valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 April 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாவாசிப்பாயி ஒரு தமாஷான பெண்மணி. இந்த வாய்ப்பைச் சிக்கென பற்றிக்கொண்டு சொன்னார், "ஓ, இந்த அண்ணா எவ்வளவு சபலபுத்தியுடையவன்! முதலில் என்னிடம் ஒரு முத்தம் கேட்கிறான்! -

"என்னை முத்தமிட விரும்புகிறாய், தலை நரைத்துப்போன உனக்கு வெட்கமாக இல்லை?" இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அண்ணா சிஞ்சணிகர் சண்டைக்கு கிளம்பினார்.

"வயோதிகனும் வலுவிழுந்தவனுமாகிய நான் அத்தகைய மூர்க்கனா, பைத்தியக்காரனா? நீயே வலிய வந்து என்னைச் சண்டைக்கு இழுக்கிறாய்; சண்டை போடவும் ஆர்வம் காட்டுகிறாய்!"

அவர்கள் இருவர் மீதும் அன்பும் பரிவும் கொண்ட பாபா, ஒரு சண்டை மூள்கிறதென்று தெரிந்து இருவரையும் சமரசப்படுத்த ஒரு சாமர்த்தியமான யுக்தியைக் கையாண்டார்.

ப்ரேமையுடன் அவர் கூறினார், "ஓய் அண்ணா, எதற்காக இந்த அவசியம் இல்லாத கூப்பாடு? தாயை முத்தமிடுதல் தவறென்ன என்று எனக்கு விளங்கவில்லையே".

சச்சரவு செய்தவர்கள் இருவருமே வெட்கித் தலை குனிந்தனர். ஏற்கெனவே பேசப்பட்ட கேலியும் கோபமான பதிலும் அசைவற்று நின்றன. நகைச்சுவையை அனுபவித்த சிரிப்பொலி எங்கும் பரவியது. குழுமியிருந்தவர்கள் அனைவருமே நகைச்சுவை ததும்பிய இந்த நிகழ்ச்சியை ரசித்தனர்.

இக் காதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக தோன்றலாம். ஆயினும், ஒரு வாக்குவாதத்தை முடித்துவைக்கப் பலவிதமான யுக்திகள் இருக்கின்றன என்பதை இக்காதை வெளிப்படுத்துகிறது என்னும் காரணத்தால், புத்திக்கூர்மையுள்ள கதை கேட்பவர்கள் இதன் மதிப்பை உணர்வார்கள்.

சச்சரவு செய்தவர்களுக்கு ஒரு தாய்க்கும் மகனுக்கும் உரிய அன்பு இருந்திருந்தால், இவ்விதமான தண்டா எழுந்தே இருக்காது; கோபத்திற்கு எங்கே இடம்?

பிரம்படி வாங்கிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் மகிழ்ச்சியால் பூரித்துச் சிரிக்கலாம்; மென்மையான மலரால் அடிக்கப்படும் பொழுது கண்ணீர் பெருக்கலாம்! உள்ளுக்குள் ஏற்படும் அனுபவமே மனக்கிளர்ச்சி அலைகளாக வெளிப்படுகிறது. இந்த அனுபவம் எல்லாருக்கும் பொதுவன்றோ?

பாபாவினுடைய சகஜமான யுக்தி அற்புதமானது! அவருடைய வார்த்தைகள் சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக அமைந்ததால், கேட்டவர்கள் திருப்தியடைந்தது மட்டுமல்லாமல் போதனையையும் மின்னலெனப் புரிந்துகொண்டார்கள்.

பிறிதொரு சமயத்தில் இதேபோன்று பாபாவின் வயிறு உக்கிரமாக பிசைந்து விடப்பட்ட நேரத்தில், பாபாவின் சிறந்த பக்தர்களில் ஒருவர் சேவை அதீதமாக (மிகையாக) இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு இரக்கம் கொண்டார்.

"அம்மையே, கொஞ்சம் தயவு காட்டுங்கள்! இவ்வளவு கடுமையாகவா உடலைப் பிடித்துவிடுவார்கள்? உங்களிடம் கொஞ்சம் கருணை இருக்கட்டும். பாபாவின் ரத்த நாளங்கள் வெடித்துவிடும் போலிருக்கிறதே!"

இந்த வார்த்தைகள் காதில் பட்டவுடனே பாபா தம்முடைய இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்தார். சட்காவைக் கையில் எடுத்து பூமியின் மேல் பலமாக அடித்தார்.  


Thursday, 12 April 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

அண்ணா சிஞ்சனிகருக்கு ஐம்பது வயதிற்குமேல் ஆகியிருந்தது; பற்கள் விழுந்துவிட்டன. மாவசிப்பாயியும் வயதானவர்; முதிர்ச்சியடைந்தவர். இருவருக்குமிடையே தான் தண்டா எழுந்தது.

அண்ணா சிஞ்சானிகர் பாபாவுக்கு சேவை செய்ய ஷிர்டியில் தம் மனைவியுடன் வசித்துவந்தார். வயது முதிர்ந்த மாவசிப்பாயி ஒரு விதவை. பாபாவின் வயிற்றை பலமாகப் பிசைந்துவிட்டு வேகத்தில் மாவாசிப்பாயிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

நிர்மலமான மனமுடைய மாவசிப்பாயி, பாபாவுக்கு சேவை செய்வதில் தம்முடைய பலத்தையெல்லாம் காண்பித்தார். தம்முடைய இரு கைகளையும் சேர்த்துக்கொண்டு பாபாவின் வயிற்றை உக்கிரமாகப் பிசைந்துவிட்டார்.

பாபாவுக்கு பின்னால் உறுதியாக நின்று கொண்டு அவருடைய வயிற்றை இரு கைகளாலும் மாற்றி மாற்றி அமுக்கி பிசைந்தார். அவருடைய செய்கை, பார்ப்பதற்கு தயிர் கடைவதுபோல இருந்தது.

சாயி நாமத்தை ஜபம் செய்வதிலேயே மனத்தைப் பறிகொடுத்த மாவாசிப்பாயி, பயமேதுமின்றி வயிற்றை அமுக்கியும் பிசைந்தும் செய்யும் சேவையைத் தொடர்ந்தார். பாபாவும் வலியோ அசௌகரியமோ ஏதும் இருந்ததாகக் காட்டவில்லை. நல்லாரோக்கியத்திற்கு உதவும் செயலாகவே இதை ஏற்றுக்கொண்டார்.

ஆயினும் இது வயிற்றையும் முதுகையும் ஒன்றாய்க்கிவிடுவது போன்ற அசாதாரணமான மசாஜ்தான்! இந்த சேவை மாவாசிப்பாயிக்கு பாபாவிடம் இருந்த பிரேமையைத்தான் வெளிப்படுத்தியது. ஆயினும், பார்ப்பவர்கள் பாபா அவதிப்படுவது கண்டு இரக்கம் கொண்டனர்.

தம் மீது இருக்கும் கபடமற்ற அன்பால் விளைந்ததென்று அறிந்து, பாபா இம்மாதிரியான கடுமையான சேவைகளை ஏற்றுக்கொண்டார். இதன் மூலமாக அவர்கள் தம்மை என்றென்றும் நினைவில் வைத்துக்கொண்டு க்ஷேமத்தை அடையட்டும் என்றெண்ணினார்.

ஒரு ஞானியின் சங்கத்தில் இருக்கும் பேற்றை அடைய நாம் என்ன பெரிய தவம் செய்துவிட்டோம்? ஒன்றும் இல்லையே ! எந்த பக்தனையும் ஒதுக்கிவிடாத தீனவஸ்தலரான சாயியின் கருணையன்றோ இதற்கு காரணம்!

மசாஜ் செய்யும்பொழுது மாவாசிப்பாயி காட்டிய திறமைதான் என்னே! அவருடைய பலம் வாய்ந்த இயக்கத்தால் பாபா மேலும் கீழுமாக போய் வந்தார். அவ் வம்மையாரும் அவ்விதமே அசைந்தார்.

அண்ணா சிஞ்சணிகர் என்னவோ, மறுபக்கத்தில் லேசாகக் குனிந்தவாறு தம்முடைய சேவையைச் சீராகச் செய்துகொண்டிருந்தார். தம்முடைய சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த மாவாசிப்பாயிக்கு தம்முடைய முகமும் விசையுடன் மேலும் கீழும் போய்வந்து கொண்டிருந்தது தெரியவில்லை. இதனால் என்ன நடந்ததென்று கேளுங்கள்.

சேவை செய்ய வேண்டுமென்கிற தீவிர ஆவலால் உந்தப்பட்ட மாவாசிப்பாயிக்கு பாபாவின் வயிற்றைப் பிசைந்து விட்டதில் பரம திருப்தி ஏற்பட்டது. ஆயினும் சேவை செய்யும் உற்சாகத்தில் அவர் ஆடிய ஆட்டத்தில் , தலை ஒரு பக்கமாகச் சாய்ந்து அண்ணா சிஞ்சணிக்கரின் தலையை உரசியது! 


Thursday, 5 April 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

கோபக்காரரான இவர் கடுஞ்சொல்லர்; இதமாகப் பேசத் தெரியாதவர். தாம் பேசுவது நல்லதா, கெட்டதா - முறையானதா, முறையற்றதா - என்று யோசியாமல், மற்றவர்களுடைய மனம் புண்படுவதுபற்றிக் கவலைப்படாமல் தமக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகவும் கபடமற்றும் கொட்டிவிடுவார்.

இயற்கையாகவே முரடரும் கண்டிப்பு மிகுந்தவருமாகிய இவர், மிக நேர்மையானவர்; யோக்கியவர்; வஞ்சனை தெரியாதவர்; சாத்விகர். ஆனால் செயல்பாட்டில், எப்பொழுது வெடிக்குமோ என்று பயப்பட வேண்டிய, தோட்டாக்கள் நிரம்பிய கைத்துப்பாக்கியை ஓத்திருந்தார்.

எல்லாச் செயல்களையும் 'தடபுட' வென்று செய்துவிடுவார். எதுவும் அங்கேயே, அப்பொழுதே, முடிய வேண்டும். தள்ளிப்போடுவது கடன் என்ற பேச்சோ கிடையாது. மற்றவர்களைப்பற்றிய சிந்தனையே இல்லாது, எல்லா விவகாரங்களிலும் தயவு தாட்சண்ணியம் பார்க்காது நேரம் தவறாது செயல்பட்டார்.

எரியும் தணலையும் கையிலேந்தி விடலாம்; அண்ணா சிஞ்சணிக்கரின் சுபாவத்தை எதிர்கொள்ள முடியாது. இவ்வளவு முரட்டுத்தனமான மனிதராக இருந்தாலும் அவர் கபடமற்றவர்; நேர்மையானவர். இக் காரணம் பற்றியே பாபா அவரிடம் ப்ரீதி கொண்டிருந்தார்.

ஒருநாள் பிற்பகல் நேரத்தில், பாபா தம்முடைய இடக்கையை மரக்கிராதியின் மேல் வைத்துக்கொண்டு மசூதியில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி மக்கள் கூடியிருந்தனர்.

பாபா அம்மாதிரியான நேரங்களில், என்ன நடக்கிறது என்பதில் ஆர்வமில்லாதவர் போன்றும் எதிலும் ஈடுபடாதவர் போன்றும் அமைதியாக உட்கார்ந்திருப்பார். ஆனால், யாருமே அறியாத வகையில் பக்தர்களுக்கிடையே சச்சரவு மூட்டிவிடுவார். சம்பந்தப்பட்டவர்கள் சிடுசிடுப்புடன் அவ்விடத்தில் இருந்து வெளியேற முயல்வர். கடைசியில் இருதரப்பினரையும் பாபா சமரசம் செய்துவிடுவார்.

சில பக்தர்கள் அவருடைய உடலின் இரு பக்கங்களையும் பிடித்துவிடுவார். சிலர் பாதசேவை செய்வர். சிலர் முதுகையும் சிலர் வயிற்றுப் பகுதியையும் மசாஜ் செய்துவிடுவர். எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் பாபாவுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்பினர்.

பாபா ஒரு பால பிரம்மச்சாரி; ஊர்துவரேதசர் (விந்து மேல்நோக்கியே செல்லும் தன்மையுடையவர்); தூய நடத்தையுள்ளவர். ஆகவே, அவர் ஆடவர்கள் பெண்மணிகள் இருபாலாரையுமே தமக்கு சேவை செய்ய அனுமதித்தார்.

அண்ணா சிஞ்சணிகர் மரத்தாலான கிராதிக்கு வெளியில் நின்றுகொண்டு குனிந்து மெதுவாக பாபாவின் இடக்கையை பிடித்துவிட்டு கொண்டிருந்தார். வலப்பக்கம் என்ன நடந்தது என்பதை கவனமாக கேளுங்கள்.

அங்கு ஒரு பெண்மணி இருந்தார். பாபாவிடம் அனன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத) பக்தி கொண்டவர். பாபா அவரை 'அம்மா' என்று அழைப்பார். மற்றவர்கள் மாவாசிப்பாயி (தாயுடன் பிறந்தவர்) என்று அழைத்தனர்.

மாவாசிப்பாயி என்று மக்களால் விரும்பி அழைக்கப்பட்டாலும், அவருடைய இயற்பெயர் வேணுபாயி கௌசல்கி. சாயி பாதங்களில் ஈடிணையற்ற பக்தி கொண்டிருந்தார். 


Wednesday, 28 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

சுதாமனின் பதிலைக் கேட்டு சர்வ வியாபியான பகவான் ஸ்ரீகிருஷ்ணன், "ஓ, அப்படியா! எனக்கும் அம்மாதிரியே கனவொன்று வந்தது!-

"மற்றொருவருக்கு உரியதை ஒருவர் தின்று கொண்டிருந்தபொழுது, என்ன தின்கிறீர் என்று உடையவர் கேட்டார். தின்று கொண்டிருந்தவர் எரிச்சலடைந்து, 'ஆ, நான் இதைத் தின்கிறேன் - இந்த மண்ணைத் தின்கிறேன்' என்று பொய் சொன்னார். பளிச்சென்று 'அப்படியே ஆகட்டும் ' என்று பதில் வந்தது. -

"ஆனால் தாதா! இதெல்லாம் ஒரு கனவுக்கு காட்சிதான். என்னை விட்டுவிட்டு நீ எப்பொழுதாவது எதையாவது தின்பாயா? என்ன தின்கிறாய் என்று உன்னைக் கேட்டபொழுது நான் கனவு நிலையில் இருந்தேன் போலும்".

சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வருவதற்குமுன் ஸ்ரீகிருஷ்ணன் புரிந்த லீலைகளை சுதாமன் அறிந்திருந்தால், இம்மாதிரியான பெருங்குற்றத்தை செய்து அதன் விளைவாக பிற்காலத்தில் கஷ்டத்தை அனுபவித்திருக்கமாட்டான்.

இதன் விளைவு சாதாரணமாதா என்ன? இல்லவேயில்லை! அவர் கொடுமையான வறுமையில் வாட நேர்ந்தது. ஆகவே, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் தாம் மாத்திரம் தின்பவர்கள் இதை நினைவில் வைக்க வேண்டும்.

சுதாமர் ஒரு பக்தர்; ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர். ஆயினும், தார்மீக நெறியில் இருந்து சிறிது புரண்டதற்காகவே உலக வாழ்வில் வறுமையில் உழல வேண்டியதாயிற்று.

அதே சுதாமர் (குசேலர்), தம் மனைவி கஷ்டப்பட்டுச் சேகரித்த ஒரு பிடி அவளை ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தபோது, பரமாத்மா மனம் மகிழ்ந்து சுதாமாருக்கு சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளித்தார்.

இப்பொழுது, மகத்தான போதனையை உள்ளடக்கிய காதை ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள். அது ஆரம்பித்தில் விநோதமாகவும் நகைச்சுவையுள்ளதாகவும் இருப்பினும், முடிவில் சிறந்த போதனையை அளிக்கும்.

சிலருக்கு, அறநெறிப் போதனைகள் பிடிக்கும்; சிலருக்குத் தர்க்கமும் யுக்தியான வாதங்களும் பிடிக்கும்; இன்னும் சிலர் நகைச்சுவையையும் நையாண்டியையும் விரும்புவர். எல்லாருமே மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புகின்றனர் அல்லரோ?

இதுவும் ஒரு வகையில் ஹாஸ்யமும் கேலியும்தான். பிடிவாதக்காரர்களான ஒரு பெண்மணிக்கும் ஒரு பெரிய மனிதருக்கும் இடையே சாயியின் தர்பாரில் ஒரு தண்டா (சச்சரவு) எழுந்தது. கடைசியில் இந்தத் தண்டா யார் மீதும் பழி ஏற்படாதவாறு சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டது.

இக்கதை பரம சுவாரசியமானது; கேட்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பக்தையும் பக்தரையும் சச்சரவு செய்தபொழுது கேலியும் சிரிப்பும் உல்லாசமும் உச்சத்தை எட்டின.

அண்ணா சிஞ்சணிகர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட தாமோதர் கனச்யாம் பாபரே என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் இருந்தார். இவர் பாபாவிடம் எல்லையற்ற பிரேமை வைத்திருந்தார். 


Thursday, 22 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

நாம் இந்தக் காதையின் சாரமென்ன என்று சிந்திப்போம். ஐம்புலன்களில் எது ஒன்றும் பாபாவை நினைக்காமல் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கலாகாது.

மனதிற்கு இப் பாடம் ஒருமுறை புரிந்துவிட்டால், அது மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வரும். ஒவ்வொரு உலகியல் கொடுக்கல் வாங்கலிலும் சாயியின் பதங்களையே இடையறாது சிந்திக்கும்.

குணங்களுடன் கூடிய சுத்தப் பிரம்மம் கண்முன்னே தோன்றும். பக்தியையும் விரக்தியையும் முக்தியையும் மலரச் செய்து பரமபதத்தை அளிக்கும்.

கண்கள் அந்த சுந்தரமான உருவத்தை உற்றுப் பார்க்கும்பொழுது இவ்வுலக உணர்வும் பசியும் தாகமும் உருகி ஓடிவிடும். இவ்வுலக இன்பங்கள் பற்றிய உணர்வே தொலைந்துபோகும்! மனம் சாந்தத்தையும் திருப்தியையும் அனுபவிக்கும்.

நான் எவ்வளவு முயற்ச்சி செய்தாலும், ஓவி (செய்யுள்) சில சமயங்களில் என் மனத்தே தோன்ற மறுக்கிறது. ஆயினும், எந்திரத்தில் மாவு அரைக்கும்பொழுது பளிச்சென்று ஞாபகத்திற்கு வருகிறது! அதுபோலவே உடைத்த கடலைக் காதையை விவரிக்கும்பொழுது எனக்கு சுதாமரின் (குசேலர்) கதை ஞாபகத்திற்கு வருகிறது!

ஒருகாலத்தில், பலராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் சுதாமனும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் வசித்துவந்த காலத்தில், ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் விறகு சேகரித்துக்கொண்டு வரக் காட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

குருபத்தினியின் ஆணைக்கிணங்கி ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் காட்டினுள்ளே சென்றனர். அவர்கள் புறப்பட்டவுடனே சுதாமனும் அவர்களுடன் செல்லுமாறு பணிக்கப்பட்டான்.

குருபத்னி சுதாமனிடம் கொஞ்சம் உடைத்த கடலையை கொடுத்து, 'காட்டில் திரியும்பொழுது பசியாக இருந்தால் மூவரும் பகிர்ந்து உண்ணுங்கள்' என்று ஆணையிட்டு அனுப்பினார்.

பிறகு, சுதாமன் காட்டில் ஸ்ரீகிருஷ்ணனை சந்தித்தான். ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனிடம் சொன்னான், "தாதா, எனக்கு தாகமாக இருக்கிறது". சுதாமன் தன்னிடம் இருக்கும் உடைத்த கடலையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் என்ன பதில் சொன்னான் என்பதை கவனமாகக் கேளுங்கள்.

"எப்பொழுதும் காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே; மாறாக, முதலில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்". ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனுடைய துடையின் மேல் தலை வைத்து ஓய்வெடுத்தபொழுதும் சுதாமானால், "இந்த உடைத்த கடலையை கொஞ்சம் சாப்பிடு" என்று சொல்ல முடியவில்லை.

ஸ்ரீகிருஷ்ணன் சிறுதுயில் கொண்டுவிட்டான் என்று தெரிந்துகொண்டபின், சுதாமன் உடைத்த கடலையைத் தானே தின்ன ஆரம்பித்தன். ஸ்ரீகிருஷ்ணன் கேட்டான், "தாதா, நீ என்ன தின்கிறாய்? இது என்ன சத்தம்?"

"ஹே கிருஷ்ணா! இவ்விடத்தில் தின்பதற்கு என்ன இருக்கிறது. குளிரில் என்னுடைய பற்கள் நடுங்கிச் சத்தம் செய்கின்றன; அவ்வளவே! நீயே பார், என்னால் விஷ்ணு சஹஸ்ர நாமங்கூடத் தெளிவாக ஓத முடியவில்லை!"


Thursday, 15 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக சாதகன் எப்பொழுது வேண்டுமானாலும் புலன்களின்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தயார்நிலைக்கு உயர்கிறான். இதற்கான விதிகள் வேதங்களில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன; இந்நிலையில் சாதகன் உலக விஷயங்களை நியமத்துடன் அனுசரிக்கிறான்; இஷ்டம் போல் நடப்பதில்லை.

மனம் இவ்விதமாகத் தன்வயப்பட்டுவிட்டால், விஷயசுகங்கள் நசித்து போகின்றன. மாறாக, குரு வழிபாட்டில் மனம் காதல் கொள்கிறது; அதிலிருந்து சுத்த ஞானம் பிறக்கிறது.

சுத்த ஞானம் வளர வளர, 'உடலே நான்' என்னும் எண்ணம் அறுந்துபோகிறது. அதே புத்தி இப்பொழுது, 'நானே ப்ரம்மம் (முழு முதற்பொருள்)' என்னும் உணர்வில் ஆழ்ந்துவிடுகிறது. அந்நிலையில் எல்லையற்ற ஆனந்தம் துய்க்கப்படுகிறது.

மனித உடல் கணநேரத்தில் அழியக் கூடியதாக இருப்பினும், அதை வைத்துதான் பரம் புருஷார்த்தத்தை (மோட்சம்) அடைய வேண்டும். மோட்சத்தைவிட சிறந்ததான பக்தியோகத்தை அனுசரிக்க உடல் தேவைப்படுகிறது.

மனிதன் அடையவேண்டிய நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) கடந்த ஐந்தாவது பேறு பக்தி யோகம். பக்தியோகம் ஒப்பற்றது; மற்றெதுவும் அதற்கு ஈடாகாது.

குருசேவை செய்து வாழ்க்கையில் திருப்தியடைந்தவன் பக்தியும் ஞானமும் வைராக்கியமுமே தனக்கு நன்மையளிக்கும் என்ற யதார்த்தமான உண்மையை நன்கு உணர்ந்துகொள்கிறான். அவனே ஆன்மீக பாதையில் முன்னேற்றம் காண்பான்.

பாகவதத்தை (ஸ்ரீ கிருஷ்ணனின் கதையைத்) தலைகீழாகப் படித்தவனாக இருந்தாலும், குருவிற்கும் இறைவனுக்கும் இடையே வித்தியாசம் காண்பவன் இறைவனை அறிந்தவனல்லன்.

இது, இராமாயணத்தை முழுக்கப் முழுக்கப் படித்த பின்பும் சீதைக்கு இராமன் என்ன உறவு என்று கேட்பது போலாகும். 'இரண்டுண்டு' என்னும் எண்ணத்தை அழித்துவிட்டு குருவும் இறைவனும் ஒன்றே என அறிந்துகொள்ள வேண்டும்.

குருவிற்கு நிர்மலமான மனத்துடன் சேவை செய்வதன் மூலம் உலகவிஷய வாசனைகள் நிர்மூலமாகிவிடும். சித்தம் சுத்தமாகி சுயவொளியுடன் பிரகாசிக்கும். மனிதனின் நிஜமான சொரூபம் தன்னை வெளிக்காட்டும்.

ஆகவே, தாம் விரும்பியபோது, விரல்களால் சொடக்குப்போடுவது போல சுலபமாக அவரால் உடைத்த கடலைப் பருப்புகளை அங்கே தோன்ற செய்ய முடிந்தது. பார்க்கப்போனால், இதை விட அற்புதமான லீலைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

கேவலம் இந்தஜாலம் செய்பவன் தன வசீகர சக்தியால் ஓர் எலும்பை அசைத்துப் பொருள்களை சிருஷ்டி செய்வதுபோல நமக்கு காட்டி வயிறு வளர்க்கிறான்.

ஆனால், சாயிநாதரோ தனித்தன்மை வாய்ந்த விசேஷமான ஜாலவித்தைக்காரர்! ஆஹா! அவருடைய லீலைதான் எவ்வளவு அழகானது! அவர் விரும்பினால் கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணிலடங்காத உடைத்த கடலைப் பருப்புகளை உற்பத்தி செய்வார்.
 

Thursday, 8 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

கேள்வி, தொடும் உணர்வு, பார்வை, வாசனையறிதல் ஆகிய மற்ற நாணம் புலன்களின் விஷயத்திலும் கூட, நாக்கையும் உணவையும் பற்றிய பாபா செய்த போதனையே உண்மை. இன்று நேர்ந்த சூழ்நிலைக்கு எவ்வளவு பொருத்தமானவை பாபாவின் வார்த்தைகள்! என்ன அற்புதமான போதனை!

மனமும் புத்தியும் புலனுறுப்புகளும் உலக இன்பங்களை துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக.

இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்த நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வழுவிழந்து விடும்.

காமம் எழும்போது என் விஷயமாகவே காமப்படு. கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு. அபிமானத்தையும் (தேகத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராக்கிரத்தையும் (உரிமை இல்லாத இடத்து வலிய நிகழ்த்தும் செயலையும்) பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.

காமம், கோபம், தேகாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள் பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.

காலக்கிராமத்தில் ஹரி இவற்றை ஒவ்வொன்றாக அழித்துவிடுவான். இம் மூன்று விஷ அலைகளையும் (காமம், கோபம், தேகாபிமானம்) கோவிந்தன் பரிகாரம் செய்துவிடுவான்.

வேறுவிதமாகச் சொன்னால், பலாத்காரமானதும் கொடியதுமான உணர்ச்சிகள் அனைத்தும் என்னுடைய சொரூபத்தில் லயமாகிவிடும். (கலந்துவிடும்) என்னுடைய பாதங்களில் இளைப்பாறி என்னுடன் ஒன்றாகிவிடும்.

இம்மாதிரியாக அப்பியாசம் (பயிற்சி) செய்துவந்தால், மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும். காலகிராமத்தில் வேருடன் அறுக்கப்படும். மனம் வேகங்களிலிருந்து விடுபட்டு விடும்.

குரு நிரந்தரமாகவே தன்னுடைய அருகில் இருக்கிறார் என்று மனம் ஆழமாக நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு, மேற்சொன்ன அவலங்கள் அதை பாதியா.

இந்த நல்லொழுக்கம் வேர்விட்ட பிறகு, உலக வாழ்வின் பந்தங்கள் நசித்துவிடும். குரு உலக விஷயங்கள் அனைத்திலும் தோன்றுகிறார்; வேறுவிதமாக சொன்னால், ஒவ்வொரு உலகவிஷயமும் குருவின் உருவத்தை அனைத்து கொள்கிறது.

புலனின்பம் துய்க்க வேண்டும் என்கிற சிறிய ஆசை தோன்றும்போதே, பாபா நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம், அந்த இன்பம் துய்ப்பதற்கு தகுதியுடையதா, தகுதியற்றதா என்கிற கேள்வியை மனதில் எழுப்பும்.

தகுதியற்றதும் பொருந்தாதுமான உலகவிஷயம் சகஜமாகவே நிராகரிக்கப்படும். கெட்ட பழக்கமுள்ளவன் அதிலிருந்து விடுபடுகிறான். நன்மையளிக்காத விஷயங்களில் இருந்து திரும்ப திரும்ப வெளியேறும் அப்பியாசத்தினால், மனம் தனக்கு ஒவ்வாத உலகவிஷயங்களையும் சுகங்களையும் வெறுக்க ஆரம்பிக்கும்.