valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 27 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

கதையும் கதையைச் சொல்லும் வாயும் சொல்பவரும் சமர்த்த சாயியாக இருக்கும்போது இந்த ஹேமாட் பந்த் யார்? வேறு புனை பெயரே !

ஆகவே, மேற்கொண்டு அவருடைய மனத்தில் என்ன உதிக்கிறதோ அதைத்தான் நீங்கள் கேட்கப்போகிறீர்கள். வேளை வரும்போது தானாகவே வெளிப்படப் போவதைப்பற்றி  இன்றென்ன கவலை?

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாடட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட , 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் - சமாதி கோயில் நிர்மாணம்' என்னும் முப்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 




Thursday, 20 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"அங்கேதான் நாம் வளையவருவோம்; பேசுவோம், அங்கேதான் நாம் ஒருவரையொருவர் அன்புடன் அணைத்துக்கொண்டு விளையாடுவோம்; எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்போம்."

மாதவராவ் ஸ்ரீசாயியைக் கேட்டார், "இதுதான் நிச்சயமான ஆணையென்றால் அஸ்திவாரத்தை சுபதினமான இன்றே போட்டுவிடுவோம்.-

"தேவா! இது முஹூர்த்த வேளையா? உடனே சென்று ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைக்கட்டுமா?" பாபா உடனே சென்றார், "உடை, உடை". மாதவராவ் ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைத்தார்.

பின்னர் ஒரு கர்பக்கிருஹம் எழுப்பப்பட்டது. முரளீதரனுக்கு ஒரு மேடையும் அமைக்கப்பட்டது. சிலை செதுக்கும் வேலை ஒரு சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், பின்னர் இவ்வாறு நிகழ்ந்தது. பாபாவின் உடல்நலம் தீவிரமாக குன்றியது. அந்திமகாலம் நெருங்கியது. பக்தர்கள் மனம் குழம்பினர்.

பாபுஸாஹிபும் அமைதியிழந்தார். 'வாடாவின் கதி என்ன ஆகப்போகிறதென்று நிச்சயமாகத் தெரியவில்லையே' என்றெண்ணி வருத்தமுற்றார்.

"கடைசியில், பாபாவின் பாதங்கள் கோயில் தரையை மிதிக்கப்போகின்றனவா, இல்லையா? லட்சக் கணக்கில் பணம் செலவழித்தாகிவிட்டது; இப்பொழுது பெரிய தடங்கல் வந்துவிட்டதே!-

"பாபா தேகத்தை உதிர்த்துவிட்டபின், முரளீதரன் எதற்கு? வீடு எதற்கு? வாடா எதற்கு? கோயில் எதற்கு? என்றெண்ணி புட்டி மனமுடைந்து போய் சோகமுற்றார்.

பின்னர், கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்தாலும் வாடா செய்த பெரும் பாக்கியத்தாலும் முடிவில் எல்லாமே பக்தர்களின் விருப்பப்படியும் சாயியின் ஆணைப்படியுமே நடந்தன.

உயிர் பிரியும் நேரத்தில் பாபாவின் திருமுகத்திலிருந்து "என்னை வாடாவில் வையுங்கள்" என்று வெளிப்பட்ட திருவாய்மொழியைக் கேட்டு அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பிறகு, சாயியின் புனிதவுடல் (முரளீதரனுக்காகக் கட்டப்பட்ட) கர்ப்பக்கிருகத்தில் (கருவறையில்) அடக்கம் செய்யப்பட்டது. வாடா, சமாதி கோயில் ஆயிற்று! சாயியின் வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக்கெட்டாதது அன்றோ!

எவருக்குச் சொந்தமான வாடாவில், காதால் கேட்பதற்கே பரமபுனிதமான பெயருடைய சாயியின் புனிதவுடல் அடக்கம் செய்யப்பட்டதோ, அந்த புட்டி மஹா பாக்கியசாலி; எல்லாப் பேறுகளையும் பெற்றவர்.

இந்தக் கதை அவ்வளவு பவித்திரமானது. கேட்பவர்கள் சந்தோஷத்தையும் செல்வத்தையும் பெறுவர். ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன்; ஒரு கணமும் அவருடைய பாதங்களை விட்டுப் பிரியமாட்டேன்.

சாயி உபதேசித்த மார்க்கத்தில் வாழ்க்கை நடத்தி அவரை சந்தோஷப்படுத்தினால் , அனுபவங்கள் இஷ்டமாக இருப்பினும் கஷ்டமாக இருப்பினும், சந்தேகமில்லாமல் வாழ்க்கையின் அபீஷ்டங்கள் (தீவிரமான விருப்பங்கள்) நிறைவேறும். 




Thursday, 13 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சுட்டுவிரலைத் தூக்கி, "இங்கே ஒரு கதவைப் பொருத்து; அங்கே ஒரு ஜன்னல் வை. இங்கே கிழக்குப் பக்கமாக ஒரு நீளமான கூடத்தைக் கட்டு. அது கட்டடத்தின் அழகை மேம்படுத்தும்" என்று யோசனைகள் கூறினார்.

பின்னர், காரிய காரண நிமித்தமாக, பாபுசாஹெப் ஜோக் கின் கைகளால் செய்யப்படவேண்டிய நிர்மாண வேலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலை இவ்வாறு நடந்துகொண்டிருந்தபோது புட்டியின் சித்தத்தில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது (உதித்தது). "இக் கட்டடத்தில் ஒரு கர்ப்பகிருஹம் (கருவறை) சேர்க்கப்பட்டால், முரளீதரனின் சிலை ஒன்றை அங்கு ஸ்தாபனம் செய்யலாம்."

எண்ணம் உதித்ததே தவிர, பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொள்ளாமலும் அவருடைய தெளிவான ஆணையைப் பெறாமலும் புட்டி எந்த வேலையையும் ஆரம்பிக்கமாட்டார்.

இதுவே அவருடைய நித்திய நியமமாக இருந்தது. பாபாவின் அனுமதியே முக்கியம். அது இல்லாமல் எக் காரியத்திலும் புட்டி இறங்கமாட்டார்.

"கூடத்தின் மத்தியில் தடுப்புச்சுவர் எதற்கு? அதனால் என்ன பிரயோஜனம்? இருபுறங்களிலும் சுவர்களை எடுத்துவிட்டு முரளீதரனை அங்கு ஸ்தாபனம் செய்துவிடலாம்." (புட்டியின் சிந்தனை)

தடுப்பு உள்ள கூடத்திற்குப் பதிலாக ஒரு தேவாலயத்தை அமைத்துவிடலாம் என்பதே புட்டியின் விருப்பம். ஆயினும், பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொண்டு அவர் அனுமதியளித்தால் சந்தேகமில்லாமல் அவ்வாறே கட்டவேண்டும்!

ஆகவே அவர் மாதவராவிடம் சொன்னார், "பாபாவை இதுபற்றிக் கேட்போம். பிறகு, தேவனின் (பாபாவின்) விருப்பம் எப்படியோ அப்படியே மேற்கொண்டு திட்டம் போடுவோம்."

பாபா தம்முடைய தினசரி உலாவில் வாடாவுக்கு வந்து கதவருகில் நின்றபோது, சாமா அவரை என்ன வினவினார் என்பதைக் கேளுங்கள்.

"தேவா! கூடத்தின் தடுப்புச் சுவர்கள் இரண்டையும் இடித்துவிட்டு குழலூதும் கண்ணனை அங்கு ஸ்தாபனம் செய்யவேண்டுமென்று பாபுசாஹெப் சொல்கிறார்.-

"மத்தியபாகத்தில் ஒரு மண்டபம் வரும்படியாக அமைத்து, அதில் ஒரு சிம்மாசனம் கட்டி, அதன்மேல் முரளீதரனை ஸ்தாபனம் செய்யலாம். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். -

"இவ்வாறு பாபுசாஹெப் யோசிக்கிறார். ஆயினும் தங்களுடைய அனுமதி தேவை. இந்த ரீதியில், கோயிலும் வாடாவும் இரண்டுமே கிடுகிடுவென்று முடிந்துவிடும்."

சாமாவின் இவ்வார்தைகளைக் கேட்ட பாபா ஆனந்தம் நிரம்பியவராக சொன்னார், "கோயில் வேலை பூரணமாக முடிந்தவுடன் நாமும் அங்கு வந்து வசிப்போம்".

வாடாவின் சுவர்களையே பார்த்துக்கொண்டு பாபா மதுரமான வார்த்தைகளைப் பேசுவார், 'வாடாவின் வேலை பூராவும் முடிந்தபிறகு அதை நாமே உபயோகிப்போம்.-


 

Thursday, 6 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மாதவராவை, "நீர் என் அழுதீர்?" என்று புட்டி கேட்டபோது, அவர் பதில் கூறினார். "ஸ்ரீ சாயியின் அன்பு ததும்பிய வார்த்தைகளைக் கேட்டவுடன் நான் பிரமாவேசம் கொண்டேன்.-

"எனக்குத் தொண்டையை அடைத்தது.  கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. என்னுடைய இதயத்தில் பொங்கிய அன்பு எனக்கு கட்டுப்படாமல் அழுகையாக வெடித்தது. -

"பாபா என்னருகில் வந்து தெளிவாக ஆணையிட்டார், "வாடாவும் தேவாலயமும் திடமான உருவம் பெறட்டும். நான் எல்லோருடைய தீவிரமான விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன்."

இருவரும் ஒரேவிதமான கனவுக்காட்சி பெற்றது பற்றி பாபுசாஹெப் மனம் வியந்தார். மனத்திலிருந்த சந்தேகம் விலகியது. வேலையை ஆரம்பித்துவிடுவது என்று தீர்மானம் செய்தார்.

புட்டி, தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பணக்காரர்! கோயிலுடன் வாடா கட்டுவதற்குண்டான வசதி படைத்திருந்தார். மாதவராவுக்கு நடுத்தர வசதிதான் இருந்தது. ஆயினும் இருவருக்கும் ஒரேவிதமான காட்சி கிடைத்தது.

பரஸ்பரம் கனவுக் காட்சிகள் ஒத்துப்போயின. இருவருமே பரமானந்தத்தால் நிறைந்தனர். கட்டடத்திற்கு ஒரு வரை படம் தயாரித்தனர். இந்த வரைபடத்தைக் காகா (ஹரி சீதாராம் தீக்ஷிதர்) ஆமோதித்தார்.

அடுத்த நாள் காலையில் இம் மூவரும் பாபாவுடன் இருந்தபோது எப்பொழுதும்போல் பாபா சாமாவின் முகத்தைப் பிரேமையுடன் உற்றுப்பார்த்தார்.

அப்பொழுது சாமா கேட்டார், "ஓ, தேவா! இதென்ன உம்முடைய புரிந்துகொள்ளமுடியாத விளையாட்டு! எங்களை நிம்மதியாக தூங்கவும் விடமாட்டேன் என்கிறீர்கள். தூக்கத்திலும் எங்களை உணர்ச்சிவசப்படுத்தி அழவைக்கிறீர்கள்."

இதைக் கேட்டவுடனே பாபா தம் காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டு, "யார் என்ன சொன்னாலும் சரி, நாம் உம்மிடத்திற்கு வந்திருந்தோம்" என்று சொன்னார்.

பிறகு, ஏற்கெனவே விவரிக்கப்பட்ட யோசனை-வரைபடம் பாபாவின் முன்னால் வைக்கப்பட்டது. கோயிலை உள்ளடக்கி வீட்டைக் காட்டும் யோசனைக்கு பாபா உடனே அனுமதியளித்தார்.

மாதவராவ் வரிந்துகட்டிக்கொண்டு செயலில் இறங்கினார். நிலவறையும் முதல் தளமும் அவருடைய நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்டன கிணறும் அவருடைய கைகளால் கட்டப்பட்டது! கட்டுமான வேலை இதுவரை முன்னேற்றியது.

லெண்டிக்குப் போகும்போதும் திரும்பிவரும்போதும் கதவுகளும், ஜன்னல்களும் பொருத்தப்படும்போதும் பாபா ஆர்வத்துடன் கட்டுமான வேலையின் முன்னேற்றத்தை கவனிப்பார்.  



Thursday, 30 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேகத்துடன் வாழும்போது பக்தர்களுக்காகப் பிரீதியுடன் உழைப்பால் உடலைத் தேய்க்கின்றனர். தேகவியோகம் அடைந்த பிறகும் தேகம் விழுந்த இடத்தை பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காக உபயோகிக்கின்றனர்.

இவ்வாறாக, சில ஞானிகள் தேகவியோகம் அடையுமுன்பே தங்கள் சமாதியைக் கட்டும்படி செய்கின்றனர். காலம் வரும்போது, தாங்கள் விரும்பிய இடத்திலேயே தங்கள் உடல் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.

பாபாவும் அவ்வாறே செய்தார். ஆனால், அது யாருக்கும் அப்பொழுது தெரியாது. தம்முடைய சமாதி கோயிலைக் கட்டிக்கொண்டார். அவருடைய லீலை அற்புதமானது!

பாபுசாஹேப் புட்டி என்ற பெயர் கொண்டவர் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரர். பாபா அவருடைய கைகளால் தம்முடைய நினைவுச் சின்னத்தை எழுப்பிக்கொண்டார்.

பாபுசாஹேப் ஒரு பரமபக்தர். சாயி பாதங்களில் சதா மூழ்கியவர். தம் பரிவாரத்துடன் ஷிர்டிக்கு வந்து பாபாவுக்கு சேவை செய்வதற்காக அங்கேயே தங்கினார்.

சாயிபாதங்களின் மீதிருந்த அன்பினால் திரும்பத் திரும்ப ஷிர்டிக்கு வந்து தங்கினார். ஒரு காலகட்டத்தில், ஷிர்டியிலே நிரந்தரமாக வசிக்கவேண்டுமென்று விரும்பினார்.

ஓர் இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழவேண்டுமென்று நினைத்தார்.

இன்று நாம் பார்க்கும் சமாதி மந்திர் (கோயில்) என்னும் பெரிய விருட்சத்திற்கு அப்பொழுதுதான் விதை விதைக்கப்பட்டது. சாயிமஹாராஜுக்குப் பக்தர்களின்பால் இருந்த அன்பின் நினைவுச் சின்னமாக சமாதி கோயில் விளங்குகிறது.

இந்த வேலை எவ்வழியாக ஆரம்பிக்கப்பட்டது ? எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக எழுப்பப்பட்டது? எவ்வாறு தற்பொழுது நாம் பார்க்கும் பரிமாணத்திற்கு வந்தது? முழு விருத்தாந்தத்தையும் இப்பொழுது கேளுங்கள்.

ஷிர்டியில் சிறிய வீடொன்றை கட்டவேண்டுமென்ற சிந்தனை எழுந்தபோதே, தீக்ஷித் வாடா மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது பாபுசாஹேப் புட்டிக்கு ஒரு சுவாரசியமான காட்சி கிடைத்தது.

மாதவரவும் அப்பொழுது அங்கு உறங்கிக்கொண்டிருந்தார். அவருக்கும் அதே காட்சி தோன்றியது. இருவரும் பெருவியப்படைந்தனர்.

"உம்முடைய வாடாவை நிச்சயமாக கட்டும்; தேவாலயத்தையும் உள்ளடக்கி கட்டும்" என்று பாபா ஆணையிடுவதுபோல் பாபுசாஹேப் புட்டி கனவொன்று கண்டார்.

இந்தக் காட்சியைக் கனவில் கண்டவுடன் பாபுசாஹேப் விழித்துக்கொண்டார். ஆரம்பத்திலிருந்து கனவை விரிவாக ஞாபகப்படுத்திக்கொள்வதற்காகப் படுக்கையிலேயே அரைவிழிப்பு நிலையில் படுத்திருந்தார்.

இங்கு இது இவ்வாறு நடந்து கொண்டிருந்தபொழுது மாதவராவ் திடீரென்று அழும் சத்தம் கேட்டது. புட்டி அவரை எழுப்ப முயன்றபோது, நித்திரை முழுவதுமாக கலைந்தது. 



Thursday, 23 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உலகவிஷய பாசங்களால் பிணைக்கப்பட்டிருக்கிறேனே; எப்பொழுது நான் அவற்றிலிருந்து விடுதலை பெறுவேன்?" என்று சொல்லித் துடிக்கும் முமுக்ஷுக்களைக் கரையேற்றுவதற்காகவே சாஸ்திரங்கள் ஏற்பட்டன.

அவ்வகையான உண்மையான பக்தரைக் கண்டதும் ஞானியர் இரக்கத்தால் உந்தப்பட்டு ஏதாவதொரு சாக்குபோக்கைக் கண்டுபிடித்து அவருக்கு சுலபமாக உபதேசம் செய்வர்.

இறைவனும் குருவும் பக்தனுடைய ஆளுமையில் இருக்கின்றனர். பக்தனுடைய மங்களைத்தையே சிந்தையிர்கொண்டு அவனுடைய சங்கடங்களையெல்லாம் தம் தலைமேல் ஏற்றுக்கொள்கின்றனர்.

சாயியின் விசித்திரமான செயல்முறைப்பற்றிய கதை இன்னொன்றை இப்பொழுது சுருக்கமாகச் சொல்கிறேன். எவரும் அறியாதவாறு ஒரு பெரிய நிர்மாணத் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் சாயி!

வேலை சிறியதோ, பெரியதோ, காரணம் எப்பொழுதுமே சொல்லப்படவில்லை. வேலை மாத்திரம் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறும். ஒரு வார்த்தையும் யாருக்கும் சொல்லப்படவில்லை.

திட்டம் இயல்பாக நேர்ந்ததுபோல் ஆரம்பிக்கப்படும். திட்டத்தின் மூலகாரணமோ பெயரோ எவருக்கும் தெரியாது. அதற்கு நேர்மாறாக , எல்லார் மனத்திலும் சம்பந்தமேயில்லாத காரணம் பதியவைக்கப்படும்.

"வாய்ப்பேச்சு வீரன் இதைச் சாதிப்பான்? வெறும் கர்ஜனை செய்யும் மேகம் என்ன மழையைக் கொடுக்கும்"? இப் பழமொழிக்கு நேரிடை அனுபவத்தை அளிப்பதுபோலவே பாபா செயல்பட்டார் என்பதில் சந்தேகமேயில்லை.

பாபாவைப் போன்ற அவதார புருஷர்கள் மக்களுக்கு நன்மை விளைவிக்கவே தோன்றுகிறார்கள். அவர்கள் விரும்பிய காரியம் முடிந்தவுடன் கடைசியில் உருவமில்லாத நிலையில் ஒன்றிவிடுகின்றனர்.

ஆனால், நாமோ, ஏன் பிறந்தோம்? - எங்கிருந்து வந்தோம்? - எங்கே செல்கிறோம்?- பிறவிக்கு மூலகாரணம் என்ன? - பிறவியின் பிரயோஜனம் என்ன? என்பதையெல்லாம் அறியமாட்டோம்.

விரும்பியதுபோல் வாழ்க்கை நடத்துகிறோம். இத்திரியங்களெல்லாம் சக்தியிழந்து போகின்றன. அந்நிலையிலும் ஒரு நல்ல எண்ணம் தோன்றுவதில்லை. என்றோ ஒருநாள் மரணம் வருகிறது.

அன்னை, தந்தை, மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள், இஷ்டமித்திர பந்துக்கள் ஆகியவர்கள் இறந்துபோவதை கண்களால் பார்த்தபிறகும் நமக்கு மனத்தில் நல்ல சிந்தனைகள் தோன்றுவதில்லை.

ஆனால், சாதுக்களும் ஞானிகளும் இவ்வாறல்லர். அவர்கள் தங்களுடைய அந்திமகாலம் எப்பொழுது என்பதை நன்கு அறிந்தவர்கள். கடைசிவரை ஒருமுக மனம் பெற்றவர்கள். நிர்வாண (முக்தி) நேரத்தையும் அறிந்தவர்கள். 




Thursday, 16 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"சாராம்சம் என்னவென்றால், அஞ்ஞானத்தை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டால், எஞ்சியிருப்பது தன்னிறைவு பெட்ரா ஞானமே! ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த சுலோகத்தின்மூலம் குறிப்பால் உணர்த்திய அறிவுரை இதுவே."

(பாபா அளித்த விசேஷ விளக்கம் இங்கு முடிகிறது)

இயல்பாகவே நானா அடக்கம் மிகுந்தவர். இந்தச் சிறப்புமிக்க வியாக்கியானத்தை கேட்டவுடன் பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருகைகளையும் கூப்பிக்கொண்டார்.

பிறகு, சிரத்தையுடனும் நிட்டையுடனும் பிரார்த்தனை செய்தார், "பாபா, என்னுடைய அஞ்ஞானத்தை விலக்குங்கள். யதார்த்தமான கல்வியை அளித்து என்னுடைய கெட்ட அகம்பாவத்தை ஒழித்துகொட்டுங்கள்.-

"வெளித்தோற்றத்திற்கு சாத்விகளைப்போல் நடிப்பதில் பிரியம் கொண்டு உள்ளுக்குள் அகண்டமான விகற்பங்களை வைத்துக்கொண்டு ஒரு கணமும் அவமானத்தைப் பொறுத்துகொள்ளச் சக்தியில்லாத வாழ்க்கை - இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-

"உள்ளுக்குள்ளே கௌரவத்தையும் புகழையும் நாடுதல், காமமும் குரோதமும் உள்ளே பொங்கிக்கொண்டிருக்கும்போது வெளிப்பார்வைக்கு தியானத்தில் மூழ்கியவன்போல் நடித்தல் - இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-

"உள்ளே ஆத்ம நஷ்டத்தைத் தரும் செயல்கள் நிரம்பியிருப்பதால், நற்செயல்களுக்கும் ஆத்ம விசாரத்திற்கும் மனத்தில் இடமில்லாத ஒழுக்கமற்ற வாழ்க்கை, வெளியுலகத்திற்கு பிரம்ம நிட்டையுள்ளவன்போல் நடிப்பு - இது சந்தேகத்துக்கு இடமில்லாத அஞ்ஞானம் அன்றோ?-

"பாபா, கிருபையால் கனக்கும் மேகமாகிய தேவரீர் தங்களுடைய அருள்மழையை பொழிந்து என்னுடைய அஞ்ஞானத் தீயை அணைத்துவிடுங்கள்.  நான் அவ்விதம், அவ்விதந்தான் தன்னியனாவேன்! -

"எனக்கு ஞானத்தைப் பற்றிய உபந்நியாசம் தேவையில்லை. என்னுடைய இமாலய அஞ்ஞானத்தை அழித்து என்னைக் கிருபையுடன் நோக்குங்கள். அந்த கடைக்கண் பார்வையில்தான் என்னுடைய சுகமும் பூரணமான திருப்தியும் இருக்கின்றன."

சாயி, பிரேமையும் கருணையும் நிரம்பியவர். நானாவை நிமித்தமாக வைத்து உங்களுக்கும் எனக்கும் எல்லாருக்கும் கீதையின் விசேஷ அர்த்தத்தை அளித்தார்.

கீதை பகவானின் திருவாய்மொழி; ஆகவே, அது முக்காலத்திற்கும் பிராம்மணமான சாத்திரம். அதை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளலாகாது.

உலகியல் வாழ்வில் மூழ்கிப்போனவர்களுக்கும் ஜீவன்முத்தர்களுக்கும் இருவகையினருக்குமே சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பது தேவையில்லை. சாஸ்திரங்கள் முழுக்ஷுக்களுக்காகவே (முக்தியை நாடுபவர்களுக்காகவே) உண்டாக்கப்பட்டிருக்கின்றன.