valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday, 26 September 2018

                                                                 ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றொரு பக்தருடைய தற்கொலை முயற்சி சாமர்த்தியமான திட்டமொன்றால் முறியடிக்கப்பட்டது. அவரைக் கடைசி நிமிடத்தில், எதிர்பாராதவிதமாக, மரணத்தின் வாயிலில் இருந்து வெளியே இழுத்து நல்வாழ்வளித்தார் பாபா. இது எவ்வாறு நிகழ்ந்ததென்று விவரமும் கடந்த அத்தியாயத்தில் அளிக்கப்பட்டது.

இந்த அத்தியாயத்தில், பக்தர்களுக்கு அருள் செய்வதிலும் அவர்களுக்கு சந்தோஷமும், திருப்தியும் அளிப்பதிலும் அவர்களை மேன்மையுறச் செய்வதிலும் பாபா பிரீதியடைந்த விவரம் சொல்லப்படும்.

பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனைடையும் பக்தருக்கு தீட்ச்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்கு கேலிக்கும் சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. கேட்பவர்கள் இதை நுணுக்கமாக கவனியுங்கள்.

உபதேசம் அளித்ததும் அருள்மழை பொழிந்ததும் அநேக ரீதிகளில் நடந்தன. இதை ஏற்கனேவே இந்நூலில் விவரித்திருக்கிறேன். யாரால் எதை கிரகிக்க (சாரம் வாங்க) முடிந்ததோ, அந்த வழி அவருக்கு உபதேசிக்கப்பட்டது.

வைத்தியர்தான் நோயின் தன்மையையும் மருந்தின் குணத்தையும் அறிவார். இவ்விரண்டையுமே அறியாத நோயாளியோ வெல்லம் தின்னவேண்டுமென்று விரும்புகிறார்.

வெல்லம் இனிப்புதான்; சந்தேகமில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயாத்தை குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முதலில் வெல்லக் கட்டி வைக்கப்பட வேண்டும்!

நோயாளியிடம் பலாத்காரம் செல்லுபடியாகாது. ஆகவே, வைத்தியர் ஒரு யுக்தி செய்து, முதலில் வெல்லக்கட்டியையும் பிறகு கஷாயத்தையும் கொடுக்கிறார். இவ்வாறு வைத்தியர் காரியத்தை சாதித்து விடுகிறார்.

வெல்லத்தின் தோஷத்தை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறே!

ஆயினும், இப்படித்தான் ஒவ்வொருமுறையும் செய்தாரென்றில்லை. அவருடைய தீட்சை அளிக்கும் முறையைக் குறிப்பிட்ட பக்தரின் மனோதர்மம், பக்தி, சேவை, பிரேமை, விசேஷ குணம் இவற்றுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தார்.

பாபாவின் அற்புதமான லீலைகள் திகைப்பூட்டக் கூடியவை! யாரிடமாவது பிரயமேற்பட்டால், அவருக்கு தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்வார். அவ்வாறு செய்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளை பற்றிக் கேளுங்கள்.

யாருக்காவது அனுக்கிரஹம் செய்யவேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பத்தப்பட்ட பக்தர் அதுபற்றி கனவிலும் நினைத்திருக்கவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும் சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார். இதுவும் அதிகப் பிரயாசையின்றி நகைச்சுவைக்கும் கேலிக்கும் இடையே நடந்துவிடும். 


Thursday, 20 September 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

குருவினிடத்தில் பக்தி பாவமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உல் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம்) வெல்ல முடியாது. அஷ்டபாவங்களை அடையவும் முடியாது.

பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வெளவுக்கு எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வவளக்கு அவ்வளவு குரு குதூகலம் அடைகிறார்; பக்தனைக் கொண்டாடுகிறார்.

'தேகம், வீடு, மனைவி, மக்கள் - இவையனைத்தும் என்னுடையவை' என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப் போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.

இந்த மாயையின் சுழலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று விரும்புவர் வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்துவிட வேண்டும்.

மாயையின் மர்மத்தை முடிச்சவிழ்க்க முயன்ற வேத சாஸ்திரங்கள் கையை விரித்துவிட்டன. சிருஷ்டி அனைத்திலும் இறைவனை காண முடிந்தவரே மாயையை வெல்ல முடியும்.

நிஜாம் ராஜ்யத்தில் இருந்து பக்கீர் சாயியைத் தம்முடன் முதலில் நெவாஸாவுக்கு அழைத்துவந்த சாந்த் பாய் பாடீல் பாக்கியசாலி.

அங்கே பக்கீர் சாயி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாசம் செய்தார். அங்கேதான் அவர் காணட் கிராமவாசியான கமா என்பவருடன் சகவாசமாக இருந்தார்.

இருந்தபோதிலும், சிறிதுகாலம் கழித்து, கமாவும் பிரசித்தி பெற்ற டாக்ளீ கிராமத்தைச் சேந்த தகடூ தாம்போலியும் (தாம்பூல வியாபாரியும்) பாபுவுடன் நெவாஸாவில் இருந்து ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.

நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிதமாக இருக்கின்றன. ஆயினும், சாயி பக்தர்களுக்கு ஷிர்டியே மிக பவித்திரமானது.

இந்த யோகம் நேர்ந்திராவிட்டால் (பாபாவின் ஷீர்டி வருகை) தீனர்களாகிய நமக்கு அவருடைய கூட்டுறவு எப்படிக் கிடைத்திருக்கும்? இது நம்முடைய கிடைத்ததற்கரிய பெரும் பேறன்றோ!

பக்தர்களில் எவரெல்லாம் முழுமையாக சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லாருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார்.

ஆகவே, கதை கேட்பவர்களே! ஊன்றிய மனதுடன் சத் சரித்திரத்தை படியுங்கள். சாயியின் புண்ணிய சரித்திரமே அவரருளை பெறச் சிறந்த வழியாகும்.

கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருக்கு குலகுருவினிடம் இருந்த விசுவாசம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் மற்றொருவருக்கு அக்கல்கோட் சுவாமியை பற்றிய சூசகம் அளிக்கப்பட்டு அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதும் விவரிக்கப்பட்டது. 

Thursday, 13 September 2018

                                                    ஷீர்டி சாயி சத்சரிதம்

                                          27 . அருட்பெருக்கு - உபதேசம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

சத் குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பர ப்ரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.

சமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோ! அதுபோலவே, குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம்.

ஜய ஜய சத் குரு சாயி! சாயுஜ்ஜிய முக்தி (இறையுடன் ஒன்றிய நிலை) அளிக்கும் கல்பதருவே ஜய ஜய! சத்திய ஞானக் கடலே ஜய ஜய! கதை கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் கேட்க வேண்டுமென்ற உணர்வை ஊட்டுமாறு வேண்டுகிறேன்.

சாதகப்பட்சி மேகத்தில் இருந்து விழும் நீர்துளிகளாகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் இந்த அமிருத மயமான கதைக்காக காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களுக்கும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாக !

தங்களுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்து கொட்டட்டும். பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் உமது பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;-

அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சிலிர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணச்சிவசப்பட்டு விம்மி விம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;-

(கதை கேட்பவர்களுடைய) பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் நலியட்டும். தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர்.

குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்கு புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் சத் குருவை தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காண முடியாது.  


Thursday, 6 September 2018

                                                               ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆம்ப்ட்டேக்கரின் தந்தை அக்கல்கோட் சுவாமியின் சிறந்த பக்தராக விளங்கினார். இவ்வனுபவத்தின் மூலமாக, அவ்வழிபாடு தொடர்ந்து அது மாதிரியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் பாபா அறிவுறுத்தினார்.

இவ்விதமாகக் காலப்போக்கில் எல்லாம் நல்லபடியாக நடந்தன. கெட்டகாலம் கழிந்தது. ஆம்ப்ட்டேக்கர் பெருமுயற்சி செய்து ஜொலித்திடம் கற்றுக்கொண்டார். அதற்கான பலனும் கிடைத்தது.

சாயிகிருபையாகிய பிரசாதத்தை பெற்ற அவருக்கு நல்ல காலம் பிறந்தது. ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்றார். பழைய வறுமை பறந்தோடியது.

குருவினிடம் பிரேமை வளர்ந்தது. செல்வச் செழிப்பும் சந்தோஷமும் பின் தொடர்ந்தன. குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் நிலவின. எல்லாவிதத்திலும் ஆனந்தமுடையவராக வாழ்ந்தார்.

ஒன்றைவிட மற்றொன்று சுவையில் மீறும் இம்மாதிரியான லீலைகள் எண்ணிலடங்கா. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், கிரந்தம் (நூல்) மிக விஸ்தாரமாக ஆகிவிடும். ஆகவே, சாரத்தை மட்டும் சொல்கிறேன்.

ஹேமாட் சாயி பாதங்களில் சரணடைகிறேன். பாபா விஷ்ணு சஹஸ்ர நாமத்தை (புத்தகத்தை) சாமாவுக்கு அன்பளிப்பாகத் தந்த சுவையான நிகழ்ச்சியை அடுத்த அத்தியாயம் விவரிக்கும்.

சாமா, 'வேண்டா, வேண்டா' என்று சொன்ன போதிலும், அவர் மீதிருந்த அளவற்ற பிரேமையால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் சுந்தரமான மஹாத்மியத்தை வர்ணித்த பின், அதை சாமாவின்மீது பாபா திணித்தார்.

சிஷ்யனுக்கு இச்சை இல்லாமலிருந்த போதிலும், அனுக்கிரஹம் செய்யக்கூடிய சமயம் வந்தபோது உபதேசம் அளித்த பாபாவின் கருணையை அடுத்த அத்தியாயத்தில் காணலாம். அக் கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

அத்தியாயத்தின் முடிவில், சத்குரு உபதேசம் செய்யும் முறை எவ்வளவு விசித்திரமானது என்பதும் விளங்கும். செவிமடுப்பவர்களே! கவனத்துடன் கேளுங்கள்.

மங்களங்களுக்கெல்லாம் மங்களமான சாயி தலைசிறந்த குணங்களின் சுரங்கம். அவருடைய புனிதமான கதையைக் கேட்கும் வாய்ப்பை பாக்கியவான்களே பெறுகின்றனர்!

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'குலகுருவிடம் விசுவாசத்தை நிலைபெறச் செய்த செம்மை - காக்காய் வலிப்பு நோய் தீர்த்த அருள் - தற்கொலை முயற்சியை தடுத்தாட்கொண்ட கருணை' என்னும் இருபத்தாறாவது அத்தியாயம் முற்றும்.

                           ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                        சுபம் உண்டாகட்டும்.   

 

Thursday, 30 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

வியாதிகளில் இருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் அவர் அக்கல் கோட் மஹாராஜருக்குப் பல தினங்கள் சேவை செய்தார். துன்பத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மனம் கலங்கி  சோகத்தில் ஆழ்ந்தார்.

ஆத்மஹத்தி (தற்கொலை) செய்துகொள்வது என்று நிர்ணயம் செய்துகொண்டு, இரவு நேரத்தில் சுற்றிலும் நிசப்தமாக இருந்தபோது ஒரு கிணற்றிற்குச் சென்று அதனுள் குதித்து விட்டார்.

திடீரென்று அக்கல்கோட் மஹராஜ் அங்கே தோன்றினார். தம்முடைய கைகளாலேயே பக்தரை வெளியே கொண்டுவந்து போட்டார்; உபதேசமும் செய்தார். "எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீர வேண்டும்.-

"நம்முடைய பூர்வஜென்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வலியாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?-

"மேலும், துன்பத்தையும் வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும். ஆகவே, இந்தத் துன்பத்தை இன்னும்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அளித்துக் கொள்ளாதே."

தம்முடைய மனநிலைக்கு மிகப் பொருத்தமான இக் கதையைப் படித்த ஆம்ப்டேகர் மெய்சிலிர்த்துப் போனார். உடனே, "எங்கும் நிறைந்திருக்கும் பாபாவின் சமூகத்தில் நாம் இக் காரியத்தைச் செய்யத் துணிந்தோமே ' என்று நினைத்து மனம் நொந்தார்.

ஆம்ப்டேகர் உடைய மனதிற்கு, 'விதிக்கப்பட்டதை அனுபவித்தே தீர வேண்டும்' என்பது நன்கு விளங்கியது. சரியான சமயத்தில் அதுவே குறிப்பாக அருளப்பட்டது. தாம் செய்ய நினைத்த சாகச செயல், தமக்கு நன்மை தரக்கூடியதன்று என்பதும் தெளிவாகியது.

அவர் படித்த கதை, உண்மையில் வானத்தில் இருந்து தோன்றிய அசரீரியே. செயற்கரிய செயலான இந்த லீலையைக் கண்ட ஆம்பிடேகருக்கு சாயி பாதங்களில் நம்பைக்கையும் விசுவாசமும் மேலும் பலப்பட்டன.

சற்றும் எதிர்பாராத  வகையில், சற்குணமேரு நாயக்கரின் வாய்மொழி மூலமாகவும் போதி புத்தகத்தின் மூலமாகவும் வந்த எச்சரிக்கை, கொஞ்சம் தாமதப்பட்டிருந்தாலும் அவருடைய ஜென்மமே அழிந்துபோயிருக்கும்.

அவர் நினைத்தார், "என்னுடைய உயிரே போயிருக்கும். என்னுடைய குடும்பத்திற்குப் பெரும் தீங்கும் என் மனைவிக்குத் தாங்கொணாத கஷ்டங்களும் விளைந்திருக்கும். இகத்திலும் பரத்திலுமாக இரட்டை நஷ்டம் அடைந்திருப்பேன்.-

"சகுணமேரு நாயக்கரின் மனத்தைத் தூண்டிவிட்டுப் போதியைக் கருவியாக வைத்துத் தற்கொலைத் திட்டத்தில் இருந்து என்னை மனம் மாற வைத்திருக்கிறார் பாபா. "

அவ்வாறு நிகழ்ந்திராவிட்டால், அந்த ஏழை (ஆம்டேகர்) வீணாக மரண மடைந்திருப்பார். ஆனால், சாயியை போன்ற ரட்சகர் இருக்கும்போது சாவு எப்படி நெருங்கும்?


Thursday, 9 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

1916 ஆம் ஆண்டில் அவருடைய துன்பங்களும் வாழ்க்கையின் மீது வெறுப்பும் உச்சநிலையை எய்தின. புனிதமான ஷிர்டியிலேயே பிராணனை விட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.

அச்சமயத்தில் அவர் குடும்பத்துடன் ஷிர்டியில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். ஓரிரவு என்ன நடந்ததென்று கேளுங்கள்.

தீக்ஷிதர் வாடாவுக்கு எதிரே நிறுத்தியிருந்த ஒரு மாட்டு வண்டியின் மேல் ஆம்ப்ட்டேகர் உட்கார்ந்திருந்தார். மனத்துள்ளே கட்டுக்கடங்காத எண்ணங்கள் ஓடின.

ஆர்வம் இழந்துபோய் மனமுடைந்து வாழ்க்கையையே வெறுத்தார். அவர் எண்ணினார், "போதும், போதும், இந்தத் துன்பங்கள். எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது."

இவ்வாறு நினைத்து வாழ்க்கையையே வெறுத்து ஆம்ப்ட்டேகர் கிணற்றில் குதித்துவிடத் தயாரானார்.

அவர் நினைத்தார், "யாரும் அருகில் இல்லை. அமைதியான இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வேன். துன்பங்களில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் விடுபடுவேன்."

தற்கொலை செய்துகொள்வது மஹாபாவம்; ஆயினும் அவர் இந்த உறுதியான முடிவை எடுத்தார். ஆனால், சூத்ரதாரியான சாயி பாபா இந்த மூடத்தனமான செயலைத் தடுத்துவிட்டார்.

ஆம்ப்ட்டேகர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில், உணவுவிடுதி முதலாளியான சகுணமேரு நாயக்கரின் வீடு இருந்தது. சகுண, பாபாவின் நெருங்கிய பக்தர்; சேவகர்.

சகுண திடீரென்று வீட்டின் வாயிற்படிக்கு வந்து, உடனே ஆம்பிடேகரை வினவினார். "அக்கல்கோட் மஹாராஜின் இந்த போதியை (புராணம்) நீர் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீரா?"

"எங்கே? பார்க்கிறேன்; பார்க்கிறேன்!" என்று சொல்லிக்கொண்டே ஆப்பிடேக்கர் ஆர்வத்துடன் அப் புத்தகத்தை கையில் வாங்கி கொண்டார். மேலெழுந்த வாரியாக ஒரு முறை புரட்டினார். பிறகு, நடுவில் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

கர்மமும் தர்மமும் நன்கு பிணைந்தது போல (அதிர்ஷ்டவசமாக), அவர் எடுத்துக் படிக்க ஆரம்பித்த பகுதி அவருடைய அந்தரங்கமான எண்ணங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்படி இருந்தது; மின்னலைப்போல் அவருடைய மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆம்டேகர் தற்செயலாக படிக்க நேர்ந்த கதையை இப்பொழுது விவரிக்கிறேன்; எல்லாரும் கேளுங்க. இந்நூல் பெரிதும் விரிந்துவிடும் என்ற பயம் காரணமாகச் சுருக்கமாக சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன்; கேளுங்கள்.

அகமுக நிட்டையில் சிறந்த ஞானியான மஹாராஜ் அக்கல்கோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவருடைய பக்தர்களில் ஒருவர் கடுமையான வியாதிகளால் பீடிக்கப்பட்டு பொறுக்கமுடியாத அளவிற்கு துன்பத்திலாழ்த்தப்பட்டார். 


Thursday, 2 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

தாயாரிடமிருந்து இக் கதையைக் கேட்ட பிதலே பரமானந்தம் அடைந்தார். சாயியின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையும் தரிசனத்தால் விளைந்த நன்மையும் அவருடைய மனத்தில் அழியாத முத்திரை பதித்துவிட்டன.

தாயாரின் அமிருதமயமான வார்த்தைகள், பல ஆண்டுகளாக நசித்துப்போன தெய்வபக்தியை புத்துயிர் பெறச் செய்தன. பிராயச்சித்தம் (பாவத்தை போக்குவதற்கான சடங்கு) செய்யவேண்டுமென்ற மனோபாவமும் பச்சாதாபமும் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுத்தன.

ஆகவே, எது நடக்கவேண்டுமோ அது நடந்துவிட்டது! தூங்கிக்கொண்டிருந்த தமது கடமையுணர்வை  சாயி பாபா எழுப்பிவிட்டது பற்றி பிதலே மிக்க நன்றியுடைவரானார். தம்முடைய கடமைகளை செய்வதில் கண்ணுங்கருத்தமாக வாழ்க்கை நடத்தினார்.

இப்பொழுது அதே போன்ற இன்னொரு நிகழ்ச்சிபற்றி சொல்கிறேன்; நிறைந்த மனத்துடன் கேளுங்கள். கட்டவிழ்ந்து தெறித்தோடிய பக்தர்களின் மனத்தை பாபா எவ்வாறு அடக்கி அமைதியுறச் செய்தார் என்பதை இக்காதை காட்டும்.

கோபால் ஆம்ப்ட்டாகர் நாராயண் என்றொரு சிறந்த பக்தர் பூனாவில் வாழ்ந்து வந்தார். அவருடைய கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

அவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் கலால் வரி இலாகாவில் (Excise Department ) உத்தியோகம் பார்த்து வந்தார். பாத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு உத்தியோகத்தை விட்டுவிட்டு, வேறு வேலை ஏதும் பாராமல் வீட்டிலேயே இருந்தார்.

அவருக்கு கெட்டகாலம் தொடங்கியது. வாழ்நாள் முழுவதும் சீராக ஒரே மாதிரியாக அமையுமோ? நவகிரகங்கள் விளைவித்த சுழற்சியில் மாட்டிக்கொண்டார். யார்தான் விதியின் பயனை அனுபவிக்காது தப்பிக்க முடியும்?

அவர் ஆரம்பகாலத்தில் தானே ஜில்லாவில் வேலை செய்தார். பிறகு, ஜவஹர் ஜில்லாவில் வேலை செய்ய நேர்ந்தது. அங்கு அவர் ஆஃபீசராக உத்தியோகம் பார்த்தார். பிறகு வேலையே இல்லாமல் போய்விட்டது.

உத்தியோகம் என்பது தாமரை இலையின்மேல் ததும்பும் நீர்த்துளி அன்றோ! அது எவ்வாறு பழைய இடத்துக்கே திரும்பும்? அந்த சமயத்தில் தீவிரமாக பிரயத்தனங்கள் செய்தார்.

ஆனால், அவருக்கு அதிருஷ்டமில்லை! ஆகவே, அவர் தமது சுதந்திரத்தை காத்து கொள்வதென்று முடிவு செய்தார். துன்பத்திற்குப் பின் துன்பம் தொடர்ந்தது; அவர் எல்லாவிதத்திலும் சோர்வடைந்து விட்டார்.

வருடாவருடம் நிதிநிலைமை படிப்படியாக க்ஷணமடைந்தது.(நசித்தது). ஆபத்துகள் வரிசையாக தொடர்ந்தன. குடும்ப நிலைமை சகிக்கமுடியாதபடி ஆகிவிட்டது.

ஏழு ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. ஒவ்வோர் ஆண்டும் ஷிர்டிக்குச் சென்று பாபாவிடம் தம்முடைய துன்பங்களை பற்றி ஒப்பாரி வைத்தார். இரவுபகலாக பாபாவை வணங்கினார்.