valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 22 October 2020

                                                        ஷீர்டி சாயி சத்சரிதம்

                                             33 . உதீயின்பிரபாவம் (பகுதி 1 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.


எந்த ஞானிகளின் கிருபைமிகுந்த கடைக்கண்பார்வை மலைபோன்ற பாவங்களை அக்கணமே எரித்துவிடுமோ, கலியுகத்தின் மலங்களைக் கழுவி அடித்துக்கொண்டு போகுமோ, அவர்களை வணங்குவமாக.


அவர்களை செய்யும் உபகாரங்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் போதாது. அவர்கள் இயல்பாக பேசுவதே நமக்கு நலந்தரும் உபதேசம்; அதுவே முடிவில்லாத பரம சுகத்தைக் கொடுக்கும்.


'இது என்னுடையது, அது அவருடையது' என்னும் எண்ணமே அவர்களுடைய சித்தத்தில் எழுவதில்லை. உலகியல் வாழ்வுக்கே உரித்தான பேதங்காட்டும் எண்ணங்களுக்கு அவர்களுடைய இதயத்தில் இடமில்லை.


கடந்த அத்தியாயத்தில் குரு மகிமையின் ஓர் அம்சத்தை கேட்டீர்கள். கதை கேட்பவர்களே! இந்த அத்தியாயத்தில் உதீயின் சக்தியைப் பற்றிக் கேளுங்கள்.


பாபா கேட்டு கேட்டு தக்ஷிணை வாங்கினார். அதை ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தருமம் செய்தார். மீதமிருந்த பணத்திற்கு விறகுகட்டைகளை வாங்கி குவியலாக சேமித்துவைத்தார்.


இவ்விதம் சேமித்த காய்ந்த விறகுகளை தமக்கெதிரில் இருந்த துனீயில் ஹோமம் செய்தார். அதிலிருந்து கிடைத்த அபரிதமான உதீ (சாம்பல்) பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.


ஷிர்டியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபாவின் பழக்கம். இது அனைவர்க்கும் தெரிந்திருந்தது.


வேறுவிதமாகச் சொன்னால், பாபா 'உதீ கொண்டு வா' என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


ஆனால் , பக்தர்கள் ஷிர்டியில் தங்கும்வரை, காலையோ நண்பகலோ  மாலையோ எந்த நேரத்திலும் பாபா உதீ கொடுத்ததில்லை; வெறுங்கையுடன் தங்குமிடத்திற்கு திருப்பியனுப்பினார்.

இதுவே நித்திய கிரமமாக இருந்தது. இந்த உதீயின் தருமநெறிதான் என்ன? மசூதியில் எதற்காக எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி? ஏன் இது ஒரு தினப்படி வழிமுறையாக இருந்தது?


 

Thursday, 15 October 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான். என்னுடைய வார்த்தைகளை நினைவில் ஏற்றிக்கொண்டு செயல்படுபவன் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பான்." (சாயி சொன்ன கதை இங்கு முற்றும்)


ஹேமாட் சாயியை சரணடைகிறேன். இக் கதையின் விவரணம் அபூர்வமானது! சாயியே ஒரு காரியத்தைச் செய்யும்போது, 'என்னுடையது, நான்' என்னும் எண்ணங்கள் பிசுபிசுத்துப் போகின்றன. 


கதையை அளிப்பவர் அவரே; படிப்பவரும் அவரே; காதால் கேட்பவரும் அவரே; அவரே கதையை எழுதுகிறார். அவரே கதையை எழுதும் ஊக்க சக்தியையும் அளிக்கிறார். அர்த்த போதனையை அளிப்பதும் அவரே. 


சாயியே இக் கதையின் பாட்டுடைத் தலைவர்; சாயியே இக் கதையின் ருசியுமானவர். அவரே கதையை சொல்பவராகவும் கேட்பவராகவும் ஆகிறார். விளையும் ஆத்மானந்தத்தை அனுபவிப்பவரும் அவரே. 


ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர்கள் இவ்வினிமையான கதைகளை, 'கேட்டது போதும்' எனச் சொல்வாரோ? இந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் பக்தர்கள் பாக்கியசாலிகள். 


அடுத்த அத்தியாயத்தின் சாரம் உதீயின் அபாரமான மஹிமை. கதை கேட்கும் நல்லோரை பயபக்தியுடன் கேட்குமாறு வேண்டுகிறேன். 


சமர்த்த சாயி, கிருபையால் உந்தப்பட்டு தம்முடைய சரித்திரத்தை தாமே என் மூலமாக எழுதிக்கொண்டார் என்பதை, ஹேமாட் விநயத்துடன் சொல்ல விரும்புகிறேன். கதையோ அபூர்வமான ரசம் நிரம்பியது! 


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாம் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'குரு மஹிமை வர்ணனை' என்னும் முப்பத்திரண்டாம் அத்தியாயம் முற்றும். 


ஸ்ரீ  சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும். 



Thursday, 8 October 2020


ஷீர்டி சாயி சத்சரிதம் 


"ஒரு சிறுவன் ரூ.50 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். இரண்டாமவன் ரூ.100 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். மூன்றாமவன் ரூ.150 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். என்னுடைய வேலை இம்மூவரின் வேலையைவிட இரண்டு மடங்காக மதிப்பிடப்பட்டது. -

"என்னுடைய கைத்திறமையை அறிந்த முதலாளி மகிழ்ச்சி அடைந்தார். என்மீது வாஞ்சைக்கொண்டு என்னை கௌரவப்படுத்தினார்.-

"அவர் எனக்கு ஓர் உடையைப் பரிசாக அளித்தார். ஒரு தலைப்பாகையும் உடல் முழுவதையும் தழையத் தழைய மறைக்கும் ஓர் ஆடையையும் (சேலை) அளித்தார். ஆனால், கொடுத்தவுடனே அதை நான் மூட்டை கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டேன். -

"பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம். -

"என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது. மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்? மரியாதைக்கு அவமரியாதையை பூஷணம் (அணிகலன்) ஆக்க முடியுமோ? -

"என் சர்க்கார், 'எடுத்துச் செல்லுங்கள்; எடுத்துச் செல்லுங்கள்!' என்று சொல்கிறார். ஆனால், எல்லோரும், 'கொடுங்கள்; எனக்கு மட்டும் கொடுங்கள்! என்று கேட்கின்றனர். ஆயினும், யாரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை; என்னுடைய வார்த்தைகளை லட்சியம் செய்வதில்லை.-

"என்னுடைய கஜானா நிரம்பிவழிகிறது; அனால், யாருக்குமே வண்டிகளை கொண்டுவரும் சிரத்தை இல்லை. தோண்டு என்று சொன்னால் யாரும் தோண்டுவதில்லை; ஒருவரும் பிரயத்தனம் செய்வதில்லை.-

"அந்தச் செல்வத்தை தோண்டியெடுத்து, வண்டி வண்டியாக எடுத்துச் செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். ஆயினும், தன் தாயின் செக்கப் பொன்னான மைந்தனே இந்தக் கஜானாவை எடுத்துச் செல்வான். -

"பார்க்கப் போனால், நம்முடைய உடலின் கதியும் விதியும் என்ன? மண் மண்ணோடு சேரும், காற்று காற்றோடு கலந்துவிடும். இந்த நல்வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால், மறுபடியும் கிடைக்காது!

"ஆயினும் என் பக்கீரின் கலைகளும் என் பகவானின் லீலைகளை என் சர்க்காரின் லயமான செயல்பாடுகளும் ஒப்பற்றவை; தனித்தன்மை வாய்ந்தவை.-

"நானும் சில சமயங்களில் சில இடங்களுக்குச் செல்கிறேன். போய் அதே இடத்தில் ஓய்வாக உட்கார்ந்துகொள்கிறேன். ஆயினும் என் ஜீவன் மாயையில் சிக்கிக்கொண்டு சுழற்காற்றில் சிக்கிய காகிதப்பட்டம் போல் கீழ்நோக்கிப் பாய்கிறது.-

"இந்த மாயையிலிருந்து விடுபடுவது கடினமான காரியம். அது என்னை ஹீனனாகவும் தீனனாகவும் ஆகிவிடுகிறது. இரவுபகலாக என் மக்களைப்பற்றியே சிந்திக்க வைக்கிறது. 



Thursday, 3 September 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா தாமே முந்திக்கொண்டு இப் பெண்மணியிடம் சொன்னார், "நாம் எதற்காகப் பட்டினி கிடைக்க வேண்டும்?-

"தாதா கேள்கரின் இல்லத்திற்கு சென்று சந்தோஷமாக பூரணப் போளிகளைச் செய்யும். குழந்தைகளுக்கு அளித்தபின் நீங்களும் திருப்தியாக சாப்பிடும்."

இதில் வேடிக்கை என்னவென்றால், அன்று ஹோலிப்பண்டிகை. தாதா கேள்கரின் மனைவி மாதவிலக்காகி, வீட்டினுள் சென்று எதையும் தொடமுடியாத நிலையில் இருந்தார். அன்றைய தினமே அதிர்ஷ்டவசமாக இப் பெண்மணி ஷிர்டிக்கு வந்து சேர்ந்தார்.

இப் பெண்மணியின் உபவாச உற்சாகம் கரைந்து போயிற்று. உபவாசம் இருப்பதற்கு பதிலாக அவரே சமையல் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் பாபாவின் ஆணையை மிகுந்த பிரேமையுடன் நிறைவேற்றினார்.

பாபாவின் சேவடிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு, தாதாவின் வீட்டிற்குச் சென்று பூரணப்போளியும் விருந்தும் சமைத்து மற்றவர்களுக்கு பரிமாறித் தாமும் உண்டார்.

எவ்வளவு சுந்தரமான காதை! உள்ளிடைக் கருத்து எவ்வளவு அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது! குருவின் வார்த்தைகளில் இதுபோல் ஸ்திரமான (ஆழ்ந்த) நம்பிக்கை வைப்பவர்களின் உத்தாரணம் வெகுதூரத்தில் இல்லை.

சமர்த்த சாயி இதே மாதிரியான கதையொன்று ஞாபகத்திற்கு வந்தபோது, அனைத்து பக்தர்களுக்கும் அதை எடுத்துரைத்தார். கதை கேட்பவர்களே! பயபக்தியுடன் கேளுங்கள்.

பரமார்த்த வாழ்வை விரும்பும் ஒருவர், பலமான முயற்சிகளை எடுப்பதற்கும் திடமான சாதனைகளை செய்வதற்கும் சொற்பமாக சாகசம் புரிவதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

ஞானிகளின் பாததீர்த்தமாகிய கதாமிருதத்தை   நம்முடைய நித்திய மங்களம் கருதி பருகவேண்டும். ஞானியரின் பாதங்களில் விநயத்துடன் சரணடைந்துவிட்டால், இதயம் பரிசுத்தமாகிவிடும். (சாயி சொன்ன கதை இங்கிருந்து ஆரம்பம்.)

"நான் சிறுவனாக இருந்தபோது கிடைத்ததை கொண்டு வாழ்க்கை நடத்தி, ஒரு சமயம் பிழைப்புக்காக வேலைதேடிப் புறப்பட்டேன். -

"நடந்து நடந்து பீட்காங்வுக்கு வந்துசேர்ந்தேன். அங்கே சிறிது ஓய்வெடுத்தேன். ஆனால், என்னுடைய பக்கீரோ எனக்கு ஆனந்தம் அளிக்கக்கூடிய வேறு திட்டம் வைத்திருந்தார். -

"அங்கு எனக்கு ஜரிகை வேலைப்பாடு செய்யும்  தொழில் கிடைத்தது. நான் அயராமல் உழைத்தேன். என்னுடைய உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அது பக்கீரின் பராக்கிரமம் அன்றோ!-

"அங்கு எனக்கு முன்னர் நான்கு சிறுவர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். திறமைசாலிகள் என்று பெயரெடுத்தவர். அவர்களும் என்னுடன் வேலை செய்தனர். 




Thursday, 27 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

மஹாராஜின் பாதங்களுக்கு அருகில் மூன்று நாள்கள் உபவாசமாக உட்காருவது என்று மனத்தில் திடமாகத் தீர்மானம் செய்துகொண்டு வந்தார். கடைசியில், அவருடைய தீர்மானத்தை அவரே வைத்துக்கொள்ளும்படி ஆயிற்று!

பாபாவின் விதிமுறைகளின்படி, ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள விரும்புபவர் முதலில் தம்முடைய சோளரொட்டிக்கு (உணவுக்கு) வழிசெய்துகொள்வது அவசியம். இப் பெண்மணியின் தீர்மானமோ அதற்கு நேர்மாறாக இருந்தது!

இறைவனைக் காண விரும்புபவர் முதலில் ஒரு சோளரொட்டித்துண்டாவது சாப்பிட வேண்டும். ஜீவன் சமாதானமடையாமல் தேவனைக் கண்டுபிடிப்பது எப்படி?

இந்த யுகத்தின் முடிவுரை முயன்றாலும் வெறும் வயிற்றுடன் இறைவனை அடைய முடியாது. சாயியை பொறுத்தவரை உபவாசம் போன்ற உடலை வருத்தும் செயல்களை அவர் என்றுமே அனுமதித்ததில்லை.

மஹராஜ் உள்ளுணர்வால் அனைத்தயும் (பெண்மணியின் உபவாச சங்கற்பம்) முந்தைய தினமே அறிந்திருந்தார். தாதா கேள்கரிடம் சொன்னார். -

"வரப்போகும் ஹோலிப் பண்டிகை போன்ற நன்னாளில் என்னுடைய குழந்தைகள் பட்டினி கிடப்பார்களா? அதை நான் அனுமதிப்பேனா? அதை பார்த்துக்கொண்டு நான் இங்கு உட்கார்ந்திருப்பேனா?

சாயியின் திருவாய்மொழி இவ்வாறு வெளிப்பட்ட அன்றைக்கு மறுநாளே இப்பெண்மணி ஷீர்டி வந்துசேர்ந்தார்.

இப் பெண்மணியின் குடும்பப் பெயர் கோகலே. ஏற்கெனவே விவரித்த வாறு, அவர் உபவாஸத் தீர்மானத்துடன் வந்தார். தாம் கொண்டுவந்திருந்த அறிமுகக் கடிதத்தை கொடுத்துவிட்டு தாதா கேள்கரின் இல்லத்தில் தம்முடைய மூட்டையை வைத்தார்.

காசீபாய் காணீட்கர் என்ற கேள்கரின் நெருங்கிய உறவினர், இப் பெண்மணிக்கு பாபாவை தரிசனம் செய்துவைக்குமாறு கேட்டுக்கொண்டு அறிமுகக் கடிதம் கொடுத்திருந்தார்.

ஷீர்டி வந்துசேர்ந்த பிறகு, உடனடியாக பாபாவை தரிசனம் செய்வதற்காக இப் பெண்மணி சென்றார். தரிசனம் முடிந்து சிறிது ஓய்வெடுப்பதற்கு முன்னரே பாபா இப் பெண்மணிக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

எவ்வளவு ஆழமாக ஓடும், எண்ணங்களாக இருந்தாலும் சரி, எல்லாருடைய எண்ணங்களையும் பாபா அறிந்திருந்தார். இவ்வுலகில் அவர் அறியாதது ஒன்றுமேயில்லை!

"உணவு மஹாவிஷ்ணு ரூபம்; உண்பவரும் மஹாவிஷ்ணு ரூபம். உபவாசம் இருப்பது, சமைக்காத உணவைத் தின்பது (அவல், பழங்கள் போன்றவை) பட்டினி கிடப்பது, நீரும் அருந்தாமல் கிடப்பது - எதற்காக இந்த வீண் சிரமங்கள்?-

 


 

Thursday, 20 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சாமர்த்தியசாலிகளான வித்தைகாட்டிகள் வந்தனர். பவானி அம்மனின் பெயரில் தானியங்கள் பிச்சையெடுத்து, 'கோந்தல் திருவிழா' நடத்தும் கோந்தலிகளும் மிகுந்த பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

குருடர்கள், நொண்டிகள், கான்பாடேக்கள், ஆண்டிகள், குருநானக் பக்தர்கள், நாடோடிப் பாடகர்கள், தீவட்டி யேந்திகள் - இவர்களனைவரும் பக்தியும் அன்பும் நிறைந்து சமர்த்த சாயியிடம் பறந்தோடி வந்தனர்.

முரசு கொட்டுபவர்கள், குறி சொல்பவர்கள், முடவர்கள் - கழைக் கூத்தாடிகளுங் கூட அங்கு வந்து தங்களுடைய திறமையைக் காட்டினார். பாபாவின் சமூகத்திற்குத் தக்க தருணத்தில் பிரேமை மிக்க வண்ஜாரியும் வந்து சேர்ந்தார்!

வைராக்கியமே உருவெடுத்தவர்; பற்றற்றவர்; ஏகாந்தி; சங்கம் விரும்பாதவர்; சுயநலமில்லாதவர்; விருப்பு வெறுப்பற்றவர்; பக்தர்களின்பால் செலுத்தும் அன்பில் இணையில்லாதவர். சாயியின் ஆகிருதியைக் (உருவத்தைக்) காணக் கண் கோடி வேண்டும்.

இப்பொழுது, ஏற்கெனவே நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் பிரதமமான காதையை விட்ட இடத்திலிருந்து தொடருவோமாக, கேட்பவர்கள், சிதறாத கவனத்தைக் கொடுங்கள்.

பாபா என்றும் பட்டினி கிடந்ததில்லை; மற்றவர்களையும் பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை. பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது; அவர் எப்படி பரமார்த்த (ஆன்மீக) சாதனைகளை ஏற்கமுடியும்?

வெறும் வயிற்றுடன் தேவனை அடையமுடியாது. ஆகவே, முதலில் ஆத்மாவைத் திருப்திசெய்யுங்கள். இந்த உபதேசத்தை அளிக்கும் மற்றுமொரு கதை சொல்கிறேன்.

உச்சிவெயில் வேளையில் சூடு தாங்காமல் புழுதி புரளும்போது, 'அன்னம் பிரம்மம்' என்னும் உபநிஷத வாக்கியம் பளிச்சென்று மனதிற்கு விளங்குகிறது.

அந்தக் கடுமையான வேளையில் சில கவளங்களாவது அன்னம் கிடைக்கவில்லையென்றால், உடலுறுப்புகள் பலமிழந்துபோய் அவற்றின் கடமையைச் செய்ய மறந்துவிடுகின்றன.

பசிக்கு உணவளித்து ஜீவனை சாந்தப்படுத்தாமல் கண்கள் எப்படி இறைவனைக் காண முடியும்? வாய் எப்படி இறைவனின் புகழைப் பாடும்? காதுகள் எப்படி அதைக் கேட்கும்?

சாராம்சம் என்னவென்றால், உடலின் சகல அங்கங்களும் சக்தி பெற்றிருந்தால்தான் பக்தி பண்ணமுடியும். அங்கங்கள் அன்னமின்றி சீர்குலைந்து போகும்போது ஆன்மீகப் பாதையில் நடைபோட முடியாது.

ஆனால், தேவைக்கு அதிகமாக உண்பதுவும் நன்றன்று. மிதமான போஜனமே நன்மையை விளைவிக்கும். கடுமையான உபவாசம் எப்பொழுதும் பயங்கரமான சுகவீனத்தையே விளைவிக்கும்.

சாயிதரிசனம் செய்யப் பேராவல் கொண்டு தாதா கேள்கருக்கு ஓர் அறிமுகக் கடிதம் வாங்கிக்கொண்டு ஒரு பெண்மணி ஷிர்டிக்கு வந்தார். 


Thursday, 13 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

தாய், தந்தை, குரு இவர்களிடமிருந்து பாடம் பெறாமல் தருமவழிபற்றிய ஞானத்தைப் பெறமுடியாது. அதுவும் ஒருவருடைய கல்வி முயற்சியைச் சார்ந்தது. அனுஷ்டானம் (கற்றபின் அதற்குத் தக்க நிற்றல்) இல்லையெனில் கற்றதனைத்தும் வீண்.

அவர்களுடைய ஆசிமொழிகள் அவசியம் தேவை. 'தாயைத் தெய்வமாக வழிபடு; தந்தையைத் தெய்வமாக வழிபடு; குருவைத் தெய்வமாக வழிபடு; இந்த உபநிஷத வசனம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே;

இம்மூவரையும் வழிபடுவது; யாகங்களை செய்வது, வேதம் ஓதுவது, தானம் செய்வது - இவையே ஜனன மரணச் சுழலைத் தாண்டுவதற்கு உயர்ந்த சாதனங்கள்.

இவையனைத்தும் மனத்தைப் பரிசுத்தமாக்கி கொள்ளும் சாதனைகள். இவற்றைச் செய்யாமல், ஆத்மாவெனும் வஸ்துவை அடையமுடியாது. இவையில்லாது நடத்தும் வாழ்க்கை வியர்த்தம்.

உடலும் மனமும் ஐம்புலன்களும் புத்தியும் காட்டமுடியாது மகத்தான ஆத்ம சொரூபத்தை குருவருள் காட்டமுடியும்.

பிரத்யக்ஷமாகப் பார்ப்பதையும் அனுமானம் செய்வதையும் பிரமாணமாக ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில், குருவைத் தவிர வேறெவரால் அதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகக் காண்பித்து கொடுக்கமுடியும்?

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை  சிரமப்பட்டால் அடைந்துவிடலாம். நான்காவதாகிய உச்ச புருஷார்த்ததை (வீடு / மோட்சம்) குருவின் அருளின்றி எவ்வளவு முயன்றாலும் அடையமுடியாது.

ஷீர்டி ஞானியின் தர்பாருக்கு ஜோசியர்கள் வணக்கம் செலுத்த வந்தனர். செல்வர்களுக்கும் பெருங்குடி மக்களுக்கும் ஆயுள்பற்றியும் நடக்கப்போவதை பற்றியும் வரும்பொருள் உரைத்தனர்.

செல்வச் செழிப்பிலும் அதிகாரத்திலும் புரண்ட அரசர்கள், கோமான்கள் - துறவேற்றுப் பிச்சையெடுத்து பிழைத்த பைராகிகள், கோசாவிகள் - அனைவரும் பாபாவை தரிசனம் செய்ய ஆவலுடன் வந்தனர்.

ஜபம் செய்பவர்கள், தவம் செய்பவர்கள், விரதம் ஏற்றுக்கொண்டவர்கள், சந்நியாசிகள், யாத்திரிகர்கள், புனிதத் தலைவாசிகள், பரிவாரங்களுடன் பாட்டுக்காரர்களும் நாட்டியக்காரர்களும்  - இவர்களனைவரும் ஷிர்டிக்கு தரிசனத்திற்காக வந்தனர்.

"இவரே, எங்களுக்குத் தாயும் தந்தையும் ரட்சகரும் ஆவார்; இவரே எங்களை ஜனனமரணச் சுழலிருந்து விடுவிப்பார்" என்று சொல்லிக்கொண்டு மஹார்களும் சாயி தர்பாருக்கு வந்து, வணக்கம் செலுத்தினர்.

நெற்றியில் பட்டையாக விபூதியணிந்து லிங்கத்தைக் கழுத்தில் கட்டிக்கொள்ளும் ஜங்கமரும், பிச்சை வாங்கும் சோளத்தின்மீதே கண்ணாக வருவார். அவர் அளிக்கும் காட்சி பார்ப்பதற்கு சுவாரசியமானது.