valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 14 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"இவ்வாறாக, நான் இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற்ற பிறகு மகிழ்ச்சிக் கடலில் திளைத்தேன். இதன் விளைவாக நேர்த்திக்கடனை முற்றிலும் மறந்துபோனேன். செல்வத்தின் மோகத்தை வெல்வதை எளிதோ!-

"பின்னர் ஒரு சமயம் நான் குலாபா பக்கம் சென்றபோது கனவில் சாயியைக் கண்டேன். உடனே, ஷீர்டி செல்வதற்குக் கிளம்பினேன். -

"சமர்த்த சாயி தம் பயணத்தை விளக்கியவாறு, கப்பலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காதது, சிப்பாயின் முயற்சியால் தடங்கல் விலகியது. இவை அனைத்தும் உண்மை.-

"இவையனைத்தும் என்னுடைய பிரச்சினைகள். கப்பல் நின்றுகொண்டிருந்த இடத்தை நான் அடைந்தபோது சிப்பாய் எனக்காக மனப்பூர்வமாக சிபாரிசு செய்தார்.-

"அதன் பிறகே, முதலில் எனக்குப் பயணம் செய்ய அனுமதி தர மறுத்த அதிகாரி இடம் கொடுத்து உதவி செய்தார்.-

அந்த சிப்பாயும் எனக்கு முன்பின் தெரியாதவர்; ஆயினும் அவருக்கு என்னைத் தெரியுமென்று சொன்னார். ஆகவே யாரும் எங்களைத் தடுக்கவில்லை. நாங்கள் சுகமாகக் கப்பலில் அமர்ந்துகொண்டோம்.

"இதுதான் கப்பலின் கதையும் சிப்பாயின் கதையும். இதெல்லாம் எனக்குத்தான் நேர்ந்தது; ஆயினும், சாயி இவற்றை தம்மேல் ஏற்றிக்கொண்டு கதை சொன்னார். -

"இந்த அற்புதத்தை நினைத்துப் பார்க்கும்போது என்னுடைய மனம் செயலிழந்து போகிறது. சாயி இந்த உலகம் முழவுதும் வியாபித்திருப்பதை நான் உணர்கிறேன்.

"இவ்வுலகில் ஓர் அணுவளவு கூட இல்லாத இடம் இல்லை. எங்களுக்கு இவ்வரசு இந்த அனுபவத்தை அளித்தாரோ, அவ்வாறே மற்றவர்களுக்கும் அனுபவங்களை அளிப்பார்.-

"நாங்கள் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்களை அலாக்காக தூக்கித் தம்மிடம் கொண்டுவந்து நல்வழிப்படுத்த, நாங்கள் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்!-

"ஆஹா! என்னுடைய செல்வம் திருடுபோனதுதான் என்ன! நான் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதுதான் என்ன! திருடுபோன செல்வம் சிரமமின்றி திரும்பி வந்ததுதான் என்ன! நேர்த்திக்கடன் நிறைவேறிய அற்புதந்தான்  என்னே! -

"எங்களுடைய வானளாவிய பாக்கியம் என்னே! நாங்கள் அவரை இதற்குமுன் தரிசனம் செய்தது கிடையாது; அவரைபற்றிக் கேள்விப்படும் இல்லை; சிந்தனை செய்ததும் இல்லை. ஆயினும், அவர் எங்களை நினைவில் வைத்திருந்தார்; அனுக்கிரமும் செய்தார்!-

"ஆண்டாண்டாக அவருடைய கூட்டுறவில் மூழ்கி இரவுபகலாக அவருடைய பாதங்களுக்கு சேவை செய்யும் கடவுள் - பக்தர்கள் எவ்வளவு பாக்யசாலிகளாகவும் தன்யவர்களாகவும் இருக்கவேண்டும்?-

 


 

Thursday, 7 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"பக்கீர் என்னிடம் இதைச் சொன்னவுடன் ஒரு நிமிடமும் தாமதியாது நான் அரிசிச் சோற்றை விட்டுவிட்டேன். 'பாபா, என்னுடைய திருடுபோன பணம் திரும்பக் கிடைத்து, உங்களை தரிசனம் செய்த பிறகுதான் மறுபடியும் நான் அரிசிச் சோறு தின்பேன்' என்று விரதம் எடுத்துக்கொண்டேன்.-

"இதன்பிறகு பதினைந்து நாள்கள் கழிந்தன. பிராமணருடைய மனதில் என்ன தோன்றியதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்! அவர் தாமாகவே என்னிடம் வந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.-

"அவர் சொன்னார், 'என்னுடைய புத்தி என்னை ஏமாற்றிவிட்டது. அதனால்தான் இச்செயல் என்னால் செய்யப்பட்டது. நான் என் தலையை உமது பாதங்களில் வைக்கிறேன். உன்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்.'-

"அதன்பிறகு எல்லாம் நல்லபடியாக நடந்தது. சாயியை தரிசனம் செய்யவேண்டுமென்ற தீவிர ஆவல் ஏற்பட்டது. அதுவும் இன்று நிறைவேறியது. பாக்கியசாலியாகவும், தன்யனாகவும் (எல்லா சம்பத்துக்களையும் பெற்றவனாகவும் ) ஆனேன். -

"ஆனால், நான் சங்கடத்தில் ஆழ்ந்து சோகமாக வராந்தாவில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது எவர் எனக்கு ஆறுதல் அளித்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை.-

"எவர் என்மேல் பரிதாபப்பட்டு என்மீது அக்கறை கொண்டு ஷிர்டியை சுட்டிக்காட்டி சாயியைப்பற்றி எனக்குத் தெரிவித்து அனுக்கிரஹம் செய்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை.-

"எவர் நான் சற்றும் எதிர்பாராது தெருவழியே சூக்குமமான கேள்விகளை கேட்டுக்கொண்டு வந்தாரோ, எவர் என்னைக் கடைசியில் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தாரோ, அவரை மறுபடியும் பேட்டி காண முடியவில்லை. 

"உண்மையில், உங்களுடைய அவுலியா ஸாயிதான் அந்தப் பக்கீராக வந்தார் என்று தோன்றுகிறது. அவரே விருப்பப்பட்டு எங்களுக்கு தரிசனம் அளித்தார். -

"ஏதாவது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் மக்கள் ஒரு ஞானியை தரிசனம் செய்ய விரும்புகின்றனர். நான் அவ்வாறு தரிசனம் செய்ய நினைக்கவில்லை. ஆயினும் நான் இழந்த பொருளைத் திரும்பப் பெறுவதற்காக, எடுத்தவுடன் என்னை ஞானிதரிசனம் செய்யப் பக்கீர் தூண்டினார். -

"எவரிடம் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதால் நான் இழந்த செல்வத்தை சுலபமாகத் திரும்பப் பெற்றேனோ, அவர் என்னுடைய முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணைக்கு ஆசைப்படுவது என்பது கனவிலும் நடக்காத காரியம். -

"நேர்மாறாக, அஞ்ஞான மனிதர்களை ஆன்மீக நாட்டங்கொள்ளச் செய்வதற்காகவும் நம்முடைய மங்களைத்தை உத்தேசித்து நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவும் நிரந்தரமாக தக்ஷிணை என்னும் சாக்குப்போக்கை உபயோகிக்கிறார். -

"இந்த அவதாரம் இதற்காகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படி இல்லையென்றால், பாமரர்களும் பக்தி இல்லாதவர்களுமாகிய நாம் எவ்வாறு பிறவிக்கடலைக் கடக்க முடியும்? இதை நிதானமாக யோசித்துப் பாருங்கள்!-




Thursday, 31 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆகவே, ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மஹால் சாபதியை ஒரு பைசாவைக்கூட தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் திரவியத்தை தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்.

இப்பொழுது இரண்டாவது விருந்தாளி பேச ஆரம்பித்தார். "நானும், என் சூசகத்தைப் புரிந்துகொண்டேன். மொத்த கதையையும் சொல்கிறேன்; கேளும், கேட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்.-

"ஒரு பிராமணர் எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பணி செய்துவந்தார். அவர் அயராது உழைப்பவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். துரதிர்ஷ்டவசமாக அவருடைய புத்தி மயங்கியது. என்னுடைய பணத்தை அபகரித்தார் -

"என்னுடைய வீட்டில் சுவருக்குள் அடங்கிய அலமாரி ஒன்று இருந்தது; அவர் யாருக்கும் தெரியாமல் சுவரின் கற்களை மெதுவாக நகர்த்தி ஒரு துவாரம் செய்து கொண்டார். -

"பாபா முன்பு குறிப்பிட்ட அலமாரியின் பின்பக்கம்தான் அவர் துவாரம் செய்த இடம். அதற்காக, எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது சுவரின் கற்களை நகர்த்தினார். -

"பாபா, 'என்னுடைய பணம் திருடு போய்விட்டது' என்று சொன்னாரவல்லவா? அது முற்றிலும் உண்மை ஒரு கற்றை ரூபாய் நோட்டு திருடப்பட்டது.

"அக் கற்றையின் மதிப்பு சரியாக முப்பதாயிரம் ரூபாய். பாபாவுக்கு இந்த விவரமெல்லாம் எப்படித் தெரிந்தது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதைக் கண்டு நான் இரவுபகலாக அழுதுகொண்டிருந்தேன். -

"திருட்டைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளால் நான் களைப்படைந்தேன். மன உளைச்சலாலும் சோகத்தாலும் நான் நீர்ச்சுழலில் மாட்டிக்கொண்டவன் போல் பதினைந்து நாள்கள் அவஸ்தைப்பட்டேன். மேலும் வழி தெரியவில்லை. -

"ஒருநாள் நான் மனமுடைந்தவனாக வாரந்தாவில் உட்கார்ந்திருந்தபோது, உரக்க கேள்விகளைக் கேட்டுக்கொண்டு ஒரு பக்கீர் வீதி வழியாக நடந்துவந்தார்.

"என்னுடைய சோகம் ததும்பிய முகத்தைப் பார்த்துவிட்டு சோகத்திற்கு காரணம் என்னவென்று கேட்டார். நான் விவரமனைத்தும் சொல்லிமுடித்தபிறகு நிவாரணம் பெறுவதற்கு அவர் ஓர் அறிவுரை அளித்தார் -

"கோபர்காங்வ் தாலுகாவிலுள்ள ஷீர்டி என்னும் கிராமத்தில் சாயி அவ்லியா (முஸ்லீம் ஞானி) வாசம் செய்கிறார். அவரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ளும்.-

"உமக்கு மிகவும் விருப்பமான உணவுப்பொருள் ஒன்றைச் சாப்பிடாமல் நிறுத்திவிடும். அவரை தரிசனம் செய்யும்வரை அதைச் சாப்பிடாமல் விட்டுவிடுவதாக அவரிடம் சொல்லும்.-

 


 

Thursday, 24 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"அவர் தக்ஷிணை வாங்கிக்கொண்டார் என்று யாரவது நினைக்கலாம். அது தக்ஷிணை அன்று; என்னால் திருப்பிக் கொடுக்கப்பட்ட கடனேயாகும். தக்ஷிணை என்ற சாக்குப்போக்கில் என்னுடைய பழைய நேர்த்திக்கடன் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.

தாத்பரியம் என்னவென்றால், சாயி திரவியம் எதையும் யாசிப்பதில்லை; தம்முடைய நிஜமான பக்தர்களையும் யாசிக்க அனுமதித்ததில்லை. செல்வதை அவர் அநர்த்தமாகவே (கேடாகவே)  கண்டார். பக்தர்களையும் பண மோகத்திலிருந்து காப்பாற்றினார்.

சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகால்சாபதி என்ற பக்தர் சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரைச் சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.

தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகால்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

சாயி இவ்வளவு உதாரகுணமுள்ளவராக இருந்தபோதிலும், மகல்சாபதி ஒருநாளும் அவர் முன் கெஞ்சிக் கையை நீட்டினாரில்லை. அவருடைய தன்மான உணர்வு போற்றுதற்குரியது.

அவருடைய  செல்வநிலை எவ்வளவு தாழ்ந்திருந்ததோ, அவ்வளவு உயர்ந்திருந்தது அவருடைய துறவு மனப்பான்மை. சொற்ப வருமானத்திலேயே திருப்தி கண்டு அவர் வறுமையின் கஷ்டங்களை தைரியமாக வாழ்க்கையில் எதிர்கொண்டார்.

ஒருசமயம், ஹம்சராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர் மகல்சாபதிக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.

அவருடைய கொடிய வறுமையைக் கண்டு தம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஹம்சராஜின் மனத்தில் உதித்தது.

மகல்சாபதியின் வறுமை நன்கு தெரிந்திருந்தும் அவர் வேறு யாரிடமிருந்தும் உதவி பெறுவதை சாயி அனுமதிக்கவில்லை. அவர் திரவியத்தை உதாசீனம் செய்வதையே சாயிநாதர் ஊக்குவித்தார்.

ஆகவே அந்த வியாபாரி என்ன செய்தாரென்றால், இந்த பக்தருக்காக மனம் இளகி, பாபாவின் தர்பார் நடந்துகொண்டிருந்தபோது, அனைவருடைய கண்களுக்கும் தெரியும்படியும் மஹால்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார்.

"சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று சொல்லி மிகப் பணிவாக மகால்சாபதி பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

சுயநலமில்லாத, செல்வத்தை நாடாத, ஆன்மீக ஏற்றத்தையே நாடிய, உடலாலும் உள்ளத்தாலும் சாயிபாதங்களை சரணடைந்துவிட்ட, பிரேமை மிகுந்த பக்தரை இங்கு நாம் பார்க்கிறோம்.




Thursday, 17 March 2022

                                                        ஷீர்டி சாயி சத்சரிதம் 


"ஓ, பிராமணரென்ன, மாளிகையென்ன! ஜென்மம் பூராவும் ஒரு மரத்தடியில் கழித்தவர் அவர். திருடன் கொண்டுபோன செல்வமெல்லாம் எங்கிருந்து வந்தது?-

"ஆகவே, இந்த நிகழ்ச்சிகள் ஆரம்பகாலத்தில் உங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்றனவாகத்தான் இருக்கவேண்டும். இக் கதையை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், நீங்கள் வந்தவுடனே பாபா கதையை ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது."

விருந்தாளிகள் உணர்ச்சிவசப்பட்டு தொண்டை அடைக்க கூறினார், "சாயி எல்லாம் அறிந்தவர்; பர ப்ரம்ம அவதாரம்; இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்டவர்; இறைவனோடு ஒன்றியவர்; பேதமேதுமில்லாதவர்; எங்கும் நிறைந்தவர்.-

"அவர் இப்பொழுது சொன்ன கதை எழுத்துக்கு எழுத்து எங்களுடையது. போஜனம் முடிந்த பிறகு உங்களுக்கு விஸ்தாரமாகச் சொல்கிறோம்.-

"பாபா சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளும் எங்கள் வாழ்வில் நடந்தவை. எங்களை முன்பின் பாராதவருக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது? ஆகவே, இவையனைத்தும் அதிசயமே!"

உணவுண்ட பிறகு மாதவராவுடன் வெற்றிலைபாக்கு சுவைத்துக்கொண்டிருந்தபோது விவரணம் ஆரம்பித்தது.

ஒருவர் சொன்னார், "என்னுடைய ஆதி குடியிருப்பு சயகாத்ரி மலைத்தொடரில் இருக்கிறது. ஆனால், பிழைக்கும் வழி விஷயத்தில் சமுத்திரக்கரைக்குத் தொடர்பு இருந்திருக்கவேண்டும். -

"ஆகவே நான் ஏதாவது வேலை கிடைக்குமென்று நினைத்து கோவாவுக்குச் சென்றேன். காரியசித்தி ஆக்கவேண்டுமென்று நான் தத்தாத்திரேயரை அத்யந்தமான பபாயக்தியுடன் ஆராதனை செய்தேன்; நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டேன்.-

"நான் தத்தரின் பாதங்களில் விழுந்து வேண்டிக்கொண்டேன், 'இறைவா! என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எனக்கொரு வேலை தேவைப்படுகிறது. கிருபை செய்து எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்கள்.-

"இன்றிலிருந்து சொற்ப அவகாசத்திற்குள் என்னுடைய வேண்டுகோள் நிறைவேறினால்,முதல் மாதத்தில் எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை முழுவதுமாக உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்'-

"பாக்கியவசமாக தத்தர் என்னுடைய பிரார்த்தனையை சீக்கிரமாகவே நிறைவேற்றி வைத்தார். அப்பொழுதிலிருந்து நான் மாதம் பதினைந்து ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தேன். -

"பிறகு, சாயி பாபா வர்ணனை செய்தவாறே எனக்குப் பதவி உயர்வுகள் பல கிடைத்தன. நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட விஷயத்தை எப்படியோ என் மனம் அடியோடு மறந்துவிட்டது. ஆகவே, அது இந்த ரீதியில் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது. -

 


 

Thursday, 10 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"கண்விழித்து என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன். நான் முப்பதாயிரம் ரூபாயை இழந்துவிட்டேன். என்னுடைய மனம் வருத்தம் நிறைந்து கலங்கியது. -

"பணம் பூராவும் வங்கி நோட்டுகள். இந்த திடீர் இழப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்னுடைய இதயத்தைத் தாக்கியது. மாளிகையின் யஜமானராகிய பிராமணர் எனக்கு ஆறுதல் சொன்னார். -

"எனக்கு அன்னமும் பானமும் ஏற்கவில்லை. பதினைந்து நாள்கள் நான் வராந்தாவில் ஒரே இடத்தில பித்துபிடித்ததுபோல பரிதாபகரமாக உட்கார்ந்திருந்தேன். -

"பதினைந்தாவது நாள் முடியும்போது, எதிர்பாராமல் ஒரு பக்கீர் மறைபொருள் கொண்ட சித்தர் பாடல்களை பாடிக்கொண்டு தெருவழியே சென்றார். நான் அழுதுகொண்டிருந்ததை பார்த்தார். -

"என்னுடைய துக்கத்திற்குக் காரணமென்ன என்று கேட்டார். நான் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னேன். பக்கீர் சொன்னார், 'நான் சொல்கிறபடி நீர் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.-

"நான் ஒரு பக்கீரைப்பற்றியும் அவர் இருக்குமிடம் ஆகிய விவரங்களையும் சொல்கிறேன். நீர் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடும். அவர் உம்முடைய செல்வம் திரும்பிவந்துசேரும்படி செய்வார்.-

"ஆனால், வேண்டுதல் நிறைவேறும்வரை நான் சொல்லும் விரதமொன்றை நீர் அனுஷ்டிக்கவேண்டும். உமக்கு மிகவும் பிடித்தமான உணவுப்பண்டத்தை விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தல் உமக்கு காரியசித்தி ஆகும்.-

"அவருடைய அறிவுரையைக் கேட்டு நான் அவர் குறிப்பிட்ட பக்கீரைச் சந்தித்தேன். இழந்த என் செல்வத்தைத் திரும்பப் பெற்றேன். பின்னர் நான் அந்த மாளிகையை விடுத்து, முன்போலவே சமுத்திரக்கரையோடு சென்றேன். -

"அலைந்து தெரிந்துகொண்டே சென்று கடைசியில் ஒரு கப்பலை அடைந்தேன். ஆனால், உள்ளே புக முடியவில்லை. ஆயினும், நல்ல சுபாவமுள்ள சிப்பாய் ஒருவர் எனக்கு எப்படியோ கப்பலில் ஓர் இடம் பிடித்துக்கொடுத்தார்.-

"தெய்வபலத்தால் காற்று அனுகூலமாக வீசியது; கப்பல் நேரத்தோடு அக்கறை சேர்ந்தது. பின்னர் நான் ஒரு குதிரைவண்டி பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இந்தக் கண்களால் மசூதிமாயியைப் பார்த்தேன்".

பாபா சொன்ன கதை இங்கு முடிந்தது. கோவா விருந்தாளிகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவளிக்கும்படி சாமாவுக்கு பாபா ஆணையிட்டார்.

தட்டுகள் வைக்கப்பட்டன. சாப்பிட உட்காரும்போது மாதவராவுக்கு ஆர்வம் எழும்பியது. விருந்தாளிகளை அவர் கேட்டார், "பாபா பாபா சொன்ன கதைகள் உங்களுக்குப் பாடம் ஆயிற்றா?-

"உண்மையைச் சொல்லப்போனால், சாயி பாபா இந்த இடத்தில பல வருடங்களாக நிலைபெற்றவர். அவர் சமுத்திரத்தையோ கப்பலையோ சிப்பாயையோ அறிய மாட்டார். 




Thursday, 3 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"சிறிய தொகையை விரும்பி ஏற்றுக்கொண்டீர்கள்; பெரிய தொகையின்மீது ஆசை காட்டவில்லை. நான் உங்களுடைய ஸ்தானத்தில் (பதவியில்) இருந்திருந்தால் இந்த ரீதியில் செயல்பட்டிருக்கமாட்டேன்!"

"சாம்யா (சாமா), உனக்கு புரியவில்லை! நானென்னவோ எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பிக் கேட்பவள் இந்த மசூதிமாயி! கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார்.-

"எனக்கு என்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா? நான் ஏன் செல்வத்தை நாடவேண்டும்? எந்த வகையில் பார்த்தாலும் நான் விசாரமில்லாதவன்; தொல்லைகளற்றவன். -

"கடன், விரோதம், கொலைக்குற்றம் இவற்றிலிருந்து யுகமுடிவு பரியந்தம் முயன்றாலும் விடுபடமுடியாது. நீ இடர் வந்தபோது தேவிக்கு (சப்த சிருங்கி) நேர்ந்துகொண்டாய். உன்னை அதிலிருந்து விடுவிப்பதற்கு நான் படாத பாடு படவேண்டியிருந்தது. -

"தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய்; காரியம் கைகூடியபிறகு அதைபற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை! என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்!-

"ஆரம்பகாலத்தில் இந்த மனிதர் ஏழையாக இருந்தார். ரூ. 15 /- கிடைத்தால், முதல் சம்பளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொண்டார். ஆனால், பிறகு அதை அறவே மறந்துவிட்டார்.

"பதினைந்து முப்பதாகி, முப்பது அறுபதாகி, அறுபது நூறாகியது. அவருடைய சம்பளம் இரண்டு மடங்காகவும் பின்பு நான்கு மடங்காகவும் ஆக ஆக, அவருடைய மறதியும் அதிகமாகியது! -

"காலக்கிரமத்தில் அவர் ரூ. 700 /- சம்பாதிக்க ஆரம்பித்தார். கர்மவசத்தால் (நல்வினைப்பயனால்) இன்று இங்கு வந்திருக்கிறார். ஆகவே, தக்ஷிணை என்ற பெயரில் அவரிடமிருந்து என்னுடைய பதினைந்து ரூபாயைக் கேட்டேன். -

"இப்பொழுது இரண்டாவது கதையைக் கேட்பாயாக. ஒரு காலத்தில் நான் சமுத்திரக் கரையோரமாக தெரிந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய மாளிகையைப் பார்த்தேன்; மாளிகையின் வராந்தாவில் உட்கார்ந்தேன்.-

"அந்த மாளிகையின் எஜமானர் ஒரு பிராமணர்; நல்ல வம்சத்தில் பிறந்தவர். பணக்காரர். அவர் என்னை அன்புடன் வரவேற்று யதேஷ்டமாக (நிரம்ப) அன்னமும் பணமும் அளித்தார். -

"அதன் பிறகு அதே இடத்தில், சுவரில் உள்ளடங்கிய அலமாரி இருந்த இடத்திற்கு அருகில், சுத்தமானதும் சுந்தரமானதுமான ஓரிடத்தில் என்னைத் தூங்குவதற்கு அனுமதித்தார். நான் அங்கே படுத்துத் தூங்கிவிட்டேன். -

"நான் ஆழ்ந்து தூண்வயத்தைப் பார்த்து, சுவரிலிருந்த நகரக்கூடிய கல் ஒன்றைப் பெயர்த்துவிட்டுத் திருடன் ஒருவன் உள்ளே புகுந்துவிட்டான். என்னுடைய பாக்கெட்டைக் கிழித்து என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.-