valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 11 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்
திண்டின்மேல் சாய்ந்துகொண்டு இருந்த பாபா, அப்பொழுது நான் சொன்னதைக் கேட்பதற்காக முன்னோக்கிச் சாய்ந்தார். நானும் என்னுடைய முகத்தை நீட்டி விவரிக்க ஆரம்பித்தேன்.

"பாபா, அங்கு நாங்கள் பேசியதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவற்றில் எல்லாவற்றிலும் அம் மூதாட்டி பற்றிய கதை உண்மையிலேயே அற்புதமானது.-

"சாம்ராவ் இக்கதையைச் சொல்லச்சொல்ல, கற்பனை செய்யமுடியாத உம்முடைய வழிமுறைகளை நான் கண்டேன். அந்தக் கதையை சாக்காக வைத்துக்கொண்டு நீங்கள் வாஸ்தவமாக (உண்மையில்) எனக்கு அனுக்கிரஹம் செய்துவிட்டதாகத் தோன்றுகிறது. (தாபோல்கர்)

இதைக்கேட்ட பாபா ஆர்வத்துடன் வினவினார். "சொல்லும்; எனக்கு முழுக்கதையையும் சொல்வீராக. அது எவ்விதத்தில் ஓர் அற்புதமான கதை என்பதையும் அதன் மூலம் உமக்கு எப்படி அனுக்கிரஹம் செய்தேன் என்பதையும் காண்போம்?"

நான் அப்பொழுதுதான் அக்கதையைக் கேட்டிருந்தால் அது என் மனதில் பசுமையாக இருந்தது. மேலும் அக்கதை என்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் அதை உடனே பாபாவுக்கு தங்குதடையின்றி விவரித்தேன். பாபா அதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியுற்றார் என்று எனக்கு தோன்றியது.

இவ்வாறாக, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். பாபாவும் அதை மிக கவனமாக கேட்டார். உடனே என்னிடம் சொன்னார், "இதை உமது மனதில் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளும்."

மறுபடியும் பாபா உற்சாகத்துடன் கேட்டார், "நீர் இப்பொழுது கேட்ட கதை எவ்வளவு இனிமையானது! ஆனால், அது உம்முடைய மனதில் பதிந்ததா? அது வாஸ்தவமாகவே உமக்குப் பொருள்பொதிந்ததாக தெரிந்ததா?"

"பாபா, அந்தக் கதையைக் கேட்டபிறகு நான் சாந்தியடைந்தேன். என்னுடைய சந்தேங்களுக்கும் மன உளைச்சலும் பறந்து போயின. நான் ஒரு நிச்சயமான மார்க்கத்தை கண்டுகொண்டேன்".

பாபா கூறினார், "நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை அல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.-

"ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானம் அடைப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனதிருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.-

"முதல் காரியமாக, ஆசைகளில் இருந்து விடுபட வேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனதிற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும். -


Thursday, 4 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆரத்தி ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக, பெரிய மணி 'டாங் ', 'டாங்' என்று முழங்கியது.

மத்திய நேரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்த ஆரத்தியை செய்தனர். பெண்கள் மசூதியின் தளத்தையும் ஆண்கள் சபா மண்டபத்தையும் அடைத்து நிறைத்துக் கொள்வர்.

பிறகு மங்களவாத்தியங்களும் முரசும் முழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் உச்சஸ்தாயியில் (உரத்த குரலில்) ஆரதிப் பாட்டை பாடுவர்.

நாங்கள் சபாமண்டபத்தை நெருங்கியபோது , ஆரதிப் பாட்டு உரக்க முழங்கி கொண்டிருந்தது. படிகளில் எல்லாம் அங்கு வந்து குழுமியிருந்த  ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். மசூதியின் உள்ளே செல்வதற்கு வழியே இல்லை.

ஆரத்தி முடியும் வரை சபாமண்டபத்திலேயே இருந்துவிட்டு, பிறகு மற்ற பக்தர்களுடன் சேர்ந்துகொண்டு பாபாவிடம் செல்லலாம் என்று நான் நினைத்தேன்.

இவ்வாறு நான் எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டிருந்தபோதே , படிகளில் ஏறிவிட்ட மாதவராவ், என் கையைப் பிடித்து மேலே இழுத்து நேராக பாபாவிடம் அழைத்து சென்றார்.

பாபா சாவகாசமாக சில்லிம் (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடித்துக்கொண்டு, தம்முடைய வழக்கமான ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஜோக் நின்று கொண்டு  இடக்கையால் மணியாட்டிக் கொண்டே பஞ்சாரத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆரத்தி எழுப்பிய குதூகலத்தின் நடுவே, மாதவராவ் பாபாவுக்கு எதிரில் வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு, என்னையும் பாபாவை நோக்கியவாறு உட்காரவைத்தார்.

சாந்தமூர்த்தியும் மஹான்களில் இரத்தினமுமாகிய பாபா இனிமையான குரலில் அப்போது கேட்டார். "சாம்ராவ் (மாதவராவ்) எனக்காகக் கொடுத்த தக்ஷிணையை இங்கே கொண்டு வாரும்."

"பாபா, சாம்ராவே இங்கு இருக்கிறார்; அவர் தக்ஷிணைக்குப் பதிலாக நமஸ்காரங்கள் கொடுத்திருக்கிறார். நமஸ்காரங்கள்தான் பதினைந்து ரூபாய் என்றும் அதையே பாபாவுக்குப் பிரீதியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்." (தபோல்கரின் பதில்)

"சரி, சரி, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டீர்களா? சம்பாஷணை செய்தீர்களா? நீங்கள் என்ன பேசிக்கொண்டீர்கள் என்பதை எனக்கு இப்பொழுது விரிவாக சொல்லுங்கள்.-

"நமஸ்காரங்களை பற்றிய கதை ஒருபுறமிருக்கட்டும். நீர் அவரிடம் பேசினீரா? எதை பற்றி பேசினீர்? எப்படி பேசினீர்? எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்". (பாபா)

எனக்கு கதையை சொல்லவேண்டுமென்ற ஆர்வம். ஆனால், ஆரத்தியோ உரக்க முழங்கி கொண்டிருந்தது. இருப்பினும் என்னுள் பொங்கி கொண்டிருந்த மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. தங்குகடையின்றி  என் உதடுகளின் வழியாக கதை பிரவாகமாகப் பாய்ந்தது. 


Thursday, 28 July 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப் பிடிவாதம் பிடிக்கவேண்டும்?-

"நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும்.-

"நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.-

"யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.-

"இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்து கொண்டவன் மூவுலகங்களிலும் தண்ணியவன் ஆவான். (பேரு பெற்றவன் ஆவான்.)

இவ்வாறாக, அம் மூதாட்டி போதனை அளிக்கப்பட்டார்; அறிவுறுத்தப்பட்டார்; இக்கதை அவருடைய மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டது. தம்முடைய தலையை சாயி பாதங்களில் தாழ்த்தி விட்டு, மூதாட்டி உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.

இக்கதையை ஆரம்பித்தில் இருந்து கேட்டு, என்னுடைய அன்றைய நிலைமைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்ட பின், என்னுடைய மனம் ஆச்சரியத்தாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தது. ஓ, எவ்வளவு பொருத்தமான கதை!

பாபாவினுடைய லீலையைக் கண்டு ஆனந்தத்தால் என் தொண்டை அடைத்தது. அபரிமிதமான உணர்ச்சிப் பெருக்கால் நான் திணறிப் போனேன். உன்னதமான இப் படிப்பினை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

நான் உணர்ச்சிவசப்பட்டு திக்குமுக்காடிப் போனதை கண்ட மாதவராவ் என்னிடம் கேட்டார். "அண்ணா சாஹேப்! ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்?  ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்?-

"இம்மாதிரியான பாபாவின் லீலைக் கதைகள் எண்ணற்றவை. நான் எதனை கதைகளைத்தான் சொல்லமுடியும்?" மாதவராவ் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே மணியோசை கேட்டது.

தினந்தோறும் மதிய உணவிற்கு முன்பு, பக்தர்கள் மசூதிக்குச் சென்று அமர்வர். பாபாவினுடைய கைகளையும் பாதங்களையும் அலம்பி, சந்தானம் இட்டு, அக்ஷதையை தூவி, சடங்கு பூர்வமானதும் விஸ்தாரமானதுமான பூஜையை செய்வர்.

பிறகு பாபு சாஹேப் ஜோக் பக்தியுடனும் பிரேமையுடனும் பஞ்சாரதி (ஐந்து தீபங்கள் கொண்ட ஆரத்தி) எடுப்பார். பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரதிப் பாட்டைப் பாடுவர்.


Thursday, 21 July 2016

ஷீர்டி சாயி சத் சரிதம்

"வெறும் கல் , மணி இவை  இரண்டுமே மெருகேற்றுவதற்காக தேய்க்கப் படலாம். எவ்வளவு தேய்ந்தாலும், கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும்.-

"இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும், வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?

"ஆகவே நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தைபோல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாற்குறையும் இல்லை. அவருடைய இதயம் என்மீது அன்பால் பொங்கி வழிந்தது. -

"அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்க முடியாது. -

"ஓ, அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கி விடும். இருவருமே ஆனந்த மயமாகி விடுவோம். வேறெதையும் எனக்குப் பார்க்காத தோன்றாது. -

"இரவுபகலாக அவருடைய முகத்தை உற்றுநோக்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால், மனம் அவஸ்தைப்பட்டது.-

"அவரைத் தவிர வேறெதென் மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.-

"என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்ததில்லை; கவனிக்காமல் விட்டதுமில்லை; சங்கடங்களில் இருந்து என்னை எப்பொழுதும் ரக்ஷித்தார்.-

"சில சமயங்களில் நான் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன். சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன்". ஆயினும் எப்பொழுதும் அவருடைய சங்கம கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக் கொண்டார்.-

"தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறேன். அவ்வழிதான் என் குருவினுடையதும், அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளை பாதுகாத்தார்.-

"தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதை பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?-

"தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்கு திருப்தியும் சந்தோஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெறியாது.- 

Thursday, 14 July 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"என் குரு ஒரு புகழ் பெற்ற அவ்லியா (முஸ்லீம் ரிஷி), கருணைக் கடல். நான் அவருக்கு சேவை செய்து செய்து, களைத்து போனேன். அப்பொழுதும் அவர் எனது காதில் மந்திரம் ஓதினாரில்லை.-

"அவருடைய தஞ்சத்தை விட்டுவிடாமல் எப்பாடுபட்டாவது அவருடைய திருவாய் மொழியாக ஒரு மந்திரத்தை பெற்றுவிட வேண்டுமென்ற பேராவல் எனக்கும் இருந்தது.-

"ஆரம்பித்தில் அவர் என்னை இரண்டு பைசா மாத்திரம் கொடுக்ககச் சொல்லி ஏய்த்து விட்டார். உடனே நான் இரண்டு பைசாக்களைக் கொடுத்து மந்திரம் வேண்டிக் கெஞ்சினேன்; பிரார்த்தனை செய்தேன்-

"என் குருவோ பூர்ணகாமர் (எல்லா விருப்பங்களும் நிறை வேறியவர்). அவர் எதற்காக இந்த இரண்டு பைசா கேட்டார்? சிஷ்யனிடம் காசு கேட்பவரை நான் எவ்வாறு ஆசையற்றவர் என்று சொல்ல முடியும்?

"ஆனால், இம்மாதிரியான சந்தேகங்கள் ஏதும் உம்முடைய மனத்தை துளைக்க வேண்டா. உலகியல் ரீதியில் அவர் பணத்தை விரும்பவில்லை. பொன்னும் பணமும் அவருக்கு எதற்கு?

"விசுவாசமும் பொறுமையுமே அவ்விரண்டு பைசாக்கள்; வேறெதுவும் இல்லை! நான் உடனே அவையிரண்டையும் கொடுத்தவுடன், என் குருவான தாய் என்னிடம் சந்தோஷம் அடைந்தார். -

"தாயே, பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். -

"இந்த சகிப்புத்தன்மைதான், ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை. இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெல்கிறது. இதுவே விபரீத சம்வங்களையும் சாமர்த்தியாமாக தடுக்கிறது; எல்லா பயங்களையும் விரட்டி விடுகிறது.-

"பொறுமையும் சகிப்புத்தன்மையுமே வெல்லும்; விபத்துக்களை பல திசைகளிலும் பயந்து ஓடிப்போகச் செய்யும். முன்யோசனை இல்லா விவேகமின்மை என்னும் முள் குத்தாது.-

"சகிப்புத்தன்மை நற்குணங்களின் சுரங்கம்; நல்லெண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கை இந்த ராணியின் சகோதரி. இவை இரண்டும் உயிருக்குயிரான சகோதரிகள்.-

"சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.-

"குரு மஹா பலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாக பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார். 


Thursday, 7 July 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

கதை கேட்பவர்களுக்கு இப்பொழுது இது சம்பந்தமாக, சென்ற அத்தியாயத்தில் முற்றுப்பெறாத காதையை சொல்கிறேன்; கேளுங்கள்.

ஆண்டுகளால் முதிர்ந்து, உடல் பலவீனமுற்ற மூதாட்டி ஒருவர், சாயியின் இடமிருந்து மந்திர உபதேசம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருப்பதென்னும் தீர்மானத்தை பிடிவாதமாக மேற்கொண்டார்.

அவருடைய தேகநிலையை பார்த்து பயந்துபோன மாதவராவ், மத்தியஸ்தம் (சமரசம்) செய்து வைப்பதற்காக பாபாவிடம் சென்றார். இதுதான் ஏற்கனவே சொல்லப்பட்ட காதையின் இணைப்பு.

சாயி சத்சரித்திரம் என்னும் விளக்கு இங்கே தூண்டப்பட்டு விட்டது. சாயியினுடைய எண்ணங்கள் இங்கு வெளிப்பட்டு, இவ்வொளியினால் விசுவாசமுள்ள அநேக பக்தர்கள் தங்களுடைய பாதையைத் தெரிந்துகொள்வர்.

பாபாவினுடைய ஆணையின்படி மாதவராவ் எனக்கு ஒரு சுவாரசியமான கதை சொன்னார். அதை இப்பொழுது மேற்கொண்டு சொல்கிறேன்.

அவர் சொன்னார், "அம்மூதாட்டியின் வைராக்கியத்தை கண்ட பாபா, மூதாட்டிக்கு அருள்செய்து, அவருடைய சிந்தனையில் ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்தினார். கதையில் இங்குச் சுவையான திருப்பம் ஏற்பட்டது!"-

"பிறகு, பாபா அவரை அழைத்துவரச் செய்து பிரேமையுடன் சொன்னார், "தாயே! எதற்காக நீர் அடம் செய்துகொண்டு பட்டினி கிடக்கிறீர்? ஏன் உபவாசம் இருந்து உயிரை விடவேண்டும் என்று நினைக்கிறீர்?"

வயது முதிர்ந்த பெண்மணி யாராக இருந்தாலும் சரி, பாபா அவரைத்  'தாயே' என்றுதான் அழைத்தார். வயது முதிர்ந்த ஆண்களை, காகாவென்றும் பாபூவென்றும் பாயியென்றும் அழைத்தார். அவர் கூப்பிடும் அழகு அவ்வாறு!

அந்தரங்கத்தில் பிரேமை இருந்ததால், அவருடைய வார்த்தைகளும் இனிமையாயாக இருந்தன. துன்பப்படுபவர்களுக்கும் இன்னல்படுபவர்களுக்கும் கருணை காட்டும் தீனதயாளர் அல்லரோ சாயிநாதர்!

ஆகவே, அவர் அம் மூதாட்டியை அழைத்து, தம்மெதிரில் உட்காரவைத்துக் கொண்டு, நிஜமான குருத்துவத்தின் இரகசியத்தை ஆருக்குப் பிரேமையுடன் எடுத்துச் சொன்னார்.

ஞானமே ஆகிய பாபா, தம் பக்தர்களாகிய சகோதர பட்சிகளின் தாகம் தீர்க்கும் வகையில் பொழிந்த மழையில் இருந்து சுயானந்தம் அளிக்கும் நீரை இப்பொழுது நன்றாக பருகுங்கள். பக்தர்களுடைய உலகவாழ்வின் துக்கங்களும் இன்னல்களும் சாந்தமடையும்.

அவர் கூறினார், "தாயே விவரமாக சொல்லுங்கள்! எதற்காக இவ்வளவு துன்பத்தை உங்களின்மேல் சுமத்திக் கொள்கிறீர்கள்? நானோ, கவளங்கவளமாக பிச்சை தேடியலையும் ஒரு பக்கீர். என்னிடத்தில் அன்புகாட்டுங்கள்!

"வாஸ்தவத்தில் நான் உம் மகன்; நீர் என் தாயார். இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய கதையொன்று சொல்கிறேன்.-

Thursday, 30 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

இப் பிரபஞ்சம் என்னும் மாயை இதுவே . இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா பிரஞை(உணர்வு) என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இதனை வீண் பிரயத்தனங்கள்?

விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்து விடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களை பற்றிச் சிந்தனை செய்வதில்லை.

ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோகமுமாகிய பந்தங்களை அறுத்தெறிய வேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை.

ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார்.

ஞானமார்கத்தினுடைய மஹிமையை விளக்குவதற்கு பாபா அதை ராமர் பழத்திற்கு சாப்பிடுவார். சுலபமாக கிடைக்கும் இனிய ரசமுள்ள சீதாப்பழத்திற்கு பக்தி மார்க்கத்திற்கு ஒப்பிடுவார்.

பக்திமார்க்கம், ஜொலிக்கும் சீத்தாப்பழம்; ஞானமார்க்கம், நன்கு பழுத்த ராமர்பழம். முன்னதை விட பின்னது ரசம் நிறைந்தது; மதுரமான வாசனையுடையது.

முற்றிய காயாகப் பறித்துச் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும்போது, ராமர் பழத்தின் கதுப்பு, சுவைத்துச் சாப்பிட முடியாதவாறு பலமாக நெடியடிக்கிறது. மரத்திலேயே பழுக்கட்டும் என்று விட்டு விடும் மனிதனால்தான் அதனுடைய உண்மையான சுவையை அனுபவிக்கமுடியும்.

ராமர் பழம் மரத்திலேயே நன்கு பழுத்திவிட்டால், காம்புவரை தித்திக்கிறது. பூமியில் விழுந்துவிட்ட பழத்திற்கு நெடி அதிகம். மரத்திலேயே பழுத்த பலத்திற்கு சுவை அதிகம்.

மரத்திலேயே முழுமையாக பழுக்கவிடுபவன்தான் அதனுடைய சுவையை அனுபவிக்கமுடியும். ஆனால், சீதாப்பழத்திற்கு இம் முயற்சியெல்லாம் தேவையே இல்லை. ராமர்ப்பழத்திற்கு இணையான உன்னதங்கள் இல்லை எனினும், சீத்தாப்பழம் மிக்க மதிப்புள்ளது.

ராமர் பழம் கீழே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. ஞானிக்கும் தம்முடைய சித்திகளின் மேல் பூரணமான ஆளுமை இல்லையென்றால், வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அலட்சியத்திற்கு இங்கு இடமேயில்லை.

ஆகவே, தயை மிகுந்த சாயீ, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் நாமஸ்மரணத்தின் மகிமையையும் விவரணம் செய்தார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தை விட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலக பந்தங்களில் இருந்து விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.