valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 26 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இறைவன் சந்தோஷமடைந்து, உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டிவிடுவான். மாயையும் மோகமும் விலகும். அத்யந்தமான சுகம் கிடைக்கும்.

"தினமும் காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஹரிபாதங்களில் மனத்தை ஈடுபடுத்தி இந்த விரதத்தை (மூன்று சப்தாஹம்) முடித்தால் விடுதலை கிடைக்கும்".

பாபாவும் மேற்சொன்ன வழிமுறையையே கடைபிடித்தார் அல்லரோ! தம்முடைய தேகத்திற்கு முடிவு வரப்போகிறதென்று தெரிந்தவுடன் 'ராமவிஜயம்' படிக்கச் சொல்லிக் கேட்டார். 'ராமவிஜயம்' படிப்பதாலும் கேட்பதாலும் மிருத்யுஞயர் (காலனை வென்றவர் - சிவன்) சந்தோஷமடைகிறார்.

அடுத்த நாள் காலை நேரத்தில், சந்நியாசி தம்மை சுத்தம் செய்துகொண்டு பாபாவுக்குப் புஷ்பாஞ்சலி செய்துவிட்டு பாபாவின் பாததூளியை நெற்றியில் இட்டுக்கொண்டார்.

பாகவதத்தை கையில் இடுக்கிக்கொண்டு வாசிப்பதற்குத் தேவையான தனிமையை அளித்த, அமைதியும் சாந்தமும் நிறைந்த லெண்டித் தோட்டத்திற்குச் சென்றார்.

யோகாசனத்தில் அமர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பித்தார். சந்நியாசி முழுநேரமாகப் படித்து இரண்டு சப்தாஹங்களை வெற்றிகரமாக முடித்தார்.

மூன்றாவது கற்றை ஆரம்பித்த சமயத்தில் திடீரென்று நிலைகுலைந்தார்; ஜீவசக்தி வடிந்துபோவது போல் உணர்ந்தார். பாராயணத்தை அந்தக் கட்டத்திலேயே நிறுத்திவிட்டார்.

வாடாவிற்கு திரும்பிவந்து இரண்டு நாள்கள் சிரமப்பட்டார். மூன்றாவது நாள் பொழுது விடியும் சமயத்தில் சந்நியாசி கண்மூடினார்.

பக்கீர் பாபாவின் மடியில் தலையைச் சாய்த்தவர் சாய்த்தவர்தான். தேகத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.

சந்நியாசி மரணமடைந்த செய்தியைக் கேட்ட பாபா, ஒரு நாள் வரை உடலைப் பாதுகாக்கும்படி ஆணையிட்டார்.

பாபா சொன்னார், "உடலை உடனே புதைக்க வேண்டா." பாபா இவ்வாறு சொன்னதால், சந்நியாசி மறுபடியும் உயிர்பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உற்சாகத்துடன் உடலைப் பாதுகாத்தனர்.

ஒருமுறை உயிர் பிரிந்துவிட்டால் மறுபடியும் வந்து புகுந்துகொள்ளுமா என்ன? ஆயினும் பாபாவில் சொல் பிரமாணமன்றோ!  ஆகவே மக்கள் பிணத்தைப் பாதுகாத்தனர்.

அந்த ஆணைக்கும் பிறகு பலன் கிடைத்தது!  சொந்தம் கொண்டாட யாருமில்லாத பிணம் பாதுகாக்கப்பட்டது. போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படக் காரணம் இல்லாமற்போயிற்று. இறந்த பின் உடலில் ஜீவன் எப்படி இருக்கும்?

பாபாவுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கத் தெரியாதா என்ன?(அவருக்கு  அந்த சக்தி இருந்தது.) ஆயினும், அனாதை பிணம் முறையான விசாரணையின்றி பூமியில் புதைக்கப்படக்கூடாது என்பதுதான் அவருடைய இலக்கு! 


Thursday, 19 December 2019

ஷீர்டி சாய் சத்சரிதம்

"போய் அமைதியாக உட்காரும்; சோகம் வேண்டா, போவதா, வேண்டாவா என்று சில நாள்கள் கழித்து முடிவெடுப்போம். அதுவரை தைரியமாகவும் பொறுமையாகவும் இரும்.-

"வாடாவில் பல திருடர் இருக்கிறார்கள். கதவுகளை மூடிக்கொண்டு உஷாராக இரும். ஏனெனில் திருடர்கள் உம்மைக் கடுமையாகத் தாக்கிவிட்டு எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.-

"செல்வம் என்றுமே சாசுவதுமில்லை; சரீரமோ ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக.-

"உடல், மனைவி, மக்கள் ஆகிவரின் சம்பந்தமாக 'நான்' - 'எனது' என்ற உணர்வுகளும் அவற்றிலிருந்து விளையும் மூன்று வகையான தாபங்களும் இவ்வுலகின் அனர்த்தங்கள் (கேடுகள்).-

"இரண்டாவது வகையான அனர்த்தம் சொர்க்கத்தை சார்ந்தது. மரணத்திற்குப்பின் மக்கள் அடைய விரும்பும் சொர்க்கமே மோக்ஷத்திற்குத் தடையாகிவிடுகிறது. தலைகீழாக கீழே விழுவதற்கும் பொதுவான காரணமாகிறது. -

"சொர்க்கத்தில் புண்ணியம் சம்பாதிக்கமுடியாது. பயமில்லாத நிலையையும் அடைய முடியாது. ஏனெனில், சேர்த்து வைத்த புண்ணியம் செலவழிந்த பிறகு கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அங்கும் நிலவுகிறது.-

"இவ்வகையாக, இவ்வுலக வாழ்வு, மேலுலகவாழ்வு இரண்டுமே அனர்த்தங்கள் நிறைந்தவை. ஆகவே, இரண்டையுமே முழுமையாக துறப்பதே ஆனந்தப் பெருநிலையின் அஸ்திவாரம்.-

"உலக வாழ்வை வெறுத்தொதுக்கி, ஹரியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள். பந்தங்களின் பிடியிலிருந்து விடுபடுகின்றனர். அஞ்ஞானமும் மாயையும் அவர்களைவிட்டு அகன்றுவிடுகின்றன. -

"ஹரிபஜனையும் நாமஸ்மரணமும் அளிக்கும் உந்துவிசை, பாவம், தாபம், துயரம் ஆகியவற்றை விரட்டிவிடும். நிறைந்த அன்புடன் தியானம் செய்தால், இறைவன் நம்மை சங்கடங்களில் இருந்து விடுவிப்பான். -

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையைக் கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாகச் செய்துகொள்வீராக!-

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையை கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாக செய்துகொள்வீராக!

"நாளையில் இருந்து பாகவதத்தை (ஸ்ரீகிருஷ்ணரின் கதையைப்) பரிசீலனை செய்யும். மனத்தையும் வாக்கையும் செயலையும் ஒருமுகப்படுத்தி, மூன்று சப்தாஹங்கள் பாராயணம் செய்யும்.-

"மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பாகவதத்தை காதால் கேளும்; அல்லது நீரே பாராயணம் செய்யும். முழுநம்பிக்கையுடன் படித்து மறுபடியும் மறுபடியும் படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யும்.-
 
 

Friday, 13 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

திடீரென்று பாபா கோபாவேசம் கொண்டார். குழுமியிருந்த மக்களை பார்த்து உறக்கச் சொன்னார், "இந்த சந்நியாசியை விரட்டியடியுங்கள். இவருடைய சங்காத்தமே  நமக்கு வேண்டாம்".

சந்நியாசியோ புதியவர்; பாபாவின் சுபாவம் தெரியாதவர். மனத்தில் அடி வாங்கியபோதிலும் பக்தர்கள் செய்த சேவையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.

அது காலை தர்பார் நேரம். மக்கட்கூட்டத்தில் மசூதி நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பூஜை திரவியங்களும் அவர்கள் செய்த உபச்சாரங்களும் சந்நியாசிக்குப் பெருவியப்பை அளித்தன.

சில பக்தர்கள் பாபாவின் பாதங்களைக் கழுவிக் கட்டைவிரலிலிருந்து புனித நீரை எடுத்துக்கொண்டனர். சிலர் அப் புனித நீரைத் தேக்கரண்டியினால் அருந்தினர். சிலர் அதைக் கண்களில் பூசிக்கொண்டனர். அனைவரும் சுத்தமான பக்தியுடன் சேவை செய்தனர்.

சிலர் அவருக்குச் சந்தானம் பூசினார். வேறு சிலர் அத்தர் போன்ற வாசனை திரவியங்களை பூசினர். அனைவருமே, பிராமணர் , பிற்படுத்தப்பட்டோர், இதர ஜாதியினர் என்னும் பாகுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அறவே துறந்து சேவை செய்தனர்.

பாபா கோபம் காட்டியிருந்தாலும் சந்நியாசியின் மனத்தில் அநுராகம் (காதல்) பொங்கியது! அவர் இடத்தை விட்டு எழுந்திருக்கவோ நகரவோ இல்லை!

அவர் ஷீர்டி வந்துசேர்ந்த இரண்டு நாள்களுக்குள்ளாகவே கிராமத்தில் அவருக்குத் தாயார் தீவிரமாக நோய்வாய்பட்டிருந்ததாக கடிதம் வந்தது. சந்நியாசி சோகமுற்றார்.

தம்முடைய கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரைக் காணவேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், பாபாவின் அனுமதியின்றி போகமுடியாது.

சந்நியாசி, கையில் கடிதத்துடன் மசூதிக்குச் சென்று பாபாவிடம் தாயாருடைய நிலைமையைத் தெரிவித்து வீடு திரும்புவதற்கு அனுமதி வேண்டினார்.

"சமர்த்த சாயி மஹாராஜரே! என் மனம் தாயாரைக் காணாத துடிக்கிறது. இந்த யாத்திரீகனின் மீது கருணை காட்டுங்கள். இன்முகத்துடன் எனக்கு அனுமதி தாருங்கள்".

அவர் ஓடி வந்து பாபாவின் பாதங்களை பிடித்துக்கொண்டு, "எனக்கு அனுமதியளித்துக் கிருபை செய்வீர்களா? என் தாயார் பிராணனைத் தொண்டையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்துக்கிடக்கிறார் போலும்.-

"தாயார் எனக்காக காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. நான் போய்ப் பார்த்தால் அவருடைய வேதனை குறையும்; முடிவும் அமைதியாக நேரும்."

சந்நியாசியின் ஆயுட்காலமே முடியப்போகிறது என்பதை அந்தர் ஞானத்தால் அறிந்த சமர்த்த சாயி அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

"தாயாரிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீர் ஏன் சந்நியாசம் ஏற்றீர்? உலகியல் பந்தங்களும் காவி உடைக்கும் சரிப்பட்டு வராதே. காவி உடைக்குக் களங்கம் கற்பித்துவிட்டீரே!-


Friday, 6 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

இக் காரணம் பற்றியே பக்தர்கள் நாமஸ்மரண அப்பியாசம் செய்யும்படி ஊக்குவிக்கப் படுகின்றனர். கடைசி நேரம் வரும்போது அரண்டுபோகாமல் பகவானின் நாமத்தைப் பற்றிக்கொள்ளலாம்.

வாழ்நாள் முழுவதும் விழிப்புடன் இருந்துவிட்டுக் கடைசி நேரத்தில் ஒரு மனிதன் தூங்கிவிட்டானானால், எந்த முக்கியமான காரணத்திற்காக சத்சங்கம் வளர்த்தானோ, அந்த சத்சங்கம் உபயோகமின்றி போகிறது.

ஆகவே, கள்ளங்கபடமற்ற, எளிமையான பக்தர்கள் தங்களுடைய வாழ்வை ஞானியரின் கைகளில் ஒப்படைத்துவிடுகிறார்கள். நமக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியும். அந்திமகாலத்தில் ஞானியரே நமக்குத் துணை.

இது சம்பந்தமாக, சாயியின் சன்னிதியிலேயே நடந்த ஒரு அருமையான நிகழ்ச்சியையும் கேளுங்கள். பக்தர்களின்பால் சாயி எவ்வளவு வாத்சல்யம் (தாயன்பு) காட்டினார் என்பதைக் காண்பீர்கள்.

மதராஸ் எங்கே, ஷீர்டி எங்கே, இமயமலையில் இருக்கும் மானஸ சரோவர் எங்கே! ஆயினும் பக்தரின் ஆயுள் முடிந்துவிட்டதென்று தெரிந்தால், பாபா அவரை எப்படியாவது இழுத்துத் தம்முடைய பாதங்களுக்குக் கொண்டுவருவார்.

ஒரு சமயம், விஜயானந்த் என்ற பெயர்கொண்ட சந்நியாசி மதராஸிலிருந்து மானச சரோவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் புனிதப் பயணம் கிளம்பினார்.

ஒரு ஜப்பானிய யாத்திரிகர் வைத்திருந்த வரைபடத்தை பார்த்துவிட்டு, மானஸ சரோவர் ஏரியை தரிசனம் செய்தே தீருவது என்று உறுதி பூண்டார்.

வழியில் பாபாவின் பிரபாவத்தை கேள்விப்பட்டு ஷிரிடிக்கு வந்தார். பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற பேராவல் கொண்டு அவர் வாழ்ந்துகொண்டிருந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தார்.

சாயிமஹாராஜ் ஒரு பெரிய ஞானி, உலகளாவிய கீர்த்தி பெற்றவர், என்று கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்வதற்காகத் தமது புனிதப் பயணத்தை ஷிரிடியில் நிறுத்தினார்.

அந்த சமயத்தில், ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ்ஜி சுவாமி ஷிர்டியில் இருந்தார். பக்தர்கள் கோஷ்டியில் அவர்கள் இருவரின் சந்திப்பு இயல்பாக நேர்ந்தது.

மதராஸ் சந்நியாசி அவரைக் கேட்டார், "மானஸ சரோவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?" சுவாமி பதில் கூறினார், "கங்கை உற்பத்தியாகும் கங்கோத்திரியிலிருந்து 500 மைல் தூரத்தில் உயரே இருக்கிறது. -

"அங்கே பனிமழை அதிகம். நூறு மைலுக்கு ஒரு பாஷையாக மாறுகிறது. பூட்டானிய மக்களின் சந்தேகங்கள் வேறு. வெளிதேசத்து யாத்திரிகர்கள் பல தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்."

சுவாமியிடமிருந்து இந்த விவரங்களை கேட்ட சன்னியாசி மனமுடைந்து போனார். அவருடைய உறுதி கலைந்து கவலையில் மூழ்கினார்.

அவர் சாயி பாபாவை தரிசனம் செய்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். மனம் அமைதியடைந்து மகிழ்ச்சியுற்றார். ஆசனம் போட்டு அருகில் அமர்ந்தார்.
 
 

Friday, 29 November 2019


                                                                 ஷீர்டி சாயி சத்சரிதம்

                                                           31 . சாயீ சந்நிதியில் முக்தி

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் சப்தசிருங்கி தேவி உபாசகரின் கதையையும் மாதவராவின் நேர்த்திக்கடன் சாயீ எவ்வாறு நிறைவேற்றிவைத்தார் என்ற விவரத்தையும் சொன்னேன்.

குசால் சேட்டுக்கும் ராம்லாலுக்கும் கனவில் தரிசனம் அளித்ததையும் ராம்லாலைத் தம்முடைய மஹாசமாதி நாள்வரை தம்முடன் வைத்துக்கொண்ட விவரத்தையும் சொன்னேன்.

இந்த அத்தியாயம் முன்னதைவிட அபூர்வமானது. கேட்பவர்கள் பயபக்தியுடனும் கவனமாகவும் கேளுங்கள். மானஸஸரோவர் ஏரிக்கு யாத்திரையாக கிளம்பிவந்த சந்நியாசி ஒருவர் திடீரென்று ஷிர்டியில் முக்தியடைந்தார்.

பாலாராம் மாங்கர், தாத்யா சாஹேப் நூல்கர், மேகா, இவர்களுடைய (முக்தி) விருப்பத்தையும் சாயி நிறைவேற்றிவைத்தார். இவர்களாவது மனிதர்கள்; பயங்கர மிருகமான ஒரு புலிக்கும் பாபா தமது சந்நிதியிலேயே முக்தி அளித்தது அற்புதமான செயல் அன்றோ!

இவையெல்லாம் விரிவான காதைகள். சொல்லப்புகுந்தால் காவியம் மிகப் பெரியதாகிவிடும். ஆகவே, சுருக்கமாக சாரத்தை மட்டும் சொல்கிறேன். பக்தர்களுக்கு நன்மையளிக்கும்.

மரணத்தருவாயில் உதிக்கும் எண்ணங்கள் என்னவோ, அவற்றுக்கேற்றவாறே, பிராணிகளின் அடுத்த ஜென்மம் அமைகிறது. பயத்தால் பூச்சிகள் வண்டுகளாகின்றன. மான்குட்டியின்மீது ஏற்பட்ட பிரியத்தால் ஜடபரதர் அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தார்!

உயிர் பிரியும் சமயத்தில் மனக்கண்ணால் எந்த உருவத்தைக் காண்கிறோமோ அதே உருவத்தில் அடுத்த பிறவி அமைகிறது. இறைவனுடைய மலரடிகளை நினைப்பவர்க்கு அடுத்த பிறவியே இல்லாமற்போகிறது.

Friday, 22 November 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றி கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான சாது என்றறிக.

'எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்பு' என்பதே ஒரு சாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களை தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை.

சாராம்சமான ரகசியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன் மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவினிலேயே மூழ்க வேண்டுமென்று சாயி விரும்புகிறார்.

அதனால்தான் பக்தர்கள் சாயி சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன்.

கேட்பவர்களின் மனத்தில்சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தில் இருந்து விடுபடுவார்கள். சாயி பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

மானஸரோவருக்கு யாத்திரையாக கிளம்பி, போகும் வழியில் சாயி பாதங்களில் முக்தியடைந்த சந்நியாசி விஜயானந்தரின் கதை அடுத்த அத்தியாயத்தில் மலரும்.

பக்தர் பாலாராம் மாங்கரும் பாபாவின் முன்னிலையிலேயே முக்தி பெற்றார். அம்மாதிரியாகவே, நூல்கர், மேகா ஆகியவர்களுடைய வேண்டுதலையும் சாயிநாதர் பூர்த்தி செய்துவைத்தார்.

குரூரமான பிராணியான ஒரு புலிக்கும் பாபாவின் பாதங்களில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சாயியின் செயல்கள் ஆழங்கான முடியாதவை, கேட்பது திருவிழாவைப்போன்று மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய அரிய நல்வாய்ப்பு.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'நேர்த்திக்கடனும் மற்ற கதைகளும்' என்னும் முப்பதாவது அத்தியாயம் முற்றும்.

                         ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                               சுபம் உண்டாகட்டும். 

Friday, 15 November 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"நீங்கள் இப்பொழுது வருவதாக இருந்தால், குதிரைவண்டி வெளியே தயாராக நிற்கிறது." குசால்பாவு ஆனந்தம் நிரம்பியவராக தீக்ஷிதருடன் ஷிர்டிக்கு வந்தார்.

தாத்பரியம் என்னவென்றால், குசால்பாவு வந்ததால் பாபாவின் ஆவல் நிறைவேறியது. பாபாவின் லீலையைக் கண்டு குசால்பாவுவும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

பம்பாயில் வசித்துவந்த, ராம்லால் என்ற பெயர்கொண்ட பஞ்சாபி பிராமணர் ஒருவருக்கு கனவில் பாபாவின் தரிசனம் கிடைத்தது.

ஆகாயம், காற்று, சூரியன், வருணன் போன்ற இயற்கை தெய்வங்களின் அனுக்கிரஹ சக்தியால் நமக்கு உள்ளுலக, வெளியுலக ஞானம் கிடைக்கிறது. இது விழித்திருக்கும் நிலை.

உடலுறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது (தூக்கத்தில்), விழிப்பு நிலையில் செய்த செய்கைகளால் மனத்தில் ஏற்பட்ட சுவடுகள் உயிர்பெற்று, ஏற்றுக்கொள்வபவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயங்களையும் பொறுத்து, மறுபடியும் மனத்திரையில் ஓடுகின்றன. இதுவே கனவுகளின் குணாதிசயம்.

ராம்லாலின் கனவோ விசித்திரமானது! அவர் எப்பொழுதுமே பாபாவை தரிசனம் செய்ததில்லை. பாபாவின் உருவத்தைப்பற்றியோ குணங்களைப்பற்றியோ எதுவேமே தெரியாது. ஆனால், பாபா அவரிடம் சொன்னார், "என்னைப் பார்க்க வாரும்".

கனவில் தெரிந்த உருவத்தை வைத்துக் கணித்தால், அவர் ஒரு ஞானியாகத் தென்பட்டார். ஆனால், அவர் எங்கு வசித்தார் என்பது ராம்லாலுக்கு தெரியவில்லை. விழித்துக்கொண்ட ராம்லால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

அவர் போக விரும்பினார். ஆனால், இடமோ விலாசமோ தெரியவில்லை. தரிசனத்திற்கு எவர் அழைத்தாரோ, அவருக்குத்தான் திட்டம் என்னெவென்று தெரியும்!

அன்றைய தினமே பிற்பகல் வேளையில் ஒரு தெரு வழியாக நடந்துபோனபோது ஒரு கடையில் இருந்த படத்தை பார்த்துத் திடுக்கிட்டார்.

கனவில் பார்த்த உருவம் இதுவே என்று ராம்லால் நினைத்தார். உடனே, கடைக்காரரிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

நிழற்படத்தில் உருவத்தின் லட்சணங்களை கவனமாகப் பார்த்தபின், "இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று கடைக்காரரை விசாரித்தார். "இது ஷிர்டியில் இருக்கும் சாயி" என்று அறிந்துகொண்ட பிறகே நிம்மதியடைந்தார்.

மற்ற விவரங்களை பிறகு தெரிந்துகொண்டார். பின்னர் ராம்லால் ஷிர்டிக்குச் சென்றார். பாபா மஹாசமாதி அடையும்வரை அவருடன் இருந்தார்.

பக்தர்களின் விருப்பங்களை பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு  அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.

அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர்; அஹங்காரமில்லாதவர்; பற்றற்றவர்; பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.