valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 5 May 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி வாயைக் கழுவிக்கொண்டபின் மாதாராவ் கைகளைத் துணியால் துடைத்துவிட்டுக்கொண்டிருந்தார். சாயி ஆனந்தமான மனநிலையில் இருந்தார்; அப்பொழுது என்ன செய்தார் என்று கேளுங்கள்.

மாதவராவின்மீது பிரேமை பொங்க, அவருடைய கன்னத்தை கிள்ளினார் பாபா. தேவருக்கும் பக்தருக்கும் அப்பொழுது நடந்த அன்பான சம்வாதத்தைக் (உரையாடலைக்) கேளுங்கள்.

எப்பொழுதும் விநயமாக நடந்துகொள்ளும் மாதவராவ் பொய்க்கோபம் ஏற்று, "இது என்ன லட்சணமான (சிறப்பான) செயலா?" என்று கேலியாகக் கேட்டார்.

"எங்களுக்கு கன்னத்தை அழுத்திக் கிள்ளும் குறும்புத்தனமான கடவுள் வேண்டா! நாங்கள் உங்களுக்கு பந்தப்பட்டவர்களா என்ன?  இதுதான் எங்களுடைய நெருங்கிய தொடர்புக்குப் பரிசோ?

பாபா சொன்னார், "சாமா, எழுபத்திரண்டு ஜன்மங்களாக நான் உன்னைத் தொட்டதுண்டா?" ஞாபகப்படுத்திப் பார்!"

மாதவராவ் சொன்னார், "பசிக்கும்போதெல்லாம் புதிது புதிதாக இனிப்புக்கள் வழங்கும் கடவுளே உங்களுக்குத் தேவை.-

"உங்களிடமிருந்து கௌரவமோ சுவர்க்கலோகத்தின் புஷ்பகவிமானமோ எங்களுக்குத் தேவையில்லை. உங்களுடைய பாதங்களில் என்றென்றும் விசுவாசம் என்னும் ஒரே வரத்தை கொடுங்கள்; அது போதும்".

பாபா சொன்னார், "இதற்காகவேதான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிக்குமுள்ள அளவுகடந்த பிரேமையால் உங்களனைவருக்கும் உணவுவூட்டவே வந்திருக்கிறேன்".

இதன் பிறகு பாபா கிராதிக்கருகிலிருந்த தமது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார். மாதவராவ் பெண்மணிக்குச் சைகை காண்பித்தார். பெண்மணி தாம் வந்த நோக்கம் பற்றி உஷாரானார்.

சைகை கிடைத்தவுடனே, அவர் எழுந்து தடதடவென்று படியேறிச் சென்று வணங்கினார். பாபா தேங்காயைத் தமது கைகளாலேயே கிராதியின்மேல் மோதி உடைக்க முயன்றார்.

பாபா கேட்டார், "இந்தத் தேங்காய் என்ன சொல்கிறது? ஏகமாக குடுகுடுவென்று ஆடுகிறதே!" கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது சாமா கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவர் பாபாவிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்.

"அதுமாதிரியாகவே இவருடைய வயிற்றிலும் (குழந்தை) உருளவேண்டுமென்று இப்பெண்மணி மனம் கனிந்து வேண்டுகிறார். இவருடைய விருப்பம் நிறைவேறட்டும். இவருடைய விருப்பம் நிறைவேறட்டும். இவருடைய மனம் உங்களுடைய பாதங்களில் அகண்டமாக லயிக்கட்டும்; இவருடைய பிரச்சினைக்கு விடை கிடைக்கட்டும். -

"உங்களுடைய கருணாகடாட்சத்தை இவர்மீது செலுத்துங்கள். இந்தத் தேங்காயை இவருடைய முந்தானையில் போடுங்கள். உங்களுடைய ஆசீர்வாதத்தால் இவருக்குப் பல பிள்ளைகளும் பெண்களும் பிறக்கட்டும்." 




Thursday, 28 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

புனிதஞானி சாயி பாபாவின் அற்புதமான வாழ்க்கைச் சரித்திரத்தை கேள்விபட்டுத் தம்முடைய சக்களத்தியின் மகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவரை தரிசனம் செய்ய வந்தார்.

திருமணமாகி இருபத்தேழு ஆண்டுகள் கழித்தும் அவருக்கு மகப்பேறு இல்லை. எத்தனையோ தேவர்களையும் தேவிகளையும் பிரார்த்தனை செய்துகொண்டும் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டும் பலனேதும் இல்லை; அவர் மனமுடைந்துபோனார்.

ஆகவே, இந்த சுமங்கலி பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு வந்தார். இருப்பினும் அவருடைய மனத்தின் ஒரு விசாரம் எழுந்தது.

"அவரைச் சுற்றி எப்பொழுதும் பக்தர்கள் சூழ்ந்திருக்கிறார்களே, நான் என்னுடைய இதயத்தில் இருப்பதை அவரிடம் எப்படித் தெரிவிப்பேன்?-

"மசூதியோ திறந்தமயமாக இருக்கிறது; வெளிமுற்றமும் அவ்வாறே. பாபாவை சதா பக்தர்கள் சூழ்ந்திருக்கின்றனர். என்னுடைய மனக்குறையை எடுத்துச் சொல்லத் தனிமையில் ஒரு நிமிடம் எப்படி கிடைக்கப்போகிறது?"

அவரும், விசுவநாதன் என்ற பெயர் கொண்ட, சக்களத்தியின் மகனும் பாபாவுக்கு சேவை செய்துகொண்டு இரண்டு மாத பரியந்தம் (காலம்) ஷிர்டியில் தங்கினர்.

ஒரு சமயம், விசுவநாதனோ வேறெவருமோ இல்லாதபோது அவர் மாதவராவிடம் என்ன மன்றாடிக் கேட்டுக்கொண்டார் என்பதைக் கேளுங்கள்.

"ஐயா, நீங்களாவது பாபா சாந்தமாகவும் ஸ்திரமாகவும் இருக்கும் நேரம் பார்த்து என்னுடைய மனத்தின் ஏக்கத்தை அவருடைய காதுகளில் போடுங்கள்.-

"இந்த விஷயத்தை அவர் பக்தர்களால் சூழப்படாது தனிமையில் இருக்கும்போது யாரும் காதால் கேட்கமுடியாத வகையில் சொல்லுங்கள்."

மாதவராவ் பதில் கூறினார், "இதோ பாருங்கள். இந்த மசூதி காலியாக இருப்பதென்பதே கிடையாது. பாபாவை தரிசனம் செய்ய யாரவது ஒருவர் வந்துகொண்டே இருப்பார்.-

"சாயி தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. நான் சொல்வதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!-

"முயற்சி செய்வது என்னுடைய கடமை; வெற்றியை அளிப்பவர் மங்களங்களுக்கு அடித்தளமானவர். கடைசியில் அவரே சாந்தியை அளிப்பார்; உங்களுடைய கவலை விலகும்.

"இருப்பினும், நீங்கள் பாபா சாப்பாட்டுக்கு அமரும் நேரத்தில் ஒரு தேங்காயையும் ஊதுவத்திகளையும் கையில் வைத்துக்கொண்டு கீழே சபாமண்டபத்தில் ஒரு கல்லின் மேல் உட்கார்ந்திருங்கள்.-

"அவர் உணவுண்ட பிறகு, ஆனந்தமாக இளைப்பாறும் சமயம் பார்த்து நான் உங்களுக்குத் சைகை செய்கிறேன். அதன் பிறகே நீங்கள் படியேறி மேலே வரவேண்டும்."

இவ்வாறாகக் காத்திருந்து காத்திருந்து, ஒரு சமயம் சாயி உணவுண்டவுடனே  பிராப்த காலம் (அடையவேண்டிய நேரம்) வந்ததும் ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. 




Thursday, 21 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"எவர்களுடைய கூட்டுறவில் சாயி விளையாடினாரோ சிரித்தாரோ பேசினாரோ அமர்ந்துகொண்டாரோ நடந்துசென்றாரோ சாப்பிட்டாரோ படுத்துக்கொண்டாரோ கோபம் கொண்டாரோ, அவர்கள் அனைவரும் சிரேஷ்டமான பாக்கியசாலிகள். -

"எங்களுடைய கைகளால் அவருக்கு ஒரு சேவையும் செய்தோம் இல்லை. ஆயினும், அவர் எங்களுக்கு பெரும் கருணை காட்டினார். அவருடைய சங்கத்திலேயே எப்பொழுதும் இருக்கும் உங்களுடைய பாக்கியத்தை நான் என் சொல்வேன்!. -

"ஷீர்டிவாழ் மக்கள் புண்ணியம் செய்து சம்பாதித்த நற்பலன்களையெல்லாம் ஒன்று சேர்த்து உருக்கி ஒரு மனித உருவத்தை வார்த்து எடுத்தீர்கள் போலும்!- பரம பாக்யசாலிகளாகிய நீங்கள் இவ்வுருவத்தை ஷிர்டிக்கு கொண்டுவந்து விட்டீர்கள்.-

"அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் நாங்கள் ஷிர்டிக்கு வந்திருக்கிறோம்.  ஸ்ரீ சாயியின் புனிதமான தரிசனத்திற்கான எங்களிடம் இருப்பதனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம்.-

"தர்மநெறி வாழும் சாயி ஓர் அவதாரம்; ஆயினும், அவர் ஒரு விஷ்ணு பக்தரைப் போல் வாழ்கிறார்; அவர் ஒரு ஞானவிருக்ஷம்; சோபையில் ஆகாயத்தில் ஒளிரும் சூரியன். -

"பெரும் புண்ணியம் செய்ததால் இந்த மஸூதி மாயீயைக்  கண்டோம். எங்களுடைய நேர்த்திக்கடனையும் நிறைவேற்றி வைத்து தரிசனம் தந்தார். -

"இவர்தான் எங்களுடைய தத்தாத்திரேயர். இவர்தான் எங்களை நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தவர். இவர்தான் கப்பலில் இடம் வாங்கி கொடுத்தவர். இவரே எங்களை தரிசனத்திற்காக ஷிர்டிக்கு இழுத்தவர்.

"இவ்வழியாக, சாயீ, தாம் எங்கும் நிறைந்தவர் என்பதையும் எல்லார் மனதிலும் உறைபவர் என்பதையும் எங்கு நடப்பதையும் சாட்சியாக அறிபவர் என்பதையும் எங்களுக்கு உணர்த்தினார். -

"அவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்து நாங்கள் பரமானந்தம் அடைந்தோம். உலக வாழ்வின் பிடுங்கல்களையும் துக்கங்களையும் மறந்தோம்; பொங்கும் மகிழ்ச்சியை எங்களால் அடக்க முடியவில்லை.-

"கர்ம வினைகளின் விளைவாக வாழ்க்கையில் நடப்பது நடக்கட்டும். அதை எங்களுடைய மனம் உறுதியாக எதிர்கொள்ளட்டும். ஆனால், சாயி பாதங்களின் மீது அகண்ட பிரேமை என்றென்றும் நிலவட்டும். அவருடைய புனிதமான உருவம் எங்கள் கண்களின் எதிரில் எப்பொழுதும் இருக்கட்டும். -

"சாயியின் லீலை ஆழம் காணமுடியாதது; கற்பனைக்கு எட்டாதது; அவர் செய்யும் உபகாரத்திற்கு எல்லையே இல்லை!. தயாநிதியே! என்னுடைய தேகத்தை உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டுமென்பதை உணர்கிறேன். "

இப்பொழுது இன்னொரு கதையை சிறிது நேரம் கவனமாக கேளுங்கள். சாயியின் திருவாய் மொழி பிரம்ம தேவரால் எழுதப்படும் தலைவிதிபோல் பலித்தது.

சோலாப்பூர் நகரில் வாழ்ந்துவந்த சகாராம் ஒளவ்ரங்காபாத்கர் என்பவர் புத்திரசந்தானம் வேண்டுமென்று விரும்பினார். ஆகவே, அவர் மனைவி ஷிர்டிக்கு வந்தார்.  




 

Thursday, 14 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"இவ்வாறாக, நான் இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற்ற பிறகு மகிழ்ச்சிக் கடலில் திளைத்தேன். இதன் விளைவாக நேர்த்திக்கடனை முற்றிலும் மறந்துபோனேன். செல்வத்தின் மோகத்தை வெல்வதை எளிதோ!-

"பின்னர் ஒரு சமயம் நான் குலாபா பக்கம் சென்றபோது கனவில் சாயியைக் கண்டேன். உடனே, ஷீர்டி செல்வதற்குக் கிளம்பினேன். -

"சமர்த்த சாயி தம் பயணத்தை விளக்கியவாறு, கப்பலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காதது, சிப்பாயின் முயற்சியால் தடங்கல் விலகியது. இவை அனைத்தும் உண்மை.-

"இவையனைத்தும் என்னுடைய பிரச்சினைகள். கப்பல் நின்றுகொண்டிருந்த இடத்தை நான் அடைந்தபோது சிப்பாய் எனக்காக மனப்பூர்வமாக சிபாரிசு செய்தார்.-

"அதன் பிறகே, முதலில் எனக்குப் பயணம் செய்ய அனுமதி தர மறுத்த அதிகாரி இடம் கொடுத்து உதவி செய்தார்.-

அந்த சிப்பாயும் எனக்கு முன்பின் தெரியாதவர்; ஆயினும் அவருக்கு என்னைத் தெரியுமென்று சொன்னார். ஆகவே யாரும் எங்களைத் தடுக்கவில்லை. நாங்கள் சுகமாகக் கப்பலில் அமர்ந்துகொண்டோம்.

"இதுதான் கப்பலின் கதையும் சிப்பாயின் கதையும். இதெல்லாம் எனக்குத்தான் நேர்ந்தது; ஆயினும், சாயி இவற்றை தம்மேல் ஏற்றிக்கொண்டு கதை சொன்னார். -

"இந்த அற்புதத்தை நினைத்துப் பார்க்கும்போது என்னுடைய மனம் செயலிழந்து போகிறது. சாயி இந்த உலகம் முழவுதும் வியாபித்திருப்பதை நான் உணர்கிறேன்.

"இவ்வுலகில் ஓர் அணுவளவு கூட இல்லாத இடம் இல்லை. எங்களுக்கு இவ்வரசு இந்த அனுபவத்தை அளித்தாரோ, அவ்வாறே மற்றவர்களுக்கும் அனுபவங்களை அளிப்பார்.-

"நாங்கள் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்களை அலாக்காக தூக்கித் தம்மிடம் கொண்டுவந்து நல்வழிப்படுத்த, நாங்கள் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்!-

"ஆஹா! என்னுடைய செல்வம் திருடுபோனதுதான் என்ன! நான் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதுதான் என்ன! திருடுபோன செல்வம் சிரமமின்றி திரும்பி வந்ததுதான் என்ன! நேர்த்திக்கடன் நிறைவேறிய அற்புதந்தான்  என்னே! -

"எங்களுடைய வானளாவிய பாக்கியம் என்னே! நாங்கள் அவரை இதற்குமுன் தரிசனம் செய்தது கிடையாது; அவரைபற்றிக் கேள்விப்படும் இல்லை; சிந்தனை செய்ததும் இல்லை. ஆயினும், அவர் எங்களை நினைவில் வைத்திருந்தார்; அனுக்கிரமும் செய்தார்!-

"ஆண்டாண்டாக அவருடைய கூட்டுறவில் மூழ்கி இரவுபகலாக அவருடைய பாதங்களுக்கு சேவை செய்யும் கடவுள் - பக்தர்கள் எவ்வளவு பாக்யசாலிகளாகவும் தன்யவர்களாகவும் இருக்கவேண்டும்?-

 


 

Thursday, 7 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"பக்கீர் என்னிடம் இதைச் சொன்னவுடன் ஒரு நிமிடமும் தாமதியாது நான் அரிசிச் சோற்றை விட்டுவிட்டேன். 'பாபா, என்னுடைய திருடுபோன பணம் திரும்பக் கிடைத்து, உங்களை தரிசனம் செய்த பிறகுதான் மறுபடியும் நான் அரிசிச் சோறு தின்பேன்' என்று விரதம் எடுத்துக்கொண்டேன்.-

"இதன்பிறகு பதினைந்து நாள்கள் கழிந்தன. பிராமணருடைய மனதில் என்ன தோன்றியதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்! அவர் தாமாகவே என்னிடம் வந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.-

"அவர் சொன்னார், 'என்னுடைய புத்தி என்னை ஏமாற்றிவிட்டது. அதனால்தான் இச்செயல் என்னால் செய்யப்பட்டது. நான் என் தலையை உமது பாதங்களில் வைக்கிறேன். உன்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்.'-

"அதன்பிறகு எல்லாம் நல்லபடியாக நடந்தது. சாயியை தரிசனம் செய்யவேண்டுமென்ற தீவிர ஆவல் ஏற்பட்டது. அதுவும் இன்று நிறைவேறியது. பாக்கியசாலியாகவும், தன்யனாகவும் (எல்லா சம்பத்துக்களையும் பெற்றவனாகவும் ) ஆனேன். -

"ஆனால், நான் சங்கடத்தில் ஆழ்ந்து சோகமாக வராந்தாவில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது எவர் எனக்கு ஆறுதல் அளித்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை.-

"எவர் என்மேல் பரிதாபப்பட்டு என்மீது அக்கறை கொண்டு ஷிர்டியை சுட்டிக்காட்டி சாயியைப்பற்றி எனக்குத் தெரிவித்து அனுக்கிரஹம் செய்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை.-

"எவர் நான் சற்றும் எதிர்பாராது தெருவழியே சூக்குமமான கேள்விகளை கேட்டுக்கொண்டு வந்தாரோ, எவர் என்னைக் கடைசியில் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தாரோ, அவரை மறுபடியும் பேட்டி காண முடியவில்லை. 

"உண்மையில், உங்களுடைய அவுலியா ஸாயிதான் அந்தப் பக்கீராக வந்தார் என்று தோன்றுகிறது. அவரே விருப்பப்பட்டு எங்களுக்கு தரிசனம் அளித்தார். -

"ஏதாவது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் மக்கள் ஒரு ஞானியை தரிசனம் செய்ய விரும்புகின்றனர். நான் அவ்வாறு தரிசனம் செய்ய நினைக்கவில்லை. ஆயினும் நான் இழந்த பொருளைத் திரும்பப் பெறுவதற்காக, எடுத்தவுடன் என்னை ஞானிதரிசனம் செய்யப் பக்கீர் தூண்டினார். -

"எவரிடம் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதால் நான் இழந்த செல்வத்தை சுலபமாகத் திரும்பப் பெற்றேனோ, அவர் என்னுடைய முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணைக்கு ஆசைப்படுவது என்பது கனவிலும் நடக்காத காரியம். -

"நேர்மாறாக, அஞ்ஞான மனிதர்களை ஆன்மீக நாட்டங்கொள்ளச் செய்வதற்காகவும் நம்முடைய மங்களைத்தை உத்தேசித்து நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவும் நிரந்தரமாக தக்ஷிணை என்னும் சாக்குப்போக்கை உபயோகிக்கிறார். -

"இந்த அவதாரம் இதற்காகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படி இல்லையென்றால், பாமரர்களும் பக்தி இல்லாதவர்களுமாகிய நாம் எவ்வாறு பிறவிக்கடலைக் கடக்க முடியும்? இதை நிதானமாக யோசித்துப் பாருங்கள்!-




Thursday, 31 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆகவே, ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மஹால் சாபதியை ஒரு பைசாவைக்கூட தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் திரவியத்தை தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்.

இப்பொழுது இரண்டாவது விருந்தாளி பேச ஆரம்பித்தார். "நானும், என் சூசகத்தைப் புரிந்துகொண்டேன். மொத்த கதையையும் சொல்கிறேன்; கேளும், கேட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்.-

"ஒரு பிராமணர் எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பணி செய்துவந்தார். அவர் அயராது உழைப்பவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். துரதிர்ஷ்டவசமாக அவருடைய புத்தி மயங்கியது. என்னுடைய பணத்தை அபகரித்தார் -

"என்னுடைய வீட்டில் சுவருக்குள் அடங்கிய அலமாரி ஒன்று இருந்தது; அவர் யாருக்கும் தெரியாமல் சுவரின் கற்களை மெதுவாக நகர்த்தி ஒரு துவாரம் செய்து கொண்டார். -

"பாபா முன்பு குறிப்பிட்ட அலமாரியின் பின்பக்கம்தான் அவர் துவாரம் செய்த இடம். அதற்காக, எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது சுவரின் கற்களை நகர்த்தினார். -

"பாபா, 'என்னுடைய பணம் திருடு போய்விட்டது' என்று சொன்னாரவல்லவா? அது முற்றிலும் உண்மை ஒரு கற்றை ரூபாய் நோட்டு திருடப்பட்டது.

"அக் கற்றையின் மதிப்பு சரியாக முப்பதாயிரம் ரூபாய். பாபாவுக்கு இந்த விவரமெல்லாம் எப்படித் தெரிந்தது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதைக் கண்டு நான் இரவுபகலாக அழுதுகொண்டிருந்தேன். -

"திருட்டைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளால் நான் களைப்படைந்தேன். மன உளைச்சலாலும் சோகத்தாலும் நான் நீர்ச்சுழலில் மாட்டிக்கொண்டவன் போல் பதினைந்து நாள்கள் அவஸ்தைப்பட்டேன். மேலும் வழி தெரியவில்லை. -

"ஒருநாள் நான் மனமுடைந்தவனாக வாரந்தாவில் உட்கார்ந்திருந்தபோது, உரக்க கேள்விகளைக் கேட்டுக்கொண்டு ஒரு பக்கீர் வீதி வழியாக நடந்துவந்தார்.

"என்னுடைய சோகம் ததும்பிய முகத்தைப் பார்த்துவிட்டு சோகத்திற்கு காரணம் என்னவென்று கேட்டார். நான் விவரமனைத்தும் சொல்லிமுடித்தபிறகு நிவாரணம் பெறுவதற்கு அவர் ஓர் அறிவுரை அளித்தார் -

"கோபர்காங்வ் தாலுகாவிலுள்ள ஷீர்டி என்னும் கிராமத்தில் சாயி அவ்லியா (முஸ்லீம் ஞானி) வாசம் செய்கிறார். அவரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ளும்.-

"உமக்கு மிகவும் விருப்பமான உணவுப்பொருள் ஒன்றைச் சாப்பிடாமல் நிறுத்திவிடும். அவரை தரிசனம் செய்யும்வரை அதைச் சாப்பிடாமல் விட்டுவிடுவதாக அவரிடம் சொல்லும்.-

 


 

Thursday, 24 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"அவர் தக்ஷிணை வாங்கிக்கொண்டார் என்று யாரவது நினைக்கலாம். அது தக்ஷிணை அன்று; என்னால் திருப்பிக் கொடுக்கப்பட்ட கடனேயாகும். தக்ஷிணை என்ற சாக்குப்போக்கில் என்னுடைய பழைய நேர்த்திக்கடன் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.

தாத்பரியம் என்னவென்றால், சாயி திரவியம் எதையும் யாசிப்பதில்லை; தம்முடைய நிஜமான பக்தர்களையும் யாசிக்க அனுமதித்ததில்லை. செல்வதை அவர் அநர்த்தமாகவே (கேடாகவே)  கண்டார். பக்தர்களையும் பண மோகத்திலிருந்து காப்பாற்றினார்.

சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகால்சாபதி என்ற பக்தர் சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரைச் சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.

தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகால்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

சாயி இவ்வளவு உதாரகுணமுள்ளவராக இருந்தபோதிலும், மகல்சாபதி ஒருநாளும் அவர் முன் கெஞ்சிக் கையை நீட்டினாரில்லை. அவருடைய தன்மான உணர்வு போற்றுதற்குரியது.

அவருடைய  செல்வநிலை எவ்வளவு தாழ்ந்திருந்ததோ, அவ்வளவு உயர்ந்திருந்தது அவருடைய துறவு மனப்பான்மை. சொற்ப வருமானத்திலேயே திருப்தி கண்டு அவர் வறுமையின் கஷ்டங்களை தைரியமாக வாழ்க்கையில் எதிர்கொண்டார்.

ஒருசமயம், ஹம்சராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர் மகல்சாபதிக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.

அவருடைய கொடிய வறுமையைக் கண்டு தம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஹம்சராஜின் மனத்தில் உதித்தது.

மகல்சாபதியின் வறுமை நன்கு தெரிந்திருந்தும் அவர் வேறு யாரிடமிருந்தும் உதவி பெறுவதை சாயி அனுமதிக்கவில்லை. அவர் திரவியத்தை உதாசீனம் செய்வதையே சாயிநாதர் ஊக்குவித்தார்.

ஆகவே அந்த வியாபாரி என்ன செய்தாரென்றால், இந்த பக்தருக்காக மனம் இளகி, பாபாவின் தர்பார் நடந்துகொண்டிருந்தபோது, அனைவருடைய கண்களுக்கும் தெரியும்படியும் மஹால்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார்.

"சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று சொல்லி மிகப் பணிவாக மகால்சாபதி பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

சுயநலமில்லாத, செல்வத்தை நாடாத, ஆன்மீக ஏற்றத்தையே நாடிய, உடலாலும் உள்ளத்தாலும் சாயிபாதங்களை சரணடைந்துவிட்ட, பிரேமை மிகுந்த பக்தரை இங்கு நாம் பார்க்கிறோம்.