valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Saturday, 6 July 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மஹராஜ் அவரிடம் கேட்கிறார், "ஆனால், உமக்கு அந்த அளவிற்கு விசுவாசம் இருக்கிறதா?" "ஆமாம்" என்று அவர் (ம.ம) சொன்னதும் பாபா அவரைக் கண்களை மூடிகொள்ளச் சொல்லி ஆணை இடுகிறார்.

பாபாவின் ஆணைப்படி அவர் (ம.ம) நின்றிருந்தவாறே கண்களை மூடியவுடன் திடீரென்று யாரோ கீழே விழுந்ததுபோல அவருக்குத் தடாலென்ற சத்தம் கேட்கிறது.

அச் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்ட அவர் (ம.ம) உடனே கண்களைத் திறந்து பார்க்கிறார். அவர் கட்டுகளிலிருந்தும் சிறையிலிருந்தும் விடுபட்டு விட்டார். மாறாக, போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்கிறார்.

அவர் (ம.ம) திகிலடைந்து பாபாவை நோக்குகிறார். பாபா புன்னகை புரிந்துகொண்டே அவரிடம் சொல்கிறார், "பலே, பலே! நீர் இப்பொழுது வசமாக மாட்டிக்கொள்ளப் போகிறீர்.-

"போலீஸ் அதிகாரிகள் இங்கு வருவர். நடந்ததனைத்தையும் நோட்டம் விட்டபின், அடக்கமுடியாத குரூரமான கைதியாக உம்மை மட்டுமே காண்பர். மறுபடியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவீர்".

அவர் (ம.ம) மனம் திறந்து பதில் சொல்கிறார், "பாபா, நீங்கள் சொல்வது போலத்தான் நடக்கும். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், இப்பொழுது விடுதலை செய்யுங்கள்! உங்களைத் தவிர என்னைக் காப்பாற்றக்கூடியவர் எவரும் இல்லை".

இதைக் கேட்ட, பாபா அவரிடம் சொல்கிறார், "மறுபடியும் உம் கண்களை மூடிக்கொள்ளும்". அவர் (ம.ம) கண்களை மூடி மறுபடியும் திறந்தபின் இன்னொரு அற்புதம் காண்கிறார்.

இப்பொழுது அவர் (ம.ம) சிறைக்கூண்டுக்கு வெளியே இருக்கிறார். பாபா அருகில் இருக்கிறார். அவர் பாபாவுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார். பாபா அவரை வினவுகிறார்.-

"நீர் இப்பொழுது செய்யும் நமஸ்காரத்திற்கும் ஏற்கெனவே செய்த நமஸ்காரங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? யோசித்துப் பதில் சொல்லும்!"

அவர் (ம.ம) கூறுகிறார், "ஓ, பூமிக்கும் வானத்திற்குமுள்ள வித்தியாசம் உண்டு. இதுவரை செய்யப்பட்ட நமஸ்காரங்கள் கேவலம் திரவிய லாபத்திற்காகவே செய்யப்பட்டன. ஆனால், இப்பொழுது செய்த நமஸ்காரமோ உங்களை பரமேச்வரனாகவே கருதிச் செய்யப்பட்டது!-

"முன்பு உங்களிடம் விசுவாசம் இல்லை. மாறாக, நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு, ஹிந்துக்களை மதம் மாற்றி பாழ்படுத்துவதாக எண்ணி ரோஷமடைந்தேன்."

"ஆகவே, பாபா கேட்கிறார், "உம்முடைய மனதில் முஸ்லீம் தெய்வங்களின் மீது பக்தி இல்லையா?" அவர் (ம.ம) "இல்லை" என்று பதிலளிக்கிறர்.

பாபா மறுபடியும் அவரைக் கேட்கிறார், "உம்முடைய இல்லத்தில் பஞ்ஜா இல்லை? தாபூத் தினத்தன்று அதை நீர் தொழுவதில்லை? உம்முடைய மனத்தையே கேளும்! 


Friday, 28 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

கணவன் இவ்வாறு பல குதர்க்க வாதங்கள் செய்து மனைவியைக் கேலி செய்து அவமானப்படுத்தினான். ஆனால், அப்பெண்மணி மனந்தளரவில்லை; ஏனெனில், அவருக்கு அசத்தியமான கற்பனை என்றால் என்னவென்றே தெரியாது.

அப்பெண்மணி இயல்பாகவே ஆன்மீக நாட்டம் படைத்தவர். அவர் இதற்கு முன்பு பல சமயங்களில் ஸ்ரீராம தரிசனம் திரும்பத் திரும்பப் பெற்று ஆனந்தப் பரவசமடைந்தவர்.

ஆயினும், பிற்காலத்தில் பணத்தின்மேல் மோகமும் பேராசையும் ஏற்பட்டது. பணத்தாசை பிடித்த இடத்தில் இறைவன் எப்படி இருப்பான்? ஸ்ரீராம தரிசனம் நின்றுபோயிற்று! பணத்தாசையின், இயல்பான விளைவு இதுவேயன்றோ?

பாபாவுக்கு ஈதனைத்தும் தெரிந்திருந்தது. பெண்மணியின் பாவச் செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதை நன்கு அறிந்து, மீண்டும் ஸ்ரீராம தரிசனம் அளித்து அருள் செய்தார்.

இந்த அதிசயத்தை எவ்வாறு விவரிப்பேன்! அன்று இரவே அப் பெண்மணியின் கணவர் (மதராஸ் மனிதர்) தூக்கத்தில் பயங்கரமான கனவொன்று கண்டார்.

(சுலோகம் 53 லிருந்து 80 வரை கனவுக்காட்சி. நிகழ்காலத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. (ம.ம.) = மதராஸ் மனிதர்)

அவர் (ம.ம.) ஒரு நகரத்தில் இருக்கிறார். ஒரு போலீஸ்காரர் அவரைக் கைது செய்து கைகளை பின்புறத்தில் கட்டிவிட்டு அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு கைக்கட்டை தம் கைகளால் மேலும் இறுக்குகிறார்.

அவ்விடத்திலேயே கம்பிபோட்ட சிறைக்கூண்டு ஒன்று இருக்கிறது. பாபா அதற்கு வெளியே ஆடாது அசையாது அமைதியாக நின்றவாறு என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பாபா அருகில் இருப்பதை பார்த்து, அவர் (ம.ம) சோகமான முகத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு தீனமான குரலில் கேட்கிறார்,-

"உங்களுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு உமது பாதங்களை நாடி வந்தோம். நீங்களே இங்கே பிரத்யக்ஷ்மாக இருக்கும்போது ஏன் இந்தத் துயர நிகழ்ச்சி?"

மஹராஜ் பதில் சொல்கிறார், "நம்முடைய கர்ம வினைகளை அனுபவித்தே தீரவேண்டும்!" அவர் (ம.ம) சொல்கிறார் , " நான் அம்மாதிரி கர்மம் ஏதும் செய்ததில்லை!-

"இவ்வளவு பெரிய கேடு நேருமாளவிற்கு நான் இந்த ஜென்மத்தில் ஏதும் செய்யவில்லை ." மஹராஜ் அப்பொழுது சொல்கிறார், "இந்த ஜென்மத்தில் செய்யாவிட்டாலும் முன்ஜன்மங்களில் செய்திருப்பீர்".

அவர் (ம.ம) பதில் சொல்கிறார், "முந்தைய ஜன்மங்களைப் பற்றி எனக்கென்ன தெரியும்? அப்படியே நான் ஏதாவது செய்திருந்தாலும் உங்களுடைய தரிசனத்தால் அது சாம்பலாகிப் போயிருக்க வேண்டும்?-

"உங்களை தரிசனம் செய்தவுடனே ஏன் என்னுடைய பாவங்கள் தீயிலிடப்பட்ட துரும்புபோல் முழுவதும் எரிந்து சாம்பலாகிப் போய் எனக்கு முக்தியை அளிக்கவில்லை?' 


Friday, 21 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றவர்களுக்கெல்லாம் என்றும்போல் சாயிநாதர். ஆனால், அவ்வம்மையாரின் கண்களுக்கோ ஜானகிகாந்தர் (ஸ்ரீராமர்), அவருடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் அபூர்வமான காட்சியைப் பார்த்துக் குழுமியிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

வியப்படைந்தது மட்டுமின்றி, விஷயம் என்னவென்று அறிந்துகொள்ளவும் ஆர்வமுற்றனர். ஏன் இந்த ஆனந்தக்கண்ணீர்? அவருக்கு மாத்திரம் பிரேமையின் ஆவேசம் எங்கிருந்து வந்தது?

பின்னர், மாலை நான்கு மணியளவில் அவ்வம்மையார் ஆனந்தத்தால் நிரம்பிய மனத்துடன் தம்மிச்சையாகவே, சாயி தமக்கு ஸ்ரீராமராக தரிசனம் தந்த அற்புத லீலையை கணவரிடம் விவரித்தார்.

"நீலோத்பலப் பூவைப் போன்ற நிறமுடையவரும் பக்தர்களின் ஆசைகளை கற்பக விருட்சத்தைப் போல் நிறைவேற்றுபவரும் பரதனுக்கு மூத்தவரும் தசரதருக்குப் புத்திரரும் சீதாமணாளருமான ஸ்ரீராமரை நான் கண்டேன்.-

"நான் கண்டது, மஞ்சள் பீதாம்பரம் அணிந்து கிரீட குண்டலங்களுடன் ஜொலித்துக் கொண்டு வனமாலையும் அணிந்த, நான்கு புஜங்களுடன் கூடிய ஜானகி காந்தரையே.-

"கைகளில் சங்கு - சக்கரம் - கதை, மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் மரு, கழுத்தைச் சுற்றிக் கௌஸ்துப மாலை, இவற்றை அணிந்துகொண்டவரும் புருஷோத்தமரும் உள்ளங்கவரும் உருவமுடையவரும் அப்பாலுக்கும் அப்பாற்பட்டவருமாகிய ஸ்ரீராமரை கண்டேன்."-

அவர் மேலும் சொன்னார், "ஈடிணையற்ற லீலைகள் புரிவதற்காக மனித அவதாரம் ஏற்ற மஹாவிஷ்ணுவும், ஜானகியின் இதயத்தில் குடிகொண்டு மகிழ்விப்பவருமான ஸ்ரீராமரை நான் வில்லேந்திய கோலத்தில் கண்டேன்.-

"வெளிப்பார்வைக்கு அவர் ஒரு பக்கீராக தோன்றலாம்; வீடுவீடாகச் சென்று பிச்சையும் எடுக்கலாம். எனக்கு அவர் ஜானகியின் மனத்தைக் கவர்ந்த, வில்லேந்திய ஸ்ரீராமராகவே தெரிந்தார்.-

"மேலும், அவர் மேலெழுந்த வாரியாகப் பார்த்பதற்கு ஒரு அவலியாக (முஸ்லீம் முனிவராக) இருப்பினும், மற்றவர்களுக்கு எப்படித் தோன்றினாலும், எனக்கு ஜானகியின் மனத்தைக் கவர்ந்த கோதண்டபாணியாகவே தெரிந்தார்."

அவ்வம்மையார் பரமபக்தியும் பாவமும் கொண்டவர்; கணவனோ பணத்தாசை பிடித்த சுயநலவாதி. "பெண்ணினம் இப்படித்தான் பேசும். ரகுபதி (ஸ்ரீராமர்) இந்த இடத்தில் இப்பொழுது எப்படித் தோன்ற முடியும்?

"நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு மனத்தில் என்ன இருக்கிறதோ அதுவே காட்சியாகத் தெரிகிறது. நாமெல்லாம் சாயியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இவளுக்கு மட்டும் எப்படி ராமரூபம் தெரிந்தது?" 

Saturday, 15 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அன்புடன் செல்லமாக கொஞ்சும் போதிலும் அமனியின் மனம் ரூபாயில்தான் இருக்கும். "பாபா கொடு, சீக்கிரம் கொடு!" என்று அவருடைய பாக்கெட்டில் கண்வைத்தவாறே கேட்பாள்.

அமனியாவது ஒரு சிறு குழந்தை! ஆனால், பெரியவர்களுக்கும் கனவான்களுக்குமே இப் பேராசை இருக்கிறது. காசுக்காகவே சுயநலமாக அனைவரும் அலைகின்றனர். ஆன்மீக வாழ்வில் நாட்டம் கொண்டவர் எவரோ ஒருவரே.

அமனி பாபாவின் மடியில் அமர்ந்திருப்பாள். தாயாரோ சற்று தூரத்தில் கிராதிக்கு அப்பால் நின்றுகொண்டு 'கொடுக்கும்வரை அவரை விடாதே' என்று விளங்கும்படி சைகை செய்வாள்.

"என்னைக் கொள்ளையடிக்க வந்த உதவாக்கரையே, நான் உன் அப்பனுக்கு கடன் பட்டிருக்கிறேனா என்ன? என்னைப் பிடுங்கியெடுக்கிறாயே " என்று பாபா கோபத்துடன் வினவுவார்.

ஆனால், இந்த கோபம் பொய்க்கோபமே. இதயத்திலோ அன்பின் அலைகள் பொங்கின. பாக்கெட்டில் கையை விட்டு ஒரு ரூபாயை எடுப்பார்.

ரூபாயை அந்தச் சிறிய டப்பாவில் இட்டு, டப்பென்று மூடுவார். டப்பா கையில் கிடைத்தவுடனே அமனி வீடு நோக்கிப் பாய்வாள்!

இது காலை உணவு நேரத்தின் நடப்பு. இதுபோலவே லெண்டித் தோட்டத்திற்குப் போகும்போதும் அமனியை அன்புடன் கடிந்துவிட்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுப்பார்.

இவ்வாறாக, அவர் தினமும் அமனிக்கு இரண்டு ரூபாயும் ஜமலிக்கு   ஆறு ரூபாயும் தாதா கேள்கருக்கு ஐந்து ரூபாயும் பாக்கியாவுக்கும் சுந்தரிக்கும் தலா இரண்டு ரூபாயும் கொடுப்பார்.

தினமும் பத்திலிருந்து பதினைந்து ரூபாய்வரை தாத்யாவுக்கும் பதினைந்திலிருந்து ஐம்பது ரூபாய் வரை பக்கீர் பாபாவுக்கும் எட்டு ரூபாய் ஏழை எளியவர்களுக்கும் தவறாது கொடுத்தார்.

இவ்வாறான தர்ம ஒழுக்கத்தை பற்றிக் கேள்வியுற்ற மதராஸ் கோஷ்டி, பாபாவிடமிருந்து நாமும் பணம் பண்ணலாமே என்று சுயநலமாக சிந்தித்தது இயற்கையே. பாபாவின் சந்நிதியில் தினமும் தவறாது நால்வரும் பஜனை செய்தனர்.

வெளிப்பார்வைக்கு பஜனை இனிமையாக இருந்தது. அந்தரங்கத்தில் அவர்களை பணத்தாசை பிடித்து ஆட்டியது. மேலும் மேலும் பாபா பணம் தருவார் என்ற நம்பிக்கையில் நால்வரும் ஷீர்டி வாசத்தை நீடித்தனர்.

நால்வரில் மூவர் பேராசை பிடித்தவர்கள்; பாபாவிடம் பணம் கறக்கவேண்டும் என்றே விரும்பினார். ஒருவர் மட்டும் (மனைவி) நேர்மையானவர். சாயியின் மீது தூயபக்தியுடனும் அன்புடனும் பஜனை பாடினார்.

அவருடைய சாயி பக்தியையும் பிரேமையையும், மேகத்தைக் கண்டு மகிழ்ந்து நடனமாடும் மயிலுக்கும் சந்திரனைக் கண்டு மகிழும் சகோர பட்சிக்கும் ஒப்பிடலாம்.

கிருபா மூர்த்தியான சாயி அவ்வம்மையாரின் பக்தியை மெச்சி, ஒருநாள் மதிய ஆரத்தியின்போது அவருக்கு ஸ்ரீராமனாகக் காட்சியளித்தார். 


Friday, 7 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா விரும்பினால் வழிப்போக்கர்களுக்கும் பணம் விநியோகம் செய்வார். கிருபா மூர்த்தியான சாயிநாதர் திக்கற்றவர்களையும் ஏழைஎளியவர்களையும் அன்புடன் நலன் விசாரித்து அவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்து, துயர் துடைத்து விடை கொடுத்தனுப்புவார்.

அந்த கோஷ்டியில் ஓர் ஆடவரும் மூன்று பெண்டிரும் இருந்தனர். அதாவது , ஒரு மனிதர், அவர் மனைவி, மக்கள், மைத்துனி - ஆக மொத்தம் நால்வர் இருந்தனர். அவர்கள் மஹானை தரிசனம் செய்ய விரும்பினர்.

சாயி தரிசனம் செய்த பிறகு அந்த கோஷ்டி திருப்தியும் சந்தோஷமும் அடைந்தது. தினமும் சாயி சந்நிதியில் நியமமாக பஜனை செய்தனர்.

அவர்கள் ராமதாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மிகுந்த உற்சாகத்துடன் பஜனை செய்வார்கள். பாபாவும் தமக்குத் தோன்றியவாறு ஒரு ரூபாயோ அரை ரூபாயோ கொடுப்பார்.

சில நாள்களில் பாபா அவர்களுக்கு பர்பி கொடுப்பார்; சில நாள்களில் வெறுங்கையுடன் அனுப்பி விடுவார். ஆதியிலிருந்தே பாபாவின் செயல்பாடுகள் இப்படித்தானே இருந்தன; எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதே!

பாபா பணத்தை வாரிவாரி வழங்கியதென்னவோ உண்மைதான்! அதில் உண்மையில்லாதது ஏதும் இல்லை. ஆனால், அவர் எல்லாருக்குமே கொடுப்பார் என்று சொல்ல முடியாது! அவருடைய மனோகதியை எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

பக்கீர்கள், பிச்சைக்காரர்கள், ஆண்டிகள், பரதேசிகள் - இவர்களனைவரும் பாபாவை நாடி வந்தவண்ணமாக இருந்தனர். பாபா பரம தயாளராக இருந்தாலும், அவர்கள் எல்லாருக்குமே தருமம் கொடுக்கவில்லை.

யாருக்கு லாபகாலம் வந்ததோ, அவரே பாபாவின் கையால் தொடப்பட்ட பணத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்.

இது சம்பந்தமாக ஒரு கதை கேட்டால் சந்தோஷமடைவீர்கள். ஆகவே, முதலில் அதைச் சொல்லிவிட்டுப் பிறகு தொடர்கிறேன்.

காலையில் சொற்ப ஆகாரம் உண்டபின் பாபா துனிக்கு அருகிலிருந்த கம்பத்தடியில் உட்காருவார். அந்நேரத்தில் அமனி என்னும் சிறு பெண்குழந்தை வருவாள்.

மூன்று பிராயம் நிரம்பிய இச் சிறுபெண், உடையேதும் அணியாமல் கையில் ஒரு சிறிய தகர டப்பாவை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்துசேர்வாள். கூடவே தாய் ஜமலியும் வருவாள்.

அமனி, பாபாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு டப்பாவை அவரிடம் கொடுத்து, "பாபா, ரூப்பையா, ரூப்பையா" என்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள்.

பாபாவுக்குப் பொதுவாகக் குழைந்தைகளின் மீது அமோகமான அன்பு. புஷ்டியாகவும் அழகாகவும் இருந்த அமனியை நேசித்தார்; அவளை இறுக்க அணைத்துக்கொண்டு கொஞ்சுவார்; முத்தம் கொடுப்பார். 


Thursday, 30 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

29 . கனவிலும் நனவிலும் அனுக்கிரஹம் (பகுதி 1 ) 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும், என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாபாவின், கற்பனைக்கெட்டாத லீலைகளில் ஒன்றை இந்த அத்தியாயத்தில் சொல்கிறேன். விஷயம் அதுவேயானாலும் முந்தைய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட லீலைகளை காட்டிலும் இது மேலும் விசித்திரமானது.

பாபவின் அற்புதமான லீலைகளை பற்றி கேள்விப்பட்டு ஒரு பஜனை கோஷ்டி 1916 ஆம் ஆண்டு பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு வந்தது.

மதராஸிலிருந்து காசி யாத்திரைக்காகக் கிளம்பிய இந்த கோஷ்டி பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு வழியில் ஷிர்டியில் இறங்கியது.

"சாயிபாபா ஒரு சிறந்த மஹான்; தீரம், உதாரம், தன்னடக்கம் போன்ற பல நற்குணங்களின் பெட்டகம். புனிதப் பயணிகளிடம் கிருபையுள்ளவர்; அவர்களுக்கு நிதியும் நிறைய அளிக்கிறார்.-

"ஒரு பைசா, ஓரணாவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; நாலணா, எட்டணா காசுகள் மழையாகக் கொட்டும்! சிலருக்கு பத்து ரூபாய், இன்னும் சிலருக்கு இருபது ரூபாய், வேறு சிலருக்கு ஐம்பது ரூபாயும் கொடுக்கிறார். -

"இந்தக் காசுமழை ஏதோ விசேஷ நாள்களிலோ, பண்டிகைகளிலோ, தானம் செய்யவேண்டிய புண்ணிய காலங்களிலோ மட்டும் பொழியவில்லை. மேற்சொன்ன ரீதியிலும் அளவிலும் ஒவ்வொரு நாளும் பாபா சந்தோஷமாக கொடுக்கிறார். -

"பஹுட்களும், பவய்யாக்களும் (மராட்டிய கிராமிய கலைஞர்கள்) வந்து நடனமாடுவர்; பாடகர்கள் பாடுவார்கள்; நாடோடிப் பாவாணர்கள் புகழ் பாடுவர்; கேளிக்கைக்காரர்கள் தமாஷா செய்து அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்துவர்; ஹரி பக்தர்கள் மெய்மறந்து பஜனை செய்வர். -

"மஹராஜ் அவ்வளவு உதாரகுணம் படைத்தவர்; தானமும் தருமமும் அவரிடமிருந்து மழையாகப் பொழிகிறது!" இந்தக் கீர்த்தி காதுவழிச் செய்தியாக மதராஸ் பஜனை கோஷ்டியை அடைந்தது. ஆகவே, அவர்கள் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்று விரும்பினார்.  
 
 

Thursday, 23 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சிவபூஜை செய்வதில் மேகா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பாபா அவருக்கு சிவலிங்கம் அளித்து அவருடைய பக்தியை திடப்படுத்தினார். சாயியின் லீலை அளவிடற்கரியது!

இந்த கதை ஒன்றுதானா! இம்மாதிரியான கதைகள் அபரிதமாக உள்ளன. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், இக் காவியம் அளவுக்கு மீறி விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, கதை கேட்பவர்களே, என்னை மன்னித்துவிடுங்கள்!

ஆயினும் நீங்கள் மென்மேலும் கேட்க ஆர்வம் காட்டுவதால், அடுத்த அத்தியாயத்தில் இம்மாதிரியான கதை இன்னுமொன்று சொல்கிறேன். நீங்கள் இதைவிட அற்புதமான சாயி லீலைகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.

சாயி பாதங்களில் சரணமடைந்து, ஹேமாட் உங்களை சாயி சரித்திரத்தை கேட்கும்படி செய்கிறேன். கேட்பவர்களின் பிறவிப் பயம் அழியும்; எல்லாத் தொல்லைகளும் துரிதமாக நிவாரணம் அடையும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'தெய்வீகக் காட்சிகள்' என்னும் இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.