valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"தேரோட்டுபவன் திறமைசாலியாக இருக்கும்போது தேரில் அமர்ந்திருப்பவர் ஏன் சஞ்சலப்படவேண்டும்? உலக விவகாரங்களை அமைதியான மனத்துடன் நடத்த வேண்டியதுதானே!-

"தேகத்தின் நடத்தையை மேற்பார்வையை செய்யவேண்டியது புத்தி செய்யவேண்டிய வேலைதான். மனம் இதற்குப் பழகிவிட்டால் எல்லா முயற்சிகளும் விவகாரங்களும் நற்பலன்களை அளிக்கும். -

"கேள்வி, தொடுமுணர்வு, பார்வை போன்ற விஷயங்களை (ஐம்புல ருசிகளை) இந்திரியங்கள் நாடும்போது வீணாக்கச் சக்தியிழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு படியிலும், விழுந்துவிடுவோமோ என்ற பயமும் ஏற்படுகிறது. -

"ஐம்புலன்களால் தேடும் சுகங்கள் அனைத்தும் கடைசியில் சுகமின்மையில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. அஞ்ஞானம் பரம துக்கம்!-

"செவி இனிமையில் (வேடன் ஊதும் குழல்) மயங்கும் மான், கடைசியில் தன் உயிரை இழக்கிறது. யானை தொடுமுணர்வு (சிற்றின்ப) சுகத்தில் மயங்கி மாட்டிக்கொண்டு அங்குசத்தின் குத்தலை அனுபவிக்கிறது. -

"ஒளியைக் கண்டு மயங்கும் விட்டில் பூச்சி நெருப்பில் எரிந்துபோகிறது. நாக்கின் சுவைக்கு அடிமையாகும் மீன் உடனே உயிரை இழக்கிறது. -

"வாசனையால் கவர்ந்திழுக்கப்படும் வந்து தாமரையினுள்ளே மாட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு புலனுமே இவ்வாறு பயங்கரமான விளைவை உண்டாக்கும்போது ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்தால் எப்படிப்பட்ட பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும்?-

"மேற்கூறியவையோ மிருகங்களும் பட்சிகளும் நீர்வாழ்ப் பிராணிகளுமே. இவற்றின் துக்கநிலையைத் திரும்பத் திரும்ப பார்த்தபிறகும் விவேகமுள்ள மனிதன் ஐம்புலன்களின் பின்னால் ஓட வேண்டுமா! அய்யகோ! இதுவன்றி வேறு எது அஞ்ஞானம்?-

"அஞ்ஞானத்தை நாசம் செய்து புலனின்பங்களுக்குக் கடுமுகம் காட்டினால், குழப்பமடைந்த மனம் மாயையிலிருந்து விடுபடும். ஜீவன் ஞான சொரூபத்தை நோக்கித் திரும்பும்; அளவிடமுடியாத சுகம் கிடைக்கும். -

"இதயத்தால் ஹரி-குரு சிந்தனையைச் செய்யும். காதுகளால் அவருடைய சரித்திரத்தை கேளும். மனத்தால் இடைவிடாது அவருடைய உருவத்தை தியானம் செய்யும். நாக்கால் நாமஸ்மரணம் செய்யும்.-

"ஹரி-குருவின் கிராமத்திற்குக் கால்களால் நடந்து செல்லும். அர்ச்சனை செய்யப்பட்ட மலர்களின் நறுமணத்தை மூக்கால் நுகர்ந்து பாரும். இரு கைகளையும் கூப்பி அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்யும். கண்களால் அவரை தரிசனம் செய்யும். -

"இவ்விதமாக ஐம்புலன்களின் நாட்டங்களும் பிரீதியுடன் அவரை நோக்கிச் செலுத்தப்படும்போது பக்தர்களின் நிலை பெரும்பேறு பெறுகிறது. இது கடவுள் - பக்தி இல்லையெனில் வேறு எது கடவுள்-பக்தி!-

 


 

Thursday, 2 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உள்ளே இருப்பது பொன்; ஆனால், அது அழுக்கால் மூடப்பட்டிருக்கிறது. அழுக்கின் உள்ளே பொன் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதை வெளிக்கொண்டுவர நெருப்பு தேவைப்படுகிறது.

"தேகம் ஜனனமாவது மாயாமூலம். தேகத்தின் ஓட்டம் விதிவசப்பட்டது. வாழ்கியின் இரட்டைச் சுழல்களும் (இன்பம்/துன்பம்) ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டவை. ஆகவே, தேகாபிமானம் அஞ்ஞானம். -

"தேகாபிமானத்தை துறந்தவர்களுக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. 'நான்' என்ற நினைவின் சுழல்கள் முற்றும் அடங்கிய பிறகுதான் அஞ்ஞானம் விலகும். -

"மனிதன் தன் சுயரூபத்தை அறியாமலிருப்பதே மாயையின் ஜன்மஸ்தானம் (பிறப்பிடம்). குருவருளால் மாயை விலக்கப்படும்போது இயல்பாகவே சுயரூபஞானம் வெளிப்படுகிறது. -

"இறைவனிடத்தில் பக்தியின்றி இதர சாதனைகளில் சிரமப்படுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?  படைக்கும் கடவுளான பிரம்மதேவரும் மாயையால் ஆளப்படுபவரே. அவருக்கும் பக்திதான் விடிமோட்சம்!-

"பிரம்மலோகத்தை அடைந்தபின்னரும், பக்தியின்றி முக்தியில்லை! அங்கே சென்றபிறகும் பகவானின்மீது பக்தி இல்லாமற்போனால், மறுபடியும் மனிதன் ஜனனமரண சுழலில் மாட்டிக்கொள்கிறான்.-

"ஆகவே, மாயையை விரட்டுவதற்கான ஒரே உபாயம் இறைவனைத் தொழுவதே. இறைவனைத் தொழுபவருக்கு வீழ்ச்சியென்பதே இல்லை; பிறவி பந்தமும் இல்லை. -

"மாயை ஒரு பிரமை என்று ஜனங்கள் சொல்கின்றனர். ஆனால், மாயை, ஞானிகளையும் ஒவ்வொரு படியிலும் ஏமாற்றவல்ல சூனியக்காரி. மாறாக, இறையடியார்களோ, அவளை ஒவ்வொரு சொடக்குக்கும் நடனமாடவைக்கின்றனர்!-

"பண்டிதர்களே ஏமாந்துபோகும் சந்தர்ப்பங்களிலும் எளிய பக்தர்கள் நிலைகுலையாது நிற்கின்றனர். ஏனெனில், அவர்கள் எப்பொழுதும் ஹரிபாதங்களில் மூழ்கியிருக்கின்றனர். பண்டிதர்களோ வித்யாகர்வத்தால் தோல்வியுறுகின்றனர். -

"ஆகவே, மாயையைக் கடப்பதற்கு சத்குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். அவரிடம் அனன்னியமாக சரணடைந்துவிடும். உலகவாழ்வின் பயங்கள் உடனே மறைந்துபோகும். -

"மரணம் தவிர்க்கமுடியாதது; அது வரும்போது வரட்டும். ஆனால், ஹரியின் நினைவை விட்டுவிடாதீர். உடலின் இந்திரியங்கள் வர்ணாசிரம தர்மத்தின்படி (குலம்- வாழ்க்கைப்படிநிலை விதிகளின்படி) செயல்படட்டும். மனம் மட்டும் ஹரிபாதங்களில் மூழ்கியிருக்கட்டும். -

"குதிரைகளைத் தேரில் பூட்டிரியிருப்பதைப்போலவே சரீரம் இந்திரியங்களால் பூட்டப்பட்டிருக்கிறது. திடமான லகான்களின்  மூலம் புத்தியால் இந்தத் தேர் செலுத்தப்படுகிறது.-

"மனம் சங்கற்ப விகற்பங்களால் நிறைந்து சுயேச்சையாக எங்கெங்கோ திரிகிறது. புத்தியே லகான்களைப் பிடித்திழுத்து மனத்தை அடங்குகிறது.-

 


 

Thursday, 23 February 2023

ஷீர்டி சாயி சத்சரிதம்

"கற்பத்திலிருக்கும் சிசுவைப் பனிக்குடமும், முகம் பார்க்கும் கண்ணாடியைத் தூசியும், நெருப்பைச் சாம்பலும் மூடியிருக்கின்றன அல்லவோ?  அதுபோலவே ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது.-

"பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கீதையிலேயே வேறிடங்களில் ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அஞ்ஞானத்தை எடுத்துவிட்டால், ஞானம் இயல்பாகவே பிரகாசிக்கும்.-

"ஞானம் சுயமாகவே நிறைவுபெற்றதாயினும், பாசி மூடிய சுத்தமான நீர் போன்று இருக்கிறது. பாசியை அகற்றும் விழிப்புணர்வு பெற்றவனே சுத்தநீரைப் பெறுகிறான். -

"இது சூரிய, சந்திர கிரஹணங்களைப் போன்றது. அவையென்னவோ எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. ராகுவும் கேதுவும் அவற்றின் பாதையில் குறுக்கிட்டு நம்முடைய பார்வையை மறைக்கின்றன.-

"சூரியனுக்கும் சந்திரனுக்கும் எக் கெடுதலும் ஏற்படுவதில்லை. கெடுவது நம்முடைய பார்க்கும் சக்தியே. அதுபோலவே, ஞானமும் எந்த உபாதையும் இன்றித் தானிருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு ஒளிர்கிறது.-

"கண்களின் பார்க்கும் சக்தி ஞானம். கண்களில் வளரும் புரை அஞ்ஞானம். அதை அவசியம் எடுத்துவிடவேண்டும். -

"கையின் திறமையால் புரையையோ திரையையோ விலக்கித் தூர எறிந்து, பார்க்கும் சக்தியைத் திரும்பப் பெற வேண்டும். அஞ்ஞான இருளை விலக்கவேண்டும்.-

"இவ்வுலகில் கண்களால் பார்த்தறிவதனைத்தும் விவரிக்கமுடியாத மாயையால் நிரம்பியிருக்கிறது. மாயை அனாதி; அவித்யை; வெளிப்படாதது. இது, இதுவே அஞ்ஞானத்தின் விளையாட்டு!-

"ஞானம் உணர்வுபூர்வமானது; உபதேசிக்கக்கூடிய விஷயம் அன்று. குருவைத் தொழுவதும் அவருக்கு சேவை செய்வதும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதும் குருவின் கிருபையைப் பெரும் சாதனங்கள். -

"உலகை சத்தியம் என்று நினைப்பது பெரிய பிரமை. இதுவே, முதலாவதாக எடுத்தெறியப்படவேண்டிய, ஞானத்தை மூடியிருக்கும் இருள். அப்பொழுதுதான் பேரறிவாகிய முழுமுதற்பொருள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். -

"உலகவாழ்வின் விதை அஞ்ஞானம். குருவின் கிருபையாகிய மையைக்  கண்களில் இட்டுகொண்டால் கண்களை மூடியிருக்கும் மாயையாகிய திரை விலகும். சுபாவமான ஞானம் எஞ்சி நிற்கும். -

"ஞானம் என்பது அடைய வேண்டிய பொருளன்று. அது ஏற்கெனவே அடையப்படும் பிரகாசித்துக்கொண்டு விளங்குகிறது. வழியிலிருக்கும் தடங்கல் அஞ்ஞானமே.-

"இறைவனையும் பக்தர்களையும் வெவ்வேறாகக் கருதுவது அஞ்ஞானத்தின் மூலம், இந்த அஞ்ஞானத்தை எடுத்தெறிந்துவிட்டால் எஞ்சியிருப்பது பூரண ஞானம். -

"பழுதையில் பாம்பு தெரிவது அஞ்ஞானத்தின் தூய உதாரணம். உண்மையில் அப் பொருள் என்னவென்று அறிந்துகொள்வது அஞ்ஞானத்தை விலக்கிவிடுகிறது. எஞ்சி நிற்பது அப் பொருள் பழுதையென்று ஞானமே.-





 

Thursday, 16 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

 

நானா சொன்னார், "குருவின் பாதங்களில் பணிவுடன் நமஸ்காரம் செய்து அவருடைய சேவையில் வாழ்நாள் முழுவதையும் கழிக்கத் தயாராகி, மரியாதையுடன் அவரைக் கேள்வி கேட்பவனுக்கு ஞானிகள் தத்துவ விளக்கத்தை அளிக்கின்றனர்.-

"கிருபாமூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அன்புடன் கூறியதன் சாராம்சம் என்னவென்றால், 'குருவைத் தொழுவதும் குருசேவையுமே ஞானத்தை பெறும் மார்க்கங்களாகும். -

"ஓ, அர்ஜுனா! இந்த மார்க்கத்தில் நீ நடந்தால் தத்துவ தரிசனம் பெற்ற ஞானிகள் உனக்கு ஞானம் பெறும் வழியைக் காட்டுவர்'. பாபா, நான் புரிந்துகொண்ட அர்த்தம் இதுவே".

ஆதிசங்கரர், ஆனந்தகிரி, சங்கரானந்தர், ஸ்ரீதரர், மதுசூதனர், நீலகண்டர் -இவர்கள் அனைவரும் தேவனின் உபதேசத்திற்கு இவ்வ்வறே வியாக்கியானம் செய்திருக்கின்றனர்.

சமர்த்த சாயி சுலோகத்தின் முதல் அடியின் அர்த்தத்தை சரியென்று ஒப்புக்கொண்டார். இரண்டாவது அடியைப்பற்றி சாயி என்ன சொன்னார் என்பதை கேளுங்கள்.

அங்கிருந்த சகோரப் பக்ஷிகளான பக்தர்களும் சாயியின் சந்திரவதனத்திலிருந்து பொழியவிருந்த அமிருதத்தை பருக 'ஆ' வென்று வாயைத் திறந்துகொண்டிருந்தனர்.

 (பாபா அருளிய விஷேஷ விளக்கம் இங்கு ஆரம்பமாகிறது)

பாபா சொன்னார், "நானா, சுலோகத்தின் இரண்டாவது அடியைப் பூரணமாகப் புரிந்துகொள்ள மறுபடியும் முயற்சி செய்யும். 'ஞானம்' என்னும் பதத்தின் முன்னால் , தொக்கிநிற்கும் உயிரெழுத்தாகிய 'அ' வைச் சேர்த்து அர்த்தத்தின் சூக்குமத்தைப் பாரும். -

"நான் விபரீதமாகப் பேசுகிறேனென்றோ அர்த்தத்தை அநர்த்தமாக்குகிறேன் என்றோ நீர் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை. பழைய வியாக்கியானங்கள் எல்லாம் எப்படி அசத்தியமாகும்?-

"தத்துவ தரிசனம் பெற்ற ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசம் செய்வர்' என்று நீர் அர்த்தம் சொல்கிறீர். ஆனால், 'ஞானம்' என்ற பதத்திற்குப் பதிலாக 'அஞ்ஞானம்' என்ற பதத்தைப் பொருத்தினால் யதார்த்தமான அர்த்தம் வெளிப்படும். -

"ஞானம் என்பது பேச்சுக்குரிய விஷயமன்று. அப்படியிருக்க, அதை உபதேசம் செய்வதெப்படி? ஆகவே, ஞானத்தின் எதிர்மறை வார்த்தையை எடுத்துக்கொண்டு சுலோகத்திற்கு அர்த்தம் செய்துபாரும்.-

"ஞானம் என்ற சொல்லை பொருத்தி நீர் சொன்ன அர்த்தத்தை நான் கேட்டேன். ஆனால், அது இருக்கும் இடத்தில் அஞ்ஞானம் என்ற சொல்லை பொருத்தி அர்த்தம் பார்ப்பதில் நஷ்டமென்ன? அஞ்ஞானம் பேச்சிற்குரிய விஷயமாகிறது. ஞானம் இயல்பால் பேச்சிற்கு அப்பாற்பட்டதன்றோ?-

 


 

Thursday, 9 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


முப்பத்துநான்காவது சுலோகத்தில் நானாவின் பாராயணம் நின்றது. ஒருகேள்வியைக் கேட்டு நானாவுக்கு போதனை அளிக்கவேண்டுமென்று பாபாவுக்குத் தோன்றியது.

பாபா கேட்டார், "நானா, நீர் என்ன முணுமுணுக்கிறீர்? நீர் மெல்லிய குரலில் ஓதுவதைத் தெளிவாகவும் உரத்த குரலிலும் ஓதி என் காதுகளுக்குக் கேட்குமாறு செய்வீராக."

பாபாவின் ஆக்ஞயைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு நானா சுலோகம் (34 ஆவது) முழுவதையும் ஒப்பித்தார். அதன் பிறகு, அந்த சுலோகத்தின் பொருளைத் தெளிவாக விவரிக்கும்படி பாபா நானாவைக் கேட்டார்.

மிகுந்த விநயத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு, அந்த சுலோகத்தின் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் (அர்ஜுனனுக்கு )என்ன அறிவுரை தந்தார் என்பதை நானா மிக்க மகிழ்ச்சியுடன் விவரித்தார்.

சாயி-நானா உரையாடல் எல்லாருக்கும் நன்கு விளங்குமாறு கீதையிலிருந்து எடுத்து மூலசுலோகத்தைப் பதம் பதமாக அளிப்போமாக.

ஞானிகளின் மனோதர்மத்தையும் இக் கேள்வியின் சூக்குமத்தையும் ஐயம் திரிபின்றி எல்லாரும் புரிந்துகொள்ளும்படி தத்துவத்தை விளக்கும் முறையை நான் கையாள வேண்டும் என்பதை நன்கு உணர்கிறேன்.

"சம்ஸ்கிருத மொழி இயல்பாகவே கடினமானது. சாயி பாபாவுக்கு அம்மொழி எப்படி சுலபமாகியது ? எப்படி அவ்வளவு நுணுக்கமான கேள்வியொன்றை கேட்டார்? சாதுக்களின் ஞானம் அளவிடற்கரியது!" என்று எல்லாரும் ஆச்சரியம் அடைந்தனர்.

"அவர் எப்பொழுது சம்ஸ்கிருதத்தை அத்தியயனம் செய்தார்? கீதையை எப்பொழுது வாசித்தார்? கீதையை கரைத்துக் குடித்தவர்போல்  கேள்வி கேட்டாரே?"

கேட்பவர்கள் தெளிவும் திருப்தியும் அடையுமாறு ஸ்ரீகிருஷ்ண பகவானின் திருவாய்மொழியான மூலசுலோகத்தை ஓரெழுத்தும் பிசகாமல் இங்கு அளிக்கிறேன். விளக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

"தத்வித்தி ப்ரணிபாதனே பரிப்ரச்னேன சேவையா! உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வத்ஸனாஹா !" (பணிந்தும், கேட்டும், பணிவிடைசெய்தும் நீ அதை அறிக.உண்மையை யுணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள் - சுவாமி சித்பவானந்தர் பொழிப்புரை)

இதுவே கீதையின் மூலசுலோகம். கீதைக்கு எத்தனையோ மஹான்கள் பாஷ்யம் (விரிவுரை) எழுதியிருக்கின்றனர்.  அனைவருமே இந்த சுலோகத்திற்கு வேறுபாடு ஏதுமின்றி ஒரேவிதமாக பதவுரை செய்திருக்கின்றனர்.

நானாவும் கல்விகேள்விகளில் சிறந்தவர். கீதையின் வியாக்கியானங்கள் பலவற்றைப் பல ஆண்டுகள் ஆழமாகப் படித்தவர். சுலோகத்தின் பொருளை பதம் பிரித்து  விளக்கினார்.

சுலோகத்தை செய்யுள் உருவிலிருந்து வசன நடைக்கு கவனமாகக் கொண்டு வந்து, மிக்க மரியாதையாகவும் பணிவுடனும் ரசம் ததும்பும் இனிமையான குரலில் அர்த்தம் சொல்லத் தயாரானார்.



Thursday, 2 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாயியின் கதைகள் எண்ணற்றவை. அவையனைத்தையும் பாடினால், பெரியதாக புராணம் ஆகிவிடும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டேனினும், கதை கட்டுப்படாமல் விரிந்துகொண்டே போகிறது.

கேட்பவர்களின் உற்சாகம் எப்படிப் பெருகுகிறதோ அப்படியே கதைசொல்பவரின் ஆர்வமும். ஆகவே, நாம் பரஸ்பரம் ஆவலைத் தணித்துக்கொண்டு உண்மையான ஆன்மீக முன்னேற்றம் அடைவோம்.

இங்கு சாயியே கப்பலின் தலைவர். ஒருமுனைப்பட்ட கேள்வியே பயணக் கட்டணம். இக் கதையைப் பயபக்தியுடன் சிரத்தையாக கேட்பவர் தாமதமின்றி அக்கரை சேர்ந்துவிடுவார்.

சென்ற அத்தியாயத்தில் ஹண்டி வர்ணனை சுருக்கமாகச் சொல்லப்பட்டது. தத்தாத்திரேய பக்தி வலுப்படுத்தப்பட்ட விவரமும் நைவேத்தியம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட விவரமும் சொல்லப்பட்டன.

கதை சொல்லும் திட்டத்தில், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தின் விஷயம் பற்றி குறிப்பளிக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், சென்ற அத்தியாயத்தை முடிக்கும் தறுவாயில், அடுத்துச் சொல்லவேண்டிய கதை எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. ஆகவே, சாயி எதை ஞாபகப்படுத்துகிறாரோ  அதை எழுதலாம் என்று நினைத்தேன்.

ஏற்கெனவே தெளிவாக அறிவித்தவாறு, சாயியின் கிருபையால் எது ஞாபகப்படுத்தப்பட்டதோ அதை விவரிக்கிறேன்.

ஆகவே, இடைஞ்சல்களை தூரமாகத் தள்ளிவைத்துவிட்டு சாந்தமான மனத்துடன் முழுகவனத்துடனும் கேட்கும் படி கதைகேட்பவர்களை பிரார்த்தனை செய்கிறேன். உங்களுடைய மனம் ஆனந்தமடையும்.

ஒருசமயம், சிறந்த பக்தரான நானா சாந்தோர்கர் மசூதியில் உட்கார்ந்துகொண்டு பாபவின் பாதங்களை பிடித்துவிட்டுக்கொண்டே,ஸ்ரீ மத் பகவத் கீதையின் சுலோகங்களை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டிருந்தார்.

பாபாவின் பாதங்களை பிடித்துவிட்டுக்கொன்டே கீதையின் நான்காவது அத்தியாயத்தை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டிருந்தார். அப்பொழுது என்ன அற்புதம் நடந்ததென்று பார்க்கலாம்!

நடந்தது, நடந்துகொண்டிருப்பது, நடக்கப்போவது; அனைத்தையும் அறிந்த சமர்த்த சாயி, நானாவுக்கு கீதையின் அர்த்தத்தை விளக்கவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.

கீதையில் 'ஞானகர்மசந்யாச யோகம்' என்ற தலைப்பில் அமைந்த நான்காவது அத்தியாயத்தை தமக்குள்ளேயே நானா முணுமுணுத்துக் கொண்டிருந்ததை ஒரு சாக்குபோக்காக உபயோகித்து பாபா அவரை ஒரு கேள்வி கேட்டார்.

'ஓ பார்த்தனே, எல்லாச் செயல்களும் மொத்தமாக ஞானத்தில் முடிகின்றன' என்று முடியும் முப்பத்துமூன்றாவது சுலோகத்தை முடித்துவிட்டு, 'பணிவுடனும் வணக்கமாகவும் அறிவாயாக' என்று ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை நானா தொடர்ந்தார். 




Thursday, 26 January 2023

 ஷீர்டி சாயி சரிதம்


சாந்த்பாய் பாடீலின் மனைவியின் மருமகன் திருமணப் பிராயத்தை எட்டியது, மணமகள் ஷிர்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. கல்யாண கோஷ்டி மணமகளின் கிராமத்திற்கு வந்தது,-

இந்த விவரங்களை ஏற்கனேவே கேட்டுவிடீர்கள் (5 ஆவது அத்தியாயம்). அது இந்த சமயத்தில் எனக்கு ஞாபகம் வந்தது; அவ்வளவே. அதை இங்கே மறுபடியும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

சாந்த் பாடீல் என்னவோ, ஒரு நிமித்தகாரணமே. பக்தர்களை உத்தாரணம் செய்ய அத்தியந்தமான ஆர்வம் கொண்டதால் சாயி பூலோகத்தில் அவதரித்தார். தம்மிச்சையாகவே ஷிர்டிக்கு வந்தார்!

ஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழைஎளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் சடங்குகள் ஆகியவற்றால் பயனடைய முடியாதவர்களையும் இந்த சாயியைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்?

பதினெட்டு வயதான இளைஞன் அந்தப் பருவத்திலிருந்தே தனிமையை நாடினான். இரவில் நிர்பயமாக (பயமேயின்றி) எங்கும் படுத்து உறங்கினான். அவனுடைய கண்களுக்கு எல்லாமே ஈசுவரமயமாக தெரிந்தன!

முன்னர் ஒரு பெரிய பள்ளம் இருந்த இடத்தில் கிராமமக்கள் குப்பைகளைக் கொட்டினர். பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்த பையன் இரவில் அங்கு உறங்கினான்.

இவ்விதமாகப் பல ஆண்டுகள் கழிந்தன. அந்தப் பள்ளத்திற்கும் விடிவுகாலம் வந்தது. தீனதயாளரான சாயியால் அவ்விடத்தில் ஒரு விசாலமான மாளிகை எழுந்தது.

முடிவில், அந்தப் பள்ளம் இருந்த இடமே சாயியின் பூதவுடல் சமாதி செய்யப்பட்ட மூலஸ்தானம் ஆயிற்று, அதைத்தான் அவர் என்றும் உறையும் இடமாக ஏற்றுக்கொண்டார்; சமாதியும் கட்டப்பட்டது.

வணங்கியவர்களைப் பாலிக்கும் இந்த சமர்த்த ஸாயிதான் தம் பக்தர்களின் நலன் கருதி, கடத்தற்கரிய சம்சார சாகரத்தை பக்தர்கள் எளிதாக கடக்க உதவும் படகான தம்முடைய வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதியிருக்கிறார்.

"கடத்தற்கரிய பிறவிகடலைக் குருடர்களும் முடவர்களும் பக்த பரிவாரமும் எங்ஙனம் கடக்கபோகின்றனர்?" இந்த மனப்பூர்வமான ஆதங்கத்தால் உந்தப்பட்டு சாயி அவ்வாறு செய்தார்.

எல்லாரும் அவசியம் பிறவிக்கடலைக் குருடர்களும் முடவர்களும் பக்த பரிவாரமும் எங்ஙனம் கடக்கபோகின்றனர்?" இந்த மணிப்பூர்வாமன ஆதங்கத்தால் உந்தப்பட்டு சாயி அவ்வாறு செய்தார்.

எல்லாரும் அவசியம் பிறவிக்கடலைக் கடந்தே ஆகவேண்டும். அதன் பொருட்டு நாம் அந்தக்கரண சுத்தம் பெறவேண்டும். இதற்கு மனத்தைத் தூய்மை செய்துகொள்வதே முக்கிய சாதனம். இறைவனிடம்  பக்தியே அனைத்திற்கும் மூலம்.

கேள்வி (காதால் கேட்டல்)  இல்லாது பக்தி இல்லை. கேள்வி சகஜமாகவே குருவின்பால் அன்பைத் தூண்டுகிறது. அன்பிலிருந்து ஆன்மிகம் பிறக்கிறது!