valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 22 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

இயல்பாக அந்த ராமதாசி குதர்க்கமே உருவானவர். ஒரு நொடியில் அவருக்கு மாதவராவின் மேல் சந்தேகம் வந்துவிட்டது. ராமதாசி சொன்னார், "என்னுடைய போதியைப் பிடுங்கிக்கொள்வதற்காகவே பாபாவை மத்யஸ்தத்திற்கு (நடுநிலையாளராக) இழுத்தாய்".

வாங்கிக்கொண்டுவந்த சோனாமுகி மருந்தை மறந்துவிட்டு மாதவராவின்மேல் வசைமாரியை ஆரம்பித்தார். பொங்கிவந்த கோபத்தால் பெருஞ்சத்தம் போட்டு, அர்த்தமற்ற வார்த்தைகளை சரமாரியாக பொழிந்தார்.

"வயிற்றுவலி ஒரு பாசாங்கு என்று எனக்கு நன்கு தெரியும். என்னுடைய போதியின்மீது நீ கண்வைத்துவிட்டதால், நீதான் பாபாவை இவ்வாறு பாசாங்கு செய்யத் தூண்டியிருக்கிறாய். நான் இதை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை.-

"நான் ராமதாசியென்று  பெயர் பெற்றவன்; தைரியசாலி; பயமேயில்லாதவன். என்னுடைய போதியை மரியாதையாகத் திருப்பிக் கொடுத்துவிடு. இல்லையேல், நான் உன்னெதிரிலேயே மண்டையை உடைத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பேன்.-

"என்னுடைய போதியின்மீது நீ குறிவைத்துவிட்டாய். ஆகவே, நீதான் இந்த கபட நாடகத்தை ஜோடித்து பாபாவின் மேல் பழி வருமாறு செய்து நல்ல பிள்ளைபோல் ஒதுங்கிவிட்டாய்".

மாதவராவ் அவரைப் பலவிதமாக சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், ராமதாசியோ விடுவாரில்லை. பிறகு, மாதவராவ் மென்மையாக என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

"நான் ஏமாற்று வேலை செய்தேன் என்று அனாவசியமாக பழி சுமத்த வேண்டா. என்ன உம்முடைய போதியின் கதை? சுலபமாக கிடைக்கக் கூடிய புத்தகந்தானே!-

"பாபாவையே சந்தேகப்படும் அளவிற்கு உம்முடைய போதியென்ன தங்கமா, வைரமா, வைடூரியமா? வெட்கம், வெட்கம்!"

ராமதாசியின் அட்டகாசத்தை பார்த்த பாபா இனிமையாகக் கேட்டார். "ஓய், ராமதாசி! இப்பொழுது என்ன தவறு நடந்துவிட்டது? ஏன் காரணமேதுமின்றி உம்மையே நீர் வருத்திக் கொள்கிறீர்?-

"சாமாவும் நம் பையன் அல்லனோ! ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அவனைத் திட்டுகிறீர்? அர்த்தமில்லாமல் ஏன் சோகப்படுகிறீர்? உம்முடைய கோபத்தைக் காட்டி எல்லாரையும் வேடிக்கை பார்க்க வைக்கிறீர்! -

"ஓ, நீர் எப்படி இவ்வளவு சண்டை விரும்பியாக இருக்க முடியும்? நீர் ஏன் மென்மையாகவும் இனிமையாகவும் பேசக்கூடாது? எந்நேரமும் போதி படித்தும் உம்முடைய இதயம் அசுத்தமாக இருக்கிறதே!-

"தினமும் நீர் அத்யாத்ம ராமாயணம் வாசிக்கிறீர்; சஹஸ்ர நாமாவளி பாராயணம் செய்கிறீர். ஆயினும் உமது முரட்டு சுபாவத்தை விடமாட்டேன் என்கிறீரே. இந்த லட்சணத்திற்கு உம்மை நீர் ராமதாசி என்று வேறு சொல்லிக்கொள்கிறீர்!

"நீர் என்ன விதமான ராமதாசி ? நீர் உலகியல் பொருள்களை உதாசீனம் செய்பவராக அல்லீரோ இருக்கவேண்டும்? மாறாக, ஒரு புத்தகத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீரே ! உம்முடைய நடத்தையைப்பற்றி யார் என்ன சொல்லமுடியும்?-


Thursday, 15 November 2018

ஷீர்டி சாயி சரிதம்

நம் முன்னோர்கள் செய்த புண்ணியங்களின் கூட்டுவலிமையே சாயியின் கிருபை என்னும் பலனை விளைவிக்கிறது. நம்மைத் தூயவர்களாக்கி இவ்வுலக வாழ்வின் தொந்தரவுகளில் இருந்தும் துன்பங்களிலிருந்தும் மயக்கங்களிலிருந்தும் விடுவிக்கும் மஹிமை பெற்றது விஷ்ணு சஹஸ்ர நாமாவளி தோத்திரம்.

மற்ற மதச் சடங்குகளுக்கு எத்தனையோ விதிகளை அனுசரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நாமஜெபத்தையோ எந்நேரமும் இடைவிடாது செய்யலாம். நாமஜபத்திற்குத் தடங்கல் என்பதே கிடையாது. வேதம் ஓதக்கூடாத நாள்களிலும் நேரங்களிலும் கூட, நாம ஜபம் செய்யலாம். அதைவிட எளிமையானதும் சுலபமானதுமான வழிபாட்டுமுறை வேறேதுமிவுமில்லை.

மராட்டி ஞானி ஏகநாதருங்கூட இதே ரீதியில் தம் அண்டைவீட்டுக்காரர் ஒருவரின் மீது விஷ்ணு சஹஸ்ர நாமாவலையைத் திணித்து அவருடைய வாழ்க்கையை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பினார்.

ஏகநாதரின் இல்லத்தில் தினமும் விஷ்ணு சஹஸ்ர நாமாவளி பாராயணமும் புராணங்கள் வாசிப்பதும் பஜனையும் நடந்துகொண்டிருந்தன. ஆயினும், பக்கத்து வீட்டுப் பிராமணர், நீராடுதல் சந்தியாவந்தனம் போன்ற நித்திய விதிகளை கூடத் துறந்துவிட்டு மனம் போனபடி துராசாரத்தில் மூழ்கி வாழ்ந்துவந்தார்.

புராணப் பிரவசனத்தை ஒருபோதும் செவிமடுத்தாரில்லை. மேலும் சொல்லப்போனால், அக் கெட்ட மனிதர் ஏகநாதர் வீட்டினுள் என்றுமே நுழைந்தாரில்லை. ஆயினும் ஏகநாதர் கருணைகூர்ந்து அவரைத் தம்மிடம் வரவழைத்தார்.

உயர்குல பிராமணராகப் பிறந்திருந்தபோதிலும் அவர் தடம் புரண்டு வாழ்ந்துவந்தார். இவ்வுண்மை தெரிந்த ஏகநாதர் பரிதாபப்பட்டு, அவரைச் சீர்திருத்திச் செம்மையாக்குவது எப்படி என்று யோசித்தார்.

அவர் 'வேண்டா' என்று சொன்னபோதிலும், தாம் விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை ஒவ்வொரு சுலோகமாக உரக்கச் சொல்லி, அவரைத் திருப்பி ஒப்பிக்க வைத்தார். ஒவ்வொரு சுலோகமாகப் பாடம் ஏற ஏற படிப்படியாக அவர் உத்தாரணம் (தீங்கிலிருந்து மீளுதல்) அடைந்தார்.

விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை படிப்பதோ பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்துகொள்வதற்கு சுலபமான நேர்வழிப் பாதை ஆகும். இவ்வழிபாட்டுமுறை நமக்குப் பரம்பரை சொத்தாக கிடைத்திருக்கிறது. பாபா மேற்கொண்ட பெருமுயற்சி இக் காரணம்பற்றியே.

இதற்கிடையே ராமதாசை சோனாமுகி மருந்துடன் விரைவாகத் திரும்பி வந்தார். சண்டை மூட்டிவிடுவதில் நாரதரைப் போல் மகிழ்ச்சி கண்ட அண்ணா பாபரே தயாராக காத்திருந்து, நடந்தது அனைத்தையும் ராமதாசியிடம் விவரமாகத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ராமதாசி ஒரு முரட்டு மனிதர். போதாக்குறைக்கு அண்ணா பாபரேவின் நாரதர் வேலையும் சேர்ந்துகொண்டது. இந்த அபூர்வமான சூழ்நிலையின் உண்மை நிலையை எவரால் விவரிக்க முடியும்? 


Thursday, 1 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"மேலும், இந்தப் போதியின் மொழியோ சமஸ்க்ரிதம். என்னுடைய பேச்சும் உச்சரிப்பும் குறைபாடுடையன. பேச்சில் கிராமவாடை ; உச்சரிப்பில் மெருகில்லை. கூட்டெழுத்தை உச்சரிக்கும்போது நாக்குக் குழறி, பேச்சு தெளிவிழந்து போகிறது".

பாபாவினுடைய செயல், சண்டை மூட்டிவிடுவதற்காகவே குறிவைக்கப்பட்டது என்று சாமா நினைத்தால் போலும். அந்தோ பாபாவுக்குத் தம்மீது இருந்த அன்பையும் அக்கறையையும் அவர் உணர்ந்தாரில்லை.

"என் சாமா ஒரு கிறுக்கன் போலும்! ஆனால், எனக்கு அவன்மேல் ஆசையும் பாசமும் உண்டு. என்னுடைய இதயத்தில் ஒரு தனியிடம் பிடித்துவிட்டான். அதுவே என் அன்புதோய்ந்த அனுதாபத்திற்கு காரணம்.-

"என்னுடைய கைகளாலேயே இந்த விஷ்ணு சஹஸ்ர நாம் மாலையை அவன் கழுத்தில் இடுகிறேன். உலகியல் தொல்லைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் இது அவனை விடுவிக்கும். இந்த நாமாவளியைப் பாராயணம் செய்வதில் அவனுக்கு ஆவலை உண்டு செய்கிறேன்.-

"நாமம் மலைபோன்ற பாவங்களையும் அழிக்கும்; நாமம் தேகாபிமானத்தை உடைக்கும்; நாமம் கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.-

"நாமம் காலனின் கழுத்தை நெறிக்கும்; ஜனனமரணச் சுழலிருந்து விடுவிக்கும். இவ்வளவு மஹிமை வாய்ந்த விஷ்ணு சஹஸ்ர  நாமாவளியின் மீது சாமா ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். -

"பிரயத்தனமாக, செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நாமஜபம் மிக உன்னதமானது. பிரயத்தனம் இன்றிச் செய்யப்படும் நாமஜபமும் சோடைபோவதில்லை. எதிர்பாராமல் நாக்கில் தொந்திரனாலும், நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிப்படுத்தும். -

"நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜெபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. நாமமே நாக்குக்கு அணிகலன்; நாமமே ஆன்மீக வாழ்வைச் செழிப்பாகும் உரம். -

"நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திர விதிகளுக்கும் உட்பட்டதன்று. நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். நாம என்றும் எப்பொழுதும் பவித்திரமானது.-

"என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கறை சேர்ந்து விடுவீர்கள்; வேறு உபாசனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.-

"எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச் சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்."

பாபாவின் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருந்த எண்ணமும் நோக்கமும் இவையே. அதற்கேற்றவாறே அவர் செயல் புரிந்தார். வேண்டா, வேண்டா, என்று சொன்னபோதிலும் சாமாவின் பாக்கெட்டில் போதியைத் திணித்துவிட்டார்!


Thursday, 25 October 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் மனத்தில் எழுந்த எண்ணம் இதுவே. ராமதாசியைத் தம்மிடம் கூப்பிட்டுச் சொன்னார், "எனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி வந்துவிட்டது; குடலே வெடித்துவிடும்போல் இருக்கிறது. -

"இந்த வயிற்றுவலி நிற்கப் போவதில்லை. போம், சீக்கிரமாகச் சென்று கொஞ்சம் சோனாமுகி சூரணம் (பேதி மருந்து) வாங்கி வாரும். ஒரு சிட்டிகை வாயில் போடாவிட்டால் இந்தப் பிடிவாதமான வயிற்றுவலி போகாது".

அப்பாவி ராமதாசி இதை நம்பிவிட்டார்! உடனே தாம் படித்துக்கொண்டிருந்த போதியில் பக்க அடையாளம் வைத்துவிட்டு பாபாவின் ஆணைக்கு கீழ்ப்படிந்து பஜாருக்கு ஓடினார்.

ராமதாசி படியிறங்கியவுடனே பாபா என்ன செய்தாரென்றால், தம்முடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்து பாராயணப் புத்தகக்கட்டுக்கு அருகே சென்றார்.

பல புத்தகங்களுக்கிடையில் விஷ்ணு சஹஸ்ர நாம போதி அதில் இருந்தது. அதைக் கையிலெடுத்திக்கொண்டு தம்முடைய இருக்கைக்கு  திரும்பி வந்தார்.

பாபா சொன்னார், "சாமா, உனக்குத் தெரியுமா? இந்த போதி பரம மங்களத்தை அளிக்கக் கூடியது. ஆகவே, நான் இதை உனக்குத் தருகிறேன். நீ இதை இன்றிலிந்து வாசிக்க ஆரம்பி.-

"ஒருசமயம் நான் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டேன். அமைதியிழந்து கொதிப்படைந்த நிலையில் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்தேன். -

"அந்த நேரத்தில், ஓ! உனக்கெப்படிச் சொல்லுவேன் சாமா! இந்தப் போதி மிகவும் உபயோகமாக இருந்தது; இது இல்லாமல் நான் உயிர்பிழைத்திருக்க மாட்டேன்! இதுவே என்னுயிரைக் காத்தது!-

"போதியை ஒருகணம் மார்பின் மேல் வைத்துக்கொண்டேன். ஆஹா! உடனே என்னுடைய இதயத்தின் படபடப்பு அடங்கியது. அல்லாவே போதியுனுள் இறங்கியிருப்பது போல் உணர்ந்தேன். நான் உயிர்பிழைத்தது போதியினாலேயே!-

"ஆகவே, சாமா, இதை உன்னுடையதாக எடுத்துக்கொள். மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் வாசிக்க ஆரம்பி. ஒரு நாளைக்கு ஒரு நாமாவின் மீது மனதை ஈடுபடுத்தினாலும் இது உனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும்."

 சாமா பதில் கூறினார், "பாபா, எனக்கு இந்தப் போதி வேண்டா! அந்த ராமதாசி என்மீது கடுங்கோபம் கொள்வார். அவர் இல்லாமலிருந்த நேரத்தில் நான்தான் இந்தத் தகாத செயலைச் செய்து விட்டதாக நினைப்பார்.-

" அவர் இயற்கையாகவே துஷ்டர்; முன்கோபி; பிடிவாதக்காரர்; சுலபமாகத் தன் வயமிழக்கக் கூடியவர். அனாவசியாமாக ஏன் ஒரு சண்டையைக் கிளப்ப வேண்டும்? வேண்டா, வேண்டா, எனக்கு எந்தச் சச்சரவும் வேண்டவே வேண்டா !-


Thursday, 18 October 2018

ஷீர்டி சாயி சத் சரிதம்

அந்தக் காலத்தில்தான் இப்புத்தகங்கள் உபயோகத்திற்கு வரும். நாம் அப்பொழுது மேலுலகத்தில் இருப்போம். ஆயினும், சாமா தம்முடைய புத்தக சம்மேளனத்தில் இருந்து (குவிப்பதிலிருந்து) எடுத்துக் கொடுப்பார். இயற்றிய ஆசிரியர்களின் பிரதிநிதிகளாகப் புத்தகங்கள் அப்பொழுதும் இயங்கும்!

இந்நூல்கள் பரம பவித்திரமானவை. ஷிர்டியிலோ அல்லது மற்ற இடங்களிலோ பக்தர்கள் இப் புராணநூல்களை வாசிக்க வேண்டும் என்பதே பாபாவினுடைய விருப்பமாக இருந்திருக்க வேண்டும். பத்திரமாக பாதுகாக்கச் சொன்னது அதற்காகவே.

ராமனுடைய சரித்திரமான ராமாயணத்தையோ, கிருஷ்ணனுடைய சரித்திரமான பாகவதத்தையோ வாசிக்கிறோம். அப்பொழுதும் முன்னும் பின்னும் சாயியே கண்ணுக்குத் தெரிகிறார்.

இந்நூல்களின் கதாநாயகர்கள், வேறு உருவம் ஏற்றுக்கொண்ட சாயியே என்று உணர்ந்த நிலையில், கதையை பிரவசனம் செய்பவரும் காதுகொடுத்துக் கேட்பவர்களும் சாயியின் உருவத்தையே கண்முன் காண்கிறார்கள்.

புத்தகங்கள் குருவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அல்லது பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்படுக்கின்றன. இச் செய்கை, கொடுத்தவர்களுக்கு மங்களைத்தை விளைவிக்கின்றது என்பது சாஸ்த்திர பிரமாணம்.

"இப் புத்தகங்களை நீ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய தொகுப்பில் சேர்த்து சம்ரட்சணம் செய்" என்று சாமாவுக்கு பாபா இட்ட ஆக்கினையின்பின், ஒரு மிகவும் முக்கியமான நோக்கம் இருந்தது.

சாமாவின் பக்தி எவ்வாறு ஒப்பில்லாததோ, அவ்வாறே பாபாவுக்கு சாமாவின் மீது இருந்த பிரேமை கரைகடந்தது. ஆகவே, அவரை ஓர் ஆன்மீக நியமத்துக்கு உட்படுத்தவேண்டுமென்ற விருப்பம் சாயியின் மனதில் எழுந்தது.

இதனால் பாபா என்ன செய்தாரென்று பாருங்கள்! சாமாவுக்கு இச்சையே இல்லாத போதிலும், அவருக்குச் சிறந்ததொரு அனுக்கிரத்தை செய்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பற்றிக் கேளுங்கள்!

ஒருநாள் மசூதிக்கு ராமதாசி புவா ஒருவர் வந்துசேர்ந்தார். ராமாயண பாராயணம் செய்வது அவருடைய நித்திய நியமம். (தினப்படி வழிபாட்டு ஒழுக்கம்).

விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் ஸ்நானம் செய்துவிட்டு, விபூதி தாரணம் செய்துகொண்டு காவியாடை தரித்து அனுஷ்டானத்துக்கு அமர்ந்துவிடுவார்.

பரிபூரணமான சிரத்தையுடன் அத்யாத்ம ராமாயணத்தை நெடுநேரம் வாசித்த பிறகு விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை பாராயணம் செய்வார்.

இவ்வாறு பலநாள்கள் நித்திய அனுஷ்டானம் நடந்து வந்தது. மாதவராவுக்கு நல்ல காலம் பிறந்தது; சமர்த்த சாயியின் மனதில் அவருக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதுபற்றிய விவரம் கேளுங்கள்.

மாதவராவின் சேவைக்குப் பலன் பழுக்கும் நேரம் வந்துவிட்டது. 'மாதவராவ் சமயாசார (மத ஒழுக்க) நியமம் ஒன்றைக் கடைப்பிடித்து பக்திமார்க்கத்தின் பிரசாதத்தை பெறவேண்டும். இவ்வழியாக உலகியல் வாழ்வின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, சாந்தியடைய வேண்டும்.'-


Thursday, 11 October 2018

ஷீர்டி சாயி சத் சரிதம்

ஒரு சமயம், பாகவத பாராயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட சாயி பக்தரொருவர், காகா மஹாஜனி என்ற பெயர் கொண்டவர், பாகவத புத்தகப் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.

அவரை சந்திப்பதற்கு வந்த மாதவ்ராவ், தற்செயலாக அப் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தார். மசூதிக்கு சென்ற போதும் கையில் புத்தகம் இருந்தது. பாபா அவரைக் கேட்டார். -

"சாமா, இதென்ன புத்தகம் உன் கையில்?" சாமா பதில் சொன்னார். பாபா புத்தகத்தை தம் கையில் எடுத்துப் புரட்டி பார்த்துவிட்டுத் திருப்பித் கொடுத்தார்.

ஒரு காலத்தில் காகா மஹாஜனி பாபாவிடம் இருந்து பிரசாதமாக பெற்றுக்கொண்ட ஏகநாத பாகவதத்தின் பிரதியே அப்புத்தகம்.

மாதவராவ், புத்தகம் தம்முடையதில்லையென்றும் காகா மஹாஜனி யினுடையது என்றும் பாபாவுக்குத் தெளிவுபடுத்தினார். படிக்க வேண்டுமென்ற ஆவல் யதேச்சையாக தோன்றியதால், கையிலெடுத்திக்கொண்டு வந்ததாகவும் விளக்காமாகச் சொன்னார்.

இருந்தபோதிலும் பாபா சாமாவிடம் கூறினார், "நான் இதை உனக்கு கொடுக்க நேர்ந்ததால் உன்னுடைய சேகரிப்பில் இதை வைத்துக்கொள். உனக்கு உபயோகப்படும்".

இவ்வாறு நடந்ததால், சிலகாலம் கழித்துக் காகா மஹாஜனி ஷிர்டிக்கு மறுபடியும் விஜயம் செய்தபோது, தாம் வாங்கிக்கொண்டு வந்த புதியதொரு ஏகநாத பாகவதப் பிரதியை சாயியின் கரங்களில் வைத்தார்.

பாபா அவருக்கு அதை பிரசாதமாகத் திருப்பிக் கொடுத்தார். கொடுக்கும்போது ஆக்கினையாகச் சொன்னார், "இதை மிக பத்திரமாக வைத்துக்கொள்ளும். இது உமக்கு உண்மையாகவே மிகவும் உபயோகமாக இருக்கும்". இவ்வாறு காகா மஹாஜனி ஆறுதல் அளிக்கப்பட்டார்.

பாபா மிகவும் மனம் கனிந்து மேலும் கூறினார், "இதுதான் உமக்கு நன்கு பணி புரியும்; இதை வேறு யாரிடமும் கொடுக்காதீர்". இதைக் கேட்ட காகா மஹாஜனி பிரேமையுடன் வந்தனம் செய்தார்.

பாபா எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் ஆதலால், முழுக்க முழுக்க விருப்பமேதுமில்லாதவர். இயற்கையாகவே துறவு தர்மத்தை அனுசரித்த பாபா, உலகியல் பொருள்களை (புத்தகங்களை) சேகரிப்பதில் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டார்?

பாபாவின் மனதில் இருப்பதை யார் அறிவார்? நடைமுறை ரீதியில் பார்த்தால், இப் புத்தக வங்கி பக்தர்கள் புராணங்களைக் காதால் கேட்டு  இன்புறவும் பயனடையவும் உதவியாக இருந்தது.

ஷீர்டி இப்பொழுது ஒரு பவித்திரமான தலமாக ஆகிவிட்டது. பாபாவின் சிஷ்யர்கள் பல தேசங்களில் இருந்து வந்து இங்கே திரும்பத் திரும்ப கூடுவர்; ஆன்மீக விஷயங்களை பற்றிக் கலந்து ஆலோசிப்பர். 


Thursday, 4 October 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர் எவருக்காவது ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டால், முதலில் அதை பாபாவிடம் கொடுத்து, அவர் கைகளில் இருந்து பிரசாதமாக திரும்பப் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது.

அந்நூலைப் பாராயணம் செய்யும் காலத்தில், செய்பவருக்கு அபாரமான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வாறே, அப்புத்தகத்தை போதியாகப் படித்து விரிவுரை சொல்பவருக்கும் கதை கேட்பவர்களுக்கும் பூரணமான பிரசாதமாக பரம மங்களம் விளையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

சிலர் பாபாவிடம் பெருமாளின் தசாவதாரச் (பத்து அவதாரங்கள்) சித்திரத்தைக் கொணர்ந்தனர்; சிலர் தசாவதாரத் தோத்திரப் புத்தகங்களை கொணர்ந்தனர். மேலும் சிலர், பஞ்சரத்தினி கீதை போன்ற புனிதமான நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அர்ப்பணம் செய்தனர்.

சிலர் தாசகணு இயற்றிய சந்தலீலாமிருதம், பக்தலீலாமிருதம் ஆகிய புத்தகங்களை கூட அர்ப்பணம் செய்தனர். வேறு சிலர் 'விவேக சிந்து' என்னும் நூலைக் கொண்டுவந்தனர். பாபா இவையனைத்தும் சாமாவிடம் ஒப்படைத்தார்.

பாபா அப்பொழுது கூறுவார், "சாமா, இந்தப் புத்தகங்களெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் பத்திரமாக வைத்துக் காப்பாற்று." சாமா இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, புத்தகங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துவந்தார்.

பக்தர்கள் கடைகளில் இருந்து இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து, பிரசாதமாகத் திரும்ப பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பாபாவின் கைகளில் வைப்பர்.

சுபாவத்தில் பாபா உதாரகுணம் படைத்தவரெனினும், இதைச் செய்வதற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆகவே, பக்தர்கள் தங்களுடைய ஆசையைத் தெரிவிப்பதற்கு மாதவராவை உடன் அழைத்துச் சென்றனர்.

ஆகவே, அவர் மூலமாகத்தான் பாபாவின் கைகளில் தக்க தருணத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. பாபாவுக்குப் புத்தகத்தின் மஹிமையை மட்டுமின்றி, பக்தரின் ஆன்மீகப் பரிணாமநிலையும் தெரிந்திருந்தது.

பக்தர்கள் புத்தகங்ளை பாபாவின் கைகளில் வைப்பர். பாபா புத்தகங்களை மேலிருந்த வாரியாகப் புரட்டுவார். அதன் பிறகு, பக்தர்கள் புத்தகங்ளை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகக் கைநீட்டுவர்.

ஆனால், பாபா பல சந்தர்ப்பங்களில் புத்தகங்களை பக்தர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டார். மாறாக, புத்தகங்களை மாதவராவிடம் கொடுத்து, "சாமா, இந்தப் பிரதிகளை வைத்துக்கொள். தற்சமயம் இவை உன்னிடமே இருக்கட்டும்" என்று சொல்லிவிடுவார்.

சாமா பட்டவர்த்தனமாகவே (வெளிப்படையாகவே )வினவுவார், "ஆர்வத்துடன் கை நீட்டிய இவர்களுடைய புத்தகங்களை திருப்தியளித்து விடட்டுமா?" அப்பொழுதும் பாபா சொல்வார், "நீயே வைத்துக்கொள்."