பாபா கம்பத்தினருகில் அமர்ந்தார். மசூதியில் வேறு எவரும் இல்லை. பாபா சொன்னார், "நீர் எனக்குத் தெரியாமல் என்னுடைய கந்தல் துணியைத் திருடிவிட்டீர்".

"எனக்குக் கந்தல் துணியைப்பற்றி ஏதும் தெரியாது" என்று தேவ் உறுதியளித்தார். ஆகவே, சாயி அவரிடம் சொன்னார், "அப்படியானால் அது இவ்விடந்தான் எங்காவது இருக்கவேண்டும்".

 


 

Thursday, 19 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஆகவே, சாயியே எனக்குப் பிரேமையையும் உணர்வையும் ஊட்டி 'வாசி' என்று அருள் பாலித்த பிறகுதான், மன உளைச்சல் ஏதுமின்றி மறுபடியும் ஞானேச்வரி வாசிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நான் முடிவுசெய்துவிட்டேன்.-

"சாயி ஆணையிட்ட பிறகே, அவருடைய பாதங்களில் நிட்டை வைத்து நான் ஞானேச்வரி படிக்கப் போகிறேன். இவ்வாறு நிச்சயம் செய்தபின் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டேன். " (தேவின் கூற்று)

ஒரு மஹோதயப்பருவ நாளன்று குருபூஜை உற்சவத்தைக் காண்பதற்காகத் தாயார், சகோதரி, இன்னும் சிலருடன் தேவ் ஷிர்டிக்குச் சென்றார்.

அங்கு ஜோக், தேவ் அவர்களைக் கேட்டார், "நீர் ஏன் இப்பொழுதெல்லாம் தினமும் ஞானேச்வரி வாசிப்பதில்லை?" தேவ் அளித்த பதிலைக் கேளுங்கள்.

"ஞானேச்வரியின் மீது எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. ஆனால், அது எனக்கு சித்தியாகவில்லை. இந்த நிலையில், பாபா என்னை எப்பொழுது படிக்கச் சொல்கிறாரோ அப்பொழுதுதான் படிக்கப்போகிறேன்".

ஜோக் ஒரு யுக்தி சொல்லில்கொடுத்தார், "ஞானேச்வரி புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்து சாயி பாபாவின் கைகளில் கொடுங்கள். அவர் அதைத் திருப்பிக் கொடுத்த பிறகு நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்." தேவ் பதிலளித்தார்.

"எனக்கு அதுமாதிரி யுக்திகள் தேவையில்லை. பாபா என் அந்தரங்கத்தை அறிவார். ஆயினும், அவர் ஏன் என்னை 'வாசி' என்று தெளிவாகச் சொல்லி என்னுடைய மனத்தின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை?"

பிறகு தேவ் சமர்த்தரை தரிசனம் செய்தபோது ஒரு ரூபாயை தக்ஷிணையாக அர்ப்பணம் செய்தார். "ஏன் ஒன்று? இருபது கொண்டுவாரும்" என்று பாபா அவரிடம் சொன்னார்.

ஆகவே, தேவ் இருபது ரூபாயைக் கொண்டுவந்து பாபாவிடம் அளித்தார். அன்று இரவு தேவ் பாலக்ராமைச் சந்தித்தார். முன்பு நடந்த நிகழ்ச்சியொன்றால், பாபாவின் கிருபையைப் பெற்ற விவரத்தைச் சொல்லும்படி அவரைக் கேட்டார்.

"நாளைக்கு ஆரத்தி முடிந்தபின் எல்லாவற்றையும் உங்களுக்கு விவரமாகச் சொல்கிறேன்" என்று சொல்லி பாலக்ராம், தேவ் அவர்களை ஆசுவாசப்படுத்தினார். தேவும் 'சரி' என்று சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் தரிசனத்திற்காக தேவ் மசூதிக்குச் சென்றபோது பாபா அவரிடம் மேலும் இருபது ரூபாய் கேட்டார். தேவும் மிகுந்த சந்தோஷத்துடன் கொடுத்தார்.

மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தேவ் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பாபா கேட்டார், "எங்கே? இந்தக் கூட்டத்தின் ஒரு மூலையில் தேவ் எங்கே மறைந்து கொண்டிருக்கிறார்?"

 


 

Thursday, 12 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆன்மீகப் பாதையில் நாட்டமிருந்தவர்கள் சாயியின்மேல் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர். அவர்களை எல்லாத் தடங்கல்களிலிருந்தும் விடுவித்து, ஆத்மானந்தம் பெறுவதற்கு அருள் செய்தார் சாயி.

இது சம்பந்தமாக சுவாரசியமான அனுபவம் ஒன்று உண்டு. பாலா சாஹேப் தேவின் ஆழ்ந்த விருப்பமொன்றைப் பூர்த்திசெய்து அவர் செய்துகொண்ட உறுதியொன்றை நிறைவேற்றி அருள் செய்தார் பாபா. அத்துடன் சேர்த்து அவருக்கு பக்தியையும் ஊட்டினார்.

பகல் நேரத்தில் பணி செய்து சம்பாதிப்பதைத் தவிர பிழைப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லாதிருந்தவர் தேவ். ஆனாலும், இரவு நேரத்தில் ஆன்மீக அப்பியாசங்கள் செய்வதில் தடைகள் ஏன் ஏற்படவேண்டும்?

தினமும் தவறாது ஞானேச்வரி வாசிக்கவேண்டுமென்று தேவ் பலகாலம் விரும்பினார். ஆனால், அதைக் கையில் எடுத்தாலே ஏதாவதொரு விக்கினம் வந்துகொண்டிருந்தது. விரும்பியவாறு செயல்பட இயலவில்லை.

தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையில் ஒரு அத்தியாயம் படிக்கவேண்டுமென்ற நியமத்தின்படி செயல்பட முடிந்தது. ஆனால், அதேபோல் ஞானேச்வரியையும் படிக்கமுயன்றபோது, பல விக்கினங்கள் எழுந்தன.

இதர கிரந்தங்களை (நூல்களைக்) கையிலெடுத்தால் நித்திய நியமமாகப் படிக்க இயன்றது. அவர் பெரிதும் விரும்பிய ஞானேச்வரியைப் பொறுத்தவரை இந்த நியமம் வழிக்கு வரவில்லை.

ஒருசமயம் தேவ் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஷிர்டிக்குச் சென்றார். அங்கிருந்து பௌண்டிலிருந்த தம் சொந்த வீட்டிற்கு சுகமாகவும் விச்ராந்தியாகவும் இருப்பதற்காகச் சென்றார்.

அங்கும் மற்ற வேலைகள் ஒழுங்காக நடந்தன. போதி வாசிப்பது போன்ற மற்ற நித்திய நியமங்கள் முறையாக நிறைவேறின. ஆனால், ஞானேச்வரிபற்றிய ஆழ்ந்த விருப்பம் நிறைவேறவில்லை. அதற்கு வேளை வரவில்லை!

ஞானேச்வரியைக் கையிலெடுத்தபோதெல்லாம்  பல குறுக்குச் சிந்தனைகளும் சந்தேகங்களும் உள்ளே எழுந்தன. மேலெழுந்தவாரியாகப் படிக்க இயன்றதே தவிர, மனம் கனிந்து பிடிக்கமுடியவில்லை.

மன ஏக்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உறுதி சித்தியாகவில்லை. உண்மையில், ஒரு நாளைக்கு ஐந்து ஓவிகள்கூட நித்திய நியமமாக பிடிக்கமுடியவில்லை.

"தினமும் ஐந்து ஓவிகளாவது (சுலோகங்களாவது) படிக்கவேண்டுமென்று மனத்தில் நிச்சயம் செய்துகொண்டேன். அந்த நியமத்தைக்கூட என்னால் ஆர்வத்துடன் கடைபிடிக்க இயலவில்லை. -

 


 

Thursday, 5 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


என் மைத்துனரின் கண்ணில் பட்டால், உடனே அதை எடுத்துச் சென்று கடலில் ஜலசமாதி செய்துவிடுவார் என்று நான் உள்ளூர உணர்ந்தேன்.

அதை வீட்டில் வைத்திருப்பதில் பிரயோஜனம் ஏதுமில்லை. என் மைத்துனர் அதைப் பார்த்துவிட்டால் மூழ்கடித்துவிடுவார். பக்தரல்லாத எவரிடமும் அதை நிம்மதியான மனத்துடன் கொடுக்கவும் முடியாது.

நன்கு சிந்திக்காமல் யாருக்காவது கொடுத்து, அவர் அதை யோக்கியமாக வழிபடாமல் விட்டுவிட்டால், என் மனம் நிரந்தரமாக வேதனைபட்டுக்கொண்டிருக்கும். இதுவே என்னுடைய நீண்டநாள் கவலையாக இருந்தது.

ஆதலால், அது நன்கு பராமரிக்கப்படக்கூடிய ஒரு நல்ல இடத்தை நான் கண்டுபிடிக்கவேண்டும்.  விதிமுறைகளின்படி எவருடைய வீட்டில் அது நன்கு பரமாரிக்கப்படுமோ, அவருடைய கையில் சிற்பத்தை ஒப்படைக்கவேண்டும்.

நான் இவ்வாறு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தைத்துக்கொண்டிருந்தபோது பீர் மௌலானா (வேறொரு இஸ்லாமிய ஞானி) அவர்களின் தர்பாருக்குச் சென்று, அவர் சிஷ்யர் இஸ்மூ முஜாவரிடம் எல்லா விவரங்களையும் கலந்துரையாட வேண்டுமென்ற  நல்ல யுக்தியை சாயியே என் மனத்தில் எழும்படி செய்தார்.

உடனே நான் பீர் மௌலானாவின் தர்பாருக்குச் சென்று இஸ்மூ முஜாவரிடம் தனிமையில் எல்லா விவரங்களையும் தெரிவித்தேன்.

சிற்பம் உங்களிடம் பத்திரமாக இருக்கும் என்று நாங்கள்  இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்தோம். அன்றைய தினமே நாங்கள் இருவரும் மனத்தில் இவ்வாறு உறுதிசெய்து கொண்டோம்.

சாயியின் இந்தப் புடைச்சிற்பம் உங்களுடைய இல்லத்தில் இருக்கவேண்டும். நாங்களே அதை எடுத்துகொண்டுபோய் உங்களிடம் சேர்ப்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் அது தகுந்த இடத்தில இருக்கும்.

இவ்வாறு செய்யப்பட்ட நிச்சயத்தின் பிரகாரம், நாங்கள் உங்களிடம் பிரதிமையை பயபக்தியுடன் அளித்தோம். நீங்கள் சாப்பிடத் தயாராக இருந்த நிலைமையைப் பார்த்தால் நான் உடனே திரும்பிவிட்டேன்.

இவ்வளவு நீளமான காதையைக் கேட்பதற்கு அப்பொழுது உங்களுக்கு அவகாசம் (காலம்) இல்லை. ஆகவே, ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சாவகாசமாச் சொல்லிக்கொள்ளலாம் என்ற உத்தேசத்தில் (நோக்கத்தில்) நான் திரும்பிவிட்டேன்.

இன்று சொல்லலாம், நாளை சொல்லலாம், என்று தள்ளிபோட்டுப் போட்டு, ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்பாராதவிதமாக, நாம் இருவரும் இன்று பரஸ்பரம் சந்தித்தோம்.

எனக்குப் பழைய காதலி ஞாபகம் வந்தது. நீங்களும் எனக்கு சொப்பன அற்புதத்தைச் சொன்னீர்கள். இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் அபூர்வமன்றோ! இது ஓர் அற்புதாமான லீலையன்றோ ! (அல்லீ முஹம்மது அவர்களின் கூற்று இங்கு முடிகிறது.)

கதைகேட்பவர்களே! இப்பொழுது, பிரேமை மிகுந்த பக்தர்களை சாயி எவ்வாறு அன்புடன் நடத்தினார் என்பதை விளக்கும் இன்னொமொரு காதையை நிலையான சித்தத்துடன் கேளுங்கள்.

 


 

Thursday, 28 September 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


நேராக அபோலோ பந்தருக்கு சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி, கடல்மேல் எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று, படத்தை நீரில் மூழ்கடித்தார்.

அவர் அத்தோடு நிற்கவில்லை. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விநியோகம் செய்திருந்த படங்களையும் கேட்டுத் திரும்பவாங்கி, பாந்த்ராவில் முன்பு செய்த வழிமுறையிலேயே கடலில் மூழ்கடித்தார்.

மைத்துனர் அவர்களிடம் சொன்னார், 'அப்துல் பாபா கடுங்கோபம் அடைந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்த ஆகவேண்டும்.' இவ்வாறு அவர்களை வேண்டிக்கொண்டார்.

என்னிடமும், என் சகோதரர் மற்றும் சகோதரியிடமும் கொடுத்திருந்த படங்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டார். இவ்வாறாக, எல்லாப் புகைப்படங்களையும் (ஆறு) கையகப்படுத்தினார்.

எல்லாப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு கோபம் நிரம்பியவராய் பாந்த்ராவில் பூமியும் கடலும் சந்திக்கும் பிரதேசத்திற்கு சென்றார்.

ஒரு மீனவரை கூப்பிட்டு அவரிடம் எல்லாப் பிரதிகளையும் ஒப்படைத்துக் கடல்நீரில் மூழ்கடிக்கச் செய்தார்.

நான் அப்பொழுது வியாதியால் பீடிக்கப்பட்டு நிலையில் அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தேன். ஆகவே, அவர் எனக்கு அதுபோலவே அறிவுரை கூறினார். 'இந்தப் படங்களால் சங்கடங்கள் விளையும். -

'அதனால், நீர் அவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துக் கடலில் மூழ்கடித்தால்தான் உம்முடைய வியாதி நிவாரணம் அடையும். இதை நிர்த்தாரணமாக அறிவீராக.

ஆகவே, நான் என் உதவியாளரைக் கூப்பிட்டு அவருடைய கையில் சாவிகளைக் கொடுத்து என்னுடைய வீட்டிலிருந்த எல்லா ஞானிகளின் படங்களையும் எடுத்துவரச் செய்தேன். அவற்றைத் தீர்த்துக்கட்டுவதற்காக என் மைத்துனரிடம் ஒப்படைத்தேன்.

உடனே அவர் அவற்றைத் தம் தோட்டக்காரர் மூலமாக, சிம்பாயி கோயிலுக்கருகில் கடலில் மூழ்கடிக்கச் செய்தார்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் உடல்நலம் பெற்று என்னுடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்றபோது மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.

நான் உங்களுக்கு அளித்த புடைச்சிற்பம், அப்பொழுதும் முன்பிருந்த மாதிரியே வீட்டுவாயிலை நோக்கியவாறு சுவரில் இருந்ததைக் கண்டு பெருவியப்படைந்தேன்.

எல்லாச் சிற்பங்களையும் உதவியாளர் கொண்டுவந்தாரே, இந்தச் சிற்பத்தைக் கொண்டுவர ஏன் தவறி விட்டார்? ஆகவே, நான் உடனே அதை எடுத்து ஓர் அலமாரியில் மறைத்துவைத்தேன்.