valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 30 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நாக்கு ஒரு சுவையை அனுபவிக்கும்போது சாயி சுவையுடன் கலந்துவிடுகிறார். இதன் பிறகு, சுவையும், நாக்கும், சுவைக்கும் செயலும் ஒன்றாகிவிடுவதில் அதிசயம் என்ன இருக்கிறது?

கர்மேந்திரியங்கள் அனைத்தின் கதியும் இதுவே. அவையெல்லாம் சாயியை சேவித்தால், கர்மவினைகள் அனைத்தும் அழியும். செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.

காவியம் நீண்டுகொண்டே போகிறது; இது சாயியின் பிரேமையால் விளைந்ததே. நாம் இப்பொழுது ஏற்கெனவே கோடிகாட்டப்பட்ட விஷயங்களுக்கு திரும்பிச் சென்று விட்ட இடத்திலிருந்து தொடர்வோமாக.

அருவ வழிபாட்டில் தீவிர நம்பிக்கை வைத்து உருவ வழிபாட்டிற்கு முதுகைக் காட்டுபவராக இருந்த நபர் ஒருவர், என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும் ஆர்வப்பசியால் மட்டுமே உந்தப்பட்டு ஷிர்டிக்குச் செல்ல உற்சாகம் கொண்டார்.

ஆகவே அவர் சொன்னார், "சாது தரிசனம் செய்வதற்கு மட்டுமே நாம் ஷிர்டிக்கு வருவோம். அவருக்கு வணக்கம் செலுத்தமாட்டோம்; தக்ஷிணையும் கொடுக்க மாட்டோம்".

"இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டால்தான் நாம் ஷிர்டிக்கு வருவோம்". நண்பர் இதற்கு ஒத்துக்கொண்டவுடன் அந்த நபர் ஷிர்டிக்குத் தெம்புடன் கிளம்பினார்.

நண்பரின் பெயர் காகா மஹாஜனி; பாபாவின் மீது பவித்திரமான பக்தியும் பிரேமையும் வைத்திருந்தவர். அந்த ஆசாமியோ சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் நிரம்பிய பாத்திரம்.

இருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயிலிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷீர்டி வந்துசேர்ந்தனர்.

சாயிதரிசனம் செய்வதற்கு இருவரும் உடனே மசூதிக்கு சென்றனர். அப்பொழுது என்ன நடந்ததென்பதை கவனமாக கேளுங்கள்.

காகா மஹாஜனி மசூதியின் முதற்படியில் கால் வைத்தவுடனேநண்பரைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட பாபா, மதுரமான குரலில் கேட்டார், "நீர் ஏன் வந்தீர் ஐயா?"

அன்பு ததும்பிய இவ்வார்த்தைகளை கேட்ட காகா மஹாஜனியின் நண்பர் சூக்குமமான குறிப்பை உடனே அடையாளம் கண்டுகொண்டார். வாக்கியத்தின் அமைப்பும் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்ட பாணியும் அவருக்குத் தம் தந்தையை நினைவூட்டின.

"நீர் ஏன் வந்தீர் ஐயா?" என்ற வார்த்தைகள் வெளிவந்த ஸ்வரம் (நாதம்) காகா மஹாஜனியின் நண்பரை வியப்பில் ஆழ்த்தியது.

இனிமையான அந்தக் குரல் அவருக்குத் தம் (காலமான) தந்தையை ஞாபகப்படுத்தியது. குரலும் வார்த்தைகள் வெளிவந்த பாணியும் அவருக்குச் தந்தையினுடையதை போலவே இருந்தன. பாவனைச் செயல், பூரணமாக யதார்த்தமாகவும் துல்லியமாகவும் இருந்தது. 








Thursday, 23 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"எது எப்படியிருப்பினும், நான் ஷிர்டிக்குச் சென்று அவரைப் பேட்டி காண்பேன். ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தக்ஷிணை கொடுக்கவும் மாட்டேன்".

எவரெவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினாரோ, அவரெவரெல்லாம் தரிசனயோகம் கிடைத்தபின் சாயியை சரணடைந்தார்கள்.

எவரெவரெல்லாம் சாயியைக் கண்ணால் கண்டார்களோ, அவரவரெல்லாம் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பிப் பார்க்கவே இல்லை. சாயிபாதங்களில் மூழ்கிவிட்டனர்!

அவர்கள் தீர்மானம் செய்துகொண்டு வந்ததை அறவே மறந்து குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு சாயிபாதங்களை வணங்கினர்.

'தன்னுடைய மார்க்கமே சிறந்தது' என்னும் அளவுக்குமீறிய மதாபிமானம் நல்லடக்கம் செய்யப்பட்ட கதை இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. பயபக்தியுடன் கேளுங்கள்; ஜீவனுக்கு அத்தியந்த சுகம் கிடைக்கும்.

அதுபோலவே, பாலா நெவாஸ்கர் எவ்வாறு ஒரு நல்ல பாம்பை பாபா வாகவே கருதிப் ப்ரீதியுடன் நடந்துகொண்டார் என்பதுபற்றியும் கேளுங்கள். மேலும், இந்த அத்தியாயம் உதீயின் சூக்குமமான சக்தியைப்பற்றியும் பேசுகிறது.

கதை கேட்பவர்களே! எனக்கு கிருபை செய்யுங்கள். நான் கேவலம் சாயியின் ஆக்கினைக்கு கட்டுப்பட்ட ஓர் அடிமை. அவருடைய ஆணையை பயபக்தியுடன் நிறைவேற்றத்தான் எனக்குத் தெரியும். அதிலிருந்து எழுந்ததே இச் சரித்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும்.

அவருடைய பாதங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றிலிருந்து அலையலையாக எழும்பும் கவிதைகளை அவருடைய பவித்திரமான சரித்திரம் என்னும் குடத்தில் மேலும் மேலும் நிரப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறேன்.

நாமெல்லாம் தாய் ஆமையின் அன்பார்ந்த பார்வையொன்றாலேயே போஷாக்கு பெரும் ஆமைக்குட்டிகள். நமக்கு எப்போதும் பசியில்லை; தாகமுமில்லை; களைப்புமில்லை. எந்நேரமும் திருப்தியுள்ளவர்களாகவே இருக்கிறோம்.

கடைக்கண் பார்வையொன்றே போதும்; நமக்குச் சோறும் வேண்டா, நீரும் வேண்ட. அன்பான பார்வையே நம் பசியையும் தாகத்தையும் தணித்துவிடுகிறது. அதை எப்படித் தகுந்த அளவிற்குப் புகழமுடியும்?

கிருபாசமுத்திரமான சாயிராயரே நம்முடைய காட்சி அனைத்தும். இந்நிலையில், காட்சிப்பொருள், காண்பவன், காட்சி - இந்த முக்கோண பேதம் மறைந்து, மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.

அதுபோலவே, நாம் சருமத்திலும் தொடுவுணர்ச்சியிலும் சாயியின் பிரகாசத்தைக் காண்கிறோம். மூக்கிலும் வாசனையிலும் அவ்வாறே சாயி உறைகிறார்.

காதில் ஓர் ஒலி விழும்போது சாயியின் உருவம் உடனே வெளிப்படுகிறது. கேள்வி, கேட்பவர், கேட்கும் செயல் - இம்மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன. 





Thursday, 16 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

35 . சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தின் முடிவில் கோடிகாட்டிய கதைகளை இந்த அத்தியாயத்தில் தொடர்கிறேன். அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

தன்னுடைய பாதையே உயர்ந்தது என்று நினைத்து தன்னுடைய மதத்தின் உட்பிரிவின்மேல் வைக்கும் அளவுக்குமீறிய அபிமானத்தை விட பயங்கரமானதும் தாண்டமுடியாததுமான விக்கினம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேறெதுவுமே இல்லை.

"நாங்கள் உருவமற்ற கடவுளைத் தொழுபவர்கள். உருவமுள்ள கடவுளே அனைத்து பிரேமைகளுக்கும் மூலகாரணம். ஞானிகளும் சாதுக்களும் கூட மனிதர்கள்தாமே? இவ்வாறிருக்க, அவர்களை பார்த்தால் நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும்?-

"அவர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது; தக்ஷிணையும் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு மரியாதை ஏதும் செய்யக்கூடாது. ஏனெனில் அது பக்தியை கேலி செய்வதாகும்."

ஷிர்டியைபற்றிச் சிலர் சிலவிதமாகவும், வேறு சிலர் வேறுவிதமாகவும், பலர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையுமே நாம் விழுங்கிவிட முடியாது.

சிலர் சொன்னார்கள், "தரிசனத்திற்குப் போனால் சாயிபாபா தக்ஷிணை கேட்கிறார். சாதுக்கள் திரவியத்தை சம்பாதிக்க முயலும்போது அவர்களுடைய சாதுத்துவம் அடிபட்டுவிடுகிறதன்றோ!

"குருட்டு நம்பிக்கை நல்லதன்று. பிரத்யக்ஷமாக அனுபவம் கிடைத்த பிறகே நான் என்னுடைய மனத்தில் எவ்வழி செல்வதென்று முடிவுசெய்வேன். -

"பணத்தின் மீது நாட்டம் கொண்டவரின் ஞானித்துவத்தை என்னால் மெச்ச முடியவில்லை. நான் தக்ஷிணை கொடுக்கமாட்டேன். நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுள்ள பாத்திரமல்லர்.-

 


 

Thursday, 9 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நாங்கள் உருவமற்ற கடவுளையே வணங்குவோம்; தக்ஷிணை கொடுக்கமாட்டோம்; நாங்கள் யாருக்கும் தலைவணங்கமாட்டோம். இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால்தான் தரிசனத்திற்கு வருவோம்".

இவ்வாறு நிச்சயம் செய்துகொண்டு வந்தவர்கள் சாயியின் பாதங்களைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்!

மேலும், உதீயின் அபூர்வ மகிமையையும் நெவாஸ்கர் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்!

இதுபோன்ற உத்தமமான கதைகளை பக்தியுடனும் பிரேமையுடனும் செவிமடுத்தால், சம்சார இன்னல்கள் சாந்தமடையும். அதைவிடப் பரம சுகம் வேறெதுவும் உண்டோ?

ஆகவே, ஹேமாட் சாயிபாதங்களில் வணங்கி, கதை கேட்பவர்களுக்குப் பிரேமையை அருளுமாறு வேண்டுகிறேன். அவர்களுடைய மனம் சத் சரித்திரம் கேட்பதில் ரமிக்கட்டும். (மகிழட்டும்).

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்' என்னும் முப்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 



Thursday, 19 August 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சந்திர சேனிய காயஸ்த ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தவர் ஒருவர் பம்பாயில் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி பிரசவ நேரம் வரும்போது உயிருக்குப் போராடுவாள்.

எத்தனையோ வைத்திய முறைகளைக் கையாண்டு பார்த்தனர். எதுவும் குணமளிக்கவில்லை. பிரசவ நேரத்தில் பெண்மணியின் ஜீவன் கலங்கும். கணவர் கவலையில் மூழ்குவார்.

ஸ்ரீராம மாருதி என்ற பெயர்கொண்ட, பிரசித்திபெற்ற சாயி பக்தரொருவர்  அளித்த அறிவுரையின்படி கணவர் ஷிர்டிக்குப் போவதென்று முடிவுகட்டினார்.

பிரசவ சமயம் நெருங்கும்போது, இருவருமே பெரும் சங்கடத்துக்குள்ளாயினர். ஆகவே, ஷிரிடிக்குப் போவதால் பயத்திலிருந்து பயத்திலிருந்து விடுபடுவதென்று இருவரும் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.

என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் சந்நிதியில்தானே நடந்தாகவேண்டும்? இந்த திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருவரும் வந்து ஷிர்டியில் தங்கினர்.

ஷிர்டியில் அவர்கள் ஆனந்தமாக பாபாவுக்குப் பூஜை செய்துகொண்டும் அவருடைய சகவாசத்தை அனுபவித்துக்கொண்டும் பல மாதங்கள் வசித்தனர்.

இவ்வாறு சிலகாலம் கழிந்தபிறகு, பிரசவக்காலம் நெருங்கியது. சங்கடத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்ற மனக்கலத்தையும் கூடவே கொண்டுவந்தது.

இவ்வாறு அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பிரசவம் ஆகவேண்டிய நாள் வந்துவிட்டது. கர்ப்பப்பையின் வாய் அடைந்திருப்பது கண்டு எல்லோரும் விசாரமடைந்தனர்.

பெண்மணி மிகுந்த யாதனைக்கு (நரக வேதனைக்கு) உள்ளானார். யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாபாவை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை ஓடியது. அவரன்றி வேறு யார் கருணைகாட்டப்போகிறார்?

அக்கம்பக்கத்திலிருந்த மகளிர் ஓடிவந்தனர்; அவர்களில் ஒருவர் பாபாவைப் பிரார்த்தனை செய்துகொண்டே ஒரு லோட்டாவில் கொஞ்சம் நீர் எடுத்து அதில் உதீயைக் கரைத்து அப் பெண்மணியைக் குடிக்கவைத்தார்.

ஐந்து நிமிடங்களுக்குள் அப் பெண்மணி பிரசவித்தாள். கர்ப்பதிலேயே உயிரிலிந்த சிசு, ஜீவனற்றுக் காணப்பட்டது.

அதுவே சிசுவின் கர்மகதி. பிற்காலத்தில் அப் பெண்மணிக்கு நல்ல குழந்தை பிறக்கலாம். தற்சமயத்திற்கு உயிர் பிழைத்துக்கொண்டாள்; பயத்திலிருந்து விடுதலை பெற்றாள்.

வேதனையின்றி கர்ப்பத்தை வெளிக்கொணர்ந்தாள்; உடல் அங்கங்கள் ஆரோக்கியமாக இருந்தன. மிகுந்த அபாயகரமான கட்டம் தாண்டிவிட்டது. அப்பெண்மணி பாபாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டவள் ஆனாள்.

அடுத்த அத்தியாயம் மேலும் சிறப்பானது. கேட்பவர்களின் ஆவல் செழிப்பாக நிறைவேறும். எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும் கெட்ட குணம் விலகும்; பக்தி வளரும். 




Thursday, 12 August 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உடனே விலேபார்லேவிற்கு சென்று, தீக்ஷிதரை உதீ வேண்டும் என்று கேளுங்கள். அவர் எப்பொழுதும் தம்மிடம் உதீ வைத்திருப்பவர்; மிகுந்த உற்சாகத்துடன் உதீ அளிப்பார்.-

"சாயியை மனத்தில் நினைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குழந்தைக்கு கொடுத்தால் காக்காய் வலிப்பு மறைந்துவிடும். நீங்கள் எல்லாருமே சந்தோஷமடைவீர்கள்."

இதைக் கேட்ட பார்சி கனவான் (இரானியர்) தீக்ஷிதரிடமிருந்து உதீ பெற்றுக்கொண்டு வந்தார். தினமும் தம் பெண்குழந்தைக்கு நீருடன் கலந்து குடிக்கக் கொடுத்தார். குழந்தை ஆரோக்கியம் அடைந்தது.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கலவரம் அடையும் குழந்தைக்கு உதீயால் உடனே நிவாரணம் கிடைத்தது. அடுத்தடுத்த வலிப்புகளின் இடைவெளி படிப்படியாக ஏழு மணிகளாக உயர்ந்தது.

இவ்வாறாக, மணிக்கொருதரம் ஏற்பட்ட வலிப்பு ஏழு மணி நேரத்திற்கு ஒருதரம் ஏற்பட்டது. காலக்கிரமத்தில் சுவடேயில்லாமல் வலிப்பு மறைந்துவிட்டது!

ஹர்த்தாவுக்கருகில் இருந்த கிராமமொன்றில் ஒரு முதிய இல்லறவாசி வாழ்ந்துவந்தார். 'சிறுநீரக கற்கள்' வியாதியால் பீடிக்கப்பட்டு வலியும் வேதனையும் அடைந்தார்.

இந்த வியாதிக்கு அறுவை மருத்துவத்தை தவிர வேறு வழி ஏதும் இல்லாததால், திறமை வாய்ந்த அறுவை மருத்துவ நிபுணர் யாரையாவது அணுகும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறினர்.

நோயாளி மிகுந்த விசாரமுற்றார்; என்ன செய்வதென்று தெரியாது தவித்தார். மரணத்தின் வாயிலிலிருப்பவர் போல் மெலிந்து போனார். வேதனையளிக்கும் வலியைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

அறுவை மருத்துவம் செய்துகொள்வதற்கு தைரியம் தேவை. முதியவருக்கு அந்த தைரியம் இல்லை. தெய்வாதீனமாக அவருடைய துரதிஷ்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அற்புதம் என்ன நடந்ததென்று கேளுங்கள்!

நோயாளியின் நிலைமை இவ்வாறு இருந்தபோது, அந்த கிராமத்தின் இனாம்தார் கிராமத்திற்கு வரப்போகிறார் என்ற செய்தி வந்தது. இனாம்தார் சாயி பாபாவின் சிறந்த பக்தர்.

அவர் எப்பொழுதும் தம்மிடம் பாபாவின் உதீயை வைத்திருந்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். உதியீயைப் பிரார்த்தித்து வாங்குவதற்கு நோயாளியின் உறவினர்களும் நண்பர்களும் இனாம்தாரிடம் வந்தனர்.

இனாம்தார் உதீ கொடுத்தார். மகன் அதை நீருடன் கலந்து தந்தைக்கு (நோயாளி முதியவருக்கு) குடிப்பதற்கு கொடுத்தான். குடித்து ஐந்து நிமிடங்கூட ஆகவில்லை; ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

உதீ பிரசாதம் உள்ளே சென்றவுடன், சிறுநீரகக் கல் இடத்திலிருந்து நகர்ந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிட்டது. 




Thursday, 5 August 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"நான் வீடு வந்து சேர்ந்தவுடனே உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்கு கொடுத்தேன்; உடல் முழுவதும் பூசினேன். உடனே அவளுடைய உடல் முழுவதும் வியர்த்துகொட்டியாயது; நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள். -

"பின்னர், சூரியோதய நேரத்தில் தெம்பாகவும் நலமாகவும் எழுந்து உட்கார்ந்தாள். ஜூரமும் வீக்கங்களும் மறைந்துவிட்டன. உண்மையில் இது பாபாவின் அருட்சக்தியேயன்றி வேறெதுவுமில்லை."

இந்த நிலைமையைப் பார்த்தவனுடனே சாமாவுக்கு பாபா 'போனவுடனே திரும்பிவிடு'  என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சாமாவின் மனம் ஆச்சரியத்தால் நிரம்பியது.

சாமா வருவதற்கு முன்பே வேலை முடிந்துவிட்டது. ஆகவே அவர் தேநீர் குடித்தவுடன் ஷீர்டி திரும்பினார். நேராக மசூதிக்குச் சென்று பாபாவின் பாதங்களை வணங்கினார்.

சாமா கேட்டார், "பாபா, இதென்ன விளையாட்டு? நீங்களே மனத்தில் கலவரத்தை உண்டுபண்ணுகிறீர். உம்முடைய இடத்தில் உட்கார்ந்தவாறே ஒரு சுழற்காற்றை கிளப்பிவிடுகிறீர். பிறகு, நீங்களே அதை நிச்சலமாக்குகிறீர்".

பாபா பதிலுரைத்தார், "இதோ பார், இதெல்லாம் மறைந்து வேலை செய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!

"விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.-

"நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்'குமல்லேன் (கடவுளுமல்லேன்) ; பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்) நான் அல்லாஹ்வின் மிகப் பணிவான அடிமை.-

"எவன் அகங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர் மீது தன் பாரத்தை போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்."

இப்பொழுது ஒரு இரானியரின் மகத்தான அனுபவத்தை கேளுங்கள். அவருடைய பெண் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாதிருந்தது. அவ்வப்பொழுது நினைவிழந்துவிடும்.

இப் பெண்குழந்தைக்கு மணிக்கொருமுறை காக்காய்வலிப்பு கண்டு, உடல் வில்லைபோல் வளைத்துக்கொள்ளும். உயிர் பிரிந்துவிட்டதுபோல் நினைவின்றிக் கிடப்பாள். இந்த வியாதிக்கு எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.

பின்னர், நண்பரொருவர் உதீயின் பிரபாவத்தைச் சொன்னார், "ராமாபானத்தை போன்று, குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து எங்கும் இல்லை. -